வைகுந்த அம்மானை
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 26, 2024
பார்வையிட்டோர்: 730
(2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஓர் அந்தி நேரம்…
இன்றைக்குக் கொஞ்சம் பனியோடு சேர்ந்த குளிர்…
பழனி மாமன் தாழ்வாரத்தில் (இஸ்தோப்பு உட்கார்ந்திருந்தார். அவர் சமீபத்தில் நடந்த பல சம்பவங்களை அசை போட்டுக் கொண்டிருந்தார்.
சிதம்பரம் கங்காணி லயத்துக் காம்பராவிலிருந்து தோட்டத்து டிஸ்பென்ஸர் வந்து கொண்டிருந்தார். டிஸ்பென்ஸர் முகம் வாடியிருந்தது. ஏதோ குழப்ப நிலையில், கவலையோடு வருவது தெரிந்தது. பழனி மாமன் அருகில் சென்றார்.
“சலாம் தொரே…..! ஒங்களால முடிஞ்சதயெல்லாம் செஞ்சி….. நம்ம சிதம்பரம் கங்காணிய நீங்க தான் சொகமாக்கணும்…..!” என்று தயவோடு கேட்டார் பழனி மாமன்.
“சிலோன்ல இருக்கிற எந்த டக்டராலேயும் இனிமே சிதம்பரத்த காப்பாத்த முடியாது பழனி…..” என்றார் டிஸ்பென்ஸர்.
“அப்படி சொல்லாதிங்க ஐயாவு………! அவருக்கும் என் வயசு தானுங்களே..! அவருக்கு கல்யானமாகாத ஒரு மகளும் வீட்ல இருக்குதுங்க…….!” என்றார்.
“எனக்கும் அது தெரியும் பழனி…! இருந்தாலும் இந்த மாதிரி விசயத்துல யாரால் என்ன செய்ய முடியும்…..?” டிஸ்பென்ஸர் புறப்பட்டார்.
பழனி மாமன். சிதம்பரம் கங்காணி லயத்தை நோக்கிச் சென்றார். கங்காணியின் மகள் சிந்தாமணி தலைவிரி கோலமாக நின்றாள். வயிற்றை இறுக்கிப் பிடித்துக் கொண்டு ஆங்காரமாகக் கதறி அழுதாள்…….. மனதில் உள்ளதையெல்லாம் கொட்டிப் புலம்பினாள்…..
“அப்பாத…! அப்பா……..! ஏம்பா என்னைய வுட்டுட்டுப் போறீங்க…..? இந்த ஒலகத்துல எல்லாமே எனக்கு நீங்கதானப்பா…! நீங்க இல்லாட்டி போனா இனிமே நா யார அப்பான்னு கூப்பிடுவேன்….? இனிமே எங்க தான் போவேன்…? என்னாத்த செய்வேன்….?’
அவளின் பரிதாப நிலையைப் பார்க்க சகிக்காதவராய், பழனி மாமன் வீட்டுக்குள்ளே நுழைந்தார்.
சிதம்பரம் கங்காணி படங்குக் கட்டிலில் கிடந்தார். கழுத்துவரை கம்பளியால் போர்த்தியிருந்தார்கள்.
அவர் முகம் சுருங்கி வெளிறிப்போயிருந்தது. நெற்றி ஒடுங்கி, கண்கள் மங்கிப் போயிருந்தன. அவர் மிகக் கஷ்டமாக மூச்சு விட்டுக் கொண்டிருந்தார்.
மனைவி ராக்கி, தரையில் உட்கார்ந்திருந்தாள். கலங்கிய கண்களையும், மூக்கையும் துடைத்துக் கொண்டு, தொண்டையைக் கரகரத்துக் கொண்டிருந்தாள்.
பழனி மாமனுக்கு நன்றாகத் தெரியும்…… சாவை நெருங்குவது அடை மழையில் சுருட்டிப் படுத்துக் கொண்டு தூங்குவது போன்றதல்ல, அது இடியைப் போல ஒரு நொடியில் தாக்கி விட்டுப் போய்விடும்..!
இந்த நேரத்தில்….. சொந்தக்காரர்கள் தயாராக இருப்பது நல்லது……. நடக்கப் போகும் துயரச் சம்பவங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய நேரம் இது….
பழனி மாமன் சிதம்பரத்தின் மகன் ஆறுமுகத்தை ஒரு பக்கமாக அழைத்துப் பேசினார்.
“ஆர்மோம்……..! நா எதுவும் சொல்லத் தேவையில்ல, ஒனக்கு எல்லாம் தெரியும்…!”
“ஆமாங்க….. மாமா…! எனக்கு எல்லாம் வௌங்குது….. இருந்தாலும் எனக்கு நம்ப முடியல்ல….. எங்கப்பாவுக்கு இன்னும் வயசு இருக்குதே…?”
“இனி………. நம்பிக்கை இல்லே… நா சொல்றது புரியுதா மகனே….?”
“ஆமாம் மாமா…….!”
“தைரியமா இரு…! ஆம்பளைங்க அழுது பொலம்பறது கிடையாது..! எல்லாத்துக்கும் மொகம் குடுக்கணும்….! நீ தான் குடும்பத்துல மூத்த மகன் நீ…..! ஒங்கடன நீ ஒழுங்கா செய்யணும்…….!”
“மூணு தேங்கா ஒடைச்சி தலமாட்டுல வைய்யி….! குத்து வௌக்க பொருத்தி… மூணு திரி எரியிறமாதிரி….. தலமாட்டுல வைய்யி… வெளக்கு விடிய விடிய எரியணும்… முத்துசாமிய கூப்புட்டு வைகுந்த அம்மானை…….. பாடச் சொல்லு……..!”
கொஞ்ச நேரத்துக்குள்ளே இந்த ஏற்பாடுகள் எல்லாம் செய்து முடிந்தன……… முத்துசாமி வைகுந்த அம்மானையில் இரண்டு வரியைப் பாடத் தொடங்கினான்.
ராக்கி மார்பில் அடித்துக் கொண்டு அலறினாள், “அய்யோ சாமி அய்யோ சாமி…….! ஏந்தான் எவ்வாயில மண்ண போட்டீங்களோ…..!” இஸ்தோப்பில் உறவினர் யாவரும் நிற்கின்றனர். ஓடிப்போய் ஆறுமுகத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுகிறாள்.
“ஐயோ மகனே.! ஐயோ மகனே…….! அப்பாவுக்கு என்னா நடக்குது சாமீ?”
“அழுவாதீங்கம்மா அழுவுற சத்தம் அப்பாவுக்கு கேக்கக் கூடாது……!”
“நா அழுதா இந்த தோட்டமே கொள்ளாது! ம.கனே இந்த தோட்டமே கொள்…..ளா…து ம….க..னே….!”
பழனி மாமன் மெதுவாக வந்தார். ஆத்திரம் தாங்காமல் எரிச்சலோடு பார்த்தார்.
“பொலட்டுப் பொம்பளை…! கொஞ்ச நேரத்துக்கு பொறுத்துக்கோ…..! அப்புறம் வேண்டிய மாதிரி நீ கத்தலாம்……. யாரும் ஒன்னைய நிப்பாட்ட மாட்டாங்க…..இப்ப நிப்பாட்டு மூச்….!” என்றார் பழனி மாமன்.
“ஆமாங்க எசமான்..! நான் பொலட்டுக்காரி தான்…. நான் பொலட்டு பொம்பளை தான்..!” ராக்கி மூக்கைச் சேலை முந்தானையால் துடைத்துக் கொண்டு சொன்னாள்.
யாரோ திடீரென்று பழனி மாமனைக் கூப்பிட்டார்கள்.
“பழனி மாமோவ்…. வாங்க சுருக்கா……..!’ பழனி வீட்டுக்குள் ஓடினார். சிதம்பரம் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தார்.
பழனி அசந்து நின்றார்……..
“என்னா மாதிரி மனுஷன் நீ….! எவ்வளவு பெறுமதியான ஆள்…….! இப்படி ஒரு நெல ஒனக்கு வரணுமா…? என்ன செய்யிறது…….கடவுள் வுட்ட வழி…….. எல்லாரும் நீ போற வழியிலேதான் போகணும்…..! நல்லது……. நீ முன்னுக்கு போ…! நாங்க பின்னால வர்ரோம்…. புள்ளைகளா…. ! ஆர்மோம்……..! ராக்கி…! எல்லாரும் அப்பா கிட்டத்துல வாங்க… உசுரு போரதுக்கு முன்ன கொஞ்சம் கொஞ்சமா.. பால ஊத்துங்க ……..!”
ஆறுமுகமும், சிந்தாமணியும் பாலைப் பருக்கினார்கள். சிதம்பரம் கங்காணி கண்களைத் திறந்து ஆர்வமாக மகளைப் பார்த்தார். ரொம்பவும் கஷ்டப்பட்டுத் தன் கையை உயர்த்திச் சிந்தாமணியின் கையைப் பிடித்து ஆறுமுகத்தின் கையில் வைத்தார். ராக்கி இந்தக் காட்சியைப் பார்த்து செயலற்று நின்றாள்.
“ராக்கி…! எம்புள்ளைகளா..! பழனி அண்ணே…….எம் புள்ளை…க…..ளா?” அவர் குரல் கம்மியது….. அவர் கண்கள் மூடிக் கொண்டன. மூடிய கண்களிலிருந்து கண்ணீர் கசிந்தது.
பெண்கள் எல்லாம் சுற்றி உட்கார்ந்து கொண்டு அழுதார்கள்… ஒப்பாரிச் சத்தம் வீட்டை அதிர வைத்தது.
பழனி மாமன் அங்கு……. பலரையும் வழி நடத்திக் கொண்டிருந்தார். சொந்தக்காரர்களைக் கூப்பிட்டு மஞ்சளும்……. வெற்றிலையும் அரைத்து சாந்து பண்ணி…… சிதம்பரத்தின் கண்களிலும்… வாயிலும் வைத்து வெள்ளைத்துணியால் கட்டும்படி சொன்னார்.
சொந்தக்காரர்களுக்கும்… நண்பர்களுக்கும்……. கேதம் சொல்வதற்கு ஒருவரை ஏற்பாடு செய்தார். கேதம் சொல்லப் போகின்றவன்…. தலைப்பாகை கட்டக்கூடாது…. துண்டைத் தோளில் போட்டுக் கொண்டு செல்ல வேண்டும்….
சாவுத்தப்பு நடுச்சாமம் வரை அலறியது…… தப்புக்காரர்களில் ஒருவன் நவரத்தின ஒப்பாரி வைத்துப் பாடினான்.
சாவு வீட்டில் சமையலோ. சாப்பாடோ கிடையாது.. வெற்றிலை மட்டுமே பரிமாறினார்கள்…..
வெறுங்கைகளை நீட்டி நிற்க… துக்கம் விசாரிப்பவர்கள் அவர்களின் கைகளைத் தொட்டு மெளனமாக நகர்ந்து செல்வார்கள்.
சொந்தக்காரப் பெண்கள் கோடித்துணியும், அரிசியும், ஒரு பித்தளைத் தட்டில் எண்ணெயும் கொண்டு வந்தார்கள். அவர்கள் அங்கே ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கும் பெண்களோடு சேர்ந்து கொண்டார்கள். பழனி மாமன் சுறுசுறுப்பாக அங்கேயும்…. இங்கேயும் …….. ஓடிக்கொண்டிருந்தார். சொந்தக்காரர்களையும் வண்ணானையும் கூப்பிட்டு தேரு இல்லாட்டிப் போனா பாடை கட்டணும்!” என்றார்.
பிணப்பெட்டியை சுமந்து செல்வதற்கு ஒரு பல்லக்கு… மூங்கினால் செய்து வண்ணக் கடதாசிகளாலும் பூக்களினாலும் அலங்கரித்திருந்தார்கள்.
சிதம்பரத்தைக் குளிப்பாட்டி…. அவரது கல்யாண உடைகளை உடுத்தினார்கள். இறுதி யாத்திரை தயாராகியது. எல்லாப் பெண்களும் வெளியே வந்து ஒப்பாரி வைத்தார்கள். இப்போது தங்கள் மார்பில் அடித்துக் கொண்டு அழ வேண்டும். அவர்கள் ‘மாரடித்து’ ஓலமிட்டார்கள்…..!
“தூக்கிட்டுப் போற நேரம் பொம்பளைங்க கத்தக் கூடாது! எல்லாப் பொம்பளையும் நிப்பாட்!” பழனி மாமன்….. ஆக்ரோஷமாகக் கண்டித்தார்.
“ஆர்மோம்! நீ தலப்பக்கம் தூக்கு!….. ஒறவுக்காரவங்க கால்மாட்டுப் பக்கம் நின்னு கால்களைத் தூக்கி மெதுவா…. பணிச்சி…. பொட்டிக்குள்ள வைய்யிங்க…! எல்லாரும் சரியா……..? பொட்டிய மூடுறதுக்கு முன்ன…. கடைசியா எல்லாரும் ஒருதரம் பாத்துக்க…..!” என்றார் பழனி மாமன்.
சிந்தாமணி பெட்டி மேலே வந்து விழுந்தாள்… ராக்கி பைத்தியக்காரியைப் போல கைகளை விரித்துக் கொண்டு “அப்பாவ….. ஏண்டாசாமி தூக்கிட்டுப் போறீங்க….!” என்று மகனைக் கட்டிப்பிடித்தாள்.
பழனி மாமன் கடுமையாகினார். “அங்க யாரு……? பொட்டிய மூடு மன்ஷன்……! ஆர்மோம்..! ஒங்கம்மாவ வூட்டு உள்ளுக்கு கூட்டிக்கிட்டு போ…..! இப்ப தெரைய மூடு தூக்கு நடயை கட்டு….! சுருக்கா சுருக்கா…..!” என்றார்.
தப்புச் சத்தம் ஓங்காரமாகியது…. சிதம்பரம் கங்காணியின் உடல் சுடுகாட்டை நோக்கியது….! ஆண்களும் பெண்களும் நிறைந்த மரண ஊர்வலத்தை, தப்புக்காரர்கள் வழி நடத்தி முன்னே சென்றார்கள்.
பாதை நெடுக ஒருவன் பொரி இறைத்துக் கொண்டு சென்றான்…
மரண ஊர்வலம் பாதி வழி சென்று கொண்டிருந்தது. வீட்டுக்கும் மயானத்துக்கும் இடைப்பட்ட பாதையில் ஒரு முச்சந்தி வரும். அதற்குப் பெயர் ‘பாடை மாத்தி’ அங்கே…. கொள்ளிக் குடம் உடைத்து…. ராக்கிக்கு முக்காடு போர்த்தி, மறைத்து, அவளைத் திரும்பிப்பார்க்க விடாமல் வீட்டுக்குத் தள்ளிக் கொண்டு சென்றார்கள், அவளோடு வந்த பெண்கள்.
பழனி மாமன் எல்லாப் பெண்களையும்… இந்த முச்சந்தி பாடை மாத்திக்கு அப்பால் வரவேண்டாம்.. என்று அனுப்பிவிட்டார்.
பாடை மாற்றியில் பாடையை மறுபக்கம் மாற்றிச் சுமந்து சென்றார்கள். பாடை மாற்றி வரை, வீதியைப் பார்த்தபடியும் அங்கிருந்து காட்டைப் பார்த்தபடியும் பிணத்தைச் சுமந்து செல்வார்கள்….. அந்த ஊர்வலத்தில்….. இப்போது ஆண்கள் மட்டுமே சென்றார்கள்.
ஊர்வலம் சுடுகாட்டைச் சென்றடைந்தது. பாடையை இறக்கினார்கள். பழனிமாமன் சுடுகாட்டின் கிழக்குப் பக்கமாய் நின்று கொண்டு அவர்களை இயக்கினார்.
“பொணத்துக்குச் சொந்தக்காரன்க….. முன்னுக்கு வா! சுருக்கா…… தேருலயிருந்து பொட்டிய எறக்கு! எங்கடா…..? வண்ணான்….. பரியாரி…? வந்து வேலையைக் கவனி………!
தேரிலிருந்து பிணப் பெட்டியை இறக்கினார்கள். வண்ணான்…. சிதம்பரத்தின் உடைகளை மாற்றினான். பரியாரி…. கங்காணியின் காதுகளிலிருந்த கடுக்கன்களையும்… மோதிரம்….. இடது கையிலிருந்த வளையல், இடையிலிருந்த வெள்ளி அரைஞாண் கொடி…. (அருணாக்கொடி) எல்லாவற்றையும் கழற்றினான்.
மயானத்துச் சடங்குகள் முடிந்தன. பெட்டியைக் குழிக்குள் இறக்கினார்கள். மூத்த மகன் ஆறுமுகம் முதலாவதாகப் பிடி மண் தள்ளினான். மற்றவர்கள் அவனைத் தொடர்ந்தார்கள்……..
“ஆர்மோம்! மொட்டையடிச்சிட்டு ஒரு கலயம் தண்ணியோட வரணும்…… இங்க…. குழிமேட்ட சுத்தி கொள்ளிக்குடம் ஒடைக்கணும்……!” கட்டளையிட்டார் பழனி மாமன்..
ஒரு சில நிமிடங்களுக்குள் மொட்டையடித்துக் கொண்டு தண்ணீர் கலயத்தோடு ஆறுமுகம் வந்து நின்றான். குழி மேட்டைச் சுற்றி நீர் கலயத்தோடு ஆறுமுகம் செல்ல….. பரியாரி அவன் பின்னால் கலயத்தை ஒரு சுற்றுக்கு ஒரு கொத்துக் கொத்தி…. தண்ணீர் பீலியாய் வடிய… மூன்று முறை சிதம்பரத்தின் குழி மேட்டை வலம் வந்தார்கள்.
மயானச் சடங்குகள் முடிந்தன
வழமையாகக் ‘கட்டமொய்’ பிடிக்கும் சந்திப்புப் பாதையில் வண்ணான் ‘வெள்ள மாத்து’ விரித்தான். எல்லோரும் உறவு முறைப்படி வந்து உட்கார்ந்தார்கள். “இப்ப கட்ட மொய் புடிக்கிறோம்! சொணங்கக்கூடாது!” என்றார் பழனி மாமன். ‘கட்டமொய்க்காக’ ஒவ்வொருவரும் இருபத்தைந்து சதம் வழங்க வேண்டும். பாபர் சம்பளம்….. டோபி சம்பளம்…. தப்படித்தவர் சம்பளம்….. குழி வெட்டியவர் சம்பளம்….. என்று இந்த மொய்க் காசிலிருந்து பகிர்ந்து கொடுக்கப் படும்.
கட்ட மொய் மூலம் திரட்டிய பணத்திலிருந்து எல்லோருக்கும் சம்பளம் வழங்கினார்கள்….
கூட்டம் அவசரமாகக் கலைந்து வீட்டை நோக்கியது.
அவசர அவசரமாகக் குளித்து, உடைகளை மாற்றிக் கொண்டு வீட்டுக்குச் சென்றார்கள்….
ஆறுமுகத்தை பாதுகாவலாக பழனி மாமன் கூட்டிச் சென்றார்.
மரண வீட்டு வாசலில் ஒரு தட்டில்…. ஒரு பிடி சாம்பலும் ஒரு செம்பு நிறைய தண்ணீரும் வைத்திருந்தார்கள்.
காட்டுக்குச் சென்று குளித்துவிட்டு வந்தவர்கள் அந்தச் சாம்பலைத் தொட்டுத் தண்ணீரில் கலந்து தலையில் தெளித்துக் கொண்டு வீட்டுக்குள் போனார்கள்.
ஆறுமுகத்தின் தாயும்…. தங்கையும் சிந்தாமணியும்……. கொஞ்சம் நேரம் அழுதார்கள்.
***
கருமாதி…
முப்பதாம் நாள் கருமாதி வைத்திருந்தார்கள். சட்டி, பானை…. தட்டு முட்டு சாமான்கள்….. எல்லாவற்றையும் கழித்துவிட்டுப் புதிய பாத்திரங்கள் வாங்கி வந்தார்கள்.
பாய் தலையணை எல்லாவற்றையும் அப்புறப்படுத்தி எரித்தார்கள்….. வெள்ளையடித்து வீட்டைத் தூய்மைப் படுத்தினார்கள்.
அந்த வீடு… முற்றாகத் தோஷம் கலைந்த ஒரு புதிய வீடாக மாறியது……
வந்திருந்த சொந்தக்காரர்கள் யாவரும் இஸ்தோப்பில் கூடினார்கள். பழனி மாமனும்… கணக்காக நேரம் பார்த்து வந்தார். அவருக்கென்று ஒதுக்கியிருந்த அந்த மரியாதைக்குரிய ஆசனத்தில் அமர்ந்தார்.
“பங்காளிவூட்டு சனங்க எல்லாம் ஒக்காருங்க….! மொதலாவது எண்ணெய் தலைக்கு பூசிக்குவோம்….!” என்றார் பழனி மாமன். தாய்வழி, தகப்பன் வழி, மாமன், மச்சான்மார்கள் வரிசையாக வந்து அமர்ந்தார்கள். ஆறுமுகம், ஒரு துண்டை இடையில் கட்டிக் கொண்டு வந்தமர்ந்தான். எல்லோரும் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் கொண்டார்கள். குளித்துவிட்டு உடைகள் மாற்றிக் கொண்டு திரும்பவும் வந்து உட்கார்ந்தார்கள்.
சாயங்காலம்……..
விளக்கு வைக்கும் நேரம்……
படைத்தல் ஆரம்பமாகியது… சிதம்பரத்தின் ஆன்ம சாந்திக்காக படையல் வைத்தார்கள்.
சிதம்பரத்தின் உடைகள், அவர் உபயோகித்த பொருட்களைப் படையலின் அருகில் வைத்திருந்தார்கள்… சோறு, கறி வகைகள், திறந்து வைக்கப் பட்ட ஒரு போத்தல் சாராயம் யாவும் அவர் கடைசியாக உயிர் விட்ட இடத்தில் வைக்கப் பட்டிருந்தன.
ராக்கியும், சிந்தாமணியும், ஆறுமுகமும் குத்து விளக்கேற்றி வணங்கினார்கள்.
இரவு ஒன்பது மணியளவில்….. சாராயம், கோழிக்கறியோடு விருந்து ஆரம்பமாகியது….
சாப்பாடு முடிந்த பின்னர் ‘தலைப் பாகைகட்டும்’ சடங்கு ஆரம்பமாகியது.
மச்சினன்மார்களும், மச்சான்மார்களும் ஆறுமுகத்துக்குத் மச்சான் மார்கள் சம்மந்தி வீட்டுக்காரர்களுக்கு தலைப்பாகை கட்டினார்கள்….
தலைப்பாகைக் கட்டினார்கள்.
இனி…..இன்னும் ஒரு வருசத்துக்கு அந்த வீட்டில்….. கலியாணம், களியாட்டங்கள் எதுவும் நடைபெறாது. பொங்கல், தீபாவளி, திருவிழா எந்த பண்டிகையும் அந்த வீட்டில் நடக்கக் கூடாது.
பழனி மாமனுக்கு நியதிகளில் நம்பிக்கை உண்டு. வாழ்க்கை என்பது….. மரணத்தோடு பின்னிப் பிணைக்கப் பட்டிருக்கின்றது…. மரணத்திலிருந்து.. வாழ்க்கையைப் பிரிக்க முடியாது …. வாழ்க்கையிலிருந்து மரணத்தைப் பிரிக்க முடியாது. மரணத்துக்குப் பிறகும் மீண்டும் வாழ்க்கை உண்டு.
அவர் அந்த வீட்டை விட்டு புறப்படுமுன் சிந்தாமணி அன்று அழுத வார்த்தைகளை நினைவூட்டிப் பார்த்தார்.
‘இனி யாரை அப்பான்னு கூப்பிடுவேன்…….?”
அவளது வேதனை மிகுந்த முகம் அவர் முன்னால் தெரிந்தது. அவர் ஒரு கணம் நின்று…. அவளிடம் ஆதரவாகப் பேசினார்.
“மகளே…! கடவுள் ஒன்னை காப்பாத்துறதுக்கு இருக்கார்……. இப்ப…..என்னாலே எதுவும் சொல்ல முடியாது. அடுத்த வருசம் நிச்சயம் இந்த வூட்டுல நல்லது நடக்கும்……”
அவர் உணர்ச்சி வசப் பட்டவராய், சிந்தாமணியின் தலையைத் தடவிவிட்டு, வேகமாக நடந்தார்.
– ஆங்கில தொகுதி: When death comes, Born to labour [by] C.V.Velupillai, Publisher: M.D.Gunasena & Co., 1970.
– தேயிலை தேசம், ஆங்கில மூலம்: சி.வி.வேலுப்பிள்ளை, தமிழில்: மு.சிவலிங்கம், முதற் பதிப்பு: பெப்ரவரி 2003, துரைவி பதிப்பகம், கொழும்பு.