அன்னையின் காலத்தினால் செய்த உதவி

இன்பக் கனவுகளோடு உறங்கிக் கொண்டிருந்த
இளைஞன் செல்வத்தை அவனுடைய அன்னையின்
குரல் கலைத்தது .
“ஏனம்மா ஞாயிற்றுக் கிழமை தானே உறங்க விடாமல் ஏன் எழுப்புகிறாய்?“
எழுந்து உட்கார்ந்தான் செல்வம் .
அவனுடைய அன்னை பார்வதி பதிலிறுத்தார் –
“தங்கமே கண்ணா எழுந்து தயாராகி வா நாம் உன் சிற்றன்னை
வீட்டுக்குச் சென்று விடுவோம்..”
“சித்தி வீட்டில் என்ன ஏதேனும் மங்கல நிகழ்ச்சியா?”
“அதெல்லாம் இல்லை இன்று தேதி பத்து.. வரிசை கட்டி வந்து நிற்பர்
கடன் கொடுத்தோர்”
“என் ஊதியத்திலிருந்து இந்த மாத வாடகை , பால் , மளிகை , காய்கறி எல்லா கணக்கையும் அடைத்து விட்டேனே … அப்புறம் என்ன?“
“கண்ணா நான் பெற்ற செல்வம் நீ பொறுப்பான பிள்ளையாய் வீட்டுக்காக எல்லாம் செய்து விட்டாய்.. ஆனால் , என் சொல்பேச்சு கேட்காத உன் தந்தை சீட்டாட , மது பானம் அருந்த கடன் கொடுத்தவர்களை இன்றுதான் வரச் சொல்லி இருக்கிறார். இன்று ஏதோ புதையல் கிடைக்க உள்ளது போல் …
வருகிறவர்கள் அவரை மட்டுமா பேசுகிறார்கள் என்னையும் தான் ஏசுகிறார்கள் …. அவருடைய அடாத செயல்களுக்கு நான் பேச்சு வாங்க வேண்டுமா ? “
“இதற்காக உன் தங்கையார் வீட்டுக்குப் போக வேண்டுமா? அப்பா கண் விழிக்கட்டும்.. மொத்த கடன் தொகை எவ்வளவு என்று அறிந்து நான் சேமநல நிதியில் கடன் விண்ணப்பித்து நிதி பெற்று கடன்களை அடைத்து இதிலிருந்து விடுபடலாம்… அழைப்பு மணி ஒலிக்கிறது. யார் என்று பார் நான் முகம் கழுவி வருகிறேன்..“
செல்வத்தின் தாய் பார்வதி வாசற் கதவைத் திறந்தார் .
செல்வம் அவரைத் தொடர்ந்தான் .
“வாருங்கள் முத்து மாமா … அமருங்கள்” செல்வம் வரவேற்றான்.
முத்து நாற்காலியில் அமர்கிறார் பேசுகிறார்
“அம்மா சகோதரி , அரசியல் புள்ளி ராஜேஸ்வரி உங்களுக்கு உறவினரா?“
பார்வதி பதில் அளித்தார்
“அவரும் என் மாமியாரும் இரட்டைப் பிறவிகளாகப் பிறந்தவர்கள் . இவருக்குப் பெரியம்மாள் . . இருப்பினும் , அவரையும் என் கணவர் அம்மா என்றே விளிப்பார்.
அவர் பொது வாழ்க்கைப் பாதையில் சென்ற பிறகு
அவருக்கும் இவருக்கும் ஆண்டுக் கணக்கில் தொடர்பு இல்லாமல் போய் விட்டது. தங்களைப் போன்றவர்களுக்கு அடைக்க வேண்டிய தொகைகளை எல்லாம் என் புதல்வன் , அலுவலகத்தில் கடன் விண்ணப்பித்து கொடுத்து விடுவான் . சில நாட்கள் எங்களுக்கு கால அவகாசம் கொடுங்கள் அண்ணா”
முத்து கூறினார்
“நீங்கள் வேறு … கடனை எல்லாம் நண்பருடைய பெரியம்மா ராஜேஸ்வரி அடைத்து விட்டார். எனக்கு மட்டுமல்ல உங்கள் கணவர் கார்மேகம் , தனிநபர்களிடம் வாங்கிய கைமாற்று, நிறுவனங்களிடம் வாங்கிய கடன் , அங்காடிகளில் பொருள் வாங்கிய வகையில் கடன் எல்லாருக்கும் ராஜேஸ்வரி அம்மையாரின் ஆட்கள் தேடித் தேடி வந்து பைசா கூட பாக்கி இல்லாமல் கொடுத்துச் சென்று விட்டனர். இனிமேல் , எவரும் கார்மேகம் பணம் தர வேண்டும் என்று இங்கு வந்து நிற்க மாட்டார்கள் . நான் சில சமயம் , கோபத்தில் மதி கெட்டு கடுமையாக சொற்களைக் கொட்டி விட்டேன். அதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்கத் தான் இப்பொழுது வந்தேன். தம்பி செல்வம் அப்பா எங்கே?“
“இரவெல்லாம் நண்பர்களுடன் இருந்தார் போலும் அதிகாலையில் தான் வந்தார் என்றார் அம்மா . நான் போய் எழுப்புகிறேன் மாமா”
சில நிமிடங்களில் முகம் மாறியவனாக செல்வம் வந்தான்.
பார்வதி அவனுடைய முகத்தின் மாற்றத்தைக் கவனித்தார். தங்க சட்டத்தின் உள்ளே புன்னகை பூத்த , அவனுடைய பாட்டியின் படத்தின் அருகே நின்ற செல்வம் தழுதழுத்த குரலில் பேசினான்
“பாட்டி . கருவறையில் உன்னுடன் இருந்த என் பெரிய பாட்டியின் பேருதவியால் உன் புதல்வர் என் தந்தை கடனாளர் என்ற பழி நீங்கி இந்த உலகை விட்டு விடை பெற்று விட்டார்.”
பார்வதி விசும்பி அழுதார். கணவர் இருக்கும் அறையை நோக்கி விரைந்தார்.
முத்து செய்வதறியாது செல்வத்தின் தோள்களை வருடினார்.
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |