கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி நாடகம்
கதைப்பதிவு: March 27, 2025
பார்வையிட்டோர்: 1,005 
 
 

(1966ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பாகம் -1 | பாகம் -2

காட்சி: 6 – ஜயராமன்‌-வேதவல்லி

[ஜயராமன்‌ ஹரிஜன சங்கத்தின்‌ கணக்கு வழக்குகளைப்‌  பார்க்கிறான்‌. வேதவல்லி ஒவ்வொன்றாக எடுத்துத்‌ தருகிறாள்‌. இடையிடையே கொள்கைப்‌ பேச்சு.]  

ஜயராமன்‌ : வேதம்‌, கணக்கு ஒழுங்காயிருக்க வேண்டும்‌. பள்ளிக்கூடக்‌ கணக்கைத்‌ தா…

வேதம்‌ : இதோ…… நூறு குழந்தைகள்‌ படிக்கிறார்கள்‌.  ஐந்து ஆசிரியர்கள்‌ பயிற்றுகிறார்கள்‌. ஆடல்‌  பாடல்‌ நாடகத்திற்கு நான்‌. உடற்‌ பயிற்சிக்கு  ஒருவர்‌…  

ஜயராமன்‌ : குழந்தைகள்‌ சாப்பாட்டுச்‌ செலவு 
இருபது வீதம்‌ தலைக்கு 2000  
ஏழு ஆசிரியர்‌ செலவு 700  
எல்லாருக்கும்‌ உடுக்கு 800  
பள்ளிக்கூடம்‌ பராமரிப்பு 1000  
ஆக மொத்தம்‌ ரூ. 4000  
அரசாங்கம்‌ தருவது – 2000  

மீதி 2000. நாம்‌ சரிக்கட்டவேண்டும்‌. தருமப்‌  பிரபு சுப்புராமனும்‌, ஏ.வைத்தியநாதருமே  பணம்‌ தருகிறார்கள்‌.  

வேதம்‌ : தொழில்‌ வகைக்‌ கணக்கு இதோ உள்ளது.  

ஜயராமன்‌: நூற்பு, நெசவு, சோப்பு, தையல்‌, காகிதம்‌,  பைண்டிங்‌, அச்சகம்‌, கவர்கள்‌, நோட்புக்‌,  பற்பொடி, தைலம்‌, மரவேலை, இரும்புப்‌  பட்டரை, பால்பண்ணை -இத்தனைக்கும்‌ செலவு  போக நிகரலாபம்‌ ரூ, 10000, இதைக்‌ கொண்டு  சாயத்‌ தொழில்‌ தொடங்கலாம்‌.

அடுத்தது கலைச்‌ செலவு…

வேதம்‌ :  ஹரிஜன்‌ நாடகம்‌. கவியோகி சுத்தானந்த  பாரதியார்‌ எழுதியது–நல்ல பலனைத்‌ தந்தது.  கிராமம்‌ கிராமமாகத்‌ தொண்டர்‌ அதை நடிக்‌ கின்றனர்‌. வீடுவீடாகப்‌ படிக்கின்றனர்‌.  நாடகம்‌ நடிக்கும்‌ போதே பிரதிகள்‌ விற்றுப்‌  போயின. மறுபதிப்புப்‌ போடவேண்டும்‌.  ஆசிரியருக்கு மரியாதை செய்ய வேண்டும்‌.  

ஐயராமன்‌ : நூல்‌ விற்பனை–ரூ. 1500-அப்படியே அதை  மறுபதிப்புக்குத்‌ தரலாம்‌. , கவியோகியின்‌  நாடகங்களை நாம்‌ வெளியிடுவோம்‌. அவர்‌  காந்தி நாடகம்‌ எழுதியிருக்கிறார்‌.

வேதம்‌ :  கலைவிழா நடத்தியதில்‌ 5000 வரவு! அதை  ஹரிஜன்‌ ஹாஸ்டலுக்குத்‌ தந்துள்ளோம்‌…

ஜயராமன்‌ :  சரி, கணக்கு கச்சிதம்‌. நாளை காந்தி ஜயந்திக்கு  என்ன செய்வது?

வேதம்‌:  காந்தித்தாத்தா பாட்டும்‌ நடனக்‌ காட்சியும்‌  தயாரித்திருக்கிறேன்‌. பிறகு ஹரிஜன்‌ நாடகம்‌  உள்ளது. குழந்தைகளுக்குக்‌ கடலைஉருண்டை யும்‌, கொத்துமல்லி கஷாயமும்‌ தருவோம்‌.  கலைநிகழ்ச்சிக்கு சுப்புராமன்‌ தலைமை வகிக்‌கிறார்‌. பொதுக்கூட்டத்திற்கு வைத்தியநாதர்‌ தலைவர்‌. காமராஜ்‌, கக்கன்‌, இருவரும்‌ பேச்‌சாளர்‌, காலையில்‌ நூற்றல்‌-நெய்தல்‌ போட்டி பரிசுவழங்குதல்‌. பல நண்பர்‌ குழந்தைகளுக்குப்‌ பரிசுகள்‌ அனுப்பினர்‌.  

ஜயமாமன்‌ :  அழைப்பு அனுப்பியானதா எல்லாருக்கும்‌?  பெருங்கூட்டம்‌ இருக்கும்‌.  

வேதம்‌:  மதுரைப்‌ பிரமுகர்‌ எல்லாரும்‌ வருகிறார்கள்‌.  அதிசயம்‌; என்‌ தகப்பனார்‌ கூட வருகிறார்‌.

ஜயராமன்‌ :  கனபாடிகளா ! அப்போது பட்டரும்‌ வருவார்‌.  அவர்கள்‌ ஒற்றராகத்தான்‌ வருவார்கள்‌.  ‘ஹரிஜன்‌’ என்றாலே அச்சம்‌! உன்னைக்கூடக்‌  கடுமையாகக்‌ கண்டித்தாராமே.  

வேதம்‌ :  ஆம்‌ இன்று காலைகூடக்‌ கண்டித்தார்‌ ;  கடைப்படி தாண்டினால்‌ காலை நறுக்குவராம்‌.  பெண்கள்‌ கட்டைவிரலைப்‌ பார்த்தே நடக்க  வேண்டுமாம்‌; மேடையேறிப்‌ பேசக்கூடாதாம்‌.  கலியுகம்‌ வருமாம்‌.  

ஜயராமன்‌ :  கலியுகம்‌ வந்து 5050 ஆண்டானதே; இன்னுமா  உறக்கம்‌ ? இவர்கள்‌ வருவதைவிட வராமல்‌  இருப்பதே நல்லது. காலத்திற்கேற்ற கடமை  யறியாது கண்டபடி நடக்கிறார்கள்‌. இங்கு  வந்து “ தீண்டாதே ” பல்லவிபாடினால்‌……  

வேதம்‌ :  இனி இந்த நாட்டில்‌ திண்டாதே என்றால்‌  வாயைத்‌ திறக்காதே என்போம்‌. இனிப்‌  பொது ஜனங்கள்‌ சும்மா இருப்பார்களா…வேதத்தில்‌ தீண்டாமை உண்டா?  

ஜயராமன்‌ :  பிராமணர்‌ வேதம்‌ படிக்கிறார்களா? இதரரும்‌  ஹரிஜனங்களை ஆதரிப்பதில்லை. அடுத்த  வாரம்‌ மீனாட்சி கோவிலுக்குள்‌ புகுவோம்‌. எத்தனைபேர்‌ தமக்குச்‌ சாதகமாயிருப்பார்‌ என்பது தெரியும்‌. 

வேதம்‌ : கடவுளும்‌ கடமையும்‌ நமக்குச்‌ சாதகமே ..  தைரியமாக முன்செல்வோம்‌. நமது சொந்தக்‌  காரியம்‌ கூட அப்படியே…  

ஜயராமன்‌ :  உன்‌ அப்பா 144 போடுகிறாரே- 

வேதம்‌:  124 போட்டாலும்‌ காரியம்‌ நிற்காது.  இது லட்சியத்‌ திருமணம்‌.

ஜயராமன்‌ :  வேதம்‌, உன்‌ அன்பும்‌ ஆர்வமும்‌, எனக்குத்‌  தெரியும்‌. நீ என்‌ சக்தி.  

வேதம்‌ :  நீர்‌ என்‌ சிவம்‌.  

ஜயராமன்‌ :  நீ என்‌ விளக்கு.  

வேதம்‌ :  நீர்‌ என்‌ சுடரொளி.  

ஜயராமன்‌ :  நீ மலர்‌. 

வேதம்‌ :  நீர்‌ மணம்‌.  

ஜயராமன்‌ :  நீ என்‌ உள்ளம்‌.  

வேதம்‌ : நீரே உள்ளத்‌ துடிப்பு. 

ஜயராமன்‌ :  வேதம்‌, எத்தனையோ பிறவிகளில்‌ உன்னுடன்‌  உயிரும்‌ உடலும்போல்‌ இருந்திருக்கிறேன்‌.  இந்தக்‌ காதல்‌ ஆத்மக்காதல்‌.  

வேதம்‌ :  உள்ளத்தை கதுவும்‌ சக்தி மின்சாரமே காதல்‌,  நான்‌ உதாத்தம்‌; நீர்‌ அனுதாத்தம்‌. தான்‌  பக்தி; நீர்‌ ஞானம்‌.  

ஜயராமன்‌ : ஞாபகம்‌–என்பதே நமது குறிப்பு.  

ஞா ஞானம்‌, பபக்தி, க-கர்மம்‌, ம்‌-ஓம்‌.  ஓம்‌ ஆகியக்‌ கடவுளை ஞானத்தால்‌ அறிந்து  பக்தியால்‌ கலந்து, கர்மத்தால்‌ வழிபடுவோம்‌,  ஞானம்‌ தேன்‌; பக்தி மணம்‌; கர்மம்‌ அழகு.  எங்கே, பாடு தமது லட்சியப்‌ பாட்டை ; உன்‌  இனிய குரலைக்‌ கேட்போம்‌.  

வேதம்‌ :  (பாடியாடல்‌)  
அன்புடனே மனங்கலந்தே  
ஆனந்தமாய்‌ வாழ்வோம்‌  
பண்புடனே ஆன்மநேயப்‌  
பயனுடனே வாழ்வோம்‌.

ஞால வுயிரத்தனையும்‌  
நம்முயிரென்‌ றறிவோம்‌  
காலவுயிர்ப்‌ பவனியிலே  
கைகோத்துச்‌ செல்வோம்‌,  

ஜயராமன்‌ :  (கைகோத்து)  
மனதுடனே மனம்பொருந்தி  
மணவாழ்வு கொள்வோம்‌  
தினகரன்‌ போற்‌ சேவையிலே  
தினந்தினமும்‌ வாழ்வோம்‌.  

வேதம்‌ :  வேலைசெய்து விளைத்துண்ணும்‌  
வேதநெறி கற்போம்‌  
சோலை வைத்துக்‌ கனியுண்டு  
சுறுசுறுப்பா யிருப்போம்‌.  

ட்ரங் ட்ரங்‌…ட்ரங்‌ ட்ரங்‌!  

[ஃபோன்‌ அழைக்கிறது[  

ஜயராமன்‌ :  ஹல்லோ சுப்புமாமா…சரி, சரி வந்தனம்‌. ஆம்‌  அடுத்தவாரமே கோவில்‌ பிரவேசம்‌; தயார்‌… 

[வருதல்‌ நல்லாயி, வீரமுத்து]  

நல்லாயி :  வணக்கம்‌ ஐயா–வணக்கம்‌ அம்மா.  

ஜயராமன்‌ :  என்ன நல்லாயி, தோட்டவேலை எப்படி?  வீரமுத்து நன்றாகப்‌ படிக்கிறான்‌. அவனை டாக்டர்‌ படிப்பிற்கு அனுப்பப்‌ போகிறோம்‌. 

நல்லாயி :  உங்க புண்ணியத்திலே தோட்டப்‌ பயிரும்‌  செழிப்புத்தான்‌. எங்க வீட்டுப்‌ பயிரும்‌  (வீரமுத்துவைத்‌ தொட்டு) செழிப்புத்தான்‌.  வீரமுத்து சந்தோசமாயிருக்கிறான்‌. 

வீரமுத்து :  அம்மா, கடவுளே என்னை இங்கே சேர்த்தார்‌.  ஐயாக்கள்‌ அன்புமயம்‌, இந்தத்‌ தாயின்‌ உள்ளமெல்லாம் கருணை. நான்‌ நினைத்தது பலித்தது. P.U.C. தேறியதும்‌ மருத்துவம்‌ பயில்வேன்‌ –  பிறகு நம்மை ஒதுக்கிவைத்தவர்‌ வீட்டுக்‌ கெல்லாம்‌ சென்று வைத்தியம்‌ பார்ப்பேன்‌…  நம்மைத்‌ தொடாதவர்‌ கைகளைத்‌ தொடுவேன்‌.  மதிக்கப்படுவேன்‌. அன்பைக்காட்டி அன்பை அடைவேன்‌.  

ஜயராமன்‌ : எப்படிப்‌ பேசுகிறான்‌ பார்‌ நல்லாயி! 

வேதம்‌ : இவன்‌ ஒரு புக்கர்‌ வாஷிங்டன்‌.  

வீரமுத்து : ஆம்‌ அம்மா; நான்‌ இதே ஹரிஜன நிலையத்தை மற்றொரு டஸ்கிகீயாக்குவேன்‌.  

ஜயராமன்‌ : ஆனால்‌ ஒன்று; ஹரிஜன இயக்கம்‌ பிறஜனங்‌களை வெறுக்கவன்று. மற்றவர்களுடன்‌ கலந்தே வாழவேண்டும்‌. நாளடைவில்‌ நாம்‌  ஒரே இந்திய சமுதாயமாக வேண்டும்‌; அதன்‌ பின்‌ ஒரே மனித சமுதாயமாக வேண்டும்‌. தனிச்செருக்கும்‌, பிரிவினைத்‌ தீதும்‌ எங்கும்‌  இருக்கக்கூடாது.  

பமமிலாத நேர்மையும்‌  
பகையிலாத நெஞ்சமும்‌  
சுய நலமிலாத தொண்டும்‌  
தூய வாழ்வும்‌ வேண்டினோம்‌.  
இயல்‌ வழியில்‌ ஓங்குகின்ற  
இல்லறத்தை வேண்டினோம்‌  
தயவு மிக்க சுத்த சக்தி  
தந்தனள்‌ மகிழ்ந்தனம்‌!  

ட்ரங் ட்ரங்‌ ட்ரங்‌…  

[ஃ. போன்‌] ஹல்லோ

வைத்திநாதையரா…இதோ வருகிறேன்‌… வேதம்‌, ஐயர்‌ அழைக்கிறார்‌. உன்னையும்‌ வரச்‌ சொன்னார்‌. செல்வோம்‌. நல்லாயி, தோட்‌ டத்தைக்‌ கவனி; வீரமுத்து, நல்லாப்படி. நீ  தமிழ்‌ மணியாக விளங்கவேண்டும்‌ [செல்லல்‌]  

காட்சி: 7 – வைத்திநாதர்‌-ஜயராமன்‌  

[வைத்தி நாதர்‌ வீட்டில்‌ ஹரிஜனசங்க நிர்வாகிகள்‌ கூட்டம்‌,  ஜயராமன்‌ கணக்குகளைக்‌ காட்டுகிறார்‌.]  

வைத்தி:  எல்லாம்‌ கச்சிதம்‌. சங்கம்‌ வளர்ந்து வருகிறது.  வீரமுத்துவை அடுத்த! ஆண்டே மருத்துவக்‌  கல்லூரியில்‌ சேர்த்து விடுவோம்‌. திரு. கக்கன்‌  அவர்கள்‌ பெரிய நிலைக்கு வந்தது நமக்கெல்‌  லாம்‌ மிகப்பெருமை, சண்முகம்‌, சாம்பன்‌,  முருகன்‌, வள்ளி, வீராயி அனை வரும்‌ படிப்பிலும்‌  ஒழுக்கத்திலும்‌,கைத்தொழிலிலும்‌ முன்னேற்ற  மடைந்திருக்கிறார்கள்‌. இவர்கள்‌ அனைவரையும்‌  தைலம்‌ தேய்த்துக்‌ குளித்துத்‌ திருநீறு பூசி  “வீடலால வாயிலாய்‌” பாடிக்‌ கொண்டே உள்ளே புகச்‌ செய்ய வேண்டும்‌…பட்டர்‌  என்ன சொல்லுகிறார்‌?  

ஜயராமன்‌ : பட்டரும்‌ கனபாடிகளும்‌ இன்னும்‌ சிலரும்‌ கடுமையாகவேயிருக்கின்றனர்‌. கனபாடிகள்‌  ஆவேசக்கனல்‌ பறக்கக்‌ கண்ணகியாவாராம்‌.  பட்டர்‌ பதறுகிறார்‌ நான்‌ எவ்வளவோ  சொல்லிப்‌ பார்த்தேன்‌.  

வைத்தி : உன்‌ அப்பா தானே !  

ஜயராமன்‌ : வீட்டில்‌ அப்பா..வெளியே எதிர்‌. இருந்தாலும்‌  நல்லவர்‌.  

வைத்தி:  நாம்‌ காந்தி பக்தர்‌. யாரும்‌ தோகாமல்‌, பலாத்‌காரமில்லாமல்‌ நமது காரியத்தைச்‌ சாதிக்க வேண்டும்‌, மீண்டும்‌ அப்பாவையும்‌ கனபாடி களையும்‌ இங்கே வரச்‌ சொல்லு. தெய்வ சந்நிதியில்‌ தேவாரம்‌ பாடிச்‌ செல்வது, ஆயிரம்‌  குரல்கள்‌ ஹரஹரமஹாதேவா என்று கூவுவது  குற்றமாயிருக்க முடியாது. நாம்‌ நமது சமய  ஒழுக்கத்‌ தவறாது நடப்போம்‌.  

ஐயராமன்‌ :  நமது இந்து தருமத்தை நாம்‌ உறுதியாகக்‌  காக்க வேண்டியது நமது கடமை, நான்‌ காலை  குளித்து. சந்தி ஜபம்‌ செய்து மீனாக்ஷி சுந்தரேசர்‌ தரிசனம்‌ செய்து மதாசாரத்தை நிறைவேற்றியே சங்கத்திற்கு வருகிறேன்‌. இப்‌படியே நமது சங்கத்தைச்‌ சேர்ந்தவர்களும்‌  மதக்‌ கடமை செய்கிறார்கள்‌. நமது சமயத்தவரிடம்‌ அன்பு கொண்டு அவர்கள்‌ பிறமதம்‌ புகாது தடுப்பது நமது குறிக்கோள்‌. ஆதலால்‌ ஏழுகோடி ஹரிஜனர்‌ நம்மவராக வேண்டும்‌. இந்தியர்‌ தொகை கரையக்‌ கூடாது. நம்மவர்‌  தமது இந்து தருமத்தை அறிந்து நடக்க வேண்டும்‌;  

வைத்தி :  இந்து தருமத்தில்‌ எல்லாரும்‌ ஆன்மநேநயர்‌ ; ஏகம்ஸத்‌; உள்ளது ஒன்றே என்பதே அதன்‌  அடிப்படைத்‌ தத்துவம்‌, இனி இந்தியர்‌ வகுப்பு வாதம்‌ பேசாமல்‌ ஒரே இனமாக மனமொத்து  வாழவேண்டும்‌.  

*பிறப்பொக்கும்‌. எல்லாவுயிர்க்கும்‌  
சிற்ப்பொவ்வா  
செய்தொழில்‌ வேற்றுமையால்‌”  

என்ற வள்ளுவர்‌ வாக்கே நமது நோக்கு. பிறந்தவர்‌ யாவரும்‌ ஒரே மானிடமே. தொழிலால்‌ அவரவர்‌ சிறந்தவராவர்‌.

“திறமை கொண்ட தீமையற்ற  
தொழில்‌ புரிந்து யாவரும்‌  
தேர்ந்த கல்வி செல்வ மெய்தி  
வாழ்வோமிந்த நாட்டிலே!  
விடுதலை ! விடுதலை! விடு தலை!”  

என்ற பாரதி வாக்கை மஹாத்மா நிறைவேற்‌றினார்‌…

ட்ரங்‌ ட்ரங்‌ ட்ரங்‌  

[ஃ போன்‌] ஹல்லோ !  

சுப்பராமனா, கோயில்‌ ஏற்பாடு முறை  யாகச்‌ செய்துள்ளோம்‌: பத்திரிகையில்‌ விளம்‌  பரம்‌ செய்வோம்‌; சரி, நாளை சந்திப்போம்‌,  உடம்பை சவனிக்கவும்‌. இனி நாளை காந்தி  காட்சி சாலையில்‌ நமது கூட்டம்‌ நடக்கும்‌.  காந்திப்‌ பாட்டு மட்டும்‌ போதும்‌, மற்ற விஷ  யங்கள்‌ எல்லாரும்‌ அறிந்தனவே.  

காட்சி: 8 – காந்தி தாத்தா பாட்டு

[தல்லாகுளம்‌ ; காத்தி காட்சி சாலை பொதுக்‌ கூட்டம்‌. அலங்காரமேடை. ஹரிஜன சங்க மாணவர்‌ காந்தித்‌ தாத்தா பாட்டுப்‌ பாடுகிறார்கள்‌. அதிலுள்ள காட்சிகள்‌ பின்னணியில்‌ வருகின்றன. காந்தியாக ஒரு முதியவர்‌ நடிக்‌ கிறார்‌. பாட்டைப்‌ பல ராகங்களில்‌ தாளக்‌  கட்டுடன்‌ பாடவேண்டும்‌. பிடில்‌, மிருதங்கம்‌,  புல்புல்‌, சுர கெத்‌ முதலிய ஆர்ச்செஸ்ட்ராவுடன்‌ இசைத்தல்‌ நல்லது]

தேசத்திலே பெரிய தாத்தா–நாங்கள்‌ 
தெய்வமெனக்‌ கொண்டாடும்‌ தாத்தா 
நேரத்திலே பெரிய தாத்தா–வாழ்க
நிகரில்‌ மகாத்மாகாந்தி தாத்தா!  

கூனிக்‌ குறுகியிருந்தாலும்‌–இளங்  
குமரன்‌ என்றும்‌ எங்கள்‌ தாத்தா  
வானக்‌ கருமுகிலைப்போலே–எங்கள்‌ 
வாழ்வு தழைக்கவந்த தாத்தா.  

என்பு தெரியமெலிந்தாலும்‌–அவர்‌  
இமயத்தினும்‌ பெரிய தாத்தா  
அன்பு வடிவான தாத்தா-நாட்டின்‌ 
அடிமை விலங்கறுத்த தாத்தா.  

ஏழைக்கிரங்குகின்ற தாத்தா–எங்கள்‌ 
ஏக்கத்தை நீக்குகின்ற தாத்தா.  
கோழைத்தனம்‌ விடுத்து நாங்கள்‌–சிம்மக்‌ 
கூட்டம்போல்‌ எழச்செய்த தாத்தா.  

சீமையிலேபடித்த தாத்தா–பெரும்‌  
செல்வத்தொழில்‌ புரிந்த தாத்தா
தீமை நலிய நலம்‌ பொங்க–சர்வத்‌  
தியாகம்‌ செய்த வீரத்தாத்தா.  

தேட்டால்‌ கடுஞ்சிறையைத்தாங்கி–நல்ல 
நீதிக்குப்‌ போர்புரிந்த தாத்தா.  
மாட்டைப்போல்‌ பாடுபட்டு வருந்தும்‌ -ஏழை 
மக்கள்‌ கண்ணீர்‌ துடைத்த தாத்தா.  

பாழும்‌ சிறையில்‌ அடை பட்டும்‌ -கடும்‌ 
பட்டினி யிருந்துடலம்‌ கெட்டும்‌–நாங்கள்‌ 
வாழும்‌ விடுதலைக்கே நோற்ற–தூய 
மாதவ ராஜரெங்கள்‌ தாத்தா.

பஞ்சடித்திராட்டின த்தில்‌ நூத்றே–தொழிற் 
பாடம்‌ புகட்டுகின்ற தாத்தா.  
துஞ்சா மூயற்சியுள்ள தாத்தா–ஒரு  
சொல்லால்‌ உலகை வெல்லும்‌ தாத்தா. 

தண்டிக்குக்‌ கால்‌ நடையாய்ச்‌ சென்றே – உப்பு 
சட்டத்தை ரத்துசெய்த தாத்தா.  
எண்டிசை யுலகிலும்‌ இவர்போல்‌–மகான்‌
இல்லையெனப்‌ பேரெடுத்தி தாத்தா.  

கோலைப்பிடித்து நடந்தாலும்‌ – தர்மக்‌ 
கோட்டையைக்‌ சாத்து நிற்கும்‌ தாத்தா 
காலைபோற்‌ சாந்தமுள்ள தாத்த. நாட்டுக்‌ 
கவலை துடைத்தருளும்‌ தாத்தா.  

புலம்பித்‌ துடிதுடித்த மக்கள்‌ – மனப்‌  
புண்ணைக்‌ குணப்படுத்தும்‌ தாத்தா  
விலங்கு வலியை ஆத்ம சக்தி-கொண்டே 
வெல்லும்‌ விறல்படைத்த தரத்தா.  

அஞ்சாத தெஞ்சுடைய தாத்தா – உண்மை 
அகிம்ஸை வீரர்‌ எங்கள்‌ தாத்தா  
நஞ்சான குண்டுவெடித்தாலும்‌–புன்‌ 
னகைத்துப் பொறுத்து வெல்லும்‌ தாத்தா. 

எளிய வாழ்வுடைய தாத்தா–உடல்‌  
எடுத்த கீத யெங்கள்‌ தாத்தா  
தெளிந்த ராமஜபத்தாலே–தெய்வத்‌ 
தீச்சுடர்‌ போல்விளங்கும்‌ தாத்தா.  

தரும வீரர்‌ எங்கள்‌ தாத்தா–உப  
சாந்த புருஷர்‌ எங்கள்‌ தாத்தா  
கரும வீரர்‌ எங்கள்‌ தாத்தா-வாழ்க  
காந்தி மகாத்மா நல்ல தாத்தா…!

சுப்புராம்ன்‌: (எழுந்து) தோழர்களே, காந்திமகான்‌ வாழ்க்‌  கையை இந்தப்‌ பாட்டு படம்‌ பிடித்துக்‌ காட்டுகிறது. கதர்‌, மதுவிலக்கு, ஹரிஜன  முன்னேற்றம்‌, சமுதாய ஒற்றுமை, இந்த  நான்கும்‌ மஹாத்மாவின்‌ திட்டங்களில்‌  முதன்மையானவை. நாம்‌ ஒன்றுயிருந்தால்‌ நன்றாமிருப்போம்‌. நமக்குள்‌ ஒரு கூட்டத்‌  நைக்‌ கிட்ட வராதே என்று ஒதுக்கி விட்டு, “எல்லாரும்‌ நன்றாய்‌ வாழ்க! (சர்வே பவந்து  சுகின:) என்று பாடுவதில்‌ பொருளில்லை. மஹாத்மா காட்டிய அன்பு வழியே வழி நாம்‌ ஹரிஜனங்களை அன்பினால்‌ அணைத்து ஆதரிக்கவே சங்கம்‌ நாட்டினோம்‌. மதுரை ஹரிஜன்‌ சேவா சங்கம்‌ மஹாத்மா காந்தியின்‌ ஆசியைப்‌ பெற்றது. இந்தச்‌ சங்கத்தில்‌ வளர்த்த திருக்குல மணிகள்‌ சிறந்த தேச பக்தர்களாக விளங்குகிறார்கள்‌. அரிய பொது நன்மை செய்கிறார்கள்‌. இங்குள்ளவர்‌ எல்லாரும்‌ உண்டு, உடுத்து, இருந்து,  படித்து முன்னேறும்‌ காரியங்களைச்‌ செய்‌  கிறோம்‌. அடுத்தவாரம்‌ எங்கள்‌ மாணவரும்‌  ஏராளமான ஹரிஜனங்களும்‌ மீனாட்சி தரிசனம்‌  செய்வார்கள்‌. அது பற்றி, நமது தலைவர்‌  வைத்திநாதர்‌ பேசுவார்‌. அவர்‌ உடல்‌,  பொருள்‌, உயிர்‌ எல்லாம்‌ ஹரிஜன சேவைக்கே  அர்ப்பணித்தவர்‌ என்பதை நாம்‌ அறிவோம்‌.  

வைத்தி:  அன்பர்களே, பேச்சு அதிகம்‌ தேவையில்லை;  செயலிற்‌ புகுவோம்‌, ஹரிஜனர்‌ நம்மவர்‌;  நமக்குரிய உரிமை அவர்களுக்கும்‌ உண்டு; நாம்‌ மினாட்சி தரிசனம்‌ செய்கிறோம்‌: அவர்‌களுக்கும்‌ தரிசன உரிமை உண்டு, நாம்‌ பக்தி பரவசத்துடன்‌ பாடுகிறோம்‌, பணிகிறோம்‌.  அவர்களுக்கும்‌ அந்த உரிமை உண்டு. எல்லாரும்‌ அடுத்த வெள்ளிக்கிழமை ஐந்து மணிக்கு  மீனாட்சி சுந்தரேசர்‌ சந்நிதிக்கு வாருங்கள்‌.  

“எல்லாரும்‌ வாருங்கள்‌  
எல்லாரும்‌ சேருங்கள்‌  
ஈசனை அன்பு செய்வோம்‌;  
எல்லாரும்‌ பாடுங்கள்‌  
எல்லாரும்‌ கூடுங்கள்‌  
இவைவன்‌ ஒருவன்‌ என்போம்‌?”  

காமராஜ்‌ :  தை வெள்ளிக்கிழமை கோவிலில்‌ சந்திப்போம்‌. 

எல்லாரும்‌ :  இன்பமே சூழ்க ! எல்லாரும்‌ வாழ்க!  அன்பே நிறைக! அருளே பெருக!  

பட்டர்‌ :  எப்படி, கனபாடிகளே? என்ன செய்வோம்‌?  

கனபாடிகள்‌ :  வீட்டில்‌ பேசிக்‌ கொள்வோம்‌ !முடிந்தமட்டும்‌  பார்ப்போம்‌- மீனாக்ஷி துணை  

காட்சி: 10 – மீனாட்சி சந்நிதி 

[கனபாடிகளும்‌, பட்டரும்‌ மீனாட்சியைத்‌ துதித்தல்‌. வெளியே “வீடலாலவாயிலாய்‌” என்ற தேவார முழக்கம்‌ கேட்கிறது.] 

தாயே, மீனாட்சி இன்று புதிய அலை மோது கிறது. ஹரிஜனர்‌ உள்ளே வந்து உன்னைத்‌  தரிசிப்பார்களாம்‌, உன்‌ இச்சை என்ன?…  

பட்டர்‌:  “ஸ்ரீமத்‌ சுந்தர நாயகீம்‌ பயஹராம்‌ 
ஞானப்ரபாம்‌ நிர்மலாம்‌  
ஹ்யாமாம்பாம்‌ கமலாஸனார்சிக பதாம்‌ 
நாராயணஸ்யானுஜாம்‌  
வீணாவேணு ம்ருதங்க வாத்யாசிகாம்‌ 
தாநாவிதாடம்பிகாம்‌”

[வருதல்‌ வைத்திநாதர்‌, சுப்புராமன்‌, ஜயராமன்‌, வேதவல்லி]  

நால்வரும்‌: மீனாக்ஷீம்‌ ப்ரண தோஸ்மி ஸந்ததமஹம்‌ காருண்ய வாராம்‌ நிதிம்‌…  

[மீனாக்ஷி அசரீரிவாக்கு: “என்‌ குழந்தைகள்‌  எல்லாரும்‌ உள்ளே வரட்டும்‌”]  

பட்டர்‌ : தேவி, உத்தரவாய்‌ விட்டது.  

கனபாடி:  வேதவல்லி,இனிமையாகப்‌ பாடி எல்லாரையும்‌  அழைத்துவா…  

[வேதவல்லி ஒரு வரி பாட எல்லாரும்‌ பின்னே  பாடி வருதல்‌]  

வேதம்‌:  “ஸ்ரீவித்யாம்‌ சிவவாமபாக நிலையாம்‌. 
ஹ்ரீங்கார மந்த்ரோஜ்வலாம்‌  
ஸ்ரீசக்ராஞ்சித பிந்து மத்ய வஸதீம்‌  
ஸ்ரீமத்‌ ஸபா நாயகீம்‌  
ஸ்ரீமத்‌ ஷண்முக விக்னராஜ ஜனனீம்‌ 
ஸ்ரீமத்‌ ஜகன்‌ மோஹினீம்‌

எல்லாரும்‌ :  மீனாக்ஷிம்‌ பரண தோஸ்மி  
ஸந்ததமஹம்‌  
காருண்ய வாராம்‌ நிதிம்‌!  

[வணங்குதல்‌, மணியடிக்கிறது-மேளம்‌ தீபாராதனை].

(மோகனம்‌-ஆதிதாளம்‌)  

வேதம்‌ :  வேதாகம ஞான விளக்கொளி தீ ! 
பாதாரமலர்‌ பணிசேயெனையாள்‌ 
ஆதாரமுநீ ஆதேயமுதீ!  
மாதா ஜய ஓம்‌ மதுராம்பிகையே !  
[ஆனத்தக்‌ கூத்து]  

எல்லாரும்‌ :  மாதா ஜய ஓம்‌ மதுராம்பிகையே!  

வேதம்‌:  முகமும்‌ மதுரம்‌ முறுவல்‌ மதுரம்‌
அகமும்‌ புறமும்‌ அழகும்‌ மதுரம்‌ 
இகமும்‌ பரமும்‌ எவையும்‌ மதுரம்‌ ! 
சுகமும்‌ மதுராம்பிகை தோத்திரமே !  

எல்லாரும்‌ :  அழகுத்திருவே அமுதச்‌ சுவையே!  
பழகப்‌ பழகப்‌ பழநற்‌ கவியே  
எழிலார்‌ திருவே என தாருயிரே!  
பொழிலார்‌ மதுரைப்‌ பொலிவே சரணம்‌! 
ஜயமதுராம்பா ஜயமதுராம்பா  
ஜயமதுராம்பா ஜயமதுராம்பா !  

[எல்லாரும்‌ சுந்தரேசர்‌ சந்நிதியில்‌ பாடுதல்‌. கோவில்‌ காட்சிகளுடு ஹரிஜனங்கள்‌ தலைவருடன்‌ செல்லல்‌]

எல்லாரும்‌ :  [தீபாராதனை நடக்கும்‌ போது]  ஹர ஹர ஹர ஹர ஹ்ருதயேசா–சிவ  மீனாக்ஷி ரமணா சுந்தரேசா. 

வேதம்‌ :  காதலாகி கசிந்து கண்ணீர்‌ மல்கி

வீரமுத்து: ஓதுவார்‌ தம்மை நன்னெறிக்குப்ப்பதும்‌ 

மாணவர்‌: வேதம்‌ நான்கினும்‌ மெய்ப்பொரு ளாவதும்‌  தாதன்‌ நாமம்‌ நமச்சிவாயவே!  

நல்லாயி :  வழிவிட்ட கடவுளே! பழிதீர்த்த பரம்‌  பொருளே–வணக்கம்‌ வணக்கம்‌!  

வீரமுத்து : மீனாட்சி சுந்தரேசப்‌ பெருமானே, என்‌ மனம்‌  குளிர்ந்தது! ஒரு சபதம்‌ நிறைவேறியது.  மற்றொரு சபதமும்‌ நிறைவேறி, இந்து சமூகம்‌  இசைந்து வாழ வேண்டும்‌.  

“ஞாலம் நின்புகழே மிக வேண்டும்‌ தென்‌  
ஆலவாயில்‌ அமர்ந்திடும்‌ ஆதியே”’

வைத்திநாதர்‌ : பொங்கல்‌ விநியோகம்‌-தாராளமாக வாங்‌  கிச்‌ செல்லுங்கள்‌. வேதவல்லி கோஷ்டியின்‌  கும்மி நடக்கிறது. மண்டபத்தில்‌ எல்லாரும்‌  வாருங்கள்‌.  

காட்சி: 11 – சங்கநாதம்‌

[ஒரு குத்து விளக்கு–சுற்றிலும்‌ வேதவல்லி நல்லாயி!  முதலிய பெண்கள்‌ கும்மிதட்டுகின்றனர்‌. சங்கும்‌ ஊதுகிறது. ]  

ஓம்‌ ஜயம்‌ ஜயம்‌ என்றே ஊது சங்கே  
ஒன்றே கடவுள்‌ என்றே ஊது சங்கே!  
நாம்‌ அதன்‌ சக்தியென்றே ஊது சங்கே!  
ஞாலமதன்‌ கோவீலென்றே ஊது சங்கே!  

ஈன மனமயயக்க வேற்றுமை யெல்லாம்‌  
இன்றோ டொழிந்ததென்றே ஊது சங்கே!
வானக்குடை நிழலில்‌ மானிடரெல்லாம்‌ 
வாழ்வாங்கு வாழ்வோமென்‌ றூதுசங்கே!  

வெள்ளி வெளுத்ததென்றே ஊது சங்கே!  
விடுதலை வந்ததென்றே ஊது சங்கே ! 
உள்ளங்‌ கனிந்ததென்றே ஊது சங்கே!  
உலகெல்லாம்‌ வாழ்க வென்‌ நூதுசங்கே,  

அமைதி அமைதி யென்றே ஊதுசங்கே 
ஆற்றல்‌ வளர்ந்ததென்றே ஊதுசங்கே !
சமயோக சாதனத்தை ஊதுசங்கே  
சத்யயுகம்‌ வந்ததென்றே ஓதுசங்கே!  

கொடுமை இழிய உயிர்க்‌ கொலையொழிய
கொள்ளை ஒழியப்‌ பகைவர்‌ சள்ளை ஓழிய  
மடமை வறுமையிருள்‌ மறைந்தொழிய  
மறுமலர்ச்சி வந்ததென்றே ஊதுசங்கே !

சித்தந்‌ தெளிந்ததென்றே ஊதுசங்கே  
தீண்டாமை செத்த தென்றே ஊதுசங்கே  
சக்திபிற ந்ததென்றே ஊதுசங்கே !  
சண்டை ஓழிந்ததென்றே ஊதுசங்கே!  

மங்கல முரசு கொட்டி ஊதுசங்கே !  
மாநிலம்‌ பொதுவென்றே ஊதுசங்கே !  
எங்குமுள்ள சுத்தசக்தி இன்னருளினால்‌  
எல்லாரும்‌ வாழ்கவென்றே ஊதுசங்கே !  

[சிறுகுழந்தைகள்‌ இரண்டு வரிசையாக நின்று மாறி,  மாறி பாட்டிற்கேற்ப நடனம்‌ ஆடுதல்‌]  

“திருவருளே திருவருளே வா, வா !  
தெய்வ சக்தித்‌ திருவருளே வா, வா!  
குருவகுளே குருவருளே வா வா–மாந்தர்‌ .  
குலமெல்லாம்‌ நலம்‌ பெறவே வா வா! (திரு) 
புதுவாழ்வும்‌ புதுயுகமும்‌ பொலியவே  
பொங்கு மங்கலங்கள்‌ எங்குமிலகவே  
முதுமையான நல்லறங்கள்‌ வாழ்கவே 
முத்தமிழ்‌ நாடு செழித்‌ தோங்கவே (திரு) 

மறுமலர்ச்சிக்‌ கலை பூத்துக்‌ குலுங்கவே  
மானிடத்தில்‌ அமரத்தன்மை துலங்கவே  
வறுமை யடிமை மடமைப்பேய்‌ விலகவே  
வண்மையுடன்‌ வளம்‌ பொழிய வா வா (திரு)  

ஓற்றுமை முரசுகொட்டி வா வ  
ஒருமையுடன்‌ உயிர்கள்‌ வாழ வா வா !  
சுற்றுலகு வெற்றிகூற வா வா  
சுதந்தரப்‌ பல்லாண்டிசைத்து வா வா (திரு)  

காசினியின்‌ கண்ணொனியே வா வா
காலசக்தி முத்தமிட வர வா!  
ஆசி கூறி நேசமுற வாவா  
அன்பு கூறியழைக்கின்றோம்‌ வாவா! (திரு)

கண்குளிர மனங்குளிர வாவா–நாங்கள்‌ 
கைவீசித்‌ தலைநிமிர வாவா !  
பண் முழங்கிப்‌ பரவசமாய்‌ வாவா   
பரம சுத்த சக்தியமே வாவா! (திரு)  

காமராசர்‌:  நண்பர்களே! திண்டாமை ஒழிந்தது!  இந்தியாவில்‌ உள்ளவர்‌ இந்தியர்‌; இந்தியர்‌ அனைவரும்‌ ஒரு சமுதாயமாகச்‌ சேர்ந்து வாழுவோம்‌; ஒற்றுமையே வெற்றி: உள்ளன்பே சக்தி! ஜேய்ஹிந்த்‌!  

காட்சி: 12 – கனபாடிகள்‌ ஆவேசம்‌

பட்டர்‌ :  நடந்து போனது காரியம்‌! எத்தனையோ  தலைமுறையாக நடந்துவந்த கட்டுப்பாடு விட்டுப்‌ போனது. ஹும்‌! இனி என்ன செய்ய முடியும்‌? காலத்திற்‌ கேற்ற கோலமும்‌ வேண்‌டியதுதான்‌.  

[கனபாடிகள்‌ ஆவேசமாக]  

கனபாடி:  ஹூம்‌… காலமாவது கோலமாவது…… என்‌ சந்நிதானம்‌ திண்டலானதே–ஹா ஹு ஹம்‌ ஹும்‌ படேஸ்வாஹா! தீண்டாதாரை என்‌ சந்நிதானத்தில்‌ கொண்டு வருவது ; நீயும்‌ மணியாட்டி தீபாராதனை செய்வதா ! டம்டும்‌ படேஸ்வாஹா! இனி ஊர்நாசம்‌! காலரா வரும்‌, பேதிவரும்‌, பீதிவரும்‌ ! அழிவு வரும்‌ !ஹாஹு. நான்‌ போய்‌ விட்டேன்‌. இனிக்‌  கோவிலுக்குள்‌ வரமாட்டேன்‌, வரம்தரமாட்‌டேன்; பூஜையைப்‌ பெற மாட்டேன்‌. என்‌ யந்திரம்‌ தீண்டலானது. மந்திரம்‌ தீண்டலானது. ஹும்‌ ஹம்‌ ஹும்‌ படேஸ்வாஹாு  (தடால்‌ என்று விழுகிறார்‌)

பட்டர்‌: சுவாமி சுந்தரேசா ! அம்பா மீனாட்சி அபரர…. தம்‌ அபராதம்‌!…[உடல்‌ நடுங்க]

கனபாடி: டே நான்‌ ஆவணி மூல வீதியில்‌ இருக்கிறேன்‌ இனிக்கோவிலுக்குப்‌ போக மாட்டேன்‌. நீயும்‌  போகாதே-நான்‌ மீனாக்ஷி பேசுகிறேன்‌  ஹாஹு 

பட்டர்‌: அம்மா, தாமே மீனாட்சி மன்னிக்கணும்‌;  மன்னிக்கணும்‌, தெரியாமல்‌ செய்துவிட்டேன்‌. ஹ…ஹ்‌..லைலலல லொளலொள..மிமிமினா னாஷிஷி…இஇஇ…  

[வருதல்‌ ஐயராமன்‌, வேதம்‌]  

ஜயராமன்‌ : ஏனப்பா நடுக்கம்‌…  

வேதம்‌ : ஏனப்பா ஆவேசம்‌…  

கனபாடி : நீ நாசமாய்ப்‌ போக…மீனட்சி போய்‌ விட்‌டாள்‌.  

வேதம்‌ : ஹஹஹஹ!।! அப்பா இமெதன்ன சித்தப்‌பிரமை? மீனாட்சி இப்போதுதான்‌ சந்தோஷமாயிருக்கிறாள்‌, அதோ பார்‌.  [சந்நிதிக்‌ காட்சி காட்டல்‌]  

[ஆயிரக்கணக்கான பக்தர்கள்‌ மாதா ஜய ஐம்‌ மதுராம்‌பிகையே என்று முறையிட்டுக்‌ தொழுகிறார்கள்‌ |  

பட்டா : மெய்தானம்மா, மெய்தான்‌…கனபாடிகளே,  மீனாட்சி கர்ப்பக்கிரகத்திலேதான்‌ இருக்கிறாள்‌.  

கனபாடி: சுந்தரேசர்‌ ?…

பட்டர்‌ : மீனாட்சியிருந்தால்‌ சுந்தரேசரும்‌ இருக்கத்‌ தானே வேண்டும்‌.

கனபாடி : இரண்டு பேரும்‌ இருக்கிறார்களா?

ஜயராமன்‌ :  பாருமே அதோ தேவாரம்‌ முழங்குகிறது.  திருவாசகம்‌ ஒலிக்கிறது. கேளுமே “ஓசை ஓலியெல்லாம்‌ ஆனாய்‌ நீயே'”  

பட்டர்‌:  ஆம்‌ கனபாடிகளே.  

கனபாடி : எனக்கு நிம்மதியில்லை. இன்னம்‌ ஒருவாரம்‌  பார்ப்பேன்‌. என்னம்மை மீனாட்சியும்‌ என்னப்‌  பன்‌ சுந்தரேசனும்‌,கோவிலைவிட்டுப்‌ போனால்‌,  போனால்‌ போனால்‌… இப்படியே பொற்றாமரை  யில்‌ விழுந்து சாவேன்‌. அல்லது என்‌ மண்‌  டையில்‌ நீ கல்லைத்‌ தூக்கிப்போடு, உன்‌  மண்டையில்‌ நான்‌ கல்லைத்‌ தூக்கிப்‌ போடு  கிறேன்‌. இருவரும்‌ திருப்பரங்குன்றத்தில்‌  சாவோம்‌…  

ஜயராமன்‌ :  சாவானேன்‌ மாமா?  

கனபாடி:  ஏனா! ஏனா! ப்ருஷ்டா…என்‌ மகளையும்‌ கெடுத்‌தாய்‌. உன்னைச்‌ சபிக்கிறேன்‌ பார்‌ (விபூதி  எடுத்து ஊதி) ஹும்‌ படேஸ்வாஹா ! மம  சத்ரூன்‌ தாடய! தாடய,.மாரய மாரய, நாசய  நாசய!  

வேதம்‌ :  ஜய ஜய ஜய ஜய அப்பா உனக்குச்‌ சித்தப்‌  பிரமை. இப்போதுதான்‌ கோவில்‌ களை  நிரம்பியது, இப்போதுதான்‌ இந்துமதமே  நிறைவானது. இனி நம்மவர்‌ பிறமதம்‌  புகாமல்‌ தம்முடன்‌ நிம்மதியாக வாழ்வார்‌.  

கனபாடி:  வாழ்வார்‌ டீ வேதவல்லீ…என்ன செய்தாயடீ ?  எனக்கு மகளாய்ப்‌ பிறந்து, இந்தப்‌ பயலுடன்‌  கூடி என்ன செய்தாய டீ?  

வேதவல்லி : நான்‌ என்னப்பா செய்தேன்‌…உலகுக்கு  நல்லது செய்தேன்‌. இந்து சமுதாயத்திற்கு  நல்லது செய்தேன்‌.

கனபாடி : என்‌ மகளாகப்‌ பிறந்து நீ கூட்டத்தில்‌ அப்‌ படிப்‌ பாடலாமா! ஆடலாமா? அவனுக்குத்‌  தாளம்‌ போடலாமா.

வேதவல்லி :  அப்பா நி இப்படி வாடலாமா? என்மேல்‌  சாடலாமா? தெய்வ சம்மதமும்‌, பொதுஜன  சக்தியும்‌ நிறைவேற்றிய காரியத்திற்காக  எங்கள்‌ மேல்‌ பழி போடலாமா?  

கனபாடி :  ஹும்படேஸ்வாஹா! மூதேவி! நீ பெண்ணா!  அவனோடே என்ன பேச்சு?

வேதவல்லி :  யாரோடே அப்பா?  

கனபாயபு :  இந்த ஜயராமனோடே; அவன்‌ உன்‌ கணவனா?

வேதவல்லி :  ஆம்‌ (தலை குனிந்து புன்னகைத்தல்‌) 

கனபாடி:  ஆ..மா..மா…உன்‌ மண்டையை உடைக்கிறேன்‌. காலை வெட்டுகிதேன்‌. அவமானப்‌ பீடையே, அடக்கமில்லாத அவலமே,  வீட்டைவிட்டுப்‌ போ சொல்லுகிறேன்‌. என்‌ குலதர்மம்‌ போனதே, கோயில்‌ போனதே!  வேதம்‌ போனதே-போனதே-போனதே,  

[அடித்து அழுகிறார்‌ ]  

ஜயராமன்‌ :  அப்பா இவருக்குச்‌ சித்தப்‌ பிரமை; உள்ளே  தள்ளிச்‌ சென்று படுக்‌கவைப்போம்‌. சரியான  டாக்டர்‌ வந்து பார்க்கட்டும்‌ நீ நிம்மதியாயிரு.

பட்டர்‌ :  கனபாடிகளே, இந்த ஆவேசமெல்லாம்‌  தேற்று எங்கே போனது? நேற்றே எல்லார்‌  முன்னும்‌ ஆவேசம்‌ காட்டியிருந்தால்‌.  

ஜயராமன்‌ : உதை விழுந்திருக்கும்‌; காலம்‌ முன்னேறி  விட்டது. சமூகம்‌ கண்விழித்தது. இனித்‌  தீண்டாமை, பெண்ணடிமை, சாதிமதபேதம்‌ எல்லாம்‌ காலவெள்ளத்திற்‌ கரைந்து போகும்‌.  ஐயா சிந்தித்துப்‌ பார்க்கட்டும்‌.  

கனபாடி : மாட்டேன்‌, நான்‌ மாட்டேன்‌; உன்‌ குடலைக்‌  கிழித்து மாலை போடுவேன்‌. ஹே துஷ்டா!  ஹே துஷ்டை! மீனாட்சி என்மேல்‌ வந்திருக்‌  கிறாள்‌. உங்களைப்‌ பழிவாங்குவேன்‌, பலி  வாங்குவேன்‌..

பட்டர்‌ :  அடடட..லலல…ஐயையோ பயமாயிருக்கே…  

ஜயராமன்‌ :  நீ ஏனப்பா நடுங்குகிறாய்‌? இவர்‌ மூளை தலை  கீழானது. அதை நேர்‌ செய்ய டாக்டர்‌  வருவார்‌ பார்‌, கனபாடிகளே, போம்‌ உள்ளே.  காலப்போக்கை நீர்‌ கண்டிக்க முடியாது.  நடப்பது நடந்தே தீரும்‌.  

கனபாடி:  நடப்பதா! நாமன்றி ஓரணுவும்‌ அசையாது.  [மார்தட்டி] நானே உலகம்‌, நானே மீனாக்ஷி,  நானே சுந்தரேசன்‌, உங்களைச்‌ சபிக்கிறேன்‌, உங்களுக்குப்‌ பைத்தியம்‌ பிடிக்கும்‌; ஹும்‌  படேஸ்‌ வாஹா…  

ஜயராமன்‌ :  நாங்களும்‌ உம்‌ பட்டேஸ்வாஹா! அம்பட்‌ டேஸ்வாஹா போடுவோம்‌…போம்‌ உள்ளே!  [தள்ளிச்‌ செல்லுகிறான்‌ ]  

பட்டர்‌ :  இன்னும்‌ ஒருவாரம்‌ பார்ப்போம்‌. மீனாட்சி  இருக்கிறாளா என்று…பிறகுதான்‌ எனக்கு  நிம்மதியாகும்‌; குடல்‌ நடுங்குகிறது.  

[செல்லல்‌]  

காட்சி : 13 – நல்லாயி

[ஹரிஜன சங்கத்‌ தோட்டம்‌ ; நல்லாயி தக்காளிப்‌ பழக்‌  குவியல்‌ முன்னே]

நல்லாயி :  மனசு குளிர்ந்தது! மினாட்சி தரிசனம்‌ தினம்‌  கிடைக்கிறது. கோவில்‌ புதிய அழகுடன்‌  விளங்குகிறது. மீனாட்சீ, இதெல்லாம்‌ உனக்கே  படைக்கிறேன்‌.சாதிபோனது! சோதி ஆனது.  வைத்திய நாதர்‌ வாழ்க! ௬ப்புராமன்‌ வாழ்க! ஜயராமன்‌ வாழ்க ! (வேதவல்லியம்மா வாழ்க!  காந்தி வாழ்க! நேரு வாழ்க! காமராசர்‌ வாழ்க! ஹரிஜன சங்கம்‌ வாழ்க! எங்கள்‌  இனம்‌ முன்னேறியது. எங்கள்‌ கக்கன்‌ மந்திரி  யானார்‌, எங்கள்‌ ஜகஜிவனராமர்‌ மந்திரி யானார், எங்கள்‌ சஞ்ஜிவையா மந்திரியானார்‌  காந்தி புண்ணியத்தால்‌ திருக்குலம்‌ முன்னேறியது. எங்கள்‌ காமராஜ்‌ வாழ்க! என்‌ மகன்‌  வீரமுத்து டாக்டராகி இங்கே வேலை பார்க்‌கிறான்‌. எத்தனை பேருக்கு அவனால்‌ உதவி! தோயாளிகள்‌ அவனை வாழ்த்துகிறுர்கள்‌. 

[வருதல்‌ ஜயராமன்‌ ]  

ஜயராமன்‌ : நல்லா இரு நல்லாயி; டாக்டர்‌ வீரமுத்து  வந்தாரா?  

நல்லாயி :  அவனுக்காகத்தான்‌ காத்திருக்கிறேன்‌. உண்‌ணக்கூட நேரமில்லை; நாளெல்லாம்‌ நோயாளி  களைப்‌ பார்க்கிறான்‌, இரவு ஒரு மணிக்குக்கூட ஃபோன்‌ வருகிறது. உடனே மோடாரில்‌ ஓடுகிறான்‌. யாருக்கோ மூளைக்‌ கோளாரும்‌,  பார்க்கப்‌ போயிருக்கிறான்‌. சிவா, முருகா  என்று சொல்லி மருந்து தருகிறான்‌.  

ஜயராம்‌ :  அம்மா, உன்‌ மகன்‌ தெய்வப்‌ பிறவி. என்ன  அன்பு, தெய்வ பக்தி, தியாகம்‌, ஆதரவு!  மதுரை முழுதும்‌ அவனை வாழ்த்துகிறது. இதோ டாக்டர்‌ !  

[வருதல்‌ டாக்டர்‌ வீரமுத்து]

வீரமுத்து :  வணக்கம்‌ ஐயா, மாமா உடம்பு எப்படி?  வேதம்‌ செளக்கியமா? இப்போதுதான்‌ சுப்பராமன்‌ விட்டுக்குச்‌ சென்று வருகிறேன்‌. அவர்‌ தங்கள்‌ பணிநலத்தைப்‌ பாராட்டினார்‌.  

ஜயராமன்‌ :  மதுரைக்கு ஒரு மகாத்மா வந்தார்‌. டாக்டர்‌,  என்‌ தகப்பனாருக்கு இரத்தக்‌ கொதிப்பு,  மாமனாருக்கு மூளைக்கொதிப்பு.மாமஞார்‌ தேற்று  தடார்‌ என்று விழுந்து, கைமுறிந்து போனது.  மூளையும்‌ புரண்டு போனது,  

வீரமுத்து :  முன்னே கோவில்‌ நுழைவு பற்றி ஹாஹு  அம்பட்டேஸ்வாஹா என்று குமுறிக்‌ கொண்  டிருந்தாரே ; அவர்தாமே.  

ஜயராமன்‌ :  ஆம்‌, ஆமாம்‌ 1 ஐயோ அவர்‌ பிடிவாத மூளை  இப்போது வரவரகி கெட்டுப்‌ போனது.  எல்லாரையும்‌ கொலை செய்வதாக அம்மிக்‌  குழவியைத்‌ தூக்குகிறார்‌…  

வீரமுத்து :  நெற்றிச்‌ சுரப்பியான பிட்யூட்டரி கிளாண்டில்‌  கோளாறு; நான்‌ இதோ வருகிறேன்‌. சரி  உங்கள்‌ திருமணம்‌ என்னவானது?  

ஜயராமன்‌ :  இவர்‌ மூளை சரியானால்‌ வேளை வரும்‌. வேதவல்லி தயார்‌; டாக்டர்‌, உங்கள்‌ திருமணம்‌?  

வீரமுத்து :  மனம்‌ பொருந்தினால்‌ மணம்‌ பொருந்துவது  இயல்புதானே! அதையும்‌ விரைவில்‌ காண்‌  போம்‌. நமக்கு டாக்டர்‌ தர்மாம்பாள்‌ இருச்‌  கிருள்‌. அவள்‌ லண்டனிலிருந்து வந்ததும்‌  திருமணம்‌.  

நல்லாயி : மகனே, சுடச்சுடத்‌ தோசை உள்ளது. அப்பா  சாப்பிட்டுப்போ,. ஐயா நீங்களும்‌ வாங்க!

வீரமுத்து : மகிழ்ச்சியுடன்‌ உண்கிறேன்‌ தாயே! நமது  சபதம்‌ நிறைவேறியது தாயே | சிவமுருகன்‌  வெற்றியீந்தான்‌,  

[மேஜை மேல்‌ பலகாரத்தட்டு வருகிறது “சிவமுருகம?*  என்று எல்லாரும்‌ உண்ணல்‌]  

காட்சி: 14. டாக்டர்‌ வீரமுத்து 

[கனபாடிகள்‌ மெத்தையில்‌ படுத்திருக்கிறார்‌. கை வலீ, கால்‌ வலி.]  

கனபாடி: ஐயே! அம்மா! அப்பா! மீனாட்சி! இருக்‌கிறாயா! போனாயா! நானும்‌ போகிறேன்‌.  

வேதம்‌ : அப்பா அமைதி ! மீனாட்சி இருக்கிறாள்‌. நீயும்‌  இரு. புலம்பாதே இதோ டாக்டர்‌ வருகிறுர்‌.  

[டாக்டர்‌ வீரமுத்து ஜயராமனுடன்‌ வருதல்‌]  

ஜயராமன்‌ : மாமா, டாக்டர்‌.  

கனபாடி: டாக்டரா வாருங்கோ இருங்கோ. கைவலி,  கால்வலி, தலைவலி இடுப்புக்‌ கடுப்பு! ஹு  ஹுஹு! உயிர்‌ துடிக்கிறது! வாய்‌ கசக்‌கிறது! வலி வலி வலி.  

டாக்டர்‌ : எல்லாம்‌ நன்றாகும்‌. ஐயா அமைதியாயிரும்‌  ஆண்டவன்‌ அருள்வான்‌. ஓம்‌ சிவ முருகா! ஜயராம்‌, இவர்‌ ஆடைசனைக்‌ கழற்ற வேண்டும்‌.  மின்‌ வேது வைக்கவேண்டும்‌. ஓம்‌ சிவமுருகா?  தலையைத்‌ தூக்கிப்பிடியும்‌. முகத்தைத்‌  துடைக்கிறேன்‌. வேதம்மா வேது வைக்க  உதவி செய்யும்‌. கைக்குக்‌ கட்டுப்‌ போடு  கிறேன்‌. சிவா முருகா! .  

[கைக்குக்‌ கட்டுப்‌ போட்டு உடம்பில்‌ வேது வைத்து; தலையில்‌ மருந்து தடவி, நெற்றியில்‌ மருந்திட்டுக்‌ சுட்டிச்‌ சிகிச்சை  செய்தல்‌]

கனபாடி :  ஹா, அப்பாடா நிம்மதியானது. டாக்டர்‌  வாழ்க ! ஜயராமா, மூளை தெனிந்தது. என்‌  னவோ பிதற்றினேன்‌. எல்லாம்‌ மறந்துவிடு,  வேததர்மத்தில்‌ உள்ள ஆர்வத்தால்‌ ஆவேசம்‌  கொண்டு என்னென்னமோ. உளறினேன்‌.  இப்போது மனம்‌ குளிர்ந்தது. ஜயராமா, நி  உத்தமன்‌. உனக்கே வேதம்‌. நாளையே  கலியாணம்‌.  

டாக்டர்‌ : அப்படிச்‌ சொல்லும்‌ நாலு தடவை. ஒரு சமூக  நாடகம்‌ நல்லபடி நிறைவேறியது.  

கனபாடி :  டாக்டர்‌, நல்ல பரோபகாரி.முன்‌ இப்படித்தான்‌  டாகடர்‌ மாத்யூ இருந்தார்‌; மகா உத்தமர்‌;  ஊருக்கு உபகாரியாயிருந்தார்‌. நாங்களெல்‌ லாம்‌ அவரிடம்‌ பிரியமாமிருந்தோம்‌.  

வீரமுத்து :  ஆம்‌ அவர்‌ ஹரிஜனாமிருந்து, கிறிஸ்துவ  ரானார்‌. ஹரிஜனஞமிருந்த வரையில்‌, அவ  ரைப்‌ பறையன்‌ என்று இழிவு செய்தனர்‌.  அதே ஆள்‌ டாக்டா மாத்யூ ஆனதும்‌ அக்கிர  காரமும்‌ ஆதரித்துப்‌ போற்றியது.  

கனபாடி :  அப்படியே! என்‌ கண்‌ இன்றே திறந்தது:  சாதிப்பித்தம்‌ ஒழித்தது.  

எல்லா வுயிர்க்கும்‌ இறைவன்‌ ஒருவனே 
எல்லா வுடலும்‌ இறைவன்‌ ஆலயமே 
எல்லா ருக்கும்‌ இயல்பாம்‌ இன்பம்‌  
எல்லார்‌ வாழ்வும்‌ இறைவன்‌ யோகமே  

இந்த நாலு வரிதான்‌ என்வேதம்‌–பட்டர்‌ வருக! 

[வருதல்‌ பட்டர்‌]

பட்டர்‌ :  [திகைத்து] ஹா…  

ஜயராமன்‌ : என்னப்பா திகைக்கிறாய்‌?  

பட்டா :  இவரை எப்போதோ–பார்த்த நினைவு 

[மூளையைத்‌ தட்டிக்‌ கொண்டு]  

ஜயராமன்‌ :  இவர்‌ தானப்பா டாக்டர்‌ வீரமுத்து M.D.  நமது ஹரிஜன்‌ சங்கத்தில்‌ படித்து சீமை  சென்று லண்டனில்‌ M.D. பட்டம்‌ பெற்று  இங்கே மாவட்ட மருத்துவராயிருக்கிறார்‌..  

பட்டர்‌ :  இவர்‌ தாமே…முன்னே ஒரு பெண்ணுடன்‌.  

ஜயராமன்‌ : கதையை நீட்டுவதேன்‌ அப்பா, இவரே  பையனாயிருந்தபோது தாய்‌ நல்லாயியுடன்‌  விறகு விற்க வந்தார்‌. காலமுன்னேற்றத்‌தைக்‌ கணமுன்‌ காண்‌.

கனபாடி:  அடடா வெடுக்கு துடுக்குப்‌ பேச்சுக்காரனான  அந்தப்‌ பையன்‌, லண்டன்‌ டாக்டரானானா,  சந்தோஷம்‌ அப்பா இப்படித்தான்‌ எல்லாரும்‌  முன்னுக்கு வரவேண்டும்‌.  

பட்டர்‌ :  இதோ கோவில்‌ பிரசாதம்‌, சாப்பிட வேண்டும்‌.  டாக்டர்‌ வாழ்க !  

டாக்டர்‌ :  புனிதனுனேன்‌ வணக்கம்‌, வணக்கம்‌ ஐயா!  கோவிலில்‌ மீனாட்சி சுந்தரேசர்‌ நன்றாயிருக்கிறார்களா?  

பட்டர்‌:  இரு குறையுமில்லை. இப்போதுதான்‌ கோயில்‌  சந்நிதி களை நிரம்பியுள்ளது. கனபாடிகளே  மகிழும்‌ போது… 

கனபாடி : ஆமாம்‌ டாக்டர்‌, காலம்‌ முன்னேறி விட்டது.  பின்‌ தங்கியவர்கள்‌ விழித்தெழுந்து முன்னேறு  கிருர்கள்‌. தீண்டாமை வேண்டாமை.

ஜயராமன்‌ :   தீண்டாமையும்‌ ஒழிந்தது ; தீட்டும்‌ oY G5 Hi நேற்று வரைக்கும்‌ சாம்பான சாமுவேல்‌  ஆனால்‌. அவனுக்கு மரியாதை. இருளன்‌  இக்னேஷ்ஸ்‌ ஆனால்‌ மரியாதை. காட்டேரி  கரீம்‌ சாகிப்‌ ஆனால்‌ மரியாதை–இந்துக்கள்‌  இந்துக்களை மதிக்கும்‌ காலம்‌ வந்தது. இன்று  சாம்பான்‌ சாம்பானாகவேயிருந்து வாழலாம்‌. 

கனபாடி :   டாக்டர்‌, இன்று மாறிப்‌ பிறந்தேன்‌; காந்தியை  அறிந்தேன்‌. அந்த மகான்‌ வாக்கே வேதம்‌.  தோக்கேபோதம்‌. வீரமுத்து, மாத்டூ ஆகாமல்‌  டாக்டர்‌ வீர்முத்து 14. 9. ஆகவேயிருந்தது  பெரும்பேறு. மீறாட்சியம்மை இந்து மதத்தைக்‌  காத்தாள்‌. அவள்‌ கருணையால்‌ இது நடந்தது.  

டாக்டர்‌ :  அவர்‌ கருணையால்‌ இன்னொன்று நடைபெற  வேண்டும்‌ ஐயா.  

கனபாடி : என்ன? என்ன?  

டாக்டர்‌ :  இதோ நிற்கிறார்களே வேதவல்லி ஜயராமர்‌.  இவர்களை நாளையே ஒன்றாக்க வேண்டும்‌  அடுத்த தைக்கு உங்கள்‌ பேரன்‌ வந்து ஜம்‌ என்று மடியில்‌ உட்கார வேண்டும்‌.  

கனபாடி :  ஆ ஹா அது நடந்து விட்டது; நடக்க வேண்டியது. ஹரிஜன .சங்கத்திலேயே சுப  “காரியம்‌ நடக்கட்டுமே. மனம்‌ ஐத்துப்போனது;  இனி மாமூல்‌ கலியாணந்தானே !  

வீரமுத்து :  கலியாணச்‌ செலவெல்லாம்‌ என்‌ பொருப்பு:  தை வெள்ளிக்கிழமை காலை எட்டு மணிக்கு  முகூர்த்தம்‌. மாலை ஐந்து மணிக்கு விருந்து,  வரவேற்பு.  

பட்டர்‌:  நம பார்வதீ பதயே!  

எல்லாரும்‌ :  ஹர ஹர மஹா தேவ!

வேதவல்லி: உலகமெல்லாம்‌ சாமி கோவிலே 
உள்ளமெல்லாம்‌ சந்திதானமே  
பலவுயிர்க்கும்‌ ஒரு கடவுளே  
பாருயிர்கள்‌ ஒருயிரினம்‌  
கலகமின்றி மனிதர்‌ யாவரும்‌  
கருணையன்பு காட்டி யோங்குவோம்‌  
நமெைதென்றறிந்து நாடுவோம  
நாடுமுற்றும்‌ கூடி வாழுவோம்‌!  

ஜயராம்‌ : மேதினி மனிதர்‌ யாவரும்‌–இங்கே 
மேன்மையான பான்மை காட்டுவோம்‌  
சாதி சமய பேதமில்லையே—ஆத்ம  
சைதன்யத்தைச்‌ சார்ந்துணருவோம்‌  
ஓதியபடி ஒழுகுவோம்‌–நல்‌
லொழுக்கமே உயர்வு நல்குமே  
நீதியான நேர்‌ வழியிலே– என்றும்‌  
நிலைத்து வாழும்‌ கலை பயிலுவோம்‌  

எல்லாரும்‌ : ஓம்‌ ஐய ஓம்‌ ஜய ஓம்‌
ஓம்‌ ஜோதி ஓம்‌ ஜோதி ஓம்‌!  
ஓம்‌ சக்தி ஓம்‌ சக்தி ஓம்‌  
ஓம்‌ சாந்தி ஓம்‌ சாந்தி ஓம்‌!  

காட்சி: 15 – திருமணம்‌

[ஹரிஜன சங்கம்‌ மேடையில்‌ மீனாட்சி, சுந்தரேசர்‌  திருமணப்‌ படம்‌ அதற்குமுன்‌ வேதவல்வியும்‌, ஐயராமனும்‌  திருமணக்‌ கோலத்துடன்‌ விளங்குகின்றனர்‌. கெட்டிமேளம்‌  மாலை மாற்றுதல்‌–மோதிரம்‌ மாற்றுதல்‌]  

[டாக்டர்‌ வீரமுத்துவும்‌, தருமாம்பாளும்‌. மாலை மாற்றுதல்‌] 

(ஆர்பி–ஆதி)  

பெண்மையிற்‌ சிறந்த உண்மைத்‌ துணைவீ  
ஆண்மைக்‌ கேற்ற கேண்மையுடனே
மானே உன்னை மணந்து வாழ்வேன்‌  
நீ என்‌ சக்தி நானுன்‌ சிவமே  
குடும்பம்‌ தழைக்கக்‌ குவலயந்தழைக்க  
அறம்‌ பொருளின்பமும்‌ அருளும்‌ பொலிய 
ஒன்றாய்‌ இல்லறம்‌ ஒளிபெற வாழ்வோம்‌  

வென்றித்‌ திருவே வீட்டிற்ரைசியே  
மன்றல்‌ மாலை மணம்பெறச்‌ சூட்டினேன்‌  
மங்கலமாகுக நல்குல வாழ்வே  
ஓம் சுத்த சக்தி ஐய சத்ய ஜோதி  
ஓம்‌ சச்சிதானந்த பரம க்ருபா நிதி  

மணத்திரு : இருபாலுள்ளும்‌ ஒரு தானாகும்‌  
இறைவா போற்றி எங்கும்‌ நிறைவாய்‌ !  
இவரே என்னுயிர்‌ இன்புறும்‌ கணவர்‌  
இவரே ஆணுடல்‌ ஏத்திய நானும்‌
இவரே என்றன்‌ இதயத்‌ துடிப்பாம்‌  

என்‌ மூச்செல்லாம்‌ இவர்பணிக்‌ கீந்தேன்‌  
வடமீன்‌ போன்ற திடமன துடனே  
கற்பைக்‌ காத்துக்‌ சண்கருத்தொன்றி  
யோகத்‌ துணைவியாய்‌ போகத்‌ துணைவியாய்‌  

இணை பிரியாமல்‌ என்றும்‌ வாழ்வேன்‌  
ஆவுள்‌ மலர்களை அன்பு மாலையாய்த்‌  
தொடுத்திவர்‌ மார்பிலே சூட்டுகின்‌றேனே  
எனையிவர்க்‌ கீந்தேன்‌ இறைவா போற்றியே  

பட்டர்‌ : கனபாடி :  

நீடு வாழியரோ நீடு வாழியரோ 

[அக்ஷதை போட்டு மலர்‌ தூவி]  

பீடுது நம்பியும்‌ பெட்புறு நங்கையும்‌ 
அன்பும்‌ அறமும்‌ அருளும்‌ பெருகிப்‌ 
பண்பும்‌ பயனும்‌ பழுத்தினி தோங்கி 
மங்கலமாக வாழ்க வாழ்கவே!

எல்லாரும்‌: உள்ளமே தில்லையாக  
உயிர்தொறு நடனமாடும்‌  
வள்ளவின்‌ கருணையாலே  
வளமையும்‌ இளமையின்பும்‌  
தெள்ளறி வாற்றல்‌ யாவுந்‌  
திருவுடன்‌ பெருகி நாளும்‌  
வள்ளியு முருகனும்‌ போல்‌  
வதுவரர்‌ வாழ்க மாதோ !  

[ஹரிஜன சங்கத்தார்‌ இன்னிசை முழக்கம்‌]  

சிந்து பைரவி ஆதிதாளம்‌  

ப: வாழுவோமே அன்பு சூழூவோமே– இந்த 
வானக்குடை நிழலில்‌ ஆனத்தத்‌ தோழராய்‌ (வா) 

அ: யாழும்‌ குழலுமென வாழுவோமே–பொங்கும்‌ 
யாழித்‌ திரையுடன்‌ கூத்தாடுவோமே (வா) 

ச: சாதிமதபேதமற தீதியமைப்போம்‌–இந்தச்‌ 
சகமெல்லாம்‌ ஐருகுலமாகத்‌ தழைப்போம்‌  
வீதிதொறும்‌ சுதந்தரவேதமொலிப்போம்‌–நம்‌ 
வீடுதொறும்‌ கலைவிளையாடலுகப்போம்‌ (வா) 

பெண்மை பெருமைபெற வாழுவோமே–அச்சப்‌ 
பேயைத்‌ துரத்தியுல காளுவோமே  
உண்மை பெருமைபெற வாழுவோமே–இந்த 
உலகிற்‌ கலகமில்லா ஓற்றுமை கொண்டே (வா)  

உன்னத ஐளியினில்‌ ஒங்குவோமே–இந்த  
உலகை அழகுபெறத்‌ தாங்குவோமே  
மண்ணுலகில்‌ வானரசை நாட்டுவோமே–இந்த 
மானிடத்தைத்‌ தெய்வமென மாற்றுவோமே (வா)

(முற்றும்)

– ஹரிஜன்‌ (எல்லாரும் ஓர் குளம் என்ற உணர்ச்சியைத் தூண்டும் சிறந்த சமயோக நாடகம்), இயற்றியவர்: கவியோகி சுத்தானந்த பாரதியார்‌, முதற் பதிப்பு:1966, தமிழ்நாடு ஹரிஜன சேவக் சங்கம்‌, சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *