ஸர்ப்பம்




(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அக்காவுக்கு என்மேல் உசிர். அதை முதலில் சொல்லி யாகணும். ம்… ம்…ம்… அதைப்பற்றிச் சந்தேகமில்லை. சந்தேகப்படக் கூடாது. சந்தேகப்பட்டால் அடுத்த ஜன்மத் தில் புழுவாய்த்தான் பிறப்பேன். எதிர்வீட்டு எண்ணெய்ச் செட்டியார் அவர் திண்ணையிலேயே கடை வைத்திருக் கிறார் – அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறேன், துரோகம் எண்ணறவா, பண்றவா எல்லாரும் புழுவாய்ப் பிறப்பா ளாம். பேச்சுவாக்கில் இதை அம்மாவிடம் சொன்னப்போ அம்மா ‘பக்’குனு வாய்விட்டுச் சிரித்துவிட்டாள்.
“அடி அசடே!

அம்மா தையல் மெஷினை ஓட்டிக்கொண்டிருந்தாள். உருப்படியா ஒரு பாவாடை தைச்சு நாங்கள் அறியோம். ஆனால் மெஷின் என்னவோ மும்மரமா கொட கொடா கொட கொடா-
“என்னம்மா?”
“அதுக்கு “ன்னு பிறந்தவனே-
“எதுக்கு?”
“சரி, விட்டுத்தள்ளு…”
அம்மாவே அப்படித்தான். அப்படித்தான். பாதியிலேயே அவளுக்கு அலுப்புத் தட்டிவிடும்.
முதலில் அக்கா.
அடுத்து ஸ்ரீதர்.
-ரமேஷ்-
அப்புறம் நீண்ட இடைவேளைக்குப்பின் நான். கஷ்கு முஷ்கு குண்டச்சி.
அண்ணா செல்லமா வயத்தில் குத்துவான். ‘வுண்’ணுனு கை எகிறும்.
அக்கா என்னை தூக்கி வெச்சிக்க ஆசைப்படுவாள். முடியற காரியமா? அவளோ நோஞ்சான். என்னைக் கீழே போட்டுக்கொண்டு தானும் என்மேல் விழுவாள். வீல் என்று அலறுவேன். பாதிது பயம்தான்.
ஸ்ரீதர் கண்ணாடியில் வகிடு எடுத்துக்கொண்டே “பூசணி விரிஞ்சுதா பார்! சரி இன்னிக்கு அவியலுக்காச்சு.
“எனக்கு பொறிச்ச கூட்டுத்தான் பிடிக்கும்.
ரமேஷ் அன்றைய ‘டைம்டேபிள் புத்தகங்களைப் பையுள் திணித்துக் கொண்டிருக்கிறான்.
“ஆமாம்,அம்மா பண்ற அவியலில் பூசணிதான் மெயின் வேறு தான் ஏது?”
“லங்கணி குரலைப் பாரு! கோடையிடி அங்கம்மா!’*
அம்மா காதிலேயே வாங்கிக்கமாட்டாள், காலை யில்லைத் மாலையில்லை. வேளையில்லை, பொழுதில்லை. காலை நீட்டிக்கொண்டு புத்தகம் படித்துக்கொண்டிருப் பாள். சூழ பழைய குண்டூசி, பேசும் படம், பிலிமாலயா, சினிமா பாட்டுப் புத்தகங்கள் வாரியிறைந்து கிடக்க, அதன் நடுவே அம்மா-அதிலே ஏதோ ஒரு குஷி, அவள் வேண்டிய தெல்லாம் நிறைஞ்சிருக்கிற மாதிரி.
நாக்கைத் தொட்டு பென்சில் கோட்டை அழிச்ச மாதிரி, நினைவுகள் மங்கித் தெரியறது.
அக்கா டிரஸ் பண்ணிண்டிருக்காள். கண்ணாடி எதிரே நிக்கறா. நினைச்சு நினைச்சுப் பவுடரை முகத்தில் அப்பிக் கிறா.உடனே துடைக்கிறா. தோள்பட்டையில் மேலாக்கை அலை அலையாச் சீண்டிக்கிறா. அக்காவுக்கு அப்படி யொண்ணும் வயசாயிடல்ல. ஆனால் அவளை இன்னிக்குப் பொண் பார்க்க வரா. (எல்லாம் காலா காலத்துலே நாங்கள் கண் மூடறத்துக்கு முன்னால் – பெரியவா பேச்சு) ஆறு மணிக்கு வேளை பார்த்திருக்கு. ஆனால் மூணு மணி யிலிருந்து திமிலோகப்படறது. அக்கா மத்தியானம் காலேஜுக்கு மட்டம் அடிச்சுட்டா. அப்போலேருந்து கண்ணாடியிலே தன்னை இன்னும் தேடிண்டிருக்கா. இந்தப் பேச்சு புரியலேதான் ஆனால் பெரியவா சொல்லிக் கொடுத்ததுதான். நானும் ஸ்கூலுக்கு டோக்கர்’ கொடுத் துட்டேன். ஏண்டிம்மா நீ போகல்லேனா நான் மட்டும் போகணுமோ?
பந்தைச் சுவத்தில் எறிஞ்சு எறிஞ்சு புடிச்சுண்டிருக் கேன். இருபத்தஞ்சு கேம் எடுத்துட்டேன்.
“வஸந்தீ வாயேன்! காப்பி ஆறிப்போறது!
“வேலையாய் இருக்கேன் அம்மா! இப்போ வரமுடியாது போ!”
“நான் மட்டும் இங்கே ஈ ஓட்டிண்டிருக்கேனா?”
அக்கா பதில் பேசவில்லை. பேசமாட்டாள். ஒரு தடவை பேசியாச்சு. அவ்வளவுதான். அக்கா கண்ணாடியை முறைச் சாள். நெற்றியில் வேர்வை முத்திட்டது. இமையோரம் மை, ஈட்டி மாதிரி கூர்ப்பா குத்திண்டு வரணும்னு பார்க்கறா இன்னும் சரியா வரல்லே. இப்படியே இன்னும் கொஞ்சநாழி நின்னான்னா முழு மேக்கப்பும் வழிஞ்சோட ஆரம்பிச்சுடும்.
முக்கிண்டு முனகிண்டு கையில் காபியோடு அம்மா சமையலறையிலிருந்து வரா. அப்படி முக்கி முன்கற வயசு மில்லே, உடம்புமில்லே. ஆனால் அது அம்மாவோட மேக் அப்’
பந்து சுவத்திலிருந்து எழும்பற பாதையில் அப்போ அம்மாதான் வந்தாளோ இல்லே தன் பாதை பிச்கி பந்து அம்மாவை தேடிண்டு போச்சோ?
பந்து அம்மா கையிலிருந்து டம்ளரைப் பிடுங்கி தரை யில் “டிங் டிங் டிங்” தம்ளர் உருண்டோடித்து. அக்கா அபிஷேக சுந்தரி!
இது எப்படி, ஏது, இசைகேடா – என்னைக் கேக்கா தீங்கோ,
ஆனால் அம்மா என்னைத்தான் கேட்டா? எப்படிக் கேட்டா? கையாலும் காலாலும் – ஆமா அம்மா என்னைக் காலால் உதைச்சா முதுகிலே வேறே மொத்து மொத்துன்னு தகரக் கொட்டா மேலே மழையிறங்கிற மாதிரி, தனக்கு மூச்சு இறைக்கிற வரைக்கும் அடிச்சிட்டு, அம்மா அக்காவைக் கட்டிண்டு அழ ஆரம்பிச்சுட்டா.
எனக்கு அழுகை வரல்லே. என்னவோ திக்பிரமை. காலடியில் காப்பி சேறாய், குட்டையாய்த் தேங்கித்து.ஒரு னுசு சேப்பா, சந்தனக் குழம்பாட்டம், பார்க்கவே ஆசையா. குடிக்கவே ஆசையா அவ்வளவுதான். எனக்கு மத்ததெல்லாம் மறந்துபோச்சு. குப்புறப் படுத்துண்டு உறிஞ்ச ஆரம்பிச்சுட்டேன்.
எதிரே சுவத்தில் காலண்டரில் ஒரு புலி கரையோரம் புதர்களிலிருந்து வெளிப்பட்டு, முன்னங்காலில் குடல் திறந்த மானை இடுக்கிண்டு – குளமா ஆறா தெரியல்லே-
ஜலத்தை நாக்காலே நக்கி (என்ன நாக்குச் சிவப்புகுடிச் சுண்டு என்னைப் பார்த்து உர்-உர்-உர்-மஞ்சள் கண்கள் காத்தில் – காலண்டர் அசைவில் புலியும் அசைஞ்சுது. எங்களுக்கிடையில் திடீர்னு ஏதோ ஒரு உறவு, உன்னைப்போல் நானா? என்னைப்போல் நீயா? ஏதோ ஓத்துமை.
அம்மாவும் அக்காவும் அழக்கூட மறந்து என்னையே பார்த்துண்டிருக்கா. அவா முகத்தில் ஒரு வெறுப்பு ஆச்சர்யம்.
பயம்?
என்னைக் கண்டு ஏன் பயப்படனும்?
நான் என்ன புலியா?
அவாளவாளுக்கு இஷ்டப்படி நிறைவேறாட்டால், அதுக்கும் பழிபோட ஏன் பிறர் தலையைத் தேடறா?
‘காப்பியையா தட்டிவிட்டா, கல்யாணத்தையேன்னா தட்டிவிட்டா பாவி!’
“அது ஒரு அபசகுனின்னு அப்பவே எனக்குத் தெரியும்!”
“குழந்தையை ஏண்டி குத்தம் சொல்றே?”
“குழந்தையாம்! குழந்தையைப் பாரு! இப்பவே குதி ராட்டம்! சப்பாத்திக் கிழங்குன்னா அப்படி ஒரு வளை வளைக்கிறது. இட்டுப் போட்டு தோளே விட்டுப்போறது இப்படியே பெருத்துண்டு போனால் ஒருநாள், ‘டொப்’னு வெடிச்சுடுவேன்னு சொல்லியும் பார்த்தாச்சி. கேட்டால் தானே?”
“அவள் என்ன செய்வாள்? நீ பண்றே, அவள் தின் கறாள். இதென்ன நியாயம் மடி நிறைய பாலை நிறுத் திண்டு கன்னுக்குட்டிக்கு வாய்ப்பூட்டு மாதிரி.”
அம்மா அப்பாவை ஒரு மாதிரியாப் பாக்கறா, அப்பா தொண்டையை கனைச்சுக்கறார். ரெண்டுபேரும் சிரிச்சுக் கறா. அவாளுக்குள்ளே என்ன ரஹஸ்யமோ? என்ன அர்த்தமோ? என்ன ஆனந்தமோ?
காப்பி கொட்டினதிலிருந்து அஞ்சு வருஷமா அலைஞ் சாறது! அக்காவுக்கு இன்னும் குதிரல்லே. பெரியவா ஒத்தரும் கண்ணை மூடிடல்லே, கொட்டாப்புளியாத்தான் வளைய வரா.
“தோ பார் தங்கம்மா,இடிச்ச புளியா இருக்கேன்னு என்னை குத்தம் சொல்லிண்டு திரியாதே. எட்டுலே செவ்வாய். போறாத்துக்கு மூல நக்ஷத்திரம் வேறே ஆயிரம் கண்டிஷன்லே வரன் தேட வேண்டியிருக்கு. இன்னும் கேக்கப் போனா நீ என்ன ரம்பையாப் பெத்து வெச்சிருக்காயா?
“இதன்னடியம்மா கொடூரம்? கூரையே தூத்தினா-‘”
“உன் பழமொழியெல்லாம் மூட்டை கட்டி வை. யதார்த்தம்னு ஒண்ணு இருக்கு. நீ ஓடி ஒளிஞ்சாலும் மூஞ்சியைப் பொத்திண்டாலும் குத்துக்கல்லாட்டம் அது உன் கண்ணுக்குள்ளேயே முளைச்சு நிக்கும் பாரு.”
“குழந்தைக்குக் கொஞ்சம் விளக்குப் பார்வைன்னா அதுக்கு இப்படிக் குத்தம் அடிக்கிறதா? அதிர்ஷ்டமாக்கும் தெரிஞ்சுக்கோங்கோ!”
“யார் வேண்டாம்னா? அவளுக்கு அதிர்ஷ்டம் வந்தால் தான் நமக்கு விடுதலை. எங்கே விடுதலை? அப்புறம் இந்தக் கரடிக்குட்டி காத்துண்டிருக்கு. இதுக்கு எவன் லபிச்சிருக் கானோ?”
அப்பா அணைப்புள் நான் ஒடுங்கிக்கறேன், ஒளிஞ்சுக் கிறேன்.
என்னிக்கும் நான் அப்பா செல்லம்.
“மூத்ததுக்கு முன்னால் வழியைப் பாருங்கோ!”
தண்டவாளம் பின்னிக்கற மாதிரி அக்காவுக்குச் சில சமயங்கள் கண் ‘க்ராஸ்’ ஆயிடும். ஏதேனும் யோசனையா இருந்தாலோ, பார்வை ஒரு டத்தில் நிலைச்சுப் போனாலோ. வஸந்தீர் வஸந்தீ!” உரக்க அழைச்சு முகத் தெதிரே சண்டிகேசுவரர் சன்னிதி மாதிரி விரலைச் சுண்டிக் கலைச்சாகணும். சிமிட்டி தரை வெடிச்சாப்போல, முகத் தில் வேறே பரு வந்து வந்து, போய் போய் வந்து வந்து… இப்போ கொஞ்ச நாளா பல் வேறே எதோ தகறாறு பண்றது. நல்ல நாளுலேயே பல் மறைய வாயை மூட முடியறதில்லே. நான் அவளைக் கேலி பண்ணல்லே. பாவம்னு பரிதபிக்கவே மனசு கஷ்டப்படறது.
அன்னிக்கு அவள் மேலேயே காப்பியைக் கொட்டி னாலும் அக்காவுக்கு என் மேலே உசிர்தான். எனக்குப் பின்னிக் குளிப்பாட்டி, மூக்கைச் சிந்தி,பள்ளிக்கூடத்துக்கு உடுத்தி, என் ஹோம் ஒர்க்கைத் தான் எழுதிக்கொடுத்து- அக்கா எனக்குப் பிரியம் காட்டக் காட்ட என் ஆசைகளிலும் அசடு வழியும். திடீர்னு ஒரு ஏணை கட்டி என்னை அதில் போட்டு ஆட்டணும் என்பேன்.
“தூளிகட்டித் தூங்கித் துர்கனாக் காண இன்னும் ரெண்டு வயசு போகட்டும்!”
“என்னம்மா பெரிசா கேட்டுட்டா? ஆடிட்டுப் போறா!”
“நீ அவளுக்குத் தூளி கட்டி உன் கல்யாணத்தை எதிர் பார்த்து வாங்கின புடவையெல்லாம் பாழாப் போறது.
“போனால் போகட்டும் போ! பொத்திப் பொத்தி வச்சிண்டு என்னத்தைக் கண்டோம்?”
தூளிக்குப் பின்னால் அக்கா குரல் லேசா நடுங்கித்தோ? தூளியில் படுத்துண்டா நன்னாத்தானிருக்கு. ஆட்டறப்போ என்னவோ ஆகாசத்துலே மிதக்கறாப்போல், நானே என் உடம்பை விட்டுக் கயண்டு, என் பிறப்பின் திரண்ட எண்ணமா, இவ்வளவு பரந்த உலகத்துலே நான் எவ்வளவு பெரிய எண்ணமா இருக்க முடியும்? அணுவுக்கும் அணுவா யார் கண்ணுக்கும் தெரியாமல் என் மனசுக்கு மட்டும் தெரிஞ்சுண்டு பரந்த வெளியில் அது என்னை எடுத்துப்போற வழியில் மிதந்துண்டு என்னைப்போல், எனக்கு முன்னால் மொதக்கொண்டே, தரிஞ்சவாளும் தெரியாதவளுமாய் மிதந்துண்டிருக்கற வாளுடன் நானும் ஒருத்தியாய், கவிதை யாய். கதையாய், கற்பனையாய், மனசின் மகரந்தப் பொடி யாய்.
இதெல்லாம் இந்தப் பாஷையெல்லாம் எனக்கு அப்படி மிதக்கறப்போ வந்ததில்லை. மிதந்ததைப் பின் னால் ரொம்ப நாளுக்குப் பின்னால் நெனைச்சுப் பாக்கறப்போ தோணினது-
“ஜனனீ! தூங்கிட்டாயா?”
யாரோ தூளிக்குள் எட்டிப் பாக்கறா.
கண்ணை மூடிண்டு பாசாங்கு பண்றேன்-
அதில் –
என் கண் இமைமேல் ஒரு நெருப்புச் சொட்டு விழுந்து ஈரமாறது.
பயமாயிருக்கு.
ஏன்?
-யாரும் ஒத்தரையொருத்தர் கேட்டுக்கொள்ளாமல் ஆனால் வீடு முழுக்க மௌனத்தில் பரவிய ஒரே கேள்வி – வீட்டையே தன் கொக்கித் தலையில் ஏந்திக்கொண்டு-
அஹ் ஹா!
கெட்டி மேளம் கொட்றது. சந்தனம் ஜமக்காளத்தில் சேறு பாயுது. பூவும் அக்ஷதையும் எங்கு பார்த்தாலும் வாரி இறையறது.
ஒருவழியா வந்துடுத்து கல்யாணம். பங்குனி மாசம் பத்தாந்தேதி பருப்புக் கல்யாணம்! கூட்டம் தெரியறது. பந்திக்குப்பந்தி இட்ட எச்சில் காயுமுன் இலை மேல் இலை போட்டு – தரையில் காயாத ஒரு நசநசப்பு – எத்தனை ஊதுவத்தி ஏத்திவச்சு சாம்பிராணிப் புகை போட்டு என்ன? ஹும்-
“அம்மா,பாட்டி உங்கள் மடி ஆசாரம் எல்லாம் மலை ஏறிப்போச்சே!”
“அத்துரு இந்தக் கேள்வி கேக்கணும்னு காத்திருந் தையா? மூச்சு விட்றோமா பாருன்னு நாங்கள் இருக்கோம்! எல்லாம் பாலிகை தெளிச்சாச்சு – எல்லா தோஷத்துக்கும் நிவாரணி! அதைச் சொல்லு. எல்லாத்துக்கும் ஒரு பதில் வெச்சிருங்கோ எதையும் ஒத்துக்காதேங்கோ.
கலியாண கூடத்தில் ஒதுக்கமா ஒரு உள்ளே மட்டும் ப்ர மாதமா அலங்கரிச்சாறது. மத்தியானம் மூணு மணிலேருந்து நடக்கிறது. புதுசாக் கட்டில் பீரோ, ஆள் உயரத்துக்குக் கண்ணாடி. மெத்தை, தலகாணி, பக்கத்திலே டீபாய், கட்டில சுத்திப் பூச்சரங்கள் – பாக்கறதுக்கே ஆசையா யிருக்கு – கலர் பல்பு-
”இங்கே என்ன நடக்கப்போறது?”
கிழங்கள். நடுவயசுகள், சிறிசுகள் எல்லாம் ஒண்ணை ஒண்ணு பார்த்துண்டு திருட்டுத்தனமா சிரிச்சுக்கறதுகள்.
“என்னவோ நடக்கப்போறது. உனக்கென்ன இப்போ அதைப்பத்தி?
“காலால் பூமியை உதைக்கறேன்.”எனக்குத் தெரிஞ்சுக் கணும்
“அக்கா இங்கே படுத்துக்கப்போறா-”
“நானும் அக்காவோடு படுத்துப்பேன்-”
ஒரே ‘கொல்’!
“சொன்னாலும் சொன்னையே அப்படிச் சொல்லு-”
கையை முஷ்டித்துக்கொண்டு ஆட்டினேன்.
“ஆமாம் அப்படித்தான்.”
“அந்த ரெண்டுங்கெட்டானோட என்னடி பேச்சு. செல்லக் கேடே நாச்சியாரேன்னு இருக்கு அதுவும் -”
நிஜம்மாவே கவலை வந்துடுத்து. அக்காவை விட்டு ஒரு நாள்கூடப் பிரியாமல் இருந்துட்டு, இன்னிக்கு என்னமோ இவாள்ளாம் புதுசாக் கிளப்பறாளே!
கூடத்தில் ஒரு பக்கம் பந்தி. மறுபக்கம் கச்சேரி நடந் துண்டிருக்கு. அக்காவும் மாப்பிள்ளையும் சோபாவுலே உக்காந்துண்டு இந்த லோகத்து சிந்தனையே இல்லாமல் அப்படி இழைஞ்சுண்டிருக்கா. எனக்கு அழுகையே வந்து டுத்து. இப்படி ஒரு அக்ரமமா?
மணவறைக் கதவு. தொட்டதும் திறந்துக்கறது. தாளிட மறந்துட்டா. நானும் சத்தம் போடாமல் உள்ளே நுழையறேன். உள்ளே வெளிச்சம் திகுதிகுன்னு எரியறது. முழு அலங்காரமும் அப்போத்தான் முடிஞ்சிருக்கு. சுவத் திலே ரெண்டு மூணு படங்கள் புதுசா வந்திருக்கு. ஐயே! பிடிக்கல்லே படுக்கையில் பூக்கள் வேணும்னு சிதறிக்கிடக்கு. கட்டில் பக்கத்தில் டீப்பாய்மேல் வெள்ளிக் கூஜாவை துணியில் மணிதைத்து எம்பிராய்டரி கவர் மூடியிருக்கு திறந்து பார்த்தால், சேறாட்டம் பால். சாரைப் பருப்பு. குங்குமப்பூ மிதக்கிறது. பக்கத்துலே, கண்ணாடித் தட்டில் அடுக்கடுக்கா மைசூர்ப்பாகு. பால் பர்பி, பாதுஷா, குலோப் ஜாமுன், விஜிடபிள் சோமாசி,மங்கு மங்குனு அஞ்சு பந்து, திரட்டுப்பால் – ஐயோ! திரட்டுப்பால்னா நேக்கு உ உசிராச்சே!
பிட்டுப் போட்டுக்கறேன்.
ஆனால் திரட்டுப்பாலோடு நிக்கறதா? ருசி பார்த்தால் ஒண்ணையொண்ணு தூக்கியடிக்கிறது.கூஜாவை அப்படியே வாயில் கவுத்துண்டு சட்டையிலே சிந்திப்போச்சு – புதுச் சட்டை என்ன பண்றது? மெத்தையில் நீட்டிட்டேன் சும்மா ஒரு தடவை – என்கீழ் அழுந்தி மறுபடியும் ஏந்திக் கொடுத்த சுகம் இருக்கே, மல்லி மயக்கம் வேறே கண்ணைச் செருகிடுத்து.
முழிப்பு வந்தப்போ – யாரோ முரட்டுத்தனமாத்தான் எழுப்பியிருக்கா – என்னைச் சுத்திக் கூட்டம். கண்ணைக் கசக்கிக்கறேன். ஆமாம்,சாஸ்திரிகள். கலியாணப் பெண், மாப்பிள்ளை அம்மா, பின்னாலே நாலைஞ்சு பெண்டுக சிரிச் சுண்டு, குமுங்கிண்டு. அம்மா முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கறது. அப்படிக் குமுர்றா. மாப்பிள்ளே அசடு வழிஞ் சிண்டு நிக்கறார். அக்கா மூஞ்சிலே ‘ஆட்டோமெடிக் ஸிக்னல் அத்தனையும் விளையாடறது. தலை குனிஞ் சுட்டா. இது வேறே குனியல். கலியாணப் பெண்ணின் குனியல் இல்லை.
“Father bear”
“மதர் bear”
“பேபி bear; ஸம் ஒன் ஈஸ் ஸ்லிப்பிங் இன் மை பெட்!’
“ஏந்திரும்மா குழந்தை!” சாஸ்திரிகள்: என்ன கனிவு மெத்தையில் பட்சணம் சிந்திக்கிடக்கு.
“வாடி இங்கே!” பல்லைக் கடிச்சுண்டு அம்மா என்னைக் கரகரன்னு இழுத்துண்டு போறா.
“குழந்தையை ஒண்ணும் பண்ணாதேங்கோ!”
“ஒண்ணும் பண்ணாதேயா?” அம்மா என்னை இழுத் துண்டு போய், எனக்குத் தூக்கம் தெளியல்லே – ஒரு இருட்டறையில் தள்ளி மூஞ்சியிலும் முதுகிலும் மாரிலும் இங்கு தான்னு இல்லாமல் கண்ட இடத்தில் அடி அடின்னு அடிச் சிருக்கா பாரு, அடிச்சு, மண் மிதிச்சு-
“என்னடி உன் அக்காவுக்கு, நீ தங்கையா? சக்களத்தியா?”
என்னவோ எனக்குப் புரியாத வார்த்தை.
“அப்படியே சாவு! எனக்கு அக்கரையில்லை.” கதவை இழுத்து அந்தப்பக்கம் தாளிட்டுண்டு போயிட்டா.
அழுது அழுது வாயெச்சில் நூல் நூத்து, கண்ணீரும் எச்சிலுமா பரத்தியிருந்த உருளைக்கிழங்கு மேலே. அந்தக் கோஸ் நாத்தம், பச்சைமிளகாய் நெடி. நடுவில் தூங்கிப் போயிட்டேன்.
அக்காவை நான் பார்க்க முடியல்லே.
விடிகாலையில் வண்டி.
மாப்பிள்ளைக்குத் தூர தேசத்தில் மிலிட்டரியில் வேலை.
சிராய்ப்புகளுக்கு அம்மா தேங்காய் எண்ணெயைத் தடவிண்டே, ஏண்டி கலியாணச் சாப்பாடு சாப்பிட்டுட்டு காலையில் கண் முழிச்சது முதல் கொண்டு ஓயாத அரையல் மெஷின் – உனக்கு அந்தப் படுக்கையறைப் பட்சணத்துக்கு வயித்தில் எங்கேடி இடம் இருந்தது?”
“ஏன் அந்த அக்காவும் அத்திம்பேரும் அந்தக் கலியாணச் சாப்பாடு சாப்பிடல்லியா? அவா வயித்திலே ஸ்பெஷலா அந்தப் பட்சணத்துக்கு இடமிருக்கும்போது எனக்கு இருக்கப்படாதோ?”
இந்த மாதிரி கேள்வியெல்லாம் பெரியவாளால்தான் கேட்க முடியும்.
நான் பதில் பேசல்லே.
நெனச்சுண்டேன்.
“ஏன்னா?”
“என்ன?”
“கடிதாசிலே ஏதேனும் தெரியறதா?”
“என்ன தெரியணும்?”
“‘ஏதேனும் பொறி வெச்சிருக்காமா?”
அப்பா கடிதாசை உதர்றார்.
“கடிதாசி பொசுங்கினமாதிரி தெரியல்லியோ”
“இந்த இடக்கில் ஒண்ணும் குறைச்சலில்லே. வருஷம் அஞ்சாறது. அவாளும் இந்தப் பக்கம் திரும்பிப் பார்க் கல்லே. யார்மேல் குத்தமாயிருக்கும்?”
“பழிபோட தலைதேட ஆரம்பிச்சுட்டியா? நாட்டு நடப்பு நாம் படறது போதாதா? விட்டேத்தியாத்தான் இருந்துட்டுப் போறா.”
“அப்படி உண்டா என்ன?”
“ஆமாம், அப்படித்தான் போ!”
அம்மா ஏதோ முனகுகிறாள்.
ஆனால் இந்த ஐந்து வருடங்களில் என்னில் எவ்வளவு மாறுதல்! நான் முல்லைக் கொடியல்ல. ஆனால் உடல் உருவி வடிந்துவிட்டது. பிசிர்கள் மறைந்து எப்படி, எங் கெங்கே நிரவிக்கொண்டன? ஏதோ புனித நீரில் மூழ்கி, சாபம் தவிர்ந்து, சுயரூபத்தில் எழுந்தவள்போல், இளமை யின் செழிப்புடன் அழகின் மெருகேறி…
ஜனனியா? ஜனனிதானா இது?
தெரிந்தவர். தெரியாதவர் திருட்டுத்தனமாக திரும்பிங் பார்க்கையில் விழியாலேயே விழுங்கப் பார்க்கையில் அதில் ஒரு திருட்டுருசி, பெருமிதம் காணத்தான் செய்கிறது.
பள்ளியிலிருந்து திரும்ப ஒரு பத்து நிமிஷம் முன்னே பின்னே ஆனால், அம்மா வாசலில் பதறி நின்றுவிடுகிறாள். வெளியில் போகும்போதெல்லாம் விபூதியால் நெற்றியில் லேசாகத் தீட்டுகிறாள். சிவராஜ குருக்களின் யாகப்பிர சாதம், சர்வத்துக்கும் ரட்சை!” என்னைச் சுற்றி சுவர்களை எழுப்புகிறாள். நெருக்குகிறாள். அப்பாவும் அவளுடன் சேர்ந்துவிடுகிறார்.
“ஜனனி ! தங்க வளையங்கள் உன் காதுக்குப் பொருத்த மாத்தானிருக்கு. ஆனால் இசைகேடா நடுவழியில் மாட் முண்டே – எடுக்கறவன் வளையத்தை இழுக்கிறப்போ காது அறவும் வழியிருக்கு. தோடு, கம்மல்னா அவ்வளவு சுலப மில்லை.”
“ஜனனி! பிறந்த நாளைக்கு டாலர் செயின் வாங்கிக் காடுத்தேன். வாஸ்தவந்தான். ஆனால் மேலாக்குக்கு வெளியே ஏன் இழுத்து விட்டுக்கறே? உள்ளடங்கி இருக்க முடியாதா?”
“ஏம்பா,டாலர் பின்னே எப்படி வெளியே தெரியறது மறைச்சுக்கவா கொடுத்தேள்?”
“எடுக்கறவனுக்கு ‘இந்தா, இந்தா, இதோ இதோ’ என்கிறதுக்கு வாங்கிக் கொடுத்தேனா?”
“பின்னே ஆல்ட்பெர்ட்டா சிலுவை தெரியத்தானே செயினை வெளியில் விட்டுண்டிருக்காள்?”
”ஜனனி உன்னோடு பேசி மாளாது.”
அம்மா. கிறுக்கன் ஒருத்தன் கதை எழுதினான் பழக்கத்திலில்லாத பேரைச் சூட்டினால் பேருக்கேத்த குணத்தையும் நாம் அனுபவிக்க வேண்டியதுதான். அடங்காப்பிடாரி ஒரு அயிலாண்டம், எச்சுமி,வாலாம்பா,அல மேலுவிலே இருக்கிற பத்ரம்,நிற்பயம்,உங்கள் ஜனனி சந்திரிகா? சசிரேகாவில் கிடைக்கிறதா பாருங்கோ!”
அம்மாவின் ஆர்க்யுமெண்டிலும் கொஞ்சம் விஷயம் இருக்கும் போலத்தான் தோணறது. ஏன் எனின், இத்தனை எதிர்ப்புக்கு எதிராய், அழுது, அழுச்சாட்டியம் ஆஹாத்யம், அடாவடி பண்ணி கைகேசி பண்ணி, ஜனனி பண்ணி, கோடை விடுமுறைக்கு அக்கா ஊருக்குப் போக வரம் வாங் கிட்டேன். ரெண்டுபேருக்கும் என்னைத் தனியா அனுப்ப அரை மனசுதான் எனக்குத் துணை வர அப்பாவுக்கு லீவு கிடைக்காது. ரயில் சார்ஜ், ரயில்காரனுக்குக் கொள்ளை கொடுக்க ஐவேஜ் இல்லை. அம்மாவுக்கு அக்காவைப் பத்தி நேர்த் தகவல் தெரிஞ்சுக்கணும்னு எண்ணம். நடுவில் மாற்றல் ஏதும் கிடையாது . இங்கு பெண்கள் வண் ஏற்றிவிட்டால் நேராக அங்கு போய் இறங்க வேண்டியது தான். ஸ்டேஷனுக்கு வந்து அத்திம்பேர் அழைச்சுண்டுப் போறார். மனசு சமாதானம் பண்ணிக்க இதுதான் வழி. பண்ணிக்க முடியாவிட்டால் இரண்டுபேரும் திண்டாடுங்கள். அமுத்திப் பொத்தி வெச்சு அடைகாக்கிற நாளெல்லாம் அந்தக்காலம்.
அழைத்துப்போக இரண்டுபேருமே வந்திருந்தனர். அஞ்சு வருடமென்ன, ஐம்பதானாலும் அக்காவை எங்கு வேணுமானாலும் அடையாளம் கண்டுபிடித்து விடலாம். இப்போது கண்ணாடி போட்டுக் கொண்டிருந்தாள். அவர்கள் தான் என்னைப் பார்த்துச் சற்று திணறிவிட்டார்கள். எனக்கும் சர்ப்ரைஸ் பாக்கெட்டாக விளங்கத்தானே விருப்பம்!
அக்கான்னா அக்காதான்… அக்காவுக்கு என்மேலே உசிர்தான், அஞ்சு வருடம் பிரிஞ்சிருந்திருக்கோம். அந்தப் பக்கம் அத்திம்பேர் – மயிருக்கு மிஞ்சின கறுப்புமில்லை. மச்சினிக்கு மிஞ்சின உறவுமில்லை. பிரியத்துக்கும் உபசாரத் துக்கும் கேக்கணுமா? புதிதாகப் பேசுவதற்கும் பழைய நினைப்புகளைத் திருப்பிப் புரட்டவும் இந்த அஞ்சு வருடங் களில் எவ்வளவு சேர்ந்திருக்கும்! அக்காவின் மணவரையி என்னுடைய அட்வெஞ்சர் இப்போது எவ்வளவு பெரிய, சிரிப்பு! வாழ்க்கையிலே ஒரு நீண்ட சிரிப்பு என்கிற எடையை அடையும்வரை நமக்குத்தான் ஆயுசு இல்லை.
இவாள் குவார்டர்ஸில் இருக்கா. அண்டை வீடா னாலும் சரி, மாடியானாலும் சரி குடித்தனக்காரர்கள் ஒருவருக்கொருவர் தாக்கல் மோக்கல் இல்லை. தவிர தெற்கத்திப் பக்கத்திலிருந்து வந்தவாளைக் கண்டாலே ஸாதி வாலான்னு ஒரு இளப்பம் உள் பகை. மொத்தத்தில் ஓட்டுதல் கிடையாது.
இரண்டு இந்தி சினிமா பார்க்கலாம். நாலு நாளில் புதுமை தீர்ந்ததும் அக்காவும் அத்திம்பேரும் எப்படி இங்கே ஓட்டுகிறார்களோ? நீயும் நானுமடி எதிரும் புதிரு மடி”ன்னு.
மாற்றி மாற்றி ஆலு, ஆட்டாதான். டிக்கி, பாஜி. சப்பாத்தி, பூரி, சமோஸா, இதையே மாற்றி மாற்றி சாப் பாடாய் வாசி; டிபனாப் பார்த்துக்கொள்.
இந்த மண்ணுக்கு உருப்படியா காய்கறி ஒன்றும் வராது போலிருக்கிறது. ஏதேதோ கிள்ளிச் செடிகள், க்ரோட் டன்ஸ், மல்லி இன்னும் ஒன்றிரண்டு வாசனைப் புஷ்பங்கள். பயிர் போட்டுப் பராமரிக்கவும் பயம் – பாம்பு நடமாட்டம் அதிகமாம்.
இந்த மல்லிக்கும், நம் பூந்த மல்லிக்கும், மதுரை மல்லிக்கும் ஏக வித்தியாசம். வண்டு வண்டாய், பெருஞ் ஜாதி, நீல வெண்மையாய் – இதுவும் நல்ல வாசனைதான், மல்லிதான்.
அக்காவுக்கு முகம் இன்னும் ரொட்டிப் பொறுக்காய்த் தானிருக்கிறது. சளைக்கிறது. மறையறது. மறுபடியும் சளைக்கிறது.
ஓ மை டியர் யுவர் அக்கா!
கொல்லையில் மல்லிக்கொடி காடாய்ப் படர்ந் திருந்தது. ஸ்டூல் போட்டுப் பறித்தேன். நாற்காலி போட்டுப் பறித்தேன். அப்புறம் மேஜையைக் கொண்டு வந்தேன்.
“வீட்டில் ஒருத்தரும் இல்லையா? கேட்டுக்கொண்டே அத்திம்பேர் கொல்லைப்புறம் வந்தார்.
“ஹலோ பிரின்ஸஸ்!”
“என்ன அத்திம்பேர் இவ்வளவு சுருக்கு?
“பெரியதலை, எவனோ மண்டையைப் போட்டுட்டான் தகவல் வந்த மிச்ச நேரம் ஆஃப். என்ன திண்டாடறே?”
“எட்டல்லே அத்திம்பேர்!”
“கீழே இறங்கு!”
நான் முன்றானைத் தலைப்பை ஏந்திப் பிடிக்க, அத்திம் பேர் பறித்துப் போட்டுக்கொண்டிருந்தார்.
“வீட்டில் ஒருத்தருமில்லையா? கேட்டுக்கொண்டே அக்கா கொல்லைப்புறம் வந்தாள். “நீங்க எப்போ வந்தேள்? அத்திம்பேர் வாய்ப்பாடை ஒப்பித்தார்.
“இவ்வளவு பூ எதுக்கு?”
“தொடுத்தால் துளி ஆயிடும். உனக்கும் சேர்த்துத்தான்”
சூள் கொட்டினாள். ‘எனக்குப் பழக்கமில்லை. அலெர்ஜி.”
“உனக்கு வேணாட்டாப் படத்துக்குப் போட்டாப் போச்சு.”
அத்திம்பேரும் நானும் ஹாலில் பூத்தொடுத்துக்கொண் டிருந்தோம். அத்திம்பேருக்குப் பூத்தொடுக்கத் தெரியும் போலிருக்கு. அக்கா சமையலறையில் வேலையாயிருந்தாள்.
“எனக்கு ஒரு தங்கையிருந்தாள். உன் மாதிரிதான் இருப்பாள். மூளையில் கபம் தாக்கி மூணே நாளில் போயிட்டாள்.”
‘வீல்’ என்று அலறல் கேட்டு, கைக்காரியத்தை அப் படியே போட்டுவிட்டு உள்ளே ஓடினோம்.
அக்காவுக்கு முகம் பூரா மூக்குக்கண்ணாடி. பாழ்ம்பூ! பாழ்ம்பூ! எட்டு மைலுக் கெட்ட நின்றுகொண்டு காஸ்ஸ்டவ் மேடையடியில் சுட்டிக் காண்பித்துக்கொண்டிருந்தாள்.
அங்கு ஏக அடைசல். இரண்டு மூன்று மண் அடுப்பு. வென்னீர்த்தவலை, செங்கோட்டை தோசைக்கல், ஒன்றுக் குள் ஒன்று மூன்று இலுப்பச் சட்டிகள். வெட்டுக்கத்தி. தோட்டக் கத்திரி. சிமிட்டி வாணலி – அறுந்துபோன தாம்புக்கயிறு – அடுக்கிண்டே போகலாம். இங்கு எங்கானும் புகுந்துகொண்டு எட்டு நாளைக்குச் சவால் விடலாம்.
இருந்தாலும் ஒவ்வொன்றாய் ஜாக்கிரதையாக எடுத்துப் பார்த்தோம்.
“என்னடி காரியம் செஞ்சே ஜனனி! படிச்சுப் படிச்சு எத்தனை தரம் சொல்லியிருக்கேன்! கையோடு கொல்லைக் கதவை அடைச்சுண்டு வரணும்னு! இங்கே ஒண்ணு ஆள் புகுந்துடுவான், இல்லாட்டா பாம்பு. அதை அடிக்கவும் கூடாது. இந்தப்பக்கம் எல்லாரும் நாகத்தை வழிபடறவா. சரியான தண்டாவில் மாட்டி வெச்சுட்டே, வெளியிலும் துரத்த முடியல்லே. உள்ளேயும் வெச்சுக்க முடியாது. என்ன செய்யலாம்?’
நல்ல கதையாயிருக்கே. நீதானே கடைசயா கொல்லைப் புறத்திலிருந்து வந்தவள்! ஆனால் அவளோடு நான் தர்க்கம் பண்ணவில்லை. வீடு முழுக்க சலிச்சுப் பார்த்தாச்சு.
அத்திம்பேர் பெருமூச்செறிந்து நிமிர்ந்தார். “நான் நினைக்கறேன் வஸந்தி!” அறுந்த தாம்புக்கயிறை எடுத்து ஆட்டினார்.
“அப்போ நான் பொய் சொல்றேன் என்கறேளா?” அக்காவுக்கு உதடுகள் நடுங்கின.
அத்திம்பேர் தற்காப்பில் இரண்டு கைகளையும், “சரி சரி ஏதேனும் ஆரம்பிக்காதே… மறுபடியும் தேடலாம் என்றார்.
ஹால் பூரா மல்லி மணம். சிறு போராய் மல்லி குவிந்து கிடந்தது. இந்த ரகளையில் அதைத் தொடுக்க யாருக்கு மனம் வரும்?
நான் மலர்ந்து கொண்டேயிருப்பேன்.
ஆனால் யாருக்கும் கிடைக்க மாட்டேன்.
இது நடந்து அஞ்சு நாளாகியிருக்கும். மத்தியானம் அக்கா தபாலாபீஸுக்குப் போயிருந்தாள், கார்டு. கவர் வாங்க.
நான் புத்தக அலமாரியில் குடைந்து கொண்டிருந்தேன்.
“ஜனனீ! ஜனனீ!” அக்கா அவசரமாக வாசற் கதவைத் தட்டினாள்.
திறந்தேன். அக்கா முகம் சுண்ணாம்பாய் வெளுத்திருந்தது. கையில் தந்தி. பிடுங்கினேன்.
“மதர் ஃபெல் அக்ஸிடெண்ட் – ஸீரியஸ் ஸ்டார்ட் இமீடியட்லி.”
அக்கா கூடத்தில் உட்கார்ந்து அழ ஆரம்பிச்சாள்
எனக்கும் திக்பிரமை பிடித்தாற்போல் ஆகிவிட்டது. அக்கா என் தோளைப் பிடித்து உலுக்கினாள்.
“ஜனனீ! ஏதேனும் பேசேண்டி! என்னடி ஆயிருக்கும்?” என்னவாவது ஆயிருக்குமோ? என்னடி பண்றது? தொண்டைக் கீச்சில் இழுத்துக்கொண்டே போயிற்று.
“ஸ்டாப் இட்” கத்தினேன்.
“என்னடி செய்யலாம்?”
கிளம்ப வேண்டியதுதான். எப்படி? அத்திம்பேருக்குப் போன் பண்ணலாம்னா இங்க கிட்டே போன் கிடையாது. ஆபீஸ் இங்கிருந்து 20 கி.மீ. ஸ்கூட்டரில் போய்வருகிறார். இன்னும் ரெண்டுமணி நேரம்தான் இருக்கு ரயிலுக்கு. இதை விட்டால் அடுத்தது மறுநாள் இதே நேரத்துக்குத்தான். அதற்குள் என்னவோ? ஏதோ கடைசியில் இன்னிக்குக் கிளம்பி நான் முன்னால் போறது, மறுவண்டிலே அக்கா அவசியமானால் அத்திம்பேர் – ஊரும் வீடும் இருக்கும் அவந்தரைக்கு எல்லோரும் பூட்டிக்கொண்டுகிளம்ப முடி யாது – என்று முடிவாச்சு.
பாவம். எங்கிருந்தோ இந்த நேரத்துக்கு ஒரு ஜட்கா வைப் பிடிச்சுண்டு வந்தாள். அத்வானம் பிடிச்ச ஊர். கூட வந்து அவள் தான் ரயில் ஏற்றினாள். வண்டியைப் பிடிச்சதும் சினிமா சேஸ் மாதிரிதான். ஸ்டேஷன் மாஸ்டர் பெரிய மனசு பண்ணினார் ஆ. புவர் சைல்ட்! டொண்ட் வொரி. காட் ஈஸ் கிரேட்.” என்று தைரியம்கூடச் சொன்னார்.
இரவு பூரா தூக்கம் ஏது? இந்தச் சமயத்தில் அம்மாவின் நற்குணங்கள் சிந்தனையில் அனைத்தும்தான் மேல் எழுந்தன. வெகுளி, ரொம்ப அஞ்ஞானம். சாப்பிட உட் கார்ந்த பின் யாரேனும் கேட்டால் அலுக்காமல், மோருஞ் சாதத்துக்குப் புளித்துவையல் அம்மியில் இழைப்பாள். பிறர் கஷ்டம் தாங்கமாட்டாள். அவளுக்கு இப்படி நேர்ந்துடுத்து பார்த்தையா? மண்டையில் அடிபட்டிருக்குமா? இல்லே இடுப்பு பிராக்சரா? முருகா, மை பேவரட் காட். ஹேவ் மெர்சி ஆன் அஸ்!
பொல பொலவெனப் பொழுது புலரும் வேளைக்கு ஆட்டோ ரிக்ஷாவிலிருந்து வீட்டுக்கெதிர் இறங்கினேன்.
அம்மா வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். சத்தம் கேட்டு நிமிர்ந்தாள்.
“என்னடி ஜனனீ?”
எனக்குச் சட்டென்று பதில் வரல்லே. உள்ளே ஏதேதோ மூட்டங்கள் சரசரவெனப் பிரிந்துகொண்டிருந்தன.
“என்னடி திருதிருன்னு முழிக்கறே? எல்லாரும் சௌக் கியம்தானே?”
என்னிடமிருந்து ஒரு சிரிப்புப் புறப்பட்டது. அது எனக்கே புதிதாய்த்தானிருந்தது.
இதுமாதிரிச் சிரிப்பு இதுவரை நான் சிரிச்சதில்லே. விட்டுவிட்டு அல்ல. ஒரு நீண்ட உருட்டுச் சிரிப்பு. மேளத்துள் சதங்கைபோல் அதன் ரகஸ்யத்வனி எனக்கு மட்டும் ஒலித்தது.
– உத்தராயணம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: ஜூலை 1992, வானதி பதிப்பகம், சென்னை.
![]() |
லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (30 அக்டோபர் 1916 – 30 அக்டோபர் 2007) தமிழ் எழுத்தாளர். இவருடைய முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக ல.ச.ரா என்ற பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி…மேலும் படிக்க... |