கூனல்
கதையாசிரியர்: தெளிவத்தை ஜோசப்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: September 13, 2026
பார்வையிட்டோர்: 70
(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்த நாலு மாடிக் கட்டிடம் நகைத்துக் கொண்டது. அதற்குத்தான் எத்தனை அனுபவம், ஆயாசம், பாடம், படிப்பினை …….!
ஒன்று, இரண்டு, மூன்று என்று லொறிக்குப்பின் லொறி யாய் வந்திறங்கிய கொழுந்து சாக்குகள் நிறுக்கப்பட்டு, ஊஞ்சலாடிய வண்ணம் மேல்மாடிக்கேறுகின்றன – வாட்டத் தட்டுக்களை நோக்கி.
படங்குத் தட்டுக்களிலே பரப்பப்பட்டிருந்த வாடிய கொழுந்து வழித்துக் கொட்டப்படுகின்றது கைமட்டையால். நிறுத்து மேலேறும் பச்சைக் கொழுந்து வாட்டத் தட்டுக் களில் பரப்பப் படுகின்றது.
கிரிக்கெட் மட்டைபோன்ற கைமட்டையால், படங்குத் தட்டுக்களின் இடைவெளியில் கைநீண்டமட்டும் உள்நீண்டு கொழுந்து பரப்பும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருக்கின் றனர் மெத்தையாட்கள். குவியல் குவியலாய் கிடக்கும் தேயிலைத் தளிர்களை அவர்கள் தட்டிவிடும் வேகமும், இலை மேல் இலை கிடக்காமலும் இடைவெளியும் விழாமலும் பரப் பிவிடும் லாவகமும் மூக்கின்மேல் விரல்வைக்கத் தோன்றும்.
அடுக்கடுக்காய் இருக்கும் படங்குத் தட்டுகளின் இருண்ட வெளிப் பாதையில், ‘கென்வாஸ்’ சப்பாத்து எழுப்பும் மெல் லொலியுடன், பச்சிலைப் பரவு தலை நோட்டமிட்டவாறு வந்து கொண்டிருந்தார் இரண்டாவது.
பெரிய டீமேக்கரய்யாவுக்கு அடுத்தவர்.
ஐயாவைக் கண்டதும் ஆட்கள் ஓடி ஆடி வேலைசெய்த னர். வேலையின் வேகம் அதேதானென்றாலும் அவருக்குக் கொடுக்கவேண்டிய மரியாதையால் ஏற்பட்ட பரபரப்பின் ஆட்டமும் ஓட்டமும்தான் அது.
நடைபாதையின் குறுகிய இடைவெளியில் குவிந்திருந்த பசுந்தளிர்களை ஒருவன் ஒதுக்கி வைத்தான். பாதைக்கென ஒதுக்கப்பட்ட அந்த இடத்தில் கொழுந்தை குவித்து வைத் தால் மிதிபடுமே என்று ஐயா கோபிப்பார் என்பது அவ னுக்குத் தெரியும்; என்றாலும் அதை ஒதுக்கிவைக்க வேண் டும் என்ற பிரக்ஞை எழ ஐயா வரவேண்டியிருக்கிறது.
இரண்டாவதின் விரலிடுக்கில் ஒரு வாடிய கொழுந்து. விரல்கள் அதை நெருடி, நிமிண்டிப் பார்த்துக்கொண்டிருக் கின்றன. இலை, தண்டு, குருத்து எல்லாம் துவள்கின்றன.
நல்ல வாட்டம்!
மேல்தட்டு இலை அது. கைதேர்ந்த டீமேக்கர் என்ற சாமர்த்தியமே அதில்தான் இருக்கிறது-வாட்டத்தில்-தளிரை வாடவிடும் திறமையில்!
தட்டுக்களைச் சுற்றிச் சுற்றி ஆட்களுடன் தானும் இலை களைத் தட்டிப் பரப்பிக்கொண்டும், இடதுகையால் முற்றல் இலைகளைப் பொறுக்கிக்கொண்டும் இருந்தவர் ‘காற்றாடியைப் போடு, இலையில் ஈரம் கூட’ என்றார்.
‘ப் ம் ம் ம்……’ என்று ஒலி பெருக்கிக் கொண்டது அந்த ஆளுயரக் காற்றாடி.
வெதுமையான காற்று உணரும்படி வீசுகின்றது. பரப் பப்பட்டுள்ள இளம் தளிர்கள் சிலிர்த்தசைகின்றன.
இலை வாட்டுவதற்குப் பயன்படாமல், நடைபாதை நெடுக பாய்ந்தோடி மறையும் உஷ்ணக்காற்றையும் மறித்து தட்டுகளுக்குள் செலுத்த கூரையிலிருந்து தள மட்டத்துக்கு இடைக்கிடை தொங்கும் படங்குத்திரைகள் இறக்கிவிடப்படு கின்றன.
லேசாக வாடும் இலைகளில் இருந்துவரும் அந்த போதை தரும் நறுமணத்தில் மனதை நெகிழ விட்டபடி ஜன்னலண்டை நின்றார் – நிற்பதுபோல் நடந்தார்.
ஆளுயரம் நீண்ட ஜன்னல்கள் அரைவாசித் தோட்டத்தை அப்படியே காட்டின.
குயவன் வீட்டுக் கொட்டிலின் பானைக் குவியலாய்த் தோற்றும் மலைக்குன்றுகள் சிறிது, பெரிதாய்-
உடுத்திருக்கும் பச்சைச் சேலையின் ஜரிகை ஓரமாய் மலை யிடுக்குகளில் நெளிந்தொடியும் அருவிக் கோடுகள் மறைந் தும், தெரிந்தும்-
பாம்புப் படமாய் பளபளத்து மின்னி அசையும் அரச மரத்தின் இலைக் கூட்டம் –
கொழுந்து மூடைகளை இறக்கி விட்டு விரைந்தோடி மறையும் வெற்று லொறிகளின் சிவப்புக் கூரை-
இஸ்டோர் லயத்துச் சண்டை; சண்டையை ரசிக்கும் கும்பல்; வெளியே நடக்கும் ஓரிரு தொழிலாளர்கள்; கார்டூன் சித்திரங்களாய் —
விசிறிய நேரத்தில் ஒரு விநாடி விழி ஜீரணித்த அத்தனையும் அமிழ்கின்றன.
அய்யா மாடிப்படி இறங்குகின்றார். அறைப்பறைக்குள் அடிவைக்கிறார். அங்கே பெரியவர் இருப்பது தெரிகின்றது. சின்னவர் அங்கு மேற்பார்வையிடத் தேவையில்லை. இருந்தும் அறைப்பறையையும் தான் ஒரு எட்டுப் பார்த்துப்போனதை எங்கோ பார்த்துக்கொண்டு நின்ற பெரியவர் உணரட்டும் என்ற உள்ளுணர்வில் ஒரு சத்தம் போடுகின்றார். ‘அது தான் ரொம்பி வழியுதே… இன்னும் என்ன திணிக்கிறே … …’
அறைப்பு யந்திரத்தில் அளவுக்கு மீதி அதிகமாகவும், அவசர அவசரமாகவும் இலையை அமுக்கித் திணித்துக்கொண் டிருந்தவனை முறைத்துப் பார்த்தார் பெரியவர்.
பயங்கரமாய் தோன்றும் அறைப்பு யந்திரங்களின் சுழற்சிக் கூச்சல் அத்தனையையும் கதவுடனே உள்ளே சாத்தி அடைத்துவிட்டு அடுப்பறைக்குள் நுழைந்தவர் சற்று நின் றார். விசாலமான அந்த அறையின் எந்த மூலையுமே கொட் டும் குளிருக்கு இதமாகத்தான் இருக்கும், கம்மென்று,
வெய்யில் நாளென்றால் நரகம் தான். பாறை பாறையா அடுப்புக்குள் கிடக்கும் நெருப்புப் பாளங்களை ஒரு விநாடி பார்த்தாலே கண்வடியும். அதிலேயே வேலை செய்வோருக்கு அது பழக்கம்.
அடுப்பின் இரும்புக் கதவை அனாயாசமாகத் திறந்து, அறுத்துக் குவித்திருக்கும் * சவுக்கு மரக் கட்டைகளை ‘தம்’ கட்டித் தூக்கி அடுப்புக்குள் வீசிக்கொண்டிருந்தான் அடுப் பாள்.
அடுப்புக் கதவு திறபட்டதும் தீ ஜ்வாலையாய் சுட்டது அந்த அறையில் வீசிய காற்று. உருகும் தாரில் வெறும் காலில் நிற்கும் ஒரு உணர்வு.
காதில் செருகியிருந்த பென்சிலை உருவி காதுள் விட்டுக் குடைந்த வண்ணம் மெதுவாக சுழல் கதவுள் நின்றார், கதவு சுழன்றது.
எழுதுவதைவிட காதுள் விட்டுக் குடைவதற்கே இவர் பென்சிலை அதிகம் பாவிப்பது. சுற்றுக் கதவுள் அய்யா வந்திருப்பதை சல்லடை காம்பிரா ஆட்கள் கவனிக்கவில்லை.
சல்லடைக் காம்பிராவின் மணம் மூளையைக் குடைகிறது. மேல் மாடியில் வீசும் வாடும் இலையின் போதை மணமோ, அறைப்பறையின் திண்மையான வாசனையோ, அடுப்பறை யின் சுடுமணமோ அல்ல சல்லடை அறையின் நறுமணம்.
அத்தனை மணமும் திரிந்து அர்ப்பணிக்கும் ஒரு அழகு மணம். வடித்துக் குடிக்கும் தேயிலையின் வாசனை, ரசித்து நுகர்வோருக்கு அந்த மணமே ஒரு அலாதி இன்பம்.
‘குச்சி பொறுக்கும்’ பெண்கள் வரிசையாக அமர்ந்து, சல்லடையில் இடப்போகும் தேயிலையில் உள்ள குச்சி, தண்டு, சிறுச்சிறு கல், அசடு ஆகியவற்யுைப் பொறுக்கிக் கொண்டி ருக்கின்றனர். சன்னமான வேலைதான் என்றாலும் சலிப்பூட் டும் வேலை. அவர்கள் உட்கார்ந்தபடியே அடிக்கொருதடவை கால்மாறிப் போடுவதும், இடம்மாறி அசைவதும் இருப்புக் கொள்ளாத நிலைக்கோர் எடுத்துக்காட்டு.
சலித்த தேயிலை; ஆரச்ஞ் பெக்கோ; புறோக்கன் பெக்கோ; பெனிங்ஸ் என்று தனித்தனி பெயர்களுடன் குவிக்கப்பட்டி ருக்கிறது.
பசுங் குன்றுகளிலிருந்து வந்த பசிய இலை பாடம் பண் ணப்பட்டு, பதம் பெற்று கைபட்டு கருங் குன்றுகளாய் குவிந்து கிடக்கின்றன.
குவிந்து கிடக்கும் தேயிலையைக் கூடையில் அள்ளி தலை யில் சுமந்து நடந்து ‘பின்’ (Bin) களில் கொட்டுகின்றனர் சிங்களப் பெண்கள்.
தலைச்சுமையைப் பற்ற, தூக்கிய கைகளிடையே தெரியும் எடுப்பு, சட்டையையும் மீறி பற்றையாய் நனைந்து தெரியும் அக்குளின் வியர்வைப் பிசுக்கு, இடுப்புக்குக் கீழ் கட்டியிருக் கும் இறுக்கமான கம்பாயத்திடை இடுப்பொடிய அரக்கி நடக்கும் யானை நடை, அத்தனையிலும் ஒரு முரட்டுத்தன மான ஆழகு!
சல்லடைக் காம்பிரா ஆட்கள் எல்லாருமே ஆங்கிலோ இந்தியர்களைப் போலத்தான், பொன் மயிரும் பொன் மேனியுமாக.
அத்தனையும் தேயிலையின் தூசி. சல்லடை அறையின் அருகே – வெளியே – இரண்டாள் உயரத்திற்கு வளர்ந்து நிற்கும் சப்பாத்துச் செடி வேலிகூட பச்சை விட்டு ‘மஞ்சள் மசேல்’ என்று தூசிபூசிக் கிடந்தது.
‘பெனிங்சின்’ பெருமணத்தில் மனம் லயித்து இரு கைக ளாலும் அந்தக் கருங்குவியலை அளைந்து கொண்டிருந்தவன் சிரித்துக்கொள்கிறான்.
கடற்கரை மணலை வாரி இறைத்து கரம் கொட்டிச் சிரிக்கும் சிறார் நிலை.
ஐந்துக்கோ ஐந்தரைக்கோ அந்த அறையைவிட்டு வெளியே நடந்துவிட்ட பிறகு அந்த தேயிலையை அவனால் பார்க்கத்தான் முடியுமா?
கண்வெடித்து விடு மளவு. மின்னும் அக்குவியலை வெறித் துப்பார்த்தான். அதை அப்படியே ‘நறநற’ வென்று தின்று விடலாமா என்று ஒரு அசுர ஆசை. இதை வடித்துக் குடித் தால் எப்படி இருக்கும் -?
அவனுக்குத் தெரியாது.
கொட்டை பறித்து, தவறணை காத்து, கன்று நாட்டி, களை பறித்து, கவ்வாத்து வெட்டி, கொழுந்தெடுத்து இதோ இப்படிக் குவித்து வைத்து, அடைத்தும் அனுப்புவது அவன். ஆம்! அவனது கூட்டம்.
தேயிலைக் குவியலுள் புதைந்து கிடந்த தனது வலது கையை வெளியே இழுத்துப் பார்க்கின்றான். வியர்வையில் ஒட்டிக் கிடக்கும் ஓரிரு கருந்தூளுடன் மொன்னையாய்க் கிடக்கிறது அது.
சென்ற ஆண்டுவரை அறைப்பறை ஆளாக அதுவும் முதல் நம்பர் ஆளாக இருந்தவன் எப்படியோ றோதையில் கையை மாட்டிக்கொண்டான்.
முடுக்கி விட்டபின் யந்திரம் முதல் நம்பர் ஆள், மூன்றாம் நம்பர் ஆள் என்றா பார்த்துக்கொண்டிருக்கும்?
பலன் – நசுங்கி சப்பையாய் இழுபட்ட நாலு விரல்கள் வெட்டப்பட்டன.
உழைப்பு தந்த வடு. ஆனால் அந்த உழைப்புத் தரும் உற்பத்தி…….! அது தரும் ஊதியம் …..! வடுமட்டும்தான் வலது கையில்.
‘சீ! இது என்ன தேத்தண்ணியா… கழனித்தண்ணி யாட்டம்… மனுசன் குடிப்பானா?’
அன்றொரு நாள், தனக்குத் தேநீர் கொடுத்த அடுத்த வீட்டுப் பெண்ணைப் பார்த்து கேலியாகக் கூறினான் அவன். – அவளைக் கேலிசெய்து, கறுத்த அம்முகத்தில் நாணம் செங் கோடிட்டு நாசி புடைப்பதை இன்றெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம் போலிருக்கும் அவனுக்கு.
‘ம் ம் ம், நீங்களெல்லாம் இஸ்டோர் வேலை, ஒன்னாம் நம்பர்லே குடிப்பீங்க, எங்களுக்குக் கெடைக்கிறது இது தானே..’
‘ஹ்க்கும்’ ஒரு விரக்தி முனகல்!
‘எங்கூட்டுக்காரருக்கும் அரண்மலையிலே வேலை’ என்பது போலத்தான்.
முனகிக் கொள்ளுகின்றான்.
உரத்துக்குப் போடத்தான் லாயக்கு என்று ஒதுக்கப் பட்டுவிடும் கடைசி ரகத் தூசிக்கும் ஒரு இழை உயர்ந்த தூசிதான் அவர்களுக்குக் கிடைப்பது.
அதுவும் தலைக்கு ஒரு றாத்தல் – றாத்தல் நாற்பது சதம்- கூப்பனுக்கு அரிசி வாங்குவதுபோல.
‘இந்த எளவுல சாயமா இருக்கு…. பொறுத்த பிடியா நாலு பிடி போட்டாத்தான் கொஞ்சம் உண்டென சாயம் எறங்கும், அதுவும் ரெண்டாவது தரம் ஒன்றும் இருக்காது.
தூள் கொடுக்கும் இடத்தில் அடிபடும் பேச்சுக்கள்.
ஒரு றாத்தல் எத்தனை நாளைக்குப் பாவிக்கலாம். முடிந்த பிறகு பக்கத்து வீட்டில் கொஞ்சம் ஓசி. அதுவும் நடந்த பிறகு மயிர் குத்திட்டு நிற்கும் அக்குளிர் காலையில் ‘சுள்’ ளென்று ஒரு டம்ளர் சுடுநீரை உள்ளே ஊற்றிக்கொண்டு ஓடி வருபவர்களும் உண்டு.
அதே அந்த இளவுத் தூளைத்தான் இவனும் குடித்திருக்கின்றான்.
இஸ்டோர் வேலை என்றால் மட்டும் ‘பூப்பெக்கோவும்’ ‘பெனிங்சுமா’ கொடுப்பார்கள்?
இதையும் குடித்துப் பார்த்தால் என்ன? அடிமனதில் ஒரு ஆசை, கற்பாறையில் பூவிதழ் தவழ்ந்தாற் போல்.
அவளுக்குக்கூட ஒரு பிடி கொடுக்கலாமே! என்னமாய் குளிர்ந்து போவாள்.
ஒன்னாம் நம்பர் தூள் ஒரு பிடி கிடைத்த மகிழ்வில் இதழ்விரிய மின்னும் தேங்காய்க் கீற்றும்; குங்குமம் விரியப் பொங்கும் அவள் நெற்றியும்.
அவன் உடன் கிளர்ந்தது. ஒரு விநாடி விழுந்தெழுந்தான் கன்னியின் காதல் மடியில்.
முகத்தைச் சுழற்றாமல் கண்களைச் சுழற்றினான். எல்லா ருமே யந்திரத்துடன் யந்திரமாய் மாறிவிட்டிருந்தனர்.
‘ஹோய் …….’ என்னும் யந்திரக் கூச்சல் மனிதனின் ‘பராக்கு’ பார்க்கும் இயற்கைப் பலவீனத்தையே தலையில் தட்டி வைத்துவிடுகிறது.
எட்டிய மட்டும் ஈர்க்கிக் கூட்டுமாறால் கூட்டிக்கொண் டிருந்த பெண் தரையில் அரை நிலவு கீறிக்கொண்டிருந்தாள்.
தன்னை ஒருவரும் கவனிக்கவில்லை என்ற எண்ணம் பெனிங்சின் வடித்திறங்கும் சாயத்துக்கு வலுவூட்டிற்று.
சுருண்டிருந்த சட்டையின் முழுக்கை கணுக்கை வரை இறங்கியது. மீண்டும் சுருண்டது.
பெட்டியில் தேயிலையை அள்ளினான்; தலையில் வைத்தான்; படிகளில் ஏறினான்; ‘பின்’களில் கொட்டினான்; மீண்டும் இறங்கினான்; அள்ளினான்; தூக்கினான்; ஏறினான்; கொட்டினான்.
அவனுடைய வேலை தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது.
சல்லடை அறை ஆட்கள் வரிசையாய் நிற்கின்றனர்.
‘சேப்பைக் காட்டு; மடியைக் காட்டு; சட்டையை உதரு…….’ ஒவ்வொருவரையாகச் சோதித்து வெளியே அனுப்பிக்கொண்டிருக்கிறார் இரண்டாவது.
சல்லடை அறை ஆட்கள் அன்றாடம் வெளியேற்றப் படும் அதே முறை.
ஆறாவது ஆளாக அவன் வந்து நின்றான். முகம் இயற் கையாக இருக்கவில்லை. வெடிப்புப்பட்ட கண்ணாடியின் பிம்பம்.
யத்தனித்து வைத்துக் கொள்ளுகின்றான், முகத்தை இயற்கையாக.
கால் சட்டைப் பைகளை இழுத்துக் காட்டி விட்டு வெளியே நடந்தவனை இழுத்து நிறுத்துகிறார், இரண்டாவது,
‘கை மடிப்பை இழுத்து விடு பார்ப்போம்…..’
நனைந்த பூவாய் நசுங்கிப் போனான். நாக்கு மேலண் ணத்தில் ஒட்டிக் கொண்டது. உடல் நனைந்து ஒழுகுகிறது.
‘காலையில் மடிச்சு விட்டது தாங்க….’ சொற்களை மென்றான், சாக்கடையில் உழலும் புழுவாக தன்னை உணர்ந் தான். என்ன இழிவு – இத்தனைபேர் முன்னிலையில்; ஆண்களும் பெண்களுமாய். எத்தனை வருட உழைப்பு! அத்தனையும் பாழ்!
‘எத்தனை காலமப்பா இந்தத் திருகுதாளம்’ என்றபடி அவன் பிடரியில் கைபோட்டுத் தள்ளிக் கொண்டு நடந்தார் இரண்டாவது. ‘மற்ற ஆட்களை பார்த்தனுப்பு கங்காணி……’ என்று சல்லடை அறை கங்காணிக்குக் கட்டளை இட்டபடி.
‘இந்தாடா டேய் அந்தப் பேப்பரை எடுத்து விரி’ அதட்டினார் பெரியவர்.
ஒருவன் மேசையில் கிடந்த ஆங்கிலதினசரியை எடுத்து விரித்தான்.
பெரியவருக்கு வரும் ‘டெய்லி நியூஸ்’ அது. ‘தேயிலை மார்க்கட் நிலை’ என்ற பகுதியை மட்டுமே அவர் பார்ப் பது வழக்கம். மற்றபடி முழு உலகுமே அவருக்கு அந்த நாலு மாடிக் கட்டிடம் தான். அந்தப் பகுதிக்காகத்தான் அவர் பேப்பரே வாங்குகிறார். அதுவும் நேற்றைய பேப்பர் தான் இன்றைக்கு வந்து சேரும் தோட்டத்துக்கு!
‘உதரேண்டா. மூதேவி, உதரித் தொலை; நாய் வேலை செய்யிறது…… நான்டா தொரை கிட்ட கைகட்டி நிக்க ணும் …… ம்ம்… பார்… ஒரு நாளைக்கு இவ்வளவென்றால் முப்பது நாளைக்கும்..? ஒரு வருஷத்துக்கு… எவ்வளவு போகும்… நாலு பேர் கொண்டு போனால்……! ஏன் தூள் கொறையாது…….
அவனிடம் சத்தம் போட்டு முடித்த பெரியவர் இரண் டாவதிடம் திரும்பி ‘துரையிடம் கூட்டிப் போங்கள்…… நான் இதோ வர்றேன்… என்றபடி பேப்பருடன் அதைச் சுற்றி அவன் கையிலேயே திணித்து ‘கொண்டுபோ மூதேசி…’ என்றார்.
நாலு அவுன்சு பெனிங்ஸ், நாளெல்லாம் அதற்காகவே நாயாய்ப் பாடுபடும் அவனை நடு வீதியில் நிறுத்தி விட்டது.
அன்றுதான் எடுத்தான். அதுவும் ஒரு பிடி. விற்க அல்ல, வீடு கட்ட அல்ல.
குடித்துப்பார்க்க. அதையெல்லாம் யார் கேட்கப் போகின்றார்கள்.
துரையின் சட்டபூர்வமான கேள்விகளுக்கு அவனால் பதில் சொல்லக்கூட முடியவில்லை.
அவன் குற்றவாளி!
நாலு அவுன்சோ, நாற்பது அவுன்சோ; திருடியது குற்றம்.
இன்றே அகப்பட்டிருக்காவிட்டால் நாளை எட்டவுன்ஸ், மறுநாள் ஒரு றாத்தல். மறுநாள்..!
அன்றிரவு –
இஸ்டோர் இருளில் நின்றது.
வெண் பூதமாய் நின்ற அந்தக் கட்டிடத்தின் அடிப் பாகம் எல்லாம் இருள்.
ஓரிரு மின் விளக்குகள் கட்டிடத்தை இருளில் இருந்து மீட்க முயன்று கொண்டிருக்கின்றன.
சுவர் ஓர இருளில் நாலைந்து உருவங்கள் தலையில் தேயிலைத்தூள் மூடைகளுடன் பம்மி நடக்கின்றன. கான் ஓரமாய் நிற்கும் கறுப்புக் கார் அம்மூடைகளை உள் வாங்கிக் கொள்கின்றது.
‘யான் ஒன்றும் அறியேன் பராபரமே!’ என்று ஒரு இருள் மூலையில் நிற்கிறான் காவற்காரன்.
கார் மறைந்து விட்டது.
அந்த இடத்தில் பகலில் கால் சட்டை, சப்பாத்துடன் நடக்கும் பெரியவர் இப்போது சாரத்துடன் நடக்கிறார்.
பகலில் சாரத்துடன் நடக்கும் காவற்காரன் இப்போது கால்சட்டை, சப்பாத்துடன் நடக்கின்றான்.
பிடித்துக் கொண்டிருந்த மூச்சை பெரிதாய்விட்ட பெரியவர் மெத்தையில் மிதந்தார்.
உழுபவனுக்கு உணவு கிடைக்காத அதே சமுதாயக் கூனல்.
அந்த நாலு மாடிக் கட்டிடம் நகைத்துக் கொண்டது.
– அல்லி, மார்கழி 1965.
தொடர்புள்ள சிறுகதைகள்
சாணை பிடிக்கலையோ சாணை
கரடிகுளம் ஜெயாபாரதிப்ரியா
September 27, 2026
தனக்கு வந்தால்
ஸ்ரீ.தாமோதரன்
September 27, 2026
ஒளிரும் பிறை
மா.வீ.தியாகராசன்
September 24, 2026