அதே காசு




(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“டேய், என் நகைப் பெட்டியிலிருந்த காச எடுத்தீங்களா?” அமுதாவின் குரலில் பதட்டம் இருந்தது.
“எந்தக் காசு?”- கேரம் விளையாட்டில் மும்முரமாயிருந்த ரவி கேட்டான்.

“என் நகைப் பெட்டியிலிருந்த ஒரு ரூவாக் காசு”
“அது எதுக்கு எங்களுக்கு?”
“வந்து தேடிக் குடுங்கடா.”
“போங்கம்மா… என் உண்டியல்லேர்ந்து வேனா ஒரு ரூவா எடுத்துக்கோங்க.”
அம்மா சட்டென்று உள்ள போய்விட மசனுக்கு மனம் கேட்கவில்லை, பின்னாலேயே ஓடி வந்து –
“ஏம்மா” என, அம்மாவின் கண்கள் கலங்கியிருப்பதைப் பார்த்தவன்,
“சுந்தர், இங்க வா” எனத் தம்பியை அதட்டினான்.
கட்டிலின் மேல் அம்மாவின் சிறு நகைப் பெட்டி திறந்து கிடந்தது. அதில் வழக்கமான சின்ன முத்துச்சரம், ஒருஜோடி கல் வளையல்கள், இரண்டு மூன்று ஜோடிக் கம்மல்களின் ஊடே கருத்துத் தடித்துக் கிடக்கும் அந்தப் பழைய ஒரு ரூபாய் நாணயத்தைக் காணவில்லைதான்!
அமுதாவிற்குப் பெண் பிறக்காததாலோ என்னவோ. புதுசாய் நகை செய்து கொள்ள அத்தனை ஆசையில்லை. விசேஷ நாட்களில் உள்ளங்கழுத்தில் முத்துச்சரமும், கையில் கல்வளையல்களும் ஏறிக் கொள்ளும் ஒரு முழம் பூவையும் தலையில் செருகிக் கொண்டால் அவள் அலங்காரம் தீர்ந்தது!
“அந்தக் காசு ஏம்மா ஸ்பெஷல்?” கேட்ட சின்ன மகனைப் பார்த்துப் புன்னகைத்தாள் அமுதா.
“அது எதுக்கு உங்களுக்கு?”
“பிகு பண்ணாதீங்கம்மா. நாங்க தேடணுமில்ல!”
“காக கிடைக்கட்டும் சொல்றேன்.”
“கட்டாயம் தேடி எடுத்திடலாம் ப்ளீஸ்மா…. சொல்லுங்களேன். ” மகன்கள் கெஞ்ச அமுதா, கட்டிலில் சாய்ந்து அமர்ந்து கனைத்துக் கொண்டாள்.
“இது பதினேழு வருஷத்துக்கு முந்தின கதைடா”
“சொல்லுங்க”
“கடையம் பாட்டி வீட்டுக்கு நானும் தம்பி அருளும் போயிட்டுப் பஸ்ல ஊருக்குத் திரும்பிக்கிட்டிருக்கோம்,”
“அருளு மாமாவா?”
“ம்… அப்ப அரை டவுசர் போட்ட பய.”
“கண்டக்டர் டிக்கெட் போக ஒரு ரூபா காசு மீதம் தந்தாரு. ஓங்க மாமா காசைச் சுண்டிப்போட்டு, பிறவு விளையாட்டா நெத்தியிலேர்ந்து மூக்கு வழியா அத உருட்டிக் கொண்டு வந்தான், நா சும்மா இருக்க மாட்டாம அதேபோல, காசைப் பிடுங்கி என் முக்கு மேல உருட்ட ஆரம்பிச்சேன்.”
“அப்போ உங்களுக்கு என்ன வயசு இருக்கும்?”
“அதிருக்கும் பத்தொம்பது இருவது. வாயி திறந்திருக்க, காசு ‘டபக்’குனு உள்ளே தொண்டைக் குழியில போய் சிக்கிடுச்சு.”
அமுதாவுக்குச் சொல்கையிலேயே சிரிப்புப் பொங்கியது. பையன்களுக்கும்தான்!
”அருளு கூச்சல் போட்டான். எனக்கு மூச்சடைச்சு முகம் வெளுத்ததைப் பார்த்து பஸ் நிப்பாட்டியாச்சு. என்ன ஏதுன்னு ஆளாளுக்கு விசாரிச்சு முடிக்கறதுக்குள்ள எனக்கு உயிரே போயிடும்போல் பயம். கை காலெல்லாம் வியர்த்துப் போச்சு. டவுனுக்குள்ளே டாக்டர் வீட்டுக்குப் போக இருபது நிமிஷமாவது| ஆகும்னு டிரைவர் சொல்ல, அருளு அழ ஆரம்பிச்சுட்டான். எனக்கு ஒடம்பு நடுங்குது. அப்போ ஒருத்தர் என்னைத் தூக்கி நிப்பாட்டி, குனியச் சொன்னாரு- ஓங்கி பிடரியில் ஒரு போடு! இரண்டாவது தட்டுல காசு ‘பொட்’டுனு வெளியே விழுந்திடுச்சு. என்ன நிம்மதினா ஊரு வர்றவரைக்கும் கண்ணுலர்ந்து நீரா வடிஞ்சிட்டேயிருந்தது. ஊகு சேர்ந்த பிறகு அவரு அருளுகூட ஏதோபேசிட்டு வீடு வரைக்கும் வந்துட்டுப் போனாரு. ஒரு மாசம் பின்னாடி அவகு வீட்லேர்ந்து என்னைப் பொண்ணு கேட்டு வந்தாங்க. பிறகு கல்யாணமும் முடிஞ்சு போச்சு” முடிக்கையில் அமுதாவின் முகம் சிவந்திருந்தது.
“அட… அப்பாதான் காதல் கதை ஹீரோ” – கந்தர் சிரிக்க, ரவி கூச்சத்துடன்,
“டேய். அம்மான்னு விவஸ்தயில்லாம” என்று தம்பியை அடக்கினான்.
”அந்தக் காசுதான் இதுவாம்மா?”
“ஏன் இந்தக் கதைய முன்னாடி சொல்லலை?”
பையன்களின் கேள்விகளுக்கு அமுதா கச்சத்துடன் சிரித்தான்.
மகள்கள் இருவரும் மும்முரமாகக் காசைத் தேடினர். கட்டிலடியில் பெருக்கி, இடுக்குகளில் துழாவி, சேலைகளை நோண்டி… ஹும்… கிடைக்கவில்லை.
அமுதாவின் முகத்தில் சற்று முன் தெரிந்த வெட்கம், சிரிப்பு எல்லாம் போய் முகம் சூம்பிக் கிடந்தது.
“உங்கப்பா வேற ஊர்ல இல்லை… நல்லபடியா வந்து சோணுமே.”
“அப்பா மெடிக்கல் ரெப்ம்மா… ஊருக்கு எப்பவும் போறதுதான்… புதுசா கவலைப்படுறீங்க?”
“ம்ப்ச்… இன்னிக்கு எங்களுக்குக் கல்யாண நாளுடா, பாயசம் வைச்சேன். அப்பா ‘இன்னிக்கு வந்திருவேன்’னு சொல்லியிருந்தாங்க. சரி, நகையை எடுத்துப்போடலாம்னு பெட்டியைத் திறந்தா, காசைக் காணோம்.”
அமுதா குளித்துப் பாலாடைக்கட்டி நிறத்தில் கதர் பட்டு கட்டியிருந்தாள் அதற்கு முத்துமாலை வெகு எடுப்பாயிருக்கும்.
“இப்ப ஏன் நெக்லெஸ் போட்டுக்கலை?”
“ச்ச்…எனக்கு மனசே சரியில்லப்பா” – அமுதா சொல்கையிலேயே கதவு தட்டப்பட்டது.
“அப்பாவாத்தான் இருக்கும். ”
கணவரின் பெட்டியைப் பிள்ளைகள் கொண்டு வந்து உள்ளே வைத்தபின்பும் அமுதாவால் ஏனோ எழவே முடியவில்லை. உடம்பே கனத்து விட்டாற்போலிருக்க உள்ளே நுழைந்த கணவனை மட்டும் கண் நிறையப் பார்த்துக் கொண்டாள்.
“பாயாசம் மணக்குதே” சிரித்த கணவன் சேகர், பூப்பொட்டலத்தை நீட்டினான்.
“காசக் காணோங்க.”,
“எந்தக் காசு”
“நகைப்பெட்டியில் வச்சிருப்பேனே, அந்த ஒரு ருவாக்காசு,”
“அதுக்கென்ன இப்ப?”
அமுதா கண்களில் நீர் கட்டியது.
“யேய்… என்னதிது… நாந்தான் எடுத்தேன்” கணவன் சொல்ல,
“எதுக்கு என்னையக் கேக்காம… எதுக்கு?” குமுறினாள்.
“எல்லாம் ஒரு விஷயத்துக்குத்தான்” என்றவாறு பெட்டியைத் திறந்தாள் சேகர், மேலாக இருந்த நகைப்பெட்டியை மனைவி கையில் வைத்தான்.
மகன்கள் ஆர்வமாய்க் கவளித்திருக்க, அமுதாவிற்கு படபடப்பாய் இருந்தது.
“நகையா?”
“பாரேன்,”
திறக்க, கருநீல வெல்வெட்டில் பெரிய தங்கக்காசு ஒன்று பளபளத்தது. அதைச் சுற்றிலும் சிகப்புக் கற்கள் ஜ்வலிக்க, அப்பதக்கம் மெல்லிய சங்கிலியில் கோர்க்கப்பட்டிருந்தது. பின்னாலிருந்து மூன்று வளையங்களைக் காட்டிய சேகர் “இதைக் கழுத்தில் ஒட்டினாப் போலயும் போட்டுக்கலாம். தழையவும் இறக்கிக்கலாம்” என்றான், பெருமையாக, சின்னகாசும், சிவப்புக்கற்களுமாய்ப் பொருத்தமான தோடுகளும் பக்கத்திலே ருந்தன.
“என் காசு எங்கே?”
“நகை பிடிச்சிருக்கா?’
“ம்… காச எதுக்கு எடுத்துப் போனீங்க?”
“அதக்காட்டி கடைக்காரர்ட்ட ஏதாவது புதுமாதிரியா னக்குச் செய்யத்தான்.”
“அதுல என்ன புதுசா? சொல்லிட்டு எடுத்துருக்கலாம்லா”
“முதல்ல இது பிடிச்சிருக்கான்னு சொல்லு.”
“அழகாயிருக்கு… காசு எங்கே?”
பிள்ளைகள் சிரித்தனர்.
“அம்மா விடமாட்டாங்கப்பா. காசைக் குடுத்திருங்க.
பர்ஸைப் பிரித்து சேகர் துழாவ,
“காச மறந்து விட்டுட்டு வந்தாச்சா? அதை எதுக்கு எடுக்கணும்? கடைக்காரன் பழைய ஒரு ரூபாகாசைப் பாத்திருக்க மாட்டானா என்ன?” அமுதா பதறினாள்.
”ஏனோ அன்னிக்கு உன் நகைப்பெட்டியத் திறந்தேன்… இந்த ஐடியா தோண காசை எடுத்தேன்.. இந்தா”- காசைக் கணவன் கையிலெடுக்க, அதைக் கை நடுங்க வாங்கி உற்றுப் பார்த்தாள்.
லேசாகக் கருத்து ஓரத்தில் ஒரு சிவப்புப் பொட்டுடன் அது அவள் உள்ளங்கையில் கிடந்தது.
“எங்க கல்யாணத்தன்னைக்கு எனக்கு நகப் பாலீஷ் போடறப்ப, ஒரு துளி சிந்திடுச்சு” என்று அந்தச் சிவப்புக் கறையைத் தடவினாள்.
“அதக் கழுவிட்டா என்னம்மா?” சுந்தர் கேட்க, “போடா அசடு” என்பதாய் ஒரு சிரிப்பு சிரித்தாள், அவன் அம்மா.
புதிதாய் வந்திருந்த தங்கக் காசுச்சரம் வெளியே மின்னிக் கிடக்க, அந்தப் பழைய தடித்த நாணயத்தைப் பத்திரமாய் தன் நகைப்பெட்டிக்குள் வைத்து அலமாரியில் பூட்டும் அமுதாவை, மூன்று ஆண்களும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
– உயிர்நாடி, அக்டோபர் 1991.
– பல்லக்குப் பயணம், முதற் பதிப்பு: செப்டம்பர் 2005, ஜீயே பப்ளிகேஷன்ஸ், சென்னை.