விடவே விடாது!






(2009ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-9
அத்தியாயம் – 7

“உடம்பில் இரு வகை சக்தி இருக்கிறது. ஒன்று, ஓடியாடி உழைக்கத் தேவையான இயக்க சக்தி. இது சாப்பிடும் உணவுப் பொருளாலும், உடம்பிற்கு அளிக்கும் ஓய்வினாலும் கிடைப்பது.
இன்னொன்று, அந்த இயக்க சக்தியை அப்படியே மாற்றி- உடம்பை ஆளும் மனோசக்தி.
இந்த மனோசக்திதான் பெரியது. இந்த சக்தி அதிகரிக்கும்போது உடம்பை ஆட்டிப் படைக்கலாம். சுண்டுவிரலால் ஒரு இரும்பு உருண்டையை சுண்டிவிட்டு ஓடவிடலாம். வெறும் பார்வையாலே ஒரு இரும்புக்கம்பியை வளைக்கலாம்.
இந்த உச்சத்திற்கு வந்தவர்களுக்கு உடம்பும், ஆன்மாவும் தனித்தனி என்பது தானாக விளங்கிவிடுமாம்!”
சூரியன் உச்சியில் இருந்தான்! அந்த பனிப் பள்ளத்தாக்கில் குளிரும் சற்று கட்டுப்பாட்டில் இருந்தது.
அண்ணார்ந்து பார்த்த பிட்சு லீ யுவானுக்கு துளி கூட கண்களில் கூச்சமில்லை.
அப்படியே எதிரில் இருக்கும் அருணாச்சலாவையும், கார்த்திகேயனையும் பார்த்தார்.
பின் தனது மடாலயத்துக்குள் அவர்களைக் கூட்டிச் சென்றார்.
மடாலயம், பிலாய் மரத்துண்டுகளால் ஈரத்தாக்குதலுக்கு ஈடுகொடுக்கும் விதமாக இருந்தது.
பீடம் ஒன்றில் யோக புத்தர் உருவம் ஒன்று.
முன்னால் கொத்து ஊதுபத்திகள் புகைக்கோடுகள் போட்டுக்கொண்டிருந்தன. இதமான மணம். ஒரு ஈச்சம் பாய் தரையில் விரிந்திருந்தது. பிட்சு அதில் இருவரையும் அமரச் சொன்னார்.
ஆனால் கார்த்திகேயனை ‘நீ வெளியே போய்விடு…’ என்கிற மாதிரி அருணாச்சலா பார்க்க- அவனும் புரிந்துகொண்டு வெளியேறினான்.
பிட்சு முகத்தில் ஒரு நூலிழைச் சிரிப்பு.
“நான் வந்திருக்கறது ஒரு முக்கியமான விஷயத்துக்காக. அது என்னைத் தவிர யாருக்கும் தெரியக்கூடாது…” – அருணாச்சலா அந்தச் சிரிப்புக்கு காரணம் சொன்னார்.
“பணம் காசு சேர்ந்துட்டாலே எல்லாமே ரகசியம்தானே?” – பிட்கவும் பதில் சொன்னார். அதில் குத்தல் இருந்தது.
“நீங்க முற்றும் துறந்தவர். நாங்க அப்படி இல்லையே…?”
“சரி, விஷயத்துக்கு வாங்க. நான் என்ன செய்யணும்?”
“இறந்து போனவங்களோடு நீங்க பேசுவீங்கன்னு கேள்விப்பட்டேன். முதல்ல நான் அதை நம்பலை. எங்க ஊர்லயும் ஆவி கூட பேசறேன்னு நிறைய பேர் இருக்காங்க. மை போட்டுப் பாக்கறது, குறி சொல்றதுன்னும் ஆளுங்க இருக்காங்க…”
“அவங்க மேலெல்லாம் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?”
“ஆவி இருக்குன்னு சொல்றதையே நான் நம்பத் தயாரா இல்லை. அப்படி இருக்க எப்படி நான் அவங்களை நம்புவேன்?”
“என் மேல மட்டும் எப்படி நம்பிக்கை வந்தது?”
“அதுக்குக் காரணம் என் உயிர் நண்பர் குப்தாதான். குப்தா ஒரு ‘பிசினஸ் மேக்னட்’. இந்தியாவோட துணித் தேவையில பாதியை அவர் ஒருத்தரே பூர்த்தி செய்யறார். வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி பண்ணுறார். அவர் மகன் ஒரு விபத்துல செத்துப் போயிட்டான். பல முக்கியமான ஆவணங்கள் அவன்கிட்ட இருந்தன.
அதுக்கெல்லாம் மதிப்பு வெச்சா பல கோடி போகும். அது எங்கே இருக்குன்னு தெரிஞ்சுக்க முடியாம அவர் தத்தளிச்சப்போ நீங்க குப்தாவுக்கு உதவி செய்து, அவர் மகனோட ஆவி கூட பேசி – அந்த ஆவணங்களை எல்லாம் சுவிட்சர்லாந்துல ஒரு ‘பேங்க் லாக்கர்’ல இருக்கறதைக் கணடுபிடிச்சு சொன்னீங்களாம். இதை குப்தா என்கிட்ட சொன்னப்போ என்னால நம்பவே முடியலை…”
“அப்ப நீங்க எதைத் தெரிஞ்சுக்கணும்?”
“என் நண்பன் சதாசிவம் திடீர்னு மாரடைப்புல செத்துப் போயிட்டான். அவனுக்கு என்னைப் பத்தின ஒரு ரகசியம் தெரியும்…”
“அது என்ன ரகசியம்?”
“அது… அது…”
“தயக்கமா இருந்தா சொல்ல வேண்டாம். இப்ப நீங்க அந்த சதாசிவத்தோட பேசணுமா?”
“ஆமாம்…”
“அதுக்கு முதல்ல உங்களுக்கு நம்பிக்கை அவசியம்.”
“நம்பித்தானே வந்திருக்கேன்…”
“இல்லை… சந்தேகத்தோட அரை மனசா வந்திருக்கீங்க..”
“எப்படியோ வந்திருக்கேல்ல…?”
“எப்படியோ வந்திருக்கறது தப்பான ஒண்ணு. முழு நம்பிக்கை வேணும். அது இல்லேன்னா என்னால அவரைக் கூப்பிட முடியாது.”
“தப்பா எடுத்துக்காதீங்க… கண்ணால பார்த்து, காதால கேட்கறதுலயே சந்தேகப்படுறதுதான் மனுஷ ஜென்மம். அப்படி இருக்க… எப்படி நம்பிக்கை வரும்? சதாசிவம் ஆத்மா இங்கே வந்து என் கண்முன்னே தெரியட்டும். நான் நம்பறேன்”
அருணாச்சலா உண்மை பேசினார்.
ஆனால், பிட்சுவோ சிரித்தார்.
“நான் ஒண்ணும் தப்பா பேசலையே…? என் மனசுல பட்டதை சொல்லியிருக்கேன்.”
“குப்தா இப்படியெல்லாம் அவ நம்பிக்கையோட பேசலை. அதனாலதான் அவர் மகனை அவரால பார்க்க முடிஞ்சது. அது தெரிஞ்சும் நம்பிக்கை வரலைன்னா எப்படி அருணாச்சலா?”
“மன்னிக்கணும். எந்த ஒரு விஷயத்தையும் நூறு சதம் நம்பறவன் ஜெயிக்க முடியாது. ஒரு சதம், ஒரே ஒரு சதமாவது எச்சரிக்கையா நம்பாமலும் இருக்கணும். குப்தா கூட தப்பா எதையாவது புரிஞ்சு சொல்லி இருக்கலாம்னு ஒரு சின்ன சந்தேகம் எனக்குள்ள..”
மீண்டும் சிரித்தார் பிட்சு.
மெல்ல எழுந்திருந்து ஒரு இருட்டு அறைக்குள் சென்றார். திரும்பி வந்தபோது அவர் கையில் ஒரு மரப்பெட்டி.
அருணாச்சலா எதிரில் அதைத் திறந்தார்.
உள்ளே ஒரு தினுசான உலோக விளக்கும், அதில் எட்டு குழிகளும் இருந்தன.
கூடவே ஒரு வெண்பந்து போன்ற கண்ணாடிப் பந்து. அந்த கண்ணாடிப் பந்தை அரைக்கோளமாக அப்படியே வெட்டிப் பிரிக்க முடிந்தது.
இப்போது இரண்டு அரைக் கோளங்கள். ஒன்றுக்குள் அந்த எட்டுக்குழி விளக்கை வைத்தவர், அதில் வாசனையான ஒருவித எண்ணெயை விட்டு- திரி போட்டு- திரியின் நுனியை நிமிண்டிவிட்டார். பின் வாயருகே கையைக் கொண்டுசென்று மூடியபடி- விருட்டென்று நாக்கை நீட்டினார்.
தீப்பெட்டியை உரசினது போல நாக்கின் நுனியில் ஒரு தீபச்சுடர்!
அருணாச்சலா வெலவெலத்து இருந்தார். நாவில் எரியும் தீபச்சுடரை அப்படியே ஆட்காட்டி விரலில் பிடித்து, அந்த எட்டுக்குழி விளக்கையும் ஏற்றினார்.
“எப்படி… எப்படி… நாக்குல நெருப்பு வந்தது? ஹவ் இட் ஈஸ் பாசிபிள்?”
அருணாச்சலாவும் தன் அதிர்வைக் கேள்வியாக்கினார்.
பிட்சு பதில் சொல்லவில்லை. விளக்கைப் பார்த்தார். விளக்கில் எட்டு தீபச் சுடர்கள். அதை அப்படியே மீதமுள்ள கண்ணாடிக் கோளத்தால் மூடினார். கண்ணாடிப் பந்துக்குள் விளக்கின் சுடர்கள் ஒளிவிட்டதில் கண்ணாடி பந்தே ஒரு ஒளிக்கோளம் போலானது. அந்த இடமே புதிய ஒளியால் மாறிப்போனது.
பிட்சு கண்களை மூடி தியானிக்கத் தொடங்கியிருந்தார்.
அருணாச்சலாவுக்கு ஒன்றும் புரியவில்லை. மொத்தத்தில் இது ஒரு வித்தியாசமான அனுபவம் என்பது மட்டும் அவருக்குப் புரிந்தது.
பிட்சுவின் கையிரண்டும் வரம் கேட்பது போல் உயர்ந்திருந்தன. உதட்டில் ஏதோ முணுமுணுப்பு அது என்ன பாஷை என்றே தெரியவில்லை.
நிசப்தத்தில் பிட்சுவின் பிரார்த்தனை மட்டும் தொடர்ந்தது. வெளியே கார்த்திகேயன் நகத்தைக் கடித்துக்கொண்டிருந்தான். மொய்தீன் நெருங்கி வந்து கேட்டான்.
“என்ன சார், நீங்க உள்ளே போகலையா?”
“முட்டாள்… நான் அவரோட வேலைக்காரன். அவர் வந்துருக்கறது ஒரு ரகசியமான விஷயத்துக்கு என்னை கிட்ட விடுவாரா?”
“அப்படி என்ன சார் ரகசியமான விஷயம்?”
“இந்த மாதிரி கோடீஸ்வரங்ககிட்ட பல ரகசியங்கள் இருக்கும். எதுவும் யாருக்கும் தெரியாது ஏன். என் எம்.டி மனசுல என்ன இருக்குன்னு அவர் மனைவிக்கே கூட தெரியாது.”
“அந்த ரகசியங்களுக்கும், இந்த பிட்சுவுக்கும் என்ன சம்பந்தம்?”
“மொய்தீன்… நீ ஒருநாள் சம்பளத்துக்கு கார் ஓட்ட வந்தவன். கூட ஒரு நூறு ரூபாய் கேள்… தரேன். இப்படி உனக்கு சம்பந்தம் இல்லாத கேள்விகளைக் கேட்காதே…”
“அதுக்கில்ல சார்… அந்த ஷிகாரா மலைக்குன்று பற்றி, இங்க இருக்கற சில பிட்சுகள் பற்றி நான் நிறைய கேள்விப்பட்டு இருக்கேன். இவங்க பயங்கரமானவங்க.”
“என் எம்.டி. அதைவிட பயங்கரமானவர். அது உனக்குத் தெரியாது.”
“சரி, எனக்கென்ன வந்தது? நீங்க சொன்ன மாதிரி நூறு ரூபா கூடவே தந்திடுங்க…”
“ஆயிரம் ரூபாயே தரேன். இப்படி எங்களுக்கு கார் ஓட்டுவதைப் பத்தியோ… நாங்க இங்க வந்ததைப் பத்தியோ யார்கிட்டேயும் மூச்சு விடக்கூடாது நீ.”
“ரொம்ப சந்தோஷம் சார்…”
வெளியே கார்த்திகேயனும், மொய்தீனும் குசுகுசுத்துக்கொள்ள – உள்ளே பிரார்த்தனை தொடர்ந்து கொண்டிருந்தது.
அதற்கு ஒரு முடிவு வந்த மாதிரி – அந்தக் கண்ணாடிக் கோளத்தின் ஒரு பாதி – மூடிய நிலையில் இருந்து தானாகக் கீழே விழுந்தது.
தீபச்சுடர்களும் காற்று பட்டது போல சடசடவென்று ஆடின.
பிட்சு அதைப் பார்த்துவிட்டு பரவசமானார். தன் சின்னக்கண்களை முடிந்த அளவு அகலமாக்கி, “வந்துட்டியா சின்… வந்துட்டியா” என்றார்.
சடாரென்னு அருணாச்சலா பக்கம் திரும்பி, “அருணாச்சலா, செத்துப்போன அந்த சதாசிவம் ‘போட்டோ’ இருக்கா?” என்று கேட்டார்.
“இல்ல.. திடீர்னு கேட்டா அவர் ‘போட்டோ’வுக்கு நான் எங்க போவேன்…?”
“சரி… அவர் சம்பந்தமான ஏதாவது ஒரு பொருளாவது இருக்கா?”
அருணாச்சலா உடனே தன் சட்டை ‘பாக்கெட்’டில் இருந்து ஒரு பேனாவை எடுத்து, ” இது… அவர் எனக்கு பரிசளித்த பேனா…” என்றபடியே கொடுத்தார்.
“சந்தோஷம்… கொண்டாங்க…” வாங்கிக்கொண்ட பிட்சு, மளமளவென்று ஒரு நோட்டை எடுத்து வந்து – அதை அருணாச்சலாவிடம் கொடுத்து – “இதுல நீங்க கேட்க நினைக்கறதை எழுதுங்க… எழுதிட்டு நோட்டை மூடி வெச்சுடுங்க… மற்றதை சின் பார்த்துப்பார்…’
“அது யார் சின்?”
“சின் ஒரு மகாயோகி. சமாதியான பிறகும் எங்களுக்கு உதவிகிட்டு இருக்கறவர். அவர் போய் உங்க சதாசிவத்தோட ஆன்மாவை கூட்டிகிட்டு வந்து, உங்கக் கேள்விக்கு பதில் சொல்ல வைப்பார்…”
“எப்படி?”
“இந்த நோட்டுல முதல்ல கேள்விகளை எழுதுங்க. கீழே உங்க நண்பரே வந்து பதிலை எழுதிக் காட்டுவார்…”
“நிஜமாவா?”
“சீக்கிரம்… விளக்கு அணையறதுக்குள்ள எழுதுங்க. அடிக்கடி சின்னை கூப்பிடுறதும் நல்லதில்ல. ம்… சீக்கிரம். விளக்கு அணைஞ் சுட்டா – திரும்ப பத்து, பதினைஞ்சு நாளைக்கு சின்னை கூப்பிட முடியாது…”
“அப்படி ஒரு சக்தியா இந்த விளக்குக்கு?”
“ஆமாம்… இதைக் கொண்டு யார் வழிபாடு செய்தாலும், சின்னோட ஆத்மா வந்து உதவும். ம்… சீக்கிரம். உங்க கோரிக்கையை விலாவரியா எழுதுங்க…”
பிட்சு தூண்ட- அருணாச்சலாவும் மளமளவென்று முதலில் ஆங்கிலத்திலும், பிறகு அந்த பிட்சுவுக்கு புரிந்தாலும் புரிந்துவிடும் என்று தமிழிலும் எழுதத் தொடங்கினார்.
‘உயிர் நண்பர் சதாசிவத்துக்கு!
நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் மரணம் எனக்கு பெரிய இழப்பு. ஒருநாள் கூடுதலாக நீங்கள் உயிரோடு இருந்திருந்தாலும், என் வாரிசு யார் என்பது தெரிந்து போயிருக்கும். முறைப்படி நான் திருமணம் செய்துகொண்ட அமிர்தத்துக்கும், எனக்கும் குழந்தையே பிறக்காது என்பது உங்களுக்கு தெரியும். இந்த நிலையில், சிறுவயதில் என்னால் கெடுக்கப்பட்டு – பின் என்னால் கைவிடப்பட்ட மாயவரம் வனஜா கருக்கலைப்பு செய்யாமல் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றுப் போட்டுவிட்டு இறந்துவிட்டதாகக் கூறிய நீங்கள் – அந்த குழந்தை யார், எங்கே இருக்கிறது என்பதை மட்டும் இறுதி வரை சொல்லவே இல்லை.
எனது பல கோடி சொத்தும் வாரிசு இல்லாத நிலையில் கட்டிக் காக்கப்பட முடியாமல் போய்விடுமோ என்று அச்சமாக உள்ளது. என் மகன் இருக்குமிடம் உங்களுக்கு மட்டுமே தெரியும். நாளை கூறுகிறேன் என்று சொல்லிவிட்டு, முதல்நாளே மாரடைப்பில் இறந்து போய்விட்டீர்கள். நான் இப்போழுதும் தவித்தபடி இருக்கிறேன். ‘என் மகன் யார், எங்கே இருக்கிறான்?’ என்று தெரிவியுங்கள். அவனை நான் தத்து எடுத்துக்கொள்வது போல என் மகனாக்கிக் கொள்கிறேன். எனக்கென்று ரத்தமும், சதையுமாக ஒரு வாரிசு இருக்கும்போது – யாரையோ தத்து எடுத்துக்கொள்வதில் உனக்கு உடன்பாடில்லை. அவசியம் எனக்கு உதவவும்!
இப்படிக்கு
உங்கள் அருமை நண்பன்
அருணாச்சலா!’
ஒரு கடிதம் போலவே எழுதிய அருணாச்சலா – அந்த நோட்டையும் மூடினார்.
பார்த்துக்கொண்டே இருந்த பிட்சு. “சரி… நாம இப்ப ஒரு பத்து நிமிஷம் கண்களை மூடிப்போம். சின் உங்க நண்பரோட ஆத்மாவை கூட்டிக்கிட்டு வந்து இந்த நோட்டுல பதிலை எழுதிக் காட்டுவார். அதை எந்தக் காரணம் கொண்டும் நாம பார்க்கக் கூடாது. அப்படிப் பார்த்தா அது பெரிய ஆபத்து. பாக்கறவங்களுக்கு கண் பார்வையும் போயிடலாம். எச்சரிக்கை…. கண்களை மூடிக்குங்க…” என்றார்.
அருணாச்சலாவும் கண்களை மூடிக்கொண்டார்.
ஒன்று…
இரண்டு…
மூன்று…
நான்கு…
ஐந்து…
ஆறு…
எழு…
எட்டு…
ஒன்பது…
பத்து…
பதினொன்று…
பதினொராவது நிமிடத்தில் நிச்சயம் பத்து நிமிடம் ஆகி இருக்கும் என்கிற அனுமானத்தோடு கண்களைத் திறந்த அருணாச்சலா, கைக்கெடிகாரத்தைப் பார்த்தார்.
பதினொரு நிமிடங்களே ஆகிவிட்டிருந்தன…
பிட்சுவும் புன்னகையோடு மூடியிருந்த நோட்டை எடுத்து நீட்டி, திறந்து பார்க்கச் சொன்னார்.
அருணாச்சலாவிடம் அபரிமிதமான படபடப்பு. துடிதுடிப்பு… ஒருபுறம் முட்டாள்தனமாய், பைத்தியக்காரத்தனமாய் செயல்படுவது போல ஒரு நினைப்பு. மறுபுறம், அய்யோ இப்படி நம்பிக்கை இல்லாமல் சிந்திப்பதால் ஒருவேளை சதாசிவத்தின் ஆத்மா வராமல் போய்விடுமோ என்கிற எச்சரிக்கை கலந்த பயம்.
கலவையான உணர்ச்சிகளோடு நோட்டைத் திறந்தவருக்கு குப்பென்று வியர்த்தது. உள்ளே அழகிய தமிழில் சதாசிவத்தின் அச்சு அசலான கையெழுத்தில் பதில்.
‘மை டியர் அருணாச்சலா! வாழ்த்துக்கள்.
நான் இறந்த பிறகும் நீங்கள் இப்படி என்னோடு தொடர்புகொள்ள வருவீர்கள் என்று எதிர்பார்க்கவே இல்லை. மிகவும் நன்றி. எவ்வளவோ கடமைகள் எனக்கிருக்க நான் விதி வசத்தால் உடம்பை இழந்துவிட்டேன். இருந்தாலும் உங்கள் தொடர்பு இப்பொழுது எனக்கு ஒரு பலம்.
உங்கள் மகன் யார் என்பதை நிச்சயம் கூறுவேன். அதற்கு முன் ஒரு முக்கிய செய்தி. இந்த விளக்கு ‘சின்’ என்னும் ஒரு யோகியின் சத்திய விளக்காகும். இது யார் வசம் இருக்கிறதோ அவர்களுக்கு சின்னின் உதவியும் உண்டு.
அப்படிப்பட்ட இந்த சத்திய விளக்கு இன்னும் ஒரு மூன்று மணி நேரத்தில் அநாதையாகப் போகிறது. அதாவது, இதைக்கொண்டு உங்களுக்கு உதவும் இந்த பிட்சு மரணிக்கப் போகிறார். நல்ல வேளை… நீங்கள் வந்தீர்கள். சற்று காத்திருங்கள். பிட்சு மரணமடைந்த பிறகு இதை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுங்கள். இது உங்களிடம் இருந்தால் எனக்கும் வசதி. நானும் உங்களுடன் தொடர்ந்து பேசி, எனது கடமைகளை முடித்துக்கொள்கிறேன்.
நீங்கள் சென்னை திரும்பிய பிறகு என்னை மறுபடி அழையுங்கள். உங்கள் மகன் பற்றி கூறுகிறேன். தைரியமாக செயல்படுங்கள். இந்த விளக்கைப் பறிக்க சில ஆவிகள் முயலலாம். உங்களை ஷிகாரா மலைப் பகுதிக்கும் இழுக்கலாம். போய்விடாதீர்கள். அங்கே போனவர்கள் உயிரோடு திரும்ப முடியாது. எச்சரிக்கை! மீண்டும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
அன்புடன்…
உங்கள் நண்பன்
சதாசிவம்’.
கடிதத்தைப் படித்த அருணாச்சலாவுக்கு குபீர் என்று வியர்த்தது.
பிட்சுவோ துளையிடும் பார்வையோடு அவரை ஊடுருவியபடி இருந்தார்.
“பிட்சு ஜீ.”
“என்ன… பதில் கிடைச்சிடுச்சா?”
“கிடைச்சிடுச்சு. ஆனா….”
“என்ன…?”
“ஒண்ணுமில்ல… நாங்க இன்னிக்கு இங்க தங்கிட்டு, நாளைக்கு போகலாம்தானே?”
அருணாச்சலா விளக்கை அடையும் ஆசையுடன் சாமர்த்தியமாகக் கேட்ட அந்தக் கேள்வி முன்னால் பிட்சுவிடம் சிரிப்பு தொடர்ந்தது.
“பிட்சு ஜீ… நீங்க சிரிக்கறதைப் பார்த்தா…”
“சிரிக்காம என்ன பண்ண…? ‘சின்’ என்னோட குரு. அவர் மூலமா என் விதி முடியப் போவது எனக்கும் தெரியும் அருணாச்சலா…”
“பதறாதீங்க… உங்க நண்பர் நல்லவரில்லை. அதனாலதான் உங்களை இந்த விளக்கை எடுத்துக்கச் சொல்றார். அவரது ஆசை அடங்கலை. அவர் பேச்சை நீங்க கேட்காதீங்க.”
“ஜீ…”
“நீங்க இந்த விளக்கோட இந்த பனிமலையைவிட்டுப் போக முடியாது. போக முயற்சி செய்தா உங்களை ஷிகாரா மலை ஆவிகள் விடாது. உங்க உயிரும் போயிடும். நீங்களும் செத்து, அவரோட சேரணும்கறதுதான் அவர் விருப்பம்…”
“அப்படியா?”
“கடைசிவரை உங்க மகன் யாருங்கற கேள்விக்கு அவர் பதில் சொல்லவே இல்லை. ஆன்ம சொரூபத்துலேயும் அவர் ஒரு வியாபாரியாதான் இருக்கார். இது உங்களுக்குப் புரியலையா?”
“புரியுது… நல்லா புரியுது. எனக்கு எல்லாமே நம்ப முடியாத ஒரு கனவு போலத்தான் இருக்கு. இப்ப நான் என்ன பண்ணுறதுன்னே எனக்குத் தெரியலையே?”
“குழம்பாதீங்க. எண்பது வருஷ யோக வாழ்க்கை உடையவன் நான். என் பேச்சைக் கேளுங்க. சின் என் குருநாதர். அமைதிக்காகவும், நன்மைக்காகவுமே இந்த விளக்கை நான் பயன்படுத்தணும்கறது அவர் விருப்பம். அதனால்தான் ஒரு சேவையா நான் இதை செய்துகிட்டிருக்கேன்.
உங்களைப் போன்ற சில கோடீஸ்வரங்க மரணத்துக்குப் பிறகு என்னாவோம்கறது தெரியாததால் பணம் சேக்கற ஆசையில் நிறைய பாவங்களை செய்திடுறீங்க. என்கிட்ட வந்து ஆன்மாக்களோடு பேசும்போது உங்களுக்கு மரணத்துக்குப் பிறகும் ஒரு வாழ்க்கை முறை இருக்குங்கறது தெரியவந்து, பாவ புண்ணியத்துக்கு பயந்து நல்லவிதமா நடந்துக்குவீங்க. அந்த மாற்றத்துக்கு நானும், என் குருநாதரும் பயன்படுறதுல எங்களுக்கும் ஒரு ஆத்ம திருப்தி,
குப்தாவும் அப்படித்தான்! இப்ப அவர் பணம் சேக்கறதுல குறியா இல்லாம, புண்ணியம் செய்யறதுல குறியா இருக்கார். செய்த பாவங்களுக்குப் பரிகாரம் தேடிக்கிட்டிருக்கார்.
நீங்களும் அப்படித்தான் நடந்துக்கணும், பேராசைப்பட்டு ஆத்மாக்களைக்கொண்டு ரகசியங்களை தெரிஞ்சுக்க முயற்சிக்கக் கூடாது. அப்படிச் செய்தா அந்த பாவம் உங்களை விடவே விடாது…”
“ஒத்துக்கறேன்… என் நண்பர் பேச்சே அவர் எப்படிப்பட்டவருங்கறதை சொல்லாம சொல்லிடிச்சு. நானும் நீங்க சொல்றபடியே நடந்துக்கறேன். எனக்கு ஒரே ஒரு உதவி மட்டும் செய்ய முடியுமா?”
“என்ன?”
“என் மகன் யார்…? எங்கே இருக்கான்கறது எனக்குத் தெரிஞ்சா போதும். இதைக்கூட நான் செய்த பாவத்துக்கான பரிகாரமாத்தான் கேக்கறேன். அந்த பாவம்தான் எனக்கு ஒரு மகன் இருந்தும் என்னை அநாதையா தவிக்க விட்டுகிட்டு இருக்கு…”
“கவலைப்படாதீங்க. என் குருநாதர் அதற்கு உங்களுக்கு உதவி செய்வார்”.
“இப்பவே… இப்பவே அவர்கிட்ட கேட்டு சொல்லுங்களேன்.”
“அப்படியே ஆகட்டும்… நீங்க கொஞ்சம் வெளியே போய் காத்திருங்க. நான் உங்களைக் கூப்பிடுறேன்.”
பிட்சு லீ யுவான் பணிவாகப் பேசி – வாயிலை நோக்கி கையை தீட்டினார்.
அருணாச்சலாவும் பதற்றம் குறையாமல் எழுந்து வெளியேறினார்!
அத்தியாயம் – 8
“ஜாதகம் என்பது ஒரு மனிதனின் வரி வடிவம். மனிதன் என்பவன் பஞ்சபூதக் கலவை. இதனுள் ஆத்மா என்பது அனைத்தையும் இயக்கி இயங்கும் சக்தி. ஒரு ஜாதகம் என்பது அந்த ஜாதகரின் பஞ்சபூதக் கலவையை மறைமுகமாகச் சொல்வதோடு அவரது பூர்வீகம், முன்வினை, நடப்பு, எதிர்காலம் என்று எல்லாவற்றையும் அறுதியிட்டுச் சொல்லக் கூடியது.
ஜாதகம் என்பது ஒரு வகையில் சங்கேத பாஷையும் கூட ! இதைப் படித்து அதனுள் இருப்பதை அறிந்துகொள்வது என்பது கல்வியும், ஞானமும்… கூடவே அருளும் கலந்த ஒரு விஷயமாகும்.
இதில் ஒன்று இருந்து ஒன்று விடுபட்டாலும் ஜாதகத்தை துல்லியமாக அறிய முடியாது.
ஜாதகம், சாஸ்திரம் இந்த உலகத்திற்கு அருளப்பட்டதும் இரண்டு காரணங்களுக்காகவே…
ஒரு ராஜ்ஜியத்தை ஆளும் அரசனையன்றி மற்றவர்கள் ஜாதகத்தை திருமணப் பொருத்தத்திற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
அரசன் மட்டும் ஜாதகத்தை நாட்டு மக்களின் நலன் கருதி சில முக்கிய முடிவுகள் எடுக்கப் பயன்படுத்தலாம்.
இதற்கன்றி ஜாதகத்தால் பலா பலன்களை அறிந்துகொள்ள முயலுதல் பெரிய பலன்களைத் தராது என்பது சில ஞானியர் கருத்து.”
லோகநாதன் தனது சூட்கேஸை குடைந்துகொண்டிருந்தான். டைரி ஒன்றைத் தேடிப் பிடித்து – அதில் ஒரு தொலைபேசி எண்ணையும் கண்டுபிடித்து ஓடிப் போய் தொலைபேசியை அழுத்தினான்.
அந்த எண்கள் கன்னியாகுமரியில் ஒரு வீட்டுக்குள் சப்தமிட்டு அங்கிருந்த குமாரர் என்பவரை ‘ஹலோ’ சொல்ல வைத்தது.
“அய்யா… நான் லோகு பேசறேன்.”
“நல்லது… சொகமா இருக்கியா?”
“இருக்கேங்க. நீங்க எப்படி இருக்கீங்க?”
“நல்லா இருக்கேன்பா.. என்ன ஆச்சு…? ஏதோ ஒரு பத்திரிகைல வேலைக்கு சேரப் போறதா சொன்னியே, சேர்ந்திட்டியா?”
“இல்லய்யா… அவங்க இப்ப எனக்கு சில வேலைங்க கொடுத்திருக்காங்க. அதை நான் நல்லபடியா முடிச்சுட்டா வேலை கிடைச்சிடும்.”
“என்ன வேலை தம்பி…? அவங்க பத்திரிகைகளை உன் கையில் கொடுத்து, வித்துட்டு வரச் சொல்றாங்களாக்கும்?”
“இல்லையா… இது எழுத்து வேலை. வித்தியாசமா பேட்டி, கட்டுரைங்க எழுதித் தரச்சொல்லி இருக்காங்க. நெத்தியில் அடிச்ச மாதிரி இருக்கணும்னு சொல்லிட்டாங்க. அதுக்குத்தான் முயற்சி பண்ணிட்டிருக்கேன்.”
“நீ புத்திசாலி. நல்லா பண்ணிடுவே.”
“எல்லாம் உங்க ஆசீர்வாதம்யா… அப்புறம்யா ஒரு முக்கியமான விஷயம். அதுக்குத்தான் ‘போன்’ பண்ணேன்.”
“என்ன லோகு?”
“ஐயா, எனக்கு என் ஜாதகம் வேணும். கிடைக்குமா?”
“ஜாதகமா… எதுக்குப்பா இப்ப உனக்கு அது?”
“காரணம் இருக்குய்யா. நான் விபரமா நேர்ல சொல்றேன். என் ஜாதகம் உங்ககிட்ட இருக்குதா?”
“இல்லையே தம்பி… உன்னை அந்த கிறிஸ்தவ ஆஸ்பத்திரியில் இருந்து நான் தத்து எடுத்துக்கிட்டு வந்தப்போ, உன் பிறந்த தேதியைத்தான் சொன்னாங்க.”
“அப்ப அது இருந்தா ஜாதகம் கணிச்சிடலாமா?”
“தாராளமா… என்ன திடீர்னு ஜாதகம், ஜோசியம்னு போயிட்டே? எதிர்காலம் எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்கற ஆசை வந்துடிச்சா?”
“அப்படித்தான் வெச்சுக்கங்களேன். என் பிறந்த தேதியைக் கொஞ்சம் சொல்லுங்களேன்.”
“சரியா ஞாபகம் இல்லையே லோகு. ஆங்… உன் பள்ளிக்கூட சர்டிபிகேட்ல பார். இருக்கும்.”
“அந்த தேதி போதுங்களா?”
“தேதி மட்டும் போதாது. பொறந்த இடம், நேரம் தெரியணும். நீ சென்னையில பொறந்தவன். காலையில சூரிய உதயத்தின்போது பொறந்ததா சொன்னது ஞாபகத்துல இருக்குது.”
“அப்ப காலைல ஆறு மணிங்களா?”
“இருக்கலாம். இருந்தாலும் அன்னிக்கு தேதிக்கு சூரிய உதயம் எத்தனை மணிக்கு நடந்திருக்கும்னு ஜோசியக்காரங்களை கேட்டா சொல்லிடுவாங்க. முன்னையாச்சும் பேப்பர், பேனா, கூட்டல், கழித்தல்னு உசுரை விடணும். இப்பதான் கம்ப்யூட்டருங்க வந்துடுச்சே? தகவல் சொன்னா போதும். அடுத்த நிமிஷம் உன் ஜாதகத்தை அது ‘டைப்’ பண்ணியே கொடுத்துடுமே?”
“நல்லதுய்யா. நான் பார்த்துக்கறேன். நீங்க உங்க உடம்பை கவனமா பாத்துக்குங்க. அத்தாச்சி, ரேகா, ரேகா பசங்களை எல்லாம் ரொம்ப விசாரிச்சதா சொல்லுங்க.”
“ஜாதகம் கணிச்சு பார்த்த பிறகு என்ன பலன் சொன்னாங்கன்னு சொல்லு. எனக்குத்தான் இன்னும் வேளை வரலை.”
“ஆரம்பிச்சுட்டீங்களா…? நீங்க ரொம்ப நாள் இருக்கணும்யா. எனக்குக் கல்யாணம். அப்புறம் பேரன்-பேத்திய பார்க்கறதுன்னு எவ்வளவு இருக்குது.”
“அப்ப பொண்ணு பாருன்னு சொல்லாம சொல்றியா?”
“முதல்ல வேலைய்யா. முத மாசம் சம்பளம் வாங்கிட்டு, நேர்ல வரேன். அப்புறம் நீங்க சொல்ற பொண்ணு கழுத்துல தாலியைக் கட்றேன். சரிங்களா?”
“சந்தோஷம்… வேற ஒண்ணுமில்லேயே…?”
“இல்லைய்யா… வெச்சுடுறேன்.”
ரிசீவரை வைத்துவிட்டு நிமிர்ந்தான்.
அடுத்த குறி கம்ப்யூட்டரில் ஜாதகம் கணிக்கும் இடம் எங்கே என்று தேடுவதுதான்…
சவுகர்யமாக அந்த எஸ்.டி.டி. பூத்திலேயே ஒரு விளம்பர நோட்டீஸ் கைகொடுத்தது. அவனுக்கும் ‘அப்பாடா’ என்று இருந்தது.
துர்க்கா தேவி சிலை முன் நிஷ்டையில் இருந்தான் தர்மன்.
ஜாதகத்துடன் லோகநாதன் வரவும் கண்களைக் கூட திறந்து பார்க்காமல், “வாங்க தம்பி…” என்றான்.
லோகுவும் அவன் எதிரில் அமர்ந்தான். கையில் ஜாதகக் காகிதம்.
தர்மன் கண்களைத் திறக்காமலே, “கைல இருக்கற அந்த ஜாதகத்தை ஆத்தா சிலையோட திருவடிகிட்ட வை” என்றான்.
லோகநாதனுக்கு ஆச்சரியத்துக்கு மேல் ஆச்சரியம். தவணையில் உயரும் காவிரி நீர்மட்டம் போல ஏறிக்கொண்டே போனது.
மெல்லக் கண்களைத் திறந்தவன், ஒருமாதிரி லோகுவைப் பார்த்தான். அந்தப் பார்வையே நீ ஒரு விடாக்கண்டன் என்றது.
“நீங்க கேட்ட ஜாதகம். அதப் பாத்துட்டு சொல்லுங்க.” “ஜாதகம் இருக்கட்டும்… ஒரு பரீட்சை இருக்குன்னு சொன்னேனே. மறந்துட்டீங்களா?”
“அந்தப் பரீட்சையையும் மறக்கல. ஜாதகம் அனுமதிக்கணும்னு சொன்னதையும் மறக்கல. அதான் கஷ்டப்பட்டு ஜாதகத்தைக் கண்டுபிடிச்சு கொண்டு வந்துருக்கேன்.”
“உங்க ஜாதகத்தைக் கண்டுபிடிக்கறதே உங்களுக்கு கஷ்டமான விஷயமா இருந்துருக்கா?”
“ஆமாம்… நான் அப்பா- அம்மா இல்லாத அநாதை. கன்னியாகுமரியில் உள்ள ஒருத்தர் என்னை ஆஸ்பத்திரியில் இருந்து தத்து எடுத்து வளர்த்து ஆளாக்கினார்.
‘கன்னத்தில் முத்தமிட்டால்’ சினிமாவுல வர்ற மாதிரியே பதினைஞ்சு வயசு இருக்கும்போது நான் யாருங்கற உண்மையையும் சொல்லிட்டார். விடுங்க… அதெல்லாம் ஒரு கதை. பரீட்சை என்ன, அதைச் சொல்லுங்க…”
“ரொம்ப சுருக்கமா உங்க வரலாற்றை சொல்லிட்டீங்களே… சபாஷ். இந்த பரீட்சை உங்க மனசு எவ்வளவு திடமானதுன்னு தெரிஞ்சுக்கற பரீட்சை. இப்படியொரு பரீட்சை பற்றி நான் இத்தனை நாள்ல யோசிச்சது கூட இல்ல. ஆனா, நேத்து உங்க பேச்சு, என் பதில் எல்லாமா சேர்ந்து என்னை இந்தப் பரீட்சைக்கு தயார்படுத்திடிச்சு.”
“பீடிகை போதும்… பரீட்சை என்ன சொல்லுங்க?
சொல்றேன். அந்த அறைக்குள்ள போங்க. அங்க ஒரு பொண்ணு இருக்கா. அவளை நீங்க ஓவியமா வரையணும்.”
“ஓவியமாவா…? அதுவும் ஒரு பெண்ணைப் பார்த்தா…? நான் ஓவியன் இல்லையே…?
“அது எனக்கும் தெரியும். உங்களால முடிஞ்ச அளவு வரையுங்க… அது போதும்.”
“அய்யோ, எனக்கு சாதாரணமா ஒரு யானை படம் போடக்கூட வராது.”
“தம்பி… இது உங்களுக்கு ஓவியம் வரையத் தெரியுமாங்கறதுக்கான பரீட்சை இல்ல. எந்தத் தடுமாற்றமும் இல்லாம இப்ப என்ன நிலைல இருக்கீங்களோ அந்த நிலைல நீங்க மாறாம இருக்கீங்களான்னு தெரிஞ்சுக்கத்தான் வரையச் சொல்றேன்.”
“ஓவியம் வரையப் போனா நான் மாறிடுவேனா… புரியலையே…?”
“அந்தப் பெண் உருவம் உங்களை மாத்த முயற்சிக்கும். மனக்கட்டுப்பாடு இருந்தா நீங்க மாறாம இருந்துடலாம்…”
“அப்படின்னா?”
“பேசிகிட்டே இருந்தா எப்படி? வாங்க… நானும் வரேன். நான் எப்படி இருக்கேன்னு நீங்க பாருங்க. நீங்க எப்படி இருக்கீங்கன்னு நான் பாக்கறேன்.”
“நீங்க சொல்றத பார்த்தா அந்தப் பெண் நிர்வாணமா…?”
“உங்க யூகம் சரி. அவங்க ஓவியம் வரைய மாடலா போஸ் கொடுக்கறவங்க. மற்றபடி தப்பானவங்க கிடையாது.”
“அய்யோ…”- லோகுவின் உதட்டில் அரற்றல். உடம்பிலும் லேசான நடுக்கம்… நெற்றிப் பொட்டிலும் படுவேகமான வியர்வைத் துளிர்ப்பு.
“என்ன தம்பி… என்ன யோசனை?”
“இல்ல… நீங்க இப்படியொரு பரீட்சை வைப்பீங்கன்னு நான் ஓரஞ்சாரமா கூட யோசிச்சு பாக்கலை.”
“ஆண்மைன்னா என்ன தம்பி? ஒரு பெண்ணோட காமத்தை அடக்கறதுன்னு சொல்வாங்க. ஆனா, தனக்குள்ள காமத்தை அடக்கிறதுதான் உண்மையான ஆண்மை. அதுக்கு மனசும், உடம்பும் ஒத்துழைச்சாதான் இந்த வித்தைக்குள்ளேயே நுழைய முடியும்.”
பேச்சோடு எழுந்து அவன் தோளில் கைபோட்டு, அவனை அழைத்துச் சென்றார்.
அறைவாசல் வரை சென்ற லோகநாதனும் அதற்கு மேல் உள்ளே செல்ல தயங்கினவனாக, “இல்லை… நான் வரலை… என்னால முடியாது” என்றான்.
“ஏன்… நேத்து அந்தப் பேச்சு பேசினீங்க…?”
“வாஸ்தவம்தான். நீங்க பரீட்சைன்னு சொன்னதை நான் சரியாப் புரிஞ்சுக்கலை. இப்பவே என் தோல்வியை ஒத்துக்கறேன். ஒரு பெண்ணை நிர்வாணமாக பார்த்துட்டு உணர்ச்சி வசப்படாம் மரக்கட்டையா இருக்க என்னால முடியாது. என்னால மட்டுமல்ல… என் வயசுல யாராலேயும் முடியாது. அப்படி இருந்தா அவங்களுக்கு இந்த சமூகத்துல வேற பேர்.”
அவன் பதிலைக் கேட்டு சிரித்தான் தர்மன்.
மளாரென கதவைத் திறந்தான். உள்ளே யாருமில்லை.
லோகுவுக்கு பலத்த ஏமாற்றம்.
“என்னங்க… பொண்ணு, மாடல்னுல்லாம் சொன்னீங்க. யாரையும் காணோமே…?”
“சும்மா சொன்னேன் தம்பி. தைரியமா அறைக்குள்ள நீங்க போனாலே ஜெய்ச்சிருப்பீங்க. நான்லாம் எட்டிக்காயை தினம் அரைச்சு கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட்டு, உயிர் நீரை கல்லாக்கினவன் அதனாலதான் என்னாலே காமத்தை ஜெயிக்க முடிஞ்சது. இப்ப புரியுதா… எல்லாத்தையும் எல்லாராலேயும் பண்ண முடியாதுங்கறது…”
தர்மனின் கேள்வி முன் லோகநாதனின் தலை கொஞ்சம் போல குளிந்தது.
“மத்திர சாஸ்திரம் ஒரு சமுத்திரம்… அதுவும் சுறாவும், திமிங்கலமும் நீந்தற சமுத்திரம். அசாத்திய மனோதிடம். உபாசனா சக்தி, காமம்- பசி இவைகளை ஜெயிக்கற ஆற்றல்- இதெல்லாம் இதுக்கு பிரதானம். போகட்டும்… உண்மையை கூச்சப்படாம ஒத்துக்கிட்ட ஒண்ணே போதும். வாங்க ஜாதகத்தைப் பார்ப்போம்.”
தர்மன் திரும்பச் சென்று துர்க்காதேவி சிலை முன் உள்ள பலகை மேல் அமர்ந்தவனாக – சிலையின் காலடியில் இருந்த ஜாதகத்தை எடுத்து விரித்தான்.
அதில் கட்டங்கள்… கிரகங்களின் வீட்டு நிலைகள் கூர்ந்து பார்த்து கூட்டிக் கழித்தவன் முகத்தில் மளமளவென்று ஆச்சரிய வரிகள் விழ ஆரம்பித்தன.
“என்னங்க…. என் ஜாதகம் என்ன சொல்லுது?”
“நீங்க ஒரு அநாதைன்னு சொன்னீங்கள்ல?”
“அது தான் உண்மைன்னாலும் குமாரர்ய்யா என்னை தன் மகனாதான் நினைக்கறார். என்னை தத்து எடுத்துக்கிட்ட பிறகு ரேகான்னு எனக்கு ஒரு தங்கச்சியும் பிறந்தா. அப்படிப் பார்த்தா நான் அநாதை இல்லைங்கறதுதான் உண்மை.”
“அது மட்டுமல்ல தம்பி… நீங்க ஒரு கோடீஸ்வரனாகப் போறீங்க. உங்க எதிர்காலம்…”
பெரிதாக ஏதோ சொல்ல வந்த தர்மன் – சட்டென்று தன் வாய்க்கு பூட்டு போட்டுக்கொண்டான்.
“என்னங்க… என்ன சொல்லுது என் ஜாதகம்?”
“ஒண்ணுமில்ல. நீ அமோகமா இருப்பே. அதுக்கு மேல இப்ப எதுவும் உனக்கு தெரிய வேண்டாம்.”
“ஏதோ கோடீஸ்வரன் அப்படி இப்படின்னீங்களே…?”
“ஆமா… கூடிய சீக்கிரம் கோடீஸ்வரனாவே,”
“வேண்டாம்… எனக்கு பத்திரிகையில ‘சப்-எடிட்டர் வேலை கிடைச்சா போதும்.”
தர்மன் அந்தப் பதிலுக்கு மர்மமாய் சிரித்தான்.
“இந்த நிமிஷம் நீ என் சிஷ்யப்பிள்ளை… என்னடா வாங்க போங்கன்னு பேசினவன் திடீர்னு வா போங்கறானேன்னு நினைக்க வேண்டாம். குரு – சிஷ்யனுக்கு நடுவுல எதுக்கு சம்பிரதாய மரியாதை…?”
“அப்ப இந்த மாந்திரீக விஷயங்களை எனக்குப் புரிய வைக்கப் போறீங்கன்னு சொல்லுங்க…”
“நிச்சயமா…!”
“அதுக்கு எவ்வளவு நாளாகும்…?”
“நாளா..?”
“ஆமாம்… நான் கட்டுரை எழுத வேண்டாமா?”
“இது ஒரு நாள் இரு நாள்ல கத்துக்கற விஷயமில்ல தம்பி. வருஷங்கள் ஆகும்.”
“சரிதான்! அப்ப நான் இந்த ஜென்மத்துல கட்டுரை எழுத முடியாதுன்னு சொல்றீங்க…”
“எழுதலாம்… எழுதலாம். இப்ப என்ன சீக்கிரமா நீ இதைப் பத்தி தெரிஞ்சுகிட்டு கட்டுரை எழுதணும். அவ்வளவுதானே?”
“ஆமாம்…”
“ஒரு மாசம் பொறு. அதுக்குள்ள உன் வாழ்க்கையே தலைகீழா மாறப்போகுது, அந்த மாற்றத்துக்குப் பிறகு நீ கட்டுரை வேலைன்னு எதையும் யோசிக்கமாட்டே…”
“இது என்ன… ஜாதகம் சொல்ற விஷயமா? இல்ல உங்க அமானுஷ்ய சக்தியால சொல்றீங்களா?”
“எப்படி வேணா எடுத்துக்கோ. நான் சொல்றபடி நடந்தா உனக்கு சந்தோஷம்தானே?”
“முதல்ல நடக்கட்டும், பிறகு பார்ப்போம்..”
“பத்திரிகைக்கே உண்டான அதே சந்தேகத்தோட பதில் சொல்றியே…?”
“சந்தேகப்படணும். ஒரு சதமாவது சந்தேகப்பட்டாதான் எச்சரிக்கையா இருக்க முடியும்.”
கிட்டத்தட்ட அருணாச்சலா, பிட்சு லீ யுவான் எதிரில் சொன்ன அதே வசனம்.
தர்மன் பதிலுக்கு ஒன்றும் சொல்லவில்லை. விழிகளை ஊன்றி, மட்டம் பார்த்தான்.
“சரி, நான் சில கேள்விகள் கேட்கலாமா?”
“கேளு…”
“மாந்திரீகம்னா என்ன? வளவளன்னு இல்லாம ஒரு வார்த்தைல பதில் சொல்ல முடியுமா?”
“சொல்லலாமே… மாயக்கலை. இதுக்கு தலைவன் சனியோட பையன் மாந்தி. அதாவது குளிகன்.”
“மாயக்கலைன்னா மனுஷ சக்தி தேவையில்லையா?”
“மனுஷ சக்தியோட இன்னொரு பக்கம்தான் மாய சக்தி.”
“எப்படி?”
“பல வருஷம் தவமிருந்து தெரிஞ்சுக்க வேண்டியதை சாமர்த்தியமா எப்படின்னு ஒரு கேள்வியை கேட்டு தெரிஞ்சுக்கப் பாக்கறியே…?”
“சரி… இறந்த உடனே உயிர் எங்கே போகுது? அது ஆவியா நடமாடுங்கறது உண்மையா?”
“உண்மை இல்லாமலா செத்த பெணத்தைப் போட்டுகிட்டு அந்த அழு அழறோம். அப்புறம் ஈமக்கிரியை தர்ப்பணம். திவசமெல்லாம் பண்ணுறோம்?”
சரி… ஆவி இருக்குன்னா ஏன்.அதை பார்க்க முடியலை?”
“பாத்தாதான் நம்புவியா?”
“அப்படித்தான்னு வெச்சுக்குங்களேன்.”
‘காத்தை பாக்க முடியல… அப்ப அது இல்லையா?”
“பாக்க முடியலேன்னாலும் உணர்றோமே…?”
“ஆவிகள் இருக்கறதையும் உணரத்தான் செய்யறோம்…”
“எப்படி… எப்படி?”
“நம்ம முன்னோர்கள் ஆவிதாம்ப்பா பல சமயங்கள்ல நம்மை பல ஆபத்துல இருந்து காப்பாத்துது. அவங்களை நாம நினைக்க மறந்தா, நமக்கு சில கஷ்டங்களை கொடுத்து ஞாபகப்படுத்தறதும் இதுங்கதான்.”
“இதெல்லாம் யூகம், காற்று இருக்கறதை எப்படி சுவாசிச்சு ஒவ்வொரு விநாடியும் உணருகிறோமோ அப்படி ஆவிகளை உணர வழி இருக்கா?”
“வழி இருக்கு. ஆனா, உணர்ந்து என்ன பண்ணப் போறே?”
“இது என்ன கேள்வி. ஒரு நம்பிக்கைதான்.”
“வேண்டாம், நம்பாதே… விட்டுடு! உன்னை யார் நம்பச் சொன்னது. நம்பி என்ன ஆகணும்?”
“பதில் சொல்லத் தெரியலைன்னா அந்த விஷயத்தை பொசுக்குன்னு இப்படி முடிக்கறது உங்களுக்கு வழக்கமா போச்சு. நான் யாரும் எழுதாத விதத்துல இந்த அமானுஷ்யங்கள வெச்சு கட்டுரை எழுத விரும்பறேன். அதான் இப்படி கேட்கறேன்.*
“எவ்வளவோ விஷயம் இருக்கே கட்டுரை எழுத… நீ ஏன் இந்த விஷயத்தைத் தேர்வு செய்தே?”
“இதுலதான் ஒரு ‘திரில்’ இருக்கு. இதைப்பத்திதான் யாருக்கும் சரியா எதுவும் தெரியல. அது மட்டுமல்ல.. ஏனோ சிறு வயசுல இருந்தே இந்த விஷயம் பத்திதான் நான் அதிகம் யோசிக்கறேன். எனக்கொரு நண்பன் இருந்தான். வாட்டசாட்டமா ரொம்ப அழகா இருப்பான். ஆட்டம் பாட்டம் எல்லாத்துலேயும் சூரன். ஒருநாள் பொட்டுல அடிபட்டதுல பொசுக்குன்னு உயிர் போயிடிச்சு. அவன் இருந்த வரை எப்படியெல்லாம் இருந்தான்? பிணமாக அவனைப் பார்த்தப்போ என்னால நம்ப முடியலை. எது இப்படி இவனை சடலமாக்கிச்சு? எது அப்ப அவனை விட்டுப்போய் அவன் பொணமானான்கற கேள்வியில விழுந்து அல்லாடினேன். !
அது மட்டுமல்ல… உலகமே உயிர் பயத்தை பிரதானமா நினைக்குது. உயிர்… எது உயிர்? அது என்ன? எப்படி இருக்கும்? அதை தெரிஞ்சுகிட்டே ஆகணுங்கற வெறி இந்த நிமிஷமும் எனக்குக் குறையல்…”.
“இப்படியே இரு. கூடிய சீக்கிரம் தெரிஞ்சுப்பே. எல்லாருக்கும் இப்படி தாக்கம் ஏற்படுறதில்லை. கோடி பேர்ல ஒரு புத்தர்தான் கிட்டத்தட்ட உன்னை மாதிரி யோசிச்சவர். ஆனா, அவருக்கு உண்மை தெரிஞ்சப்ப மவுனமாயிட்டார். இப்ப இது போதும். என்னைப் பார்க்க ஆட்கள் வர ஆரம்பிச்சுட்டாங்க பார்.”
தர்மன் பேச்சோடு வெளியே காட்டினான். திண்ணையில் சிலர்.
லோகநாதனுக்கும் அதற்கு மேல் கேள்வி கேட்கத் தோன்றவில்லை.
நகர்ந்தான்,
தர்மன் திரும்பவும் அவன் ஜாதகத்தை கையில் எடுத்தான். அதைப் பார்த்துவிட்டு நிமிர்ந்து துர்க்கா தேவி சிலையைப் பார்த்தவன், “தாயே… என் பூஜைக்கு வரமாத்தான் இவனை அனுப்பி இருக்கியா? உன் கருணையே கருணை” என்று முணுமுணுத்தான்.
ஒதுங்கி நின்றபடி இருந்த தர்மனின் உதவியாளனுக்கு மட்டும் அது ஆச்சரியமா இருந்தது.
அத்தியாயம் – 9
“இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பின்விளைவு உண்டு. சாதாரண ஒரு கை தட்டும் விஷயம் கூட, அதிர்வலையாக மாறி வெளியில் கலந்து காற்றை பாதித்து மேகம் வரை சென்று பெய்யும் மழை நீரைத் தொட்டு முடிகிறது.
காரணமில்லாமல் ஒற்றைப்புல் கூட தரையில் வளர்வதில்லை. பூமி ஒருவித சாய்மானத்தோடு இருப்பதில் இருந்து, அது சுழல்வது வரை அனைத்தின் பின்னாலும் ஒரு திட்டமிடப்பட்ட கச்சிதமான இயக்க சக்தி ஒளிந்துள்ளது.”
காத்துக்கொண்டிருந்த அருணாச்சலாவிற்கு பொறுமையே போய்விட்டது.
கார்த்திகேயன்கூட கிட்டே வந்து கேட்டான்.
“என்ன சார்… வந்த வேலை முடிஞ்சிடிச்சா? ஏன் உங்களையும் வெளியே போகச் சொல்லிட்டார் அந்த பிட்சு…?”
“தெரியல கார்த்தி. கூப்பிடுறேன்னு சொன்னார். கூப்பிடலை…”
“நான் வேணா பார்க்கட்டுமா?”
“வேண்டாம்… அவரே கூப்பிடட்டும்”.
“வந்த காரியம் சக்ஸஸா…?” – ஆர்வம் தாளாமல் கார்த்தி கேட்கவும், ஒரு சின்ன முறைப்பு அருணரச்சலாவிடம்!
“சாரி சார்…”- அவன் சொல்லி சற்று விலக, கதவைத் திறந்துகொண்டு அருணாச்சலாவைக் கூப்பிட்டார் பிட்சு.
அருணாச்சலாவும் ஆர்வமாக உள்ளே நுழைந்தார்.
“மிஸ்டர் அருணாச்சலா… உங்க கோரிக்கைக்கு என் குருநாதர் பதில் சொல்லிட்டார். கூடிய சீக்கிரம் உங்க மகனே உங்களைத் தேடி வருவான். கவலைப்பட வேண்டாம்.”
“வருவான்னா… எப்படி? அவன் என் மகன்தான்னு நான் எப்படி தெரிஞ்சுக்கறது?”
“இந்த விளக்கோடயார் உங்களைப் பார்க்கறாங்களோ அவர்தான் உங்கள் மகனாம்.”
“இந்த… இந்த விளக்கோடையா… எப்படி?”
“இதே விளக்குதான். இந்த சத்திய விளக்கு மூலமா அவரே உங்க மகனை அடையாளம் காட்டுறதா சொன்னார். ஆனா, அதே சமயம் நீங்க ஒரு சத்தியம் செய்யணும்.”
“என்ன?”.
“எந்த காரணத்தைக்கொண்டும் நீங்க இதைப் பயன்படுத்தி எந்த ஆன்மாக்களையும் கூப்பிடக் கூடாது.”
“ஏன்…?”
“என் குருநாதர் விருப்பத்தைச் சொல்லிட்டேன். அதுக்கான உறுதிமொழியை நீங்க தந்தா, அவர் உங்களுக்கு உங்க மகனை அடையாளம் காட்டுவாராம்.”
“நீங்க…”
“உம்… சொல்லுங்க… என்ன சொல்ல வர்றீங்க?”
“இதை நான் நம்பலாமா?”
“நிச்சயமா! இந்த விளக்கை கொண்டு போயிடக் கூடாதுங்கற எண்ணத்துல நான் இதைச் சொல்லலை. நீங்க உயிரோட திரும்பணும். உங்க மகனோடு சேரணும். விளக்கையும் தவறா பயன்படுத்தக் கூடாது. அந்த ஆதங்கத்துலதான் சொல்றேன்.”
பிட்சுவின் பதிலைத் தொடர்ந்து அருணாச்சலாவிடம் அடர்த்தியான மவுனம், தாடையைத் தடவியும், கைகளைப் பிசைந்தும் யோசித்தவர், அரைமனதாக “சரி” என்றார்.
“இப்ப சம்மதிச்சுட்டு நீங்க அப்புறமா மனசு மாறினா அது ஆபத்தாயிடும். எச்சரிக்கை!”
“இல்ல… நான் மாறமாட்டேன். எனக்கு என் மகன் யார் தெரிஞ்சா போதும்.”
“அப்ப இந்த விளக்கு மேலேயே சத்தியம் பண்ணுங்க…”
பிட்சு சத்தியம் கேட்க- அருணாச்சலாவின் கரம் நடுக்கத்துடன் நீண்டு, அந்த விளக்கின் மேல் அமர்ந்தது.
“நல்லது… நீங்க புறப்படுங்க. வழியில் ஒரு மிலிட்டரி மேஜ வழிமறிச்சு உங்க கார்ல இடம் கேட்பார். காரை நிறுத்தாட போயிடுங்க.”
“ஏன்?”
“ஒரு பத்து நாள் அவர் அப்படித்தான் அலைஞ்சாகணும். அனு அவர் தலையெழுத்து. சொன்னதைச் செய்யுங்க”.
“சரி… இந்த விளக்கை குறைந்தபட்சம் நான் பூஜிக்கலாமா?”
“தாராளமா! அப்படித்தான் செய்யணும். விடாமல் துரத்தற உங்க பாவங்களுக்கு அதான் பரிகாரம்.”
“அப்ப நான் வரேன்… வணக்கம்.”
“என் பரிபூரண ஆசிகள். இனி ஒவ்வொரு நாளும் உங்க வரையில் புண்ணிய தினங்களாகட்டும்”.
“நீங்க… உங்க… உங்க மரணம்”.
“அது என்பாடு. இங்கேயே நான் சமாதி ஆயிடுவேன்”
பிட்சுவின் பதில்… அவர் நிதானமாக சொன்ன விதம்… எல்லாமே அருணாச்சலாவை என்னென்னவோ செய்தன.
கம்பெனியில் வெள்ளிக்கிழமைகளில் பூஜை போடுவார்கள் கற்பூரத்தட்டு அவர் எதிரில் வரும்போது, அதை ஒத்திக்கொள்ளக் கூட அவர் பகுத்தறிவு அனுமதித்ததில்லை. அப்படிப்பட்டவர். கண்களில் மெல்ல மெல்லக் கண்ணீரின் சேர்க்கை. நடையிலும் ஒருவித சோர்வு.
‘ஓ. இந்த வாழ்க்கைதான் எத்தனை பெரிய புதிர்’ உலகம் முழுக்க சுற்றிய நானே கூட ஒரு சின்ன கிணற்று தவளைதானே…?”
எத்தனை விஷயங்கள்… எத்தனை விஷயங்கள்… மலைப்போடு, பிரமிப்போடு, மனசு சலவை செய்யப்பட்டது போன்ற தூய்மையோடு முற்றிலும் புதிய அருணாச்சலாவாய் வந்து காரில் ஏறி அமர்ந்தார்.
பிட்சு, கார் வரை வந்து கையசைத்து விடை கொடுத்தார்.
இன்னும் சில நிமிடங்களில் அல்லது மணிகளில் செத்துவிடுவோம் என்று தெரிந்தும் என்ன ஒரு திட சித்தம்!என்னால் முடியுமா?” மனதில் கேள்விகளோடு காரில் அருணாச்சலாவின் பயணம் தொடர்ந்தது.
மதியம் கடந்து மாலைக்குள் சூரியன் பிரவேசித்தபடி இருந்தான். இருந்தும் இருட்டப்போவது போல பனிக்கூடத்தின் ஆக்கிரமிப்பு. வானிலும் மேகங்கள். மழையும் பெய்ய ஆரம்பித்தது.
டிரைவர் மொய்தீன் நிதானமாக காரை நிறுத்தினான். வழியில் ஒரு வளைவு. விரைப்பாக ஒரு மிலிட்டரிக்காரர் உருவம் தெரிந்தது. மேஜர் சந்தர்பால்!
கைகளை நீட்டி காருக்கு லிப்ட் கேட்டுக்கொண்டிருந்தது அவரது கட்டை விரல். மொய்தீன், கார்த்திகேயனைப் பார்த்தான். கார்த்தி, அருணாச்சலாவைப் பார்த்து, “சார் ஒரு மிலிட்டரிக்காரர் லிப்ட் கேட்கறார்” என்றான்.
“நோ… நிக்காம போங்க.”
“சார், அவர் ஒரு ஆபீசர் மாதிரி தெரியுது.”
“சொன்னாக் கேள் கார்த்தி. அவர் ஆபீசர் இல்ல. காரை விடு.”
மொய்தீனும் காரை நிறுத்தாமல் வேகப்படுத்தினான்.
கார், மேஜரைக் கடந்த நிலையில் திரும்பிப் பார்த்தார் அருணாச்சலா. மேஜர் அங்கே இல்லை. கார் சீறியது. திடீரென்று வெயில் அடித்து, புதிய சூழல் தோன்றியது. அது அந்த மலையின் குணம்.
கிட்டத்தட்ட இரண்டு மணி நேர பயணம். வழியில் ஒரு ஊார்வலம் குறுக்கிட்டது.
மொய்தீன் காரை நிறுத்தினான்.
அது ஒரு நினைவு ஊர்வலம்.
விரைப்பாக பல மிவிட்டரிக்காரர்கள் போனார்கள். நடு நாயகமாய் மேஜர் சந்தர்பால் படம், மாலையிடப்பட்டு ஒரு ‘டிரக்’கில் நிறுத்தப்பட்டிருந்தது.
அதைப் பார்த்த கார்த்திக்கு பகீர் என்றது.
“சாரார்…” என்றான். அருணாச்சலா பக்கம் பார்த்து. அவரோ ஆசுவாசத்தோடு நெற்றியைத் தேய்த்தபடி இருந்தார்.
மொய்தீன் மிரண்டு போயிருந்தான்.
“என்ன மாலிக். நாம் இவரை வழியில் உயிரோட பார்த்தோமே?” என்றான்.
“எதுவும் பேசாதே மொய்தீன். காரை ஓட்டு.”
காரும் திரும்பச் சீறியது!
அந்த ஆடுகள் ஒவ்வொன்றும் புசுபுசுவென்று மிக புஷ்டியாக இருந்தன. பதினைந்து வயது சிறுவன் ஒருவன் துரத்தி துரத்தி மேய்த்துக் கொண்டிருந்தான். பிட்சு லீ யுவான் அந்தப் பக்கம் வரவும்,பார்த்து சிரித்தான்.
அவரும் அவனை அருகில் அழைத்தார். அவர் கையில் அந்த விளக்கு இருந்தது. அவன் பார்வை, விளக்கின் மேல் சென்றது.
அவரும் ‘இந்தா’ என்கிற மாதிரி அவனிடம் தந்தார். அவனுக்கு ஒரே மகிழ்ச்சி.
பிட்சு திரும்பி நடந்தார். அவன் அந்த விளக்கோடு சற்று தூரத்தில் இருந்த அவன் வீட்டை நோக்கி ஓடினான்.
வீட்டு வாசலிலேயே புகை பிடித்துக்கொண்டு ஒரு முரட்டு மனிதர்.
அவரைப் பார்க்கவும் அவன் மூச்சிறைத்தான். அவரும் அவன் கை விளக்கைப் பார்த்தார்.
“பிட்சு கொடுத்தார்.”
“ஆமா, பெரிய தங்கப் புதையல் பாரு…? கொண்டா இப்படி”. அவனிடமிருந்து பிடுங்கினார். உற்றுப் பார்த்தார்.
“அந்த ஆள் ஒரு மாயக்காரன். இதையெல்லாம் வெச்சுக்கக் கூடாது. நீ போ” என்றபடியே அந்த விளக்கை வீசி எறிந்தார்.
தாமரை இதழ் போல் குவித்து மூட முடிந்த அந்த ஐம்பொன் விளக்கு வெகுதூரம் பறந்து போய் ஒரு ஒற்றையடிப் பாதை அருகே விழுந்தது.
அந்தப் பாதையின் தொடக்கத்தில் லடாக் மண்ணுக்கே உரிய கலைப் பொருட்களை பிளாட்பாரத்தில் போட்டு விற்கும் வியாபாரி ஒருவன் வந்துகொண்டிருந்தான்.
“போஸ்ட்”
சப்தம் கேட்டு அறைக் கதவைத் திறந்தான். லோகநாதன். தபால்காரர் கையில் கடிதம். கடிதத்தை வாங்கியவனுக்கு ஆச்சரியமாகப் போனது. அருணாச்சலா டிரேடிங் கார்ப்பரேஷனில் இருந்து வந்திருந்தது. பிரித்துப் பார்த்தான். எப்பொழுதோ போட்டிருந்த விண்ணப்பத்துக்கான அழைப்பு! அடி வயிற்றில் குளுகோஸ் ஊருகிற மாதிரி ஒரு சில்லிப்பு.
பத்திரிகையாளனாக வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருக்கும்போது பாதையை மாற்று என்கிற மாதிரி படபடத்தது அந்தக் கடிதம்.
கணக்கு அதிகாரி வேலை.
சம்பளம், சலுகைகள்… எல்லாம் நாலு இலக்கத்தை தாண்டிப் போனது.
வாழ்க்கையே மாறப் போகிறது என்று தர்மன் சொன்னது இதைத்தானா?
உள்ளே ஒரு கேள்வி காத்திருந்து கேட்டது.
தலையைத் துவட்டியபடி ‘ரூம் மேட்’ குமார் உள்ளே நுழைந்தான்.
“என்ன மாப்ள… எங்க இருந்து லெட்டர்?”
அருணாச்சலா டிரேடிங் கார்ப்பரேஷன்ல இருந்து இன்டர்வியூ.
“வாவ்… பெரிய கம்பெனிப்பா அடிசக்கை.”
“நான் எதிர்பார்க்கவே இல்லை.”
“அதுதான் வாழ்க்கை ”
“அப்ப இன்டர்வியூவுக்கு போன்னு சொல்றியா?”
“என்ன இது பைத்தியக்காரத்தனமான கேள்வி? முதல்ல போப்பா.”
“இல்ல… பத்திரிகை வேலைக்கு என்ன பதில் சொல்றதுன்னுதான் குழப்பமா இருக்கு.”
“கதை, கட்டுரை எப்ப வேணா எழுதலாம். ஆனா, இந்த மாதிரி இன்டர்வியூ வரும்போதே பயன்படுத்திக்கணும்.”
“வேலை கிடைக்கணுமே?”
“பாசிட்டிவா சிந்திடா லோகு… எதுலேயும் சந்தேகம்கறது உன் உடன் பிறந்த வியாதியா என்ன?”
குமார் ஒரு இடி இடித்தான். லோகுவும் இன்டர்வியூவுக்கு கிளம்பத் தீர்மானித்தான்.
கடைத்தெரு!
கோவில் மாடுகள் கூட்டமாக மேய்ந்தபடி இருக்சு ஆட்டோக்கள் பாம்பு போல வளைந்து நெளிந்து ஓட- ஏக சந்தடி…
அந்த இக்கட்டிலும் பிளாட்பாரத்தில் பத்து ரூபாய்க்கு மூணு பொருள் என்று துணிமணிகளை விரித்துப் போட்டுக்கொண்டு கடைகள்- நடக்கவே சிரமமாக இருந்தது.
லோகுவும் எரிச்சலுடன் நடந்துகொண்டிருந்தான். ஒரு திபேத்திய கைவினைப் பொருள் வியாபாரியின் கடை, லோகுவை மறித்தது.
உல்லன் சட்டைகள், கம்பளிக் குல்லாய்கள், பலவிதமான விளக்குகள், மாடர்ன் சூட், உலோக பொம்மைகள் என்று ஏகத்துக்கும் பிளாட்பாரத்தில் பரவிக் கிடந்தது.
ஒரு விநாடி அவைகளைக் கவனித்தவனை சுண்டி இழுத்தது.
தேங்கி நின்று பார்த்தவனை கப்பென்று பிடிக்க முனைந்தான் அந்த வியாபாரியும்.
“சாப்… என்னா வேணும்? சொட்டர், குல்லாய் எல்லாம் டெட் சீப்..பாருங்கோ…” என்றான், கடி தமிழில்
லோகு பதில் சொல்லாமல் வரிசையாக ஒவ்வொன்றாக பார்த்தான். அந்த விளக்கு ஒரு மூலையில் கிடந்தது. அது கைக்கு அடக்கமாக தெரிந்தது.
சட்டென்று அதை எடுத்த வியாபாரி, மளமளவென்று அதன் குழிகளை மூடி இருந்த இதழ்களை விரித்தான்.
சின்ன விஷயம்… ஆனால் அதீத வேலைத்திறன்.
“சாப், இது பிட்குஸ் பூஜா லேம்ப். நல்லா இருக்கும். அட் எ டைம்ல எட்டு திரி போட்டு எரிக்கலாம். டெட் சீப் சார்., வாங்குங்கோ… என்றான்.
“விலை எவ்வளவு?”
“ஜஸ்ட் டூ ஹண்ட்ரட்”
“இரு நூறு ரூபாயா… ஆளை விடு.”
ஓடப் பார்த்த லோகுவை தோளைப் பற்றி இழுத்தான்.
“நீங்க கேளுங்கோ சாப்.”
“இல்லய்யா… எனக்கு ஒத்து வராது. ஆளை விடு”.
“அட சும்மா கேளுங்கோ சாப்.”
“ஐம்பது ரூபா… தருவியா?”
அவன் உடனேயே, ‘ஹண்ட்ரட் ரூபீஸ் தாங்கோ சார்’ என்றான்.
“ஐம்பதுக்கு மேல் நயா பைசா தரமாட்டேன்.”
“ஒரு நைன்ட்டியாவது தாங்கோ சார்.”
“அதான் சொன்னேன் ஒத்து வராதுன்னு… ஆளை விடு.”
“சாப்… சாப்…”
அவன் விடவில்லை!
அருணாச்சலா டிரேடிங் கார்ப்பரேஷன்!
குப்தா வந்திருந்தார்.
தடபுடலான வரவேற்பில் அகமகிழ்ந்து பேசிக்கொண்டிருந்தார்.
“இப்ப நினைச்சாலும் ஒரு கனவு மாதிரி இருக்கு குப்தா. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை” என்று ‘லே’வில் பிட்சுவுடன் நேரிட்ட அனுபவத்தை அசை போட்டார் அருணாச்சலா.
“எதுக்கு போனீங்களோ அது முடிஞ்சதா?”- இது குப்தாவின் கேள்வி.
“இல்ல குப்தா… இனிதான் முடியணும். ஆனா ஒண்ணு, சதாசிவம் ஒரு பெரிய கிரிமினல். செத்தும் அவன் புத்தி மாறவேயில்லை.”
“எப்படி?”
“என் கேள்விக்கு பதில் சொல்லாம அந்த விளக்கு மூலமா தன் காரியத்தை சாதிச்சுக்க நெனச்சான்.”
“ஸோ… சதாசிவத்தின் ஆவியோட பேசிட்டீங்கன்னு சொல்லுங்க.”
“ஆமா… அதே நேரம் சந்தேகமாகவும் இருக்கு.”
“சந்தேகமா?”
“ஆமா… நான் கண்ண மூடிக்கிட்டிருந்த நேரத்துல அந்த பிட்சுவே என் கேள்விக்கு பதிலை எழுதி இருப்பாரோன்னு ஒரு சந்தேகம்.”
“சந்தேகம் அங்கேயும் விடலையா?”
“என் காரியம் முழுசா நடக்கலையே? என் மகன் யார்னு தெரியற வரை நான் என்னையே கூட சந்தேகப்பட்டுகிட்டுதான் இருப்பேன்”.
“திருத்த முடியாது… உங்களை.”
“அந்த பிட்சு உயிரோட இருக்காரா, சமாதி ஆயிட்டாரான்னு கூட ஒரு சந்தேகம். என் பி.ஏ.வை அனுப்பி இருக்கேன்.”
“திஸ் இஸ் டூ மச். நான் நம்பினதாலதானே உங்களுக்கே சொன்னேன்”.
“சரி, உண்மைன்னே வெச்சுப்போம். ஆனா, அதோடு என் மகன் என்னை வந்து பார்க்கணுமே?”
“இவ்வளவு தூரம் நடந்திருக்கு இனிதானா நடக்காது? நடக்கும் பாருங்க.”
அப்படி நடந்திட்டா உண்மையா சொல்றேன். நான் ரொம்ப கொடுத்து வெச்சவன்…-
“பை த பை… விளக்கோடு பையன் வந்த பிறகு சத்தியத்தை மீறிடாதீங்க. இந்த மாதிரி விஷயத்துல ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்,”
“இல்ல குப்தா.. நான் ஒரே ஒரு தடவை மீறுவேன்னு மனசுல நினைச்சுகிட்டுத்தான் சத்தியம் செய்துருக்கேன். இது அந்த பிட்சுவுக்குக் கூடத் தெரியாது.”
“அடப்பாவி மனுஷா!”
“ஆமா.. என் சொத்துக்கு ஆசைப்பட்டு அந்த பிட்சு குரூப்பே யாரையாவது விளக்கோட அனுப்பிட்டா என்ன பண்ணுறது?”
“அதனால்…”
“அதைக்கொண்டு-இறந்து போயிட்ட என் வனஜா வையே அந்த விளக்கு மூலமாக கூப்பிடப்போறேன். அவ வந்து சொல்லணும்- விளக்கோட வந்திருக்கிறது என் மகன்தான்னு தட்ஸ் ஆல். அப்புறமா நான் அதை நிச்சயமா வேற எதுக்கும் பயன்படுத்தமாட்டேன்…”
அருணாச்சலா சிகரெட்டைப் புகைத்தபடி சொன்னதில் குப்தாவிடம் ஏராள அதிர்ச்சி
அதேவேளையில் ஜி.எம். ஸ்ரீதரன் உள்ளே நுழைந்தார்.
“என்ன ஸ்ரீதரன்?”
“சாரி பார் த இன்டரப்ஷன் சார். இன்டர்வியூவுக்கு வந்த முந்நூ த்தி சொச்சம் பேர்ல நமக்குத் தேவையான பதினொரு பேரை தேர்வு பண்ணிட்டோம். அப்பாய்ன்மென்ட் ஆர்டரும் ரெடி. அவங்களை நீங்களே பார்த்து ஆர்டரை கொடுத்தா அவங்களும் “ரிச்சா பீல்” பண்ணுவாங்க…”
“வெயிட் பண்ணுங்க. வந்துடுறேன்.”
அருணாச்சலா, குப்தாவைப் பார்த்தார்.
“அப்ப நான் புறப்படுறேன்…”
“நல்லது… எல்லாம் நல்லபடியா நடந்த பிறகு நான் போன் பண்ணுறேன்.”
“பார்த்து… எனக்கென்னவோ நீங்க ஜாக்கிரதையா இருக்கறது நல்லதுன்னு தோணுது…”
“குப்தா, அதுல எப்பவுமே நான் எமன்…”
“உங்க மனைவிகிட்ட பேசிட்டீங்களா?”
“இல்ல. முதல்ல பையன் வரட்டும்.”
“ஓ.கே. ஆல் த பெஸ்ட்!”
குப்தா கை குலுக்கிவிட்டு கிளம்பினார்.
அருணாச்சலாவும் தன் அறையிலிருந்து அந்த அலுவலகத்தின் கூட்ட அரங்கம் நோக்கி நடந்தார்.
தேர்வானவர்கள் உள்ளே காத்திருக்க – பர்சனல் மேனேஜரும், ஜெனரல் மேனேஜரும் இவர்களிடையே கடின உழைப்பு… இன்வால்மென்ட் என்று கதைத்துக்கொண்டிருந்த நிலையில்- அருணாச்சலா நுழையவும் ‘கப்சிப்’.
தேர்வானவர்கள் விரைப்பாக நின்று வணக்கம் செய்தார்கள். அதில் லோகநாதனும் இருந்தான். அவன் தோளில் ஜோல்னா பை.
“சிட்டவுன்…” உட்காரச் சொல்லி கூர்ந்து பார்த்தார். பின்னர் பர்சனல் மேனேஜர் ஆர்டர்களைத் தரவும், வரிசையாக தந்து கை குலுக்கினார்.
லோகநாதன் முறை வந்தது.
ஜோல்னா பையை மேஜை மேல் அவசரமாக வைத்தபடி கை குலுக்கக் கையை நீட்டினான். அவசரப்பட்டு வைத்ததில் உள்ளே இருந்த விளக்கு நழுவி கீழே விழுந்தது.
கை குலுக்க நீட்டிய கையை அப்படியே பின்னுக்கு இழுத்தவன், குனிந்து விளக்கை எடுத்தான்.
படபடப்போடும், விளக்கோடும் அருணாச்சலாவைப் பார்த்தான்.
அருணாச்சலா அப்படியே விக்கித்துப் போயிருந்தார். பார்வையிலும் ஒரு அதீத பளபளப்பு.
“மிஸ்டர் ஸ்ரீதர்… இந்த கேண்டிடேட்டோட என் அறைக்கு வாங்க… ன்றபடியே விறுவிறுவென்று அங்கிருந்து கிளம்பினார்.
யாருக்கும் ஒன்றும் புரியவில்லை!
ஒரு மாதம் சென்றுவிட்டது.
ஒரு கார் தர்மனின் ஆசிரமக் குடிசை முன் வந்து நின்றது. உள்ளிருந்து சூட்டும் கோட்டுமாய் இறங்கினான் லோகநாதன்.
அவனைப் பார்த்து தர்மன் துளியும் ஆச்சரியமே படவில்லை.
“நீங்க சொன்னது போலவே எல்லாம் நடந்துடிச்சு மிஸ்டா தர்மர். நான் இப்ப அநாதை இல்லை. ஒரு கோடீஸ்வரரோட மகன். கேள்விப்பட்டு இருப்பீங்களே…”
லோகநாதன் கேட்க- தர்மன் முகத்தில் இதமான புன்னகை.
“எனக்கு எல்லாமே பெரிய புதிரா இருக்கு. அதே நேரம் எப்படி இவ்வளவு பெரிய பொறுப்பை சுமக்கப் போறேன்னும் தெரியல… உங்ககிட்ட நான் பண்ணின வாக்குவாதங்களை நினைச்சா கொஞ் ம் வெட்கமா கூட இருக்கு…”
“அதெல்லாம் இப்ப எதுக்கு…? ஆமா, அப்பாவோட காரியமெல்லாம் நல்லபடியா முடிஞ்சிச்சா…?”
“ம்..”
“பார்த்து… அந்த விளக்கு இப்ப எங்க இருக்கு?”
“விளக்கு… அதுலதான் என் வாழ்க்கையே திரும்பிச்சு. அப்பாவும் அதை எடுத்துகிட்டுப் போய் என்னவோ பண்ணினாரு. அப்புறமாதான் கை – கால்லாம் இழுத்துகிட்டு கீழே விழுந்தார்.
‘நான் தப்பு பண்ணிட்டேன் வனஜா. என்னை மன்னிச்சிரு’ன்னு எல்லாம் சொல்லி அழுதார். எனக்கு கடைசி வரை புரியலை. அதுக்குப் பிறகு வக்கீலைக் கூப்பிட்டு பேசுகிற வரை நல்லாதான் இருந்தார். வக்கீல் வந்து என்கிட்ட பேசினப்போதான் நான் அவர் மகன் எனகிறதே எனக்குத் தெரியவந்தது. ஆனா, நான் போய் பார்த்தப்போ அப்பா இறந்து போயிட்டார். எப்படி? அந்த விளக்குல அப்படி என்னதான் இருக்கு! உங்களாலயாவது சொல்ல முடியுமா?”
தர்மன் சிரித்தான்.
“தான் அதை இப்ப கொண்டு வந்துருக்கேன், பாக்கறீங்களா?”
எடுத்துக் காட்டினான.
தாமனுக்கு அடுத்த நொடி உடம்பு சிலிர்த்துப் போனது.
“தம்பி அதை அப்படி சாமி காலடியில வை. அது இனி அங்கேயே இருக்கட்டும். உனக்கு வேறு எதுவும் தெரிய வேண்டாம். ஒண்ணு, மட்டும் தெரிஞ்சுக்கோ சில பாவங்கள் எப்பவும் விடாது. அதுக்கு யாரை எப்ப- எப்படி பழிவாங்கணும்னு நல்லா தெரியும், நீ எந்த பாவமும் செய்துடாதே. நான் கூட இனி இந்த மாத்திரீகத்துல் ரொம்ப ஈடுபாடு காட்டப்போறதில்ல. நீ ஒரு கோவில் கட்டு அங்க இந்த சிலையையும், விளக்கையும் வொசு பூஜை பண்ணிகிட்டே என் காலத்தை ஒட்டிடுறேன்…”
“என்ன தர்மன்… விளக்கமா சொல்லுங்க, இந்த விளக்குல அப்படி என்ன இருக்கு?”
“சத்தியம் இருக்கு, தர்மம் இருக்கு. எல்லாத்துக்கும் மேலா உங்க அம்மாவே இதுக்குள்ள இருக்காங்க. இதுக்கு மேல எதையும் கேட்காதே. நான் சொன்னாலும் உனக்கு புரியாது…”
தர்மன் கை கூப்பினான்.
லோகநாதன் அதற்குப் பிறகு எதுவும் பேசவில்லை… எதையும் கேட்கவும் இல்லை!
(முடிந்தது)