வீட்டை மட்டுமல்ல





(1987ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
வானத்தில் சிறு குருவிகள் வட்டம் போட்டன். வெண்பஞ்சு மேகங்கள் மிதந்தன. நிர்மலமான அந்த அழகினை அனுபவிக்கும் மனோநிலை காரில் இருந்த யாருக்கும் இல்லை.

கீார் மிக மெதுவாகச் சென்று கொண்டிருந்தது. சற்குணம், அவன் மனைவி, பிள்ளைகள் மெளனமாக விழிகளால் வீதியையும், சனங்களையும் துழாவியபடி இருந்தார்கள்.
எவ்வளவு காலத்திற்குப் பிறகு சொந்த வீட்டைப் பார்க்கப்போக சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என சற்குணம் யோசித்தான். திடும்என ஏற்பட்ட மாற்றங்கள் அவற்றின் விளைவுகள் எல்லாம் நினைவில் வந்தன.
அம்மன் கோயிலடியை, கோயிலின் முன்னால் இருந்த, ஆரவாரம் நிறைந்த கடைகளை கார் தாண்டியது. முன்பென்றால் இந்த கோயிலடியைத் தாண்டி கார் போகாது. கார் கார் மாத்திரம் அல்ல எல்லா வாகனங்களுக் கும் முற்றுப்புள்ளி கோயிலடிதான்.
தான் வீட்டைவிட்டு இரவோடு இரவாக ஓடிய பின்னர் நாலைந்து நாட்கழித்து முதல் தடவையாக கோயிலடிக்கு வந்த அன்றைய தினத்தினை சற்குணம் நினைத்தான்.
அன்று கோயிலடியும் சுற்றியுள்ள பகுதியும் என்ன மாதிரி இருந்தன என்பதும், அன்று நடைபெற்றவையும் அவன் நினைவுக்கு வந்தன.
நீண்ட அந்தத் தெருவில் அம்மன் கோயிலடிக்கு அப்பால் சனப் புழக்கமே இல்லை. கோயிலடிக்கு அப்பால் சர்வ முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கிய சந்தி இப்போது கோயிலடிக்கு நகர்ந்து வந்து விட்டது.
சந்தோஷக்கனவுகளால் மலர்ந்திருக்கும் சின்னஞ் சிறுசுகளும், புத்தகச் சுமைகளுடன் அணிவகுத்துப் போகும் தாவணிப் பெண்களும் படித்துக் கொண்டிருந்த கல்லூரிக் கட்டிடங்கள் கல்லாய், மண்ணாய், குவியலாய் பரவிப் போய் இருந்தன.
கருகிப்போன தளபாடங்கள், உருக்குலைந்த பொருட்கள் களவு போகக் கூடியன போய் மிகுதியாய் உள்ளவை மண்ணுக்கு உரமாகிக் கொண்டிருந்தன.
சந்தியில் பரந்திருந்த கடைகள் ஏனைய வியாபாரத் தலங்கள் எல்லாம் வெடித்துச் சிதறி திசைக் கொன்றாகப் போய்விட்டன.
பெண்களால் நிறையும் புடவைக் கடைகளும்,றாம் றாமாக சாராயம் விற்கும் ரொட்டிக் கடைகள், காதைசெவிடாக்கும் ரெக்கோடிங் பார்கள், வீடியோ நிலையங் கள், பலசரக்கு வியாபார நிலையங்கள் மழைக்கு ஒதுங் கும் மனிதர்கள் போல எங்கெல்லாமோ ஒதுங்கி விட்டன
பெரும்பாலானவை கோயிலடிக்கு வந்து விட்டன. கோயிலடியில் தட்டிக் கடைகளாக இருந்தவை எல்லாவற் றுக்கும் சர்வதேச முக்கியத்துவம் வந்து விட்டவை போல திடீர் என பிரமிக்கத்தக்க வளர்ச்சி பெற்று விட்டன.
கோயிலிலும் அகதிகள் வந்து சேர்ந்து விட்டார்கள். முன் மண்டபத்தில் கும்பலாக அவர்கள் இருந்து கவலைப் பட்டுக் கொண்டிருந்தார்கள்.
கோயிலுக்கு முன்னால் கட்டப்பட்டிருந்த பெரிய கூரை போட்ட பஸ்நிலையம் இதுவரை காலமும் அடையாத பலனை இப்போதுதான் அடைந்துள்ளது. வெற்றுடம்புகளுடன் ஆண்கள் பலர் அங்கு படுத்திருப்பார்கள்.
அடிக்கடி வரும் மினி பஸ்களும். எப்போதாவது சட சடத்து வரும் சி.ரி.பீ. பஸ்களும் கோயிலடிக்கு அப்பால் மரத்தடியை இறுதித் தரிப்பிடமாகக் கொண்டன, வீதிக் கரையில் பஸ்களின் ட்றைவர்கள் இருந்து சிகரெட் புகைத்துக் கொண்டிருப்பார்கள்.
கோயிலடிக்கு சிறிது தூரம் அப்பால் வெளி. அதற்கு அப்பால் தான் வீடுகள். இப்போது அந்த வெளிக்கு. அப்பால் ஆட்களின் நடமாட்டமே இல்லை.
கோயிலடியில் நின்று பார்த்தால் திடீர் என சூனியமான பிரதேசமாகிப் போய் விட்டதைப் போல வெறுமை…
எல்லா ஆரவாரங்களும் அமளிகளும் உயிர்த்துடிப்பு. களும் கோயிலடியுடன் பட்டென்று நின்று விட்டன. ஏதோ ஒரு வகையில் முடமானது போல.
ஆட்கள் நடமாட்டம் இல்லாத அந்தத் திசையிலி லிருந்து இரண்டொரு வயதானவர்கள் மாத்திரம் சைக் கிள்களிலும், தோள்களிலும் சுமைகளுடன் வந்து கொண்டிருந்தனர். கொண்டுவந்த பொருட்கள் ஒன்றும் பெறுமதியானவை அல்ல. ஆனாலும் அவர்கள் அவற்றி னைச் சுமந்து கொண்டு வந்தனர்.
சற்குணம் அவர்களை விநோதமாகப் பார்த்தான். பொருட்களுடன் வந்து அவர்கள் மரநிழலில் நின்று களைப்பாறத் தொடங்க சற்குணம் அவர்களைக் கூப் பிட்டான்.
“என்ன மாதிரி இருக்கு அங்கால?”
“என்னத்தைச் சொல்லுறது?” என்றார் அவர்களில் ஒருவர்.
“கனதூரம் போகலாமோ?” என்று கேட்டான் சற்குணம்.
“எங்கை போறது? சரியான கஷ்டம். நாங்கள் எவ்வளவோ கஷ்டப்பட்டு குனிஞ்சு, உருண்டு, தவண்டு, பிரண்டு போட்டு வாறம்”
“வேறை ஆட்களும் வந்தவையோ?”
“எங்களைப்போல சில ஆட்கள்தான் வந்தவை. அவையும் கஷ்டப்பட்டுத்தான் வந்தவை”
“வீடுகள் என்ன மாதிரி…?”
“நாங்கள் பார்த்த இடங்களில் அவ்வளவு மோசம் இல்லை. ஆனால் அங்கால கனச்சு இடிபடுது போல. வடிவாய் ஒண்டும் தெரியேல்ல. களவுகள்தான் கூட எச்கசக்கமா நடக்குது.
“மெயின் றோட்டுப் பக்கம் பாரதியார் சிலையடி என்ன மாதிரி எண்டு தெரியுமோ?”
“சாச்சா…மெயின் ரோட்டுப் பக்கம் ஆர் போறது. இது நாங்கள் குச்சு ஒழுங்கைகள் பார்த்தெல்லோ போட்டு வாறம். மெயின் ரோட்டில் அவங்கள் பெரிய காம் போட்டிருக்கவேணும். பாரதி சிலைக்கு பக்கத்தில் இருந்து சங்கக் கட்டிடத்தில் அவங்கள் இருக்கவேணும்.” என்று அவர்கள் சொல்லும் போதே அடிவயிற்றைக் கலக்கியது.
மெயின் வீதியில் பாரதி சிலைக்கு அண்மையில் சங்கக்கட்டிடத்திலிருந்து ஐந்தாவது வீடு சற்குணத்தினுடையது. எத்தனையோ லட்சங்களை ஏப்பம்விட்டு மெயின் வீதியில் முழிப்பாய் சிவந்த அழகி ஒருத்தி ரத்தத் சிவப்பாய் சேலைகட்டி நிப்பது போல அட்டகாசமான எழிலோடு உள்ள வீடு.
மல்லிகைப் பந்தலும், பூந்தோட்டமும், கார் கராஜ் ஜூம், காற்றுவாங்க வசதியான மொட்டை மாடியும்.
யோசித்துப் பார்த்த போது சற்குணத்திற்கு தலை விறைத்து என்ன நடந்திருக்கும்? நடக்கக் கூடாத மாதிரி ஏதாவது நடந்து விட்டால்.
“மெயின் ரோட்டுக்கரை வீடுகள் என்ன மாதிரி என்று வடிவாய் தெரியாதுதானே…” என மீண்டும் கேட்டான். அப்படி மீண்டும் கேட்பது பொருத்தமில் லாத கேள்வியாய் இருந்தாலும் மனத்தில் ஏதோ நிம்மதி யில்லை. அதனால் கேட்க வேண்டியதாயிற்று.
அவர்கள் சற்குணத்தை ஒரு மாதிரிப்பார்த்தார்கள்.
“அதுதானே தம்பி அப்போதையே சொன்னம். மெயின் றோட்டால் நாங்கள் போகேல்லை. நாங்கள் என்ன? எல் லாருமே போக, ஏலாது. உதில கொஞ்சத்தூரம் போய் நிண்டு பார்த்தால் அந்த வளைவு வரை தான் தெரியும். வளைவுக்குக் கிட்டபோய் நிண்டு பார்த்தால் சந்தி தெரி யும். சந்திக்கு அங்காலதானே அவங்கள் நிற்கிறாங்களாம். சந்தி தாண்டிப்போக அரச மரத்தடியில முத லாவது சென்றியாம், மண் மூட்டை எல்லாம் அடுக்கி வைச்சிருக்கு. அண்டைக்கு அந்த றோட்டு வளைவுக்குப் போன ஒரு பொடியன் காயப்பட்டவன் தெரியுமே. அரச மரத்தடிக்கு அங்கால கன தூரம் போக வேணும் பாரதி சிலையடிக்கு. சங்கத்தடியில் காம்ப். பிறகெப்படி மெயின் றோட்டால் போறது!” என எவ்வளவு முட்டாள் தன மான கேள்வியை சற்குணம் கேட்டுள்ளான் என்பதை உணர்த்தும் பதிலாக அவர்களது பதிலிருந்தது.
சற்குணம் மெளனமானான். அவர்கள் தங்கள் சுமை களுடன் புறப்பட்டார்கள். காரோடு சாய்ந்து நின்ற சற்குண ம் சிகரெட் ஒன்றைப் புகைக்கத் தொடங்கினான்.
சுருள் சுருளாகப் புகை வெளிப்பட்டது போல சிந்த னையும் சுழன்றது. சோபை இழந்து போய் இருக்கும் அந்தப் பகுதியையும் சனங்கள் நிறைந்திருந்த கோயில் டியையும் மாறிமாறிப் பார்த்தான்.
வீடும் வளவும் மனதில் தோன்றியது, மனத்தில் வேதனை உச்சமாகியது. கூடவே எரிச்சலும் பொரும லும் ஏற்பட்டது. பேசாமல் எல்லாவற்றையும் விற்றுக் கொண்டு அவுஸ்திரேலியாவோ கனடாவோ போயிருக்கலாம்.
எத்தனை சந்தர்ப்பங்கள் வந்தன! நன்றாக நடக்கும் பிசினசை குழப்பிக் கொண்டு போய் பிறகு எப்பிடி இப்பிடி பிசினசை உருவாக்குவது என்று மனம் குழம்பி நாளும் பொழுதும் குழம்பிக் குழம்பிக் கனடா வின் சான்சையும் கை விட்டு இப்போது வீடு, வளவும் எல்லாமே என்ன மாதிரிப் போகப் போகின்றன.
சோதனைகளும் கஷ்டங்களும் வரும் போது மனி தருக்கு எரிச்சலும் நிதானமின்மையும் தான் ஏற்படுமா? சற்குணத்திற்கும் அது உண்மை போலத்தான் பட்டது.
கார் கதவைத் திறந்து ட்ரைவிங் சீற்றில் ஏறி அமர்ந்து வெறுப்புடன் கதவினை ஓங்கியடித்தான். எதிலுமே மனம் ஓடவில்லை.
அன்றைக்கு கார்க் கதவை ஓங்கியடித்தது இப் போதும் ஞாபகத்தில் இருக்கின்றது. நேற்று நடந்த சம்பவம்போல காரை செலுத்திக் கொண்டு பழையபடி சிந்தனையில் ஆழ்ந்தான் சற்குணம்.
காரில்
மனைவி பிள்ளைகளை ஏற்றிக் கொண்டு இரவோடிரவாக சில அத்தியாவசிய சாமான்களையும் தூக்கிக் கொண்டு புறப்பட்ட அந்த நிகழ்வு உருப்பெற்றது.
முதல் நாள் தொடக்கம் பிரதான வீதியால் சனங் கள் போய்க்கொண்டிருந்தனர். துயரம் படர்ந்த முகம். கண்ணீர் பாயும் விழிகளுடன் சுமக்க முடியாத சுமைகளு டன் அவர்கள் சென்ற காட்சியை எல்லோரும் கேற்றடி யில் நின்று பார்த்தார்கள்.
மொட்டை மாடியில் நின்ற மனைவியும் பிள்ளை களும் கூடப்பார்த்தனர். கடைசிப்பிள்ளை வேடிக்கை யுடன் கை கூட அசைத்தது.
நாலைந்து கிலோ மீற்றர்களுக்கு அப்பால் இருந்து கூட சனங்கள் வாழ்விடங்களை துறந்து வந்து கொண் டிருந்தார்கள். இரவிரவாகக் கேட்ட காதைப் பிளக்கும் சத்தங்கள் தான் அவர்களை இப்படி சொந்த மண்ணி லேயே அகதியாக்கி உள்ளது தெரியாத விடயமல்ல
வீட்டில் சற்குணம் நிற்பது பெரும்பாலும் இரவில் தான். தொழில்துறை நடவடிக்கைளில் ஒரு நாளில் பெரும்பொழுது கழிந்து விடும்.
அன்று இரவு – சற்குணம் வீடு திரும்பும்போதே எங்கும் பதற்றம் நிலவிக் கொண்டிருந்தது. குண்டுச்சத் சத்தங்களும் துப்பாக்கிச் சத்தங்களும் தாராளம். இடையிடையே ஷெல்லடிகள்.
வீட்டில் மனைவி பிள்ளைகள் நிலைகுலைந்து போய் இருந்தார்கள். மருளும் விழிகளுடன் பிள்ளைகள் அவனைச் சூழ்ந்து கொண்டார்கள்.
அப்பா…எங்கையாவது போவம்” என்றார்கள் அவர்கள்.
பிள்ளைகளின் கருத்தை மனைவியும் ஆமோதிப்பது அவள் விழிப் பார்வைகளில் தெரிந்தது ஆனாலும் சற்குணத்திற்கு மனமில்லை, வீட்டையும், வீட்டுப் பொருட்களையும் கைவிட்டுப் போவது என்பது சங்கடமாவே இருந்தது.
“பாப்பம், பாத்துச் செய்வம்” என்று மனமில்லா மல் பதில் சொன்னான்.
திடும் என சத்தம. வெடித்துச் சிதறும் அதிர்வுகள் ‘ஐயோ” என்று மனைவியும் பிள்ளைகளும் கூக்குரலிட்டனர்.
அதிர்வுகள் குறைய முன்னர் மற்றைய சத்தம் முன்பைவிட மோசமான சத்தத்துடனும், அதிர்வுகளுட னும்.
“ஷெல் அடிக்கிறார்கள் கிட்டத்தான் விழுகுது போல். வாங்கோ கெதியாப் போவம், போற போக் கைப் பார்த்தால் எங்கடை வீட்டுக்கு மேலேயும் விழும் போலக் கிடக்கு” என்ற மனைவியின் வேண்டுகோள் அவனைச் சித்திரவதை செய்ய பிள்ளைகளின் அழுகுரல் தொடர்ந்தது,
அதைவிட மோசமாக ஷெல்கள். வீதியால் சனங்கள், ஓடினார்கள், அவன் விறைத்துப் போய் நின்றான். மனைவி அவனை விநோதமாகப் பார்த்தாள்.
“என்ன நினைச்சுக் கொண்டு நிக்கிறியள். பிள்ளையள் பயந்து சாகுதுகள். கொஞ்சம் தன்னும் யோசினையில்லாமல்…” என வார்த்தைகளை முடிக்காமல் குமுறி வெடித்தாள்.
சற்குணம் எதுவுமே பேசவில்லை: ஒரே குழப்பமாக இருந்தது. என்ன முடிவு எடுப்பது என்ற தடுமாற்றமும் உண்டானது.
மனைவி தொடர்ந்து அப்பிடியே நிக்க வில்லை.
பிள்ளைகளை அழைத்துப் போனாள். மிக மிக அத்தியாவசியமான சாமான்களை எடுத்துக் கொண்டு காரினுள் வைத்தாள். பிள்ளைகளையும் ஏற்றினாள்.
“வாங்கோ, காரை எடுங்கோ” என அவள் சொல்லும் போது முகத்தில் உறுதி தெரிந்தது.
நாராசமாய்க் கேட்கும் சத்தங்களின் மத்தியில், அவ னுக்குத் துப்புரவாக மனமில்லாத நிலையில் வீட்டை வீட்டுப் புறப்பட்டார்கள்.
அதன் பின்னர் வீட்டைப் பார்க்க முடியவில்லை. வீட்டை என்ன? அந்த பகுதிக்கே செல்ல இயலாமல் போய்விட்டது.
இரண்டு மூன்று தடவை கோயிலடிவரை போய் வந்ததுதான் மிச்சம்.
மீண்டும் இப்போதுதான் சற்குணம் வீடு பார்க்கப் போகிறான்.
கார் மிக மெதுவாகச் சென்று கொண்டிருந்தது. கால் தடங்கள் பதியாத அந்த றோட்டில் சனங்கள் போட்டதை எடுக்கப் போகும் மனோநிலையில் செல்வ தைப் போல விரைந்து கொண்டிருந்தனர்.
சைக்கிள்கள், மோட்டார் சைக்கிள்கள், எல்லோரும் வீடுகள் பார்க்கத்தான் போகின்றார்களா? அல்லது விடுப்புப் பார்க்கவா? அழுதாலும் பார்ப்பார்கள், சிரித் தாலும் பார்ப்பார்கள். எது நடந்தாலும் விடுப்புப் பார்க்கும் கூட்டத்திற்கும் எப்போதும் முடிவில்லை.
காரணமில்லாமல் போகும் சனங்கள் மீது ஆத்தி ரம் வந்தது. போகும் மனிதர்களுள் கவலை தோய்ந்த முகங்களுடன் சிலர் போய்க் கொண்டிருத்தனர்.
வீதிக் கரையோரம் புற்களும், புதர்களும் மண்டிம் போய் இருந்தன. குன்றும் குழியுமாக வீதி சிதைந்து போய் இருந்தது.
தோட்ட நிலங்கள் எல்லாம் பாழ்பட்டுப் போய்க் காணப்பட்டன. பச்சையாய், பசுமையாய் வெங்காய மும், புகையிலையும் செம்மிப் போய் இருக்கும் தோட் டங்கள் சூறையாடப்பட்டு இருந்தன.
வேலிகள் இல்லை. மதில்கள் இல்லை. வீடுகளின் அத்திவாரங்கள் கூட இல்லாமல் புல்டோசரின் தடம் பதித்த தரைகள். பிரளயத்தில் அகப்பட்ட பகுதி போல. இயற்கை கோரத் தாண்டவமாடினால் கூட இவ்வளவு அழித்திருக்குமா? என்று எண்ண வைக்கும் தன்மையதாய் காட்சிதந்தன.
இடித்து நொறுக்கப்பட்ட, குண்டு வைத்துத் தகர்க் கப்பட்ட வீடுகளின் குவியல்கள், குதறி எறியப்பட்ட மரங்கள், கண்ணுக்கெட்டிய தூரம்வரை இருந்தன.
விரிந்து இமைக்க ‘மறுக்கும் இமைகளும், குத்திட்ட விழிகளுமாக பிள்ளைகள் பார்த்தார்கள். பரிதாபமான உணர்வுடன் மனைவி சற்குணத்தைப் பார்த்தாள்.
சூறையாடப்பட்ட இடங்களில் விடுப்புப் பார்க்கும் சனங்களுடன் பாதிக்கப்பட்டவர்களும் நின்றார்கள். சோகம் ததும்பும் முகங்களுடன் தங்கள் தங்கள் இடங் களைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
வீட்டு அத்திவாரங்கள் தெரியாத வளைவுகளின் எல்லைகள் தெரியவில்லை. யாருடைய காணி எது என்று அடையாளம்கூட காட்டமுடியாமல் இருந்தன.
தலைகளை ஏந்திப் பிடித்துக் கொண்டு அதிர்ச்சி அடைந்து பலர் தரைகளில் அமர்ந்திருந்தனர். அவர்களை யும் விடுப்புப் பார்க்கும் கூட்டம் சுற்றிச் கொண்டிருந்தது.
ஒரு இடத்தில் எரிந்து கருகிப்போய் இருந்த பொருட் களை சிலர் கிளறிக் கொண்டிருக்க இன்னும் சிலர் இவற் றைப் பொறுக்கி எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
எங்கடை வீடு என்ன மாதிரி இருக்கிறதோ என மறு படியும் யோசித்தான்.
வீதியில் ஆங்காங்கே கிடந்த கிடங்குகள், மண் வரம்புகளைத் தாண்டி கார் மிக மெதுவாக ஊர்ந்தது. திடீரென றோட்டுக் கரையில் சுருள் சுருளாக முள்ளுக் கம்பிகள் மண் மூட்டைகள். கற்களின் அரண்.
தொடர்ந்து காரைச் செலுத்துவது சிரமமாக இருந்தது.
“ஆக்கள் போகேலாமல் இருக்கிற றோட்டில் இவைக்கு ஒரு கார் ஏன் நடந்து போகேலாதோ” என ஒருவர் கேட்க யாரோ அதற்கு பதில் சொன்னதும் கேட்டது.
“ஏனப்பா பிரச்சினை, காரை நிற்பாட்டுங்கோ இனி நடந்து போவோம்.” என்றாள் சற்குணத்தின் மனைவி.
சற்குணம் எதையுமே காதில் விழுந்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை. என்றாலும் பாரதி சிலையைத் தாண்டி காரை அப்பால் கொண்டு போக முடியவில்லை. எனவே காரை நிறுத்த வேண்டியதாயிற்று.
அழுது வடியும் முகத்துடன் இறங்கிய மனைவி பிள்ளைகளுடன் நடக்கத் தொடங்கினாள்.சற்குணமும் தொடர்ந்தான்.
பாரதியாரின் சிலையின் தலையைக் காணவில்லை. கை ஒன்று உடைந்து தொங்கிக் கொண்டிருந்தது. சிலையின் பீடத்தில் பல உடைவுகள், ஏராளமான துளைகள்.
சிலையடியைச் சுற்றி பல வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. வெள்ளைக் கொடிகள் கட்டிய பல ஜீப்புகள், பச்சைத் தலைப்பாகைகள், தாடிகள்: கொண்ட ஏராளமான இராணுவத்தினர்.
எதையுமே கவனித்தாலும் அவற்றில் அதிக அக்கறை கொள்ளாமல் தொடர்ந்து நடந்தனர். வேகமாக நடக்கும் மனைவியைத் தொடரப் பிள்ளைகள் நடக்க முடியாமல் ஓடத் தொடங்கினர்.
சிலையடியைத் தாண்டிய பின்னர் சில வீடுகள் ஓரளவு முழுமையாக இருந்தன. மனத்தில் பரபரப்பு உண்டாகியது. தூரத்தில் வீட்டின் ஒரு புறச் சுவர் தெரிந்தது. மதிலைக் காணவில்லை. கட்டிய அடையாளமே தெரியவில்லை.
முன்புறம் இடிந்து போய்க் காணப்பட்டது. விரை வாகப் போன மனைவி ‘ஐயோ’ எனக் குளறிக் கொண்டு வீட்டை நோக்கி ஓடினாள். பிள்ளைகளும் ஓடினார்கள். சற்குணமும் விரைந்தான்.
வீட்டின் ஒரு சிறு பகுதியைத் தவிர ஏனைய பகுதிகள் குண்டினால் சிதறிப் போய் இருந்தன. கண் கொண்டு பார்க்க, முடியாத கலக்கமான காட்சி.
அழகான முன்புறம், விசலமான கண்ணாடி ஜன்னல் கள். தேக்கம் கதவுகள், காற்று வாங்கும் மொட்டை மாடி, மின் விறாந்தை ஹோல், சகலதும் இருந்த தடம் தெரியாமல் இருந்தன.
பார்க்கப் பார்க்க பொங்கிவந்தது அழுகை. கண்களை மறைத்தது கண்ணீர். விக்கல் எடுத்து அழுத மனைவியை சற்குணம் பார்த்தான். பிள்ளைகளும் தாயுடன் சேர்ந்து அழுதன.
அக்கம் பக்கத்து வீடுகள் பல அடியோடு இல்லை. வீடுகள் போல இல்லாத தரையில் காணப்பட்டது புல்டோசரின் வரித்தடங்கள் தான் தெரிந்தன.
எது வளவின் எல்லையென்று கூடத் தெரியவில்லை.. பக்கத்து வீட்டுக்காரர்கள், பின் வீட்டுக்காரர்கள் எல்லாருமே தங்கள் தங்கள் பகுதிகளில் நின்று தங்களின் இடிபாட்டுக் குவியல்களைப் பார்த்து வேதனைப் பட்டுக் கொண்டிருந்தனர்.
வேகமாக அழும் மனைவி பிள்ளைகளை சமாதானப் படுத்தாமல் பிரமை பிடித்தவன் போல சற்குணம் இருக்க, பொன்னுத்துரையார் நடந்து வந்தார், முகத்தில் வேதனையிலும் புன்னகை எப்போதும் போலவே அவர் முகத்தில் பிரகாசிக்கும் சகிப்புத் தன்மையுடன் சற்குணத்தை அணுகினார்.
சிறிது நேரம் பேசாமல் நின்றார். என்ன சொல்வது? எப்படிச் சொல்வது? என்று சிறிது நேரம் யோசித்திருக்க வேண்டும்.
“என்ன செய்கிறது. கவலைப் பாடதேங்கோ” என்றார் முதலில்.
சற்குணம் பதில் சொல்லவில்லை.
“அழாதேங்கோ தங்கச்சி. ஏதோ உங்களுக்கும் பிள்ளையளுக்கும் ஒண்டும் நடக்கேல்லை எண்டு மனத்தை தேற்றுங்கோ. எத்தினை பேர் என்னென்ன மாதிரியெல் லாம் கஷ்டப்பட்டிருப்பினம். அதுகளைப் பார்த்து ஆற வேண்டியது தான்’ என்றார். சற்குணத்தின் மனைவியிடம்.
அவள் வெம்பினாள்.
சற்குணம் பொன்னுத்துரையரைப் பார்த்தான். வெறும் உடம்புடன் கசங்கிய வேட்டி உழைத்து உருக்கு லைந்து போன உடலுமாகக் காணப்பட்ட அவரைப் பார்க்க என்னவோ போல இருந்தது.
இந்த மனிதனின் அந்தச் சின்ன வீடும் துப்புரவாக இடிந்துதானே போய் விட்டது. எப்படி இந்த மனிதனால் இப்படி அமைதியாக இருக்க முடிகிறதென சற்குணம் யோசித்தான்.
மதில் கட்டும் போது கிழக்குப் பக்கமாக இருந்த எல்லை வேலி தொடர்பாகதான் அவருடன் தர்க்கம் புரிந்ததோடு அடிக்கப் போனது கூட
அப்போது சட்டென்று ஞாபகத்திற்கு வந்தது.
“வீட்டின் ஒரு பகுதியை திருத்திப் போட்டு இருக்கலாம் போல” என பொன்னுத்துரையர் சொல்லிக் கொண்டு போனார்.
சற்குணம் வெறுமையான வானத்தையே பார்த்தபடி மௌனமாக நின்றான்.
– வீரகேசரி, 24-09-1987.
– வெட்டு முகம், முதற்பதிப்பு: ஆகஸ்ட் 1993, சவுத் ஏசியன் புக்ஸ், சென்னை.