விதைப்பதும் அறுப்பதும்





ஞாயிற்றுக்கிழமை மாலை தூங்கி விழித்தவுடன் பக்கத்திலிருந்த மொபைலில் நேரம் பார்த்த போது மாலை ஐந்தரை ஆகியிருந்தது. கட்டிலில் படுத்திருந்தவன் கண்களை மூடி மெதுவாக எழுந்தமர்ந்து கை கால்களை அசைத்து ரத்த ஒட்டத்தை சீராக்கி சற்று நேரம் கழிந்து எழுந்தவுடன் சிறுநீர் முட்டிக் கொண்டிருந்தது தெரிந்தது. கழிவறைக்கு சென்று சிறுநீர் கழித்து கைகால் முகம் கழுவி கழிவறையிலிருந்து வெளியே வந்து துண்டால் முகம் துடைத்து வேட்டியிலிருந்து சட்டை பேண்ட்டுக்கு மாறி படுக்கையறைலிருந்து வெளியேறி ஹாலில் மேஜைக்கருகே போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்து எதிரே மர ஸ்டூலை இழுத்து போட்டு அதன் மேல் கால்களை போட்டுக் கொண்டேன். வயது ஐம்பத்தைத்தை நெருங்குகிறது கால்களை தொங்கவிட்டு அமர்ந்தால் சில நேரங்களில் மரத்து போகிறது . இப்படி சாதாரணமா அரம்பித்த நாள் மிக மோசமாக மறக்க முடியாத நாளானது.
பக்கத்திலிருந்த நாற்காலியில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த மனைவி டீ போட வா என்றாள்.
ம். போடு பிளாக் டீயா போடு என்றேன்.
ஐந்து நிமிடத்தில் டீயுடன் வந்துவிட்டாள்.
ஸ்டுலின் மேல் போட்டிருந்த கால்களை எடுத்துக் கொண்டு டீயை வாங்கி ஸ்டுலின் மேல் வைத்தேன். அதிக சூடாக இருந்தது கொஞ்சம் ஆறினால் மட்டுமே குடிக்க முடியும்.
டீ குடிச்சிட்டு உடன வெளியே போறீங்களா ?
ஆமா ஒரு வேலயிருக்கு போவனும். ஒனக்கு என்னா செய்யனும் சொல்லு.
இல்ல நாளைக்கு தெருமொனையில கட்டியிருக்குற கோயிலுக்கு கும்பாபிசேகம் கொஞ்சம் பூவும். திரிஷாவுக்கு ஸ்கூலுக்கு கொண்டு போவ ஜூஸ் க்கு சாத்துக்குடி வாங்கனும்
உங்களுக்கு வேலையில்லேன்னா போவலாம் என்ற ஆசையை வெளிப்படுத்தினாள்..
எனக்கு தெருமுனையில் கோயில் கட்டுவது தெரியும் நாளை தான் கும்பாபிசேகம் என்பது தெரியாது .
சரி போவலாம் என்றபடி கொஞ்சம் பதமான சூட்டில் இருந்த டீயை குடித்து முடித்தேன்
தயாராக இருந்த மனைவியுடன் வீட்டிற்கு வெளியே வந்தேன். வராண்டாவின் ஓரத்தில் கட்டியிருந்த துணிகாய வைக்கும் கொடியிலிருந்த பழைய துணியை எடுத்து இரு சக்கர வாகனத்தை அடித்து அதன் மேல் படிந்திருந்த தூசிகளை தட்டி உட்காரும் பகுதியை நன்கு துடைத்தேன். வாகனத்தை சாவி மூலம் திறந்து வெளியே எடுத்து வைத்து விட்டு மனைவி வீட்டை பூட்டிவிட்டு வருவதற்காக காத்திருந்தேன் வீட்டில் யாருமில்லை அம்மா முன்கூட்டியே கோயிலுக்கும் , மகள் டியூசனுக்கும் சென்றிருந்தார்கள்.
வண்டியை செல்ப் ஸ்டார்ட் செய்து நியூட்டரலில் ஒட விட்டு வைத்திருந்தேன் மனைவி ஏறி அமர்ந்தவுடன்
எங்க போவனும்.
RR நகர்ட்ட இருக்குற இயற்கை கடைக்கு போங்க.
சரி என்றபடி கியர் மாற்றி எங்கள் வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டருக்குள் இருக்கும் இயற்கை கடையை அடைத்தோம்.
அங்கிருந்த பூ கடை வைத்திருக்கும் வயதான அம்மாளிடம் கட்டிய கதம்பம் பூ கேட்ட போது கட்டிகிட்டிருக்கேன் அரை மணி நேரமாகும் என்றார். மனைவி காத்திருப்போம் வீட்டுக்கு போய்ட்டு திரும்ப வர்றது நேரமாவும் பரவாயில்ல வெயிட் பண்ணுவோம் நா அதுக்குள்ள பழம் வாங்கிடுறேன் என சொல்லிக் கொண்டே பழக்கடையினுள் நுழைந்து விட்டாள். பழக்கடை சிறய கடைதான் நான்கைந்து பேர் ஏற்கெனவே வாங்கிக் கொண்டிருந்தனர், என் மனைவி வெளியிலே நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, சரி இன்று மேலும் தாமதம் ஆகும் என நிச்சயமாக தெரிந்தது.
நானும் வண்டியில் அமர்ந்தபடி ரோட்டை வேடிக்கை பார்க்க தொடங்கினேன். ஞாயிறு மாலை நேரமென்பதால் மெயிரோட்டில் சற்றே கூட்டம் குறைவாகவே இருந்தது. இயற்கை கடையை ஒட்டியப்படி பேக்கரி இருந்தது . அதிலும் கூட்டமில்லாததால் அங்கு வேலை செய்யும் பெண்கள் அவர்களுக்குள் பேசி சிரித்துக் கொண்டிருந்தனர்
சட்டென்று ஒரு ஸ்கூட்டி பெப் வாகனத்தில் பன்னிரெண்டு வயது மதிக்கதக்க பையனும் எட்டு அல்லது ஒன்பதுவயதுக்குள் உள்ள சிறுவனும் பேக்கரிவாசலில் வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்றனர் . இருவரும் பேசிக் கொண்டதையும், உயரமாயும் வயதில் அதிகமாக தெரிந்த பையன் இளையவனை அதிகாரம் செய்ததிலும் அண்ணன் தம்பி என்பது உறுதியானது. பேக்கரியில் பிரட், புட்டிங்கேக் வாங்கிக் கொண்டு வெளிய வந்தனர். அண்ணன் தம்பியிடம் வாங்கிய கேக் பையை கொடுத்து விட்டு வாகனத்தை எடுத்தான்.
மெயின்ரோட்டில் சிறுவர்கள் இருசக்கர மோட்டார் வாகனம் ஓட்டுவது எவ்வளவு பெரிய ஆபத்து என பல முறை ஏற்பட்ட விபத்துக்களால், செய்திகளால் அறிந்திருக்கிறேன்.
வாகனத்தை ஒட்டிச் செல்லும் முன்பு அண்ணனிடம்,
தம்பி கொஞ்சம் நில்லுங்க. வண்டி ஓட்ட லைசன்ஸ் இருக்கா? உங்கள பாத்தா ஸ்கூல்ல படிக்குற மாறி தெரியுது.
அப்பாட்ட சொல்லுங்க. ஆக்ஸிடென்டோ? போலீசோ புடிச்சா உங்கப்பாவுக்கு தான் ஆபத்து. பாத்து ஒட்டிட்டு போங்க என்றேன் .
அவன் தலையாட்டியபடி என்னை ஒரு மாதிரியாக பார்த்தான். ஒன்றும் சொல்லாமல் வண்டியில் தம்பியை ஏற்றிக் கொண்டு புறப்பட தயாராகி வந்த வழியே திருப்பினான். அப்போது மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்த பேருந்து கடந்து போகட்டும் என காத்திருந்தான்.
எனக்கு திடிரென்று உள்ளுணர்வால் தூண்டப்பட்டு மொபைல் போனை எடுத்து கேமராவை ஆன் செய்து சிறுவர்களின் வாகனத்தின் எண்ணையும் அவர்கள் பேருந்து கடந்து போனதும் ஓட்டிச் செய்வதையும் படம்பிடித்து வைத்துக் கொண்டேன். அவர்கள் அதை பார்கவில்லை .
ஏனோ தெரியவில்லை திரும்பவும் அதே வழியில் வந்து என்னை கடந்து வாகனத்தை திருப்பி கொண்டு என்னை பார்த்து சிரித்தபடி வந்த வழிய வேகமாக இடம் வலமாக வண்டியை ஆட்டியபடி ஸ்டைலாக சென்று விட்டான். சிரித்தபடி கையாட்டி டாட்டா காட்டினேன். நானும் இப்படித்தானே சைக்கிளில் சுற்றிக் கொண்டு இருந்தேன். அப்போது இவ்வளவு வாகனம், மக்கள் நெருக்கடி இல்லை என்பது நினைவுக்கு வந்து போனது..மனைவிக்காகவும் கட்டிய பூவை வாங்குவதற்காகவும் காத்திருக்கும் நேரத்தில் மீண்டும் ரோட்டை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்.
கவுன்சிலர் மலைச்சாமி MA .BL போர்டு தொங்கிய வீட்டின் பெரிய கேட்டின் முன்பு ஸ்கூட்டி பெப் வாகத்தை நிறுத்திய அண்ணன் தம்பி இறங்கிய பின் சைடுஸ்டாண்டு போட்டு நிறுத்திய பின் துள்ளலோடு வீட்டினுள் நுழைந்தான்.
வரவேற்பறையில் தன்னை காண வந்த கட்சிக்காரரிடம் பேசிக்கொண்டிருந்த . மலைச்சாமி மகனின் புன்னகையை ஏற்று தலையாட்டிவிட்டு வந்திருந்தவரை பார்த்தார் கட்சிக்காரார் எழுந்து புறப்பட தயாரானார்
மலைச்சாமி. குரல் குடுத்தார் டேய் தம்பி அழகா இங்க வாயேன்.
தோவர்றேன்பா என்ற குரலோடு வந்தான் அழகன்.
கட்சிக்காரரிடம் இவன் தான் பெரியயையன் பேரு அழகன்.
நல்ல பேருதான். தம்பி என்ன படிக்கிறீங்க
சார் நா ஆறாவது படிக்கிறேன்.
நல்லா படிங்க என்றது சொல்லிவிட்டு அழகனிடமும் மலைச்சாமியிடமிருந்தும் விடைபெற்றார்.
கட்சிக்காரர் போனவுடன். அழகன் பேக்கரிக்கருகில் நடந்ததை சொல்வதா வேண்டாமா? என்ற குழப்பத்திலிருந்த போது
என்னடா யோசன பலமாயிருக்கு என்ன சேதி.
அது வந்து ஒன்றும் இல்லேப்பா என மென்று விழங்கினான் தொண்டைக்குழி ஏற்ற இறக்கத்திலேயே மலைச்சாமி உறுதியடைந்தார்.
என்னமோ நடந்திருக்கு என்னான்னு இப்ப நீ சொல்ற என்று சற்று குரலுயர்த்தினார்.
பேக்கரில கேக்கு வாங்கிட்டு திரும்பும் போது ஒருத்தரு நா வண்டில்லா ஒட்ட கூடாது லைன்சன்சு வாங்கி தான் ஒட்டனும் , போலீசு புடிச்சா அப்பாவுக்கு பைனும், ஜெயில்லயும் போட்டுரு வாங்கன்னு சொன்னாருப்பா.
அது யாருய்யா அந்த நல்வவன் அவன பாக்கனுமே என்றார் மலைச்சாமி.
சமயலறையிலிருந்து இவை எல்லாம் கேட்டுக் கொண்டிருந் மலைச்சாமியின் மனைவி.
தம்பி உங்கிட்ட சாதாரணமா சொன்னாரா, மெரட்டுனாரா? என்றார்.
அப்படில்லாம் சொல்லலமா சாதாரணமாத்தான் சிரிச்சிகிட்டே சொன்னாரு என்றான் அழகன்.
மலைச்சாமியிடம் திரும்பிய அவரின் மனைவி.
என்னாங்க இதுலே ஏதோ உள்குத்து இருக்குற மாறி தெரியுதே? ஒங்களுக்கு வேண்டாதவன் ஒங்க பையன்னு தெரிஞ்சே உங்ககிட்ட சொல்லிவுட்ட மாறி தெரியுதே என்னா யாருன்னு பாருங்க.
அப்படில்ல இருக்காது டி சிரிச்சிகிட்டே வேற சொன்னாருன்னு சொல்றானே.
இல்லங்க நல்லா யோசிச்சி பாருங்க சிரிச்சிகிட்டே ஏன் சொல்லனும் ஒங்க பையன்னு தெரிஞ்சே தான் சிரிச்ச மாறி மெரட்டியிருக்கான் ஒடனே போயி யாரு என்னான்னு பாருங்க தேவையில்லாம பிரச்சனைய வளத்து எம்புள்ளய போலீசுல மாட்டிவிட்டிர போறாங்க என மலைச்சாமியிடம் தன் ஆத்திரத்தை காட்டினார்.
மலைச்சாமியும் ஏய் அப்படியும் இருக்கலாம் அதுக்கும் ஏதாவது காரணம் இருக்கும்.
வேற யாதாவது ஏதாவது கொடுக்கல் வாங்கல்ல இது மாறி பண்ணலாம் என யோசித்தபோது அவருக்கும் குழப்பத்தோடு கோபம் உண்டானது.
இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த மலைச்சாமியின் வீட்டு வேலைக்காரன் அவரை மேலும் சூடேற்றிவிட்டான்
யாராயிருந்தா என்ன அவன் வேலைய அவன் பாக்க வேண்டியது தானே யாரு வண்டி ஒட்டுனா என்னா ரெண்டு தட்டு தட்டுனா சரியாய்டுவான் போங்க ஒடனே போயி ரெண்டு குடுத்துட்டு வாங்க போங்க.
இவனையெல்லாம் கொஞ்சம் தட்டி வைக்கனும் இல்லேன்னா நம்ம மேல பயம் போய்டும்.
போங்க என்றார்.
மலைச்சாமியின் மனைவியும் ஒத்தூதினார் போங்க ரெண்டு தட்டு தட்டிட்டிடு வாங்க அப்பதான் நாம யாருன்னு தெரியட்டும் போலீசுக்கும் சொல்லிடுவோம்.
இதனால் கோபம் அதிகமான மலைச்சாமி தன் மகனுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற கற்பனை ஊற்று பீறீட்டு அடித்து அவரின் கோபத்தை அதிகமாக்கியது.
உடன மகனை அழைத்து நீ வந்த வண்டில முன்னாடி போய் அந்தாள்கிட்ட பேச்சு குடு பின்னாடியே நாவந்து பாத்துக்குறேன்.
அழகனும் கொஞ்சம் பயத்துடன் தலையாட்டினான்
அவன் வீட்டில் பல கட்சிக்காரர்களும் வழக்கு சம்பந்தமாக வரும் நபர்களிடம் அப்பா பேசும் பேச்சுகள், ஆலோசனைகளை கேட்டு வளர்ந்ததால் பெருமிதமும் தனது தந்தை கவுன்சிலர் என்ற கர்வமும் உண்டு.
பதினைந்து நிமிடங்கள் கூட ஆகியிருக்காது அதே வாகனத்தில் அண்ணன் மட்டும் வேகமாக என் வாகனமருகே தன் வாகனத்தை சட்டென்று பிரேக் போட்டு நிறுத்தினான். தம்பி வரவில்லை என்பதால் வீடு அருகிலேயே இருக்க வேண்டுமென நினைத்துக் கொண்டிருக்கும் போதே பையன் சிரித்தபடி வாகனத்தின் சைடு ஸ்டாண்டு போட்டு விட்டு என் அருகில் வந்தான்.
அதே கணத்தில் அவன் வாகனத்தின் அருகில் மற்றொரு இருசக்கர வாகனத்தில் எங்க வார்டு கவுன்சிலரும் வந்தார் வாகனத்தை நிறுத்திவிட்டு என்னை நோக்கி முறைத்தபடி வந்தார். பையனிடம் இவருதான் உங்கிட்ட அப்டி சொன்னாரா என்றபடி என்னை கோபம் கலந்த வெறுப்போடு நக்கலாக பார்த்தார்.
ஆமாப்பா இவருதான் அப்பாகிட்ட சொல்லுங்கன்னு சொன்னாரு.
என்னை முறைத்தபடி, நீங்க ஒங்க வேலைய மட்டும் பாருங்க. அவன் வண்டி ஓட்டுனா ஒங்களுக்கென்ன ஏதாவது ஆனா நாங்க பாத்துக்குறோம்.
நீங்க தான் இவனோடு அப்பான்னு தெரியாது. என்னையும் ஒங்களுக்கு தெரியாது பொதுவாத்தான் அப்படி சொன்னேன். சின்ன பசங்க வேகமா ஓட்டனுன்னு தோனும். மெயின்ரோடு வேற பஸ் லாரில்லாம் வேகமா வரும் போவும். கேஸ் ஆயிடிச்சின்னா அப்பா மேல தான் கேஸ போடுவாங்க. அது இல்லாம நீங்க கவுன்சிலர் வேற , மத்த கட்சிகாரங்க உங்க பழிவாங்கவும் இது உதவும் , இப்ப அபராத தொகையும் அதிகமாகிட்டாங்க. ஜெயிலுக்கும் அனுப்பிடுவாங்கன்னு சட்டமே இருக்கு சார்.
இதனால் மேலும் கடுப்படைந்தவர், அது எங்களுக்கு தெரியும். எம்பையன் அப்படிதான் வண்டி ஓட்டுவான். ஏதாவதானா நா பாத்துக்குறேன். எவன் எம் மவன் மேல கேஸ் போடுறான்னு பாக்குறேன், நீ யாரு எந்த கட்சி ,வந்த வேலைய மட்டும் பாரு.
சார் நீங்க சொல்றது சரியா? பையனுக்கு நீங்க தான் புரிய வைக்னும். நீங்களே இப்படி பேசுறீங்க, கொஞ்சம் மரியாதையா பேசுங்க, அதோட பையனுக்கு ஏதவதாய்டிச்சின்னா அவனோட எதிர்காலத்த பாருங்க.
அவருக்கு கோபம் அதிகமாகியது.
என்னருகே நெருங்கியவர்.
கம்னாட்டி ஒம் வேல மட்டும் பாரு, நா யாருன்னு தெரியுமா தொலச்சிடுவேன். வந்துட்டான் புத்தி சொல்ல என்றார்
நான் கோபப்படாமல் சார் நீங்களே இப்படி பேசுனா ஒங்க பையனுக்கு யாரு நல்லது சொல்றது . வார்த்தைய விடாதீங்க அது ரொம்ப தப்பு என சொல்லிக் கொண்டிருக்கும் போதே என்னை அவர் அறைந்து கீழே தள்ளிவிட்டார். நான் வண்டியில் அமர்ந்தபடி இருந்ததால் அப்படியே மல்லாந்து விழுந்து விட்டேன்.
அக்கம்பக்கம் கூட்டம் கூடி என்னயும் வண்டியையும் தூக்கி விட்டனர். கவுன்சிலர் என்பதால் யாரும் எனக்காதரவாக பேசவில்லை.
அவர் மீண்டும் கோபத்தோடு அடிக்க வந்தார். கூடியவர்கள் சொல்லியும் விலக்கி விட்டும் கேட்காமல் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டிக்கொண்டே இருந்தார் அவர் மகனும் சிரித்தபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். (வருங்கால அரசியல்வாதியாகும் தகுதி )
கூட்டம் விலக்கிவிட்டாலும். அவர் நான் ஏதோ அவருக்கு தகாததை செய்து விட்டது போல கோபத்தில் வானுக்கும் மண்ணுக்கும் குதித்துக் கொண்டிருதார்.
என்னை சுற்றி இருக்கும் கூட்டத்தை பார்த்து பதைபதைப்படி விலக்கிய என் மனைவி எனக்கு தான் நடந்தது என தெரிந்து கொள்ள சிறிது நேரம் ஆனது என்னங்க இது நல்லது சொன்னா பொல்லாப்பா. இவங்களுக்கெல்லாம் ஓட்டு போட்டது நம்ம தப்பு, சரிவிடுங்க. வாங்க வீட்டுக்கு போலாம். அவங்களுக்கு ஏதாவ ஆனாதான் திருந்துவாங்க என்றாள்.
நானும் வண்டியை திருப்பி நிறுத்தி புறப்பட தயாரானேன். என் மனைவி சொன்னது காதில் விழுந்திருக்கும் போல. என்ன நினைத்தாரோ வன்மத்தோடு திரும்ப வந்து வாகனத்தை எட்டி உதைத்தார். வண்டியோடு தடுமாறி சாய்ந்தேன்.
என்னையும் என் மனைவியையும் பார்த்து இன்னொருவாட்டி இது மாறி பேசினியோ அப்புறம் பொம்பளன்னு பாக்க மாட்டேன். பாத்துக்க என்று திட்டிவிட்டு கூட்டத்தை விலக்கி விட்டு போய்விட்டார்.
எனக்கு என்ன சொல்லுவது என தெரியவில்லை. வாகனத்தோடு இரு முறை தள்ளப்பட்டு விட்டதால் சற்று பலமாகவே காலில் அடிபட்டு விட்டது.
அவமானமும் கோபமும் வந்தாலும் எனக்கு இது தேவையா. நாம் யார் அவர்களுக்கு அறிவுரை சொல்ல என்ற கேள்வியும் எழுந்தது. காந்தியின் ஞாபகமும் அவருக்கு ஏற்பட்ட அவமானங்களும் அவர் அதை எதிர் கொண்டதும் நினைவில் வந்து போனது.
என் மனைவியும் என்னங்க உங்களுக்கு பயங்கரமா கோவம் வரும், இப்ப இப்படி இருக்கீங்க என்னாச்சி ஒங்களுக்கு.
விடும்மா நாமளும் கோவப்பட்டா அந்த பையன் மனசு என்னாகும். அவன் பண்ணது தப்புன்னு புரிய வச்சா போதும். அந்தாள் கவுன்சிலர்னு தெரியாது, எம்மேலயும் தப்பு இருக்கு. அவன வண்டி ஒட்ட வேணாண்ணு சொல்ல நாமயாரு. சொன்னாலும் புரிஞ்சிக்குற வயசில்ல. அதனால அப்பாட்ட சொல்லுன்னு சொன்னோம். எல்லாம் நம்ம தலைவிதின்னு போவேண்டியது தான். இந்தாளுக்கெல்லாம் ஓட்டு போட்டது நமக்கு நல்ல பலன். இந்த காலத்துல நல்லது சொல்றதும் தப்பு போல, சரி நாம வீட்டுக்கு போலாமா ?
ம். போலாம் என்றாள்.
வீட்டுக்கு வந்ததும் பேண்டை கழற்றி பார்த்த போது முழங்காலில் லோசாக வீக்கம் தெரிந்தது “மூவ் ” கொஞ்சம் எடுத்து சூடுபறக்க தேய்ததுக் கொண்டேன். வலி குறைந்தது.
மனைவியிடம் நா அவங்க ரெண்டு பேரும் வண்டில போறத வீடியோ எடுத்திருக்கேன் பாரேன்.
அந்த வீடியோவை ப்ளே செய்து மனைவியிடம் காட்டினேன் நாற்பது வினாடிகள் ஒடக்கூடிய வீடியாவாக வாகன எண்ணும் அண்ணன் தம்பி இருவரும் செல்வது தெளிவாக பதிவாகியிருந்ததாக சொன்னாள்.
ஒங்கள அந்தாள் அடிச்சிருக்கான், வண்டியோட ஒதைச்சிருக்கான் வாங்க இத வச்சி போலீஸ்ல கம்ளைண்ட் பண்ணி அவன உண்டு இல்லன்னு பண்ணிடலாம்.
ஏய் வேண்டாம்மா இதோட அத விடு மேற்கொண்டு வந்தா பாத்துக்கலாம்.
நீங்க வர்றிங்களா இல்ல நானே போய் சொல்லிட்டு வர வா.
சொன்னா கேளு இத்தோட விடு. கட்சிக்காரன் வேற நாம போலீசுக்கு போனாலும் அவர ஒன்னும் பண்ண முடியாது.நமக்கும் தேவையில்லாம அலைச்சலாவும். என்றேன்.
என்னமோ போங்க நீங்களும் உங்க ஞாயமும்.
நாட்களின் எண்ணிக்கை ஞாபக இல்லை. வழக்கம்போல நடைப் பயிற்சிக்காக காவேரி நகர் ,குழந்தை யேசு கோயில் வழியாக மணிமண்டபம் வந்து அங்கே இடது பக்கம் திரும்பி சரபோஜி காலேஜ் வழியாக இயற்கை கடை இருக்கும் மெயின்ரோட்டுக்கு அருகே இருக்கும் டீ கடைக்கு வந்து டீ குடித்து விட்டு போவது வழக்கம். ஒரு சுற்று ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரும். நடை பயிற்சியின் முடிவில் டீ கடைக்கு முன்பு மெயின்ரோட்டிலிருந்து கிளையாக ஒரு தெரு பிரியும் இடத்தில் கண்ணீர் அஞ்சலி பிளக்ஸ் ஐ பார்த்தேன் திடுக்கிட்டு மனம் பதறியது என்னது இப்படியாகிவிட்டதே கொஞ்சம்
பதட்டத்தோடு டீ கடையை அனுகினேன் . டீ மாஸ்டரிடம் ப்ளாக் டீ போடச்சொல்லி விட்டு விசாரித்தேன்.
அண்ணே அந்த தெருவுல பிளக்ஸ் தொங்குதே என்னாச்சி.
கேள்விப்பட்டேன் அன்னக்கி ஒங்கள எட்டி ஒதச்சி அசிங்கமா பேசினானே கவுன்சிலர் அவரு பையனுக்கு ஆக்ஸிடென்ட் ஆயிருச்சி அதான்.
எனக்கு அந்த பையனோட அப்பா தான் கவுன்சிலருன்னு தெரியாதுண்ணே ச்சே இப்படியாயிடுச்சே.
உடுங்க நாம என்னா பண்ண முடியும் என்ற படி நடந்ததை விவரிவாக சொன்னார். கேட்டு விட்டு டீயை வேண்டாவெறுப்பாக குடித்து காசை கொடுத்து விட்டு மீதமுள்ள தூரத்தை மனபாரத்தால் நடக்க முடியாமல் நடந்து வீடடைந்தேன்.
ஷுக்களை கழற்றிவிட்டு வீட்டினுள் நுழைந்து நாற்காலியில் அமர்ந்தேன் தண்ணீர் தூக்கிக் கொண்டிருந்த என் மனைவி டீ போடவா என்றபடி என் முகத்தை பார்த்தவள் ஏதோ சரியில்லை என நினைத்து தண்ணீர் குடத்தை சமயலறையில் வைத்து விட்டு வந்து அருகே இருந்த ஸ்டுலில் அமர்ந்து கையை பிடித்துக் கொண்டு.
என்னாங்க முகம் சரியில்ல உடம்புக்கு ஏதும் பண்ணுதா, தலையை கோதிவிட்டாள் எனக்கு அழுகை வருவது போலிருந்தது.
சாகுற வயாசா, ரெம்ப சின்ன வயசு நாலாவது அஞ்சாவது தான் படிப்பான் போல அவனுக்கு இப்படியாய்டும்னு கனவுல கூட நெனச்சதில்ல.
ஒரு வேள நா அப்படி சொன்னதால கூட இப்படி நடந்திருக்கலாம். என புலம்பினேன்.
என்னாச்சிங்க பொலம்பாம விசயத்த சொல்லுங்க என்றாள் கடுப்பாக
என்னால் உடனே பதில சொல்ல முடியவில்லை தொண்டையில் ஏதோ சிக்கிக் கொண்டது போல இருந்தது. கொஞ்ச நேரம் கழித்து மனம் ஒரளவு அமைதியடைந்தது..
மனைவியிடம்,
அன்னக்கி என்ன வண்டியோட எட்டி ஒதைச்சானே கவுன்சிலர்
சரி அவருக்கு என்ன என்றாள் வெடுக்கென்று
சொல்றத முழுசா கேளு
மெயின்ரோட்டுல அண்ணனும் தம்பியும் கடைக்கு மளிகை சாமான் வாங்க வந்துருக்காங்க . டிராபிக்குல ஏதோ ஒரு வகையில் வண்டிய திருப்ப முடியாம சட்டுன்னு போட்ட பிரேக்கால சாஞ்சிடுச்சி பெரியவன் இடது பக்கமும் சின்னவன் வலது பக்கம் விழவும் வண்டிக்கடியில கால் மாட்டிகிச்சி பின்னாடி வந்த மினிவேன் சின்னவன் மேல ஏறி பலமா அடிபட்டு ஆம்புலன்சுல கொண்டு போய் ஆஸ்பத்திரில சேத்தும் பிரயோசனம் இல்லாம செத்து போய்ட்டான்.