வேதம் கண் திறக்கும் விடியலே ஒரு சவால்தான்
எந்த விருதைப் பற்றிய சபலமும் இல்லாமலே கீர்த்தி அவரின் முன்னிலைக்கு வந்திருந்தாள். கீர்த்தனா என்பது அவளின் முழுப் பெயர். கீர்த்தி என்றே சுருக்கமாக எல்லோரும் அழைக்கிறார்கள். அவள் ஒரு நன்கு கை தேர்ந்த பழம் பெரும் எழுத்தாளர் என்பதை அவர் அறிந்திருப்பாரோ தெரியாது.. ஆனால் தமிழின் மீதும் சைவத்தின் மீதும்,ஆழ்ந்த பக்தி கொண்டிருப்பதாகவே உலகம் அவரை அறியும். காலம் காலமாக அவர் உலகம் முழுவதும் பிரகடனப்படுத்தி பெரிய எடுப்பில் நடத்தி முடிக்கிற விருது வழங்கும் விழாவிலிருந்தே, அந்த உண்மையை அறிந்து கொள்ளலாம். அவரைப் பொறுத்த வரை அது வெறும் நாடகம் தான். அதற்குத் தமிழ் தான் ஆதாரம். அந்த முகமூடியைப் போட்டுக் கொண்டால் தான் இது எடுபடும் தமிழை வளர்ப்தாகவும் உலகம் அவரை வணங்கும். வழிபடும். அவரைத தரிசனம் காண்பதே அபூர்வமாகத் தான் நடந்தேறும் அவ்வளவு பிஸி. தமிழ் வாழ்வதற்காக எல்லாம் துறந்து ஒரு துறவி மாதிரி அவர் போட்டிருக்கும் வேடம். பொய் புனைந்து வேடம் தரித்து உலாவுகிற அவரின் உண்மை முகம் வேறு என்பதை அவள் கண்டு பிடிக்க, அது ஒரு கசப்பான அனுபவம் அவளுக்கு
ஆம் தமிழ் கொடி பறக்கிற உச்ச வானில் சஞ்சரித்தவாறே அவளின் இலக்கிய உலகப் பயணம் இன்னும் ஒரு தொடர் கதை தான். தன் சொந்த ஆன்மாவையே புடம் கண்டு தேறிய எழுத்துலக தபஸ் மட்டும் தான் அவளுக்கான பெருமை அதன் ஈர்ப்பில் கட்டுண்ட ஒரு சில மனிதர்களை இனம் கண்டு விட்ட பெருமித நடை குடை விரிக்கிற நேரத்திலே தான் அவள் அவரின் சன்னதிக்கு வந்து சேர்ந்திருந்தாள். அது சாக்கடையா சன்னதியா என்று அறிய முடியாமல் போன ஒரு தருணம் இது.திருநீற்றுக் களையுடன் அவரைக் கண்டால் கையெடுத்துக் கும்பிடத் தோன்றும். உலகம் முழுவதுமே அதில் கரைந்து போகும்.இதற்கு அவள் மட்டும் விதிவிலக்கல்ல அது ஒரு காலத்தில் வெறும் பகற் கனவாய் போய் விடுமென்று அவள் கண்டாளா, என்ன?
அவள் அவரைச் சந்திக்க நினைத்தது விருது பெறும் ஆசையினாலல்ல. அந்த நினைப்பே அவளுக்கு வந்ததில்லை ஒரு காலத்திலும். அவள் எழுத்துத் தவம் இயற்றுவதும் அதனைப் பொருளாகக் கொண்டல்ல. அப்படி என்றால் அவள் வேறு எதற்கு வந்திருகிறாள்? ஒரேயொரு நாவல். அவள் கை வண்ணத்தில் காட்சி கொண்டு நிற்கிற அதற்கு, ஒரு பெறுமதியான விமர்சனம் அவரிடம் பெற விரும்பியே, அவளுடைய இந்த வருகை .அவரோ பழுத்த ஆன்மீகவாதி. அப்படியொரு பெயர். அவரைப் பட்டை தீட்டிய வைரம் போல் ஜொலிக்கச் செய்து கொண்டிருக்கிற அந்த ஆன்மீக இருப்பின் தடங்களுக்கு உயிர்ப்பேற்றுகின்ற, அதே வழி தான் அவளுடையதும். ஆனால் ஒரேயொரு வித்தியாசம். அவர் ஓர் பழுத்த ஆன்மீகவாதி. அப்படி உலகம் நம்புவதாய் ஒரு பாவனை. எந்தப் பாவனையுமில்லாமலே சுயமான சிந்தனை விழிப்பில் ஆன்மீக பார்வை கொண்டு தான், அவளின் எழுத்துலகம் கண் திறக்கும். தான் வாழ்கின்ற வாழ்க்கை யுகத்திலிருந்தே, கண்ட சத்தியத்தைக் கொஞ்சமும் மாறுபடாமல் எழுதிச் சாதித்துக் காட்டுகிற ஒரு தர்ம தேவதை மட்டும் தான் அவள். அவரை நேரில் சந்தித்து நாவலை கையளித்தால், தான் அவள் எண்ணிய கருமம் ஈடேறும். நாவலை முழுவதும் வாசித்தால் தான் அதற்கான சிறந்த விமர்சனமும் வந்து சேரும். அவர் மனம் வைத்தால் அது நடக்ககும். முதலில் அவர் பார்வையில், அவள் எடுபடவேண்டும். கண்ட குப்பைகளைத் தரம் குறைந்த சமுகக் கதைகளையே எழுதிக் கொண்டிருக்கும் சராசரி எழுத்தாளர்களில் ஒருத்தி தான் தானும் என்று அவர் எண்ணக் கூடும். அதற்கு விதி விலக்காய் ஆன்மீகப் பார்வையோடு தான் எழுதி வருவதை அவர் உள்ளபடி இனம் கண்டு கொண்டால் மாத்திரமே, இது நிறைவேறுவதற்கான சாத்தியக் கூறு பிறக்கும். அதே அவளுக்கு ஒரு பலப் பரீட்சை தான். அவரோடு மோதி அவள் வீழ்வாளா எழுவாளா? என்று தெரியவில்லை.அவள் ஒரு போதும் விழமாட்டாள். ஒரு புதிய சத்திய விழிப்போடு மீண்டும் எழுவதே, அவளின் ஒரு போதும் அழிந்து போகாத ஆன்மீக நிலைப்பாடு.
அதற்கான காலம் கண் திறந்து வெகு நாளாகிறது. .இந்த யுக யாத்திரையில் அவளுக்குச் சறுக்கல் வருமா ?வெள்ளவத்தையில் தான் அவர் வாழும் புனிதக் கோவில். தமிழ் அங்கு கொடி கட்டிப் பறக்கும். கூடச் சைவமும் தான்..
சைவம் என்றால் அன்பு பக்தி ஒரு நிலைப்பாடான இறை தோற்றம்.. அவள் அதைக் காண வேண்டித் தவம் கிடந்தாள். எப்படி அவரைக் கண்டு பிடிப்பது? அருள்மொழி வர்மன் என்பதே அவரின் திரு நாமம். அருள் என்றாலே உலகம் அறியும். அது அறிந்து வைத்திருப்பது அவரின் பெயரை மட்டும் தான். அவரைத் தோலுரித்துப் பார்க்கவே அவளின் இந்த வருகை. தமிழ்க் கொடி ஏந்தி வந்திருக்கிறாள். பிறந்த போதே தமிழோடு பிறந்தவள். வேறு எதற்காகவுமே வாழத் துணியாதவள். இதை அவர் அறிந்திருக்காவிட்டாலும் இது தான் உண்மை.
பார்ப்போம். இந்த உண்மை எடுபடுமா என்று. முதலில் போன் வழியாக அவரோடு பேசிய போதே, சறுக்கல்.. இந்தப் போன் நம்பரை வாங்க அவள் வெகுவாய் அலைந்திருக்கிறாள். வெள்ளவத்தையில் அவர் ஆட்சியின் கீழ் ஓர் அரங்கம். பெரிய எடுப்பில் தமிழ் அங்கு வாழும். ஒவ்வொரு வருடமும் உலகையே அழைத்து அங்கு தான் விழாச் செய்வார். கலைஞர்களுக்கும் பேரறிஞர்களுக்கும் விருது வழங்கும் விழா மிக விமரிசையாக நடந்தேறும். இது தமிழுக்காக அவர் செய்யும் பாரிய தொண்டு. இதில். தமிழ் வாழ்கிறதோ, இல்லையோ? அவர் புகழ் வாழும். காட்சி விரியும் . கண்கள் களை கட்டினால் கேட்க வேண்டுமா?
கடவுளே நேரில் பிரசன்னமாகி விட்டது போலக், குளிரோடிய ஒரு நிலைமை. தான். அந்தக் கடவுளின் தேடலிலேயே, அவளுக்கு உச்சக் கட்டக் களைப்பு அவரின் அரங்கத்துக்குப் போய், அவரின் போன் நம்பர் வாங்கி வந்தும் அவரைப் பிடிக்க முடியவில்லை. அவள் தன்னை அறிமுகம் செய்து விட்டுப் பேசத் தொடங்கிய போதே, அவரிடமிருந்து நம்பிக்கையான பதில் கிடைக்கவில்லை.
“நாளைக்கு நான் இஞ்சை நிக்க மாட்டன். தமிழ் நாடு போறன். வர ஒரு கிழமையாகும்..பிறகு வாரும் “என்ற போதே, அவளுக்கு நம்பிக்கை விட்டுப் போயிற்று.
இப்படி ஒரு முறையல்ல, பல தடவைகள் இதே பதில் தான். ஒவ்வொரு முறையும், ஏதோவொரு காரணம் சொல்லித் தவிர்த்துக் கொண்டே போனதில் அவளுக்கு ஏமாற்றம், தான் மிஞ்சியது. ஆனால் அவள் சோர்ந்து விடவில்லை. கடவுளைத் தரிசனம் காணப் போகிற மாதிரி ஒரு பயணம். கடவுள் மட்டுமல்ல, தமிழும் தான் அவளை அழைக்கிறது. அந்தத் தமிழ் பற்று அவளுக்கு மட்டும் தானா?தமிழின் பெயர் சொல்லியே பிழைப்பு நடத்துகின்ற அநாகரீக மனிதர்களின் முகம் தானா அவருடையதும்? . போகப் போக அப்படித் தான் நினைக்கத் தோன்றுகிறது இது இன்னுமொரு தீக்குளிப்புத் தான் அவளுக்கு. சொந்த வாழ்க்கையே நீண்டதொரு சவால் பயணம்.அது உடம்பை வைத்துச் சவாரி செய்வது.. இது அப்படியல்ல ஆத்மார்த்மான கலைப் பயணம். கூட. இனிய கறைகளில்லாத இறை வழிபாடு போன்றதே. இதுவும்.இதிலும் சவால் தானென்றால் என்ன செய்வது? இந்தச் சவாலில் தீக்குளிக்கிற நிலைமை தான் அவளுக்கு. அவர் பிடிபாடாமல் ஓடிக் கொண்டேயிரு.க்கிறார். அவரைத் தேடிக் களைத்துப் போனாலும் அவள் சளைக்கவில்ல. குறிப்பெழுதி வைத்த தன் நாவலோடு அவர் பெயர் வாழும் மண்டபத்துக்கே, அவள் நேராக வந்திருக்கிறாள்.அங்கே கொடி கட்டிப் பறக்கிற தமிழ், தன்னையும் வாழ வைக்கும் என்ற நம்பிக்கையோடு தான் போனள். வரவேற்பறையில் மிக அழகு ஒப்பனைகளோடு ஓர் இளம் பெண் காட்சி தரிசமானாள். அவளுக்கும் தமிழை விளக்க வேண்டும் அதற்குச் சாட்சி என் கதைகள்………. இந்தக் கதை
“நான் கீர்த்தி! கதை எழுதுகிறவள். இது நான் கடைசியாக எழுதிய நாவல் ஐயாவிட்டை இருந்து ஒரு விமர்சனம் வேண்டும் இதற்கு. அவர் வரும் போது கொடுத்து விடுவியளே?”
அவள் என்னவோ யோசனையோடு இருந்தாள். தமிழை அவள் மறந்து போனாள் போலும். .கைகளைத் தட்டினால் தான் அவளுக்கு அந்த விழிப்பு வரும்.. அதற்குத்தேவையில்லாமலே, மந்தஹாசம் குடை விரிக்க அதிலேயே இளைப்பாறுவது போலக் குரலை உயர்த்திக் கம்பீரமாக அவள் கேட்டாள்
“இது தேவையே? ஐயாவுக்கு இதுக்கெல்லாம் நேரம் ஏது?என்றாள் ஒற்றை வரிகளில். வரி வேறு வாழ்க்கை வேறு. இது வாழ்க்கையையே புடம் போட்டுக் காட்ட வேண்டிய ஒரு முக்கியமான விடயம். வாழ்க்கையில் புடம் கொண்டு எழ வேண்டுமானால், “அதற்கான விடய சஞ்சாரங்களுக்கெல்லாம் வேதமாகவே எனது இந்தக் கதை! “அந்தக் கடைசி வரிகளை அவள் பிரகடனப் படுத்திக் கூறியதைக் கேட்டு அவள் சிரித்தாள்.. பிறகு கேட்டாள்.`
“ நீங்கள் எந்த உலகத்தில் இருக்கிறீர்கள் அக்கா!? கைத் தொலைபேசியும் கையுமாக இருக்கிற இன்றைய உலகில் இது எடுபடுமென்று நீங்கள் நினைக்கிறியளே”?”
“கறையிலை மூழ்கிறவர்களைப் பார்த்த சோகம் மாறாமலே, விழிப்புணர்வு வேண்டி நான் செய்கிற தவம் இது. எங்கேயாவது ஒருவருக்கு இதனால் கண் திறந்தாலே, இதை ஒரு பெரும் வெற்றியாக நான் கொண்டாடுவேன். தமிழை உபாஸிக்கிற உங்கள் கடவுளின் இருப்பு உண்மையென்றால் நிச்சயம் இது நடக்கும்”.
அவளுக்குத் தலையைச் சுற்றியது.. கீர்த்தியின் பேச்சைக் கேட்டு “பெரிய தொண்டு செய்ய வந்திட்டா’என்று அவள் முணுமுணுக்கிறது கீர்த்திக்கும் கேட்டது
“அதுக்கு இப்ப நான் செய்ய வேணும்?”
“இந்தப் புத்தகத்தை ஒருக்கால் உங்கள் குருவிட்டை கொடுத்து விடுங்கோ! அதற்குள் என்ன செய்ய வேணுமெண்டு குறிப்பு எழுதி வைச்சிருக்கிரன்”
“எனக்கென்ன. தாங்கோ ஐயா வரும்போது கொடுத்துப் பாக்கிறன்”
நாவல் கை மாறிய சந்தோஷம் களை கட்ட, கீர்த்தி வீடு திரும்பி ஒரு கிழமையாகி விட்டது. .விபரம் அறிய மீண்டும் அங்கே போனாள்..
எழுந்து நின்று வரவேற்றாள் அந்த வரவேற்பாளர்.. பெண்மணி. இது என்ன புது மரியாதை என்று தோன்றியது. ஐயா சொல்லிக் கொடுத்திருப்பாரோ? தமிழை வளர்க்கிற வாழ்விக்கிற ஐயாவே தானென்றால் இது சாத்தியம்..அதற்கு மாறாக அவரின் தமிழ் வளர்க்கும் சத்தியம் காற்றில் கரையத் தான் என்பது பிடிபட அவளுக்கு வெகு நேரம் எடுக்கவில்லை
“அக்கா! ஐயா வந்த போது புத்தகம் நான் கொடுத்தனான் அவர் அதைத் தன்ரை கோவிலுக்குக் குடுக்கச் சொல்லிப் போட்டார் திருநீறு கட்ட உதவுமாம்”
கீர்த்திக்கு அதைக் கேட்கப் பூமி நடுங்கியது. தமிழையே சுட்டுப் பொசுக்கிக் காலில் போட்டு மிதிக்கிற கதை,, இப்படித் தான் வருமென்று அவள் கண்டாள். தமிழ் தாயே வானில் நின்று பொய்யாகக் கைகளைத் தட்டிச் சிரிக்கிற மாதிரிக் குரல் கேட்டது. தமிழும் சைவமும் கரி பூசிக் கொண்டு நிற்பது போல், ஒரு வெறுமை அவளைத் தகித்தது.
“திருநீறு பொட்டலம் கட்டவா நான் கதை எழுதுகிறேன்? பரவாயில்லை எங்கள் பார்வையில் திருநீறும் கடவுள் தான்.ஆனால் அவர் அப்படி நினைக்கவில்லையே. என் தமிழைக் கேவலப்படுத்துகிற சிறு மதியோடு தான் அவரின் இந்த வாய் மொழி!. இதற்கு நான் சண்டைக்கு நிற்கவா முடியும்? தமிழ் சாக்கடைகுள் விழுந்து விட்டதே என்ற மன வருத்தம் மட்டும் தான் எனக்கு. தமிழுக்கு விழா எடுத்து விருது வழங்கி ஒப்பற்ற கலைஞர்களையெல்லாம் மேடையேற்றி வாழ்விக்கிற அந்தப் பெரிய மனிதர், சொன்னாராம். திருநீறு கட்டத்தானாம் என் கதை. என் தமிழுக்கும் ஒவ்வொரு கணமும் நான் வழிபட்டு வணங்குகிற கலைக்கும் அவர் தருகிற அங்கீகாரமே இவ்வளவு தானா?”நெஞ்சில் பொங்கி வழியும் தார்மீக சினம் மாறாமலே அவள் சொன்னாள்
“வேண்டாம் அந்தப் புத்தகம் என்னுடனேயே இருக்கட்டும் .அதை நெருப்பிலே போட்டுக் கொளுத்துகிற இந்தக் கொடுமையே என்னை எரிச்சுப் போடும் தாங்கோ அதை”
பொறுங்கோவக்கா நேற்றுப் பழைய புத்தகங்களை நாங்கள் குப்பைக்காரனுக்குப் போட்டு விட்டம் உங்கடை புத்தகமும் போச்சுதோ தெரியேலை பாத்திட்டு வாறன்”
திருநீறுமில்லை இப்போது அதிலும் கேவலமாய் குப்பை தின்னப் போய் விட்ட தனது கதைக்கு நேர்ந்த, இந்த அசிங்கத்தை அவமானத்தை எப்படிக் கழுவுவது எப்படி இதற்குக் கழுவாய் சுமப்பது என்று புரியாமல் அவள் பஸ்மமாகி எரிந்து கொண்டிருந்த போது, அவள் வெறும் கையோடு திரும்பி வந்தாள். இந்தத் திரும்புதலுக்கும் தமிழே ஒழிந்து போனது போல் காலியாகிப் போன அந்தப் பெரிய மனிதரின் வெறும் கைகளை நம்பி ஏமாந்து விட்ட குற்றத்துக்காவும், தன்னையே தண்டித்து தீயிட்டுக் கொளுத்தும் மனச்சாட்சி உறுத்த, அவள் ஒன்றுமே சொல்லிக் கொள்ளாமல் அழுது குமுறும் நெஞ்சுடன் அங்கிருந்து போகக் கிளம்பிய போது தமிழும் சேர்ந்து அழுவதாய் உலகம் இருண்டு கிடப்பதை அறிய முடியாமல் போன பேதமை ஒன்றே தலை தூக்க விடியலைத் தேடும் பணியில் மீண்டும் அந்தப் பெண் மூழ்கி விட்ட கொடுமை தாங்காமல், அந்த அறையும் இருண்டு கிடப்பதாய் ஓர் உணர்வு தட்டிற்று.