அன்புத் தாத்தா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 20, 2025
பார்வையிட்டோர்: 81 
 
 

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒற்றையடிப் பாதை ஒன்று வளைந்து வளைந்து பொன்னிக்குப்பம் கிராமத்தை நோக்கிச் சென்றது. நல்ல வெய்யில் நேரம். சூரியன் உச்சி வானத்தில் இருந்தான். அந்தப் பாதையிலே ஒரு கிழவர் வந்து கொண்டிருந்தார். வலது கையிலே ஒரு தடி; இடது கையிலே ஒரு சிறு மூட்டை; தோளிலே ஒரு துண்டு- இவற்றுடன் அந்தக் கிழவர் தள்ளாடித் தள்ளாடி நடந்தார். சூரியனின் வெப்பத்தை அவரால் தாங்க முடியவில்லை. அவர் முகத்திலே முத்துக்கள் போல வியர்வைத் துளிகள் நிறைந்திருந்தன. கிழவர் சிறிது நின்றார்; இடது கையிலிருந்த மூட்டையை வலது கைக்கு மாற்றிக் கொண்டார்; தோளில் போட்டி ருந்த துண்டினால் முகத்தை நன்றாகத் துடைத்துக் கொண்டார். 

இன்னும் எவ்வளவு தூரம் போக வேண்டும் என்று பார்த்தார். சிறிது தூரத்திலிருந்த கிராமத்து வீடுகள் அவர் கண்களில் பட்டன. உடனே, கிழவ ரின் முகம் மலர்ந்தது. தடியை ஊன்றியபடி, தூரத் தில் தெரிந்த கிராமத்தை நோக்கி நடந்தார். 

அவர் யார்? 

அவர் பெயர் அருளப்பர். அவர் தனி மனிதர். பெண்டாட்டி பிள்ளை கிடையாது. அவருக்கு நிறை யச்சொத்து இருந்தது. அதைக்கொண்டு அவர் மட்டும் சுகம் அடைய விரும்ப வில்லை. அவர் தன் சொந்தக் கிராமத்தில் இலவசப் பாடசாலை, சிறு வர் நூல் நிலையம், விளையாட்டு மைதானம் முதலிய வற்றை நிறுவினார். அத்துடன் நில்லாமல், கால் நடையாகவே தமிழ் நாட்டிலுள்ள ஒவ்வொரு கிராமத் துக்கும் சென்று, அங்குச் சில வாரங்கள் தங்குவார். கிராமச் சிறுவர் சிறுமிய ரெல்லாம், அவரைச்சுற்றியே இருப்பார்கள். அருளப்பர் எளிய பாடல்களை அவர் களுக்குச் சொல்லித் தருவார். ஒவ்வொருவருக்கும் தம்முடைய மூட்டையிலுள்ள புத்தகங்களைக் கொடுப் பார். இப்படியே ஒவ்வொரு கிராமமாகச் செல்வார். அவர் சொத்தை நம்பிக்கைக்கு உரிய ஒருவரிடம் ஒப் படைத்து விட்டு, இப்படிச் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருந்தார். 

அருளப்பரின் பெயர் ஏறக்குறையத் தமிழ் நாடு முழுதும் பரவி யிருந்தது. இப்போது அருளப்பர் பொன்னிக் குப்பத்திற்குச் செல்கிறார். பொன்னிக் குப்பத்திற்கு, இதற்கு முன் இருமுறை வந்திருக்கிறார். அவருக்குக் கிராமத்தில் உள்ள பெரும் பாலோரை நன்றாகத் தெரியும், பொன்னிக் குப்பத் தில் பொன்னன் என்னும் சிறுவனை, அவருக்கு மிக வும் பிடித்திருந்தது. அவனைப் பற்றி நினைத்துக் கொண்டே நடந்தார் அருளப்பர். 

கிராமத்தை நெருங்கி விட்டார். ஒரு மரத்தடி யில் ஒரு சிறுவன் சோகமாக உட்கார்ந்திருப்பதைக் கண்டார். அவனைக் கூர்ந்து பார்த்தார் அருளப்பர். உடனே அவர் ‘அடடே, பொன்னனா!” என்றார். 

அவர் வந்ததைக்கூட அறியாமல் பொன்னன் எதையோ யோசிந்தித்துக் கொண்டிருந்தான். அருளப்பர் அன்பு நிறைந்த குரலில், “பொன்னா!” என்று திரும்பவும் அழைத்தார். உடனே பொன்னன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். பார்த்ததும், “யார்? தாத்தாவா!” என்று கேட்டான். 

“ஆமாம் பொன்னா! நீ ஏன் இந்த உச்சி வேளை யில் இங்கே உட்கார்ந்திருக்கிறாய்?” என்று கேட்டுக் கொண்டே அருளப்பர் அவனருகில் அமர்ந்தார்; கையிலிருந்த தடியை மரத்தில் சாய்த்து நிறுத்தினார். கொண்டு வந்த மூட்டையைக் கீழே வைத்தார். பிறகு ஆயிரமாயிரம் குழந்தைகளை அணைத்து மகிழ்ந்த அன்புக் கைகளினால் அவனை இழுத்து அணைத்துக்கொண் டார். “பொன்னா, ஏன் வருத்தமாக இருக்கிறாய்?” என்று கேட்டார். 

உடனே பொன்னன், “தாத்தா! சென்ற தடவை பொங்கலன்று இந்தக் கிராமத்திற்கு வந்தீர்களே,  நினைவிருக்கிறதா?” என்று கேட்டுக்கொண்டே அந்தத் தாத்தாவின் முகத்தைப் பார்த்தான். 

“ஆமாம்! நினைவிருக்கிறது. கிழவர்களுக்கு ஞாபக சக்தி இருக்காது என்று நினைத்து விட்டாயா பொன்னா?” – தாத்தா சிரித்துக்கொண்டே கேட்டார். 

“அப்போது ஒரு சின்ன ஆட்டுக் குட்டியை எனக்கு வாங்கித் தந்தீர்களல்லவா? அதை நான் அன்போடு வளர்த்து வந்தேன். அதைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு உங்கள் நினைவு வரும்.” -பொன்னன் முழுவதையும் கூறி முடிக்கவில்லை. 

அதற்குள் தாத்தா குறுக்கிட்டார்; “அதற்கென்ன இப்போது?” என்று கேட்டார். 

“அதற்கு இப்போது ஆபத்து வந்து விட்டது! தாத்தா, அந்த ஆட்டுக் குட்டி வளர்ந்து கொஞ்சம் பெரிதாகி விட்டது, அதை நான் அன்போடு வளர்த்து வருகிறேன். அது என்னை விட்டுப் பிரியவே பிரியாது. இந்த ஊரில் மழையே பெய்ய வில்லை. குளத்தில் குடிக்கக்கூட நீரில்லை. பயிர்களெல்லாம் வாடி விட்டன. கிராமத்தார் தங்கள் சொத்தை யெல்லாம் விற்று வாழ்ந்து வருகின்றனர். இன்னும் சில நாட்கள் மழை பெய்யாம லிருந்தால் இந்தக் கிராமத்தை விட்டு எல்லோரும் ஓடவேண்டியதுதான். நேற்று பூசாரி ஆறுமுகம் பண்ணைக்காரரிடம், ‘காளிக்குப் பூசை போடாததால்தான் மழை பெய்யவில்லை. ஓர் ஆடு பலி கொடுத்தால் உடனே மழை பெய்யும்’ என்று சொன்னான். 

“பண்ணைக்காரர் அப்படியே பலி கொடுக்கச் சம்ம தித்தார். அந்தக் கருமியிடம் பல ஆடுகள் இருக்கின்றன. ஆனாலும் மனம் இல்லை. ‘பலி கொடுப்பதற்கு என் ஆடுகளெல்லாம் லாயக்கு இல்லை. ராமசாமி மகன் பொன்னனிடம் ஓர் அழகான ஆடு இருக்கிறது. அதைப் பிடித்து வந்து பலி கொடுங்கள்’ என்று பண்ணைக்காரர் கிராமத்திலுள்ள சில பெரிய மனிதர்களிடம் கூறினாராம். அவர்கள் என் அப்பாவிடம் வந்து ஆட்டைக் கேட்டனர். அவருக்கு என் ஆட்டைக் கொடுக்க விருப்பமில்லை. ஆனாலும்,  “ஆண்டவன் காரியத்துக்குத் தடை சொல்லாமல் ஆட்டைக் கொடு” என்று வந்த பெரியமனிதர்கள் வற்புறுத்தினதால், என் தந்தை கிராமத்துப் பெரிய மனிதர்களின் விரோதத்தைத் தேடிக்கொள்ள விரும்பவில்லை. என் ஆட்டை அவர்களுக்குக் கொடுத்துவிட ஒப்புக் கொண்டார். அன்போடு வளர்த்த என் ஆட்டை நான் எப்படித் தாத்தா கொடுப்பேன்? ‘ஆட்டைத் தரமாட்டேன்’ என்றேன். என் தந்தை இரண்டு அறை கொடுத்து என்னை அடக்கினார். தோட்டத்திலிருந்த ஆட்டை வந்தவர்கள் பிடித்துக்கொண்டு போய்விட்டனர். 

“தாத்தா, இப்போது காளி கோயிலின் முன்னால் கழுத்தில் பூமாலையுடன் என் ஆடு நிற்கிறது. இன்னும் சிறிது நேரத்தில் அதை வெட்டி விடுவார்கள்” 

பொன்னன் இதைக் கூறிவிட்டு அழுதான். அழுதுகொண்டே, “தாத்தா, கடவுள் ‘எனக்கு ஆடு வெட்டிக்கொடு’ என்று கேட்பாரா? சொல்லுங்கள் தாத்தா. எந்த உயிருக்கும் தீங்கு செய்யக் கூடாது என்று நீங்கள் சொன்னீர்களே, கடவுள் மட்டும் ஓர் உயிரைக் கொன்று தா என்று கேட்கலாமா?” என்று கேட்டான். 

“இந்தச் சிறுவனுக்கு இருக்கும் அறிவுகூடப் பெரியவர்களுக்கு இல்லையே!” என்று அருளப்பர் எண்ணினார். உடனே எழுந்தார்; தடியை எடுத்துக் கொண்டார்; மூட்டை எடுத்துக் கொண்டார். “பொன்னா, என்னுடன் வா. காளி கோயிலுக்குப் போகலாம். நீ வளர்த்த ஆட்டைக் காப்பாற்றித் தருகிறேன். உம்…சீக்கிரம் வா” என்று கூறிக் கொண்டே முன்னே நடந்தார். 

”நாம் அன்பாக வளர்த்த அழகிய ஆட்டை மீட்டுத் தரப்போகிறார் அன்புத் தாத்தா” என்ற மகிழ்ச்சியுடன், “கட்டாயம் காப்பாற்றி விட வேண்டும்” என்று கூறிக்கொண்டே அவர் பின்னால் ஓடினான், பொன்னன். 

கிராமத்தின் ஒரு புறத்திலே இருந்த காளி கோயிலில் ஊர் மக்கள் நிறைந்திருந்தனர். பூசாரி உடுக்கை அடித்த வண்ணம் உரத்த குரலில் பாடிக் கொண்டிருந்தான். கோயிலின் முன் புறத்தில் பொன்னனின் ஆடு அலங்காரத்துடன் நிறுத்தப்பட்டிருந்தது. அதன் அருகே ஒருவன் வெட்டுக் கத்தியுடன் நின்று கொண்டிருந்தான். சுற்றிலும் மக்கள் இருந்தனர். முதல் வரிசையில் பண்ணைக்காரரும், ‘பெரிய மனிதர்கள்’ என்று கிராமத்தாரால் மதிக்கப்படும் சிலரும் நின்று கொண்டிருந்தனர். 

‘அம்மே!’ என்று கத்தியது ஆடு. அது வெறும் கத்தலா? இல்லை. “உங்கள வாழ்வுக்காக என் உயிரை வாங்குவதா? நீங்களா பிறவியில் உயர்ந்தவர்கள்? சேச்சே. மோசம், மோசம்” என்று மக்களைப் பார்த்துக் கூறுவதுபோலவே இருந்தது. 

”காளியே! கருணை நிறைந்த கடவுளே! நீ என்னை விரும்பினாயா? ஆட்டை இரக்கமற்ற புலியல்லவா கேட்கும்; நீ கேட்கலாமா?” என்று காளியைப் பார்த்துக் கேட்பது போலிருந்தது. 

அந்தச் சத்தத்தை எவரும் கேட்கவில்லை. பேசத் தெரியாத ஆட்டின் ‘அம்மே’ என்ற சத்தம் பூசாரியின் உடுக்கைச் சத்தத்தில் உருத்தெரியாமல் போய்விட்டது. பொன்னன் கண்ணைப் போலக் காத்து வளர்த்த ஆடு கதறிக் கொண்டிருந்தது! அதைப் பற்றிக் கவலைப்படாமல் மக்கள் பார்த்துக் கொண்டு நின்றனர். 

பாட்டுப்பாடி முடிந்ததும் “உம், ஆட்டை வெட்டுங்கள்” என்று பூசாரி கத்தினான். உடனே கத்தி உயர்த்தப்பட்டது. இன்னும் சிறிது நேரத்தில் ஆட்டின் தலை வேறு, முண்டம் வேறாகி விடும். இரத்தம் வெள்ளமாகப் பெருகும். ஆனால், அதற்குள் கூட்டத்தை விலக்கிக் கொண்டு முன்னே வந்த அருளப்பர், “நிறுத்துங்கள்” என்று கத்தினார். அவருடன் வந்த பொன்னன் ஓடிப் போய்த் தன் ஆட்டை அணைத்துக் கொண்டான். 

அருளப்பர் வேகமாகச் சென்று, வெட்டுவதற்காக நிற்கும் மனிதனிடமிருந்த கத்தியைப் பறித்துத் தூர எறிந்தார். அந்தக் கிழவரின் கைகளுக்கு எவ்வளவு சக்தி இருந்தது என்பது அப்போதுதான் தெரிந்தது. அருளப்பரைக் கண்டதும் அனைவரும் திகைத்தனர். பூசாரியின் முகம் கோபத்தால் சிவந்தது. 

“ஐயா பெரியவரே! கடவுள் காரியத்தில் தலையிடலாமா?” என்று கேட்டான். 

அருளப்பர் பூசாரியைத் திரும்பிப் பார்த்தார். “எது கடவுள் காரியம் ? எவருக்கும் எந்தத் தீங்கும் செய்யாத, குற்றமற்ற ஆட்டைப் பலியிடுகிறீர்களே, இதுவா கடவுள் காரியம்! இது கருணையற்ற மிருகம் செய்கின்ற கொடிய காரியம். பூசாரி, கொடிய காரியம்!” என்று கூறிவிட்டு மக்கள் பக்கம் திரும்பினார். “பொன்னிக் குப்பத்தார்களே! நான் எல்லாச் செய்திகளையும் பொன்னன் மூலம் அறிந்தேன். ஓர் ஆட்டைப் பலியிட்டால், உங்கள் குறைகள் தீர்ந்து விடும் என்று கருதுகிறீர்களா? இந்த ஆட்டின் கழுத்திலிருந்து இரத்தம் வடிந்தால், உடனே வானத்திலிருந்து மழை கொட்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? ஓர் உயிரைப் பலியிடுவதால் எந்த நன்மையும் நேராது என்பதை மறக்காதீர்கள். 

அறவினை யாதெனின் கொல்லாமை; கோறல் 
பிறவினை எல்லாந் தரும். 

அறச்செயல் எது வென்றால் எந்த உயிரையும் கொல்லாமல் இருப்பதே. கொலை செய்வது எல்லாத் தீவினைப் பயனையும் தரும் என்று வள்ளுவர் சொல்லுகிறார். அதை உணருங்கள். இந்த ஆட்டைப் பலியிடாதீர்கள்!” என்று கூறினார் தாத்தா. 

இதைக் கேட்டதும் மக்கள் தங்கள் தவற்றை உணர்ந்து, ஆட்டை விட்டு விட்டு, தாத்தாவைப் போற்றிப் புகழ்ந்தார்கள் என்று நினைத்துவிடாதீர்கள்! அவ்விதம் செய்யவில்லை. 

பண்ணைக்காரர் முன்னால் வந்து, “ஓர் உயிரைக் கொல்லக்கூடாது என்பதற்காக இந்தக் கிராமம் முழுவதும் மடிவதா? பலியிடாவிட்டால் மழை பெய்யாது. பெரியவரே! நீங்கள் சற்றுத் தள்ளி நில்லுங்கள். எங்களுக்கு மழை வேண்டும். அதற்காக இந்த ஆட்டைப் பலியிடத்தான் வேண்டும்! என்ன, அப்படித்தானே?” என்று மக்களிடம் கேட்டார் பண்ணைக் காரர். 

மழையில்லாததால், பட்டினியால் வாடிய மக்கள், “ஆமாம், மழை வேண்டும். அதற்குப் பலியிடத்தான் வேண்டும்'” என்று கத்தினர். பூசாரியின் முகம் மலர்ந்தது. பொன்னனின் முகம் சுருங்கியது. தாத்தாவின் கோபம் பெருகியது ! 

அவர் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை. பண்ணைக்காரர் “அருளப்பரை இப்படி ஓரமாக நிற்கச் செய்யுங்கள்” என்றார். உடனே ஒருவன் அருளப்பரின் அருகில் சென்றான். அருளப்பர் அவனைப் பிடித்துத் தள்ளினார். 

பிறகு, “பண்ணைக்காரரே! பலியிடக் கூடாது என்று சட்டம் நிறைவேறி யிருக்கிறதே, அதை மறந்து விட்டீரா? அதை மீறினால் தண்டனை கிடைக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதா? இப்போது பலியிட்டால் நான் நேரே, போலீஸுக்குப் போய் புகார் செய்வேன். நீங்கள் தான் இதற்குக் காரணம் என்று கூறுவேன்” என்று ஆத்திரத்துடன் கூறினார் அருளப்பர். 

பண்ணைக்காரரைப் பயம் பிடித்துக் கொண்டது. சட்டம், தண்டனை என்றதும் அவர் உள்ளம் நடுங்கியது. ‘நம் கிராமத்தில்தானே பலியிடப் போகிறோம்! அரசாங்கத்தாருக்கு எப்படி இது தெரியப் போகிறது’ என்று நினைத்துத்தான் இந்தச் செயலில் அவர் இறங்கினார். ஆனால், அருளப்பர் இப்படித் திடீரென்று வந்து சேருவார் என்று எதிர்பார்க்கவில்லை. அருளப்பருக்கு எங்கும் செல்வாக்கு உண்டு. அவர் சொன்னபடி நடக்க அதிகாரிகள் காத்துக் கொண்டிருப்பார்கள் – இவை பண்ணைக்காரருக்குத் தெரியும். அதனால், உடனே பலியிடுவதை நிறுத்திவிடும்படி கூறினார். 

பொன்னனின் ஆடு தப்பியது; மக்கள் முணுமுணுத்த வண்ணம் கலைந்தனர். பூசாரிதான் பலி நின்று விட்டதற்காக மிகவும் வருத்தப்பட்டான். 

அவனுக்கு அருளப்பர் மீது அடக்கமுடியாத கோபம். அருளப்பர் பொன்னனுடன் அவன் வீட்டிற்குச் சென்றார். 


இரவு மணி ஒன்பதுக்கு மேலிருக்கும். பொன் னன் அருளப்பருக்காக, வேறொருவர் வீட்டிலிருந்து பால் வாங்கிக் கொண்டு பண்ணைக்காரர் வீட்டின் வழியாக வந்து கொண்டிருந்தான். பண்ணைக்காரரின் வீட்டுத் திண்ணை மேல் பலர் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் பேச்சில் அருளப்பரின் பெயர் கேட்டது. எனவே பொன்னன், அவ்வீட்டின் அருகில் மறைந்து நின்றான்; அவர்கள் பேசுவதை யும் கேட்டான். வானத்தில் நிலா இல்லை; எங்கும் இருள்! திண்ணையில் மட்டும் சிறு விளக்கு இருந் தது. அதனால், மறைந்து நிற்கும் பொன்னனை மற்றவர்கள் பார்க்கவில்லை. 

திண்ணையில் பண்ணைக்காரர், பூசாரி, இன்னும் பலர் இருந்தனர். 

“பலி கொடுத்திருந்தால், இப்பொழுது மழை பெய்து கொண்டிருக்கும்” என்றான் பூசாரி. 

“மழை இல்லாவிட்டால் எல்லோரும் சாக வேண்டியதுதான்” என்றான் ஒருவன். 

“அருளப்பர் இங்கிருக்கும் வரையில் பலியிட முடியாதே?” – பண்ணைக்காரர் வருத்தத்துடன் கூறினார். 

“அவரை விரட்டிவிடுவது. இங்கிருந்து போக மறுத்தால், மூர்ச்சையாகும் வரை அடித்து, பிறகு இழுத்துக் கொண்டு போய் எங்காவது போட்டு விடுவது” என்றான் வேறொருவன். 

“ஆமாம், பண்ணைக்காரரே, யோசிக்காதீர். இல்லை யென்றால் கிராமமே அழிந்துவிடும். அதனால் பாவமே இல்லை! ஆண்டவன் காரியம்! அதுவும் மக்களின் நல்வாழ்வுக்காக” என்றான் பூசாரி. 

 “உடனே புறப்படுவோம்! பொன்னன் வீட்டில் தான் அவர் இருக்கிறார்” என்றான் இன்னொருவன். 

இதற்குமேல் கேட்டுக்கொண்டு நிற்கவில்லை பொன்னன். உடனே, அந்த இடத்தைவிட்டுத் தன் வீடு நோக்கி ஓடினான்; செம்பிலிருந்த பால் தளும்பிக் கீழே கொட்டிக் கொண்டிருந்தது. அதைப் பற்றிக் கவலைப்படாமல், திண்ணையிலிருந்தவர்களின் கண்களில் படாமல் சுற்று வழியில் ஓடினான் பொன்னன். 

தன் வீட்டை அடைந்தான்; திண்ணையிலிருந்த அருளப்பர், “பொன்னா, ஏன் இப்படி ஓடிவருகிறாய்?” என்று கேட்டார். பொன்னன் மூச்சு வாங்க, தான் கேட்டதைக் கூறிவிட்டு, “தாத்தா, உடனே ஓடிப் போய்விடுங்கள்” என்றான். 

அருளப்பர் சிரித்தார். “பயப்படாதே பொன்னா! எனக்கு எந்த ஆபத்தும் வராது” என்றார். உள்ளே யிருந்த பொன்னனுடைய அப்பாவின் காதில் பொன்னன் கூறியவை அரை குறையாக விழுந்தன. அவர் வெளியே ஓடி வந்தார். “என்ன? என்ன விஷயம்!” என்று கேட்டார். அருளப்பர் “ஒன்றுமில்லை” என்று முடிக்கும் முன்பே அந்த வீட்டின் முன்னால் ஒரு சிறு கூட்டம் வந்து நின்றது. 

அருளப்பர் கூட்டத்தினரை நெருங்கினார். “நண்பர்களே! நீங்கள் என்னைத்தானே தேடி வந்தீர்கள்? இதோ நிற்கிறேன். உங்கள் விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆத்திரம் அறிவை மறைக்கும் என்பதை நீங்கள் உண்மை யாக்குகிறீர்கள். என்னை விரட்டினால், நான் உங்களைப் பற்றிப் போலீசாரிடம் கூற மாட்டேனா? என்னைக் கொன்று விட்டால், உங்களைச் சும்மா விட்டு விடுவார்களா? அதனால் மழை பெய்யுமா? மழை இயற்கையின் நியதிப்படி பெய்வது! அதை ஓர் ஆடல்ல; ஓராயிரம் ஆடுகள் பலியிட்டாலும் பெற முடியாது” என்று கூறினார். 

மக்கள் அவர் வார்த்தைகளில் மயங்கிவிடப் போகிறார்ளே என்று பூசாரி எண்ணினான். ஆகையால், “உம்! ஏன் தயங்குகிறீர்கள். நமக்கு மழை தேவை! அதற்குப் பலி அவசியம். அதற்குத் தடை இந்தமனிதர். அடித்துக்கொல்லுங்கள்” என்றான். ஆத்திரம் கொண்ட மக்கள் அவர் மீது பாய நினைத்தனர். 

ஆனால், நினைத்ததைச் செய்யவில்லை. 

காரணம் என்ன தெரியுமா? திடீரென்று இருளைக் கிழித்துக்கொண்டு மின்னல், ‘பளிச் பளிச்’ என்று மின்னியது. மக்கள் வானைப் பார்த்தனர். சில விநாடிகளில் இடியின் ஒலி அவர்கள் காதுகளைத் துளைத்தது. எல்லோரும் மகிழ்ச்சியுடன், வானையே பார்த்துக் கொண்டிருந்தனர். சில நிமிஷங்களில், கிராமத்தார் ஆவலோடு எதிர்பார்த்த – பலியிட்டால் தான் வருமென்று நினைத்த – மழை வந்துவிட்டது! ‘சோ’ என்று மழை பெய்தது. பலியிடாமலே மழை வெகு நேரம் பெய்தது. 

அனைவரும், ” அருளப்பரே! எங்களை மன்னித்து விடுங்கள் ! பலியிடுவதற்கும், மழை பெய்வதற்கும் சம்பந்தமில்லை என்பதை இப்போதுதான் உணர்ந்தோம். அறிவிழந்து உங்களைக் கொல்ல வந்த எங்களை மன்னித்து விடுங்கள்” என்றனர். ஆனால், பூசாரி மட்டும் அந்த இடத்தைவிட்டு மெல்ல நழுவி விட்டான். 

அருளப்பர், “நண்பர்களே! உங்கள் அறியாமை ஒழிந்ததற்காக மகிழ்கிறேன். நீங்கள் பலியிட்டிருந்தால், இப்போது பலி கொடுத்ததால்தான் மழை பெய்தது என்று கூறுவீர்கள். அப்புறம், மழை பெய்யாத போதெல்லாம் ஆடுகளைச் சாகடிப்பீர்கள். போது நீங்கள் உண்மையை உணர்ந்ததற்கு மகிழ்ச்சி. சரி, சீக்கிரம் போங்கள், வயலில் உடைந்திருக்கும் வரப்புக்களைச் சரி செய்யுங்கள். வேலையைக் கவனியுங்கள்” என்றார். 

உடனே மக்கள், “அன்புத் தாத்தா வாழ்க!” என்று கூறிக்கொண்டே தங்கள் வேலையைக் கவனிக்க ஓடினர். பொன்னனின் அப்பாவும் தன் வயலை நோக்கி மண்வெட்டியுடன் போய்விட்டார். 

அருளப்பர் பொன்னனைப் பார்த்தார். அவன், “தாத்தா! நீங்கள் அன்புத் தாத்தா! அருமைத் தாத்தா! உங்களால் இந்தக் கிராமம் அறிவு பெற்றது! என் ஆடும் பிழைத்தது!” என்றான். 

தோட்டத்திலே மழையில் நனைந்து கொண்டிருந்த ஆடு, ‘அம்மே’ என்று கத்திக்கொண்டே அங்கு ஓடி வந்தது. அந்த ஆட்டின் ‘அம்மே’ சத்தம் பொன்னன் கூறுவதை ‘ஆமாம்’ என்று ஆமோதிப்பது போலிருந்தது!

– அன்புத் தாத்தா (சிறுகதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1957, பாரி நிலையம், சென்னை.

முனைவர் பூவண்ணன் பூவண்ணன் (வேள்ள தாமோதர கோபாலகிருஷ்ணன்; பிறப்பு: 5 செப்டம்பர் 1932 - இறப்பு: ஜனவரி 11, 2013) கவிஞர், எழுத்தாளர், நாடக ஆசிரியர். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். சிறார்களுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். தமிழ் இலக்கியம், சிறார் இலக்கியம் குறித்து ஆராய்ந்து வரலாற்று நூல்களைப் படைத்தார். தனது இலக்கியப் பணிகளுக்காகப் பல்வேறு விருதுகளைப் பெற்றார். பூவண்ணன் - Tamil Wiki நேர்காணல்: டாக்டர் பூவண்ணன் (2005) http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=1072 பூவண்ணன்,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *