கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: February 4, 2026
பார்வையிட்டோர்: 2,391 
 
 

ஒரு அடர்ந்த காட்டில் சிட்டி என்ற ஒரு குட்டி எறும்பு இருந்தது. சிட்டி மிகவும் சுறுசுறுப்பானது, ஆனால் மற்ற எறும்புகளை விட அது அளவில் கொஞ்சம் சிறியது.

ஒரு நாள் சிட்டி உணவைத் தேடிச் சென்றபோது, ஒரு பெரிய பாறையின் உச்சியில் ஒரு சர்க்கரைத் துண்டு இருப்பதைக் கண்டது. அந்தச் சர்க்கரைத் துண்டு சிட்டியை விட  பல மடங்கு பெரியது. ​சிட்டி அதைத் தூக்க முயன்றது, ஆனால் முடியவில்லை. கீழே விழுந்துவிட்டது. இதைப் பார்த்த மற்ற எறும்புகள், “சிட்டி, இது உன்னால் முடியாது. இது மிகவும் கனமானது, பாறையும் மிகவும் உயரமானது. விட்டுவிடு!” என்று கேலி செய்தன.

ஆனால் சிட்டி பின்வாங்கவில்லை. ​முதலில் பாறையின் ஒரு பக்கமாக ஏறியது, வழுக்கி விழுந்தது. ​மீண்டும் முயற்சி செய்தது, பாதி தூரம் சென்றபோது காற்று பலமாக வீசியதால் கீழே விழுந்தது. ​”முடியாது” என்று மற்றவர்கள் சொன்ன வார்த்தைகளை அது காதில் வாங்கவே இல்லை.

சிட்டி யோசித்தது. “ஒரேயடியாகத் தூக்க முடியாது . ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக தள்ளிச் செல்லலாம்” என்று முடிவு செய்தது. தன் கால்களால் அந்தச் சர்க்கரைத் துண்டை மெதுவாக நகர்த்த தொடங்கியது. ஒவ்வொரு அங்குலமாக நகர்த்தி, ஒரு வழியாகப் பாறையின் விளிம்பிற்கு கொண்டு வந்தது.

இப்போது அடுத்த சவால் – அவ்வளவு பெரிய சர்க்கரைத் துண்டை  எப்படி தரைக்கு கொண்டு செல்வது?  சிட்டி பதற்றமடையவில்லை. அது மெதுவாகச் சர்க்கரைத் துண்டின் ஒரு முனையைப் பிடித்துக்கொண்டு, சறுக்கு மரம் விளையாடுவது போலச் சர்க்கரைத் துண்டோடு சேர்ந்து பாறையின் சரிவான பகுதியில் மெதுவாகக் கீழே இறங்கியது.

தரையை அடைந்ததும், விடாப்பிடியாக அந்தச் சர்க்கரைத் துண்டை உருட்டிக் கொண்டே  தன் புற்றுக்கு வந்து சேர்ந்தது. இதைப் பார்த்த மற்ற எறும்புகள் ஆச்சரியத்தில் வாய் பிளந்து நின்றன!  கேலி செய்த எறும்புகள் சிட்டியின் விடா முயற்சியைப் பாராட்டி மன்னிப்பு கேட்டன.

​கதையின் நீதி

​முயன்றால் முடியாதது ஏதுமில்லை.  ஒரு செயலைத் தொடங்கும் போது தடைகள் வரலாம், மற்றவர்கள் நம்மைக் கேலி செய்யலாம். ஆனால், தோல்வியைக் கண்டு அஞ்சாமல் தொடர்ந்து முயற்சி செய்தால், சிட்டி எறும்பைப் போல் நாமும் நினைத்ததை சாதிக்கலாம்.

இரா.கலைச்செல்வி இவர் வீரமங்கை வேலு நாச்சியார் அரசாட்சி செய்த, சிவகங்கை சீமையில் பிறந்து, வளர்ந்து, கல்லூரி படிப்பை சிவகங்கையில் முடித்து, திருமணத்துக்குப் பிறகு சென்னை வந்து, தலைமை செயலக அரசு பணியில் அமர்ந்து, பல அரசுத் துறைகளில் பணிபுரிந்து, தற்போது ஓய்வு பெற்றுள்ள ,உயர் அரசு அதிகாரி. இவரது கணவர் மத்திய அரசு  நிறுவனத்தில் , தலைமை விஞ்ஞானியாக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். ஒரே மகன் மென்பொருள் நிறுவனத்தில் திட்ட மேலாளராய் பணி புரிகிறார்.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *