விட்டில் பூச்சிகள்

1
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 22, 2025
பார்வையிட்டோர்: 3,994 
 
 

(1999ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21

அத்தியாயம் – 16

மஞ்சு அறையை விட்டு வெளியில் வரவில்லை. பிரமை பிடித்தாற்போல் உடலை குறுக்கிக் கொண்டு கட்டிலில் உட்கார்ந்திருந்தாள். தலை கலைந்திருந்தது. கண்கள் சிவந்து முகம் வீங்கிப் போயிருந்தது. 

“என்னடி ஆச்சு…” அம்மாவும் மதுவும் மாற்றி மாற்றி கேட்க “நா ஏமாந்துட்டேம்மா” என்று முணுமுணுத்ததை தவிர வேறெதுவும் பேசவில்லை. இரவு தன்னை மறந்து அவள் தூங்கியபோது மது அவள் அறையை குடைந்தபோது டைரி கிடைத்தது. 

அங்கங்கே அசோக்கைப் பற்றி அவள் எழுதியதை படித்தாள். மும்பைக்கு புறப்பட்டு போவது வரை எழுதியிருந்தது. ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று கணக்கு போட்டுப் பார்த்த வீடு அதிர்ந்து போனது. 

“அடிப்பாவி…” என்று அழுதாள் அம்மா. அப்பா அவமானம் தாங்காமல் துண்டிற்குள் முகம் புதைத்து அழுதார். 

”அன்னைக்கே கண்டிச்சு அடக்கியிருந்தா இப்டி ஆகியிருக்குமா. அந்த கடங்காரன் இவளைத் தொட்டு அனுபவிச்சுட்டு கட்டிக்க முடியாதுன்னு ஏமாத்தியிருப்பான். அதான் இது பிரமை பிடிச்சு உட்கார்ந்திருச்சு. இப்ப என்னங்க செய்ய? நம்ம குடும்ப மானமே போய்டுச்சே.” 

“அப்பா… நீங்க போய் அந்தாளை பார்த்து பேசுங்களேன்” மது மெல்ல சொன்னாள். 

அப்பா யோசித்தார். 

“பிரயோஜனமில்லப்பா…” என்ற குரல் கேட்டது. மஞ்சுதான் சொன்னது. 

“என்னை கீப்பா வேணா வெச்சுப்பாரு. நா சம்மதிச்சா.” 

“அடிப்பாவிப் பெண்ணே…. எங்க பேச்சை எல்லாம் கேட்காம இப்டி பறி கொடுத்துவிட்டு வந்திருக்கயே. எங்களை மனுஷங்களாவா நீ நடத்தின? சம்பாதிக்கற திமிர்ல தலை கீழா இல்ல நடந்த? பெத்த அப்பனுக்கு காசு கொடுக்க யோசிச்சயே. இப்ப எவனுக்கோ உன்னையே கொடுத்துட்டு வந்து நிக்கறயே. கல்யாணம் நாங்க பண்ணி வெக்கறோம்னு அருமையான ஒரு பையனை கூட்டிட்டு வந்தோம். எங்க மேல நம்பிக்கையில்லாம எடுத்தெறிஞ்சு பேசின. இன்னிக்கு எவனையோ நம்பி தாலி கட்டிக்காமயே சீரழிஞ்சுட்டு வந்திருக்கயே. வெக்கமால்ல உனக்கு?’ 

“யசோ… சும்மாரு.” 

“விடுங்க! இப்டி இருந்து இருந்துதான் இந்த பாவி திமிரெடுத்து ஆடினா.” 

“சரி இப்பொ நீ என்ன கத்தி என்ன… அவன் என்ன சூரியதேவனா? இல்ல இவதான் குந்தியா பரிசுத்தமாய்டறதுக்கு?” 

அப்பா நொந்து போய் ஈஸி சேரில் படுத்தார். 

அதன் பிறகு வீடு வீடாக இல்லை. யாரும் சாப்பிட வில்லை. தூங்கவில்லை. மஞ்சு மவுனத்தில் கரைந்தாள். மெல்ல மெல்ல அவள் சித்தம் கலங்கிக் கொண்டு வந்தது. 

ஆண்களைப் பார்த்தாலே முகம் சுளித்துக் கொண்டு ஓடி பதுங்கினாள். அப்பாவைப் பார்த்துகூட பதுங்கினாள். 

அப்பா இன்னும் இடிந்து போனார். அசோக் எட்டிக் கூடப் பார்க்கவில்லை. அவள் அலுவலகம் வராததைப் பற்றி கவலைப்படவில்லை. 

“ஏம்மா அந்நாளு அப்டி செஞ்சான்” மஞ்சு அம்மா விடமும் மதுவிடமும் இதே கேள்வியை இடைவிடாமல் கேட்டு நச்சரித்தாள். 

அப்பா அவளை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல முயன்றபோது அவரோடு செல்ல மறுத்தாள். கடைசியில் அம்மாவும் மதுவும் போக அப்பா பின்னால் வந்தார். 

ஆஸ்பத்திரி வந்ததும் டாக்டரைப் பார்த்ததும் மஞ்சு தலைதெறிக்க ஓடினாள். 

“அந்நாள் என்னை ஏமாத்திடுவான். ஏன் இங்க என்னை கூட்டிட்டு வந்தீங்க” என்று 

கத்தியபடி ஓட, அப்பாவும் அம்மாவும் உடைந்து போய் அழ ஆரம்பிக்க மதுதான் சமாளித்தபடி மஞ்சுவை தொடர்த்து ஓடிச் சென்று பிடித்து நிறுத்தினாள். 

“சரி வா மஞ்சு வீட்டுக்கு போய்டலாம்” என்று சமாதானப்படுத்தினாள். 


ஒரு வருடம் இப்படியே ஓடி விட்டது. மஞ்சு எந்த சிகிச்சைக்கும் ஒத்துழைக்க மறுத்தாள். அவள் சம்பாத்தியமும் இல்லாததால் அந்த வீடு எதற்கு என்று தோன்ற, அப்பா உடனே சிறிய பிளாட் ஒன்று பார்த்தார். முன்பை விட இருமடங்கு உழைத்தார். மதுவின் படிப்பு முடிந்தது. 

“நா வேலைக்கு டிரை பண்ணட்டாப்பா.” 

அப்பா அவளை கூர்ந்து பார்த்தார். 

“சத்தியமா அக்கா மாதிரி எந்த தப்பும் பண்ண மாட்டேம்ப்பா. உங்க பாரத்தை நானும் சுமக்க விரும்பறேன்.” 

அப்பா கண்ணீரோடு அவள் தலையை தடவிக் கொடுத்தார். 

“நா உன்னை நம்பறேம்மா” என்றார். 

மது வேலை வேட்டையில் இறங்கினாள். நிறைய கஷ்டத்திற்குப் பிறகு ஒரு வழியாய் வேலை கிடைத்து விட்ட சந்தோஷத்தோடு வந்தால் அப்பா சாக்கடையில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். மது தன் மடியிலேயே தலை சாய்த்து தூங்கியிருந்த அம்மாவை மிக மிக மெதுவாக நகர்த்தி பெஞ்சில் படுக்க வைத்து விட்டு எழுந்து சென்று வராண்டாவை கடந்து பால்கனியில் வந்து நின்று சற்று நேரம் வேடிக்கை பார்த்தாள். வண்டிகள் வருவதும் போவதுமாய் இருந்தது. மறுபடியும் வந்து அப்பாவை பார்த்தாள். 

“இன்னமும் நினைவு திரும்பவில்லை. அபாயக்கட்டம் தாண்டவில்லை” என்றாள் நர்ஸ். 

தூக்கம் கண்ணை அழுத்த அம்மாவின் காலடியில் அமர்ந்தபடி தலை சாய்த்தாள். 

நள்ளிரவில் அம்மா பெரிதாய் அலறினாள். மது திடுக்கிட்டு எழ அப்பா முகத்தில் துணி போர்த்தப்பட்டிருந்தது. 

அத்தியாயம் – 17

அப்பா செத்துப்போன விஷயத்தைகூட மஞ்சுவின் புத்தி கிரகித்துக் கொள்ளவில்லை. “அப்படியா?” என்று சாதாரணமாக கேட்டுவிட்டு திரும்பி படுத்துக் கொண்டாள். 

சாவு செய்தியை பேப்பரில் படித்து விட்டு சக்கரவர்த்தி அம்மாவோடு துக்கம் விசாரிக்க வந்தான். மஞ்சுவின் நிலையை பார்த்து அதிர்ந்து போனான். மஞ்சு அவனைக் கண்டு அலறினாள். 

மது சட்டென்று அவளிருந்த அறையை சாத்திவிட்டு சக்கரவர்த்தியிடம் மன்னிப்பு கேட்டாள். மஞ்சுவுக்கு ஆன நிலையைப் பற்றி சுருக்கமாக கூறினாள். அவர்கள் வேதனையோடு புறப்பட்டு போனார்கள். 

பதிமூன்று நாள் காரியமும் நடந்து முடிந்தது. இனி என்ன என்று யோசித்தாள் மது. கிடைத்த வேலைக்கும் போக முடியாமல் போய் விட்டது. மறுநாளே வருகிறேன் என்று சொல்லிவிட்டு இத்தனை நாள் கழித்து போனால் ஏற்றுக் கொள்வார்களா? 

போய்த்தான் பார்ப்பது. திட்டினால் தாங்கிக்கொள்ள வேண்டியதுதான். 

ஒரு வேளை வேறு யாரையாவது நியமித்திருந்தால்… எல்லாம் நம்மைக்கே என்று நினைத்துக் கொண்டு வேறு வேலை தேட வேண்டியதுதான். 

மறுநாள் மது அந்த அலுவலகத்துக்கு புறப்பட்டாள். 

ரிசப்ஷன் பெண் அவளை ஏற இறங்கப் பார்த்துவிட்டு பாலசுப்பிரமணியனுக்கு தகவல் சொல்லிவிட்டு உள்ளே அனுப்பினாள். 

“வாங்க” என்று வரவேற்றவன் குரல் வறண்டிருந்தது. 

மது பயத்தோடு அவனை பார்த்து “சாரி சார் மறுநாளே வந்து வேலைல சேர முடியாம போயிடுச்சு.” 

அவன் வெடுக்கென்று தலை நிமிர்த்தி அவளை கோபத்தோடு பார்த்தான். 

“இது சினிமா தியேட்டரில்லை மிஸ் மது. டிசிப்ளின் உள்ள ஒரு ஆபீஸ். அன்னிக்கு என்னமோ படபடன்னு வந்து இண்டாவியூ வெச்சாதான் ஆச்சுன்னு கத்தினீங்க. உங்களை மதிச்சு நானும் வெச்சு, வேலையும் கொடுத்தா பதினைஞ்சு நாள் கழிச்சு நிதானமா உங்க இஷ்டத்துக்கு வரீங்க. சாரி மிஸ் மது… நாங்க வேற ஒரு பொண்ணுக்கு இண்டர்வியூ கார்டு அனுப்பியாச்சு. நீங்க போகலாம்.” 

“சார்… ப்ளீஸ் சார்… நா…” 

“நோ ப்ளீஸ்… நீங்க போகலாம். எனக்கு நிறைய வேலை இருக்கு.” 

மதுவுக்கு அழுகை வந்தது. தொண்டை அடைத்தது. உதட்டைக் கடித்துக் கொண்டாள். பிறகு எழுந்து கொண்டாள். 

“தேங்க்யூ சார்… நீங்க எனக்கு வேலை கொடுக்க வேண்டாம். உங்க இடத்துல இருந்தா எனக்கும் இப்படித்தான் இருக்கும். அட்லீஸ்ட் நா ஏன் வரலைன்னு தெரிஞ்சுக்குங்க. ப்ளீஸ்…” 

அவன் அவளை மவுனமாகப் பார்த்தான். 

“இங்கேர்ந்து நா வீட்டுக்குப் போன அன்னிக்கு அப்பா பாதாளச் சாக்கடைல விழுந்துட்டார். ஆஸ்பத்திரில சேர்க்கும்போதே சீரியஸ். மறு நாள் போயிட்டார். சனிக்கிழமைதான் பதிமூணு நாள்காரியம் முடிஞ்சுது. உங்களுக்குத் தகவல் சொல்லக் கூடதோணல எனக்கு அவ்ளோ இடிஞ்சு போயிருந்தேன்.”  

மது மிக மெல்லிய குரலில் சொல்ல, பாலு அவளையே இரக்கத்தோடு பார்த்தான். 

“நா வரேன் சார்” மது புறப்பட “ஒரு நிமிஷம்” என்றான். மது தலை குனிந்து நின்றாள். 

“சாரி மிஸ் மது… உட்காருங்க ப்ளீஸ்… நா அவசரப் பட்டுட்டேன். காரணம் கேட்டுட்டு அப்புறம் பேசியிருக்கலாம்.” 

சட்டென்று குரலில் கனிவைக் கூட்டி அவளை உட்கார வைத்தான். காப்பிக்கு ஆர்டர் செய்துவிட்டு வெள்ளை பேப்பர் எடுத்துக் கொடுத்தான். 

“ஜாய்னிங் ரிப்போர்ட் எழுதி கொடுங்க” என்றான். 

“யாருக்கோ கார்டு…” 

“அதை கான்சல் பண்ணி இன்னொரு கார்டு அனுப்பிடறேன்.” 

”பாவம்…” 

“நீங்க பாவமில்லையா?” பாலு பெல் அழுத்த, பியூன் உள்ளே வந்தான். 

“இவங்களை கம்ப்யூட்டர் ரூமூக்கு அழைச்சுக்கிட்டு போங்க. ஆர்த்தி கிட்ட சொல்லுங்க. இன்னிக்கு ஜாய்ன் பண்றாங்கன்னு போங்க மது. ஆர்த்தி வில் ஹெல்ப் யூ.” 

“தேங்க்யூ சார்” என்றபடி எழுந்த மது பியூனின் பின்னால் சென்றாள். 

முத்து முத்தான கையெழுத்தில் அவன் ஜாய்னிங் ரிப்போர்ட்டை பார்த்த பாலு அந்த அழகான கையெழுத்தில் ஒரு வினாடி மயங்கிப் போனான். 


ஆர்த்தியின் உதவியால் ஒரு வாரத்தில் வேலை பழகி விட்டது. ஆர்த்தி அவளை விட ஒன்றிரண்டு வயது கூடுதலாக இருப்பாள். அமைதியாக இருந்தாள். மெல்லிய புன்னகை படிந்த உதடுகள். மாநிறம்தான். கண்ணைப் பறிக்கும் அழகு என்று சொல்ல முடியாவிட்டாலும் களையான முகம். கர்வமற்றிருந்தாள். இயல்பாகப் பேசினாள். நாலு நாளில் நல்ல தோழியாகி விட்டாள். 

பத்து நாட்களுக்கு பிறகு மெல்ல ஒருவர் வீட்டைப் பற்றி ஒருவர் அறிந்து கொண்டார்கள். ஆர்த்திக்கு ஒரு அண்ணனும் ஒரு தம்பியும். தம்பி படிக்கிறான். 

அண்ணன் மரைன் என்ஜினீயர். சிங்கப்பூர் கப்பல் ஒன்றில் வேலை. வருடத்தில் பாதி நாள் உலகம் சுற்றுபவன். மனைவி குழந்தைகளோடு கப்பலில் வாசம். பணத்திற்கு பஞ்சமில்லை, ஆர்த்திக்கு வரன்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆர்த்தி தன் மனதிற்கு பிடித்த ஒருவரோடு காதலில் மூழ்கியிருக்கிறாள். “விரைவில் காதலன் அவன் வீட்டுக்கு வந்து பெண் கேட்பான். பிறகு திருமணம் நிச்சயமாகி விடும்” என்றான். 

மது பெருமூச்சு விட்டாள். 

“என்ன மது?’ 

“ஒண்ணுல்ல…காதல்ல உனக்கு நம்பிக்கையிருக்கா ஆர்த்தி?” 

“ஏன் உனக்கில்லையா?” 

“ஆண்கள் பிரம்மச்சாரியா, கல்யாணமானவனா, மனைவியை இழந்தவனான்னு தெரிஞ்சுக்க அவங்களுக்கு எந்த அடையாளமும் இல்ல ஆர்த்தி. எல்லா அடையாளமும் பெண்ணுக்குதான். இதனால சுலபமா ஏமாத்திடறான் ஆண்.” 

ஆர்த்தி அவளை கூர்ந்து பார்த்தாள். 

“உன் பேச்சுல ஏதோ வேதனை இருக்கே. என்ன மது? உன்னை யாராவது…” 

“பப்ளீஸ் என்னையில்ல ஆர்த்தி.” 

“பின்னே…” 

“நத்திங் ஜெனரலா சொன்னேன்.” 

மது பேச்சை மாற்ற முயல ஆர்த்தி அவளை கூர்ந்து பார்த்தாள். எதையோ அவள் மறைப்பதாக தோன்றியது அவளுக்கு. 

அதன் பிறகும் கூட காதல் பற்றி பேசினால் மதுவின் முகம் மாறியது. பேசியவர்களிடம் எரிந்து விழுந்தாள். 

கம்பெனி செலவில் வருடத்திற்கொரு முறை பணியாளர்கள் அனைவருக்கும் உயர்தர தியேட்டர் ஒன்றில் நல்ல படம் ஒன்று சிறப்புக் காட்சியாகத் திரையிட ஏற்பாடு செய்யப்படும். சினிமா, அதைத் தொடர்ந்து லன்ச் எல்லாமே கம்பெனி செலவுதான். என்ன சினிமா என்பதை தீர்மானம் செய்ய மீட்டிங் ஒன்று போட்டான் பால சுப்பிரமணியன். ஆளாளுக்கு ஒரு புதுப்படத்தின் பெயரை சொல்ல, இறுதியாக ‘மின்சாரக் கனவு’ என்று ஒருமனதாக தீர்மானமாயிற்று. மது எந்த படத்தின் பெயரையும் முன்மொழியவில்லை. அமைதியாக அமர்ந்திருந்தாள். பாலுவின் பார்வை இரண்டு மூன்று முறை அவள் மீது விழுந்தது. அலுவலகத்தில் சேர்ந்த பிறகு இப்போதுதான் அவளை மறுபடியும் பார்க்கிறான் அவன். அவனுடைய வேலை நிர்வாகம் சம்பந்தப்பட்டது. அவளுடையது டெக்னிக்கல் துறை. எனவே இருவருக்கும் அலுவலகரீதியாக தொடர்பு எதுவும் இல்லை. 

கிட்டத்தட்ட இரண்டு மாதத்திற்கு பிறகு இன்றுதான் பார்க்கிறான் அவனை.

“என்ன மது வேலையெல்லாம் பழகிடுச்சா செட்டில் ஆய்ட்டீங்களா?” என்றான் அவளை பார்த்ததும். 

“பழகிடுச்சு சார் உங்க தயவுல ரெண்டு மாசம் ஓடிடுச்சு. நீங்க மட்டும் அன்னிக்கு ஸ்ட்ரிக்டா இருந்திருந்தா இங்க நான் நுழைஞ்சிருக்கவே முடியாது. உங்களுக்கு நா ரொம்ப கடமைப்பட்டவ.” 

பாலு சிரித்தான். 

அதன் பிறகு ஆட்கள் சேர, சினிமா பற்றிய பேச்சு துவங்கியது. மது அமைதியாக அமர்ந்திருந்தாள். 

“ஜாலியா இருக்கணும். இளமை துள்ளணும். லவ் பிலிமாவும் இருக்கணும்” என்று நிறைய பேர் சொல்ல மின்சார கனவு என்று முடிவானது. 

“நல்ல செலக்ஷன்” என்று மகிழ்ந்தாள் ஆர்த்தி. 

“கண்டிப்பா வந்துதான் ஆகணுமா?” என்று கேட்டாள் மது. 

“என்ன மது… ஏன் இப்டி கேக்கற?” 

“எனக்கு பிடிக்கலை. நா வரலை.” 

“எது படமா? இல்ல எங்களோட வரதா?” 

“அய்யோ உங்களோட வரது கசக்குமா… நா படத்தை சொன்னேன்.” 

“ஏன் படத்துக்கென்ன… நல்ல படம்தானே. மூணு மணி நேரம் ஜாலியா இருக்கத்தானே போறோம். சூப்பர் காதல் படம் மது.” 

“ஐ ஷேட் லவ்… சுத்த அபத்தம்!’ 

“காதலிக்கறது அபத்தமா?” 

“பெத்தவங்களை முழுமையா நம்பறவங்க காதலிக்க மாட்டாங்க ஆர்த்தி.” 

“என்ன இப்டி பேசற? காதல் அபத்தமில்ல மது. நீ பேசறதுதான் அபத்தம். அப்போ சீதையும் ராமனும் தங்களோட அப்பா அம்மாவை நம்பலைங்கறயா? ராதாவும் மீராவும் கண்ணனை காதலிச்சது அபத்தம்கறயா? காதல் அபத்தம்னா அகநானூறே அபத்தமா?” 

“இது திரேதா யுகமோ, துவாபரயுகமோ இல்ல ஆர்த்தி. கலியுகம், காமயுகம். இங்க காதலைவிட காமம்தான் முக்கியம். காதல்ங்கற அஸ்திரத்தை உபயோகிச்சு பெண்ணை அனுபவிச்சுட்டு தூக்கியெறிஞ்சுட்டுப் போற காமுகர்கள்தான் இப்போ அதிகம். மொத்தத்துல எந்த ஆணும் இங்கே யோக்கியனில்லை.” 

மது தன்னை மறந்து சத்தமாகவே பேச பாலு அவளை வெறித்துப் பார்த்தான். ஆர்த்தி அவள் பேச்சில் அதிர்ந்து போனாள். நல்ல காலம் சினிமா தீர்மானமானதுமே அனைவரும் போய்விட்டனர். பாலு கூட தான் மறந்து விட்ட பேனாவை எடுக்கத்தான் திரும்பி வந்திருந்தான். மதுவை உற்றுப் பார்த்துவிட்டு பேனாவை எடுத்து செருகிக் கொண்டு போனான். 

அத்தியாயம் – 18 

பாலுவின் அறையில் அவன் எதிரில் நின்றிருந்தாள் ஆர்த்தி. 

“என்னாச்சு ஆர்த்தி உன் பிரண்டுக்கு? ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு கத்தற அளவுக்கு ஆம்பளைங்க மேல அவங்களுக்கு என்ன அப்டி வெறுப்பு?” 

“தெரியல சார். ஆனா ஆரம்பத்துலேருந்தே காதல்ங்கற வார்த்தை கேட்டாலே அவ ரியாக்ஷன் அப்டித்தான் இருக்கு.” 

“இந்த வயசுல இவ்ளோ உணர்ச்சி வசப்படறதுக்கு பர்சனல் காயம் ஏதேனும் இருக்கணும் ஆர்த்தி.” 

“இருக்கலாம். ஆனா சொல்ல மறுக்கறா.” 

“தெரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க.” 

“ஆர்த்தி ப்ளீஸ்…” என்ற பாலுவை ஆர்த்தி வியப்போடு பார்த்தாள். 

“அதைத் தெரிஞ்சுக்கிட்டு நமக்கென்ன சார் ? அது அவ அந்தரங்க மில்லையா?” 

“அவ நம்ம கொலீக் ஆர்த்தி. அந்த வகைல ஒருத்தர் கஷ்டத்தை ஒருத்தர் தெரிஞ்சுக்கிட்டு உதவ வேண்டாமா?” 

“டிரை பண்றேன் சார்” ஆர்த்தி வெளியில் வந்தாள். 

மது தன் கம்ப்யூட்டரில் பிஸியாக இருந்தாள். ஆர்த்தி அவளருகில் வந்து அமர்ந்தாள். 

“பாலு சார் உன்னைப் பத்தி விசாரிச்சார் மது.” 

“ஏன்… என்ன கேட்டார்?’ 

“ஆம்பளைங்க மேல உனக்கென்ன வெறுப்புன்னு கேட்டார்?” 

“அவர் ஆம்பளையாச்சே. என் வார்த்தை அவரை கட்டிருக்கும். பட் நா பொதுவில்தான் சொன்னேன். யாரையும் காயப்படுத்துற எண்ணத்துல சொல்லல.” 

“இப்டி நீ பேசற அளவுக்கு உன் மனசை காயப்படுத்தினது எதுன்னு கேக்கறார். அவர் மட்டுமல்ல, நானும் தான் கேக்கறேன். ஏன் மது? எங்கிட்ட சொல்லக் மூடாதா?” 

“என் சிநேகிதி ஒருத்தி ஒரு ஆணை உயிரா காதலிச்சா ஆர்த்தி. கடைசில அந்த ஆண் அவளை அனுபவிச்சுட்டு கல்யாணம் செய்துக்க மறுத்துட்டான். காரணம் அவன் ஏற்கனவெ கல்யாணமானவன். அதை மறைச்சு ஒரு பெண்ணோட பழகி அவ ஆசையைத் தூண்டி விட்டு அவளை கெடுத்து கடைசில கட்டிக்க முடியாது… வேணும்னா சின்ன வீடா இருந்துட்டு போ… கடைசி வரை நாம இப்படியே இருப்போம்னு சொல்லிவிட்டான் அந்த அயோக்யன். என் சிநேகிதி நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண். அவளால இந்த அதிர்ச்சிய தாங்க முடியல. ஷாக்காயிட்டா. அவ மூளை அப்படியே அப்செட் ஆயிடுச்சு. அதையே புலம்பி புலம்பி இப்போ சித்தப்பிரமை பிடிச்ச நிலையில இருக்கா. மாசம் பத்தாயிரம் சம்பாதிச்சுட்டிருந்தவ. கம்ப்யூட்டர் படிச்சவ. இன்னிக்கு கட்டில்ல பரிதாபமா சுருண்டு படுத்துக்கிட்டு விட்டத்தை வெறிச்சு பார்த்துக்கிட்டிருக்கா. என்னென்னவோ ட்ரீட்மெண்ட் கொடுத்துப் பார்த்தாச்சு. முன்னேற்றமே இல்ல. இதுக்கு யார் காரணம் ஆர்த்தி? ஒரு ஆண்தானே. இவளை மாதிரி இன்னும் எத்தனை பேர், எங்கெங்கயோ? ஆண்கள் அயோக்கியர்கள்னு நா சொல்றதுல என்ன தப்பு?” 

“ஏதோ ஒரு சிலரை வைத்துக் கொண்டு மொத்த ஆண்களையும் அயோக்கியர்கள் என்று சொல்லி விடாதே மது.” 

மது பதில் சொல்லவில்லை. 

“இப்டி நீ பொதுவுல சொல்றதுனால எவ்ளோ பேர் வேதனைப்படுவாங்க. தெரியுமா! பாலு சார் ரொம்ப கஷ்டப்பட்டுகிட்டார். என்னைப் பத்தியும் அப்டி ஒரு அபிப்ராயம் தான் வெச்சிருக்காங்களா மதுன்னு கேட்டார். தப்பு செய்யறவங்களை நடுவீதில இழுத்தி நிறுத்தி கல்லால அடி மது. ஆனா ஒட்டு மொத்தமா எல்லார் மேலயும் எச்சில் துப்பாதே. பெண்கள்ள கெட்டவங்க இல்லன்றயா? நல்ல ஆண்களை மயக்கி அவங்க சொத்து முழுக்க ஏமாத்திப் பறிச்சுக்கற பெண்கள் கூட்டடம் இல்லன்றயா? அவங்களை வெச்சு நீயும் அப்படிப்பட்ட பெண்தான்னா நீ ஒத்துப்பயா? வேதனைப்பட மாட்டயா?” 

ஆர்த்தி பேசுவதிலும் நியாயமிருப்பதை உணர்ந்த மது தான் அப்படி கத்தியிருக்கக் கூடாது என்று நினைத்தாள். அதற்காக பாலுவிடம் மன்னிப்பு கேட்கத் தீர்மானித்தாள். 

மாலை நான்கு மணிக்கு மேல் சற்று வேலை குறைந்ததும் பாலுவின் அறைக்கு சென்றாள். 

“வாங்க மது… என்ன அதிசயமா?” பாலு பேனாவை வைத்து விட்டு நிமிர்ந்தான். 

மது சற்று நேரம் மவுனமாய் நின்றாள். 

”உட்காரலாமே!’ 

“இல்ல உங்ககிட்ட மன்னிப்பு கேட்க வந்தேன்.’ 

“எதுக்கு?” 

“ஆர்த்திகிட்ட சொல்லி வருத்தப்பட்டீங்களாமே அதுக்குதான்.” 

பாலு அவளை உற்றுப் பார்த்தான். 

“ஆண்கள் மேல உனக்கு எதனால அவ்ளோ வெறுப்பு மது?” 

“ஒரு ஆணினால் என் சிநேகிதி வஞ்சிக்கப்பட்டாள். அதான்… சாரி சார். மொத்த ஆண்களையும் நா அப்டி சொல்லியிருக்கக் கூடாது.” 

“பரவால்ல மது. உங்க சிநேகிதி இப்போ என்ன செய்யறாங்க?’ 

“சித்தப்பிரமை பிடிச்சு படுக்கைல இருக்கா சார்.” 

“நோ… ட்ரீட்மெண்ட் குடுத்தீங்களா?” 

“பயனில்லை சார்.” 

“சில நேரம் மருந்து மாத்திரைகளால் தீராத மனநோய் அவங்களோட பேசப் பேச சரியாப் போய்டும்னு சொல்வாங்க மது. ஒரு மருத்துவரால் தீர்க்க முடியாத நோயை ஒரு நல்ல நண்பன் தீர்த்து வைப்பான்னு கேள்விப்பட்டிருக்கீங்களா? உங்க சினேகிதின்றீங்க. அப்புறம் என்ன? நீங்களே அவங்களை குணப்படுத்த முயற்சிக்கலாமே.” 

மது அவன் பேசப் பேச வியந்தாள். 

“வஞ்சிக்கப்பட்டாள்னா எப்டி மது? பழகிட்டு விட்டுட்டானா… இல்ல படுத்துட்டு உதறிட்டானா?’ 

மது உதட்டை கடித்துக் கொண்டாள். “தொட்டப்பறம் தான் சார் விட்டுட்டான்.” 

“ஒரு படிச்ச பொண்ணு இதால சித்தபிரமை பிடிக்கற அளவுக்கா அப்ஸெட் ஆய்டுவாங்க? அவங்க படிப்பு அவங்களுக்கு மன உறுதியை அளிக்கலன்னுதான் தெரியுது. படிச்ச இவங்களுக்கும் ஒரு கிராமத்து கோழைப் பெண்ணுக்கும் என்ன வித்தியாசம்? உங்களால முடியாட்டி சொல்லுங்க மது உங்க சிநேகிதியை நா சரி பண்ணிக் காட்டறேன். அவங்க மனசுல ஏதோ குற்ற உணர்ச்சி இருக்கு. தான் பெண், கல்யாணத்துக்கு முந்தி கெட்டுட்டோம். இது தப்புன்ற உணர்வு அவங்களை இப்டியாக்கி இருக்கும். இந்த நிலையில் ஒரு நல்ல பிரண்ட்ஷிப் அவங்களுக்கு தேவை.” 

மது யோசித்தாள். கூடவே தயங்கினாள். சிநேகிதி என்று பொய்யல்லவா கூறியிருக்கிறாள். 

“என்ன மது யோசிக்கறீங்க? உங்களோட சிநேகிதின்னு சொன்னதாலதான் நா அக்கறை எடுத்துக்க விரும்பறேன்.” 

”ஓ.கே. சார். நா அவளை எப்படியாவது பீச்சுக்கு கூட்டிட்டு வரேன். நீங்க எதேச்சையா என்னை சந்திச்சு பேசறாப்பல பேசுங்க. நா அவளுக்கு உங்களை அறிமுகப் படுத்தறேன்.” 

“சரியா ஆறு முப்பதுக்கு காந்தி சிலைகிட்டே இருப்பேன் மது” பாலு சொல்ல மது தலையாட்டினாள். அக்காவை எப்படி அழைத்து வரப் போகிறோம் என்ற கவலையோடு. 


வெகு நேரப் பிரயத்தனத்திற்குப் பின் ஒரு வழியாக மஞ்சுவை கிளப்பிக் கொண்டு ஒரு ஆட்டோ பிடித்து கடற்கரை சாலைக்கு வந்தாள். லைட் ஷவுசில் இறங்கிக் கொண்டு நடை பாதையில் அக்காவோடு மெல்ல நடந்தாள். மஞ்சு தூரத்து கடல் அலையை வெறித்தபடி நடந்தாள். 

”ஷலோ மது” சரியாக காந்தி சிலையருகில் எதிரில் வந்தான் பாலு. மஞ்சு அவனை பயத்தோடு பார்த்து முகம் சுளித்தாள். 

“ஷலோ சார் எங்க இப்டி” என்று கேட்ட மதுவை சுட்டெரித்து விடுவது போல் பார்த்து விட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள். 

“சும்மா வாக் வந்தேன்.” 

“மஞ்சு இவர் எங்க ஆபீஸ் பர்சனல் மானேஜர் பாலசுப்பிரமணியன்.” 

மஞ்சு அவளை சட்டென்று பிடித்திழுத்துக் கொண்டு நடந்தாள். 

“ஆபீஸ் அதிகாரிகளை நம்பாதே மது. கெடுத்துவிட்டு ஓடிடுவாங்க. திருட்டுப் பசங்க.” 

“இவர் நல்லவர் மஞ்சு. கண்ணியமானவர்.’ 

“ஆரம்பத்துல அப்படித்தான் பழகுவாங்க. எல்லாம் வேஷம்! உள்ள ரொம்ப புரூரமா இருப்பாங்க வா போலாம். இனிமே இந்தாள்ட்ட அதிகம் பேசாதே.” 

ஒரு நிமிஷம் பாலு குறுக்கிட்டான். 

“நீங்க யார் மேலயோ ரொம்ப கோவமா இருக்கீங்கன்னு தோணுது.” 

“ஆமா இருக்கேன். அதைக் கேக்க நீ யாரு? போய்யா வேலையைப் பார்த்துக்கிட்டு.” 

மஞ்சு சத்தமாக கத்த சுற்றிலும் சென்றவர்கள் திரும்பி பார்க்க, மது கவலையோடு அவனைப் பார்த்தாள். கண்களால் அவனிடம் மன்னிப்பு கேட்டாள். 

மஞ்சு வேகமாக நடந்தாள். 

“மது அவளை விட்டுட்டு நீ கொஞ்ச நேரம் காணாம போய்டு நா பார்த்துக்கறேன்” 

பாலு சொல்ல மது வேறு பக்கமாய் நடந்தாள். சற்று தூரம் சென்ற மஞ்சு, மதுவைக் காணாமல் திரும்பினாள். அவள் முகம் பயத்தில் வெளுத்தது. கடற்கலையிலிருந்த அத்தனை ஆண்களும் அவள் மீது பாயப் போவதாக கற்பனை செய்து கொண்டு கத்தியபடியே மயங்கி விழப் போனாள். பாலு சட்டென்று ஓழப் போய் அவளைத் தாங்கிக் கொண்டான். மது அருகில் வர முயல, பாலு அவளை வர வேண்டாம்  என்றான். 

“ப்ளீஸ் மஞ்சு ரிலாக்ஸ். உங்களுக்கு ஒண்ணுமில்ல. பயந்துட்டீங்க. மது இப்போ வந்துடுவாங்க. இப்டி உட்காருங்க” என்றபடி அவளை புல்வெளியில் அமர வைத்தான். மஞ்சு அவனை வெறித்துப் பார்த்தாள். 

– தொடரும்…

– விட்டில் பூச்சிகள் (நாவல்), முதற் பதிப்பு: 1999, கண்மணி வெளியீடு, சென்னை.

1 thought on “விட்டில் பூச்சிகள்

  1. சுவாரஸ்யம் குறையாமல் கதை சென்றது எப்படி முடியும் என யுகத்திற்கு நல்ல முடிவு கதைக்கு ஆசிரியர் குழு வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *