விட்டில் பூச்சிகள்





(1999ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18
அத்தியாயம் – 13
“எனக்கென்னமோ இந்த பெண்ணை நீங்க இப்டி விடறது சரியில்லன்னு படுது. என்னதான் படிச்சிருந்தாலும் நம்ம வீட்டு பெண்களை உடனே தனியா ஒரு ஆளோட அனுப்பிடறது நல்லாவா இருக்கு?” யசோதா புலம்பினாள்.

“நா என்னடி செய்யட்டும்? அவ என்ன சொன்னான்ன கேட்டல்ல? உள்ளூர்லேயே அவ ஹாஸ்டல்ல போய் தங்கறதை விட அவ இஷ்டப்படி நாலு நாள் ஆபீஸ் வேலையா போயிட்டு வரட்டும்னுதான் பேசாம இருந்துட்டேன்.”
“அது சரி… படிச்சுட்டாலும் பொம்பளை பொம்பளைதாங்க… ஆபத்து என்னிக்கும் பொம்பளைக்குதான். இவ நல்லபடியா திரும்பி வர வரைக்கும் எனக்கு பக்குபக்குன்னு இருக்கும்.”
“அதெல்லாம் பத்திரமா வந்துடுவா. உம் பொண்ணு லேசுப்பட்டவளா என்ன? ஊரை வித்துடற சாமர்த்தியம் உண்டு. ஏமாத்த நினைக்கறவன் கண்ணுல விரலை விட்டு ஆட்டிடுவா. தெரிஞ்சுக்க.”
“என்னமோ போங்க. அவ வந்ததும் எப்படியாவது பேசி அவ மனசை மாத்தி அந்த பிள்ளைக்கு கட்டி வெக்கப் பாருங்க. அப்பதான் எனக்கு நிம்மதியார்க்கும். தேடினாலும் இந்த மாதிரி ஒரு பையன் இனி கிடைக்க மாட்டான்.”
“அது உனக்கும் எனக்கும் தெரியுது. அவளுக்கில்ல தெரியணும்? பார்ப்போம். எல்லாத்துக்கும் பிராப்தம் இருக்கணும். இவ பிராப்தம் என்னன்னு பார்ப்போம்”
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வந்து சேர்ந்தாள் மஞ்சு. முகத்தில் புது மெருகும் பொலிவும் கூடியிருந்தது. மதுவுக்கு இரண்டு ரெடிமேட் டிரஸ்ஸும் அம்மாவுக்கு ஷால் ஒன்றும் வாங்கி வந்திருந்தாள்.
“போன வேலை நல்லபடியா முடிஞ்சுதாடி?” அம்மா கேட்டதும் ஒரு வினாடி முகம் மாறினாள். “ம்” என்றபடி குளிக்கப்போனான்.
அம்மா அவளுக்கு சுடச்சுட டிபன் தயார் செய்தாள்.
“அப்பா எங்கே?’
“வர நேரம்தான். என்ன விஷயம்?”
“அவர் வந்தப்பறம் சொல்லு. என்ன விஷயம்னு சொல்றேன்.”
“என்னடி புதிர் போடற?”
மஞ்சு சிரித்தாள். ஐந்து மணிக்கு மேல்தான் ஷண்முகம் வீட்டுக்கு வந்தார்.
“எப்பொ வந்த மஞ்சு?’
“உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும்ப்பா.”
“நா சொல்லல, அவ மனசு மாறிடும்னு. அம்பத்தூர் வரனைப் பத்தி தானே மஞ்சு?”
மஞ்சு அம்மாவை முறைத்தாள்.
”சும்மாரும்மா. எங்க எம்.டி.யோட பிள்ளை அசோக்னு பேருப்பா. அவருக்கு என்னை ரொம்ப பிடிச்சிருக்கு. என்னை கல்யாணம் பண்ணிக்க விரும்பறார். எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையணும்கறதுதானே உங்க ஆசையும். நீங்க பார்த்த இடத்தை விட இது பல மடங்கு பெரிய இடம். கோடீஸ்வர சம்பந்தம். உங்க பொண்ணு தினம் ஒரு கார்ல போகலாம். அந்த கம்பெனில வேலை செய்தது போய் அந்த கம்பெனிக்கே சொந்தக்காரியாகப் போறா. தங்கத்தட்டுல சாப்டுவா. பன்னீர்ல வாய் கொப்புளிப்பா. திங்கட்கிழமை அவர் தன் அப்பா அம்மாவோட வந்து என்னை பெண் கேட்பார். உங்களுக்கு பைசா செலவிருக்காது. கல்யாணம் அவங்க செலவுலேயே நடக்கும். ஊரே மூக்குல விரல் வெக்கற அளவுக்கு நடக்கும். நா அந்த வீட்டுக்கு போனதும் மது கல்யாணத்துக்கு கூட பணம் தரேன்னு சொல்லியிருக்காங்க… உங்களுக்கு ஒரு வீடு கட்டித் தரதா சொல்லியிருக்கிறார். மொத்தத்துல இது என்னைத் தேடி வர அதிர்ஷ்டம் நல்ல படியா பேசுங்க போதும்.”
மஞ்சு சொல்லி முடிக்க, வீடே ஸ்தம்பித்தது. அவள் சொல்வதெல்லாம் நிஜம்தானா என்று வியந்தார்கள்.
“நம்ம அந்தஸ்துக்கு மீறி சம்பந்தம் வெச்சுக்கறது என்னிக்குமே நல்லதில்ல மஞ்சு.”
“நா உங்ககிட்ட அட்வைஸ் கேக்கல” மஞ்சு வெடுக்கென்று சொன்னாள்.
அதன் பிறகு அப்பா எதுவும் பேசவில்லை.
திங்கட்கிழமை மஞ்சு ஆபீஸ் போகவில்லை. வீட்டை சுத்தம் செய்து முன் ஹாலை அலங்கரித்தாள். தன் அறையிலிருந்த சோபாவை கொண்டு வந்து ஹாலில்ல போட்டாள். ஜன்னல் காட்டன்களை மாற்றினாள். சரியாக ஐந்து மணிக்கு வந்து விடுவதாக கூறியிருந்தான் அசோக். நாலு மணிக்கு தன்னை அலங்கரித்துக் கொண்டாள். அசோக் வாங்கிக் கொடுத்த பட்டுப் புடவை உடுத்தி விரித்த கூந்தலை சின்னப் பின்னலாக போட்டு பூ வைத்துக் கொண்டாள். வைர செட்டை எடுத்து அணிந்து கொண்டாள்.
பெண்ணைப் பெற்ற யசோதா வாய் பிளந்தாள்.
“என்னடி இப்படி ஜொலிக்குது காதுலயும் கழுத்துலயும்.”
“வைர செட் அவர் வாங்கித் தந்ததுதான்.”
“அடேயப்பா. பெரிய இடம்தாண்டி பிடிச்சிருக்க.”
“இப்ப நம்பறயா.”
”எப்டியோ நீ நல்லார்ந்தா சரி.”
அப்பாவின் முகத்தில் மட்டும் கவலை மாறவில்லை. ஏதோ சிந்தனையிலேயே இருந்தார்.
ஹால் கடிகாரம் ஐந்து முறை மென்மையாக கூவியது.
மஞ்சு பால்கனி வழியாக வீதியை எட்டிப் பார்த்தாள். ஏதேதோ கார்கள் போயிற்று.
அசோக்கின் வண்டியை இன்னும் காணவில்லை.
“அஞ்சு மணிக்குன்னுதானே சொன்னாங்க?”
“வந்துடுவாங்கம்மா அவர் ரொம்ப பிஸியானவர். கிளம்பற வரை அவரை எல்லோரும் தொந்தரவு செய்துக்கிட்டே இருப்பாங்க எதுக்காவது.”
மணி ஐந்து முப்பதுக்கு மேல் ஓடி ஆறை எட்டிப் பிடித்த போது “என்னடி” என்று கவலையோடு அம்மா கேட்க மஞ்சுவும் கிளம்பினாள்.
“இன்னும் கொஞ்ச நாழி பார்ப்போம்மா. எங்கேயாவது டிராபிக்ல மாட்டிக் கிட்டாங்களோ என்னவோ” என்றவள் குரலில் சுரத்தில்லை.
மணி ஏழையும் கடந்தபோது மஞ்சு வேதனை படர்ந்த முகத்தோடு போனை எடுத்து அசோக்கின் வீட்டு எண்களை சுழற்றினாள். ஐந்து நிமிடத்திற்கு பிறகு அவள் முகம் அதிர்ச்சியில் தோய்ந்தது.
அத்தியாயம் – 14
ஐந்து நட்சத்திர ஓட்டலின் அலங்காரமான ஏஸி அறைக்குள் நுழைந்த போது ஏதோ சொர்க்கத்தில் நுழைந்தது போலிருந்தது மஞ்சுவிற்கு. தன் வீட்டை விட பெரியதாகவும், சகல வசதிகளும் கொண்ட அந்த அறையில் தங்குவதே கவுரவமான விஷயமாகத் தோன்றியது. ஒரு கோடீஸ்வர இளைஞனால் காதலிக்கப்பட்டதால் தானே இப்படி ஒரு கவுரவம் கிடைத்திருக்கிறது. மஞ்சுவுக்குள் கர்வமும் மகிழ்ச்சியும் கூடியது. தன் சூட்கேசை ஒரு அலமாரியில் வைத்தவள் சோபாவில் அமர்ந்து கொண்டு அறையை சுற்றிப் பார்வையை ஓட விட்டாள். அசோக் டையை தளர்த்தி அவிழ்த்து தன் ஷர்ட் பேண்ட்டை மாற்றி சில்க் லுங்கிக்கு மாறினான். அவற்றை அழகாக ஹாங்கரில் மாட்டி வார்ட்ரோபில் ஹேங்கரை தொங்கவிட்டான்.
“ஹாய் டியர் என்ன உட்கார்ந்துட்ட” என்றபடி அவளருகில் வந்தான். முதன் முறையாக ஒரு ஆடவனோடு தனித்து ஒரு அறையில் இருக்கும் சூழ்நிலையில் மஞ்சு இது சரியா, தவறா என்ற குழப்பத்தோடு, அதே நேரம் அவனுடைய அருகாமையும் தேவைப்பட அருகில் அவன் நெருக்கமாக அமரவும், நகர்வதா அப்படியே இருப்பதா என்று புரியாமல் அவனைப் பார்த்து சிரித்தாள்.
அவன் கரம் அவள் தோளை சுற்றி படர்ந்து அவளை இன்னும் நெருக்கமாக இழுத்தபோது அவள் தேகம் நடுங்கியது.
“ம்ஹீம் வேண்டாம் அசோக். நகருங்க” என்று அவன் கையை தள்ளிவிட முயற்சித்தாள்.
“ஏய்…என்னாச்சு… பயமாயிருக்கா… பயப்படாதடா” என்று கிசுகிசுத்தபடி அவள் மடியில் உரிமையோடு தலை வைத்து படுத்தான். மஞ்சு பேசாமல் அமர்ந்திருந்தாள். இது தப்பு என்ற பயம் உறுத்தியது.
“யூ நோ மஞ்சு. முதல் தரம் உன்னை பார்த்ததும் அப்படியே ஷாக் ஆய்ட்டேன் தெரியுமா?”
“ஏன்?”
“என் ஜென்மத்துல இப்படி ஒரு ஸ்டன்னிங் பியூட்டியை நான் பார்த்ததில்லைன்னு தோணிச்சு. முதல் பார்வையிலேயே கிளீன் போல்டாயிட்டேன். நீதான் என்ன லேடின்னு மனசுக்குள்ள ஏதோ சொல்லிட்டேர்ந்துது. உன்னை விட வாழ்க்கைல வேற எதுவுமே பெரிசில்லன்னு நினைக்கற அளவுக்கு பைத்தியமாய்ட்டேன். எப்போதுட் உன் நினைப்புதான். உங்கிட்ட பேசணும். உன்னோடயே இருக்கணும். உன்னை பார்த்துக்கிட்டே இருக்கணும். அப்பாவோ லண்டன் போ போங்கறார். எனக்கே இந்த ஆபீஸ்தான் பிடிச்சது உன்னால. அப்பாகிட்ட சொன்னா புருவத்தை சுருக்கறார்.
மெட்ராஸ் ஆபீஸ்ல என்னடா இருக்குன்றார். சொல்ல முடியுமா என் வாழ்க்கையே இங்கதான் இருக்குன்னு. சரி எப்டியோ போன்னு விட்டுட்டார். முதல்நாள் எனக்கு ஒரே கவலை. என்னைப் பார்த்ததும் உனக்கும் என் போலவே ஏதாவது செய்யணும். காதல் வரணுமே அப்படின்ளெல்லாம் கவலை. உனக்கும் அப்படியிருந்துச்சா மஞ்சு.”
அவன் பேசப் பேச மஞ்சு உருகினாள். எவ்வளவு காதல்!
“ம்… என்னன்னே தெரியல. இதுவரை யார்கிட்டயும் இப்டி மனசு படிஞ்சதில்ல. சண்டிக்குதிரைன்னு கூட என்னை சொல்வாங்க. பட் இந்த குதிரையை முதல் பார்வையிலே அடக்கின ஜாக்கி நீங்கதான்.”
“ஓ… ஐம் லக்கி.”
“ஏன் அசோக்… உங்க வீடு என்னை ஏத்துக்குமா?”
“உனக்கு ஒண்ணு தெரியுமா? எங்கப்பாவே லவ் மேரேஜ்தான். அதுவும் இண்டர்காஸ்ட். எங்க வீட்ல ஒரு குட்டி இந்தியாவே அடக்கம். பல மதம், பல பாஷை. அது சரி. என்னைக் கேக்கறயே உங்க வீடு எப்டி?”
“நா பிடிவாதம் பிடிச்சா ஒகேன்னுடுவாங்க. பிரச்சினையில்ல.”
“சாப்ட ஏதாவது ஆர்டர் பண்ணவா?”
“ரொம்ப பசிக்குது. நா குளிச்சிட்டு வரேன்.”
மஞ்சு எழுந்தாள். தன் சூட்கேஸ திறந்து நைட்டியும் டவலும் எடுத்துக் கொண்டு பாத்ரூம் பக்கம் போனாள்.
“ஒரு நிமிஷம் மஞ்சு” என்ற அசோக் தன் பெட்டி திறந்து வாசம் மிகுந்த ஒரு வெளிநாட்டு சோப்பும் செண்ட்டும் மேக்கப் பாக்ஸும் எடுத்து நீட்டினான். “எல்லாம் ரொம்ப காஸ்ட்லியானது. உன் பொன்னான மேனிக்காக நா வரவழைச்சது” என்றான்.
மஞ்சுவுக்கு பெருமையாக இருந்தது. சோப்பை மட்டும் எடுத்துக் கொண்டு குளிக்கப் போனாள்.
அவள் குளித்த பிறகு அவனும் குளித்தான். சுடச்சுட உணவு வந்தது. அழகான தள்வண்டியில் வைத்து மிக அழகாக அலங்கரிக்கப்பட்ட உணவுகளை மூடி எடுத்து வந்தான். ரூம் சர்வீஸ் ஆள். அவன் நீட்டிய பில்லில் கையெழுத்துப் போட்டு அனுப்பி விட்டு சாப்பிட அமர்ந்தான் அசோக்.
“நல்லா சாப்டு மஞ்சு” என்று அன்போடு தானே அவளுக்கு பரிமாறி வற்புறுத்தி சாப்பிட வைத்தான். “இன்னும் ஏதாவது வேணுமா ஐஸ்கிரீம் சொல்லவா?” என்று கேட்டான். மஞ்சு மறுத்தாள்.
“ஓகே மஞ்சு. நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நம்ம பாக்டரி வரை போய்ட்டு வரேன்.”
“நா வர வேண்டாமா?”
“பரவால்ல. நா அட்ஜஸ்ட் பண்ணிக்கறேன். யு லுக் டயர்ட். ரெஸ்ட் எடு.” அசோக் புது உடை மாற்றிக் கொண்டு மிடுக்காக நடந்து போனான். “ஜாக்கிரதை என் குரல் கேட்காம கதவைத் திறக்காதே டியர்” என்றான் கதவருகில் நின்று.
“எத்தனை கவலை என்னைப் பற்றி என்று நினைத்து மஞ்சு மகிழ்ந்து போனாள்.”
இரவு ஒன்பது மணிக்குதான் வந்தான் அசோக். வரும் போது உயர்தர இனிப்புகளும், பழங்களும் வாங்கி வந்தான்.
டி.வி.யில் ஏதோ ஆங்கிலப் படம் ஓடிக் கொண்டிருக்க, மஞ்சு நைட்டியிலும் விரிந்து பறந்த கூந்தலிலும் தேவதை போல இருந்தாள். சென்ட் வாசம் மிதமாய் வீசி மயக்கியது.
அசோக் சோர்வோடு படுக்கையில் விழுந்தான்.
“ஏய் மஞ்சு இங்க வாயேன்” என்றான்.
“மஞ்சு திரும்பவேயில்லை.”
“ஏய்….”
அவன் மறுபடியும் அழைத்தான்.
மஞ்சு மறுத்தாள்.
அசோக் எழுந்து அவளருகில் வந்து அமர்ந்தான்.
“ஏன் மஞ்சு பயமா? நம்பிக்கையில்லையா?”
“அப்டியில்ல… ஆனா…”
“உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் மஞ்சு. உன்னை சும்மா இங்கே கூட்டி வந்தேன்னா நினைச்ச? நம்ம விஷயத்தை அப்பாகிட்ட சொல்லி அவர் சம்மதத்தோட தான் உன்னை இங்க கூட்டிட்டு வந்தேன் தெரியுமா?”
மஞ்சு வியப்போடு பார்த்தாள்.
“யெஸ் கண்ணம்மா… அப்பா ஒத்துக்கிட்டார். உன்னை ரொம்ப நல்ல பெண்ணுன்னார். போய் ஜாலியா இருடா, திரும்பி வந்ததும் முறைப்படி அவங்க வீட்டுக்கு போய் பேசி கிராண்டா கல்யாணத்தை நடத்திடலாம்னு சொன்னார் அப்பாக்கு வேணா லைன் போட்டுத் தரேன் பேசறயா?’
“அய்யோ வேணாம்.”
“நா பொய் சொல்றேன்னுவ. அதான்.”
“நம்பறேம்ப்பா.” மஞ்சு சிரித்தாள்.
“எப்பொ வருவீங்க?”
“இப்பவே! வா போலாம்” அசோக் கட்டிலைக் காட்ட மஞ்சு சிணுங்கியபடி அவனை குத்தினாள்.
“எங்க வீட்டுக்கு எப்பொ வருவீங்க?” அசோக் காலண்டரில் நாள் பார்த்தான். “சண்டே நாம போறோம். திங்கட்கிழமை சாயங்காலம் நானு அப்பா அம்மா மூணு பேர் மட்டும் வருவோம். பஜ்ஜி சொஜ்ஜிதானே செய்து வைப்பீங்க உங்க இதுல?”
“ஆமா.”
அசோக் அவளை மெல்ல அணைக்க, அவள் தேகம் அந்த ஸ்பரிசத்தில் சிலிர்த்தது.
பயம் ஒரு பக்கமிருந்தாலும் மனம் தன் கட்டுப்பாட்டை இழந்தது. மஞ்சு அவனை பரிபூரணமாக நம்பினாள். எவ்வளவு அன்பு என் மேல் என்று உருகினாள்.
ஆண் தந்திரமானவன். உலகத்தையே காலடியில் நிறுத்துவது போல் பேச வல்லவன். தன் காதலை எவ்வளவு விசாலமாக வேண்டுமானாலும் காட்டத் தயங்காதவன். அந்த வாய் ஜாலமும் உடல் வலிமையும் எப்பேர்ப்பட்ட பெண்களையும் கொஞ்சம் அசைத்து விடும் எனும்போது மஞ்சு எம்மாத்திரம். தன் பேச்சிலேயே அவளை அடிமையாக்கினான் அசோக். நேரம் செல்ல செல்ல அப்பா அம்மா மது என்று எல்லோரும் அவள் நினைவிலிருந்து காணாமல் போக அசோக் மட்டுமே விசுவரூபமெடுத்து அவளை ஆக்கிரமித்திருந்தான்.
முதல் நாளிருந்த பயமும் கூச்சமும் மறுநாள் சுத்தமாக இல்லை. அன்பும் உரிமையும் அதிகரித்தது. இவன் என்னுடையவன் என்ற உணர்வு கூடியது. அந்த நான்கு நாட்களும் அவன் அவளிடம் அன்பை பொழிந்தான். அவளை பூ மாதிரி நினைத்துக் கரிசனம் காட்டினான். கேட்டு கேட்டு பொருட்கள் வாங்கித் தந்தான். அந்த அன்பில் திக்குமுக்காடிப் போனாள் மஞ்சு. உலகத்திலேயே தான்தான் அதிர்ஷ்டசாலி என்று நினைத்து மகிழ்ந்தாள். பதிலுக்கு தானும் அவன் மீது அன்பு காட்டினாள். அவனுக்காக நாணம் தொலைத்தாள். ஞாயிற்றுக்கிழமை பிரிய போகிறாமே என்ற வருத்தம் அழுத்தியது.
“எனக்கு இங்க இன்னும் கொஞ்ச வேலை பாக்கியிருக்கு மஞ்சு. உன்னை மட்டும் பிளைட் ஏத்தி விடறேன். நாளைக்கு நான் வந்துடுவேன். சரியா அஞ்சு மணிக்கு அப்பா அம்மாவோட உங்க வீட்டுக்கு வருவோம்” என்றான். மஞ்சு மகிழ்ந்தாள்.
மனமின்றி அவனை பிரிந்து வந்தாள்.
ஐந்து மணிக்கு வர வேண்டியவன் காணாமல் போகவே தான் அவன் வீட்டுக்கு போன் செய்தாள்.
ஒரு பெண்மணியின் குரல் போனில் கேட்டது.
“அ.. அசோக் இருக்காரா?”
“நீங்க யாரு….”
“நா மஞ்சு. அவரோட பி.ஏ.”
“மஞ்சுவா…அசோக் இன்னும் மும்பைலேருந்து வரலையேம்மா.”
“இன்னிக்கு வந்திடுவேன்னு சொன்னாரே.”
மஞ்சு குழப்பத்தோடு கேட்டாள். அவன் அம்மாவுக்கு தெரியாதா இன்று இவளை பெண் பார்க்கப் போகிறேலாம் என்று. ஒரு வேளை வந்த பின் சொல்லி அழைத்து வரலாம் என்று நினைத்திருப்பானோ ஏன் வரவில்லை இன்னும்?
“எப்போ வருவார் ஆண்ட்டி?”
“இன்னும் ஒரு வாரம் ஆகுமே மஞ்சு. உங்கிட்ட சொல்லலையா அவன்? அவன் பொண்டாட்டியோட தங்கைக்கு மும்பைல கல்யாணமாச்சே. அதான் பத்து நாள் முந்தியே போயிட்டான்.”
மஞ்சுவுக்கு தலைசுற்றியது. கண் இருட்டியது. கைகள் நடுங்க டெலிபோன் நழுவியது.
அத்தியாயம் – 15
“ஏன்…ஏன் என்னை ஏமாத்தினீங்க!” மஞ்சு வெறி பிடித்தாற்போல் கத்தினாள். அவன் சட்டையை பிடித்து உலுக்கினாள்.
“நீங்க ஏற்கனவே கல்யாணமானவர்னு ஏன் எங்கிட்ட சொல்லலை? நா உங்களுக்கு என்ன கெடுதல் செய்தேன்? ஏன் என்னை சீரழிச்சீங்க?”
அசோக் நிதானமாக அவள் கைகளை தன் மீதிருந்து எடுத்து உதறினான்.
“நா உன்னை ஏமாத்தல மஞ்சு.”
“பொய் சொல்லாதீங்க. நீங்க கல்யாணமானவர்னு உங்கம்மா சொன்னது அப்போ பொய்யா?”
“பொய்யில்ல மஞ்சு. நிஜம்தான்.”
மஞ்சு தள்ளாடினாள். “ஏன் அசோக்…. ஏன்? எந்த தைரியத்துல எங்க வீட்டுக்கு வந்து பெண் கேக்கறேன்னு சொன்னீங்க?”
அசோக் மவுனமானான்.
“அது ஒண்ணுதான் நான் சொன்ன பொய் மஞ்சு…. பட் ஸ்டில் ஐ லவ் யூ. உன்னை எனக்கு பிடிச்சது. உன்னை என்னோடவளா ஆக்கிக்கணும்னு நினைச்சேன். ஏற்கனவே ஒரு மனைவி இருக்கும்போது உன்னை கல்யாணம் பண்ணிக்கறது சிரமம். உண்மையை சொன்னா நீ விலகிப் போய்டுவ. ஸோ நாடகமாடினேன். தாலி கட்டாமலேயே உன்னை அடைஞ்சுட்டேன்.”
மஞ்சு அவனை வெறித்துப்பார்த்தாள்.
“உங் காரியம் முடிஞ்சு போச்சுல்ல? பசி அடங்கிடுச்சுல்ல? வெறி தணிஞ்சிடுச்சில்ல. இப்ப திருப்தியா உங்களுக்கு?”
“மஞ்சு ப்ளீஸ்… உன்னை ஏமாத்தணும்னு இப்பவும் எனக்கு எண்ணமில்ல.”
“ஏன் என்ன எண்ணம்? உங்க மனைவியை விவாகரத்து பண்ணிட்டு என்னை பண்ணிக்கப் போறீங்களா?”
“ரிலாக்ஸ் மஞ்சு. அப்டி என்னால செய்ய முடியாது. என் மனைவி மல்ட்டி மில்லியனர் குடும்பத்து பொண்ணு. எங்களை விடவே பணமும் செல்வாக்கும் பெற்றவ. திமிரும் அகம்பாவமும் அதிகம். என்னை மதிக்க மாட்டா. ஒரு குட்டி யானை மாதிரி உடம்பு. அந்த உடம்பாலயும் எனக்கு சந்தோஷமில்ல. அவ குணத்தாலயும் எனக்கு சந்தோஷமில்ல. பணத்துக்காக எங்கப்பா அவளை எனக்கு கட்டி வெச்சாங்க. அவங்க தயவுலதான் மும்பைல ரெண்டு கம்பெனி நடக்குது. இப்ப நா ஏதாவது செய்தா எல்லாமே ஏடாகூடமாய்டும். நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்ட போதும் மஞ்சு. யாருக்கும் தெரிய வேணாம். நா உன்னை ராணி மாதிரி வெச்சுக்குவேன். கார், பங்களா எல்லாம் வாங்கித்தரேன். நீ தங்கத்துலயே மிதக்கலாம். நாம கடைசி வரை சந்தோஷமா இருக்கலாம் என்ன சொல்ற?”
“மொத்தத்துல என்ன சின்ன வீடாக்கி பெரிய பங்களால உட்கார வைக்கறேன்றீங்க.”
“அதுல என்ன தப்பு மஞ்சு?”
“தப்புதான்.. இதுக்கா… இந்த கேவலமான வாழ்க்கைக்கா நா ஆசைப்பட்டேன்?”
மஞ்சு ஓவென்று அழுதாள்.
“நா உங்களை விடமாட்டேன் அசோக். உங்க வீட்டுக்கு வந்து நியாயம் கேட்பேன்.”
“வா தாரளமா வா. ஆனா எதைக் கேட்டு நீ வரயே அது உனக்கு கிடைக்காது.”
“நீங்க என்னைத் தொட்ட விஷயத்தை சொல்லுவேன்.”
“நா ஒண்ணும் ராமனில்லன்னு எங்க வீட்டுக்குத் தெரியும் மஞ்சு. உனக்கு முன்னாடியே எத்தனையோ பேர் சொல்லப் போனா அதெல்லாம் ஜஸ்ட் லைக் தட் தான். உன் அதிர்ஷ்டம் உன் மேல் எனக்கு நிஜமாவே ஒரு அன்பு இருக்கு. அதனாலதான் உன்னை ஸ்பெஷலா ட்ரீட் பண்ண நினைக்கறேன். இல்லாட்டி அவங்களைப் போலவே உன்னையும் கழட்டி விட எனக்கு ரெண்டு நிமிஷமாகாது.”
மஞ்சு இடிந்து போனாள். கோபுரத்து உச்சியிலிருந்து தலைகுப்புற விழுவது போலிருந்தது. தளர்ந்து போய் அங்கிருந்து கிளம்பினாள்.
– தொடரும்…
– விட்டில் பூச்சிகள் (நாவல்), முதற் பதிப்பு: 1999, கண்மணி வெளியீடு, சென்னை.