விசுவரூபம்..!





வருடம் முன்னூற்று அறுபத்தைந்து நாட்களும் உற்சவம் நடைபெறும் ஒரே இடம் சீரங்கம் அரங்கநாதன் கோவில் ஒன்றாகத்தான் இருக்க முடியும்…
இன்றைக்கு மாசி மகம் திருவிழா ஆரம்பித்து நாலாம் நாள்…ஊரே அரங்கனின் வீதி உலாவுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது…
”பாமா…என்னடி மசமசன்னு இத்தன நாழி பண்ணிண்டு…நாலு புள்ளி வச்சோமா , இரண்டு இழுப்பு இழுத்தோமான்னு இல்லாம…இன்னும் தளி பண்ணி முடியல..வடைக்கு அரச்சுத்தறேன்னு சொல்லிட்டு…திருக்கண்ணமுதுக்கு பால் போறாது..வாங்கிண்டு வாடான்னா இந்த ரங்குடு எங்க போய் தொலஞ்சான்…? எல்லாமே கடைசியில என் தலைலதான் விடியறது…!”
வைதேகிக்கு புலம்ப ஆரம்பிக்கத்தான் தெரியும்…நிறுத்தத் தெரியாது..
“வைதேகி.. நல்ல நாளும் அதுவுமா குழந்தைகளை ஏன் இப்பிடி திட்ற.. நான் போய் வாங்கிண்டு வரமாட்டேனா…?”
கோபாலனுக்கு குழந்தைகளைச் சொன்னால் பொறுக்காது.. அதுவும் குறிப்பாய் பாமா…அப்பா செல்லம்…
அன்றைக்கு வெள்ளி கருட வாகனத்தில் அரங்கன் உலா..நாலு உத்தர வீதியையும் இரண்டு பக்கமும் கோலங்கள் அடைத்துக் கொண்டு , காணக் கண்ணாயிரம் வேண்டும்..
தங்க வாகனத்துக்கு இல்லாத பெருமை இந்த வெள்ளி வாகனத்துக்கு உண்டு..
ஸ்ரீரங்க ஸ்தலமானது சுக்ர ஸ்தலம் என்பதால் இங்கு வெள்ளி உலோகம் மிகவும் விசேஷமானது. இந்த சிறப்பு வாய்ந்தது மாசி கருடன்.
இது வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே வரும் மிக விசேஷமான காட்சி. இந்த வெள்ளி கருட சேவையின் சிறப்பைக் கூறும் ‘ மாசி கருடன் காசியிலும் கிடைக்காது ‘என்ற பழமொழி பழக்கத்தில் உள்ளது.
மூலஸ்தானத்திலிருந்து கிளம்பி அரங்கன் ரெங்கவிலாச மண்டபத்தை அடைந்து, உத்தர வீதி உலா முடிந்து வாகன மண்டபத்தை அடைவது காலம் காலமாய் நடைபெறும் கோலாகல நிகழ்ச்சி.
“அம்மா..கத்தாத..! இதோ முடிஞ்சது…”
அடுத்த வினாடி “ஆ…அம்மா..” என்ற அலறல் சத்தம்..பாமாதான்..!
அதற்குள் வாசலில் பாமாவைச் சுற்றி கூட்டம்.ஒரு இளைஞன் கீழே விழுந்து கிடந்தான். ஒரு பைக்குக்கு அடியில்…
“பாமா..என்னாச்சும்மா…?”
“குனிஞ்சு கோலத்த முடிச்சுட்டு நிமிர்ந்து பாக்கறச்சே கழுத்து செயின இழுக்கப்பாத்தான். ஒரே தள்ளு…!”
இளைஞனுக்கு நாலைந்து தர்ம அடி…
“பாமா..நீயா இவன தள்ளிவிட்ட.? எங்கேந்துடி உனக்கு இந்த தைரியம் வந்தது…? பசு மாதிரி சாதுவா இருந்துண்டு இவ்வளவு பெரிய காரியத்த சாதிச்சுட்டயே…”
அப்பாவுக்கு பெருமை பிடிபடவில்லை..!
பாமாவுக்கே தெரியவில்லை.. அவளுக்குள் இன்னொரு பாமா இருந்திருக்கிறாள்..
தைரியமே உருவாய்…!
பாமாவுக்கு தன்னை ரொம்பவே பிடித்துப் போனது… இனிமேல் பாமா இப்படித்தான் இருக்கப் போகிறாள்…
***
விட்டலாச்சாரி…தலையெல்லாம் மூளை…
கோதைநாயகியின் ஒரே வாரிசு…ஆசார அனுஷ்டானங்களை சிறிதும் விட்டுக் கொடுக்காமல், அம்மா சொல்பேச்சு தட்டாமல் வளர்ந்து நிற்கும் இருபது வயது இளைஞன்…
மாமா கோபாலனின் பெண் பாமாவைக் கரம்பிடிக்கப்போகும் பாக்கியவான்…
“வைதேகி…! இந்த வைகாசில பாமாவுக்கும், சாரிக்கும் மாங்கல்யதாரணம் பண்ணியாகணும்னும்னு அக்கா ஒத்தக்கால்ல நிக்கறாளே…! ஆனி, ஆடி வேண்டாம்..அவன் செப்டம்பர் மாசம் காலேஜுல சேரணும். அதனால..”
“என்னன்னா பேசறேள்..?பாமாவுக்கு இப்பதான் பதினெட்டு முடிஞ்சிருக்கு. கல்யாணத்துக்கு இப்போ என்ன அவசரம் ? சாரி போய் நன்னா படிச்சுட்டு வரட்டுமே…”
“நானா தீர்மானம் பண்ணினேன்..?அக்காவ கேளு…!”
“வைதேகி.. கோபாலன் சொல்றதுதான் சரி.. நான் சாரிய தனியா அமெரிக்கா அனுப்பறதா இல்ல..
போனா பாமாவோட போகட்டும்..இல்லைனா அமெரிக்காவும் வேண்டாம்..ஆஸ்த்ரேலியாவும் வேண்டாம்…!”
“அம்மா…அம்மாஞ்சி அங்க போய் ஒரு வெள்ளக்காரிய மாட்டுப் பொண்ணா கூட்டிட்டு வந்துடுவான்னு அத்த பயப்படறா…!”
“ஆமா..இந்த குடுமியப்பாத்து எந்த வெள்ளக்காரி ஆசப்படுவா..?”
“பாமா.. இப்பல்லாம் அங்க குடுமி தான் ஃபேஷன்! தெரிஞ்சுக்கோ…”
“அப்படின்னா நான் அடுத்த முகூர்த்தத்திலேயே கழுத்த நீட்ட ரெடி…நான் உங்கள யாருக்கோசரமும் விட்டுத்தர மாட்டேன்…!”
***
பாமாவுக்கு சாரியை சின்ன வயசிலேயிருந்தே ரொம்ப பிடிக்கும்..
ஆனால் அவனை கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டுமென்று கனவுகூட கண்டதில்லை.. வளர்ந்தபின் அவன் மேல் ஏதோ ஒரு வித ஈர்ப்பு..? இதுதான் காதல் என்பதா..?
கோபாலனுக்கு முதலில் இந்த யோசனை பிடிக்கவேயில்லை..
குழந்தையிலிருந்தே பாமாவைத் தரையில் கூட நடக்க விடமாட்டார்..
தூக்கிக் கொண்டே திரிவார்..
வளர்ந்தபின் அப்பா கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டவள் தான்.. இன்னமும் விடவில்லை…
முதல்நாள் பள்ளிக்கூடத்தில் குழந்தையை உள்ளே அனுப்பிவிட்டு அழுது கொண்டு நின்ற அம்மாக்கள் கூட்டத்தில் இவர்தான் ஒரே அப்பா…
“பாமாவ அடுத்த தெருவிலதான் கல்யாணம் செஞ்சு குடுக்கப் போறேன்…குழந்தைய பாத்துண்டே இருக்கணும்…”
“ஏன்? வீட்டோட வச்சிண்டு உங்க பொண்ண கொஞ்சிண்டே இருங்கோளேன்…”
அப்புறம்தான் கையில் இருக்கும் வெண்ணெய் கண்ணுக்கு தெரிந்தது..
சாரிக்கு பாமாவைக் கொடுத்து வீட்டோடு மாப்பிள்ளையாக்கிக்கொள்ள வேண்டியதுதானே…!
சாரி அந்தப் பேச்சே கூடாதென்று மறுத்து விட்டான்.. நிச்சயம் மேற்படிப்புக்கு அமெரிக்கா போக தீர்மானித்தும் விட்டான்…
“பாமா.. நீதான் முடிவெடுக்கணும்..உனக்கு சாரி வேணும்னா வைகாசியில கல்யாணம்…!”
“அப்பா.. நான் அவரோட பொறப்பட்டு போகத்தயார்…”
பயந்தாங்கொள்ளி பாமாவா இது…?
***
லேக் ஃபாரஸ்ட்…
இல்லினாயிஸ் மாகாணத்தில் பெயருக்கேற்ப ஒரு குளுமையான , மரங்கள் அடர்ந்த புறநகர் பகுதியில் ஆர்ப்பாட்டமில்லாத அடக்கமான அழகிய வீடு..
மேற்படிப்பை முடித்துவிட்டு ஆபட் (Abbott) நிறுவனத்தின் கிளை அதிகாரியாகப் பொறுப்பேற்று கொண்டுவிட்டார் சாரி..
“பாமா..முதல்ல கார் ஓட்ட கத்துக்கோ..எனக்கு முழுநேரமும் வேலையிருக்கும்.. கார் அவசியமே இல்லை..நீ என்ன எறக்கி விட்டுட்டு எங்க வேணா போலாம்..பாக்க நிறைய இடங்கள் இருக்கே…!”
“உனக்கு போரடிச்சா ஏதாவது கோர்ஸ்ல சேரலாம்…இல்லைனா பக்கத்தில இருக்கே குழந்தைகள் ஹாஸ்பிடல்.அங்க போய் முடிஞச உதவி பண்ணு…”
அவளுக்கு அமெரிக்கா ரொம்பவே பிடித்து போனது. லாண்ட் ஆஃப் ஆப்பர்ச்சுனிட்டிஸ்,,,!
எல்லாவற்றையும் ஒரு கை பார்த்துவிட்டாள்…
***
“கேசவ் இந்த வருஷம் காலேஜ் போய்டுவான்.மாதவனும் வளந்துட்டான்.நான் முழு நேர வேலைக்கு அப்ளை பண்ணியிருக்கேன்…”
“வெரி குட்…எங்க…?”
“இங்க பக்கத்துல தான். நடக்கற தூரம்தான். ஜஸ்ட் ட்வென்ட்டி மினிட்ஸ்!கேஸ் ஸ்டேஷன்ல. காலைல அஞ்சு மணியிலேர்ந்து மத்யானம் மூணு மணி வரைக்கும்தான். “
“கூட யாராவது இருப்பாளா..?”
“நானும் மேனேஜரும்…பயப்பட ஒண்ணுமில்ல…”
“நோ மாம்..நீ அந்த மாதிரி எடத்தில எல்லாம் வேல பாக்கக் கூடாது.. இட்ஸ் வெரி ரிஸ்க்கி… போயும் போயும்…”
“டேய்.. கேசவ்.. எந்த வேலையையும் மட்டமா நெனைக்காத…இங்க நீ நினைக்கிற மாதிரி பயமெல்லாம் இல்ல..செக்யூரிட்டி கூப்பிட்டதும் ஓடி வந்துடுவான்… ஐ வில் பீ ஸேஃப்…!”
“லெட் ஹர் ஹாவ் எ டிஃபரண்ட் எக்ஸ்பீரியன்ஸ்…விடு அவள…போகட்டும்…!”
காலையில் மூணு மணிக்கே எழுந்து சமைத்து வைத்துவிட்டு , கையில் லஞ்ச் பேக் பண்ணிக் கொண்டு கிளம்பி விடுவாள்…
சாரி அவளை இறக்கிவிட்டு வந்துவிடுவார்..வரும்போது நடந்து வந்து விடுவாள்…
புறநகர் பகுதியானதால் கூட்டம் அதிகம் இருக்காது.. ஆனால், கணக்கு பார்த்து, டாலர் நோட்டுக்களை பத்திரமாய் லாக்கரில் பூட்டி வைத்து விட்டு, ரிஜிஸ்ட்டரில் எழுதி முடிக்கும் வரை ஆரம்பத்தில் கொஞ்சம் படபடப்பாக இருந்தது..
***
“ஹாய்.யங் லேடி.ஆர் யூ ஃப்ரம் இண்டியா…? யு லுக் ப்ரெட்டி…?”
“வாட்ஸ் திஸ் ரெட் டாட் ஆன் யுவர்ஃபோர்ஹெட்…? ப்ளட்…?”
“ஒய் டோன்ட் யூ வேர் யுவர் இண்டியன் ட்ரெஸ்..யூ வில் லுக் மோர் ப்யூட்டிஃபுல்…”
முதலில் பேண்ட் சட்டையில் போய்க்கொண்டிருந்தவள் புடவைக்கு மாறிவிட்டாள்.
ஆரம்பத்தில் வாயே திறக்காமாட்டாள்…ஆனால் போகப் போக அவர்களிடம் நெருங்கிய ஒரு நட்பு உருவாகிவிட்டது..
கேஸ் நிரப்பிக்கொண்டு பணம் தராமல் “பை…ஸீ யூ” என்று பைக்கில் பறந்து விடும் இளைஞர்களைப் பார்த்து விரைத்து நிற்பாள்… !
ஆனால் அடுத்த நாளே “சாரி சிஸ்டர்…ஐ வாஸ் ப்ரோக் யெஸ்டர்டே…டேக் யூவர் கேஷ்…”
சரியான பணத்தை எண்ணி கொடுத்துவிட்டு ‘உங்களை சிரமத்தில் ஆழ்த்தியதற்கு வருந்துகிறேன்‘ என்று மரியாதையாய் தெரிவித்து விட்டு போவான்…
இவர்களை எந்தக் கணக்கில் சேர்ப்பது ?
எத்தனை எத்தனை அனுபவங்கள்…
ஆனாலும் மறக்கவே முடியாத ஒன்று…இன்றைக்கு நினைத்தாலும்..!
பாமாவை விசுவருபம் எடுக்க வைத்த நிகழ்ச்சி…
***
“ஹாய் பாம். இன்னிக்கு முகமே சரியில்லையே…ஓ.நெத்தியில பொட்டு இல்ல.உடம்பு சரியில்லையா? ஒய் டோண்ட் யூ டேக் எ டே ஆஃப் ?”
மைக்கேல் அவள் பெறாத பிள்ளை…
இப்போதெல்லாம் அவளை ‘பாம்’ என்று அழைக்க ஆரம்பித்து விட்டார்கள்..
அவள் முகம் கொஞ்சம் வாடியிருந்தாலும் துளைத்தெடுத்து விடுவார்கள்…
“உங்க காதுல டைமண்ட் தானே..? இண்டியன்ஸ் லவ் டையமண்ட்ஸ்…!”
ஒரு நாள் ஜான் அவளைப் பார்த்து கேட்டான்…
பாமா அமெரிக்கா கிளம்புவதற்கு முன்னால் அவளுடைய அத்தை தன் காதில் இருந்த வைரத்தோட்டை கழற்றி அவள் காதில் போட்டு விட்டு, “பாமா..உனக்கு எத்தன சீர் செஞ்சாலும் தகும்.ஆனா எங்கிட்ட குடுக்க ஒண்ணுமேயில்ல.இது பரம்பரையா வந்த தோடு.. உனக்குத்தான்..நீ எப்பவும் கழட்டாம போட்டுக்கோ…!”
பழைய பாமாவாயிருந்தால் “ஆமாம் “என்று சொல்லியிருப்பாள்..
“இல்லியே..இது சிட்டி மார்க்கெட்ல வாங்கினது… பத்து டாலர் சொன்னான்.கடைசில அஞ்சு டாலருக்கு பேரம் பேசி வாங்கிட்டேன்…”
“ஸ்மார்ட் லேடி” என்று சொல்லிக் கொண்டே பைக்கை மிதித்தான். ஆம் பாமா ரொம்பவே மாறிவிட்டாள்…
வயதானவர்கள் சிலர் காரிலிருந்து இறங்க மாட்டார்கள்.. பாமா தான் கேஸ் நிரப்ப வேண்டும்.
ஒருநாள் பெட்ரோல் போட்டதும் காரிலிருந்தவர் டாலர் நோட்டுக்களை தூக்கி அவள்மீது வீசி எறிந்தார் .
ஒரு வினாடி அவமானத்தால் முகம் சிவந்தாள் பாமா…
ஆனால் அவளே எதிர்பாராமல் பின்னால் பைக்கில் வந்த மைக்கேல் வேகமாக அந்த காரின் முன்னே சென்று , வழிமறித்து, “யூ…*******’ ஒரு பெண்ணிடம், அதுவும் உனக்கு உதவி செய்த அயல்நாட்டினரிடம் உன் இனவெறியைக் காட்ட வெட்கமாயில்லை…? மரியாதையாக வெளியே வந்து அவளிடம் மன்னிப்புக் கேள்.. இல்லையானால்…!“
பான்ட் பாக்கெட்டில் கையை விட்டதுமே பயந்தபோய் அந்த முதியவர் கீழே இறங்கி வந்து, “ஐயம் சாரி..”என்று அவசர அவசரமாய் கூறிவிட்டு காரில் ஏறி பறந்து விட்டார்…
“தாங்யூ மைக்கேல்…யூ ஆர் வெரி தாட்ஃபுல்..”
மைக்கேல் ஒரு கறுப்பின இளைஞன்.
தாய் தந்தை யாரென்றே தெரியாமல் அனாதை இல்லத்தில் வளர்ந்தவன்…
பாமாவை ‘மாம்‘ என்றுதான் அழைப்பான்..பாமாவை அம்மாவின் இடத்தில் வைத்து பார்க்கின்ற அவனது அன்பு அவளை நெகிழச்செய்துவிடும்…
***
அன்றைக்கு இரண்டாவது ஷிஃப்டில் வேலைசெய்யும் ஆர்தர் வரவில்லை..
பாமா இரவு பதினோரு மணி வரை இருந்தாக வேண்டிய கட்டாயம்..
“நோ மாம்..நீ போகக் கூடாது..ஆஸ்க் ஹிம் டு ஷட் டவுன் தி டாம் கேஸ் ஸ்டேஷன்.”
கேசவ் அவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு பாமா பார்த்ததே இல்லை..
“கேசவ்.. இன்னிக்கு ஒரு நாள் தானே.! மெமோரியல் டே வீக் எண்ட்.. கூட்டம் நிறைய இருக்கும்… நான் கண்டிப்பா போகணம்…பயப்படாத..”
“கேசவ்.. நான் எட்டு மணிக்கே காரோட வெளில நிக்கறேன்..அம்மா போகட்டும்..!”
“தாங்யூ சாரி…!”
“கேசவ்! நான் ஜாக்கிரதையா இருப்பேன்…டோன்ட் பானிக்..“
அந்த மெமோரியல் டே வீக் எண்ட் அவள் வாழ்விலும் மறக்க முடியாத நாளாக அல்லவா அமைந்துவிட்டது…
***
நன்றாக இருட்டி விட்டது..செம கலெக்க்ஷன்.. பக்கத்தில் இருக்கும் கேளிக்கை விடுதிகளை நோக்கி இளைஞர்களின் ஆரவார படையெடுப்பு..
சாரி சொன்னபடி வெளியே ஒரு ஓரமாய் காதில் இயர் ஃபோனை மாட்டிக் கொண்டு பாட்டை ரசித்தபடி..
“பாமா..ஐ திங் வீ கேன் க்ளோஸ்…பணத்தை எண்ணி லாக்கரில் வைத்து பூட்டி விட்டு கிளம்பலாம்”.
மேனேஜருக்கு ஒரு தொலை பேசி..!
“பாமா..ஐ ஹவ் டு ரஷ் ஹோம்…ஸாரி..சாவிய இன்னிக்கு நீ எடுத்துட்டு போய்டு..பீ கேர் ஃபுல்…!”
பதிலுக்கு கூட காத்திராமல் பறந்துவிட்டார்…
இன்றைக்கு இரண்டாயிரம் டாலருக்கு மேல் இருக்கும்… கணக்கெல்லாம் முடித்து, டாலர் நோட்டுக்களை பெட்டியில் வைத்து பூட்டி, சாவியை பையில் போட்டுக் கொண்டு நிமிர்ந்தவள் தன்முன்னால் நின்ற முகமூடி அணிந்த உருவத்தைப் பார்த்து மிரண்டு போனாள்..ரத்தமெல்லாம் உறைந்து ‘ஆ‘ என்று அலறப்போனவளின் வாயைப்பொத்தினான் பைக்கில் வந்த இளைஞன்..
“கமான்..டோன்ட் வேஸ்ட் மை டைம்…எடு சாவியை…”
சாதாரணமாய் இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் பணத்தை உடனே கொடுத்துவிட அவர்களுக்கு அதிகாரம் உண்டு.. இருநூறு முன்னூறு டாலருக்காக உயிரை விடமுடியுமா?
பாமாவுக்கே இரண்டு தடவை இந்த அனுபவம் ஏற்பட்டு இருக்கிறது..
ஆனால் இன்றைக்கு பாமாவுக்கு இவ்வளவு பெரிய தொகையை விட்டுக் கொடுக்க மனமில்லை..
“நோ..ஐ கான்ட்…!”
அந்த இளைஞன் சடாரென்று கையில் துப்பாக்கியை எடுத்து அவளைக் குறிவைத்து…
“உனக்கு உயிரைவிட பணம்தான் முக்கியம். அதுவும் யாருடையதோ…? இல்லையா? எனிவே..யூ ஹவ் சோஸன் டு டை இன் மை ஹாண்டஸ்…!”
“ஓக்கே..ஓக்கே…டேக் இட்…”
சட்டென்று பையில் கைவிட்டவள் தயாராக வைத்திருந்த பெப்பர் ஸ்ப்ரேயை அவன் கண்களை நோக்கி அடித்தாள்..
நிலைதடுமாறிய இளைஞன் கோபத்தில் சுட்டதில் குறி தவறி குண்டு தோளை சிராய்த்துக் கொண்டு போனது.. ரத்தம் சொட்ட சொட்ட பெரிதாக “Help “என்று அலறினாள்..
சாரி ஒன்றும் புரியாமல் ஓடி வந்தார்..
பின்னால் வந்த நாலைந்து இளைஞர்கள் வேகமாக பைக்கை பின் தொடர்ந்தனர்.
அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் ஒரு திரில்லர் திரைப்படத்தின் காட்சிகளாய் நகர்ந்தன..
ஆம்புலன்ஸ், போலீஸ் , என்கொயரி, முதலுதவி சிகிச்சை என வீடு வந்து சேரும்போது மணி ஒன்றாயிருந்தது…
“மாம்..நோ மோர் கேஸ் ஸ்டேஷன்…! க்விட் யுவர் ப்ளடி ஜாப்…”
கேசவ் கண்டிப்பாய் கூறிவிட்டான்…
காலையில் ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் , இரவு நேரம் கழித்து படுத்தாலும் அசதியில் எல்லோருக்கும் ஆழ்ந்த நித்திரை.
“ஹலோ..பாமா…! ஹாப்பி பர்த்டே..யூ ஆர் ஃபிஃப்டி டுடே..! என்ன..? மறந்துட்டியா..?”
கால் ரங்குடுவிடமிருந்துதான்.
“ஆமாண்டா..சுத்தமா மறந்தே போச்சு…”
“காலம்பற ஆறுமணிக்கெல்லாம் உனக்காக சிறப்பு பூஜை…விசுவரூப தரிசனம். ரொட்டியும், வெண்ணெயும் பிரசாதம்.. பிரமாதம்..!உனக்கு ரொம்ப பிடிக்குமே..! என்ன சத்தத்தையே காணம்…”
ஸ்ரீரங்கம் கோயிலில் காலை 8 மணிக்கு ரங்கனுக்கு கோதுமை ரொட்டி, பச்சைப் பால், வெண்ணைய் பிரசாதம். இது ஸ்ரீரங்கனைத் தன் உயிராகப் பாவித்த துலுக்க நாச்சியார் அவனுக்குப் படைக்கும் திருவமுது. நாச்சியார் வடதேசமல்லவா? அதனால் ரொட்டியும், வெண்ணையும் பாலும் பிரசாதமாயிற்று.
பாமாவுக்காக அவளுடைய அப்பா முன்கூட்டியே சொல்லி வைத்து விடுவார்…
கேசவ் ஃபோனைப் பிடுங்கிக் கொண்டான்…
“மாமா..! இங்க எங்களுக்கும் விசுவரூப தரிசனம் கிடச்சதே…!?”
“என்ன கேசவ்..? தூக்கக் கலக்கமா…?”
“இல்ல மாமா..! நிஜமாலுமே…”
கேசவ் ஆரம்பத்திலிருந்து கதை கதையாய் சொன்னான்.
“பேசினது போதும்.. பசிக்கிறது…!
“பாமா.. இன்னிக்கு பர்த்டே ஸ்பெஷல் என்ன…?”
“ரொட்டியும் வெண்ணையும் தான்…விசுவரூப ஸ்பெஷல்…”