கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 5, 2025
பார்வையிட்டோர்: 182 
 
 

(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வாசலில் அழைப்பு மணியை அழுத்தமாக அழுத்தி னான் உதயகுமார். நேரம் இரவு பதினொன்று முப்பதுக்கு மேலாகிறது. சிரிப்பை வலுவில் வரவழைத்துக் கொண்டு வந்த சில்வியா கதவைத் திறந்தாள். 

“மாலை வணக்கம்.. ஷெரி… வாங்கோ..” எனப் பிரெஞ்சு மொழியில் கூறியவாறு அவனின் கன்னங்களில் முத்தமிட்டு அணைத்தவாறு வரவேற்பறைக்குக் கூட்டிச் சென்றாள். உள்ளே அறையில் ஒரு கட்டிலில் ஒன்பது வயதுப் பிள்ளை ஜெசிகா உறங்கிக் கொண்டி ருந்தாள். பக்கத்தில் மறுகட்டிலில் தாய்க்கிழவி அரை உறக்கத்தில்… “ஷெரி..சாப்பிடுவோமா ..” எனக் கேட்டாள். “வேண்டாம்..நான் சாப்பிட்டுவிட்டேன்..” என்றான் உதயன். “நோ… நோ….. கொஞ்சம் எனக்காக.. ‘சான்விச்’ சாவது சாப்பிடுங்கோ..” என்றவாறு உதயனின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு குசினிக்குள் சென்றாள். 

“ஏதாவது குடிக்கத் தரவோ… ..” “வைனை எடுங்கோ…” என்றான் உதயன். ஒரு போதோ வைன்’ போத்தலை எடுத்துத் திறந்து கொடுத்தாள். உதயன் அதனை வாங்கிக் கொண்டு வரவேற்பறைக்கு வந்து மேசையில் அதனை வைத்துவிட்டு உட்கார்ந்தான். இரண்டு ‘கிளாசு’களைக் கொண்டுவந்து வைத்தாள். அதனுள் வைனை ஊற்றி, ஒரு கிளாசை உதயனிடம் நீட்டினாள். உதயன் ஒரு இழுவை யில் அதனை உறிஞ்சிவிட்டு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தான். அவளும் வைனை சிறிது உறிஞ்சிவிட்டு ஒரு சிகரெட் வாங்கி மூட்டிக்கொண்டாள். 

உதயன் பாரிஸ் நகருக்கு வந்து பதினைந்து வருடங் களுக்கு மேலாகிறது. பிரெஞ்சு பிராஜாவுரிமையும் கிடைத்து நான்கு வருடங்கள் கழிந்துவிட்டன… கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு மூன்று நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் துப்புரவு வேலை செய்யும்போதுதான் அவன் சில்வியாவைச் சந்தித்தான். 

காலை ஏழு மணிக்கு ஹோட்டலில் ‘துப்புரவு’ பகுதியில் சமூகமளிக்கவேண்டும். அங்கு பொறுப்பாகவுள்ளவள் சமூகமளித்துள்ளவர்களுக்கு எத்தனை அறைகள் எனப் பங்கிட்டுக் கொடுப்பாள். நான்கு மணித்தியாலம், ஆறு மணித்தியாலம் என வேலைசெய்வார்கள். ஒரு மணித்தி யாலத்தில் நான்கு அறைகள் வரை சுத்தம் செய்வார்கள். 

உதயன் பாரிஸ் வந்த காலத்தில் பகுதி நேரமாக சிறுசிறு வேலைகள் தான் செய்துவந்தான். பின்னர் நண்பன் ஒருவனின் சிபார்சின் பேரில் இந்த வேலை கிடைத்தது. அங்கு ஆறுக்கு மேற்பட்ட பெண்களும் இரு ஆண்களும் தான் வேலை. உதயனோடு வங்காள தேசத்தைச் சேர்ந்த ஒருவனும் வேலை செய்தான். 

சுத்தம் செய்வதற்கு முன்பு ஒரு தள்ளு வண்டியில், அறை களுக்குரிய கம்பளிகள், துவாய்கள், குளியலறை துப்புரவுக் கான மருந்து, கண்ணாடி, மேசை என்பன துடைப்ப தற்கான மருந்து, ‘சம்போ பக்கெற்’றுகள், சிறிய சவர்க்காரக் கட்டிகள், ‘ஜெல் மூசோன் பக்கெற்றுகள் போன்றவற்றைத் தேவைக்கேற்றவாறு எடுத்து அடுக்கிக்கொள்ள வேண்டும். அதற்கான பதிவேட்டில் அவை குறித்துப் பதிந்து பின்பு, தூசி இழுக்கும் ‘மெசினை’யும் தள்ளிக்கொண்டு ஒவ்வொரு அறையாகச் சென்று கட்டில்களில் ‘பெட்சீட்’ கம்பளி, தலையணை உறை என்பனவற்றை மாற்றி மலசல கூடம் உட்பட யாவும் பளிச்செனத் துப்புரவு செய்ய வேண்டும். 

அங்கு அறையில் தங்கிச் சென்றோர், அல்லது தங்கி யிருப்போர் மிச்சமாக விட்டுள்ள சாப்பாட்டுப் பொருட் களைத் துப்புரவு செய்வோர் சிலர் எடுத்து ஒரு பையில் போட்டு மறைத்து வீட்டுக்கு எடுத்துச் செல்வது முண்டு. சிலவற்றை அங்கேயே சாப்பிடுவதுமுண்டு. அறையில் தங்கியிருப்போர் சிலர் கட்டிலில் தலையணைக்குக் கீழ் சில்லறைக்காசு சந்தோசமாக வைத்திருந்தால் அதனையும் எடுத்துக்கொள்வர். அறையில் தங்கியிருப்போரின் விலை யுயர்ந்த பொருட்கள் சிலவற்றை ஒரு சிலர் திருடிவிடுவது முண்டு. அந்த ஹோட்டலில் ஒரு தடவை அவ்வாறு நடந்து விசாரணை நடைபெற்று இருவர் வேலை நீக்கம் செய்யப்பட்டதுமுண்டு. 

அங்கு அறிமுகமாகிய சில்வியாவின் நட்பு கடந்த ஏழு வருடங்களாகத் தொடர்கிறது. பாரிஸ் புறநகர் பகுதியில் சில்வியா குடியிருக்கிறாள். 

தற்போது உதயன் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்கின்றான். காலை ஒன்பது மணிமுதல் பிற்பகல் ஐந்து மணிவரை வேலை. சிலவேளை மேலதிக வேலையும் செய்வான். சனி பிற்பகல், ஞாயிறு விடுமுறை. விரும்பினால் சனி பிற்பகலும் வேலைசெய்ய முடியும். மருந்துகள், இரசாயனப் பொருட்கள் பெட்டிகளில் அடைக்கப்படும் தொழிற்சாலை. உதயனைப் பொறுத்த வரையில் அது இலகுவான வேலை. நல்ல சம்பளம், மாதம் 1650 ஈரோவுக்குமேல் கிடைக்கும். 

உதயன் கடந்த சில வருடங்களாக இரண்டு இடங்களில் சீட்டுக் கட்டிவந்தான். சீட்டு எடுத்த பணத்தை வங்கியில் போட்டு வைத்துள்ளான். கொஞ்சக் காசை கடை வைத்தி ருக்கும் நண்பன் ஒருவனுக்கு வட்டிக்கும் கொடுத் துள்ளான். அவனது நீண்டநாள் இலட்சியம், ஈழத்தவரின் பொதுவான நினைப்புப்போல்.. ‘ஒரு வீடு வாங்க வேண்டும். அத்துடன் ஒரு பலசரக்குக் கடை அல்லது ‘றெஸ்ரோறன்ற்’ திறக்கவேண்டும்’ என்பது தான்..! 

பலவிதமாகவும் உழைத்து வங்கியில் ஒரு இலட்சம் ஈரோவுக்கு மேல் சேர்த்துவிட்டான். அந்தப் பணத்தை இலங்கைப் பெறுமதியில் பெருக்கிப் பார்த்தவாறு நித்திரை கொள்வதில் ஆனந்தம் அதிகம்தான்…! 

வீண் செலவு எதுவும் கிடையாது. ஓய்வுவேளையில் ‘தண்ணி’ அடிக்கும் பழக்கமுண்டு. அதுவும் அதிகமான வேளை ‘ஓசியில்’ தான்… 

பாரிஸ் புறநகரில் ‘மெற்றோ ‘ வில் போய் இறங்கக்கூடிய இடத்தில் ஒரு சிறிய ‘ஸ்ரூடியோ’ அறையில்தான் தங்கி யிருக்கிறான். தூரத்து உறவினனான ஈஸ்வரமூர்த்திதான் அவனது அறைத் தோழன். 

ஈஸ்வரமூர்த்திக்கு ‘சுப்பர் மார்சே’ ஒன்றில் காவலாளி வேலை. சில நாட்கள் பகலிலும். சில நாட்கள் இரவிலும் வேலைசெய்ய வேண்டும். மனைவி, பிள்ளைகள் கொழும்பில்…… மாதா மாதம் பணம் அனுப்பவேண்டும். 

முப்பத்தெட்டு வயதுக்கு மேலாகியும் உதயனுக்கு திருமணம் செய்துவைக்கவில்லையே என ஊரில் வசிக்கும் பெற்றோருக்குப் பெருங்கவலை. 

அயல் கிராமமான உரும்பிராயைச் சேர்ந்த பட்டதாரிப் பெண்ணைப் பேசிவைத்துவிட்டு… உதயனுக்கு வற்புறுத்திக் கடிதம் எழுதியிருந்தனர். 

யாழ். பல்கலைக்கழக நுண்கலைப் பட்டதாரியான பெண்ணுக்கு வயது முப்பது. சீதனப் பிரச்சினை, செவ்வாய் தோசம் என இழுபட்ட கல்யாணம் இப்போது தான் பொருந்தியுள்ளது. பன்னிரண்டு இலட்சம் காசு, வீடு வளவு, நகை எனப்பெற்றோர் பேசி முடிவுசெய்துள்ளனர். 

‘சான்விச்’ சைக் கொண்டுவந்து மேசையில் வைத்தாள் சில்வியா. ஒரு போத்தல் முடிந்து, இன்னொரு போத்தல் வைனும் காலியாகிறது. நல்ல தூக்கம் வருவது போலிருந்தது. அறையிலுள்ள கட்டிலுக்கு உதயனை அணைத்தவாறு அழைத்துச் சென்றாள். 

காற்சட்டையையும் ‘சேட்’டையும் தள்ளாடித் தள்ளாடிக் கழற்றி எறிந்துவிட்டு கட்டிலில் சாய்ந்தான் உதயன். சில்வியாவும் பக்கத்தில்.. …! 

அதிகாலை நான்கு முப்பது… .. எழுந்து சென்று சலம் கழித்து விட்டு மீண்டும் வந்து படுத்தான். அவனது கறுத்த மார்பில் காடாக வளர்ந்திருந்த மயிர்களுக்கிடையில் சில்வியாவின் சிவந்த கரங்கள் நுழைந்து துளாவியபடி இருந்தன…..அவளை இறுக்கி அணைத்தவாறு அவளது பிடரிப்பக்கமாக, அரையடி நீளமான செம்பட்டை மயிரை அவன் ஒரு கையால் கோதியபடி கிடந்தான். 

ஷெரி…உங்களைப்போல… ஒரு பிள்ளை பெற எனக்கு ஆசை. எவ்வளவு நாளாக கேட்கிறன்… .. சொந்தமாகத் தொழில் தொடங்கின பிறகு பாப்பம் எண்டு சொல்லிக் கடத்திறியள்……நீங்க தொழில் தொடங்கினா… நான் இப்ப செய்யிற நாலு மணித்தியால வேலையையும் விட்டுட்டு… உங்களுக்கு உதவுவன்தானே அப்ப பிள்ளை பிறந்தாலும் இடைஞ்சல் இல்லைத்தானே… .. ஜெசிகா வுக்கும் ஒன்பது வயது முடிஞ்சுது. அவள் தன்ர அலுவல் களைத் தானே பாப்பாள். அவளும் ஒரு சகோதரம் வேணுமெண்டு சிலநேரம் கேக்கிறவள். என்ன ஷெரி….. சொல்லுங்கோவன்… 

“ம்…ம்…ம்…அதுக்கென்ன…” 

“நாங்க… ‘மேரி’யில போய் ‘ரெஜிஸ்ரர்’ கல்யாணம் செய்வமா… .. எத்தனை நாளைக்கு இப்படி… நண்பர் களா இருக்கிறது….” 

“உன்ர ‘குப்பன்’ போர்த்துக்கீசுக்காரனோட இப்ப தொடர்பில்லையா…..” 

“அவன் விசரன்.. கிழட்டுக் குடிகாறன்.. என்னட்ட குடிக்கிறதுக்குத் தான் வாறவன்.. குடிச்சுப்போட்டு.. கனப்பேயில பிரண்டு போய் கிடந்திட்டுப் போயிருவான்….”. 

“உனக்கு நாப்பது வயசு முடிஞ்சும்… தக்காளிப்பழம் போலத் தான் இருக்கிற…..” அணைப்பால் இறுக்கி அவளை உறிஞ்சி முத்தமிட்டான். 

“நான் கேட்டதுக்கு ஒண்டும் சொல்லுறியள் இல்லை..” செல்லச் சிணுக்கம் போட்டாள் சில்வியா… 

“சரி… சரி… அடுத்த மாதம் …நான் ‘மேரி’யில … நாள் கேட்டுச் சொல்லுறன்……..” என்றான். 

ஆசையாக… அவனது கறுத்த உதடுகளைக் கவ்வி இழுத்து முத்தமிட்டாள்… காலை பத்துமணிக்குமேல் சோம்பல் முறித்தான்.. கால்.. கை.. மூட்டுகள் உளை வெடுத்தன. 

“சில்வி… சில்வி… ஷெரி….. எழும்புங்கோ…” 

அவள் எழுந்துபோய் கோப்பி போட்டுக் கொண்டுவந்து கொடுத்தாள். 

கோப்பியைக் குடித்துவிட்டு எழுந்தவனிடம்.. “ஷெரி… ஏதும் இருக்குதோ… வாடகைக் காசு கட்டேல்ல… ஜென்சிக்காரன் கடிதம் அனுப்பிப்போட்டான். இருந்தா… தாங்கோ… ஷெரி…..” 

வாடகைக் காசு முழுவதும் கட்ட இப்ப என்னட்ட காசு இல்லை… இருநூறு ஈரோ தான் இருக்கு… ..” என்று சொல்லி எடுத்துக் கொடுத்தான். 

வெளியில் எந்தவித செலவும் செய்யாத உதயன் இந்த விடயத்தில் மட்டும் காசு கொஞ்சம் இழக்குவான்… 

வாடகை, மின்சாரம், தண்ணீர் காசு கட்டவேண்டும் என அடிக்கடி சில்வியா அவனை அணைத்துக்கேட்டு வாங்கிக் கொள்வது வழக்கம்… 

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஐந்து மணி கடந்துவிட்டது. தனது அறையில் கட்டிலில் கால் கையை எறிந்து குப்புறக் கிடந்தான் உதயன்..! 

ஒரு ‘விஸ்கி’ப் போத்தல், முருங்கைக்காய், சின்ன வெங்காயம், ஆட்டிறைச்சி, நொருங்கிய பசுமதி குறுணி அரிசி உட்பட இன்னும் சில பொருட்களுடன் அறைக்கு வந்து சேர்ந்தான் ஈஸ்வரமூர்த்தி. வந்தவனுக்கு, உதயன் கிடக்கும் கோலத்தைப் பார்த்ததும் ஆத்திரமாக இருந்தது. “இரவு றூமுக்கும் வராம… சரக்கிட்ட போயிற்று வந்து களைச்சுப்போய் கிடந்து மூசுறார்… ..” எனத் தனக்குள் சொல்லிக்கொண்டான். 

இறைச்சி மற்றும் பொருட்களை குசினி மேசையில் வைத்து விட்டு, குளிர்சாதனப் பெட்டியில் இருந்த தண்ணீர் போத்தலை எடுத்தான். விஸ்கிப் போத்தலைத் திறந்து ஐஸ் தண்ணீரும் கலந்து ஒரு ‘கிளாசை’ ஒரு மூச்சில் இழுத்துவிட்டு… உரத்த செருமலுடன்… உதயனைத் தட்டி எழுப்பினான். 

“டேய்.. உதயன்… எழும்படா… ..ராத்திரி சரக்கிட்ட போயிற்று வந்து, இப்ப பகல் முழுவதும் உடம்பு உளைவில் கிடக்கிறாய் போல… என்ன… உன்ர அம்மா எனக்குக் கடிதம் போட்டிருக்கிறா… . நேற்றுத் தான் கிடைச்சுது….. உன்னோட கதைப்பமெண்டா…..நீயும் இரவு றூமுக்கு வரேல்ல……” என இழுத்தான் ஈஸ்வரன். 

“என்ன சொல்லி எழுதியிருக்கிறா……” எனக் கேட்டான். 

“உனக்குப் புத்திசொல்லி இந்தக் கலியாணத்துக்கு ஒழுங்கு செய்யட்டுமாம்.. பாவமடா.. அவையள்… .. உன்ர வயதைப்பற்றி கவலைப்படுகுதுகள்… உன்ர திருக் கூத்துகள் அவையளுக்கு தெரியுமா… .. நல்ல பிள்ளையா.. இந்தக் கலியாணத்தைச் செய்யடாப்பா… நல்ல சீதனமும் பேசி வச்சிருக்கினம். என அன்பாகச் சொன்னான் ஈஸ்வரன். 

எனக்கும் முந்தநாள் கடிதம் கிடைச்சதுதான்.. நான் என்ன விசரனே.. ஓம்.. சொல்லி நேற்றுக் கடிதம் எழுதிப் போட்டிட்டு தான் மற்ற வேலைக்குப் போனனான்..”

மற்ற வேலையெண்டு… அவளிட்ட தானே போய் கிடந்திற்று வந்திருக்கிற… .. அவளையள் உன்னை உரிச்சுப் போடுறாளையள்… காசுகளை அழிச்சுத் துலைக்காதை…! 

“நான்… எல்லாம் காரியத்தோடதான்… அவள் வாடகைக் காசு கொடுக்கவெண்டு… அடிக்கடி ‘செக்’ கேப்பாள்.. என்ர பேரில ‘செக்’ குடுத்தா.. பிறகு ஆபத்தா முடியும்..நான்.. காசாத்தான் கொஞ்சம் உதவி செய்யிற னான்… அவள் எனக்கெண்டு பிள்ளை பெற வேணு மாம்… அதோட கலியாணத்தை ‘ரெஜிஸ்ரர்’ பண்ணுவ மெண்டு ஆக்கினை பண்ணுறாள்… அவள் காரியத்தோட தான்… பிள்ளை பிறந்தா காசு.. அதைச்சாட்டி என்னட்டையும் தொந்தரவு செய்து காசு பிடுங்கலாம்…… வீட்டு வாடகைக்கு நான் ‘செக்’ குடுத்தனெண்டு ‘புறூவ்’ பண்ணலாம்… எண்டு பெரும் பிளான்… இதுகளெல்லாம் எனக்கு விளங்காதே… ராத்திரியோட அவளைக் கை கழுவியிற்றன்……” 

“அப்ப…. எப்ப ஊருக்குப் போற… கலியாணம்.. தாய் தகப்பனை கடைசிக் காலத்தில் மனவருத்தப்பட விடக் கூடாதெல்லே…..” 

“எல்லாம் எனக்குத் தெரியாதே… வாற மாதம் 15ம் திகதி மட்டில.. சிங்கப்பூருக்கு பெம்பிளையை கூட்டிக்கொண்டு வரச்சொல்லி விபரமா எழுதிப் போட்டிட்டன். ரெலிபோனிலையும் விபரமா நாளைக்கு கதைப்பன்.. ‘மாதவன்ர ஏஜன்சிக்குப் போன்பண்ணி சிங்கப்பூருக்கு ‘ரிக்கற்றும் ஒழுங்கு பண்ணியிற்றன்… பிறகென்ன… உனக்கும் இப்பதான் என்னைப்பற்றி சரியா விளங்கும்…” என்றான் உதயன். 

பிரசாவுரிமை இருந்தாலும் உதயனுக்கு ஊருக்குப் போக கொஞ்சம் பயக்கெடுதி…! யாழ் இந்துக் கல்லூரியில் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் நான்கு பாடங்கள் மாத்திரம் சித்தியடைந்துவிட்டு ஏதோவொரு இயக்கத் துக்குப் பின்னால் திரிந்து ‘நாட்டாமை’ செய்து காசும் திரட்டிச் ‘சோக்கடிச்சவன்’… நிலமை மோசமானதும் தோட்டக் காணியையும் அறாவிலைக்கு விற்றுப்போட்டு, பிள்ளையை ‘வெளிநாட்டுக்கு ஓடு’ எனத் தாய் தகப்பன் அனுப்பிவைச்சவர்கள்… அதனால் இப்பவும் ஊருக்குப் போக கொஞ்சம் யோசனை..! 

“சிங்கப்பூரில கலியாணம் முடிஞ்சு….. பொம்பிளை ஊருக்குத் திரும்பினதும்… ஓரிரு மாசங்களில் ‘பொன்சர்’ செய்து கூப்பிடலாம் என்ற திட்டம்…..” 

“சரி… கலியாணம் முடிஞ்சதும் உன்ர ‘பிளான்’ என்னடாப்பா..” 

“ஆவணி 20 ம் திகதி மட்டில கலியாணம்… அக்டோபரில் ‘ரெஸ்ரோறன்ற்’ எடுத்திருவன்… இப்பவே ‘அட்வான்ஸ்’ குடுத்திற்றன்… அப்ப… முந்திப் பிந்தி மனுசியும் வந்து சேந்திடும்… ‘ஏஜன்சி’க்காரனிட்ட….. புதுசா கட்டிற வீடு ஒண்டுக்கும் ‘அட்வான்ஸ்’ கட்டிப் போட்டன். ‘பாங்… லோனும் ஓ.. கே..!’ மனுசி வந்ததும் புதுவீட்டில .. நிம்மதியான சீவியம்… .. கடையையும் மனுசி பாத்துக்கொள்ளும்.. படிச்ச மனுசிதானே…நான் வேலையை விடமாட்டன்… ‘ரெஸ்ரோறன்ற்’நல்லா நடந்தா பிறகு பாத்து வேலையை விடலாம்.. மனுசிக் கெண்டு கொஞ்ச நகையும் ‘மோகன்’ கடையில் ஓடர் குடுத்திருக்கிறன். இப்ப என்ன சொல்லிற….” 

“நீயடா யமன் தான்ரா… எல்லாம் சுழிச்சுக் காரியம் பாத்திடுவ…! நான் தான் மனுசி பிள்ளையளுக்கு இஞ்ச.. இந்தக் குளிரில மாடா உழைச்சு காசு அனுப்புறன்… அவை.. அங்க … கொழும்பில சொகுசுச் சீவியம்… நாம படுற கஷ்டம் அவைக்குத் தெரியுமா… என்னவோ… நீ புத்திசாலியடா…… எல்லாம் தெரியும்.. வெல்லுவாய்… அது சரி … உன்ர சரக்கை…என்ன ‘பிளான்’…” 

“அது ராத்திரியோட கைகழுவியிற்றன்….எண்டு தானே சொல்லுறன்… இனி அவளிட்ட வேலையில்லை… அது அழுகின தக்காளிப்பழம் மாதிரி…… அவளைக் கை கழுவினதைக் கொண்டாட வேணுமல்லே… உடம்பைக் கழுவிப்போட்டு வாறன்…. விஸ்கியை முடிச்சுப் போடாதை……. இறைச்சியை நீதான் ருசியா சமைப்பாய் … அதைக் கவனி….” 

உதயன் எழுந்து குளியலறைக்குள் போய் நன்றாக உடம்பைக் கழுவிவிட்டு வந்து அமர்ந்தான். அவன் மனதிலும் உடலிலிருந்தும் அந்தப் போர்த்துக்கீச வழிவந்த ‘சில்வியா’ நினைவை, மணத்தைக் கழுவி… 

இருவரும் விஸ்கியை ஊற்றி ‘சிங்சிங்’ சொல்லி ஒரே மூச்சில் ஒவ்வொரு கிளாசை’ இழுத்தனர். வெளியே பாரிஸ் நகர வர்ண ஜால ஒளிவிளக்குகளை ஜன்னலூ டாகப் பார்த்து வாய்விட்டுச் சிரித்துக் கொண்டனர்…! 

– இளங்கோவன் கதைகள், முதற் பதிப்பு: வைகாசி 2006, உமா பதிப்பகம், கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *