விடுதலை வேண்டாத கைதிகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: March 25, 2025
பார்வையிட்டோர்: 4,341 
 
 

நான் வசிக்கும் இடத்தை விட்டு இவ்வளவு தொலைவு வெளியில் வந்தது இதுதான் முதல் முறை. பார்க்கும் அத்தனையிலுமே புதுப்புது அதிசயங்கள்தான். எல்லாவற்றையும் புரிந்துகொள்ள இந்தப் பிறவி எனக்குப் போதாது. பட்டணம் என்பது இப்படித்தான் என்று மூத்த அண்ணன் எப்போதோ சொன்னது வெறும் உளரல் அல்ல என புரிந்ததும் அப்போதுதான்.

எளிதில் யாருடனும் சினேகம் வைத்துக்கொள்ளும் திறனாளி நானில்லை. யாரையும் எளிதில் நம்பாதது ஒரு காரணமாக இருக்களாம். அல்லது, என் முரட்டுச் சுபாவமே கூட மற்றவர்கள் என்னோடு நெருங்கி வராமல் தடுத்திருக்களாம். ஏதாக இருக்கட்டும். எனக்கும் தனிமையில் இருப்பதுதான் பிடிக்கும்.

மூத்தவன் சொன்ன பட்டணத்தின் வர்ணனையைக் கேட்டுப் பட்டணத்தைப் பார்த்து வருகிறேன் என்று கிளம்பிய பக்கத்து ஏரியாக்காரர்கள் மூன்று பேர் கிளம்பிப்போய் திரும்ப வராமல் போன செய்தி வேறு மனசைக் கொஞ்சம் பயமேற்றிப் பார்த்துச் சிரித்தது. பட்டணத்தைப் பார்க்கும் ஆசையில் போன அந்த மூவரும் ஆறு மாதங்களாகியும் இன்னும் ஊர்ப்பக்கம் திரும்பக்காணோம். பட்டணத்துவாசிகளின் கோஷ்டிச் சண்டையில் மூன்று பேரும் செத்துவிட்டார்கள் என்றும் பட்டணத்துக்குப் போய் பைத்தியம் பிடித்து நோய் வாய்ப்பட்டுச் செத்துபோயினர் என்றும் செய்திகள் அல்லது செய்திகளாக்கப்பட்ட வதந்திகள் சூடாகப் பரவிய காலக்கட்டமும் இருந்தது ஊருக்குள்.

அப்படிப்பட்டப் பட்டணத்துக் காற்றைச் சுவாசிப்பேன் என்று கனவில்கூட நினைத்துப் பார்த்தவன் இல்லை நான். என் ஊரைப் போல் இன்னொரு ஊர் வருமா? வேட்டையில் மும்முரமாகக் கோழியைத் துரத்தப்போய் தூரமாய் வந்து சேர்ந்த இடம்தான் இந்தப் பட்டணம். கடைசியில் கோழியையும் காணோம்; வந்த பாதைக்குத் திரும்பும் வழியும் காணோம்.

பட்டணத்தில் இருக்கும் ஒவ்வொரு கனமும் என்னைச் சுற்றி ஏதோ பயங்கரம் சூழ்ந்துகொண்டிருப்பதைப் போன்ற பிரம்மை இருந்துகொண்டே இருக்கிறது. எந்த வழியிலாவது பட்டணத்தை விட்டுத் தப்பித்து வந்த திக்கை நோக்கிக் கிளம்பிவிடலாம் என எத்தனித்தபோதுதான் அவனைப் பார்த்தேன்.

அவன் வேறு யாருமில்லை. ஆறு மாதத்துக்கு முன் ஊரிலிருந்து புறப்பட்டு வந்து காணாமல் போன ராக்கிதான்.

உண்மையில் அவன்தான் என்னைக் கண்டான். பார்த்தவுடனேயே அடையாளம் கண்டுபிடித்துவிட்டான். என்னால்தான் அவனைப் பார்த்தவுடனேயே அடையாளம் காண முடியவில்லை. முன்னைக் காட்டிலும் இப்போது பயங்கரமாய் தடித்துவிட்டான். அவனிடமிருந்த முரட்டுகுணம் அவனை விட்டு எங்கோ போயிருந்தது எனக்கு ஆச்சரியத்தை வரவழைக்காமல் இல்லை.

நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். இரவு வானைச் சூழத் தொடங்கியது. வீட்டில் இருந்தாலாவது நிம்மதியாகச் சாப்பிட்டுப் படுத்திருக்கலாம். அல்லது பக்கத்து ஊர்க்காரர்களிடம் தகராறு வளர்த்துப் பொழுதுபோக்கியிருக்கலாம். இங்கே அப்படி ஒன்றும் வாசிக்கமுடியாது என்று திட்டவட்டமாகத் தெரிந்திருந்தது.

ஊரை விட்டு பட்டணம் வந்திருந்த மற்ற இருவரின் கதியும் ராக்கி சொல்லித்தான் இப்படியும் நடக்குமா என்று வியந்துபோனேன். யாரோ துப்பாக்கியோடு வந்து பார்ப்பவர்களையெல்லாம் கருணையே இல்லாமல் சுட்டுத் தள்ளிவிட்டுப் போனதாகச் சொன்னதைக் கேட்டு பயம் இன்னும் அதிகரித்துவிட்டது. அவர்கள் அப்படி எந்தவொரு குற்றமும் புரியவில்லை என்று ராக்கி சத்தியமடித்துச் சொன்னான். அவன் மட்டும் ஒரு வீட்டின் பின்னால் ஒளிந்து தப்பித்திருந்திருக்கிறான்.

“சரி, நீ ஏன் மறுபடியும் திரும்பவில்லை. உன்னைப் பற்றியும் மற்ற இருவரைப் பற்றியும் ஊரில் என்னென்ன வதந்திகள் பரவியிருக்கின்றன தெரியுமா?” என்று ஊர்க்கதையைச் சொன்னதும் ராக்கி சிரித்துக்கொண்டிருந்தான். அவன் அழுவான் என்றுதான் நான் எதிர்பார்த்தேன். ராக்கி உடம்பால் மட்டுமல்ல, நடத்தையாலும் அதிகம் மாறியிருந்தான். இந்தப் பட்டணம் அவனை மாற்றியிருந்தது.

அவனால் இனி எங்கும் வரமுடியாது என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டான். “பட்டணத்தில் இருப்பதுதான் பாதுகாப்பு நண்பா. என் முதலாளி எனக்கு வேளாவேளைக்குச் சாப்பாடு போடுகிறார். என் நலனின் மிகுந்த அக்கரை காட்டுகிறார். முன்னைக் காட்டிலும் இப்போது சுகாதாரமாக இருக்கிறேன்,” என்றான்.

துப்பாக்கிச் சூடு நடந்த சமயத்தில் ராக்கி முன்பு போய் ஒரு வீட்டின் பின் ஒளிந்துகொண்டான் அல்லவா? அந்த வீட்டுக்காரனே ராக்கி மேல் பரிதாபப்பட்டு வேலைக்கு வைத்துக்கொண்டானாம். அவன் இப்போது அந்த வீட்டுக்குப் பாதுகாவலனாய் வேலை செய்துகொண்டிருக்கிறானாம்.

முதலாளி கொடுக்கும் சாப்பாட்டைப் பற்றியும் பராமரிப்பைப் பற்றியும் அள்ளி அள்ளி புகழ்ந்துகொண்டிருந்தான். அற்பன்! வாழ்வுவந்தால் தலைகால் புரியாமல் ஆடுகிறான்.

அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சிலரோடு என்னை அறிமுகம் செய்துவைத்தான் ராக்கி. சிலர் என்னோடு பழகுவதை அறுவருப்பாக எண்ணினார்கள்; சிலர் சகஜமாகப் பேச ஆரம்பித்தார்கள். அன்றைய நாள், உலகின் இன்னொரு பகுதியைக் கண்ட நாள்தான்.

முற்றிலும் இருட்டு சூழ்ந்துவிட்டது. ராக்கி வீட்டுக்குக் கிளம்பிவிட்டான். நாளைக்குக் காலையில்தான் நான் வீட்டுக்குப் போகவேண்டும் என்று தெருவோரம் படுத்துக்கொண்டேன்.

மறுநாள் காலையில் ராக்கிதான் வந்து என்னை எழுப்பினான். அவனுக்கு என்மேல்தான் எவ்வளவு அக்கரை? ஊரில் இருக்கும்போதுதான் அடிபிடி சண்டை என்று இருந்தோம். இங்கே அதெல்லாம் மறந்து என் மேல் நேசமாக இருப்பது ஆச்சரியம்தான்.

ராக்கி நொண்டி நொண்டி நடப்பதை அப்போதுதான் நான் கவனித்தேன். “ஏண்டா நோண்டிக்கிட்டு இருக்க? எங்கயாச்சும் விழுந்துட்டியா?” என்று கேட்டேன். “கீழ எங்கயும் விழல. நேத்து உன்னோட பேசிட்டு வீட்டுக்கு லேட்டா போய்ச் சேர்ந்தது என் முதலாளிக்குப் புடிக்கல. காலால ரெண்டு உதை உதைச்சாரு. அதான்,” என்று சொல்லிவிட்டுத் தலையை குனிந்துகொண்டான். “நீ பதிலுக்கு எதிர்த்து நிக்கவேண்டியதுதானே!” என்று கேட்டேன். “சே! அதெப்படி முடியும்? ஆயிரம்தான் இருந்தாலும் அவர் எனக்குச் சோறு போடும் முதலாளி. அவருக்கு என் விசுவாசம் எப்போதும் மாறாது,” என்றான் கண்களில் சின்னச்சின்ன நீர்த்துளிகள் ஊறுவதை அறியாமல்.

என்னடா உலகமிது என்று தலையில் அடித்துக்கொண்டேன். “உனக்கு இப்பப் பசிக்குதுல்ல? என் பின்னால வா,” என்று கூட்டிப்போய் சாப்பாட்டுக்கு ஒரு வழியைக் காட்டினான். அவன் மேல் அப்போது இருந்த நேசம் இன்னும் அதிகரித்தது. அப்போதுதான் முதலாளி மீது அவனுக்கு இருந்த குருட்டு விசுவாசத்திற்கான காரணம் புரிந்தது. ஹ்ம்ம்ம்… நாங்கள் அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடிய வம்சாவளியைச் சேர்ந்தவர்களோ என்னவோ…

இன்னும் இந்தப் பட்டணத்தில் என்னென்ன இருக்கிறது என்று ஆராயவேண்டும் எனத் தோன்றியது. வீட்டுக்குப் போகும் காலம் கொஞ்சம் தாழ்ந்துபோனால் இழக்கப்போவது ஒன்றுமில்லை. நேற்று ராக்கி எனக்கு அறிமுகப் படுத்தியவர்களில் இருவரைச் சேர்த்து மொத்தம் நான்கு பேராக அரட்டையடித்துக்கொண்டிருந்தோம். நான் இருக்கும் வனப்பகுதியின் இருக்கும் வளத்தைப் பற்றியும் வாழ்க்கை முறையைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தேன். அதில் ஒன்று கூட அவர்களுக்குப் பிடித்ததாய்த் தெரியவில்லை.

காட்டில் பைப் தண்ணீர் எல்லாம் கிடையாது. ஓடைத்தண்ணீர்தான். குடித்தால் ரொம்பவும் குளிர்ச்சியாக புத்துணர்ச்சியாக இருக்கும் என்றேன். அது தூய்மையற்றது என்றார்கள். சுயமாக வேட்டையாடிச் சாப்பிடுவோம் என்றேன். சமைக்கமாட்டீர்களா என்று கிண்டலடித்தார்கள். அங்கு கிடைத்தச் சுதந்திரத்தைப் பற்றிச் சொன்னேன். பாதுகாப்பு இல்லை என்று சொன்னார்கள். அவர்களோடு கருத்தொத்து எதையுமே என்னால் சொல்ல முடியவில்லை. கூடவே இருந்த ராக்கி விக்கிவிக்கிச் சிரித்தான்.

“இதையெதையும் இங்குள்ளவர்களுக்குச் சொல்லவில்லையா?” என்று அவர்கள் போனபின்பு ராக்கியிடம் கேட்டேன். “சொன்னேன். இவர்களுக்கு அது புரியாது நண்பா. காட்டுப் பக்கம் எட்டிப் பார்க்கக்கூட இவர்கள் பயப்படுகிறார்கள். அங்கேதான் உண்மையான சுகாதாரம் உண்டு, சுதந்திரம் உண்டு என்று சில முறை சொல்லியிருக்கிறேன். தெரியாத விஷயத்தில் அவர்களுக்கு ஈடுபாடு இல்லை. நமக்கு எதுக்கு அந்த வேலை என்று இருந்துவிட்டேன்,” என்றான் ராக்கி.

பாதுகாப்பாய் இருப்பதாய் நினைத்துக்கொண்டு மிகப்பெரிய ஆபத்தில் இருக்கும் அவர்களைப் பார்த்துப் பரிதாபப்படுவதைவிட என்னால் வேறொன்றும் செய்யமுடியவில்லை.

மதிய வேளை வந்திருந்தது. மதியம் மீண்டும் வருவதாய்ச் சொல்லிவிட்டுப் போயிருந்த ராக்கி இன்னும் வந்தபாடில்லை. அவன் வந்தால் சாப்பாட்டுக்கு ஏதாவது வழி செய்வான். இந்தப் பட்டணத்தில் ஒரு கோழி கூட சுற்றக்காணோம். இனி ராக்கி வந்தால்தான் சாப்பாடு என்றாகியிருந்தது.

மதியம் சாயங்காலமாகிவிட்டிருந்தது. ராக்கி என்னை மறந்துவிட்டானோ? தெருவோரமாய் பம்மியபடி ஓடிப்போய் அவனது வீட்டை எட்டி நின்றுப் பார்த்து வந்தேன். அவனைக் காணவில்லை. ராக்கி எங்கே போய்விட்டான்?

காலையில் பேசிக்கொண்டிருந்த அந்த இருவரைத் தேடி ஓடினேன். அவர்களையும் காணவில்லை. எல்லாம் சூனியமாய்ப் போனது எனக்கு. பட்டணம் என்னைப் பாடாய்ப் படுத்தியது. அங்கேயே காத்திருந்தேன்.

இருவரில் ஒருவன் மட்டும்தான் அறைமணி நேரம் கழித்து வந்து சேர்ந்தான். தொலைவிலிருந்து பார்க்கும்போதே அவனது முகத்தில் சோகமும் பயமும் பயங்கரமாகப் பரவியிருந்ததைத் தெளிவாகக் காணமுடிந்தது. ஓடிப்போய் அவனருகில் நின்றேன். “ஏன் ஒரு மாதிரி இருக்க? ராக்கி எங்க?” இரண்டு கேள்விகள். முதல் கேள்வி அவனுக்காகக் கேட்டுக்கொண்டது. இரண்டாவது கேள்வி எனக்காகக் கேட்டுக்கொண்டது.

“ராக்கி செத்துப் போயிட்டான்,” என்று இரண்டாவது கேள்விக்கு மட்டும் பதிலைச் சொல்லியிருந்தான். அதிலிருந்தே முதல் கேள்விக்கான விடையும் கிடைத்திருந்தது. இன்று காலைவரை நலமாக வளமாக இருந்தானே? எப்படிச் செத்தான்?

“உன்னைப் பார்க்க அடிக்கடி வீட்டிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தான் இல்லையா… அதனால் நேற்றே அவனுடைய முதலாளி அவனை காலால் உதைத்திருந்தார். இன்று காலையும் உன்னைப் பார்க்க வீட்டை விட்டு வெளியேறியிருந்ததால் அவருக்குக் கோபம் வந்து இரும்புத்தடியால் தலையில் அடித்துவிட்டார். வலிதாங்கமுடியாமல் ராக்கி துடிதுடித்துச் செத்துப்போய்விட்டான். என் இதயமே வெடித்துவிடும் போலிருந்தது. இவ்வளவு ஈனமாக நடந்துக்கொள்கிறானே இந்த மனிதன் என்று கோபம்தான் வந்தது. என்னால் பார்க்கத்தான் முடிந்தது. காப்பாற்ற ஓடியிருந்தால் என் முதலாளி எனக்கும் அதே அடியைத்தான் கொடுப்பார்.

“ராக்கி செத்தது என்னாலா?” என் மனசை அவனது நேசம் பிழிந்துகொண்டிருந்தது. முதலாளி முதலாளி என்று தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடினானே, மடையன்! காட்டில் எங்களோடே இருந்திருந்தால் பேரன் பேத்திகளைப் பார்த்துச் சந்தோசமாய்ச் செத்திருப்பானே!

“இன்னும் ஏன் இந்த மனிதக் கூட்டங்களோடு இருக்கிறீர்கள்? என்னோடு வாருங்கள். வாழ்க்கை என்றால் என்ன என்று காட்டுகிறேன். அங்கே நாம் எவனுக்கும் அடிமைகள் இல்லை,” என்று ஆவேசம் மேலிடக் கூறினேன். அவன் தலையைத் திருப்பிக்கொண்டு நடக்க ஆரம்பித்துவிட்டான். “எங்கே போகிறாய்?” என்று கேட்டேன். “நான் மட்டும் இப்போது வீட்டில் இல்லாமல் இருந்தால் முதலாளி என்னைத் தேடுவார். என்னால் ராக்கி அளவுக்கு அடியெல்லாம் வாங்க முடியாது. நான் கிளம்புகிறேன்,” என்று ஓட ஆரம்பித்தான்.

என்னால் ராக்கியின் இழப்பைத் தாங்க முடியவில்லை. பட்டணத்திலேயே ஒரு மூலையில் சாய்ந்து படுத்துக்கிடந்தேன். இரவு எப்போது வந்தது என்று தெரியவில்லை. அடுத்த நாள் காலையில்தான் எழுந்தேன். எழுந்தவுடனேயே ராக்கியில் நினைவுதான் வந்தது.

ராக்கி இருந்த அந்த வீட்டை ஒரு முறை பார்த்து வரலாம் என்று தோன்றியது. மீண்டும் அந்தச் சாலையோரமாய் மெதுவாக ஓடிப்போய் எக்கிப் பார்த்தேன். அங்கே இப்போது ராக்கியின் இடத்தில் இன்னொருவன் படுத்துக்கிடந்தான். இந்த மனிதர்களுக்கு ஒரு நாய் போனால் அடுத்த நாளே இன்னொரு நாய். கொஞ்சமாவது நெஞ்சில் ஈரமில்லையா இவர்களுக்கு?

அங்கிருக்க எனக்கு அறுவருப்பாக இருந்தது. ஓடி வந்துவிட்டேன். எனக்குப் பின்னாலேயே ராக்கியில் நாண்பர்கள் இருவரும் வேகமாக ஓடி வந்தனர். “இங்கிருந்து ஓடிப் போயிடு,” மாறிமாறி இறைந்தபடி அருகில் வந்துச் சேர்ந்தனர். ஓடி வந்ததில் நாக்குத் தள்ளிபோய் எச்சில் ஒழுகிக்கொண்டிருந்தது இருவர் வாயிலும். துப்பாக்கிக்காரர்கள் மறுபடியும் வந்துவிட்டதாக அவசரச் செய்தி சொல்லி நின்றனர்.

“நீங்க ஓடலையா? நீங்க இங்க இருந்த உங்களையும் சுட்டுத் தள்ளிவிடுவார்களே?” என்று கேட்டேன். “உனக்குப் புரியாது. இங்கே பார்,” என்று தன் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த இரும்புப் பட்டையைக் காட்டினான். “இந்த இரும்பு கழுத்தில் கட்டியிருப்பவர்களை அவர்கள் சுடமாட்டார்கள். இது இல்லாதவர்களை மட்டும்தான் சுடுவார்கள். உனக்கு அது இல்லை. நீ ஓடிவிடு,” என்றான்.

அவர்களிடமிருந்து வேறு ஏதாவது இரும்புப் பட்டை உண்டா எனக் கேட்டேன். அது அவரவர் முதலாளிமார்கள் கட்டியது என்று அவர்கள் சொல்ல எனக்கு வேறு வழி தெரியவில்லை. இனி அந்தப் பட்டணத்திலிருந்து உடனடியாகத் தப்பித்துக் காட்டுக்குள் ஓடியாகவேண்டும். போகும் முன் அவர்களைப் பார்த்து “நீங்களும் என்னோடு வந்து ஒருமுறையாவது அங்குள்ள வாழ்க்கையைப் பார்த்துத்தான் முடிவு செய்யுங்களேன். இந்தப் பட்டணம் ரொம்ப ஆபத்து,” என்றேன்.

எங்கிருந்தோ ஒருவன் இட்டச் சத்தத்தைக் கேட்டு இருவரும் திரும்பிப் பார்த்தனர். “எங்க முதலாளி கூப்பிடுறாரு. நாங்க போயாகணும். நீ பத்திரமா போயிட்டு வா,” என்று சொல்லிவிட்டு வாலாட்டிக்கொண்டே இருவரும் அவனை நோக்கி ஓடினர்.

– மலேசிய தேசிய பல்கலைக்கழகம் நடத்திய 2012ஆம் ஆண்டின் சிறுகதை போட்டியில் தேர்வு பெற்ற கதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *