விடியல்
கதையாசிரியர்: மெய்யன் நடராஜ்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: January 23, 2026
பார்வையிட்டோர்: 814
படுக்கையில் கிடந்த குப்புசாமிக்கு தூக்கம் பிடிக்கவில்லை. புரண்டு புரண்டு படுத்தவருடைய சிந்தனை எல்லாம் நாளை கிழங்கு வாங்குவதற்காக வண்டியுடன் வரவிருக்கும் முதலாளியைப் பற்றியதாகவே இருந்தது. ஏழு மணிக்கெல்லாம் வண்டி வந்துவிடும். இன்னும் காணியில் கிழங்கு தோண்டவில்லை. ஊருக்குள் ஒரு நாலைந்து பேரை அழைத்திருந்தார். “வருகிறேன்” என்று கூறிப்போனவர்கள் ஒருவரும் வரவில்லை. அன்று மதியம்வரை பார்த்துக் கொண்டிருந்தவர் இனி வரமாட்டார்கள் என்பது உறுதியானபோது கிழங்குக் கடை முதலாளியுடன் தொலைபேசியில் விசயத்தைக் கூறினார்.
‘எனக்கு அதெல்லாம் தெரியாது நாளைக்கு நான் கொழும்புக்கு கிழங்கு அனுப்புறதா சொல்லிட்டேன். கட்டாயம் அனுப்பித்தான் ஆகணும். நீ என்ன செய்வாயோ தெரியாது வண்டி அனுப்புவேன் எனக்கு நாளைக்குக் கிழங்கு வேணும்’ பதிலுக்குக் காத்திராமல் அழைப்பைத் துண்டித்துக்கொண்டார். ஊரில் மேலும் பலரைக் கேட்டுப் பார்த்தார். ‘அரசாங்கமே ஒருவாரம் விடுமுறை கொடுத்திருக்கு நீ கொடுக்கிற எழுநூற்றி ஐம்பது ரூபாய்க்காக நாங்க நோய்வந்து சாகணுமா ‘ முகத்தில் அடித்தாற்போல் இருந்தது பலரது பதில்கள்.
அடுத்த ஊருக்குப் போய் ஒரு பத்துப்பேரைக் கூட்டிவரலாம் என்றாலும் பாழாய்ப்போன இந்த வைரஸ் நோய் பயத்தால் யாரும் வருவார்களோ என்ற சந்தேகம். இறுதியில் எதுவும் முடியாமல் வெறுமனே கழிந்தது ஒருநாள்.
ஊர் விவசாயிகள் எல்லாம் வெவ்வேறுவகைத் தானியங்களையும் மரக்கறிவகைகளையும் பயிரிட்டுக் கொண்டிருக்கையில் குப்புசாமி மட்டும் இந்த பருவக் காலத்தில் உருளைக்கிழங்கு பயிரிட்டார். எல்லோரும் ஒரே வகையான பயிர் செய்தால் அறுவடை நேரத்தில் சந்தையில் நல்ல விலை கிடைக்காது என்பதாலும் சித்திரைப்புத்தாண்டு காலத்தில் உருளைக்கிழங்கிற்கு அதிக கிராக்கி இருக்கும் என்பதாலும் கிழங்கு பயிரிட்டார். தன்னுடைய கால் ஏக்கர் காணியில் இம்முறை அதிக விளைச்சலைக் கொடுத்திருக்கும் கிழங்கை விற்று இருக்கின்றக் கடனையெல்லாம் அடைத்தது போக வைகாசியில் மகளின் கல்யாணத்தையும் முடித்துவிடலாம் என்ற பெருங்கனவில் இருந்தார். அவரின் கனவு பொய்க்கவில்லை. எதிர்பார்த்தது போலவே எல்லாம் கைகூடி வந்தது.
இறுதியில் நாம் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும் என்பதுபோல இப்படியொரு சூழ்நிலை வந்து அவரை சிக்கலில் மாட்டிவிட்டு விட்டது. கொரோனா வைரசை விடவும் வேகமாக துரதிர்ஷ்டம் துரத்திக்கொண்டு வரும் ஒரு மனிதனின் வாழ்க்கையில் உழைப்பு முயற்சி என்பதெலாம் ஒரு சாதாரண செயல். வெற்றி என்பதை படைத்தவன் மட்டுமே தீர்மானிக்கிறான் நல்லதோ கெட்டதோ எல்லாம் நாளை அவன் விட்ட வழி என்றவாறு உறங்கியும் போனார்.
பின்னிரவு ஒரு இரண்டு இரண்டரை மணியிருக்கும் ஒரு பயங்கர கனவு கண்டு வாய் புலம்பினார் குப்புசாமி. குப்புசாமியின் புலம்பல் கேட்டு விழித்துக்கொண்ட அவரின் மனைவி ‘என்னங்க..என்னங்க.. என்னாச்சு ‘ என்றவாறு தட்டி எழுப்பி சொம்பில் வைத்திருந்த தண்ணீரைப் பருகக் கொடுத்தார்.. தண்ணீரைக் குடித்துவிட்டு மறுபடியும் தலைசாய்க்க முற்படுகையில் உறங்கிக்கொண்டிருந்த அவருடைய பத்துவயது மகன் எழுந்து “அப்பா ஒன்னுக்குப் போகணும் கொஞ்சம் வெளியே வாரியா’’ என்றதும் வீட்டிற்குப் பின்புறம் கூட்டிச் சென்றார். ஏனோ தெரியவில்லை அவ்வேளையில் ஒருநாளும் இல்லாதவாறு அவ்வேளையில் ஊருக்குள் நாய்கள் குறைக்கத் தொடங்கியிருந்தன.. எதற்காக இப்படி குறைக்கின்றன என்று மனசுக்குள் நினைத்துக்கொண்டிருக்கையில் சிறுநீர் கழித்துவிட்டு வந்த மகன். ‘அப்பா போனமாசம் நம்ம ராமசாமி மாமா காணியிலே மரக்கறி களவு போனபோது குரைத்த மாதிரியே இன்றைக்கும் இந்த நாயெல்லாம் குரைக்குது. இன்னைக்கு யாருடைய காணியிலே களவு போகப் போகுதோ தெரியல’ கூறிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தான்.
மகன் இப்படி சொன்னதும் குப்புசாமியின் மூளையில் சட்டென்று ஒரு மின்னல் மின்னியது.. ‘ஒருவேளை நம்ம காணியில் யாரவது…’ நினைத்தவர் எதற்கும் ஒரு எட்டு போய் பார்த்துவிட்டு வருவது நல்லது என்ற முடிவோடு மின்பந்தத்தை கையில் எடுத்துக்கொண்டு மகனையும் கூட்டிக்கொண்டு ஊருக்கு அப்பால் மூன்று கிலோ மீற்றர் தொலைவில் இருக்கும் காணியை நோக்கி விரைந்தார்.
பௌர்ணமிக்கு இன்னும் ஒரு சில தினங்களே இருக்க வளர்பிறை நிலவு முகில்களற்ற வானத்திலிருந்து பால் போன்ற ஒளியைப் பாய்ச்சிக் கொண்டிருந்தது. வழியின் இருமருங்கிலும் இருந்த விளைநிலங்களில் விதவிதமான பூச்சிகள் சத்தம் இயற்கை இன்னிசைக் கச்சேரி நடத்துவது போலிருந்தது. குன்றும் குழியுமாகக் கிடந்த தாரிடப்படாத கிராமத்தின் மண்வீதியில் துவிச்சக்கர வண்டியை செலுத்துவது மிகவும் கடினமாக இருந்தது. இன்னும் சொற்பதூரம் பயணித்தால் தார்சாலையை அண்மித்த அவரது காணி வந்துவிடும்.
இதோ அதோ என்றிருந்த வேளை பின்னாலிருந்த மகன் ‘அப்பா அங்க பாருங்க’ என்றபோதே அக்காட்சி அவர் கண்ணிலும் பட்டுவிட்டது. ‘அடப்பாவிகளா இதுக்குத்தான் நீங்க எல்லோரும் கிழங்கு தோண்ட வராமல் விட்டீர்களா..!’ ஆச்சரியம் மேலிட அதிர்ந்து வண்டியை நிறுத்தினார்.
மின்பந்தத்தை அணைத்தபடி மகனிடம் சத்தம் போடக்கூடாதென ரகசியமாய் காதில் கூறிவிட்டு இருவரும் அங்கிருந்தவாறே நடப்பதை அவதானிக்கத் தொடங்கினர்.
தார் சாலை வழி நெடுகிலும் வீதி விளக்குகளுக்காக இணைக்கப்பட்டிருக்கும் மின் கம்பிகளிலிருந்து திருட்டுத்தனமாக மின்சாரத்தை காணி முழுவதற்கும் எடுத்துக்கொண்டு ஒரு கூட்டமே இரவோடிரவாக கிழங்கு தோண்டி மூடை மூடையாக அடுக்கி வைத்துக் கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்திற்குத் தலைவனாக நின்று செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஒருவனை உற்றுப்பார்த்தார். மின்விளக்கின் ஒளியில் மிகத்தெளிவாக தெரிந்தது அவனுடைய முகம். ஒருவாரத்திற்கு முன்பு குப்புசாமியிடம் கிழங்கு கேட்டு வந்தவன். அவன் கேட்ட விலைக்கு ஒத்துவராது என்று முடிவாகக் கூறத் திரும்பிப் போனவன். நேர்வழியில் அடைய முடியாததை குறுக்கு வழியில் அடையத் துணிந்திருக்கிறான். அவனுக்கு ஒத்துழைக்க ஊருக்குள் அண்ணன் தம்பிபோல் ஒன்னுக்கொன்னா பழகியவர்கள்.
என்ன மனிதர்கள். ஒரு நாலு ரூபா கூடுதல் கிடைக்கும் என்பதற்காக களவு செய்வதற்கும் துணிந்து விடுகிறார்களே.. இந்த உலகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது. போகப் போக நன்றி விசுவாசம் நம்பிக்கை என்பதெல்லாம் வெறும் ஏட்டளவில் மாத்திரமே இருந்துவிடும் போலிருக்கிறது. இனி இந்த சமுதாயத்தைத் திருத்த அந்தக் கடவுளாலும் முடியாது. உலகம் அழிவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. இப்படியான துரோகிகள் வாழ்வதால்தானோ என்னவோ இப்படி மருந்து கண்டு பிடிக்க முடியாத நோய்களெல்லாம் வந்து மனிதனை வாட்டி வதைக்குதோ என்று எண்ணிக் கொண்டே காணியை முழுவதுமாக நோட்டமிட்டார்.
ஒரு மணி நேரத்திற்குள் கிழங்கு முழுவதும் தோண்டி எடுக்கப்பட்டு விடும் நிலையில் இருந்தது. அருகில் செல்வது ஆபத்து. இம்மாதிரி திருட்டுத்தனமாக இரவில் வேலை செய்பவர்கள் மது போதைப்பொருள் பாவனை இல்லாமல் இந்த வேலையச் செய்ய மாட்டார்கள். பணம் ஒன்றே குறிக்கோளாக இருக்கும் அவர்கள் அருகில் சென்றால் கொலை செய்யவும் தயங்கமாட்டார்கள். காலம் தரம் தாழ்ந்து கிடக்கும் காலம். இங்கே தவறுகள் நியாயமாகவும், நியாயம் தவறாகவும் இடம்மாறிப் போகும். பணத்தால் எல்லாம் நடக்கும். சரி போனால் போகட்டும். பணத்தை எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம் உயிர்போனால் முடியுமா.. உடலில் வலுவிருக்கு .கையுயர மகன் இருக்கிறான். இப்போதைக்கு களவைப் பிடிப்பதைவிட உயிரைக் காத்துக் கொள்ளுதல் முக்கியம் என்றவாறு திரும்பிப் போக முடிவெடுத்தார்.
மூன்று மாத உழைப்பு. காடாய்க் கிடந்த நிலத்தைக் கொத்திப் பதமாக்கி, கடனுக்கு விதைக்கிழங்கு வாங்கிப் பயிரிட்டு நீர்பாய்ச்சி உரமிட்டு கிருமிநாசினி தெளித்து அல்லும் பகலுமாய் காவல்காத்து பிள்ளைபோல வளர்த்தபயிர் கண்முன்னே களவு போவதைப்பார்த்து இறைவா இது உனக்கே அடுக்குமா? அல்லும் பகலும் உன்னையே நம்பியிருந்த உன் பக்தனுக்கு நீ செய்யும் கைம்மாறு இதுதானா.. மனம்நொந்து சத்தம்போடக்கூட முடியாமல் மனதுக்குள் கதறினார்.
ஊருக்குள் சென்று ஊராரைக் கூட்டிவருவதற்குள் கிழங்கெல்லாம் ஊரைவிட்டே போய்விடும். இந்நேரத்தில் நடப்பதையெல்லாம் வேடிக்கைப் பார்ப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும். இப்போது காணி முழுவதிலும் உள்ள கிழங்கு தோண்டப்பட்டு மூடை மூடையாக தார்சாலை ஓரத்தில் அடுக்கப்பட்டும் விட்டது. கூட்டத்தலைவன் வண்டிக்காரனுக்குக் கைப்பேசியில் பேசினான். ‘’இன்னும் கொஞ்ச நேரத்திற்குள் விடிந்துவிடும் சீக்கிரம் வா .இங்கே எல்லாம் தயார்’’ கட்டளையிட்டவன் கிழங்குத் தோண்டியவர்களுக்குத் தேவையான பணத்தைக் கொடுத்துவிட்டுக் காத்திருந்தான். அதற்குள் தூரத்தில் வண்டி வரும் ஓசைக் கேட்டது.
எல்லோரும் தயார் நிலையில் நின்றிருக்க கூட்டத்தில் தூரத்தே வரும் வண்டியைக் கண்ணுற்ற ஒருவன் கூறினான். ‘’மச்சான் அது போலீஸ் வண்டி மாதிரி இருக்குடா’’ ‘போலீஸ் வண்டியா’’ உற்றுப்பார்த்த அனைவரும் ‘ஆமாம்..போலீஸ் வண்டிதான். யாரும் நிற்காதீங்க..எல்லோரும் ஓடிப்போங்க’’ யாரோ சத்தம்போட மறுகணம் எல்லோரும் எப்படி ஓடி மறைந்தார்களோ தெரியவில்லை. .
அடுத்தநொடி குப்புசாமியும் மகனும் ஓடிச்சென்று கிழங்கு குவித்திருக்கும் இடத்தை அடையவும் போலீஸ் வண்டி அங்கு வரவும் நேரம் சரியாக இருந்தது. குப்புசாமிக்கு தன் கண்களை நம்ப முடியவில்லை. தான் காண்பது கனவா இல்லை நனவா..ஆச்சரியம் மேலிட நின்றிருக்க வண்டியிலிருந்த போலீஸ்காரர், ‘இன்னும் கொஞ்ச நேரத்திலே ஊருக்குள்ளே கொரோனா நோய் யாருக்கும் இருக்குதான்னு பார்க்க மருத்துவர்கள் வர இருக்கிறார்கள். சீக்கிரம் ஊருக்குள் போய்விடுங்கள். நாங்க பரிசோதனை முடியாமல் எவரையும் வெளியே விடமாட்டோம்’ என்றதும் ‘சரிங்க ஐயா இப்போ கிழங்கு கொண்டுபோக வண்டி வந்துவிடும் ஏற்றிவிட்டு வந்திடுறேனுங்க..’
‘சரி சரி சீக்கிரம் வரப்பாருங்க’ அவர் கூறிக்கொண்டிருக்க போலீஸ் வண்டிக்குப் பின்னாலேயே வந்த நின்றிருந்த அம்புலன்ஸ் வண்டியிலிருந்த பரிசோதகர்கள் இறங்கி வந்து அவ்விடத்திலே குப்புசாமியையும் மகனையும் பரிசோதித்துவிட்டு காய்ச்சல் அறிகுறி எதுவுமில்லாதிருக்க ஊருக்குள் செல்லத் தொடங்கினார்கள்.
அப்படியானால்.. நான் வணங்கிய கடவுள் என்னைக் கைவிடவில்லை. என் வியர்வையை எனக்கே வெற்றியாக்கிவிட்டான் சந்தோசத்தில் மகனை அணைத்துக்கொண்டு இறைவனுக்கு நன்றி சொல்ல, அங்கே அப்போது பொழுதும் விடியத் தொடங்கியது.
இந்த விடியல் குப்புசாமி குடும்பத்திற்கு கொரோனா வைரஸ் வடிவத்தில் கடவுள் கைகொடுத்த விடியல்.
![]() |
என்னுரை - காதலியின் கல்யாணம், 2022. சற்றே இடைவெளி விட்டு எனது இரண்டாவது தொகுப்பு சிறுகதைத் தொகுதியாக வெளிவருவதில் மனக்கிளை மகிழ்ச்சிப் பறவையை உட்கார வைக்கிறது. பொதுவாக ஒரு குழந்தைக்கும் இன்னொரு குழந்தைக்கும் இடையே சற்று இடைவெளி விடவேண்டும் என்பார்கள். இங்கே எனது இரண்டாவது குழந்தைக்கு சற்று பெரிய இடைவெளி விடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. “காதலியின் கல்யாணம்” . இது வெறும் காதலை மட்டும் கருவாகக் கொண்டு உருவானதல்ல.…மேலும் படிக்க... |
