வேண்டுகோள்
கதையாசிரியர்: மா.வீ.தியாகராசன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: September 27, 2026
பார்வையிட்டோர்: 151
(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்தோணி அன்று சீக்கிரமாகவே தோபாயோ லோரோங் மூன்றிலிருந்த தனது அறைகலன்கள் (Furniture Mart) கடையை மூடினான். பணியாட்கள் நான்கு பேரையும் முன்னதாகவே அனுப்பிவிட்டான். தனது நண்பர்களுடன் ஐந்து மணிக்கு கேலாங் வட்டாரத்தி லிருக்கும் ஐந்து நட்சத்திர (Five Star) ஓட்டல் ஒன்றில் நடைபெறவிருக்கும் ஒரு விருந்துக்குச் செல்ல வேண்டும். இன்றைய சாப்பாட்டுச் செலவு முழுவதும் அவன் தலையில்தான். இருப்பினும், அதைப்பற்றிக் கவலைப்படுபவன் அல்லன் அந்தோணி.
பார்ட்டி முடிந்து அந்தோணி வீடு திரும்பும்போது. நள்ளிரவு மணி இரண்டு… எப்படி வீடு வந்து சேர்ந்தான்? என்று அவனுக்கே தெரியாது. காலையில் கண் விழித்தபோதுதான் தனது வீட்டில் படுத்திருப்பது அவனுக்குப் புரிந்தது. தலையைத் தூக்க முடியாத அளவிற்கு விண்ணென்று தெறித்தது. இரவு முழுவதும் குடித்ததில் கண்கள் கோவைப்பழம் போல் சிவந்து காணப்பட்டன. சிரமப்பட்டுக் கண்விழித்தான் அந்தோணி. அந்தோணி எதிரில் அவன் மனைவி மேரி தனது நான்கு வயது மகன் பீட்டருடன் நின்று கொண்டிருந்தாள்.
“ஏங்க வெந்நீர் கொண்ட வரவா?” என்று பரிவுடன் கேட்டாள் மேரி.
“கொண்டு வா! நல்லா தொதிக்க வச்சு கொண்டாந்து என் தலையில ஊத்து. சனியனே ஒன் முகத்துல முழிச்சாலே ஒண்ணுமே வௌங்காதடி” என்று சம்பந்தமே இல்லாமல் மேரியைக் காலையிலேயே திட்டித் தீர்த்தான் அந்தோணி.
மேரி ஒன்றும் சொல்லாமல் பல்லவர் காலச் சிலையைப்போல மௌனமாகப் படுக்கை அறையை விட்டு வெளியேறினாள்.
தட்டுத்தடுமாறி எழுந்த அந்தோணி குளிர் பதனப் பெட்டியைத் திறந்து ஒரு பீர் பாட்டிலை எடுத்தான். “ஏய்! எங்கப்போயி தொலைஞ்ச? அந்தக் குவளையை எடுத்துக் கிட்டு வா!’ என்று கூப்பிட்டான் அந்தோணி. அவன் கூப்பிட்டது தான் உடனடியாக இராமன் வில்லிலிருந்து புறப்படும் அம்புபோலக் கையில் குவளையோடு வந்து நின்றாள் மேரி. அதற்குள் போத்தலோடு பீரைக் குடித்துக் காலி செய்திருந்தான் அந்தோணி.
“ஏங்க காலையிலேயே ஏன் இப்படிக் குடிக்கிறீங்க? கடைக்குப் போக வேண்டாமா? ராத்திரி பூரா குடிச்சது பத்தாதா?” என்று மேரி பேசி முடிப்பதற்கு முன்பாவே, கையிலிருந்த பீர் போத்தலை மேரியின் தலைக்கு நேராகக் கிரிக்கெட் போட்டியில் கபில்தேவ் பந்தை வீசி எதிரியைத் தவறாது தோல்வியடையச் செய்ததுபோல, அந்தோணி போத்திலை மேரியின் தலையில் வீசியெறிந்தான்.
”அம்மா!” என்றபடி அடியற்ற மரம்போலக் கீழே சாய்ந்தாள் மேரி. தலையில் அடிபட்ட இடத்திலிருந்து தேக்கி வைத்த அணையைத் திறந்தால் வெளியேறும் நீர் போல, இரத்தம் கொட்டியது. சத்தம் கேட்டு ஓடி வந்த சிறுவன் பீட்டர் தன் தாய் இரத்தம் சொட்டக் கிடப்பதைக் கண்டு பேயறைந்ததைப்போல் செய்வதறியாது நின்று கொண்டிருந்தான். அந்தப் பிஞ்சுக் குழந்தைக்கு இதையெல்லாம் தினமும் பார்த்துப் பார்த்துப் பழகிப் போயிருந்தது. எதுவுமே நடக்காதது போல் அந்தோணி வீட்டை விட்டு வெளியேறினான்.
மேரிக்குக் காயம் குணமாக ஒரு வாரத்திடிற்கு மேல் ஆகியது. வீட்டு மாடிப்படியில் நடந்து வரும்போது தடுக்கி விழுந்ததாக டாக்டரிடம் பொய் சொல்லியிருந்தாள் மேரி. அந்த ஒரு வாரம் அந்தோணி வீட்டுப் பக்கம் வரவே இல்லை… தன் உடல்நலம் தேறியிருந்ததால் கணவனைப் பார்க்கக் கடைக்கே செல்வதென மேரி தோபாயோவுக்குக் கிளம்பினாள். பீட்டர் பாலர் பள்ளிக்குச் சென்றிருந்தான்.
மேரி கடைக்குச் சென்றபோது கடையில் ஒரு பையன் மட்டுமே இருந்தான். அவனுக்கு மேரியைத் தெரியும். ‘வாங்கம்மா! உட்காருங்க” என்று சொல்லிவிட்டுக் கீழே சென்றவன் மறுநிமிடம் கையில் குளிர்பானத் தோடு வந்து நின்றான். “எங்கேப்பா உங்க மொதலாளி இங்கே இல்லையா?”
“காலயிலே வந்தாரும்மா வந்துட்டு ஒடனே கெளம்பிட்டாரும்மா” என்றான் பையன்.
“ஆமா! எங்கே நாலு பேரு வேல பாரத்த எடத்திலே நீ மட்டும் இருக்கே? மீதமுள்ளவங்க வேலைக்கு வரலியா? என்று மீண்டும் கேட்டாள் மேரி. “நாலு பேருக்கு இங்க என்னம்மா வேலையிருக்கு? உள்ளே சென்று பாருங்க… எந்தச் சாமானும் இல்லே… வியாபாரம் இல்லாதப்ப ஆளுங்க எதுக்குமா…? என்னையும் இந்த மாசத்தோட வேலையை விட்டு நின்னுக்கச் சொல்லிட்டாரும்மா…! அம்மா சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க… ஐயா தான், குடி கூத்தின்னு அலையறாரு நீங்களாவது இந்தக் கடையை எடுத்து நடத்துங்கம்மா… நல்லா வியாபாரம் நடக்கும்… இந்த மாதிரி எடம் கிடைக்காதும்மா….” என்று கடைக்காரப் பையன் பரிதாபமாகக் கூறினான்.
அவன் கூறுவது உண்மைதான். கடை வருமானம் முழுவதும் எங்கே எப்படிச் சீரழிகிறது என்பது மேரிக்கும் தெரியும். ஆனால் அவளால் அந்தோணியை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது. “தான் எங்காவது ஒரு வேலையைத் தேடிக் கொண்டால் தான் குழந்தையுடன் உயிர்வாழ முடியும். இனிக் கணவனை நம்பிப் பயனில்லை” என்பதைக் கண்கூடாக அறிந்து கொண்டாள் மேரி. தன் குடும்ப விஷயங்களை அவனிடம் கூற மனமின்றிக் கனத்த இதயத்தோடு வீடு திரும்பினாள்.
ஓரிரு ஆண்டுகள் கடந்துவிட்டன. எப்போதாவது அந்தோணி வீட்டுக்கு வருவான்… அதுவும் மேரியின் சம்பள தினமாக இருக்கும்.. கட்டிக் கொண்ட பாவத்துக்காக மேரியும் ஏதோ தன்னால் இயன்ற வெளளியைக் கொடுத்தனுப்புவாள். இப்போதெல்லாம் அவளுக்கு அடிக்கடி இதயவலி! அதைக் கவனிக்கக்கூட நேரமில்லை…கையில் காசுமில்லை… ஏதோ தன் ஒரே அன்பு மகன் பீட்டருக்காக வாழ்ந்து கொண்டிருந்தாள் மேரி.
ஏதோ பேருக்குத்தான் அந்தோணி கடை நடத்திக் கொண்டிருந்தான். ஓஹோவென்று பல்லாயிரம் வெள்ளி வருமானம் சம்பாதித்துத் தந்த அந்த அறைகலன் கடை இன்று ஒரேயொரு சவப்பெட்டியோடு மட்டும் ஓய்ந்து கிடந்தது. புத்தருக்குப் போதிமரம் ஞானம் தந்ததுபோல, அந்தோணிக்கு ஸ்டெல்லாவின் வீடு ஞானத்தைத் தந்து கொண்டிருந்தது. அவனுடைய சம்பாத்தியம் அனைத்தும் குடிபோதைக்கும்… ஸ்டெல்லாவுக்குமாகக் கரைந்து கொண்டிருந்தது.
‘கையில் வெள்ளி இல்லை… வருமானம் சரியாக இல்லை… என்பதை அறிந்த ஸ்டெல்லாவின் போக்கில் ஒரு பெரிய மாறுதலை அறிந்தான் அந்தோணி. மிகத் தாமதமாக ஒரு சில விஷயங்கள் அந்தோணிக்கு உறைத்தன. தன் பெரும்பாலான பணத்தைச் சுரண்டிக்கொண்ட ஸ்டெல்லாவையும், அவ்வப்போது இல்லையென்று சொல்லாமல் உடல் நலிந்த நிலையிலும் தனக்குப் பணம் சம்பாதித்துத் தரும் உண்மையான மனைவி, பாசமனைவி மேரியையும் இப்போது தான் ஒப்பிட்டுப் பார்த்தான் அந்தோணி. ஒரு முடிவோடு கடையை மூட நினைத்தபோது ஒரு வாடிக்கையாளர் வந்தார்.
“சவப்பெட்டி ஒன்று வேணும் இருக்கா?” என்றார்.
அப்போது அந்தோணி, நீண்டநாள் அலைந்து திரிந்த வறியவன் ஒருவன் பெருங் செல்வம் பெற்றதுபோல் மகிழ்ந்தான். மனம் திருந்தி வீட்டுக்குச் செல்ல நினைத்தபோது கையில் சுத்தமாகக் காசு இல்லாமல் இருந்தது. ‘யாரோ’ ஒருவர் கடவுள் மாதிரி வந்துள்ளாரே’ என்று மனம் மகிழ்ந்து, கடைசியாக இருந்த அந்த ஒரு சவப்பெட்டியை வந்தவரிடம் விற்றுவிட்டுச் சில நூறு வெள்ளிகளுடன் கடையைப் பூட்டினான். அப்போத கடையில் தொலைபேசி மணி ஒலித்தது. அந்தோணி கடையை மீண்டும் திறந்து, கடையிலிருந்து தொலை பேசியை எடுத்து உடனடியாகக் காதில் வைத்தான்.
“அப்பா! நான் பீட்டர் பேசுறேன்பா.. அம்மா திடீர்னு இறந்துட்டாங்க… அவங்க உயிரோட இருந்தப்ப… நீங்க அவங்களுக்கு எதுவுமே செய்யல… நான் சின்ன பையன், ஒங்க கிட்ட இதுவரைக்கும் எதுவும் கேட்டதில்ல.. நீங்களும் எதுவும் வாங்கிக் கொடுத்ததில்ல.. இப்ப அம்மாவுக்காக ஒண்ணு கேட்குறேன்… அப்பா… ஒங்க கடையிலயிருந்து அம்மாவுக்காக ஒரு சவப்பெட்டி அனுப்புவீங்களாப்பா…?”
(2002-ஆம் ஆண்டு)
– விண்ணில் ஒரு மணல் வீடு (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: பிப்ரவரி 2011, தமிழ்க் கலை அச்சகம், சிங்கப்பூர்.
| ஆசிரியரின் பிற நூல்கள் கதைத் தொகுதிகள் மரபுத்தொடர்க் கதைகள் (1990) ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு (1995) மனதில் உறுதி வேண்டும் (1995) தியாகப் பிறவி (1995) கட்டுரைத் தொகுதிகள் ஊன்றுகோல் (1989) கட்டுரை மலர்கள் (1990) என்னுரை - விண்ணில் ஒரு மணல் வீடு - பிப்ரவரி 2011 சிறுகதை எழுதுவது என்பது ஒரு கலை. அத்தகைய கலையை ஆர்வத்தோடு படைப்பவனும் படிப்பவனும் கலைஞன். இத்தகைய சிறுகதைகளை ஆர்வத்தோடு வாசகர்கள்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
உறவுகள்
முல்லை அமுதன்
September 27, 2026
பாட்டி சொன்ன கதை
தெளிவத்தை ஜோசப்
September 27, 2026
வேர்கள்
புஷ்பராஜ் கந்தசாமி
September 27, 2026