வேடிக்கை மனிதர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 25, 2025
பார்வையிட்டோர்: 167 
 
 

எத்தனையோ ஆட்டங்கள் ஆடி முடித்தும் ஓயாமல் முற்றுகையிடும் கூட்டம் ஒரு பக்கம் என்னை வருந்தி இழுக்கிறது… என் ஆட்டத்தின் அருமை புரிந்து இழுக்கும் கூட்டம் ஒரு பக்கம் என்றால் என்னை கேலி செய்வதற்காக என்னை பொதுவெளியில் ஆட வைத்து கை கொட்டி சிரிக்க ஒரு கூட்டம்… இப்படி கூட்டத்தின் பல வகையான சுவைகளை நான் இங்கே ஓயாமல் ருசித்து கிடக்கிறேன்…

நான் என்னை ரசிப்பவர்களையோ கேலி செய்பவர்களையோ ஒரு போதும் ஊதாசீனப்படுத்தியதே இல்லை… ஏனெனில் இங்கே என்னை பொறுத்தவரை எல்லாமே ஒரு வித ரசனையான விளையாட்டு தான்…

நான் அவர்களின் ரசனை எனும் சுவைக்கு அடிமை… அவர்கள் எனது ஆட்டத்திற்கு அடிமை…

இங்கே எதுவும் நிரந்தரம் இல்லை என்ற புரிதல் எனக்கு மிகவும் தெளிவாக உள்ள போது என்னை எவரும் காயப்படுத்தவோ துன்புறுத்தவோ முடியாது தானே…

அப்படி தான் நான் வாழ்வை மதிக்கிறேன்.ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு முகமூடி தாங்கி என்னை அணுகும் போதெல்லாம் அந்த முகமூடிக்குள் இருக்கும் முகம் எப்படி இருக்கும் என்று நான் ஒரு போதும் கற்பனை செய்தது இல்லை.. மாறாக அந்த முகமூடியில் மறைந்து இருக்கும் அழகை ரசிக்கிறேன்…

எனது சம்பாத்தியத்தை வைத்து தான் இந்த உலகம் என்னை எடை போடும் என்று தெரிந்தும் நான் ஒரு போதும் என் அடிப்படை தேவைகளுக்கு தவிர அதை உயர்த்தி கொள்வதற்கான முயற்சியில் இது வரை நான் ஈடுபட்டதே இல்லை..ஏனெனில் இந்த உலகம் ஒரு நாடக மேடை..அதில் நான் ரசித்து வாழ ஒரு அற்புதமான பாத்திரம் எனக்கு கிடைத்து இருக்கிறது…அந்த அற்புதமான பாத்திரத்தை உடைத்து விட்டு எனக்கு ஒவ்வாத தங்க பாத்திரத்தை எப்படி என்னால் ஏற்றுக் கொண்டு நடிக்க முடியும் என்று எனக்குள் எப்போதும் கேள்வி எழுந்துக் கொண்டே இருக்கும்..பிறகெப்படி நான் அதை ஏற்றுக் கொள்ள முடியும்?

பலர் இந்த உலகில் போட்டுக் கொண்ட முகமூடிகள் கிழிந்து தொங்கிய போது தாங்கொணா துயரம் அடைந்து உடைந்தழும் மனிதர்களுக்கு நான் ஒரு போதும் ஆறுதல் சொல்வதில்லை…எது உண்மையோ அதில் பயணிக்கும் காலம் வந்துவிட்டது என்று அவர்களை பார்த்து ஒரு வேடிக்கை சிரிப்பு சிரித்து விட்டு நகர்ந்து விடுவேன்…எல்லாமே ஒரு நாடகம்… அவர்கள் நாடகம் அலங்கோலமாக வந்த வேகத்தில் கிழிந்து சுக்கு நூறாக ஆகி அவர்களின் அடுத்த பரிமாணத்திற்கு அழைத்து செல்கிறது அவ்வளவு தான்…ஒன்றும் இங்கே கெட்டு போகவில்லை…

அப்படி தான் பாருங்கள் அன்றொரு நாள் நான் வழக்கமாக சாப்பிடும் தெருவோர கடையில் மிகவும் நிதானமாக சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன்.. என்னை சுற்றி நிறைய மனிதர்கள் வேக வேகமாக சாப்பிட்டு கொண்டே தங்களது அலைபேசியில் ஏதேனும் முக்கிய அறிவிப்புகள் வந்து இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டே சாப்பிடுகிறார்கள்… நான் அங்கே எனது அருகில் வாலை ஆட்டிக் கொண்டு காத்திருந்த நாய்க்கு ஓரிரு இட்லி போடுவதை பார்த்து விட்டு அந்த கடைக்காரர் என் மீது மிகுந்த கோபம் கொள்கிறார்… சார் நீங்கள் இப்படி போடுவதால் அந்த நாய் எனது தொழிலை கெடுக்கும் வகையில் இங்கேயே சுற்றிக் கொண்டு இருக்கிறது.. உங்களுக்கு என்ன நீங்கள் இரண்டு இட்லி போட்டு விட்டு உங்கள் வேலையை பார்க்க போய் விடுவீர்கள்… நான் தான் அந்த நாய் இன்னும் என்ன என்ன செய்யுமோ என்று அதை கவனித்துக் கொண்டே வேலை செய்வதாக இருக்கிறது.. இந்த சமயத்தில் ஒரு வயதான மூதாட்டி தனது கைப் பையில் சில சில்லறைகள் தேடுகிறார்.. ஓரிரு இட்லி சாப்பிட்டால் தான் அந்த ஜீவன் உயிரை நிலை நிறுத்திக் கொள்ள முடியும் என்ற தொனியில்… காலை பசி என்பது மிகவும் மோசமான கொடுமையான விஷயம்..அதை அனுபவித்தவர்களுக்கே தெரியும் அதன் அருமை பெருமை எல்லாம்…

அவர் என்னிடம் வந்து எவ்வளவு சில்லறைகள் இருக்கிறது என்று பார்க்க சொல்கிறார்… நான் அதை எண்ணி விட்டு ஒரு பத்து ரூபாய் இருக்கிறது என்றேன்.. இதற்கு இங்கே எத்தனை இட்லி வாங்க முடியும் என்று கேட்கிறார்.. இரண்டு இட்லி கிடைக்கும் என்றேன்… அவரது முகத்தில் ஒரு அற்புதமான சிரிப்பு… போதும் போதும் எனக்கு இரண்டு இட்லி போதும் என்று சொல்லி விட்டு இரண்டு இட்லி கடைக்காரரிடம் சொல்லி விட்டு காத்திருக்கிறார்… அவர் அருகில் மோப்பம் பிடிக்க அந்த நாய் வந்து அருகில் நிற்கிறது.. அந்த மூதாட்டி அதை வருடி கொடுத்து ஏதோ பேசுகிறார்.. அதற்கு அந்த மொழி புரிந்து இருக்கிறது போலும்.. மிகவும் உற்சாகமாக வேகமாக வாலை ஆட்டிக் கொண்டு அவர் அருகிலேயே நிற்கிறது..இட்லி தயாராகி கடைக்காரர் அந்த மூதாட்டியை பார்த்து கொடுக்க அவர் அதை மெதுவாக இரண்டு கைகளில் ஏந்தி வந்து அங்கே இருந்த மர பலகையில் அமர்ந்து சாப்பிடுகிறார்… கடைக்காரர் கருணையால் வைத்த மூன்றாவது இட்லியை தனது தட்டில் பார்த்து விட்டு என்னை கூப்பிட்டு சொல்கிறார்.. இங்கே பாருங்கள் எனக்கு மூன்று இட்லி பத்து ரூபாய்க்கு கிடைத்து இருக்கிறது என்று பொக்கை வாயை காட்டி சிரிக்கிறார்.. அந்த நாயை கூப்பிட்டு இங்கே வா உனக்கு யோகம் இருக்கிறது போலும்…இந்தா என்று ஒரு இட்லியை சாம்பார் சட்னி தொட்டு போட இதை அவ்வளவு வேலைகளிலும் கவனித்து விட்டார் கடைக்காரர்.. நான் எனக்கு கிடைத்த திட்டு அவருக்கும் கிடைத்து விடக் கூடாதே என்று கவனிக்கிறேன் மிகவும் உன்னிப்பாக…

கடைக்காரரோ அந்த மூதாட்டியின் இந்த செயலில் நெகிழ்ந்து ஏ பாட்டி நான் நீ பாவம் என்று ஒரு இட்லி சேர்த்து வைத்தால் நீ தர்மம் செய்கிறாயா அதுவும் நாய்க்கு என்று கேட்கிறார்…

அந்த மூதாட்டி கோபம் கொள்ளாமல் அதே புன்னகை மாறாமல் ஏ பேராண்டி அதனிடம் காசு இல்லயடா உன் கடையில் இட்லி வாங்கி சாப்பிட என்று சொல்கிறார் சிரித்தபடியே…

ஓ ஓ… அப்படியா..நீ அதற்கு காசு கொடுக்க வேண்டியது தானே இட்லி சாப்பிட… என்கிறார்.

அந்த மூதாட்டியோ இந்த இயற்கை அதற்கு உணவை சாப்பிட தான் கற்றுக் கொடுத்து இருக்கிறது…இடலி சாப்பிட காசு கொடுக்க வேண்டும் என்று இந்த இயற்கை கற்றுக் கொடுக்கவில்லையடா பேராண்டி…அதை அதாவது உணவுக்கு காசு என்பதை நாம தானேடா உருவாக்கி வைத்து இருக்கிறோம் என்று சொல்ல அங்கே அலைபேசியில் மூழ்கிக் கொண்டே சாப்பிட்டவர்களோடு நானும் கேட்டு அதிசயித்தேன்…

அந்த நிகழ்வை ஓரிரு நிமிடங்கள் அசைப் போட்டுக் கொண்டே தான் சாப்பிட்டு முடித்த இட்லி எண்ணிக்கைக்கு காசு கொடுக்க கடைக்காரருக்கு முயன்றார்கள்… அந்த கடைக்காரர் அவர்களிடம் வாங்கிய காசில் ஒரு ரூபாய் நாணயத்தை மட்டும் சேகரித்து எடுத்து வந்து அந்த மூதாட்டியிடம் கொடுக்கிறார்… இது எதற்காக எனக்கு அட போடா பேராண்டி… அந்த நாய் தினமும் இங்கே தானே வரும் அதற்கு ஓரிரு இட்லி போட்டு விட்டு அதோ அங்கே தெருவோரத்தில் நிற்கதியாக எதையோ யோசித்துக் கொண்டு இருக்கும் இருக்கும் அந்த தாடி வைத்த பிச்சைக்காரருக்கு காலை உணவை கொடு… அது போதும்… இங்கே அவர்களா பிச்சைக்காரர்கள் நம்மை ஏமாற்றி ஓட்டு வாங்கி விட்டு ஓட்டம் பிடிக்கும் பிச்சைக்காரர்கள் எத்தனை எத்தனை என்று சொல்லி சிரித்து கொண்டே விடை பெறுகிறார் அந்த மூதாட்டி… நான் இத்தனை நிகழ்வையும் கவனித்து கொண்டே விடை பெறுகிறேன் கொஞ்சம் ஆறுதலாக…

இங்கே இந்த உலகம் ஒரு நாடக மேடை தானே என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டு..

இங்கே நான் உலகத்தவர் மத்தியில் பைத்தியக்காரன்… அந்த மூதாட்டியோ ஞானி… இங்கே எத்தனை எத்தனை விதமான மனிதர்கள்… எல்லோருமே ஒவ்வொரு விதமான ரசனை மனிதர்கள் தான் என்று உள்ளுக்குள் ரசித்துக் கொண்டே சாலையில் நடந்து செல்கிறேன்… அங்கே அந்த மூதாட்டியை விட்டு விட்டு என்னை விடாமல் துரத்தி வருகிறது அந்த நாய்… என்ன சூட்சமமோ யார் அறிவார் இந்த உலகில்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *