விட்டு விடுதலை ஆகி…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 18, 2024
பார்வையிட்டோர்: 2,560 
 
 

(1986ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பனை மட்டையில் மழை பெய்தது மாதிரி, கடந்த அறுபத்தைந்து நிமிஷங்களாகப் புரொபசர் பேசிக் கொண்டிருந்தார். 

சங்கர் தன் கைக்கடிகாரத்தைத் திருப்பிப் பார்த்தான். 11.20, காலை ஆறுமணி அளவில் எழுந்தவன் ஆறரைக்குள் குளித்து விட்டான். பத்து மணிக்குப் பல்கலைக்கழக வகுப்பறைக்கு வந்து விட்டான். பத்தேகாலுக்கு இந்தக் கூட்டம் ஆரம்பித்திருந்தது. சுமார் அறுபத்தைந்து நிமிஷங்களாகப் புரொபசர் பேசிக் கொண்டி ருக்கிறார். கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக அவர் எதைப் பேசிக்கொண்டிருந்தாரோ, அதையேதான் இன்னும் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். 

“…. மாணவர்கள் தங்கள் ஆய்வில் இன்னும் கூடுதலாகச் சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அசிரத்தை உதவாது. அது உங்கள் ஆய்வின் முடிவுகளைப் பலவீனப்படுத்தி விடும். உங்கள் ஆய்வுக்கு நீங்கள் காட்டும் ஆதாரங்கள் உண்மையில் சரியானவை தானா என்பதை மூலங்களைக் கொண்டு பரிசோதித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். சோம்பல் மிகக் கெடுதி பாப்பா…” 

சங்கர் புரொபஸரைக் கொஞ்ச காலமாகவே ஆராய்ந்து கொண்டிருந்தான். இப்போதும் ஆராய்ந்தான். அவர் பிரச்னை, மாணவர்களின் அசிரத்தை அல்ல. மாணவர்களே அவருடைய பிரச்னை. அவர்களின் இளமையே அவருடைய பிரச்னை டிஜிட்டல் கடிகாரத்து எண் மாதிரி துடிக்கிற மாணவர்களுடைய சுறுசுறுப்பு தான் அவரின் பிரச்னை. அவர்கள் தங்கள் இருபதுகளில் இருக்க அவர் மட்டும் ஐம்பதில் இருந்ததால். வராண்டாவில் மணிக் கணக்கில் நின்று கொண்டு அவர்கள் மாணவிகளுடன் எதையோ பேசி உரக்கச் சிரிக்கிறார்கள். அவர் அப்படியெல்லாம் வராண்டாவில் மாணவிகளோடு பேசி இப்படிச் சிரிக்க முடியாது. உரத்து, சந்தோஷமாகச் சிரிப்பது அவர் பதவியின் உயர்வுக்கு ஒவ்வாதது. கேண்டீனுக்கு மாணவிகளுடன் சென்று இந்த மாணவர்கள் செய்வது போல, சுடச்சுட வெங்காய பஜ்ஜி சாப்பிட முடியாது. நினைத்தால் தன்னை வந்து பார்க்காமலே கூட மாணவர்கள் காலத்தை ஒட்ட முடியும். வகுப்பை ‘கட்’ அடித்து, மலையாள சினிமாவுக்குப் போக முடியும். ஆகவே, அவர்கள் தங்கள் கடமை தவறுபவர்கள்? நுனிப்புல் மேய்கிறவர்கள் பொறுப்பற்றவர்கள்! ஊதாரிகள்! சோம்பேறிகள்! சே! என்ன இந்த மாணவர்கள்! அவர்கள் தலையில் இருப்பது போல் கரிய பம்மென்ற தலைமுடி அவருக்கு இல்லை. இளமையிலேயே அவருக்கு வழுக்கை விழுந்து விட்டது. மைதானத்தில் புல் முளைத்தது மாதிரி அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளுத்த முடி அவருக்கு. என்னதான் இறுக்கமாக, நாகரீகமாக உடை அணிந்தாலும், துருத்திக் கொண்டிருக்கும் வயிற்றை அவரால் மறைக்க முடியாது. வயதாகிவிட்டது. முதுமை, தன் கடமையை முறையாக அவரிடம் செயல் படுத்திவிட்டிருந்தது. 

ரைட்! புரொபஸரின் பிரச்னை இதுதான். 

சங்கர் அவர் பேசுவதைப் பார்த்தான். அந்தரத்தில் கையையும் காலையும் விசித்து விசித்து கட்டியும், முகத்தைப் பல கோணலாக்கி யும் எதிரே சூனியத்தில் தன்னால் கற்பித்துக் கொள்ளப்பட்ட ‘மாணவனை’ ஹதம் செய்து கொண்டிருந்தார் அவர். அந்த அறை முழுக்க, நாக்குப் பூச்சிகள் மாதிரியும், மரவட்டைகள் மாதிரியும் வளையம் வளையமாக அவர் வார்த்தைகள் அந்தரத்தில் நெளிந்து கொண்டிருப்பதாக அவனுக்குத் தோன்றியது. பல் துலக்காதவரின் சுவாசம் போல, ஏதோ ஒரு கெட்ட வாசனை புகை மாதிரி கொஞ்சம் கொஞ்சமாகப் பரவிப் பரவி அந்த அறையை மூழ்கடிப்ப தாக அவனுக்குப்பட்டது. 

திடீரென்று ஒரு உருவகம் அவன் மனசுக்குள் உருவாயிற்று. சட்டை போட்ட மாமியார். மீசை முளைத்த, ஆனால் சுயஷவரம் செய்த மாமியார். தொம் தொமென்று குதித்துச் சண்டை செய்கிற மாமியார். ‘களுக் புளுக்’கென்று தன் ஊளைச்சதை அசைய, குட்டைக் கூந்தல் அவிழ்ந்து புரள கண்ணாடி மூக்கில் வழிய. மூச்சிரைக்கத் தன் மருமகளோடு சண்டை போடும் மாமியார். மருமகளின் கருக்கழியாத இளமையில் பொறாமை கொண்டு தன் மென்று சுவைக்காத இறந்த காலத்தை நினைத்துச் சதா வருந்தி, அதன் விளைவாக நிகழ்காலத்தைச் சபிக்கும் மாமியார்… புரொபசர் மாமியார். நிகழ்காலத்தைச் சபிக்கும் மாமியார்… புரொபசர் மாமியார். 

சங்கர் வாய்விட்டுச் சிரித்தான். 

பேசிக்கொண்டிருந்த புரொபஸர் திடுக்கிட்டுத் தன் பேச்சை நிறுத்தினார். அவனைக் கண்டு கொள்ளாது, அவனால் தன் பேரு ரைக்கு ஒன்றும் இழுக்கு ஏற்பட்டு விடவில்லை என்று மெய்ப்பிக் கும் முயற்சியில், அறுந்து தொங்கிய தன்வாக்கியச் சங்கிலியை அவசர அவசரமாக பின்னிக் கொண்டு தன் உரையைத் தொடர்ந்தார். 

“என்னப்பா, கலாட்டாவா?” என்றாள் சுமதி, சங்கரிடம். 

சுமதி அவன் பக்கத்தில்தான் உட்கார்ந்திருந்தாள். அவள் அவனின் சக ஆய்வு மாணவி, கடந்த ஆறு மாதங்களாகத் தான், சுமதி சங்கருக்குப் பக்கத்தில் வந்து உட்காரும் தைரியத்தைப் பெற்றிருந்தாள். பகிரங்கமாக, நாலு பேருக்கு முன் பேசுகிற தைரியமும் இந்த ஆறு மாதங்களாகத்தான் அவளுக்கு வந்திருந்தது.” 

“இல்லை… வர வர இதையெல்லாம் சகிக்க முடியவில்லை…” என்றான் சங்கர் ரகசியக் குரலில். 

“எதையெல்லாம்…?” 

“இந்த அழுக்கு மூட்டைகளை…” 

சுமதி தலையை மேசையை நோக்கிக் கவிழ்ந்துகொண்டு புரொபஸர் பார்க்காத வண்ணம் சிரித்தாள். பிறகு சொன்னாள். 

“பொறுத்தார் பூமி ஆள்வார்.” 

“என்னை ஏதாவது கெட்டவார்த்தைச் சொல்லத் தூண்டாதே.”. “ப்ளீஸ்… சொல்லுப்பா, சொல்லுப்பா…” 

11.30 என்பது தேனீருக்கான இடைவேளை என விதிக்கப் பட்டிருந்தது. ஆகவே புரொபஸர் ஒரு வழியாகப் பேச்சை முடித்தார். முன் பெஞ்ச்சில் உட்கார்ந்திருந்த கண்ணாடி ஷோபனா அவரை நோக்கி ஒரே எட்டில் தாவிச் சென்று, “அற்புதமான பேச்சு சார்.” என்றாள் கொஞ்சலாக. மனிதனின் நுண்ணிய பகுதியைத் தொட்டு அடித்து வீழ்த்தும் பலாத்காரமான கொஞ்சல் அது. 

“இவளுக்கு இறக்கை மட்டும்தான் இல்லை..” என்றாள். சுமதி, சங்கரின் விலாவில் இடித்து. “சீக்கிரமே, பி.எச்.டி. பட்டம்பெற்று விடுவாள்” என்று தொடர்ந்து அவனிடம் கூறினாள். 

“பிள்ளையும் கூட…” என்றான் சங்கர். 

டாய்லெட்டுக்குப் போய் வந்த பிறகுதான் நிம்மதியாக இருந்தது. தொண்டையில் இருந்த முள் எடுக்கப்பட்ட நிம்மதியாய இருந்தது. உலகத்தை முழுமையாய்ப் பார்க்க முடிந்தது. அப்பப்பா! என்ன உபாதை இது! 

வராண்டாவில் டீ கிண்ணத்தை வைத்துக்கொண்டு நின்ற ருந்தாள் சுமதி. உறிஞ்சுக்கொண்டே, தூரத்து மரங்களை, மரங்களுக் கப்பால் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள். வகுப்பறையில் மாணவிகள், அவரவர் இடத்தில் இருந்தவாறே டீ குடித்துக் கொண்டிருந்தார்கள். புரொபஸர் இருந்தால் அவர்கள் அவரைப் பார்த்தபடி இருப்பார்கள். கவனிக்கிறார்களா என்பது வேறு விஷயம். முகத்தைப் புரொபஸருக்குக் கொடுத்துவிட வேண்டும். அது முக்கியம். மனசை எங்கு வேண்டுமானாலும் சஞ்சாரம் செய்ய வைக்கலாம். புரொபஸர் இல்லையென்றால் தங்களுக்குள் பேசிக் கொண்டிருப்பார்கள். ஒரு தனி ஜாதி சூரியகாந்திகள். 

ஒரு டீ கிண்ணத்தோடு சங்கர் அவள் பக்கத்தில் வந்து நின்றான். 

“லெக்சர் முடிஞ்சதும் முடியாததுமா எங்கே ஓடினே…?” என்றாள் சுமதி. 

“டாய்லெட்டுக்குப் போனேன். அவசரம்.” 

“நீ போகல்லையா…” என்றான் சங்கர். 

“தூ… இது ஒரு பேச்சுன்னு பேசறையே நீ.. வெக்கமாயில்லே?”

“இதுல வெட்கப்பட என்ன இருக்கு…? எனக்குப் புரியலையே..” 

“காலையில் ஆறு மணிக்கு நான் படுக்கையை விட்டு எழுந்திருச்சேன். உடனே குளிச்சுட்டேன். ஓட்டல்ல சாப்பிட்டுட்டு, பஸ்ஸைப்புடிச்சு யுனிவர்சிட்டிக்குப் பத்து மணிக்கு வந்துட்டேன். இடைவேளை பதினொன்றரை மணிக்குத் தான் நான் ‘யூரின்’ போனேன். இடையில் ரொம்பக் கஷ்டப்பட்டுட்டேன் தெரியுமா? அடக்கி வைக்கிறது தப்பு இல்லையா? ஆண் உடம்பு மாதிரிதானே உங்க உடம்பும். நீங்க மட்டும் ஏன் ‘பிரியா’ இருக்க மாட்டேங்கறீங்க? இயற்கையான உபாதைதானே இது? இதைப் போய் எதுக்குத் தடுக்க முயற்சி பண்றீங்க…” 

“இதைத் தடுக்கிற முயற்சியிலே எதைக் காப்பாத்த முயற்சி பண்றீங்க? டீ டைம் என்கிறது டீ குடிக்கிறதுக்கு மட்டும்தானா? இந்த மாதிரி உபாதைகளுக்கு விடுதலை கொடுக்கவும் தானே? போக வேண்டியதுதானே? என்ன தயக்கம்? பொய் சொல்லத் தயங்க வேண்டியதுதான். திருட, விபச்சாரம் பண்ணத் தயங்க வேண்டியதுதான். இதுக்குக் கூடவா தயக்கம்? பல் விளக்கிற மாதிரி தானே இது?’ 

“அது… வந்து…” என்று தடுமாறினாள், பி.எச்.டி. செய்கிற சுமதி. எங்கிருந்தோ ஒரு வெட்கம் திடீரென்று வந்து அவள் முகத்தில் உட்கார்ந்து கொண்டது. 

“லுக். இப்படி இருக்கிறதுக்குத்தான் நீங்க வெட்கப் படணும். எதுக்கெல்லாம் வெட்கப்படக்கூடாதோ, அதுக்கெல்லாம் தான் வெட்கப்படறீங்க! எது எதுக்குப் பயப்படக் கூடாதோ அதுக் கெல்லாம் பயந்து சாகறீங்க…” 

“பயம்னா சொல்றே?” 

“நிச்சயமா, பயம் தான். காரணம் நீங்க இன்னும் உடம்பாலயே வாழறீங்க. இருபத்து நாலு மணிநேரமும் உடம்பையே நினைச்சுக் கிட்டு இருக்கீங்க. உங்களை அறியாமலேயே, உங்கள் கை மார்புத் துணியை இழுத்து இழுத்து மூடிக்கிட்டே இருக்கு. மேசை மேலே கையை ஊன்றி ஒரு நிமிஷம் உங்களாலே நிம்மதியா உட்கார முடியறதில்லை. உங்க பக்க வாட்டு உடம்பை எவனாவது பாத்துக் கிட்டு இருப்பான்னு நீங்க அசிங்கப்படுத்திக்கிறீங்க. எங்களையும் அசிங்கப்படுத்துறீங்க… வெறும் உடம்பா நாம்? இல்லை நம்ம சிந்தனைகள் நாம்…” 

கோப்பையில் மிஞ்சியிருந்த டீயைக் குடித்து முடித்துக் கைப்பிடிச் சுவரின் மேல் வைத்தான் சங்கர். 

“டீயைக் குடி. ஆறிடும்… டீ ஆறினா உனக்குப் பிடிக்காதே… சூடு இல்லேன்னா சொல்லு. வேற டீ வாங்கியாறேன்…” என்றான் அவளிடம். அந்தக் குரலில் தொனித்த பரிவு அவளைத் தொட்டது. 

“வேணாம்…சூடு இருக்கு…” என்றவள் அவனைப் பார்த்தவாறே அதைப் பருகி முடித்தாள். 

“என்ன பாக்கறே?’ 

“ஒன்னும் இல்லை.” 

அதைக் கேட்டு அவன் சிரித்தான். 

‘இந்தச் சிரிப்புத்தானே அவன் உயிர்? எல்லோரும் சிரிப்பதாக நினைத்துக் கொண்டு பல்லைத்தானே காட்டுகிறார்கள். பச்சைப் பற்களை, மஞ்சள் பற்களை, கறை ஏறிய பற்களை, கோரைப் பற்களை, புரபொசர் மாதிரி காமப் பற்களை. இவன் சிரிப்பு இருதயத்தில் இருந்தல்லவா வருகிறது. உன் சிரிப்புக்குக் கைகள் உண்டா சங்கர்? அது என் அப்பாவைப் போல என் தலையைத் தடவிக் கொடுக்கிறதே? ஒரு குழந்தையின் பிஞ்சுக் கைகளாய்க் கன்னத்தைக் கிள்ளுகிறதே? உன் சிரிப்பு கைகளை விரித்து என்னைத் தழுவிக் கொண்டு விடுகிறதே? சிரிப்புக்குக் கூடக் கைகள் இருக்குமா சங்கர்?’ 

‘என்ன பேசாமயே நிக்கிற சுமதி…?’ 

என்ன சொல்வது இவனிடம்? 

“ஒன்றுமில்லை. உன் சிரிப்பை அப்படியே, கண்ணாடிச் சட்டம் போட்டு வச்சுக்கனும்னு தோணுது இந்த நிமிஷத்துல…” 

அவன் மீண்டும் சிரித்தான். சிரித்துக் கொண்டேயிருந்தான். புரொபஸர் அவர் அறையில் தேனீர் அருந்திவிட்டு முகத்தைக் கழுவிப் பவுடர் போட்டுக்கொண்டு திரும்பிக்கொண்டிருந்தார். அந்தக் கரிய முகத்தில் அவசரம் அவசரமாகப் பூசப் பெற்ற பவுடர், முகத்தோடு ஒட்டாமல், பூசணிக்காய் வெள்ளை மாதிரி துருத்திக் கொண்டிருந்தது. சரியாகச் சங்கர் சிரித்துக்கொண்டிருந்த அந்தக் கணத்தில் அவர்களைக் கடந்த அவர் முகம் சட்டெனச் சுருங்கியது. 

ஓர் இளைஞனும், யுவதியும் பேசிச் சிரிப்பதன் அர்த்தம் பூட்டி வைத்திருக்கும் படுக்கை அறையின் சாவியை அவர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே! அப்படித் தான் அவருக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டிருந்தது. அது வேறு விதமாய் இருக்க முடியாது. இன்று சிரிப்பார்கள். நாளை படுத்துக் கொள்வார்கள். கற்பு, பண்பாடு, எதுவும் இல்லாதவர்கள்! நடந்து கொண்டிருந்தவர், திரும்பி சுமதியிடம், “சாயங்காலம் என்னை என் அறையில் வந்து பார்” என்று சொல்லிவிட்டுப் போனார். 

அதிர்ச்சிக்குள்ளாகி நின்றாள் சுமதி. “எனக்குப் பயமாய் இருக்கு சங்கர்.” 

“என்னத்துக்குப் பயம்? ஒரு புரொபஸர் அவரோட மாணவியை அறைக்கு வரச் சொல்றது என்ன தப்பு?” 

“அவர் முகம் சரியில்லை… அதான்-” 

“நீயா கற்பனை பண்ணிக்காதே – நீ நினைக்கிறது தப்பாக்கூட இருக்கலாம்…” 

“நீயும் வாயேன், ப்ளீஸ்!” 

“நான் வரமாட்டேன்… பெண்கள் எல்லாத்துக்கும் ஆண்களோட துணையை நாடக்கூடாது… குழந்தைக்குக் கூட நடை வண்டி கொஞ்ச காலந்தான்… என்ன நடந்துடப் போறது… மிஞ்சிப் போனா…?” 

“மிஞ்சிப் போனா…?” 

“உனக்கு டாக்டர் பட்டம் தாமதமா கிடைக்கும். அவ்வளவு தான்…” 

சுமதிக்கு, அவன் அப்படி விட்டேற்றியாகப் பேசியது மனசுக்குள் கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது. 

“என் மேல் உனக்கு அக்கறையே இல்லை…” 

“அப்படி இல்லை சுமதி. எப்பவும் உனக்கு நிழலாவே நான் இருக்க முடியும். உனக்கு நேருவதை நீ தான் எதிர்கொள்ளனும்… யார் தான் யாரை என்ன பண்ணிட முடியும்? அவர் இசகு பிசகா நடந்தாலும், நீ கறாரா பேசி அதைத் தடுத்திடலாம். மிஞ்சிப் போனா, உன் உடம்பு பலமும், மனசோட பலமும் உன்னைக் காப்பாத்தும். பெண்கள் ஆண்களுக்கு நிகரான பலம் உள்ளவங்க தான். உங்க பலத்தை நீங்களே உணர்றதில்லை. அதுதான் உங்க ளோட பிரச்சினை… யானை தன் பலத்தை உணர்ந்தா. பிச்சை எடுக்குமா…?’ 

சுமதி புரொபஸரின் அறையில் ஒரு பூனை மாதிரி நுழைந்தாள். பெரியோர்களின் அறைக்குள் அப்படித் தான் நுழைய வேண்டும். ஆரவாரத்துடன் நுழையக் கூடாது. 

வயசான அறை, எல்லா இடங்களுக்கும், எல்லாப் பொருள் களுக்கும் எல்லா ஆண் பெண்களுக்கும் பிரத்யேகமான வாசனை கள் இருக்கும். அந்த அறைக்கும் ஒரு வாசனை இருந்தது. ஒரு பழைய மேசைக்குப் பின்னால் புரொபஸரின் நாற்காலி. பல படிக் கட்டுகளைக் கடந்து வந்தால் மட்டுமே அமரத் தகுதி உள்ள நாற்காலி. அதன் முதுகில் ஒரு சின்ன டவல் மடித்துப் போடப் பட்டிருந்தது. மேல் உறை போடப்படாத அம் மேசையின் முகத்தில் ஏராளமான பெயர்க்கிறுக்கங்கள், ஆபாசமாக இருந்தன. செங்கற் களின் அளவில், தடிமன் தடிமனான புத்தகங்கள், அடையாளக் காகிதங்களோடு, ஒரு ஓரமாய் இரைந்து கிடந்தன. 

மேசைக்கு முன்னால் இருந்த ஒரு ஒற்றை நாற்காலியில் அவள் அமர்ந்தாள். நாற்காலியின் ஒரு கால் ஊனம் போலும். இந்தப் பல்கலைக்கழகத்தில் இருக்கிற எல்லாப் பொருள்களுமே ஏன் ஊனமாகவே இருக்கின்றன? நாற்காலி இலேசாக ஆடியது. சமாளித்துக் கொண்டு அமர்ந்தாள். இடது கைப்பக்கம் ஒரு பெரிய ஜன்னல். பார்வையில் ஒரு தூங்கு மூஞ்சி மரம் தெரிந்தது. மனித மனம் எவ்வளவு வக்ரமானது? சிவனே என்று அது பாட்டுக்கு இருக்கிற ஒரு மரத்துக்குத் ‘தூங்கு மூஞ்சி மரம்’ என்று பெயரை வைத்த மனிதன் ஒரு அரக்கனாகத்தான் இருக்க முடியும். 

புரொபஸர் நாற்காலிக்குப் பின் பக்க வாட்டில், ஒரு வாஷ் பேசினும், சுவரில் புதைத்த கண்ணாடியும் இருந்தன. கண்ணாடி யைப் பார்த்ததும், ஓர் அனிச்சைச் செயலாகச் சுமதி எழுந்து தன் முகத்தைப் பார்த்துக் கொண்டாள். கழுத்தை அசைத்து இப்படியும் அப்படியுமாகத் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டாள். தான் அழகிதான். அதில் சந்தேகமில்லை என்று தோன்றியது அவளுக்கு. கண்கள், மூக்கு, வாய் முதலானவை இருந்த இடத்தில் பத்திரமாக இருந்தன. 

சுமதி மீண்டும் வந்து தன் நாற்காலியில் அமர்ந்து கொண்டாள். கண்ணாடி பார்க்கும் போதெல்லாம் அவன் நினைவு அவளுக்கு வரத்தவறுவதில்லை. 

சில மாதங்களுக்கு முன் நடந்தது. கடைத் தெருப் பக்கமாகப் போய்க்கொண்டிருந்தார்கள், சங்கரும் சுமதியும். சங்கர் பேனா வாங்க ஒரு கடைக்குள் நுழைந்தான். கடைக்காரர் கொடுத்த பேனாவை, இங்க் பாட்டிலில் நுழைத்து, எழுதிப்பார்த்தான். சங்கரின் கையெழுத்து அவளுக்கு மிகவும் பிடிக்கும். தன் பெயரின் முதல் ஆங்கில எழுத்தை அவன் போடும் விதம் ஒரு சித்திரம் போல் இருக்கும். ஒரு கொக்கு தன் ஒரு காலைத் தரையில் ஊன்றி, இன்னொரு காலை மடக்கிக்கொண்டு நிற்பது மாதிரி அந்த ‘எஸ்’ தோற்றமளிக்கும். அப்போதும் அந்தக் கொக்கைப் பார்க்கும் ஆசையில், அவன் கையெழுத்தை எட்டிப் பார்த்தாள். அவன் கொக்கு வரைந்திருந்தான். ஆனால் சங்கர் என்று எழுதாமல், சுமதி என்று எழுதியிருந்தான்… 

புரொபஸர் அறைக்குள் நுழைந்ததைப் பார்த்ததும், சுமதி எழுந்து நின்றாள். 

“உட்கார்…உட்கார்” என்று அவள் தோளைப் பிடித்து அழுத்தி உட்கார வைத்துவிட்டுத் தன் நாற்காலிக்குப் போய் அமர்ந்தார், அவர். 

சுமதி கூசிப் போனாள். புரொபஸர் எப்போதும் இப்படித் தான். தொட்டுத் தொட்டுத்தான் பேசுவார். அதில் தப்பில்லை. அது அவர் சுபாவமாகக்கூட இருக்கும். தவிர, அப்பா மாதிரி வயதான வர். தொட்டால் தப்பு இல்லைதான். ஏனோ தொட்டுத் தொட்டுப் பேசுவதை அவள் விரும்பவில்லை. அதைச் சொல்லவும் முடிய வில்லை. அது அவர் சுபாவமாக இருக்கும் பட்சத்தில் பையன்களை யும் தொட்டுத்தானே பேச வேண்டும்? அவர் பையன்களைத் தொடுவதில்லை. 

“அப்புறம்… ஆய்வு எல்லாம் எப்படி நடக்குது…?” 

“நல்லா போய்க்கிட்டிருக்கு சார்…” 

“ஏதேனும் பிரச்னை இருந்தா உடனே என்னை வந்து பார்க்கனும் நீ…” 

“வர்றேன் சார்…” 

“தினம் சாயங்காலம் ஓய்வாத்தான் இருப்பேன்… நீ எப்ப வேணும்னாலும் வரலாம்…” 

“சரி சார்…” 

“சொல்றே…. ஆனா என்னைப் பார்க்க நீ வர்றதே இல்லை…”

புரொபஸர் சிரித்தார். அந்த மஞ்சள் பற்கள் அவளுக்கு அச்சம் ஊட்டின. பிறகு அவரே தொடர்ந்தார். 

“கொடைக்கானல்லே ஒரு கருத்தரங்கம். நீ கட்டுரை படிக்கணும்… வரியா?” 

சுமதி யோசிக்க வேண்டியிருந்தது. 

‘என்ன யோசிக்கிறே…’ என்றவாறு எழுந்த புரோபஸர், அவள் அருகில் வந்து நின்று கொண்டார். சுமதியும் எழுந்து நின்றாள். 

‘ரெண்டு நாள் அங்க தங்க வேண்டியிருக்கும்… போகும் போது நம்ம கார்லயே நீயும் வரலாம்… என்ன சொல்றே…?” என்றவாறு அவள் தோள் மீது அவர் கைகளை மெதுவாக வைத்தார். 

மேலே இருந்து ஒரு பாறை அவள் மேல் வந்து விழுந்தது மாதிரி இருந்து. அருவருப்பும் கோபமும் பொங்கியது அவளுக்கு. 

எவ்வளவு நாளைக்கு இதைத் தாங்க? எவ்வளவு காலத்துக்குப் பொறுத்துப் பொறுத்துப் போவது? அஞ்சி, ஒடுங்கி, வெட்கப்படக் கூடாததுக்கெல்லாம் வெட்கப்பட்டு, பட வேண்டியதுக்குப் படாது வாழ்வது? யாரைத்தான் யார் என்ன செய்ய முடியும்? யானைகள் தம் பலத்தை எப்போது அறியப் போகின்றன? 

“ப்ளீஸ்… என் தோள்மேல் இருக்கிற கையை எடுங்க சார். எனக்கு இது பிடிக்காது-” என்றாள் சுமதி. அவள் குரலில் இருந்த உஷ்ணம் அவரைத் தாக்கி இருக்க வேண்டும். ஓர் அடி தள்ளி நின்றார். செய்த தவறை, தவறு என நினைக்காதவர் போல மிக இயல்பாகப் புன்னகை ஒன்றைத்தன் முகத்தில் வருவித்துக் கொள்ள முயன்றார். அம் முயற்சியில் பரிதாபகரமாகத் தோற்று அவசரம் அவசரமாக, “உன் கட்டுரைக்கு என்ன தலைப்பை எடுத்துக்கப் போறே…” என்றார். 

“நான் கொடைக்கானல் வரப் போறதில்லை” என்று அவர் முகத்தை நேராகப் பார்த்துச் சொல்லிவிட்டு விடுவிடென நடந்து, அறைக் கதவை பட்டென்று அறைந்து சாத்திவிட்டு வெளி யேறினாள் சுமதி. 

“நீ செஞ்சது ரொம்ப சரி” என்றான் சங்கர். 

பல்கலைக் கழகக் கட்டிடத்துக்கு முன் இருந்த ஒரு மஞ்சள் அரளி மரத்துக்குக் கீழே அவர்கள் இருவரும் உட்கார்ந்திருந்தார்கள். 

“இங்கேயே படுத்துக்கறதுக்கு சௌகரியமான இடமெல்லாம் இருக்கே! எதுக்கு கொடைக்கானல்?” என்றான் சங்கர், அவளை பார்த்து. 

“உங்களுக்கு இதெல்லாம் ஜோக்கா இருக்கு… ஆனா எனக்குத் தான் பயமா இருக்கு…” மண்ணில் விழுந்திருந்த ஒரு பூவை எடுத்து, நோகாமல் துடைத்துவிட்டு முகர்ந்து கொண்டே சொன்னாள் சுமதி. 

“எதுக்கு பயம்?” 

“புரொபஸர் ரொம்பக் கோபமா இருக்கார்… என்னோட ஆராய்ச்சியை இப்போதைக்கு ‘ஓ.கே’ பண்ண மாட்டார். இன்னும் இரண்டு வருஷம் தள்ளிப் போடுவார். அப்புறம்…” 

“அப்புறம்?” 

“அப்பா, ‘நீ படிச்சு கிழிச்சது போதும்… சும்மா வீட்டுல இருங்கிறார்; மாப்பிள்ளை பாத்துக்கிட்டு இருக்கார்…” 

“வாழ்த்துக்கள், நல்ல பையனா, செவப்பா, அடக்க ஒடுக்கமா இருக்கிறவனா ஒரு பேங்க் ஆபீசராப் பார்த்து கல்யாணம் பண்ணிக்க. சாயங்காலம் ஆனா, அவனோட ஸ்கூட்டர்ல, அவன் வயத்தை கையால சுத்தி வளைச்சுக்கிட்டு, அவன் மேல சரிஞ்சு சாஞ்சுகிட்டு பீச்சில சுத்து. மறக்காமே, தகுந்த இடைவெளி விட்டு இரண்டே இரண்டு பெத்து, இல்லறத்தை இனிமையாக்கி கொள்.” 

“விளையாடாதே சங்கர்… நான் சீரியசா பேசிக் கிட்டிருக்கேன்… எரிச்சலைத் தூண்டாதே…” இலேசாகக் கவிந்து கொண்டிருந்த இருட்டிலும் அவள் கண்கள் மின்னின. 

“சாரி, சுமதி. இதெல்லாம் எனக்குப் பிரச்னையாவே படலை. எந்தச் சந்தர்ப்பதிலேயும் நீ தைரியத்தை மட்டும் இழக்கக் கூடாது. பயம்தான் மரணம். புரொபஸர் கிட்டே எப்படித் தைரியமா பேசினியோ, அதே தைரியத்தில்தான் எல்லா விஷயத்தையும் பார்த்துப் புரிஞ்சுக்கணும். அர்த்தமில்லாததுக்கெல்லாம் கூச்சப்படக் கூடாது. சிரிக்கணுமா, சிரிச்சுடு. அழணுமா, அழுதுடு. அறைய ணும்னு தோணுதா? அறைஞ்சுடு. அதுதான் நல்லது… நீ உன் அப்பாவைப் பத்தி சொன்னே! எல்லா அப்பாவும், அப்பாவாகத் தான் இருப்பாங்க… நீ உன்னோட முடிவுலே உறுதியா இருந்தா யார் தான் உன்னை என்னை செய்ய முடியும்? எழுந்திரு இருட்டிடுச்சு…” 

எழுந்து நடந்தார்கள். 

“சங்கர்…!” 

“என்ன?” 

அவள் என்னவோ சொல்ல நினைத்துச் சொல்லாமல் நடந்தாள். உதடுகள் மட்டும் துடித்தன. 

“சுமி… என்ன கஷ்டம் வந்தாலும் தைரியமா எதிர்த்துப் போராடு! தனியா, உன்னால முடியல்லைன்னா, என் போன்ற நண்பர்கள் இருக்காங்க என்கிறதை மறக்காதே…” என்றவாறு சிரித்தான் அவன். 

அதே, இருதயத்திலிருந்து வரும் சிரிப்பு. கண்ணாடிச் சட்டம் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவள் நினைக்கிற சிரிப்பு. 

– 1986

– பிரபஞ்சன் சிறுகதைகள், முதற் பதிப்பு: 2004, கவிதா பப்ளிகேஷன், சென்னை.

பிரபஞ்சன் பிரபஞ்சன் (ஏப்ரல் 27, 1945 - டிசம்பர் 21, 2018) தமிழ் எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். வார இதழ்களில் பணியாற்றிய இதழாளர். அரசியல் கட்டுரையாளர். தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது 1995-ம் ஆண்டு பெற்றவர். பிரபஞ்சன் 1980-1982-ல் குங்குமம் வார இதழிலும், 1985-1987-ல் குமுதம் வார இதழிலும் பின்னர் 1989-1990-ல் ஆனந்த விகடன் வார இதழிலும் பணியாற்றினார். நக்கீரன் இதழில் அரசியல்கட்டுரைகளும், மொழியாக்கங்களும் செய்துவந்தார். பிரபஞ்சன் பொதுவாசிப்புக்குரிய பெரிய இதழ்களில் பணிக்குச்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *