ஃபங்ஷன்!






“ராயப்பேட்டா வீட்டு ஃபங்ஷன பிரமாதமாக செலிபிரேட் பண்ணி அசத்திட்டான் ராமன்!” என்றபடியே பாலு வீட்டினுள் நுழைந்தான். அவனை வரவேற்று அமர வைத்தான் சங்கர். ராமன் பாலுவின் நண்பன். சங்கருக்கு ராமனைத் தெரியாது.
பாலு தொடர்ந்து, “விருந்துக்கு என்னென்ன ஐட்டங்க தெரியுமா? காலையில பிரேக்ஃபாஸ்டுக்கு இட்லி, வடை, பொங்கல், காரச் சட்னி, தேங்காய்ச் சட்னி, சாம்பார் காஃபி..அப்புறம் ஒன்பது மணிக்கு ஆரம்பிச்ச சுதர்ஸன ஹோமம் பனிரெண்டு மணிக்குதான் முடிஞ்சுது. இடையில ஜூஸ். மத்யானம் லஞ்சா அது…அடாடா! வாழை இலை போட்டு மல்லிகைப் பூ கலர்ல சாதம், சாம்பார், மோர்க்குழம்பு, அப்பளம், கூட்டு பொரியல், பருப்புசிலி, இரண்டு வகையான ஸ்வீட், ரஸம், பாயசம், தயிர் சாதம்னு அமர்க்களமான விருந்து! கடைசியில ஐஸ் கிரீம் வேற! இதுல விசேஷம் என்னன்னா கிட்டத் தட்ட நூத்தம்பது பேருக்கு மேல வந்திருந்தாங்க. அத்தனை பேரையும் ராமனும் அவன் பெண்டாட்டியும் முகம் சுழிக்காம வரவேற்று உபசரிச்சாங்க.” என்று நண்பனின் புகழாரம் பாடினான்.
“அது சரி, வீடு எப்படியிருக்கு?” சங்கரின் கேள்விக்கு பதில் சொன்னான் பாலு.
“வீடா அது! மினி பங்களான்னு சொல்லலாம். டாய்லெட்டோட பெரிய ஹால், ரெண்டு பாத் அட்டாச்டு மாஸ்டர் பெட் ரூம்ஸ், கிச்சன், டைனிங் ரூம், பூஜை ரூமுன்னு நல்லா ஸ்பேஷியஸா இருக்கு வீடு!”
“ம்..” என்று பெருமூச்சொன்றை விட்ட சங்கர், “கொடுத்து வச்சவன் நீ சொல்ற அந்த ராமன். ஹார்ட் ஆஃப் த சிட்டியில் இந்த மாதிரி சொந்தமாக வீடு வாங்கறது பெரிய விஷயம்!” என்றான்.
“நீ வேற, அது அவனோட சகலை வீடு! வாடகைக்குப் போயிருக்கான் ராமன்.”
“கிழிஞ்சுது போ! வாடகை வீட்டுக்கே இவ்வளவு ஆர்ப்பாட்டமா?” கிண்டலோடு கூறி சிரித்தான் சங்கர்.