வேரறுந்து போனவர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 4, 2025
பார்வையிட்டோர்: 480 
 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எனக்கு இப்பவும் நல்ல ஞாபகம் நான் ஐந்தாம் வகுப்புத் தான் படித்துக் கொண்டிருந்தேன். பொன்னுத்துரை மாமா தனது ஒரே யொரு மகள் செவ்வந்தியையும் தனது மனைவி மருக்கொழுந்துவையும் தன்னோடு வந்து வத்தளையில் இருக்கும்படி கடிதம் எழுத, மாமி மருக்கொழுந்துவும் செவ்வந்தியுமாக காவை ஐந்து மணிக் கோச்சிக்குப் போவதற்காக முதல் நாளே பெட்டியில் உடுபுடவைகள் எல்லாம் அடுக்கிவைத்து, கொழும்பிற்குப் போகும் ‘புழுகில்’ செவ்வந்தியும் நித்திரை கொள்ளாது ‘கோச்சி எத்தனை மணிக்கு?’ ‘கோச்சி எத்தனை மணிக்கு?’ என்று இரவிரவாக கேட்டு அலுப்புக் கொடுத்து தாயையும் நித்திரை கொள்ள விடாது விடியுது விடியுது என எழுந்து கொழும்புக்குப் போக வென்று தைத்த புதுச்சட்டை யையும் போட்டுக் கொண்டு அந்தரப்பட்டுக் கொண்டு ஓடித்திரிந்தாள்; அப்பொழுது அவளுக்கு ஆறு வயதுதானிருக்கும்: 

கொழும்பிற்குப் போகும் மருக் கொழுந்து மாமிக்கும் மகள் செவ்வந்திக்கும் இடியப்பம் அவித்துக் கொடுத்து விட என நான்கு மணிக்கெழுந்து ‘ஆவறி போவறி” என்று அந்தரப்பட்டு இடியப்பம் அவித்து, முட்டைக் குழம்பும் வைத்து, அதைப் புறம்பாக ஒரு சின்னப் போத்தலில் ஊற்றி, இடியப்பங் பார்சலையும் கொண்டு ஓடி வந்து அன்போடு கொடுத்தாள் சின்னத்தங்கம் மாமியின் மூத்த மகள் செல்லம்மா. அந்தப் பார்சலை வாங்கி வைத்து விட்டு மருக் கொழுந்து மாமியும் மகனுமாக அருகிலுள்ள உறவினர் வீட்டிற்குப் பயணம் சொல்லப் போனார்கள். 

2

பொன்னுத்துரை மாமா கொழும்பில் ஓர் ஏற்றுமதி இறக்குமதி கம்பனியொன்று நடத்திக் கொண்டிருந்தார். அவருக்கு நல்ல வருமானம். அவருடைய மகள் செவ்வந்திக்கு இப்பொழுது முப்பந்தைந்து வயது வரை இருக்கும். அவள் இப் பொழுது அவுஸ்திரேலியாவில் இருக்கின்றாள். இவளின் கணவன் ஒரு பெரிய எக்கவுண்டராம். நல்ல வசதியாக அவள் அங்கு வாழ்கின்றாளாம். 

பொன்னுத்துரை மாமா நல்ல மஞ்சள் தேசிப்பழம் போன்ற நிறமுடையவர். கண்ணாடியும் அணிந்து நல்ல ஆஜானு பாகுவான தோற்ற முடையவர். அவர் அப்பொழுதே வத்தளையில் காணிவாங்கி பெரிய கல்வீடு ஒன்றைக் கட்டியிருந்தார். அவருக்கு யாழ்ப்பாணத்தில் ஒரு பிள்ளையார் கோயில் இருந்தது. அவரே அந்தக் கோயிலுக்கு உரிமையானவர். 

இந்தக் கோயிலின் நடவடிக்கைகளைப் பார்க்க வத்தளையிலிருந்து யாழ்ப்பாணம் வருவார். நல்ல பால் போன்ற வெள்ளை வேட்டியுடுத்து வோக்கிங்ஸ்ரிக் (ஊன்று தடி) யையும் கையில் பிடித்துக் கொண்டு கோயிலில் நின்றால் ஒரு தனிப் பொலிவோடு அழகாகத்தான் இருப்பார். 

‘இவர் தானோ எசமான்?’ கொழும்பிலை இருந்தே வந்தவர்?’ என்று கோயிலுக்கு வருபவர்கள் எல்லோரும் கேட்பார்கள். 

இவருடைய பிள்ளையார் கோயிலுக்கு நீலகண்டக் குருக்கள் தான் முழுப் பொறுப்பாகவு மிருந்தார். இவரின் மேற்பார்வையில் சுப்பையாக் குருக்கள் பூஜை செய்து கொண்டு வந்தார். வேலாயுதம் தான் கோயில் மேளகாரன். தினமும் வெறும் பச்சை அரிசியில் சாதம் வைக்கும் சுப்பையாக் குருக்கள் பொன்னுத் துரைமாமா வந்து நிற்கும் போது மட்டும் ‘சக்கரைச் சாதம்’ வைப்பார். சில வேளைகளில் மோதகமும் தருவார். 

கோயில் மேளமடிக்கும் வேலாயுதம், மற்றைய நாட்களில் பூஜை நேரத்திலும் கூட மேளத்தை நிலத்தில் வைத்து வேண்டா வெறுப்போடு இரண்டு தட்டுத் தட்டி விட்டு, சுப்பையா குருக்கள் கொடுக்கும் பச்சையரிசிப் புக்கைத்தளிசையையும் வாங்கிக் கொண்டு போய்விடுவார். பொன்னுத் துரைமாமா வந்து நிற்கும் பொழுது மட்டும், எழுந்து நின்று மேளத்தைத் தூக்கி வாரை தோளில் குறுக்காகப் போட்டு நன்றாக அடிப்பார். 

பொன்னுத்துரை மாமா கொழும்பிற்குத் திரும்பிப் போகும் தினத்திற்கு முதல் நாள் நீலகண்டக் குருக்கள், சுப்பையாக் குருக்கள், மேள மடிக்கும் வேலாயுதம் எல்லோரும் எமது வீட்டிற்கு வருவார்கள். பொன்னுத்துரை மாமா எமது வீட்டில்தான் தங்கி நிற்பார். இவர்கள் எல்வோருக்கும் என்பலப்பிற்குள் வைத்து மனம்குளிரக் கொடுத்தனுப்புவார். எனக்கும் ‘பயணக் காசு’ தருவார். நான் அந்தக் காசை வைத்துக் கொஞ்சம் கொஞ்சமாக செலவு செய்வேன். எனக்குப் பிடித்தமான கிறீம் சோடா, பேரீச்சம்பழம், நைஸ் பிஸ்கற் முதலியன வாங்குவேன். ஒரு தடவை ஒரு முழுக் கிறீம் சோடாவை நான் மட்டும் கெலியில் தனியக் குடித்து விட்டு வயிறு முட்டி ஏவறை வராமல் திக்கு முக்காடிய சந்தர்ப்பமும் உண்டு. 

‘அடுத்தமுறை யாழ்ப்பாணம் வரும் பொழுது உனக்கு என்ன கொண்டு வர’ என்று கேட்டார் பொன்னுத்துரை மாமா. 

‘எனக்கு புறோப் வைச்சுச் சுடுகிற துவக்கு வேணும்’ என்றேன். 

‘உனக்கேன் துவக்கு…’

‘மாம்பழத்தும்பி, சில்வண்டு. ஓணான்களுக்கு சுட’ என்றேன். 

அடுத்த முறை வரும் பொழுது மறக்காமல் நான் சொல்லி விட்ட துவக்கு வாங்கிக் கொண்டு வந்து தந்தார். 

பொன்னுத்துரைமாமா குடும்பம் 83ம் ஆண்டு கலவரத்திற்குக் கூட யாழ்ப்பாணம் வர வில்லை. அவருக்குத் தெரிந்த வேதக்கார சிங்கள பாதிரியாரோடு அவரின் ஏற்பாட்டில் எங்கோ போய் இருந்தார்களாம். அவர்கள் உயிர் தப்பிக் கொண்டார்கள். ஆனால் வீட்டு உடைமைகள் சூறையாடப்பட்டு வீடும் தரை மட்டமாக்கப் பட்டதாம். 

அந்தச் சிங்களப் பாதிரியார் தான் அரசாங்கத்திடம் நட்ட ஈடு பெற்றுக் கொடுத்தாராம். அந்தப் பணத்தில் கொட்டஞ் சேனையில் மீண்டும் வீடு வளவொன்றை வாங்கிக் கொண்டு மருக்கொழுந்து மாமியோடு தனிய சீவித்துக் கொண்டிருந்தார் பொன்னுத்துரை மாமா. இவர் வயது வந்து நோய்வாய்ப்பட்டு இறந்து போக, மருக்கொழுந்து மாமி, தனது மகள் செவ்வந்தியோடு அவுஸ்திரேலியாவிற்குப் போய் சிறிது காலத்தில் அவவும் இறந்து போய் விட்டானர். 

எனது தகப்பனாரின் சகோதரி சரசுவும், கொட்டாஞ் சேனையில்தான் தனது இரு பெண் பிள்ளைகளோடு சீவித்து வந்தாள். 

எனது தகப்பனார்தான் தனது கோதரியின் பிள்ளைகளை தூக்கி, தோளில் வளர்த்து மருக்கொழுந்து மாமியின் சகோதரர்களுக்கு கலியாணமும் செய்து கொடுத்தார். 

எனது தகப்பனார் இறந்த பொழுது நாம் எல்லோருக்கும் அறிவித்திருந்தோம். எமது தந்தையார் தூக்கி வளர்த்தவர்கள் யாரும் வரவில்லை. 

அவரின் சகோதரி சரசுமாமி மட்டும் யாழ்ப்பாணம் வந்து விட்டு அடுத்தடுத்த நாள் கொழும்பிற்குப் போய் விட்டாள். பேரப்பிள்ளைகள் தேடுவார்களாம் என்று சொன்னார் சரசு மாமி. பேரப்பிள்ளைகளில் கொள்ளைப் பாசம் அவளுக்கு. 

எனது தகப்பனார் நோய் வாய்ப்பட்டு, தொழில் ஏதும் செய்ய முடியாமல், குடும்பம் படு மோசமான கஸ்டத்திலிருந்த பொழுது, தனது சொந்த உழைப்பில் வாங்கிய காணியை சீவியச் செலவிற்காக ‘அறுதி’க்கு ஈடுவைத்தார். 

இந்தக் காணி. எழுத்திருந்து ஒரேயொரு குடிநிலமும் மீள முடியாமல், அறுதியாகவே போய் விட்டது. எமக்குக் குடி நிலம் இல்லாது தவித்த பொழுது சரசு மாமி, தனது மருமகணுக்குச் சேர் மதியான சும்மா கிடந்த வெறும் காணி யொன்றில் எம்மைக் குடியமர்த்தினாள். எமது தகப்பனாருக்கும் சேரவேண்டிய காணித் துண்டையும் தனது பெயருக்கு எழுதிவிச்சுக் கொண்ட பாவத்திற்கான பிராயச்சித்தமாக. 

இந்தக் காணியை விட்டு எம்மை எழும்பி வேறு எங்காவது போகும்படி எத்தனையோ அழுத்தங்களைத்தந்தான் சரசு மாமியின் மூத்த மருமகன். அம்மா இன்னமும் அந்தக் காணியை விட்டுப்போக வில்லை. 

அவன் இன்று கனடாவில் மூத்த மகளோடு இருந்து எல்லா கௌகரியங்களோடும் சீவித்துக் கொண்டிருக்கின்றான் தனது மனைவியோடு. 

நாம் இருக்கும் காணியை விற்றுவிடப் போவதாகச் சொன்னானாம். 

யாழ்ப்பாணக்கிலிருந்து நாங்கள் இடம் பெயர்ந்து மராட்சிக்குப் போய் என்று மில்லாசுவாறு சிறுமைப் பட்டிருந்தோம். பின்பு. ஆறு மாதத்தின் பீன்பு, உடைந்து போன. வீட்டுப் பொருட்கள் எல்லாம் சூறையாடப்பட்ட நிலையில் எமது சொந்த வீட்டிற்கு வந்தோம். 

உயிரை மட்டும் காப்பாற்றிக் கொள்வதற்காக சிவர் வன்னிப் பிரதேசத்திற்குப் போய் இன்னமும் அணு அணுவாய் செத்துக் கொண்டிருக்கின்றார்கள். 

மூன்று வருடங்களுக்கு முன்பு எனது மூத்த மகள் மொறட்டு வைப்பல்கலைக் கழகத்திலிருந்து எஞ்சினியராக வெளிக்கிட்ட பொழுது, அவளின் பட்டமளிப்பிற்குக் கொழும்பிற்குச் சென்றிருந்தேன். கப்பலில் திருகோணமலைக்குப் போய் அங்கிருந்து கொழும்பிற்குக் சென்றிருந்தேன். 

பட்டமளிப்பு முடிந்த அருத்த நாள் எனது உறவினர்களைப் பார்க்கலாமென கொட்டாஞ் சேனைக்குப் போயிருந்தேன். 

எனது சின்ன மச்சாளின் வீடு கொட்டாஞ் சேனையில் மாதா கோயிலுக்குப் பின்புறமாக இருந்தது. 

வீட்டைத் தேடிப் பிடித்து போய், சுவருக்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த பொத்தானை அழுத்தினேன். லட்சணமான பெண் பிள்ளை யொருத்தி வந்து ‘யாரைத் தேடுறீங்கள்’ என்று கேட்டாள். அவள் தான் மோகனா வாக இருக்கலாம் சின்ன மச்சாளின் கடைக்குட்டி. அவள் என்னைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பாள். ஒரு போதும் முன்பு என்னைக் கண்டிருக்க வில்லை. 

‘உங்களின் அம்மாவைத் தான் பார்க்க வேனும்’ என்றேன். உள்ளுக்கு அலிசேசன் நாயொன்று அட்டகாசமாக குரைம்பது கேட்கிறது. சிறிது நேரத்தில் சின்ன மச்சாள் வந்து கதவைத் திறந்தாள். 

‘எட நீயா. எப்ப வந்தனி… ஏன் வந்தாய்’ என்று கேட்டுக் கொண்டு நான் கையில் ஏதாவது ‘சூட்கேஸ்’, பை ஏதாகிலும் கொண்டு வந்தேனா என்று அறிந்து கொள்வதற்காக கேற்றுக்கு வெளியில் வந்து இருபுறமும் பார்த்தாள். 

நான் அங்கு தங்க வரவில்லை என்பதை மனதில் திடப்படுத்திக் கொண்டு என்னை உள்ளே கூட்டிக் சென்றாள். சின்ன மச்சாள் முன்பு தோற்றத்தில் சாவித்தீரியைப் போல இருந்தவள் மிகவும் அழகானவள். 

இப் பொழுது நன்றாகவே தோற்றம் மாறி இருந்தாள். பொய்ப் பல்லும் கட்டியிருந்தாள். 

‘நான் வந்து இரண்டு மூன்று நாட்கள் இருக்கும் மகனின் பட்டமளிப்பிற்காக வந்தனான்.’ என்றேன். 

அவள் மகனின் பட்டமளிப்பை ‘பெரிதாக’ எடுத்துக் கொள்ளவில்லை. 

அவளின் அலிசேன் நாய் இன்னும் அட்டகாசமாய் குரைக்கவே, 

‘மோகனா, நாயைப் பிடிச்சுக் கூட்டுக்கை விட்டிட்டு, தேத் தண்ணியை கொண்டு வா’ என்றாள். 

தனது கணவன் செத்தது பற்றியும், அவர் சாவதற்கு முன்பு செய்த குழப்படிகளைப் பற்றியும் தனது கடைசி மகனுக்கு ஒரு டாக்குத்தரை றெஜிஸ்டர் பண்ணியிருப்பதாகவும், றெஜிஸ்ரேசனுக்கு எடுத்த அல்பத்தையும் எடுப்பித்துக் காண்பித்தாள். இன்று தங்களுக்கு மருமகன் வீட்டில் சாப்பாடு என்றும் சொன்னாள். 

சின்ன மச்சாளின் வீடு மிகவும் விசாலமானதாய், எல்லா வசதிகளோடும் இருந்தது. 

பெரிய மச்சானும் கணவனும் சிங்கப்பூரில் உள்ள கடைசி மகளோடு மூன்று மாதமிருந்து விட்டு, மூத்த மகளோடு இருப்பதற்காக கனடாவிற்குப் போய் விட்டதாகவும், அவளின் மூத்த மகன் சிங்களப் பெண் ஒருத்தியை காதலித்து முடித்து விட்டதாகவும் இன்னொருத்தன் பொஸ்வானாவில் சுறுப்பினப் பெண்ணொருத்தியை கட்டி இருப்பதாகவும் சின்ன மச்சாள் புதினம் சொன்னாள். 

என்னோடு கதைக்கும் பொழுது அடிக்கடி நேரத்தைப் பார்த்தாள் சின்ன மச்சாள். என்னை எவ்வளவு விரைவாக அவ்விடத்தை விட்டுப் போகும் படியாய் அமைந்திருந்தது அவளின் காரியங்கள். 

மருமகனும் மகனும் கலியாணம் முடிந்தவுடன் வெளி நாட்டிற்குப் போக இருப்பதாகவும், தானும் இரண்டொரு வருடங்களில் வெளிநாடு போகக் கூடுமென்றும் சொன்னாள். 

நான் போய்விட்டு வருவதாகச் சொல்லி விட்டு எழுந்து வந்து விட்டேன்.  தேநீரைக் சுடச்சுடத் தந்ததால், பின்பு குடிக்கலாமென அப்படியே மறந்து போய் வைத்து விட்டு வந்து விட்டேன்.

நான் மீண்டும் திரும்பி கப்பலில் யாழ்ப்பாணம் வந்து கொண்டிருந்தேன். எனக்கு நித்திரையே வரவில்லை. 

சின்ன மச்சான் வீட்டைப் பற்றியே எனது சிந்தனைகள் ஓடிக் கொண்டிருந்தன. 

‘ஏன் கொழும்பிற்கு வந்தது’ என்று கேட்ட பொழுது, 

‘மூத்த மகளின் பட்டமளிப்பிற்கு வந்தேன்’ என்று சொன்ன பொழுது, 

‘எட நீயும் ஒரு மனுஷனா? அவளையும் கூட்டிக்கொண்டு வந்திருக்கலாமே அப்படி யென்ன ஒரு நேரச் சாப்பாடு கொடுக்க மாட்டனா? என்று கேட்டு ஏசுவாளென நினைத்தேன். 

எனது மகள் என்ஜினியராக வந்ததைப்பற்றியோ அல்லது அவளை பார்க்கத்தான் ஆவலாய் உள்ளதாகவோ எந்தச் சந்தர்பத்திலும் சின்ன மச்சாள் காட்டிக் கொள்ளவில்லை. 

எங்கே நிக்கிறாய் என்று கேட்டால், 

‘ஒரு வொட்சில் தினமும் நூறு ரூபாய் கொடுத்து நிக்கின்றன், சாப்பாடும் கடையில் தான்’ – என்று சொன்னால்? 

‘ஏன் நான் இந்தக் பெரிய வீட்டைக் கட்டி வைச்சிருக்கிறன், நீ இஞ்சையே தங்கிப் போகலாமே நீ போய், லொட் சிலையிருந்து ன்னுடைய பெட்டியை தூக்கிக் கொண்டு கொண்டு வாவன்’ என்று சொல்லுவாள் என்று நினைத்தேன். நான் எதிர் பார்த்தது போல அவள் அப்படி ஒன்றும் நினைத்துமே பார்த்ததில்லை. 

ஏன்? தனது தாய் நெல்லுக் குற்றி, அரிசி விற்றுச் சீவியம் விடும் பொழுது. பாவம் பெண்ணாய்ப் பிறந்தவள் தனிப் பாடு படுகின்றாளே என இரக்கப்பட்டு கூட நாலு உலக்கை போட்டு உதவி செய்து கொடுத்த சின்னத்தங்கம் மாமியின் மூத்த மகள் செல்லம்மா பற்றியோ அல்லது அவவின் ஊமைப் பிள்ளை ‘வவோ’ வைப்பற்றியோ அல்லது தன்னோடு சேர்ந்து விளையாடிப் படித்து பின்பு கூலி வேலை செய்யும் இராசையாவைக் கட்டின யோகம்மா படும் கஸ்டத்தைப் பற்றியோ அவள் விசாரிக்கவே இல்லை. 

கப்பல் அந்த இருள் வேளையிலும் அமைதியாக காங்கேசன் துறையை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றது. 

இந்தக் கப்பலுக்குள் வரும் பிரயாணிகளில் அநேகமானோர் தமது உயிர்களை மட்டும் காப்பாற்றிக் கொள்வதற்காக பொருள், பண்டம் எல்லாவற்றையும் இழந்து, போகும் வழிலும் வானத்திலிருந்து சீறி வந்த குண்டுகளுக்கெல்லாம் தம்பி, வன்னிக்கு, மன்னாருக் கென்று ஓடித் தப்பி அங்கும் சொல்லொணாத் துன்பங்களை பசி பட்டினிகளை அனுபவித்து விட்டு, தற்பொழுது கொண்டு சென்ற உயிரை மட்டும் கட்டி காத்துக் கொண்டு வெறுங்கை யோடு பிறந்த மண்ணை நோக்கி வந்து கொண்டிருக்கின்றார்கள். சிறுவர்களெல்லாம் பசி பட்டினியால் பாதிக்கப் பட்டது போதாதென்று நோயின் தாக்கத்தினாலும் பாதிக்கப்பட்டு எலும்பும் தோலுமாய், குமருகள் எல்லாம் வாடிவதங்கி சொக்குகள் காய்ந்து போய் முகத்தில் களை இழந்து சிலர் சுருண்டு போயும் சிலர் முடங்கிப் போயும் இருந்து வந்து கொண்டிருக்கிறார்கள். 

இன்னும் ஓரிரு மணித்தியாலத்தில் பிறந்த மண்ணில் மீண்டும் தமது பாதங்களைப் பதிப்போம் என்ற எண்ணம் அவர்களின் மனத்தில் அசையாத இடத்தைப் பிடித்துள்ளது. அடிமனத்தில் ஒரு சந்தோசம் அமிழ்ந்து போய்க்கிடக்கின்றது. 

விடியும் சாயல் அவர்களின் கண்களுக்கு மெல்லத் தெரிகின்றது. இவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வேரறுத்து போகவில்லை. எனது மச்சாள் குடும்பங்கள் போல.

– தாயகம், டிசம்பர் 1999.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *