வேரும் வாலும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 14, 2025
பார்வையிட்டோர்: 273 
 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு ஊர்ல ஒரு ஏழப் பெராமணன் இருந்தர். தெனந்தோறும், காலைல, கடல்ல போயிக் குளிச்சுட்டு, தொழுக செய்வானாம். இந்தப் பெராமண் செய்யுறத, ஒரு மெதல, கண்காணிச்சுக்கிட்டு வருது. அந்த மெதல, பெராமணனப் பிடிச்சு, திண்டுபிடணும்ண்டு நெனச்சு, அவ போறத – வர்ரதப் பாத்துக்கிட்டே இருக்கு. 

ஒருநா வேளயில், மெதல கடலவிட்டு வெளியேறி, பெராமணன் வர்ர வழியில போயிப் படுத்துக்கிருச்சு. பெராமணன் அந்த வழியா வந்தர். வழியில மெதல படுத்துக் கெடக்கு. கிட்டப் போறா. போகவும், 

ஏ…. பெராமணனே!! குளிக்கப் போறது போற. என்னால நடக்க முடியல. என்னய தூக்கிட்டுப் போயி, தண்ணிக்குள்ள விட்டுருண்டு சொல்லுது. பாவம்ண்டு நெனச்சு, மெதலய தூக்கிப் பாத்தா. தூக்க முடியல. வாலப் புடிச்சு இழுத்துட்டுப் போயி, தண்ணி ஓரத்ல விட்டர். 

விடவும், வந்தது வந்துட்ட, கொஞ்சந் தள்ளிக் கொண்டு போயி விடுண்டு மெதல சொல்லுது. சொல்லவும், இடுப்புத் தண்ணிக்குக் கொண்டு போறா. இன்னுங் கொஞ்சந் தள்ளிக் கொண்டு போயி, விட்டுருண்டு சொல்லுது. 

கழுத்து தண்ணிக்குள்ள கொண்டு போயி விட்டர். விடவும், பெராமணனே!! தெனோங் குளிச்சுக் குளிச்சு ஒடம்பச் சுத்தமா வச்சிருப்ப, ஒன்னய முழுங்க ஆசயா இருக்குண்டு, மெதல சொல்லிச்சு. நாலு பேருகிட்ட நாயங் கேப்போம். அவங்க, என்னய, முழுங்கச் சொல்லிட்டாங்கண்டா, என்னய முழுங்கலாம்ண்டு, பெராமணன் சொல்றா. சொல்லவும், ஆருகிட்ட போயிக் கேப்போம்ண்டு, பேசிக்கிட்டே கரைக்கு வந்தாங்க. 

கடக்கரயில, ஒரு நரி, நண்டு புடுச்சு, திண்டுகிட்டிருந்திச்சு. நரிகிட்டப் போயி, நரியண்ணே! நரியண்ணே!! இந்த மெதல, பாதயில் நடக்க முடியாமக் கெடந்திச்சு. என்னய தூக்கிட்டுப் போயி, தண்ணிக்குள்ள விடச் சொல்லுச்சு. தூக்கிட்டுப் போயி விட்டே. இப்ப என்னய முழுங்கணும்ண்டு சொல்லுது மெதல. இதுக்கு நிய்யிதர். நாயஞ் சொல்லணும்ண்டு, சொன்னர். சொல்லவும். 

நரி, ஏர்த்து, ரெண்டு பேரயும் பாத்துச்சு. அப்ப, மெதல வாயத் தொறந்துகிட்டிருந்திச்சு. பெராமணன் பரக்கப் பரக்க முளிச்சுக் கிட்டிருக்கா. பெராமணன் மேல எரக்கப்பட்ட நரி, பெராமணன, மெதலகிட்டிருந்து காப்பாத்த நெனச்சுச்சு. அதுனால, அவங்கிட்டப் போயி, பெராமணனே!! எப்படி இத்தம் பெரிய மெதலய, அங்கிருந்து தூக்கிட்டு வந்த, நர் இத நம்ப மாட்டேண்டு, நரி சொல்லுது. உம்மயா நீ, தூக்கிட்டு வந்திருந்தயிண்டா இப்ப தூக்கிட்டுப் போயி, அந்தப் பழய எடத்ல போடு பாக்கலாம்ண்டு சொல்லுச்சு. பெராமணன், மெதலயப் புடுச்சு இழுத்துக்கிட்டுப் போயி, பழய எடத்ல போட்டா. 

போடவும், அட மூடப் பெராமணனே! திரும்பிப் பாக்காம, ஓடுராண்டு நரி சொல்லுச்சு. சொல்லவும், பெராமணன், திரும்பிப் பாக்காம, வந்த வழியா ஓடிப் போயிட்டா. 

நரியே!! என்னய ஏச்சுப் பிட்டயில. ஒன்னயப் புடுச்சு முழுங்கல, நர் மெதல வகுத்ல பெறக்கலண்டு, மெதல வம்மம் முறுத்திச்சு. மெதலயாரே!! என்னய, முழுங்க முடியாதுண்டு, நரி திருப்பிச் சொல்லுது. 

அண்ணயில இருந்து, மெதல, நரிமேல கண்ணா இருந்திச்சு. நரிச் சத்தங் கேட்டுச்சுன்னா, மெதல அந்தப் பக்கம் போயிரும். இத நரி பாத்துச்சு. சரி, இப்டியா இருக்க. ஒன்னய ஏக்கிரே பாருண்ட்டு, ஒரு பக்கத்ல போயி கத்றது, மறுபக்கத்ல போயி, நண்டு பிடிச்சுத் திங்கிறது. இப்டி மெதலய ஏச்சுக்கிட்டே… நரி, நண்டு புடுச்சுத் திண்டு கிட்டிருந்திச்சு. நரியோட தந்திரத்த, மெதலயும் கண்டுகிருச்சு. அண்ணக்கிருந்து, ஒரு பக்கத்ல ஊ…ஊ ஊ ண்டு கத்துறது. கத்திட்டு, மறுபக்கத்ல போயி, நண்டப் புடிச்சுத் திண்டுபிட்டுப் போயிறது. இப்டி இருக்கயில, மெதலயும் தெரிஞ்சுக்கிருச்சு. நரி, ஏக்கிதுண்டு தெரிஞ்சுகிட்டு, ஒருநா, ஒரு பக்கத்ல நரி கத்திச்சு. ஆனா மெதல அங்க போகாம, எதுத்த பக்கத்துக்குப் போயி, தயாரா இருந்திச்சு. இருக்கயில, நரி வழக்கம் போல, இந்தப் பக்கத்ல கத்திட்டு, அந்தப் பக்கத்துக்குப் போச்சு. போயி, ஒரு புங்க மரத்து அடில் ஒக்காந்து, நண்டு புடுச்சுச்சு. அதுக்காகவே காத்துக்கிட்டிருந்த மெதல, நரியோட வாலப் புடிச்சுக்கிருச்சு. பெறகு விசும்புறது எங்ஙிட்டு? 

ஒடனே, நரி ஒரு ஐடியாப் பண்ணுச்சு. என்னாண்ட ஐயையோ! என்னய விட்டுட்டு, புங்க மரத்து வேரப் புடுச்சுக்கிட்டே! என்னய விட்டுட்டு, புங்கமரத்து வேரப் புடுச்சுக்கிட்டேண்டு சொல்லிக் கத்துது. கத்தவும், மெதலக்கி வெக்கமாப் போச்சு. சே! புங்க மரத்து வேரத்தர் புடிச்சுப்பிட்டோம் போலாண்டு நெனச்சு. உம்மாயப் பிடிச்சிருந்த நரியோட வால விட்டுப்பிட்டு, புங்க மரத்து வேரப் புடிச்சுக்கிருச்சு. நரி தப்பிச்சு. ஒடிப்போயிருச்சு. அண்ணயில இருந்து, நரி, அந்தப் பக்கமே போறதில்ல. வேற பக்கம் போயி, எர தேடித் திண்டுச்சாம். 

நரிக்கழுத கெட்டியானதில்ல, எல்லாத்தயும் ஏச்சுப்பிராது. நரிகிட்டப் போயி, பந்தயம் போட்டா விடுமா? நரி எப்டிப்பட்டது? ஆளக் கூட ஏச்சுப்பிராது. 

– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், நீதி விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *