கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 2, 2025
பார்வையிட்டோர்: 457 
 
 

(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

புதர் மறைவிலிருந்து அந்தக் கண்கள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தன. கண்கள் மட்டுந்தான் தெரிந்தன. ஏனைய பிரதேசங்களை செடிகொடிகள் மறைத்திருந்தன. அந்த மறைப்பால் அந்தப் பார்வையின் அகோரம் கூடுவது போல் தெரிந்தது. கண்களில் தெறித்த வேட்கை அவனை வேட்டை ஆடிவிடும் போல் பட்டது. ஆயினும் அவனுள் அச்சம் எழவில்லை. ஆனால் அந்தப் பார்வையைச் சந்திக்கக் கூடாதென்ற ஒரு சிறு குறுக்கம் மட்டும் மேலெழுகிறது. இருந்தும் அந்தக் குறுக்கம் கூட வலுக்கொண்டிருக்கவில்லை. ஏனெனில் வழமையான வேட்டைக்காரன் போல், அந்தக் குறுக்கத்தை உதறிக்கொண்டு அதன் பார்வையை எதிர் கொண்டு வெறித்து நோக்க வேண்டும் போன்ற வேட்கை அதன் பார்வை யால் தூண்டப்படுகிறது. அதன் தூண்டுதலால் கிளர்வுற்று அவன் தனது கள்ளப் பார்வையை எறிந்தபோது, அதன் விழிகளில் குரூரமான வெற்றி முறுவல் தெரிந்தது. அப்போதெல்லாம் அதன் மீசையின் கம்பிமயிர்கள் சிலிர்த் தெழுந்து மின்னுவதை அவனால் கற்பனை பண்ண முடிந்தது. 

அதிகாலையிலிருந்தே அது அப்பிரதேசத்தில் தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவன் அதைக் கண்டு கொண்டது காலை வெயில் ஏறிய பின்னர் தான். காலையிலிருந்தே யாரோ அவனைத் தொடர்ந்து பின்னால் வந்து கொண்டிருப்பது போன்ற உணர்வு எழுந்து கொண்டுதான் இருந்தது. வழமையாக அவன் போன்ற வேட்டைக்காரர்களுக்கு ஏற்படும் உணர்வு இது. அவன் இந்த ‘உணர்வு’ளின் பித்தலாட்டங்களை நன்கு அறிந்தவன். அதனால் அதற்கு முக்கியத்துவம் அளிக்காது அவனது வேலையில் கருத்தாய் இருந்தான். இருந்தாலும் அவனை ஏதோ முன்னால் கனமாக அழுத்துவது போன்ற உணர்வு அடிக்கடி எழுந்ததும் நிமிர்ந்தான். அவ்வளவுதான். அந்தக் கண்கள்! ஒரு பத்து யார் தூரத்துக்கப்பால் ஆழமான புதர் மறைவில் அவனையே குறிவைத்துப் பார்த்துக் கொண்டிருந்தன. 

அவன் நிலை தர்ம சங்கடமாய் போய்விட்டது. அவன் தேடிக் கொண்டு வந்த, அவனால் குறிவைக்கப்படவேண்டிய ஒன்று, அவன் எதிர்பார்த்திராத வழியில் அவனில் குறிவைத்துக் கொண்டிருந்தது! அதன் விழிகளில் இருந்து பாய்ந்த நரைத்த குரூரம் அவனை நிலைதளர செய்தது. அவனது பாதுகாப்புக்கான சகல ஆயுதங்களும் அவனிடம் அந்நேரம் இருந்தும் அவற்றை நீட்ட முடியாது போய்விட்ட எதிர் பாராத இக்கட்டு. காரணம் அவன் தன்னை சுதாகரித்துக் கொள்ள முன்னரே. அது தயார் நிலையில் தன்னை நீட்டிக் கொண்டு நிற்பதை அதன் விழிகள் அறிவித்து விட்டன. இன்னும் அதனிடமிருந்து ‘ஹான்ட்ஸ் அப்” என்ற குரல் எழ வேண்டியது மட்டுந்தான் பாக்கி. அதற்குள் அவன் தனது தற்பாதுகாப்பிற்கான தந்திரோபாய பின்னடிப்புகளைச் செய்யலாம். 

என்றாலும் அவனுக்குப் பயம் எழவில்லை. 
இது ஒரு பெரும் சவாலாகவேபட்டது. 

ஏனென்றால் இந்த அனுபவம் அவனுக்கு புதிதல்ல. அத்தோடு அவனது எதிரியும் புதியவரல்ல அவனுக்குப் பழக்கப்பட்ட எதிரி. அதே போல் இது எதிர்பாராத எதிர்கொள்ளல் ஆயினும் இதுவும் ‘முன்னர்’ நிகழ்ந்த ஆயிரம் எதிர்பாராத நிகழ்வுகள் போல், பழக்கப்பட்ட ஒரு எதிர்பாராத நிகழ்வு. அவன் உஷாரானான். 

அவன் அதைத் தாக்க முன் அது அவனை நோக்கி வைத்திருக்கும் குறியிலிருந்து தப்ப வேண்டும். அதன் குறியிருந்து தப்புவதற்கு அவனது நிலைதளம்பாத மனோதிடம் தேவை. அதன் பின்னர்தான் அதைத் தாக்குவதற்குரிய நிலையைத் தீர்மானிக்கலாம். ஆரம்பத்தில் மனோதிடம் ஏராளமாக இருப்பது போலவே படும். அதை எதிர்பாராது சந்தித்தால் கூட சமாளித்துவிடலாம் என்கிற பலத்த நம்பிக்கை எப்போதுமே இருக்கும். ஆனால் அதை இப்படி திடீர் என சந்திக்கும் ஒவ்வொரு சமயமும் அவனது அந்த நம்பிக்கை சொல்லாமல் கொள்ளாமல் காலைவாரி விடுவது அவனது அனுபவங்களில் ஒன்று. காரணம், அதன் பார்வையே அதன் ஆயுதங்களில் பலமான ஒன்று. பாய்ந்து அது எவரையும் கீறிக்கிழித்து குதறுவதற்கு முதல் அதன் பார்வையாலேயே செயலிழக்கச் செய்துவிடும். அத்தகைய ஒரு மனோவசிய சக்தி அந்தப் பார்வைக்கு! திட்டிப் பாம்பின் விடம் என்பார்களே. அது மாதிரி அதை எதிர் கொண்டவுடனேயே தலைக்கு விஷம் ஏறுவது போல் கிறு கிறுவென தலை சுழல ஆரம்பித்துவிடும்! அதன் பின் அதற்கு தாக்குதல் இலகு. 

இதில் அவனுக்கு நிரம்ப அனுபவம். 

அவன் அதன் பார்வையை எதிர்கொள்ளும் ஒவ்வொரு சமயமும் அதற்கு எதிராக தன்னை சுயமனோவசியம் செய்து கொள்ளுவான். அது அவனுக்கொரு சவால்! ஒரு பலப்பரீட்சை! வேண்டுமென்றே அதன் பார்வையை எதிர்கொண்டு தன்னை சுய மனோவசியப்படுத்திக் கொள்ளுவான். 

அவனையும் அதற்கு நன்றாகத் தெரியும். 

அவன் கொஞ்சம் கஷ்டமான பேர்வழி என்று அதற்குத் தெரியும். மேலும் அவனது வேட்டையாடல் முறை மற்றவர்களில் இருந்து வித்தியாசமானது என்றும் அது அறியும். அவனது பொறியில் பல தடவை சிக்கி தோல் உரிபடமுன் தப்பித்தோடியிருக்கிறது. அதே போல் அவனும் வேட்டையாடத் தொடங்கிய நாளிலிருந்து அதனிடம் சிக்கி குற்றுயிரும் குறை உயிருமாய் தப்பிப் பிழைத்த நாட்களும் உண்டு. 

அவன் தனது பால்பண்ணையைச் சுற்றி கட்டை நாட்டி முள்ளுக்கம்பி வேலி அறைந்திருந்தான். காட்டுப் பிரதேசமானதால் விலங்குகளின் தாக்குதலை எதிர்பார்த்தே அவன் அப்படி கட்டுக் கோப்பாக வேலி போட்டிருந்தான். எனினும் கறவைகளின் மொச்சையில் மோப்பம் கொண்டு அவற்றைத் தாக்க விலங்குகள் வருவதுண்டு. ஓநாய், கரடி, சிறுத்தை. இன்னும் இவற்றுக்கு பின்னால் நரிகளின் பரிவாரம் தொடர்வதும் உண்டு. அவைகள் விட்ட எச்சங்களைச் சுவைபார்க்க. 

அவனது மிகுந்த பாதுகாப்பு அடைப்புக்களையும் மீறிக்கொண்டு இது ஒருநாள் அவனது பண்ணையைத் தாக்கிற்று. இனிமேல் எந்த வித விலங்குகளின் தாக்குதலும் நடைபெறாது என்று அவன் திடமாக நினைத்த போதுதான் அது தாக்கிற்று. அந்தத் தாக்குதல் அவனை வெகுவாகப் பாதித்தது. அது அவனையே மொட்டை அடித்து சாணிதப்பி சந்தியில் நிறுத்தியது போல் அவனுக்குப்பட்டது. அவ்வளவு அடைப்புக்களையும் மீறி அவன் சற்றும் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் அதன் தாக்குதல். 

காவல் போட்டதையும் மீறி ஒரு உடைப்பு நிகழ்ந்த பின்னர், அதில் அது ஒரு சுவை கண்டது. தொடர்ந்து இடைக்கிடை அதன் தாக்குதல். அவனுக்கு தன்மேலேயே ஆத்திரம் பீறிடுகிறது. அதன் ஒவ்வொரு தாக்குதலோடும் அவனது இயலாமையும் வலுவின்மையும் நிர்வாணம் ஆக்கப்படுவது போல்… 

அது எப்படி பதுங்கிப் பதுங்கி வருகிறது! 

அது பதுங்கும் போது சிறுத்தை மாதிரித்தான் இருக்கிறது. ஆனால் அது எப்போதுமே சிறுத்தையாக இருந்துவிட்டால் விட்டது தொல்லை. அதை வேட்டை ஆடுவது சுலபம். சிறுத்தைக்குரிய தடங்களிலேயே வைத்துத் தீர்த்து விடலாம். ஆனால் இதுவோ எல்லா விலங்குகளின் தந்திரங்களையும் நேரத்துக்கேற்ப, சூழலுக்கேற்ப தனதாக்கிக் கொள்கிறது ஆயுதமாகப் பாவிக்கிறது! அதுதான் எல்லா முட்டுக்கட்டைகளுக்கும் முக்கிய காரணம். 

ஒருமுறை அதை அவன் துரத்திக் கொண்டு போன போது அது பார்த்திருக்கக் கூடியதாக ஒரு புதருக்குள் மறைந்தது. அவன் உடனே சிறிதும் தாமதியாது, வெகு பிராயத்தனப்பட்டு, அடிக்கு மேல் அடிவைத்து, நழுவி நழுவிச் சென்று அந்தப் புதரை நோக்கிக் குறி வைத்த போது, திடீரென அது நரிபோல் இன்னொரு புதர்வழியே வெளிவந்து கூக்காட்டி அவனைக் கேலி செய்தது!. இன்னொரு முறை, அதை மிக லாவகமாக வளைத்து உச்சந் தலையில் ஒரே போடாப் போடலாம் என்று ஆயத்தமான போது, திடீரென அது அவன் வளர்ப்பு நாய் போல் வாலைக் குழைத்துக் கொண்டு அவன் கால்களை நக்கவரும் தோரணையில் நின்றபோது, “அப்பாடா விட்டது தொல்லை! ஒருபடியாக ஆளை அமத்தி விட்டேன்” என்று அவன் பெருமூச்சு விட்டு ஓய்வதற்குள், அது ஒரு சுழிப்பு சுழித்து, அடுப்பில் காய்ச்சப்பட்டுக் கொண்டிருந்த பால்சட்டியைக் கவிழ்த்து நக்கிவிட்டு ஓடிற்று! நள்ளிரவில் அது திடீரென தாக்கும் போது கரடிபோல் அது தன் குரூர நகங்களைக் காட்டத் தவறாது. எதிர்பாராதவிதமாக இப்படிப் புதர்மறைவில், நேருக்குநேர் சந்தித்துக் கொள்ளும் போது அது அந்தத் திட்டிப் பாம்புபோல் தன் பார்வையாலேயே யாரையும் செயலிழக்க வைத்துவிடும்! 

இது என்ன மிருகமா? அல்லது வேறேதாவதா? 

இதை வேட்டையாடுவதற்குரிய வழிமுறைகள் என்ன? இவைதான் இதனோடு அவன் போராடிய ஆரம்ப காலத்தில் அவனைப் பிய்த்தெடுத்த கேள்விகள். 

அது மிருகந்தான் என்பதை பின்னர் அறிந்தான். அத்தோடு அது மிருகங்களில் எல்லா மிருகங்களும் ஒன்று சேர்ந்த ஓர் புதுப் பிறவி என்பதையும் அறிந்தான். 

அதுமட்டுமல்ல அது எத்தனையோ பண்ணைகளைத் தாக்கி அனுபவப்பட்டது; கள்ளப்பட்டது. 

அதனால் அது தன்காரியத்தை சாதித்துக்கொள்ளும் முயற்சியில் பலவிதமான தந்திரங்களையும் பலவற்றின் தந்திரங்களையும் சூழலுக்கேற்ப தனதாக்கிக்கொள்ளும் திறமைமிக்கது. இதை அவன் அதனை வேட்டையாடத் தொடங்கிய நாளிலிருந்து படிப்படியாகப் புரியத் தொடங்கியிருந்தான். அத்தோடு. அதன் தந்திரோபாய நுணுக்கங்களில் சுவையும் கண்டிருந்தான், அதனால் அதற்கெதிராக ஆயுதம் தூக்கும் ஒவ்வொரு சமயமும் அவனுக்குள் ஒரு கிளர்ச்சி. 

அவன் இதற்கு அனுபவப்படாத ஆரம்பகாலத்தில், அதன் தாக்குதல்களைத் தாங்க முடியாதபோது, எல்லாரும் செய்வது போலவே, ஒரு உயர்ந்த மரத்தின் மேல் கொட்டில் ஒன்று அமைத்து.இரவும் பகலும் அதற்குள் இருந்து காவல் புரிந்தான். அதனை முறியடிப்பதற்காக தவம் கிடந்தான். அது ஆயுதம் சகிதமாக அவன் இருக்கும் காவல் தலத்தைக் கண்டிருக்க வேண்டும். உயர ஒரு மரத்தின் மேல் கொட்டிலமைத்து, தன்னைக் கொல்லுவதற்காக அவன் தவம் கிடப்பதை கண்டதாலோ என்னவோ, அதன் தலைகாட்டல் அவன் பண்ணைப்பக்கம் நிகழவில்லை. இது அவனுக்கு ஒரு தைரியத்தையும் சந்தோஷத்தையும் அளித்தது, இனி ஆள் தலைகாட்ட மாட்டார். அவன் தனக்குள் நம்பிக்கை கொண்டான். ஆனால் அவனுக்குள் அந்த நம்பிக்கை பலமாக இறுகிக் கொண்டு வந்தபோது, ஓர் நாள் நள்ளிரவு திடீரென பற்றைகளின் பக்கமிருந்து ‘சரே’லென்று ஒரு சத்தம். அவன் திடுக்கிட்டு விழித்து துவக்கைத் தூக்குவதற்குள் அது அவன் மரக்கொட்டிலை நோக்கி பாய்ந்து எழுவது அவனது மங்கிய கொட்டில் விளக்கொளியில் ஆடியது. ஆனால் அடுத்த வினாடி அதன் பாய்ச்சல் அவனிருந்த கொட்டிலை எட்டமுடியாது சிறிதளவு வழுவிப்போக, அது அந்தரித்து மீண்டும் ‘தொபீர்’ என்று நிலத்தில் விழுந்தது, அதன் அந்த விழுக்காட்டு ஓசையே அதைப் பயமுறுத்த அது காட்டுள் பாய்ந்து மறைந்தது. 

எல்லாம் ஒரு நொடிப்பொழுதில் நடந்தேறின. 

இத்தனைக்குள் அவன் வாய் அவனை அறியாது தேவாரம் பாடி, கைகள் ஆகாயத்தை நோக்கி சப்தவெடி எழுப்பி அவனை அவனாக தெளிவித்துக் கொண்டிருந்தன. 

மீண்டும் ஓர் நள்ளிரவு இப்படி நிகழ்ந்தது. இம்முறை கொட்டிலை நோக்கிய அதன் பாய்சல் தவறிய போது அவன் தயாராய் இருந்து அதற்கு குறி வைத்தான். ஆனால் அது தப்பிவிட்டது. 

அதன் பின்னர் அது அவன் மரக்கொட்டில் பக்கமோ, அவன். 

பண்ணைப்பக்கமோ தலைகாட்டவே இல்லை. 

இந்த நிலை ஆரம்பத்தில் அவனுக்கு சந்தோசத்தை அளித்தாலும் பின்னர் போகப்போக அவனுக்கு அது சந்தோசமின்மையையும் ஒரு தரக்குறைவையும் தருவது போலவே பட்டது. 

அது ஏன் தலைமறைவாயிற்று? 

உண்மையில் அது தன் தோல்வியால் சூடுபட்டு பின்வாங்கிற்றா அல்லது உயரத்தே மரத்தில் கொட்டில் போட்டிருக்கும் இவன் தன் தாக்குதலுக்கு தகுதியற்றவன் என்ற புறக்கணிப்பா? 

அவனுக்கு ஏனோ பின்னதே அதன் வராமைக்கு காரணமாகப்பட்டது. “என்னைத் தோற்கடிக்கவிரும்பினால் என்னை என் தளத்திலேயே சந்திக்கவும். அங்கே மேலேயுள்ள மரத்திலல்ல. இறங்கிவா, இந்த நிலத்திலே போட்டிபோடுவோம்’ என்ற அது அவன் பின்னால் வந்து அடிக்கடி குசுகுசுப்பது போல் பட்டது. 

இந்தக் குசுகுசுப்பு அவன் மனதை அதிகம் தொல்லைப்படுத்தத் தொடங்குவது போல்பட்டதும் அவன் தனது மரக் கொட்டில் காவல் தலத்தை மூடிவிட்டு கீழே இறங்கி ஊடாட வெளிக்கிட்டான். 

பல நாட்கள் ஒன்றுமே நடக்கவில்லை. 

அப்போ அது போய் விட்டது? இனி அது வர மாட்டாது? அவனைத் தொந்தரவு செய்த அந்தக் ‘குசுகுசு’ப்பெல்லாம் வெறும் மனப்பிராந்தி? 

அப்படியானால் அவனளவில் அதை ஜெயித்து விட்டான். இனித் ‘தம்பிப்பிள்ளை’ தலை காட்டமாட்டார். 

அவனது நம்பிக்கை உறுதி கொண்டது. 

ஆனால் எதில் அவன் உறுதியாக நம்புகிறானோ அதில் ஓட்டை விழுவதுபோல், அதற்கு எதிராக ஒன்று நிகழும். அந்த ஓட்டையில் கண் வைத்துப் பார்த்தால் உலக இயக்கமே தெரிவதுபோல்! எல்லாவற்றையுமே நிறைவாகச் செய்து விட்டோம், எல்லாம் மங்களமாகவே முடிந்து விட்டது என்று நிம்மதியாக மனம் ஓயும்போதுதான் எங்காவது ஒரு குறை அல்லது ஒரு அமங்கல நிகழ்வு துருத்திக் கொண்டு வெளிவரும். அது எமக்கு அப்போது ஒரு குறையாக அல்லது அமங்கலமாகத் தெரிந்தாலும் அதுவே அடுத்த கட்ட வளர்ச்சியின் மங்கல கும்பமாக அல்லது மங்கலத் திருப்புமுனையாக அமையப்போவதை பலர் அறிவதில்லை. அவனும் அதை அப்போது அறியவில்லைதான். 

அது போய்விட்டது என்று அவன் உறுதியாக நம்பத் தொடங்கியபோதுதான் அது திரும்ப வந்து அவன் பண்ணையை மிக மோசமாகத் தாக்கிற்று. கனகால இடைவெளியின் பின் நேர்ந்த தாக்குதலாதலால் வட்டியும் குட்டியுமாகச் சேர்த்து வைத்துத் தாக்கிற்று. அடுத்தடுத்துத் தாக்கிற்று. ஆனால் இந்தத் தாக்குதலின் போதுதான் அவன் அது பற்றி, அதன் தந்திரங்கள் பற்றி அறிந்துகொள்கிறான். அனுபவம் கொள்கிறான். அத்தோடு அதை வேட்டையாடும் நுணுக்கங்கள் பற்றியும் தேர்ந்து கொள்கிறான். 

அதன் பின்னர் இப்போது அதை நேருக்குநேர் சந்திக்கும் திராணி. முன்னர் மரவீடு கட்டிக் கொண்டு அதை வேட்டையாடத் தவங் கிடந்த காலம் அவனுக்கு ஒரு குழந்தைப் பிள்ளைத்தனமாகவே பட்டது. இன்றைய நிலையில் நிலத்தில் இறங்காமல் ஒதுங்கியபடி உயர இருந்து கொண்டு அதை வேட்டையாட நினைத்தது ஆண்மையாகவோ அல்லது மனித வாழ்க்கையாகவோ அவனுக்குப் படவில்லை. அந்த மிருகத்தை, அது பதுங்கிப் பதுங்கிப் பாயும் மண்ணிலேயே, அதன் தளத்திலேயே சந்திக்க வேண்டும். அவனை சதா நச்சரித்துக் கொண்டிருந்த அந்த குசுகுசுப்பில் அர்த்தம் இருப்பதையே இப்போ அவன் கண்டான். அந்தக் குசுகுசுப்பு அவனை மனிதனாக்கும் மங்கல அழைப்பாகவே இப்போதுபட்டது. அதனால் இப்போ அதனை நேருக்குநேர் சந்திக்கும் மனோவலிமை. இந்த மனோவலிமை அடுத்தடுத்து அதன் ததாக்குதலுக்கு இலக்கான பின்னரே அவனுக்கு சித்தித்தது. இது அப்போது அவனது மரவீட்டுக் காவல் அனுபவத்தோடு ஒப்பிடுகையில் தோல்வியாகவும் துக்கமாகவும் தோற்றினாலும் அது அவன் வாழ்க்கையில் ஒரு பெரும் திருப்புமுனை மட்டுமல்ல, ஒரு முற்போக்கான பெரும் பாய்ச்சல் என்றுதான் இப்போது அவன் எடுத்துக் கொள்கிறான். 

இதன்பின் இதன் வேட்டையில் அவனுக்குச் சுவை பிறக்கிறது.

அதைச் சந்திப்பதில் ஒரு திகில் நிறைந்த பெரும் ஆவல்.

அதை அதன் தளத்திலேயே சந்திக்கும் வைராக்கியம், வீரம். அதற்கான நுணுக்கங்களில் தேர்வு. 

என்றாலும் அவனுக்கு அதனை பூரணமாக அடக்கி வெற்றி கொள்ள முடியவில்லைதான். அது தனது தந்திரங்களில் மிகுந்த நெகிழ்வும், நுட்பமும் கொண்டதாகையால் அவன் அடிக்கடி அதற்கு களப்பலி கொடுத்துக் கொண்டுதான் இருந்தான். ஆனால் முன்னையப் போலல்ல. சாதாரண சில்லறை இழப்புகளே. அந்த ரீதியில் அவனது இன்றைய நிலை வெற்றியை அண்மித்த நிலையே என்றுதான் சொல்ல வேண்டும். அந்தளவுக்குப் பெருமைப்படலாம். ஆயினும் எதிலும் அவன் அறுதியிட்டு கூற முடியாத நிலை. இந்த நிலையே மேலும் தொடரும் என்றும் அவன் கூறமாட்டான். அந்தளவுக்கு இந்த வேட்டையாடலில் அவன் சூடு கண்ட அனுபவசாலி. 

இதோ இப்போ அதன் கண்கள் அவனையே பார்த்துக் கொண்டிருக்கின்றன. இது ஓர் எதிர்பாராத சந்திப்பு. ஆனால் இதையே அவன் சதாஎதிர்பார்த்துக் கொண்டுதான் இருந்தான். ஆனால் இந்த எதிர்பாராத சந்திப்பில் அது ஒரு நிமிஷம் அவனை முந்திக் கொண்டு விட்டது. அதனால் அது அதற்குரிய தயார்நிலையில். எந்தக் கணத்திலும் அது அவன்மேல் பாயலாம். முந்திய ஆளாக அவன் இருந்திருந்தால் அது இப்போ அவனில் பாய்ந்து அவனைக் குதறி அவன் பாற்பண்ணையைச் சூறையாடியிருக்கும். அது தன் மிருகக் குணத்தை உடனே காட்டியிருக்கும். ஆனால் அவன் இப்போ அதனால் இலகுவாக மடக்கப்படக்கூடியவனல்லன் என்பதை அது அறியும். அது இப்போ புதுத் தந்திரோபாயங்களை நேரத்துக்கு நேரம் மாற்றிக் கொள்வதால் அதன் நுணுக்க அசைவுகளையும், அதன் விழிகளையும் தவறவிடாது பார்த்துக் கொண்டிருந்தான் அவன். 

அதன் விழிகளிலிருந்து எழும் ஆக்கிரமிப்புச் சக்திக்கு எதிராக அவனிடமிருந்து இன்னோர் மாற்று, சைக்கிக் பொம்பாட்மன்ற்! தொடர்ந்து அவன் எதிர்மனோதாக்குதல். அது அதற்குப் புரிந்திருக்க வேண்டும். திடீரென அதன் பார்வை அவனைவிட்டு, விலகி மறைந்தது; அது எங்கே போய்விட்டது? பாய்வதற்காகப் பின்வாங்குகிறதா? அல்லது உண்மையாகவே அவன் எதிர் மனோதாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் அது ஒளிந்து கொண்டதா? எதுவும் அதைப்பற்றி நிச்சயமாகச் சொல்ல முடியாது. எந்தப் பழுத்த வேட்டைக்காரனாலும் அது பற்றி ஆருடம் கூறமுடியாது. 

அவன் அதன் பார்வை வந்த திக்கையே பார்த்துக் கொண்டிருந்தான். 

இவ்வேளைகளில்தான் அவன் இன்னும் உஷாராக இருக்க வேண்டும். 

ஆபத்து எப்போதும்வரலாம். மறைந்த அதன் தடங்கள் எங்கே என்று இலகுவாகத் தெரியாத வேளை. மறைந்த எதிரி எங்கே இருக்கிறான், என்ன செய்யக்கூடும் என்று யூகிக்க முடியாத கஷ்டமான நிலை இது. ஆகவே’ இந்நேரங்களில் இரட்டித்த விழிப்புத் தேவை. 

அவன் வெகு உற்சாகமாகவும் உன்னிப்பாகவும் வெகுநேரம் காத்திருந்தான்; மறைந்த அதன் தலைக்கறுப்பே அங்கு இல்லை. திரும்பி வருவதற்கான எந்தச் சின்ன அறிகுறியும் அங்கு தென்படவில்லை. உண்மையாகவே ஆள் தன் தாக்குதலை ஒத்திப்போட்டுவிட்டு ஓய்வுக்குப் போய்விட்டார் போலும்,அப்போ அவனும் சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்; கொஞ்சம் சகஜ நிலைக்குத் திரும்பலாம். அவனுக்குள் ஓர் சந்தோசம் ஊறுவது போல் தெரிகிறது. 

அப்படியானால் மீண்டும் அவனுக்கே வெற்றி? அப்படியா? 

அவன் வழமையான பெருமித ஊட்டத்தோடு, சகஜநிலையில் இயங்கத் தொடங்கினான். இப்போ அவனது வேட்டையாடல் பற்றிய பிரச்சினையே அவன் பிரக்ஞையில் இருந்து கழன்று போயிருந்தது. அப்போதுதான் திடீரென அவன் பண்ணைப் பக்கம் ‘சரே’லென ஏதோ ஒரு சத்தம். தொடர்ந்து கறவைகளின் கமறலும் குதி அதிர்வுகளும். அவன் நிலை தடுமாறினான். 

இந்நேரங்களில் நிலைதடுமாறுவது ஆபத்தாக முடியும். அவன் நிலைதடுமாறிக் கொண்டே, மெல்ல எழுந்து, ‘பட, பட’வென இடிக்கும் இதயத்தோடு கதவைமெதுவாகத் திறந்தானோ இல்லையோ சரேலென அது சற்றும் எதிர்பாராத விதத்தில் அவன் அறைக்குள் பாய்ந்து வந்தது. 

அவன் பயந்துபோய் திறந்த கதவின் பின்னால் ஒளிந்து கொண்டான். அவன் இதயம் படபடவென வேகமாக இடித்துக் கொள்வது அவனுக்குத் தெளிவாகக் கேட்டது. 

அப்போதுதான் அவன் மனைவி தன்னை அழகாக அலங்கரித்துக் கொண்டு அவன் அறைக்குள் வந்திருந்தாள். 

உள்ளே திடுதிப்பென பாய்ந்து வந்த அது, நேராக அவளில் பாய்ந்தது. அவளது ஆடை, அலங்காரம் அனைத்தும் சிதைக்கப்பட்டு அவள் நிர்வாணமாக்கப்பட்டாள். ஓர் உன்மத்தம் கொண்ட உக்கிரமான தாக்குதல். கதவின் பின்னால் மறைந்து நின்ற அவன், அந்த உன்மத்த விரிவின் அகோரத்தில் இல்பொருள் ஆனான். 

ஒரு மணித்தியாலத்தின் பின் அது கறவைகளின் பால் மொச்சை வீச அங்கிருந்து அகன்றபோது, ஆடைகள் கலைந்த நிலையில் கண்களை மூடியவளாய் கட்டிலில் கிடந்த அவன் மனைவி, சிறிது அசைந்து அவனை ஒருமுறை பார்த்து விட்டு மறுபுறம் திரும்பிப் படுத்தாள். 

அவன் கதவிடுக்கிலிருந்து வெளியே வந்து, அது வந்து போன தடங்களை வலுகவனமாக ஆய்வு செய்து கொண்டு நின்றபோது, அவன் கண்முன்னே, ராணுவத்தால் சுடப்பட்டுத் தெருக்களில் கிடந்த இளைஞர்கள், கற்பிழந்து கதறிய கன்னியர், சிதறப்பட்டு கிடந்த சிசுக்கள், தீயிடப்பட்டு எரிந்த வீடுகள், சித்திரவதைக்குள்ளான அப்பாவிகள் எல்லாம் விரிந்து அது வந்துபோன தடங்களாக மாறின. 

– 1989 திசை

– கடலும் கரையும் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூன் 1996, நண்பர்கள் வட்டம், கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *