வேட்டை




தன் முன் கைகளை இறுக்கமாக கட்டியபடி பவ்யமாக நின்ற மக்கள் நல அமைச்சர் பெரியமுத்துவை பார்த்து,
“யோவ்! பெரியமுத்து, உன் தொகுதிதான் ரொம்ப மோசமா, வீக்கா இருக்குன்னு… நாம அனுபிச்ச, தனியார் சர்வேயில தெரிய வருது …”
என்று ஒரு ரிப்போட்டை மேசையின் மீது தூக்கிப் போட்டு, கோபமாக சொன்னார் கட்சித்தலைவர்.
“தெரியுதுங்க தலைவா… அதான்… ஏதாவது பண்ணலாம்னு …” மெதுவாக தலையை சொரிந்தபடி இழுத்தார் அமைச்சர் பெரியமுத்து.
“இப்படியே தலைய சொரிஞ்சின்னா, எலக்சனுக்கு அப்புறம் கம்பிக்கு பின்னாடி, கொசுக்கடிக்கு ஒடம்ப சொரிய வேண்டியது தான்”
“தலைவா, நாம எப்படியும் இந்த தொகுதியல ஜெயிப்போம், என்ன நம்புங்க…” என்றார் அமைச்சர் பெரியமுத்து.
“ஜெயக்கனும்யா, ஜெயிக்கனும்… இல்லேன்னா உன்னோட இரண்டு கோடி இலவச வேட்டி, சேலை உழலை எதிர்கட்சி காரன்கிட்ட நானே கசிய விட்டுவேன், அஞ்சு வருசத்துக்கு நீ கோர்டு படியேறி எறங்கனும், நல்லா ஞாபகம் வெச்சுக்கோ”
“தலைவா …!” என்றார் அதிர்சியுடன் பெரியமுத்து
“போய்யா, எப்படி ஜெயிக்கிறதுன்னு வழியை பாரு…”
“ஆகட்டுங்க தலைவா”
பெரியமுத்து ஆசிர்வாதம் வாங்கிகொண்டு வெளியே வந்தார்.
மறுநாள் தன் அலுவலக அறையில்,
தன் முன் நின்றுகொண்டிருந்த கட்சிக்காரன் மாரியை பார்த்து,
“என்னைய்யா சொல்ற, அந்த மஞ்ச குப்பத்துல உள்ள பத்தாயிரம் ஓட்டு நமக்கு கிடைக்காதா ?” என்று கேட்டார் அமைச்சர் பெரியமுத்து, தொடர்ந்து,
“ஏன்யா, அது ஒன் ஏரியா தானே ? எல்லாம் ஒனக்கு தெரிஞ்ச ஆளுங்க தானே ?”
“என்னங்க பன்றது தலைவரே, அவுங்க நாலு வருசமா கேட்டுகிட்டு இருக்காங்க… ஊருக்குள்ள கொழா தண்ணி வர்ரதில்ல… ”
“கழிப்பிட வசதி இல்ல… மழை நாள்ல கால்வாய் இல்லாததால், குடிசைங்க முழுகிடுது … ”
“எந்த உதவியும் கிடைக்கெறது இல்ல … அதனால… அவுங்க யாருக்கும் இந்த தடவை ஓட்டு போட போறதில்லையாம்…”
“அந்த ஓட்டுங்களை சேர்த்தா தான்யா, நாம லீடிங்கல வரமுடியும்”
“அதாங்க தலைவா எனக்கு ஒன்னும் புரியல …”
“ஏன்யா, கள்ள ஓட்டுபோட கூட ஆள புடிக்க முடியாதா ?”
உறுதியான குரலில் மாரி, தலையை மறுத்து அசைத்தப்படி
“அது முடியாதுங்க தலைவா”
“ஏன்யா முடியாது ?”
“அவுனுங்க மொரடனுங்க, ஊருக்குள்ள புதுசா யாரு வந்தாலும், அவுனுங்க கண்டுபிடிச்சு வெட்டிடுவானுங்க, ”
“சொல்லு… ஒரு குடுசையோட மதிப்பு எவ்வளவு இருக்கும் ?”
“எல்லாம் கூரை குடிசைதான், என்ன ஒரு இரண்டாயிரம் இல்ல மூவாயிரம் இருக்கும் தலைவா”
“சரி, நான் ஒருகுடிசைக்கு பத்தாயிரம் தர்ரேன்”
ஆச்சரியமாக பார்த்தான் மாரி,
“தலைவரே, ஒரு குடிசைக்கு பத்தாயிரம்னா, மூவாயிரம் குடிசைக்கு …” என தொடர்ந்த மாரி,
“தலைவா, பத்தாயிரம் ஓட்டுக்கு, இவ்வளவு செலவு ரொம்ப அதிகமாபடுது !”
“நான் கட்சி காசையோ, கை காசையோ கொடுக்கலையா…”
“பின்ன எப்படி தலைவா சமாளிப்பிங்க?”
“அரசாங்க பணம் !”
“அரசாங்க பணத்தை எப்படி தலைவா இலவசமாக கொடுப்பது ? அதுவும் தேர்தல் கமிசனும், எதிர்கட்சி காரனும் கண்னுல வெளக்கண்ணைய ஊத்திக்கிட்டு பாத்துக்கிட்டு இருக்கானுங்களே”
“கொஞ்சம் யோசிக்கனும்யா, நான் யோசிக்கிரதால தான் மந்திரியாக இருக்கேன்”
‘தெரியாத பின்னே, இல்லென்னா கட்சிக்கு உண்டியல் குலுக்கினவெல்லாம், இப்படி மந்திரியாக ஆகியிருக்க முடியுமா’ என்று தனக்குள் நினைத்துக் கொண்டாலும் மாரி,
“சொல்லுங்க தலைவா, உங்க அறிவு யாருக்கு வரும்!” என்றான்
சுற்றும் முற்றும் பார்த்தவாரு அவன் காதுக்குள் கிசு கிசுத்தார் பெரியமுத்து.
மாரியின் முகம், பயத்தில் கறுத்தது,
“தலைவா …”
“என்னைய்யா, தயங்குற ?”
“தலைவரே … அது வந்துங்க … எங்க சொந்த காரங்க எல்லோரும் … அந்த ஏரியாவுல தான் இருக்காங்க, என்னோட பழைய வீடு கூட இன்னும் அங்க தான் இருக்கு அதுனால …”
“என்னைய்யா, சொந்தகாரங்க ? அவுனுங்களோட இரண்டாயிரம் பொறுமான மான குடிசைக்கு, அவனவுனுக்கு பத்தாயிரம் கிடைக்க போறது கசக்குதா?” என தொடர்ந்தவர்
“உனக்கு என்னையா பாதிப்பு வந்துட போவுது? உன் புது வீடு பெசன்ட் நகர்ல தானே இருக்கு ?” மேலும் தொடர்ந்தவர்,
“இத சரியா செஞ்சிட்டேன்னா, உனக்கு அஞ்சு லட்சம் தர்ரேன், அப்புறம் நீ தான் அங்க வட்ட செயலாளர்”
“என்ன புரிஞ்சுதா ?”
“இந்த அஞ்சு லெட்சம், அரசாங்க பணம் இல்லைய்யா, நம்ம கட்சி பணம்” என்றார் சிரித்துக்கொண்டு.
“சரிங்க தலைவா, பசங்க இருக்கானுங்க பேசி முடிச்சிடுறேன் …” என்று மாரி விடைபெற்றுக் கொண்டான்
மறுநாள் மலை ஆறு மணிக்கு, மாரி பெசன்ட் நகர் வீட்டில், மனைவி மரகதத்தின் மடியில் படுத்துக்கொண்டு, செல்போன் அழைப்புக்காக பரிதவிப்புடன் இருந்தான்.
சாவு மணிபோல், செல்போன் மணியடித்ததும் எழுந்து உற்சாகத்துடன், காதில் வைக்க
“யாரு மாரியா ?”
மாரி எதிர்பார்த்த மாதிரியே, மறு முனையில் பதட்டமான குரல், அடையாளம் கண்டு கொண்டான், பழக்கபட்ட குரல் என்பதால் சற்று கலவரம் அடைந்தான்
“மாமா சொல்லுங்க …”
“மாரி, நம்ப மோசம் போய்டோம் மாரி, இங்க குடிசைங்கெல்லாம் …” என்றார் பதட்டமான அழுகையுடன் மாரியின் மாமனார்
“மாமா, நீங்க எங்கேர்ந்து பேசுறிங்க ?” பட படப்புடன் கேட்டான் மாரி
“மஞ்ச குப்பத்திலேர்ந்து மாரி …”
“பதட்டப் படாதிங்க மாமா, என்னாச்சு சொல்லுங்க ?”
“என் பெரிய பொண்ண பாக்கலாமுன்னு வந்தேன்… கூடவே, உன் மகன் செல்ல முத்துவை அவன் ஸ்கூல்லேர்ந்து கூட்டிட்டு…”
கலவரமானன் மாரி,
“என்னது செல்ல முத்தக் கூட்டிக்கிட்டு போனிங்களா ?”
“இப்ப நம்ம செல்லமுத்து… செல்லமுத்து…” குரல் உடைந்து, திக்கியது
“சொல்லுங்க மாமா, என் பையன் செல்லமுத்துக்கு என்னாச்சு …” மேலும் கலவரமானான் மாரி
“திடீர்னு… குடிசைங்க தீப்பிடிச்சு எரிஞ்சிப்ப… பசங்களோட ஒடி ஒளிஞ்சி விளையாடுன நம்ப செல்ல முத்து … குடிசைகுள் போயி கதவ தாழ்பாள் போட்டுகிட்டதால … கருகி … எரிஞ்சு போய்டான்… எம் பேரன் … கதறி கதறி அவன் அழுதும் … என்னால நம்ப புள்ளய காப்பத்த முடியல…ஐயோ! எல்லாம் போச்சே” என்று பலமாக குழுங்கி கேட்ட குரலை தொடர்ந்து,
மாரியின் கையிலிருந்த செல்போன் தன்னிச்சையாக கீழே விழுந்தது
மயங்கி, மாரடைப்பில் சரிந்தான் மாரி.
மறுநாள் மாலை பத்திரிக்கையில், முதல் பக்கத்தில், தலைப்புச் செய்திக்கு கீழ்,
‘மஞ்ச குப்பத்தில் அமைச்சர் நேரில் ஆறுதல்’ என்ற தலைப்பில்,
மூவ்வாயிரம் குடிசைகள் தீக்கிரையான மஞ்ச குப்பத்தில், குப்பத்து வாசிகளுக்கு, இலவச அரிசியும், குடுப்பத்திற்கு ரூபாய் பத்தாயிரமும் நிவாரணம் வழங்கி ஆறுதல் கூறினார் மக்கள் நல அமைச்சர் பெரியமுத்து.
– மார்ச் 2006 (கோவி.கண்ணன் [geekay@singnet.com.sg])