அங்காளம்மா!
(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“என்னப்பா.. பூஜையெல்லாம் தயாரா?” காரை விட்டு இறங்கியவுடன் கேட்டார் அதிரடிப்படையின் தலைவர் விமலராஜன். உள்ளுக்குள் அன்றிரவின் படபடப்பு இருந்தது.
“எல்லாம் தயார் சார். ஆறு மணிக்குத்தான் நல்லநேரம் ஸ்டார்ட். ஆகுதாம். அதுவரைக்கும் வெயிட் பண்ணிட்டு அப்புறம் ஆரம்பிக்கலாம்ன்னு சாமி சொல்லுறார். ஆறு மணிக்கு ஆரம்பிக்கலாம் சார்.” இன்ஸ்பெக்டர் ஏழுமலை மிகப்பணிவோடு பேசினார்.
“இல்லைங்க ஏழுமலை. ஆறு மணிக்கு முடிச்சுட்டு தர்மபுரி போறதுக்கு லேட்டாயிடாதா? வேலை இருக்கு. சீக்கிரம் முடிச்சுட்டு சீக்கிரம் கெளம்பணும். அங்கே எல்லா ஏற்பாடுகளும் தயார் தானே?”
“எல்லாம் ரெடி சார். தாமரை, நளா, அங்குராஜ் மூணு பேரும் ‘ரெடி டு ஸ்டார்ட்’ சார்! கிரைம் பிராஞ்ச் மோகன் சார் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட போன் செஞ்சி எல்லாம் ரெடின்னு சொன்னார். நாம போனதும் ‘ஆபரேஷன் கோப்ரா’ ஸ்டார்ட் பண்ணவேண்டியது தான்.’
“வெரி குட். திஸ் இஸ் அவர் லாஸ்ட் சான்ஸ். வி ஷுட் நாட் மிஸ் திஸ் கிரேட் ஆப்பர்சூனிட்டி. நம்மோட பன்னெண்டு வருஷ உழைப்புக்கு இன்னக்கித்தான் முடிவு கெடைக்கப் போகுது. எத்தனை பேரை கொன்னுருப்பான் இந்த நடராசன். சாராயம் விக்க ஆரம்பிச்சு மெதுவா சந்தனமரம் வெட்டி வித்து அப்புறம் போலீஸைக் கொன்னு எத்தனைக் குற்றம்? அதிரடிப்படை ஆரம்பிச்சதே அதுக்காகத்தானே மலை. இன்னக்கி என்னை இதுக்குன்னு கமிஷனரா போட்டுருக்கதும் என்மேல ‘சிஎம்’க்கு இருக்குற தனிப்பட்ட நம்பிக்கை தானே மலை. நாம இன்னக்கி சாதிச்சே ஆகணும்!”
“சார். கவலையே படாதீங்க! இன்னைக்கு நமக்கு கண்டிப்பா சக்ஸஸ். இன்னக்கி அவன் கதையை முடிச்சுடலாம். நம்ம ஆம்புலன்ஸ்ல காலை வெச்ச பதினஞ்சாவது நிமிசம் அவன் பொணமாகப் போறான். எல்லாப் பிளானும் தயார். நாம இந்த பூஜையை மட்டும் முடிச்சுட்டு சீக்கிரமா கெளம்பிப் போவோம். அங்காளம்மா தெய்வம் சும்மா விடாது சார். இன்னக்கி நாம பண்ணுற இந்தப் பூஜையே அதுக்காகத்தானே! கவலையை விடுங்க. சாமி கும்பிட்டுட்டு கெளம்புங்க. மத்ததை இந்த அங்காளம்மா தெய்வம் பாத்துக்கும். காரியத்தை முடிச்சுட்டு வந்து மொட்டையையும் இங்கே போட்டுடுவோம்.”
அடர்த்தியான காட்டின் நடுவில் அமாவாசை நள்ளிரவில் அந்த ஆம்புலன்ஸ் வண்டி வந்து நின்றது. கொளத்தூர் கோபால் ஆம்புலன்ஸ் டிரைவரிடம் ஏதோ ஒரு சீட்டு கேட்க, அதை அவன் கொடுத்தபோது அவனது கண்களை ஊடுருவிப் பார்த்தான். பிறகு பின்கதவைத் திறக்கச்சொல்லி இரண்டு இயந்திரத் துப்பாக்கிகளை அள்ளி வண்டியில் போட்டான். நாலு கைத்துப்பாக்கிகளையும் கொஞ்சம் கையெறி குண்டுகளையும் சீட்டுக்கு அடியில் வைத்தான். திடீரென்று ஏதோ எண்ணம் வந்தவனாக ஒரு செல் தொலை பேசியையும் எடுத்து தனக்குள் வைத்துக்கொண்டான்.
கொளத்தூர் கோபால் பத்துவயதில் காட்டுக்குள் வந்து நடராஜனுடன் சேர்ந்தவன். சந்தனக்கடத்தல் மன்னன் நடராஜனுக்கு வலதுகரம். இவன் சொன்னால் போதும், யாரையும் படக்கென்று சுட்டு விடுவான் சந்தனக்கடத்தல் நடராஜன். அவ்வளவு நம்பிக்கை இவன் மேல். டிரைவரிடம் ஏதோ வித்தியாசம் தெரிய மெதுவாகப் பேச்சுக் கொடுத்தான் கொளத்தூர் கோபால்.
“எத்தனை வருஷமா ஆம்புலன்ஸ் ஓட்டுறீங்க?”
‘பத்து வருஷமா ஓட்டுறேன் சார். பீடி எதுவும் வேணுங்களா?”
“ம்ம். வேண்டாம். பத்து வருஷமா இந்த ஆஸ்பத்திரிக்குத்தானா? இல்லே வேற ஆஸ்பத்திரிக்கா?”
“ஜி.ஹெச்ல பொணவண்டி ஓட்டிக்கிட்டு இருந்தேன் சார். ரொம்ப தண்ணி போட்டுப்புட்டு சுத்துறேன்னு வேலைய விட்டு நீக்கிப் புட்டானுக. அப்புறம் நம்ம கவுன்சிலர பாத்து இந்த தனியாரு ஆஸ்பத்திரில வேல வாங்கிட்டேன் சார். இப்போ அஞ்சி வருஷம் இதுலதான் ஓடுது பொழப்பு.”
”ம்ம். இரு . வாறேன்”
சொல்லிவிட்டு இலைதழைகள் சரசரக்க காட்டுக்குள் இறங்கிப் போனான் கோபாலு. டிரைவராய் இருந்த அதிரடிப்படை போலீசுக்கு வயிறு கலங்கியது. ஏதும் தவறாகப் பேசிவிட்டேனா? மடமட வென்று பேசியதை மீண்டுமொருமுறை நினைத்துப்பார்த்தான்.
கோபால் அங்கு சென்றபொழுது மற்ற இருவரும் அமர்ந்து ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். தலைவர் நடராஜனைக் காணவில்லை. “என்னப்பா? எங்க தலைவரு?”
“ரெடி ஆகுறார்ண்ணே!”
“டைம் ஆகுதுல்லே. இப்போ கெளம்புனாத்தானே ராத்திரிக்குள்ளே கண் ஆபரேஷன் முடிச்சுட்டு திரும்ப முடியும்?! கெளம்புங்க.. போங்கப்பா. அவங்கவங்க ஆயுதங்களை எதுக்கும் எடுத்து உள்ளே போட்டுக்குங்க. கெளம்புங்க. நாலுபேர்தானே போறோம்.”
“ஆமாண்ணே. நாலு பேர்தான் போறோம்.”
“ஓகே. கெளம்புங்க. நான் தலைவரைக் கூட்டிட்டு வாறேன்.”
கோபால் சென்ற நேரம் ஆத்தி மரத்தடியில் கண்களை மூடி அமர்ந்திருந்தான் நடராஜன்.
“கௌம்பலையாண்ணே?”
“இருடா கோபாலு. சாமி கும்பிட்டுட்டு வாறேன். என்னை வளத்து காப்பாத்துன சாமிடா இது. எட்டு வயசுல காட்டுக்குள்ளெ வந்தேன். இன்னக்கித்தான் வெளியில போறேன். இத்தனை காலம் என்னை காத்து வளத்த சாமிடா இது. அங்காளம்மா. நம்ம கொலத்து சாமி அங்காளம்மாடா, இரு வாறேன்” என்று அங்காளம்மா தெய்வத்தின் புகைப்படத்தை மறுபடியும் வணங்கி குங்குமத்தை எடுத்து நெற்றியிலிட்டுக் கொண்டான்.
– மருதம், முதற் பதிப்பு: டிசம்பர் 2006, எம்.கே.குமார் வெளியீடு, சிங்கப்பூர்.