வீடு
(1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இது என் வாழ்வோட ஒரு பகுதி. என் உறவு. எனக்கு மட்டுமா… இதுங்களுக்கும்தான். இவங்க அத்தன பேரையும் வளர்த்து எடுத்தது இந்த வீடுதான். கடைசி மகனும் மகளும் இந்த வீட்டிலதான் பிறந்தாங்க.

இதோ எதிர்த்தாப்பில இருக்கிற ஸ்கூல்லதான் எல்லாருமே படிச்சாங்க. இந்த அஞ்சடியில் எத்தனை ஆயிரம் தடவை இவங்க நடந்திருப்பாங்க… மாடிப் படியில் எவ்ளோ தடவ ஏறி இறங்கியிருப்பாங்க… சைக்கிள் விட்டிருப்பாங்க… சைக்கிள் ஓட்டப்போதானே ரெண்டாமவன் காலை ஒடிச்சிக்கிட்டான். அவன் கால்ல இன்னும் அந்தத் தழும்பு இருக்கு.
பெரியவ அருணா படிச்சது, பட்டம் வாங்கினது, சேல கட்டினது, நிச்சயம் செஞ்சது எல்லாமே இந்த வீட்டிலதானே. முத பிள்ள என்கிறதால அவளுக்கு எல்லாமே சிறப்பா நடந்துது. அவளோட ரெண்டு பிள்ளைங்களும் இந்த வீட்டிலதான் பிறந்தாங்க.
எப்படி இதுங்களுக்கு ஒட்டு உறவு இல்லாம போச்சுன்னு தெரியல. என்னைப் பைத்தியங்கறாங்க.
நாளாக நாளாகத்தானே நெருக்கம் வளருது. இந்த வீட்டு மேல எனக்கிருக்கிற பாசம் இதுங்களுக்கு எங்க தெரியப் போவுது. என் உசிருக்குள்ள இது கலந்திருக்கு. இதோட உடம்புக் குள்ள நான் கலந்திருக்கேன்.
இந்த தரையோட ஒவ்வொரு கல்லும் எத்தனை அழகா, எப்படி தேஞ்சு போய் இருக்கு… என் கால்களைப்போல.
தரையோட தேஞ்ச பாகமெல்லாம் என் உசிருக்குள்ள இருக்கு. என் காலோட சதையெல்லாம் இதோட உடம்புக்குள்ள கலந்திருக்கு. ஒண்ணோட ஒண்ணா கலந்த இந்தப் பந்தத்த எப்படி நான் துறக்கிறது…
எத்தன தடவை நான் ‘மோப்’ செஞ்சிருப்பேன்… எத்தன தடவை கழுவி எடுத்திருப்பேன்…
சுவரெல்லாம் என்ன விட்டுப் போகாதே என்ன விட்டுப் போகாதேன்னு நாள் முழுக்க கெஞ்சுது.
இந்தச் சுவருக்கு நானும் என் புருசனும் அதான் சந்தனசாமியும் சாயம் அடிப்போம். இந்த வீட்டோட கட்டில்களும் அலுமாரிகளும் ஜன்னல் கம்பிகளும் பல தடவ மாறிட்டுது. ஆனா அதே வீடு. அதே ரூம்பு – அதே குசினிதான்.
இந்த குசினிலதான் அருணா அப்பாவை குளிப்பாட்டினாங்க. தினைக்கும் காலையில எழுந்த உடன அந்த நினைப்புத்தான் வரும். மாலையும் வீபுதியுமா அவர் போனது கண்முன்னால படம்போல தெரியும்.
ஆயுசு முழுக்க சொல்லலாம். இந்த வீட்ட சுத்தி அவ்ளோ கதை இருக்கு. கேட்கிறதுக்கு யாரு இருக்கா…
இதே வீட்டிலதான் அவரு என்னோடு சண்டை போட்டாரு. அவள கூட்டிகிட்டு வந்து நின்னாரு. பிறகு அவள விலக்கி விட்டேன்னு என் கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்டதும் இந்த ஹால்லதான்.
அப்பெல்லாம் மனசு ஸ்ட்ராங்க இருந்திச்சு…
எத்தனையோ ஊர்மாறி பேர் மாறி, உறவு மாறி, வீடுகளும் மாறி கடைசியாக என் மனச இங்க நட்டு வைச்சேன். வேர் இறுக்கிப் பிடிச்சுகிட்டுது. இனிமேல சாகிற வரை இங்குதான்னு நினைச்சிருந் தேன். ஆனா என்னோட மனசு இந்த வீட்டுக்குத் தெரியும். நான் துடியா துடிக்கறத பார்த்து ராவெல்லாம் இதுவும் அழுகுது. இது இல்லன்னா இன்னிக்கு என் நிலம என்ன ஆயிருக்குமோ…
பினாங்கு பக்கத்தில இருக்கு என்னோட சொந்த ஊரு. மலையடி வாரத்தில் இருக்கிற தோட்டம். எல்லாத் தோட்டத்தி லேயேயும் இருக்கிற மாதிரிதான் அங்கேயும் மரங்களும் வீடுகளும் இருக்கும்.
ஆனால் அந்த தோட்ட சனங்கள வேற எங்கயும் கண்டிட முடியாது. அந்த தோட்டத்தில் நான் இருந்தது என்னமோ எட்டு வருசம்தான். எனக்கு எட்டு வயசு இருக்கப்போ அப்பாவும் அம்மாவும் ஆக்ஸிடெண்டில செத்துப் போயிட்டாங்க. அப்புற மேலக்கு என்னோட தாய் மாமா, என்னை ஜோகூருக்குக் கூட்டிட்டு போயிட்டாரு.
அழகான ஊரு, அருமையான சாதிசனங்க. எல்லாத்தையும் அப்பா அம்மாவோடு சேர்த்து புதைச்சிட்டு மாமாவோட ரயிலேறி னேன்.
ஜோகூர் மண்ணில ஒட்டிக்கொள்ள நான்கு வருசம் பிடிச்சுது. மாமாவைப் போலவே மண்ணும் என்மேல அன்பா இருந்தது. ஆனா அத்தைக்குத்தான் என்னப் பிடிக்காம போயிடுச்சு.
ஸ்கூலு படிப்ப முடிச்சிட்டு கல்லூரிக்கு போறப்போ மாமா- அத்தையைப் பிரிய வேண்டியதாச்சு. நான் படிக்கிறதில மாமிக்கு இஷ்டமில்ல. எனக்கு ஆதரவா இல்லாங்காட்டிலும் மாமா என்னத் தடுக்கல.
“படிப்ப மட்டும் விட்டிடாத, அதுதான் உனக்குத் துணை”ன்னு பக்கத்து வீட்டு தாத்தா சொல்லிட்டே இருப்பாரு. அத்தை படிப்ப நிறுத்த சொன்னதால, உறவ முறிச்சிகிட்டு ஜோகூரை விட்டுக் கிளம்பினேன். கோலாலம்பூரில படிச்சேன். படிப்ப முடிச்சதும் அங்கேயே வேலை கிடைச்சுது. அப்பதான் ராபர்டை சந்திச்சேன். முத சந்திப்பே ஒரு பெரிய வேடிக்கை.
நான் ஒரு கடைக்குச் சாப்பிடப்போனேன். அவரும் அங்க வந்திருந்தாரு. நான் தோச ஆடர் செஞ்சேன். அவர் இடியாப்பம் சொன்னாரு. கடக்காரன் மாத்தி கொடுத்திட்டான். பரவால்லன்னு நான் இடியாப்பத்த சாப்பிடத் தொடங்கறப்போ, இடியாப்பம்தான் வேணும்ன்னு அவர் கேட்டாரு. கடையில இடியாப்பம் முடிஞ்சுபோச்சு. கடைக்காரன் வந்து கெஞ்சினான். உங்க இடியாப்பத்த திருப்பி கொடுங்க, உங்களுக்கு புதுசா தோச சுட்டுத் தர்றேன்னான். பிறகு, எச்ச பண்ணின இடியாப்பத்த கொடுத்தாச்சு அதுவேற பெரிய சண்டை. அது ஒரு பெரிய கத…
நல்ல மனுசன். எல்லாருக்கும் உதவி செய்வாரு. சிரிச்ச முகத்தோட எப்போதும் அன்பா பேசுவாரு. அவரு கம்பெனியில் வேலை தரதா சொன்னாரு. அவரோட கம்பெனி சிங்கப்பூரில இருந்ததால சிங்கப்பூருக்கு வந்தேன். அதோட கோலாலம்பூர் வாழ்கை முடிஞ்சு போச்சு.
இங்க வந்தப்ப அத்தாப்பு வீட்டிலதான் தங்கினேன். வேல இடத்துக்குப் பக்கத்திலதான் ராபர்ட்டின் தோட்ட வீடு இருந்தது. வேல முடிஞ்சதும் நான் அவர் தோட்டத்துக்குப் போயிடுவேன்.
ராபர்ட்டும் வந்திடுவாரு. ரெண்டு பேரும் மணிக்கணக்கில பேசிக்கிட்டே அந்தத் தோட்டத்தில புல்லு பிடுங்கி, தண்ணி விட்டு எல்லா வேலையும் முடிச்சிடுவோம். தோட்ட மூலையில ஒரு கிணறு இருக்கும். அந்தக் கிணத்துச் சுவருதான் எங்களோட வசந்த மாளிகை.
நானும் ராபர்ட்டும் மனம் விட்டுப் பேசினது, எங்க அன்பு கனிஞ்சது, காதலை வெளிப்படுத்தினது… எல்லாமே அந்தக் கிணத்தடி சுவத்திலதான்.
ராபர்ட் வீட்டிலேயே எளிமையா எங்க கல்யாணம் நடந்துது.
காதல், கல்யாணம்ன்னா இழப்பு இல்லாமலா இருக்கும்… நான் மதம் மாறணும்னு ராபர்ட் சொன்னாரு. அவரோட இங்கிலீசிலதான் பேசணும். மதம் மாறுறது எவ்ளோ பெரிய விஷயமுன்ன அத உணர்ந்தவங்களுக்குதான் தெரியும். ஆனா ராபர்ட் ரொம்ப அன்பானவர். அந்த அன்புக்காக எதையும் செய்யலாம்.
புது சமூகத்தில என்ன உறுப்பினராக்கிக்கிட்டு புது வாழ்கை வாழ்ந்தேன்.
அந்தத் தோட்ட வீட்டில் நாங்க வாழ்க்கை தொடங்கி ஒருவரை ஒருவர் புரிஞ்சுகிட்டு வர்ற சமயத்தில் ராபர்ட் இறந்து போனார். மலேரியாவில அவர் போயிட்டார்.
எங்கேருந்து அவரத் தேடிப்பிடிச்சு அந்தக் கொசு கடிச்சதோ. ஆனா காய்ச்சலா இருந்தப்ப ராபர்ட் கிணத்தடி கொசுதான் கடிச்சிருக்குமுன்னு சொன்னார். அவர் காய்ச்சலா படுத்த பிறகு கிணத்துப் பக்கமே நா போறதில்ல.
எல்லாம் முடிஞ்சு ஒரு மாசம் அந்தத் தோட்ட வீட்டில நா தனியாவே இருந்தேன். அது வாடகை வீடுதான். அவ்வளவு வாடக கொடுக்க எனக்கு சம்பாத்தியம் போதல. ராபர்ட் செத்த பிறகு அதே கம்பெனியில வேலை செய்யவும் எனக்குப் பிடிக்கல. ராபர்ட் நினைவாவே இருந்ததால வேலையை விட்டுட்டு கொஞ்ச நா வேல இல்லாம இருந்தேன்.
பிறகுதான் பள்ளிக்கூடத்தில வேல கிடைச்சுது. பெரிய சம்பளம் இல்லதான். ஆனாலும் மனசுக்கு ஆறுதலா இருந்தது. அந்த ஸ்கூல் பக்கத்திலேயே ஒரு வீட்டில அறை ஒண்ண வாடகைக்கு எடுத்துக்கிட்டேன்.
மூணே வருசத்தில இன்னொரு வாழ்க்கையை வாழ வேண்டிய கட்டாயம். பெரிய தோட்ட வீட்டில இருந்து சின்ன அறைக்கு வாழ்க்கை மாறிப்போச்சு.
சமையல், தூக்கம், குளியல் எல்லாமே அந்தச் சின்ன அறையிலதான். அந்த அறைய என் மாளிகையாக்கி வாழ்ந்து கொண்டிருந்தப்பதான் சந்தனசாமி வந்தாரு.
அவரு நான் வேல பார்த்த ஸ்கூல டீச்சரா இருந்தாரு. அவருக்கு என் மேல ரொம்ப மரியாத, பாசம். மத்தவங்கள மாதிரி இல்லாம, என்னை கல்யாணம் கட்டிக்கிறதா சொன்னாரு. சர்ச்சு, ஜபமாலை எல்லாத்தையும் விட்டுட முடியுமான்னு மட்டுந்தான் கேட்டாரு.
ஒரு நல்ல மனசுக்காக இதுகூட செய்ய முடியாதான்னு நினைச்சு சரின்னுட்டேன். ஆனா அந்த நேரத்தில என் மனசு ரொம்ப கஷ்டப்பட்டுது.
அதகூட ஓரளவு தாங்கிக்கிட்டேன். ஆனா என்னோட அழகான, அந்தக் குருவிக்கூட்ட விட்டிட்டு வரப்போதான் நான் ரொம்ப உடைஞ்சு போயிட்டேன்.
சந்தனசாமிய கல்யாணம் செஞ்ச பின்னாடி நாங்க புக்கிட் மேரா பக்கம் குடிவந்தோம். அத என் இடமா ஏத்துக்க, எனக்கு சில வருசம் ஆச்சுது.
சீனவங்களும் மலாய்க்காரவங்களும் அங்க நிறைய குடியிருந் தாங்க. புது மனுசங்க, புது சமூகம், புது வீடு, புது உறவு எல்லாத்தையும் மெல்ல மெல்லப் பழகிகிட்டேன்.
அவரு, அந்தப் பலகை வீடு, வீட்டு வாசல்ல இருந்த நெல்லி மரம், எல்லாமே என் நண்பர்களாயிட்டாங்க. மூத்தவ அந்த வீட்டிலதான் பிறந்தா. பிறகு ரெண்டாவது ஒண்ணு பிறந்து செத்துப் போச்சு.
அப்ப அது நினைவா ஒரு கொய்யா மரமும் தென்னங் கன்றும் நட்டு வச்சேன். கொய்யா நல்லா பெரிய மரமா வளர்ந்துச்சு. அங்கிட்டு இருந்த பிள்ளங்க எப்ப பாத்தாலும் அந்தக் கொய்யா மரத்தத்தான் சுத்திகிட்டு இருப்பானுக. ம்… அது ஒரு காலம்…
நகர சீரமைப்பில் அந்தக் கூட்டு வாழ்க்கை சிதறிப் போச்சு. அந்தக் கம்பம் சிதைஞ்ச கத இருக்கே… அது ஒரு தனிக் கதை. ஒண்ணுக்குள்ள ஒண்ணா அக்கா தங்கச்சியா பழகின எல்லாரும் மூலைக்கு ஒரு பக்கமாக சிதறிப் போயிட்டாங்க.
நாங்க இந்த அடுக்குமாடி வீட்டுக்குக் குடி வந்தோம். கம்பத்தில இருந்த ஒருசிலரும் வந்தாங்க. ஆனா கொஞ்ச வருசம் முன்னாடி அவங்க எல்லாம் வீடு மாத்திட்டு போயிட்டாங்க. துணிய உருவிப் போடுறமாதிரி எப்படித்தான் இவங்களாக அடிக்கடி வீட மாத்த முடியுதோ எனக்குத் தெரியல.
மண்ணோடயும் மரங்களோடயும் வாழ்ந்து பழகிய என்னால ஆரம்பத்தில மாடி வீட்ட ஏத்துக்க முடியல. ஜெயிலுக்குள்ள அடைச்சு வச்சமாதிரி மூச்ச அடைச்சுக்கிட்டு இருந்தது. ராத்திரி யெல்லாம் நானும் அவரும் கீழே போயிடுவோம். காத்தோட்டமா சுத்திட்டு வந்தாத்தான் கண்ண அசர முடியும்.
இங்க குடிவந்த புதுசில நா ரொம்பவே சிரமப்பட்டேன். அவரு சீக்கிரம் பழக்கமாயிட்டாரு. எனக்குத்தான் ரொம்ப முடியாம போச்சு. தூங்க முடியாது -சமைக்க முடியாது. என் கணவரக் காதல் செய்யக்கூட முடியாது. எல்லாம் வெறுப்பாவே இருந்துச்சு.
அவரு என்ன டாக்டர்கிட்டகூட கூட்டிட்டுப் போனாரு.
பக்கத்து வீட்டில குடியிருந்த மலாய்க்காரிச்சி, வீட்டில என்னவோ இருக்குன்னு வேற பயங்காட்டிட்டா. பிறவு ஊரில உள்ள மந்திரவாதியெல்லாம் கூட்டிட்டு வந்து மந்திரிச்சு… ம்… எப்படியோ கொஞ்ச நாள்ல எல்லாம் பழகிப் போயிடுச்சு.
மெல்ல மெல்ல பழச எல்லாம் மறந்திட்டு, இந்த வாழ்க்கைய ஏத்துக்க பழகிட்டேன். வீட்டைத் துடைச்சு துடைச்சு கூட்டாளி யாக்கிக்கிட்டேன்.
சந்தனசாமியோட சந்தோசமா வாழ ஆரம்பிச்சேன்.
இரவு நேரத்தில இந்த அறை சன்னலில் நின்னு கண்ணுக்கெட்டாத தூரத்தில இருக்கிற நட்சத்திரங்கள ரசிச்சபடியே என் கதைகளை இந்த சன்னல் கம்பிகளுக்குச் சொல்லுவேன்.
இந்த வீட்ட எல்லாருக்குமே பிடிக்கும். ஏன்னா எந்தப் பக்கமும் மறைப்பு இல்ல. வீட்டுக்குப் பின்னாடி பெரிய திடல். சமையலுள்ள நின்னா ஜிலுஜிலுன்னு காத்து வரும். முன்பக்கம் நிறைய மரங்க. இப்பவரைக்கும் அந்த மரங்க இங்கதான் நிக்குது.
எந்த அறையிலேர்ந்து எட்டிப் பார்த்தாலும் பச்சப் பசேல்னு இருக்கும். கொஞ்ச தூரத்தில பெரிய நீர்த்தேக்கம் இருக்கு. நடு ரூம்பிலேர்ந்து பார்த்தா நீர்த்தேக்கத்தப் பார்க்கலாம். அடிக்கடி பயிற்சி விமானங்க இந்தப் பக்கம் பறக்கும். எத்தன தடவ பாத்தாலும் அந்த விமானங்கள் அலுக்கவே அலுக்காது.
எல்லாமே இந்த வீட்டுக்குத் தெரியும். விமான சத்தம், மழ சத்தம், காத்து சத்தம், நீர்த்தேக்கத்தோட சத்தம் எல்லாமே இதுக்குத் தெரியும். சுவத்தில காது வச்சுக் கேட்டா அப்படியே நமக்குக் கேக்கும். நாம பேசுறதுகூட அதுக்குத் தெரியும். சந்தனசாமி என்கூட சண்டபோட்டு கத்தினா இதுக்குக் கோபம் வந்திடும். உர்ன்னு இருக்கும்.
பேசி பேசி இந்த வீடு ரொம்ப நெருக்கமாயிடுச்சு. வீடு மட்டு மில்ல, சுத்து வட்டமே என் சொந்தமாயிட்டுது. கீழே இருக்கிற கடைக்காரனுக்கு எனக்கு என்ன சாமான் வேணுமின்னு நான் கேட்காமலேயே தெரியும். மார்க்கெட்டில இருக்கிற சீனக் கிழவி தானே காய்களைப் பையில் போட்டுத் தந்துடும்.
அதோ இந்தப் பக்கம் இருக்கே ஒரு பூங்கா. இந்த புளோக்கு கட்டின நாள்லேர்ந்து அது இருக்கு. அப்பேர்ந்து நாங்க இந்தப் பூங்காவில உட்கார்ந்து பேசுவோம். பசங்கள தேடிக் கீழ வர்றப்ப, கடைக்கு வர்றப்ப எல்லாம் யாராவது ஒருத்தங்களோட ஐஞ்சு நிமிசமாச்சும் இந்த மரபெஞ்சில உட்காந்து பேசிட்டுத்தான் போவோம். நாங்கெல்லாம் ஒண்ணாவே அம்மாவாகி, பாட்டி யானவங்க. பள்ளிக் கூடத்துக்கும் ஆஸ்பத்திரிக்கும் நல்லதுக்கும் கெட்டதும் சேர்ந்தே போயி வந்தவங்க.
மலரம்மாதான் செத்துப் போயிட்டா. தங்கம் வீடு மாறி போயிட்டா. செண்பகம் மகளோட போயிட்டா. செல்வம் அம்மா பாவம். நடக்க முடியாது. வீட்டுக்குள்ளேயே முடங்கிட்டா. மிச்சவங்க இன்னமும் கீழ சந்திச்சுப் பேசிக்குவாம்.
இன்னும் இருபது வருசம் ஆனாலும் எங்களுக்குப் போதாது. பேசறதுக்கு அவ்வளவு இருக்கு. சின்னவயசு வாழ்க்கைய திரும்பவும் எண்ணிப் பார்த்து அதில இன்னொரு தடவ வாழுற சுகம் இருக்கே. இது எல்லாத்தையும் வேரோடு புடுங்கி எறிஞ்சிட்டு நான்… எப்படி…
எங்கேயோ புது இடத்தில வீடு வாங்கிட்டாங்களாம். கடல்கரைக்குப் பக்கத்தில இருக்காம். எல்லா வசதியும் இருக்காம். எல்லாரும் போயி பார்த்திட்டு வந்தாச்சு. பெரிய மவதான் எல்லாத்தையும் பொறுப்பெடுத்து செய்யுது.
மூணு பேரும் பக்கத்து பக்கத்திலேயே வாங்கியிருக்காங்க. அவங்களுக்குப் பிடிச்சிருக்கு. வாங்கிட்டுப் போகட்டும். என்னைய ஏன் நோகச் செய்யிறாங்க…
இந்த வீடு என் பேரிலதான் இருந்தது. என்ன கையெழுத்துப் போடவைச்சிட்டாங்க. நா எப்படி இத விட்டுட்டு போறது. பிள்ளைங்கள போலயா இது. என்கூடவே நாள் முழுக்க இருக்கு…
“ஆச்சி… வெளியில வர்றீங்களா… நாங்க வீட்டப் பூட்டணும்…”
“நீங்க யாரு…
இந்த ரெண்டு பேரயும் இதுக்கு முன்னாடி நா பாத்ததே இல்லையே… யாரு இவங்க.. ஏன் என்ன வெளியில வரச் சொல்றாங்க… என் வீட்டப் பூட்டுறதுக்கு இவங்க யாரு…
“நாங்கதான் இந்த வீட்ட வாங்கியிருக்கோம். உங்க பிள்ளைங்க கீழ போயிட்டாங்க. நீங்க வெளில வந்தீங்கன்னா பூட்டிட்டு நாங்களும் கிளம்பிடுவோம். நாளைக்கு வீட்டு ரெனவேஷன் தொடங்கப்போறோம்…”
– ‘நான் கொலை செய்யும் பெண்கள்’ சிறுகதைத் தொகுப்பு 2008ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூர் இலக்கிய விருதை வென்றது.
– 1997, நான் கொலை செய்யும் பெண்கள், முதற் பதிப்பு: டிசம்பர் 2007, கனகலதா வெளியீடு, சிங்கப்பூர்.