கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 3, 2024
பார்வையிட்டோர்: 903 
 
 

(2008ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  

அலுவலகம் முடிவடைந்து வெளியே வந்தவன் அரை மணி நேரமாகியும் பேரூந்து வராததனால் பெரூமூச்சொன்றை வெளியேற்றினான். மொழிவாணனுக்கு கை நிறைந்த சம்பளம், கௌரவமான வேலையென்று இருந்தும் போக்குரவத்து அவனுக்கு மிகப் பெரிய பிரச்சினையாகி விட்டிருந்தது. 

நீண்ட தூரப் பயணம் ஒருபுறம். மிகக் குறைந்தளவு எண்ணிக்- கையான பேருந்துகளே அந்தப் பாதையில் போய் வருவது வழமை. ஒன்றைத் தவறவிட்டாலும் அடுத்த பேரூந்துக்காக ஒரு மணி நேரம் தவம் இருக்க வேண்டும். வீட்டிலிருந்து வேலைக்குப் புறப்படும் போது மலர்ந்தும் மலராத ரோஜாவைப் போல இருக்கும் அவன் அலுவலகம் முடித்து வீடு திரும்புகையில் இதழ் உதிர்ந்து முட்களை மட்டுமே சூடிய காம்பைப்போல ஆகி விடுகிறான். 

அலுவலகத்திற்கும் அவனது வீட்டிற்குமிடையே ஒன்றரை மணி நேரப் பயணம். எவ்வளவு முடி யுமோ அவ்வளவு பயணிகள் நசுக் கப்பட்டு வண்டியுள்ளே திணிக்கப் பட்டிருக்க விழி பிதுங்கிய பயணிக ளோடு நடக்கின்ற பயணப் போரா- ட்டம் இவனது அன்றாட நிகழ்வு. 

இன்றும் அப்படித்தான். நூலிலே பறந்து கொண்டிருக்கும் பட்டம் போல பேரூந்தின் கைப் பிடியிலே தொங்கிக் கொண்டு அலுவலகம் முடிந்து திரும்பிக் கொண்டிருந்தான். யாரோ அவனது தோளைத் தட்டுவது போல் இருந்தது. ஒற்றைக் கையை கஷ்டப்பட்டுக் கீழிறக்கி பணப்பையும் தொலைபேசியும் இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொண்டான். “என்னடா மொழி இங்காலை?” 

தலையை நிமிர்த்தி எட்டிப் பார்த்தா அருகிலே பள்ளித் தோழன் திலிபன்.

”வேலைக்குப்போய்ட்டு வாறான்”

“எங்க வேலை செய்யிறா?”

மூச்சு விடச் சிரமப்பட்டாலும் கூட ஆவலாகக் கேட்டான் வேலையில்லாத பட்டதாரியான திலிபன். 

“மஸ்கன் அன்கஸ்கன் கொம்பனி” 

“அங்கேயே வேலை செய்யுறா?…” இன்னும் ஏதோ சொல்ல வந்தவன் பேச்சை நிறுத்தினான் அல்லது மாற்றினான் என்று தான் என்று தான் கூற வேண்டும். பின் சிறிது மௌனத்தின் பின் திலிபன் தொடர்ந்தான்.

“நல்ல கம்பனி தான் ஆனால் இவ்வளவு தூரம் பிரயாணம் செய்யிறது கொலைக்கு ஒப்பானது” 

“தூரம் கூட எண்டதையா சொல்றா” சிரித்தபடி புருவத்தை உயத்தினான் மொழி 

“அது மட்டும் இல்லை எப்ப பார்த்தாலும் எங்கயாவது வெடிக்குது இதுகளில் பயணம் செய்யிறது ஆபத்தத்தானே அதுவும் மணித்தியாலக் கணக்கா பயணம் செய்யிறது எண்டா வேலையை எப்படிச்சொல்லுறது” 

“நீ சொல்றது சரிதான் ஆனா…. மிகுதியை முடிக்கும் முன்னமே தொடர்ந்த திலிபன் நான் சொல்றதைக் கேள். உன்னை நம்பிக் கணபேர் இருக்கினம். பக்கத்தில் ஒரு வேலையைத் தேடி எடு இந்த வேலையை விடு பதிலேதும் கூறவில்லையென்றாலும் மொழிவாணனுக்குப் பயம் தொற்றிக் கொள்ள சுற்றுமுற்றும் ஏதாவது பொதிகள் இருக்கிறதா என்று பார்வையால் தூளாவினான்.

“அடுத்த தரிப்பிடத்தில் இறங்கப் போறன் மச்சான் நான் சொன்னதை யோசி…. காசு வரும் போகும் உயிர் போனா வருமோ…? நல்லா யோசி என்று விட்டு இறங்கிப் போய் விட்டான் திலிபன். 

அன்று இரவு முழுவதும் தூக்கத்தை தூரத் தள்ளி வைத்த விட்டு யோசித்தான். அவளை நம்பி கலியாணக் கனவிலே உலா வரும் இரு தங்கைகள். அவனுக்கு அருகிலே குண்டு மல்லிகைப் பூப்போல உறங்கிக் கிடக்கும் நாலு மாத இலக்கியா. கண் இமைக்குள் தன்னை சிறை வைத்திருக்கும் மனைவி கிருஷாந்தி. இவர்களையெல்லாம் இடை நடுவே விட்டு விட்டு உயிரை விடுவதா? அல்லது வேலையை விடுவதா? யோசித்தபடி தூங்கியவனுக்கு வந்த கனவுகள் கூட பேரூந்து வெடிப்பதைப் போலவும், இரத்தம் வடிவதைப் போலவுமே இருந்தது. சாமத்திலே எழுந்து பதவி விலகல் கடிதத்தை எழுதி முடித்த பின்னாலே தூக்கம் அவனை ஆட்கொண்டது.

மேலதிகாரியின் குளிரூட்டிய அறையுள் நிண்டும் கூட அவனுக்கு வியர்த்துக்கொண்டிருந்தது. 

தனது செருமலால் மொழிவாணனின் மௌனத்தைக் கலைத்துக் கொண்டார் மேலதிகாரி மதியழகன். 

“ஏன் திடீரென்று இப்படி ஒரு முடிவை எடுத்திங்கள்?…” 

“அது வந்து..” பயம் எண்டு சொல்ல விரும்பினாலும் கூட வெட்கம் அவனை மண்டியிட வைத்தது. அதனால் மெளனத்தை விடையாக்கினான். 

“இப்படி ஒரு வேலை இவ்வளவு நல்ல சம்பளத்தில கிடைக்க எத்தனை பேர் உங்களுக்கு பின்னால் காத்துக் கிடக்கிறாங்கள். உம்மிலை அனுதாபப்பட்டுச்சொல்லுறன்”

இடை மறித்த மொழி 

“மன்னிக்கோணும் இதற்கு மேல என்ன ஒண்டும் கேக்காதையுங்கோ” என்றவன் அலுவலகத்தை விட்டு வெளியேறிய பின்பே நிம்மதிப் பெருமூச்சை விட்டான். 

இந்த ஒரு மாதத்தில் அவனது நடைப் பயணம் தனது இலக்கை நிறைவு செய்யாமலே தொடர்ந்தது. சென்ற நேர்முகப் பரீட்சைகளிலும் எல்லாம் ஒரே கேள்வியத் தான் திரும்பத் திரும்பக் கேட்டார்கள். மஸ்கன் அன் கஸ்கன் கம்பனியை விட்டு எதற்காக விலகிப் போனீர்கள் என்பதே அக்கேள்வி. 

தனது நடத்தை மீது விழுந்த சந்தேகக் கீறலை துடைக்க ஒரே வழி மேலதிகாரி மதியழகன் மூலம் ஒரு நற்சான்றிதழ் பெறுவதே என்பதை உணர்ந்தவன் மஸ்கன் அன் கஸ்கன் நோக்கி விரைந்தான். 

வாயிற் காவலன் அவனைப் புன்னகைத்து வரவேற்றான். 

“ஏன் ஐயா திடீரென்று விலகினீங்கள்?” அக்கறையோடு வினாவினான் அவன். 

மெளனம் எனும் பதிலே அவனுக்கு இப்போதும்துணைக்கு வந்தது.

தொடர்ந்தான் காவலன். 

“இப்ப உங்க இடத்தி வேலை பார்க்கிற திலிபன் ஐயா ரொம்ப மோசமுங்க. எதுக்கெடுத்தாலும் ஏரிஞ்சு விழுறார்’ 

மூளையிலே பொறி ஒன்று தட்டியது மொழிவாணனுக்கு “என்ன சேர் சொன்னியள்” அவசரமாகக் கேட்டான்அவன். 

”உங்கட பழைய கூட்டாளி திலிபன் தான் ஐயா….” 

தலையில் அடித்தான் மொழிவாணன். ஒன்றும் புரியாத காவலன் மொழிவாணனைப் பார்த்தான். தன் மீது கொண்ட திலிபனின் அக்கறைக்கான அர்த்தத்தை அறிந்தவன் அலுவலகத்திற்குள் நுழைந்து கொள்ளாமலேயே வெளியேறிக் கொண்டிருந்தான். 

– இருந்திறம் 20-06-08

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *