வேசியிடம் ஞானம்
பாண்டிய அரசன் பராந்தகப் பாண்டியன் (கி.பி 880-900) மதுரையை தலைமையிடமாகக் கொண்டு மிகச் சிறப்பாக ஆண்டு வந்தான். அறிவாளியான அந்த அரசனுக்கு ஒருநாள் இரவு திடீரென ஒரு சந்தேகம் ஏற்பட்டது.
அந்த சந்தேகத்தை உடனே தன் மனைவியும், நாட்டின் அரசியுமான வானவன் மாதேவியிடம் கேட்டான். அவளுக்கும் அதற்கான பதில் தெரியவில்லை.
அந்தச் சந்தேகம், “பாவத்தின் தந்தை யார்? பாவம் செய்ய ஆதி காரணமாக அமைவது எது?” மறுபடியும் யோசித்து யோசித்துப் பார்த்தான். அரசனுக்கு விடை தெரியவில்லை.
உடனே மறுநாள் காலையில் அரசவையைக் கூட்டினான். அரசவைக்கு அவன் வந்தவுடன் முதலில் அவன் கேட்ட கேள்வி, “பாவத்தின் தந்தை யார்?” என்பதாகும்.
அரசவையில் மந்திரி ராஜகுரு, வித்வான்கள் உள்ளிட்ட அனைவரும் யோசித்துப் பார்த்தார்கள். எவராலும் சரியான விடையைச் சொல்ல முடியவில்லை. ஆரசனுக்குச் சற்று வருத்தம் ஏற்பட்டது.
அரசவையில் கற்றறிந்த தலைமை வித்வானாக இருந்த ஒரு பிராமணரை பதில் கூறுமாறு ஏறிட்டு நோக்கினார். அவர் இயலாமையால் தன் தலையைக் குனிந்து கொண்டார்.
“பிராமணரே ஒருவாரம் உமக்கு கால அவகாசம் தருகிறேன். சரியான விடையை என்னிடம் நீர்வந்து சொல்ல வேண்டும். இல்லையேல் அதற்கான தகுந்த தண்டனை உமக்கு வழங்கப்படும்… அரசவை இத்துடன் கலைந்தது…”
எல்லோரும் பிராமணரை பரிதாபமாகப் பார்த்தபடியே கலைந்து சென்றனர். பிராமணர் அரண்டுபோய் நின்றார். இதற்கு சரியான பதிலை எப்படிக் கண்டுபிடிப்பது?
வீட்டிற்குச் சென்ற அவர், அன்று இரவு முழுதும் தனிமையில் யோசித்தார். ஊஹும்… திருப்திகரமான விடை அவருக்குக் கிடைக்கவில்லை.
அடுத்தநாள், வழக்கம் போல வைகை நதிக்கரைக்கு குளிக்கச் சென்றார்.
வைகைக் கரையோரம் இருந்த வேசி ஒருத்தி அவரைப் பார்க்க நேரிட்டது. என்றும் தேஜஸுடன் காணப்படும் அந்தப் பிராமணரின் முகம், அன்று வாடி இருந்ததைப் பார்த்து வியந்தாள்.
வேசி அவரை அணுகி, “ஐயனே, ஒருநாளும் இல்லாதபடி இன்று தங்கள் முகம் வாடி இருக்கிறதே… ஏன்? என்ன காரணம்? என்னிடம் கூறக் கூடிய விஷயமென்றால் தயங்காமல் கூறுங்கள்.” என்றாள்.
அவர் இருந்த மன நிலையில் அவரை யார் கேட்டாலும் அரசர் தன்னிடம் கேட்டதைச் சொல்லி வருந்தும் நிலையில்தான் இருந்தார். அதனால் அரசவையில் முந்தைய நாள் நடந்த விஷயத்தை அவளிடம் விலாவாரியாக எடுத்துச் சொன்னார்.
“பூ இவ்வளவுதானா? இதுவும் ஒரு கேள்வியா? இதற்கு என்னால் விடை சொல்ல முடியும் ஐயனே… அரசரும் என் பதிலை ஒப்புக் கொள்வார்.”
திடுக்கிட்டார் பிராமணர்.
“சொல்லு, என்னிடம் சொல்லு.. அரசனின் கேள்விக்கு விடை என்ன?” மிகுந்த ஆவலுடன் கேட்டார்.
“சொல்கிறேன்… ஆனால் தாங்கள் என் வீட்டு வாசல் வரை வர வேண்டும்.”
பிராமணர் தயங்கினார். ஒரு வேசி வீட்டின் வாசல் வரை போகலாமா? பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்? என்று ஒருகணம் யோசித்தார்.
சரி, வாசல் வரைதானே? “வருகிறேன்” என்றார்.
பிராமணர் வேசியுடன் அவள் வீட்டின் வாசலுக்குச் சென்றார். வீட்டின் வாசலை அடைந்ததும் வேசி, “இவ்வளவு தூரம் வந்தது வந்தீர்கள், உள்ளே வாருங்கள். உங்கள் காலடி என் வீட்டில் பட்டால் தட்ஷினையாக நூறு ரூபாய் தருகிறேன்… பெற்றுக் கொள்ளுங்கள்… உடனே தங்களுக்கு விடையையும் சொல்கிறேன்.” என்றாள்.
பிராமணர் வாயைப் பிளந்தார். அந்த நூறு ரூபாய் தட்ஷினையை விட்டுவிட அவருக்கு மனசில்லை. வேசியின் வீட்டிற்குள் நுழைந்தார். நூறு ரூபாயைக் கையில் எடுத்த வேசி, அவரைப் பார்த்து “இதோ நூறு ரூபாய், ஆனால் தாங்கள் என் படுக்கை அறைக்குள் வந்து கட்டிலின் மீது உட்காருங்கள்… இருநூறு ரூபாயாக சேர்த்துத் தருகிறேன்” என்றாள்.
இருநூறு ரூபாயா? வாயைப் பிளந்தார்.
சரியென முடிவு செய்து, படுக்கை அறையினுள் நுழைந்த பிராமணர் அங்கிருந்த அலங்கரிக்கப்பட்ட கட்டிலின் மீது அமர்ந்தார்.
“வந்து அமர்ந்து விட்டீர்கள். அருமையாக சமைத்து இருக்கிறேன். மாமிச உணவுதான். பரவாயில்லை, கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள். மாமிசம் சாப்பிட்டால், என்னுடைய தங்க நெக்லஸ்ஸும் தருகிறேன்… தங்க நெக்லஸ் எடுத்து அவர் முன் ஆட்டிக் காண்பித்தாள்.
பிராமணர் யோசித்தார். தங்க நெக்லஸ், கை நிறையப் பணம்… இன்று ஒருநாள் மட்டும்தானே! பிறகு ஏதாவது பிராயச்சித்தம் செய்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்தார். உடனே வேசியின் கோரிக்கைக்கு இசைந்தார்.
வேசி சமையல் அறையிலிருந்து மாமிசத்தை ஒரு தட்டில் வைத்து, அதை எடுத்துக்கொண்டு வந்தாள். பிராமணர் அதை வாங்கி, அதில் ஒரு மாமிசத் துண்டை எடுத்துத் தன் வாயில் போட்டுக்கொள்ள வாயைத் திறந்தார்.
வேசி திடீரென அதைத் தட்டி விட்டுவிட்டு, பிராமணர் கன்னத்தில் பளார் என்று ஓங்கி ஒரு அறை விட்டாள். பிராமணர் அதிர்ந்து போனார்.
“இது கூடவா தெரியவில்லை… பாவத்தின் தந்தை ஆசை. பேராசை. போ உடனே அரசரிடம் போய்ச் சொல்லு… முதல்ல இடத்தைக் காலி பண்ணு…”
“…………………..”
“முதலில் உமக்கு நூறு ரூபாய் என்று ஆசையைத் தூண்டினேன்; பின்பு இருநூறு என்றேன்; கடைசியாக தங்க நெக்லஸ் என ஆசை காட்டினேன்… உம்முடைய பேராசையினால் பணம், பொருளுக்காக பிராமணரான தாங்கள் மாமிசம் உண்ணவும் துணிந்து விட்டீர்… அதனால்தான் ஓங்கி உம்மை கன்னத்தில் அறைந்தேன்… என்னை மன்னித்து விடுங்கள்.”
ஆமாம் பாவத்தின் தந்தை இந்தப் ‘பேராசை.’
எவ்வளவு பெரிய உண்மையை இந்த வேசி மிக எளிதாக எனக்குப் புரிய வைத்துவிட்டாள்!! பிராமணர் கண்களில் நீர் துளிர்த்தது.
வேசியை வணங்கிவிட்டு, மெதுவாக எழுந்து வெளியே சென்றார்.
அரசரின் கேள்விக்கு அடுத்த நாளே பதில் சொல்லிவிட முடியும் என்பதால், அவர் முகத்தில் பழைய தேஜஸ் ஜொலித்தது. அத்துடன் பெறுதற்கரிய ஞானமும் புதிதாகப் பெற்றதால், ஞான தேஜஸும் சேர்ந்து கொண்டது. சந்தோஷமாக அங்கிருந்து அகன்றார் பிராமணர்.