வாழ்க சுதந்திரம்




(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
வானொலி அறிவித்தலைக் கேட்கக் கேட்க அவருக்கு எரிச்சலாக இருந்தது!
ஏறத்தாழ ஐந்து நூற்றாண்டுகளாக அந்நியரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நாடு இன்னமும் தான் பெற்ற சுதந்திரத்தின் பெறுமதியை உணர்ந்து கொள்ள வில்லையா? வேறு எந்த நாட்டிலாவது சுதந்திர தினத் திற்காகத் தேசியக் கொடியை ஏற்றுங்கள் என்று இடை விடாது அறிவிக்கின்றார்களா? இந்த நாட்டில் மட்டும் ஏன் அப்படி நடக்கின்றது? என்ற வினாக்கள் அவர் மன திற் கொக்கியாக எழுந்து நின்று குத்தின.

சுதந்திர தினத்திற்காகத் தேசியக் கொடியை ஏற்றுங் களென்று இடைவிடாது அறிவிப்பதன் மூலம் எம்நாட்டு மக்கள் தமது தேசிய சுதந்திரத்தையும் தேசியக் கொடி யையும் மதிக்கவில்லை என்ற ஏளனமான எண்ணம் அயல் நாடுகளில் ஏற்படாதா? என்றெல்லாம் எண்ணி னார் அவர்.
கடந்த காலச் சம்பவங்கள் அவர் நினைவுக்கு வந்தன. நாட்டில் தேசியக்கொடி எல்லா மக்களுக்கும் பொருத்தமானதில்லையென்று சுந்தரலிங்கம் போன்றார் கருதினார்கள். அதையொட்டி இடைத் தேர்தலும் நடந்தது.
பல வருடங்களாகச் சிறுபான்மையினரான தமிழ் மககள் சுதந்திர தினத்தன்று கறுப்புக் கொடிகளைப் பறக்க விட்டனர். அதன் பிரதிபலிப்பாக வன்முறைகள நடந்தன. உயிரிழப்புக்களும் நேர்ந்தன.
இன்று எல்லா இடங்களிலும் தேசியக் கொடி பறக்க விடப்படுகின்றது. இது பயத்தினாலா? அல்லது தேசபக்தி யினாலா? என்பது அவருக்குப் புரியாததாக இருந்தது!
சரித்திர காலத்திற்கு அவர் மனம் தாவியது.
நாடு சுதந்திரமாக இருக்க வேண்டும். வெள்ளையர் ஆட்சி இந்நாட்டிலிருத்து அகற்றப்பட வேண்டுமென்று வன்னிநாட்டின் பண்டாரவன்னியன் போர்க் கொடி தூக்கினான்.
அதே உணர்வுகளோடுதான் ஊவாவின் கெப்பெற்றிக் பொலதிசாவ போர்முரசு கொட்டினான். கண்டி மன்னன் ஸ்ரீ விக்கிரமராச சிங்கனின் உறவினனான துரைச்சாமி அவனுக்கு ஆதரவாக நின்றான்.
இந்த மாவீரர்கள் அப்போராட்டத்தில் தங்கள் உயிரையே கொடுத்தார்கள்.
அவர்களின் வாரிசுகளாகிய நாம் சுதந்திர தினத் தன்று சுதந்திரக் கொடியை ஏற்றி வைக்கும்படி அறி வுறுத்தப்படுகின்றோம். இந்த நிலை ஏன் என்று கவலைப் பட்டார் அவர்.
‘எந்த நாட்டிலும் சுதந்திரத்தின் விலை இரத்தம் தான்’ என்று யாரோ சொல்லிய கோட்பாடு அவருக்கு ஞாபகத்திற்கு வந்தது.
இந்தியா சுதந்திரமடைந்த பின்பு, தென்கிழக்கு ஆசிய நாடுகளை இன்னமும் தன்பிடியில் வைத்திருக்க முடியாதென்ற எண்ணத்தில் பிரிட்டிஷ்காரன் இலங்கைக்குச் சுதந்திரத்தைக் கொடுத்து விட்டுப் போனான். போராடிப் பெறாத அந்தச் சுதந்திரம் நம்மிடையே பெறுமதியற்றதாகி விட்டதா?
ஆனால் சுதந்திரத்திற்காக இரத்தம் சிந்தாத நாம் சமீப காலத்தில் எவ்வளவு இரத்தம் சிந்தியிருப்போம். சிங்கனவர், தமிழர், முஸ்லிம்கள் என்ற பேதமின்றி எல் லாரது இரத்தமுமே அவமாகச் சிந்தப்படுகின்றது. இந்த உதிர ஆறு நம் சுதந்திரத்திற்கு விலை இல்லையா?
ஆம். இலங்கை மக்களாகிய நாம் முன்னர் கொடுக்கா விட்டாலும், சுதந்திரத்தின் விலையான இரத்தத்தை இன்று அளவுக்கதிகமாகவே கொடுத்து விட்டோம். அதன் பெறுமதியை உணர்ந்து கொண்ட நாம், வரும் காலத்திலாவது சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்ற பேதமின்றி இலங்கையர் என்ற உணர்வோடு சுபீட்ச மாக வாழுவோம் என்று பிரார்த்தித்தபடியே தன் வீட்டுக்கு முன்னால் உயர்ந்த கம்பத்தில் சுதந்திரக் கொடியை ஏற்றி வைத்தார் அவர்.
வாழ்க தாய்த் திருநாடு என்று அவர் மனம் உணர்வு பொங்கக் கூறியது. தாய்த் திருநாடு வாழ சமாதானம் பிறக்கட்டும் என்று அவர் உள்ளம் பிரார்த்தித்தது.
– சுதந்திர தினமலர் 93
– ஒரு காவியம் நிறைவு பெறுகின்றது (ஐம்பது சிறுகதைகள்), முதற் பதிப்பு ஒக்டோபர் 1996, மித்ர வெளியீடு, சென்னை