வாழும் பேய்கள்





(1976ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மேற்குத் தொடர்ச்சி மலையின் நெற்றிக்குத் திலகமிட்டது போல… சூரியன் ஜொலித்துக் கொண்டிருந்தது. மேல்திசை அடிவானம்,தனது நீல நிறத்தையிழந்து, செஞ்சாயம் பூசிக்கொண்டு மொடாக்குடியனின் கண்போலச் சிவந்து கிடந்தது. பறவையினங்கள் ஓய்வு தேடி, வாழ்வின் சுவையான ஆனந்தக் கீதம்பாடி, தத்தம் கூடுகளை நோக்கி வந்துகொண்டிருந்தன.
அந்த மாலை மயங்கிய நேரத்தில்தான், பழனிச்சாமி சைக்கிளில் மனமின்றி புறப்பட முயற்சித்துக்கொண்டிருந்தான். பலசரக்குக்கடை முதலாளி பரமசிவம் எச்சரிப்பதுபோல உத்தரவிட்டான். போக மறுத்துத் தயங்கிய பழனிச்சாமியை மிரட்டி, அன்பு காட்டி மயக்கிவிட்டவராயிற்றே!
”அடேய் பழனி, சீக்கிரமாப் போய்… ஒரு நொடியிலே வந்து சேரு… விடிஞ்சா நல்ல நாளு ஏவாரம். மூணாங்கிழமை ஏவாரம். நீயில்லாமெ ஒண்ணும் நடக்காது. போன உடனே… ரெண்டு கடலெண்ணை டின்னை வாங்கி சைக்கிள்லே கட்டிக்கிட்டு காத்தா பறந்து வந்துரணும்.”
‘சரி…’ என்பது போல் தலையாட்டினான். அவன் மனதுக்குள் பயந்தவாறும், திட்டியவாறும் முணுமுணுத்தான். வெறுப்பின் அலை பாயும் கண்கள், பரமசிவத்தின் முகத்தில் நிலைத்திருந்தன -அவர் கண்களும் முகமும் அன்பில் மழையின் மேகமாகக் கனிந்திருந்தன. கெஞ்சுவது போலச் சொன்னார்.
“அப்பா பழனி… சினிமா பாத்தேன் -இல்லே -இருட்டுலே பயமாயிருந்துச்சு,அப்படி இப்படின்னு ஏதாச்சும் சொல்லிக்கிட்டு ராத்தங்கியிராதேப்பா… காலை ஏவாரத்துக்கு எண்ணையும் வந்தாகணும்,நீயும் இருந்தாகணும். நீயில்லீன்னா எனக்குக் கையும் ஓடாது, காலும் ஓடாது”.
‘ஐஸ் வைக்கிறான், ஐஸ் வைக்கிறான்’ என எரிச்சலுடன் பழனி நினைத்துக்கொண்டான். பரமசிவம், இன்னும் ஏதேதோ அக்கறையும், கரிசனமுமாகச் சொல்கிறார். பணத்தை எண்ணித் தருகிறார். பழனி அதை வாங்கி டவுசரின் வலது பைக்குள் வைத்து, அது எம்பிக் கீழே விழுந்துவிடாமலிருக்க ஒரு ‘பின்’னையும் குத்திக் கொண்டான்.
“கோயல்லே ரெண்டு டின்களையும் நல்லாக் கட்டிக்கோ… போனோம் வந்தோம்னு ‘பொட்’டுன்னு வந்து சேரணும்ப்பா. ராச்சாப்பாட்டுக்கு இங்கே வந்துரணும் என்ன… சொல்றது வௌங்குதா?” என்று பரிவுடன் கூறிய பரமசிவம், வெறுப்பும் மிரட்சியுமாக மருண்டு நின்ற பழனியிடம், கரகரத்த குரலினை மாற்றி இறுக்கிக் கொண்டு மிரட்டினார்.
“நா இம்புட்டுச் சொல்லியும் நீ வராமெயிருந்தே- காலையிலே மூணாங்கிழமை ஏவாரத்தைக் கெடுத்தே – அம்புட்டுத்தான்- ஒன்னை நாலு ‘இழுப்பு இழுத்து, ‘போடா நாயே’ன்னு கடையெவுட்டே வெரட்டியடிச்சுப்போடுவேன்… பாத்துக்கோ.”
பரமசிவத்தின் சிவந்து இடுங்கிய கண்கள், ஆத்திரத்தில் மேலும் இடுங்கிப் போய், நாகப்பாம்பின் கண்போலப் பயமுறுத்தின.
பழனி, உண்மையில் கிடுகிடுத்துப் போனான்.
கொஞ்சம் அசந்தா… வேலையும் போயிடும்… சோறும் போயிடும். ஜாக்கிரதை உணர்வும், அவசரமாகத் திரும்பிவிட வேண்டும் என்ற துடிப்பும் உருவான அதே சமயத்தில்… மனதில் அடித்தளத்தில் அச்ச உணர்வு மெள்ளத் தலைகாட்டி… அவனை நடுங்கவைத்தது. பரமசிவம் இன்னும் கத்திக்கொண்டேயிருக்கிறார். சைக்கிள் பெடலை மிதித்து, உடலின் பாரத்தை அதில் இறக்கிச்சீட்டில் ஏறி உட்கார்ந்து சற்று தூரம் வந்த பின்னும்- “சீக்கிரம்… சட்டுன்னு வந்துடு… கீழே போட்டுடாதே… நாளை ஏவாரம்… நல்ல நாள் ஏவாரம்…மறந்துடாதே” என்ற துண்டு துக்காணியான எச்சரிக்கைக் குரல் துரத்தி வந்தன.
வெயிலுமில்லை, இருட்டவுமில்லை; ரெண்டுக்கும் இடைப்பட்ட இந்த நேரத்தில்,சாம்பல் நிற வெளிச்சம் வானத்தில் ஒளிப்பிரதிபலிப்பாகப் பரவி நின்றது. ஆனால் அந்த ‘அற்பாயுசு’ வெளிச்சத்தையும் விழுங்க, இரவின் இருள் கரங்கள் பேராசையுடன் நீண்டு வந்தது.பழனி, வேக வேகமாக சைக்கிளை மிதித்தான். இளமை கொஞ்சும் முகத்தில் வேர்வை அரும்பி பிசுபிசுத்தது. உதட்டின்மேல் ‘பொசு பொசு ‘வென வளர்ந்திருந்த பூனை ரோமங்களில், வேர்வை துளிர்த்து நின்றன. புரட்டாசி மாதத்துக்கே உரிய வடமேற்குப் பருவக்காற்று ஓங்காரமாக வீசியடித்து, மேற்கு நோக்கி வந்து கொண்டிருந்த பழனிக்கு எதிர்ப்பு தெரிவித்து… சவால்விட்டது.
‘சே… எதுர் காத்தாயிருக்கே’ என்ற முணுமுணுப்புடன் சீட்டைவிட்டு எழுந்து நின்றவாறே – வானுக்கும் பெடலுக்குமாய் ஊஞ்சலாடுவதுபோல மிதித்தான். ஸிலாக் ஸர்ட்டு காற்றுக்குப் புடைத்தது. பலசரக்குக் கடைக்கேயுரிய விதத்தில் பலவிதமான கறையும் அழுக்குமாகச் சேர்ந்த டவுசர், கனத்து நசநசத்தது. அவனது பக்குவமற்ற மனதில்… முதலாளியின் நாகப்பாம்பின் கூர்மையான கண்கள் தோன்றி அச்சுறுத்திக்கொண்டேயிருந்தன. வேகமாக இருட்டியது. இருள் பரவப் பரவ, பழனியின் நெஞ்சில் இனம் விளங்காத அச்சம் தலைதூக்கி நடுக்கியது. ‘ஹே…நா எதுக்குப் பயப்படணும்’ என்று குழந்தைத்தனமான வீறாப்பும் மனதில் எழுந்தது. ஆனால், அது குளத்து நீரின் நிச்சலனம்போல நிச்சயமற்றதுதான். சிறு அசைவு வந்தாலும் போதும், சலனம் வந்துவிடும்.
கறுப்புத்துணிபோல இருள் பூமியைப் போர்த்தி மூடி விகாரப்படுத்திவிட்டது. பழனி வேக வேகமாகப் பெடலை அழுத்தினான். இருட்டின் அடர்த்தியால் எதிரில் வரும் சைக்கிள்கள், மனிதர்கள்கூட தெரிய மறுக்கின்றனர். அந்த இருட்டில், தூரத்தில் தெரியும் கிராமங்களின் தெரு விளக்கின் ‘மினுக்’கொளி, ஏதோ கொடிய மிருகங்களின் பசிமிக்க கண்கள் போல அச்சுறுத்தியது. ‘பயந்துவிடக்கூடாது’ என்ற தன்னுணர்வின் காரணமாக, மன ஓட்டத்தின் திசையை வேறு பக்கமாக செயற்கையாகத் திருப்பினான். ஆனாலும் பாழாய்ப்போகிற இந்த நினைப்பு… சுற்றிச்சுற்றி பழைய இடத்திலேயே வந்து நின்றது. ‘இருட்டு… பேய்… பூதம்னா என்ன…? பிசாசுங்கிறது எப்படி இருக்கும்…? சுடுகாடு…’ பழனியின் மனம் வலையில் பட்ட புறாவின் சிறகுபோல, படபடத்தது.
‘ஐயோ…இந்த நினைப்பு தொலைஞ்சு போகாதா’ என்று சள்ளைப்பட்டுக்கொண்டான். எண்ணங்களைப் பலவந்தமாக வேறு திசையில் திருப்பினான். இருபதுக்கும், பதினைந்துக்கும் இடைப்பட்ட வயது கொண்ட அவன், வயதுக்கு மீறிய உடல் வளர்ச்சியும், உடலுக்கு எதிரான மன வளர்ச்சி இன்மையுமாக, முரண்பட்ட பக்குவ நிலையில்தான் இருந்தான்.
இந்தச் சின்னஞ்சிறு வயதிலேயே, வாழ்க்கையின் இராட்சஸக் கரங்களினால், வேண்டுமென்கிற அளவுக்குக் கசக்கிப் பிழியப்பட்டு விட்டான்.சாதாரண விவசாயக் குடும்பத்தின் முதல் வாரிசு. தகப்பனார் உலக வாழ்க்கையிலிருந்து விடைபெற்று மண்ணாகிப்போனார். பெற்றவளுடன், தம்பிமார்கள் மூவர். அதுவும் நண்டும் நசுக்குமாக. உண்ணத் தெரியும் அதுகளுக்கு; உழைக்க முடியாது. பெற்றவள், வாழ்வின் பிறவிப்பயனே இதுதான் என்பதுபோல. அன்றாடம் கொத்து வேலைக்குப் போவாள்.கூலியோ ஒருபடி கம்பு. அது சோத்துக்கே பத்தாது. மத்ததுக்கு?
குழம்புக்கு, புள்ளைத் தின்பண்டத்துக்கு, தலைக்கு எண்ணைக்கு – துணிமணிக்கு… மற்றதுக்கெல்லாம் என்ன செய்றது?
இந்தக் கேள்விக்குறிகளின் வளைவுகளை நிமிர்த்தக்கூடிய வலிமை, அந்த ஏழைத் தாயிடம் இருக்க முடியாதே! பலநாள் அவள் பட்டினியின் ‘சொர்க்கத்தில்’ எரிந்தது மிகச் சாதாரணம். கசப்பே வாழ்க்கை என்று, சகிப்பே உருவாக அந்த விதவைத் தாய். துன்பங்களைத் தின்று துயரங்களை, பருகியே ஜீவிக்கும் கொடுமை, மூத்த மகனாகப் பிறந்த ‘பாவி’ பழனியின் மனதை உறுத்தத்தான் செய்தது.தானாவது கூலி வேலைக்குப் போகலாம் என்று துடித்தாலும், இவ்வளவு ‘சின்னப் பையனை’ யார் வேலைக்கு அனுமதிப்பார்கள்! சின்னப் பையன்கள் நெஞ்சில் பெரும்பிரச்னைகள்- கவலைகள் – பாறாங்கல்லாய் அழுத்துவதை யாராவது கண்டார்களா, கவனித்தார்களா?
கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தான். தாயின் துன்பப் பாரங்களைத் தனது தலைக்கு மாற்றிக்கொள்ள முடியாவிட்டாலும், தானே பாரமாய் உட்கார்ந்திருப்பதையாவது தவிர்க்கலாமே என்று நினைத்தான். தாயைப் பிரிவது கஷ்டமாக இருந்தது.
எங்கெங்கோ சுற்றியலைந்தான். வெற்று வயிறு பற்றிய நெருப்பாக எரிய, நட்டநடு வீதியின் வெட்ட வெளியில் தூங்கிக் கிடந்த இரவுகள்,பல. தாயின் நினைவில்… தம்பிகளின் பிரிவில் மனம் கசிந்து அழுதது. வயிறும், வாழ்க்கையும் துரத்தியது. ஈவு இரக்கமற்ற இந்த வாழ்க்கையின் ராட்சஸக் கால்களின் உதைபட்ட பந்தாக ஓடித்திரிந்து, கடைசியில் பரமசிவம் கடையில் தஞ்சமடைந்தான்.
“ஒனக்கும் ஆதரவில்லே… எனக்கும் ஒரு ஆள் கடைக்கு வேணும். நம்ம வூட்டிலே சோத்தைத் துன்னுக்கோ… துணிமணி ஏதோ என்னாலே ஏண்டதெ(இயன்றதை) எடுத்துத் தாரேன். மாசம் பானைஞ்சு ரூவாயும் தர்ரேன். என்ன சொல்றே?” என்று பரமசிவம் கண்ணை உருட்டி, மிரட்டுவது போன்ற தொனியில் சம்மதம் கேட்டபோது, பழனிக்கு சொர்க்கமே தனது இறுகிய கதவுகளை அகலத் திறந்து, முகம் மலர வரவேற்பதுபோல இருந்தது. அப்படியொரு புளகாங்கிதம்.
இதோ… அதே கடையில் இரண்டு வருடத்துக்கு மேலே காலத்தை ஓட்டியாகிவிட்டது. அம்மாவுக்குப் போன மாதம்கூட, ஒரு அறுபது ரூபாய் அனுப்பி வைத்தான்.
ஆ.. அந்த அறுபது ரூபாய் அம்மாவை எப்படி ஆனந்தமடைய வைத்திருக்கும்! பாலைவனத்து எண்ணத்தின் உக்கிரத்திலே காய்ந்து கிடந்தவனுக்கு, ஒரு கிளாஸ் குளிர்ந்த நீர் கிடைத்ததுபோல அம்மா களித்திருப்பாள்.
நான் ‘கோவிச்சுக்கிட்டு ஓடிப்போனபோது, கண்ணீர் விட்டுப் புலம்பியிருப்பாள். ‘எனக்கு வந்த துன்பம் போதாதுன்னு இவன் வேறெ நெஞ்சுலே நெருப்பள்ளிக் கொட்டிட்டுப் போய்ட்டானே என்று அழுதிருப்பாள். ஆனால் இன்று, இந்த அறுபது ரூபாயைக் கண்டு பெருமையில் பூரித்திருப்பாள்.
‘எம் மகன்… தங்க மகன்… இம்புட்டு சின்ன வயசுலே, எம்புட்டு அக்கறை’ என்று என்னைப்பற்றிப் புகழ்ந்திருப்பாள்…
இந்தக் கற்பனையே பழனியின் மனசுக்கு எத்தனை இதமாக இருக்கிறது!
சைக்கிள், இருளையும் காற்றையும் ஊடுருவிப் பாய்ந்து முன்னேறிக்கொண்டிருந்தது. கேரியரில் கட்டியிருந்த வெற்று டின் இரண்டும் ‘கடகட… கடகட… ‘ என்று ஒலி எழுப்பி. இதோ விழுந்து விடுவேன்… விழப்போகிறேன்’ என மிரட்டியது. அந்த ஒலியே ஏதோ பயமுறுத்தல் போன்ற ஓர் உணர்ச்சியாய் அலைமோதியது.
ஏதோ ஓர் ஊரைக் கடந்து சென்றது சைக்கிள். சைக்கிள்களும், மனிதர்களும், ஏகதேசமாக ஒருசில லாரிகளும் எதிரில் தன்பட்டுக்கொண்டேயிருந்ததால், பயம் தெரியவில்லை. இருந்தாலும்… பன்னிரண்டு மைல் பயணம்… இருட்டு திரும்ப வரவேண்டும்… இதையெல்லாம் நினைக்கும்போது, நெஞ்சில் ஒரு மர்மமான அச்சுறுத்தல் ஏற்படவே செய்தது.
இதே பாதையில் பல தடவை போய் வந்திருக்கிறான். ஆனால் பகலில்தான். இந்தத் தடவைதான் இரவில் வரவேண்டியதாற்று. போன வாரச் சந்தையில் கடலெண்ணை டின் தூக்கிவரவில்லை. ஆனால், நாளை நல்ல நாள் வியாபாரம். புரட்டாசி மாதத்து மூணாவது சனிக்கிழமை. விசேஷமான நாள். ஆகவே வியாபாரம் வழக்கத்திற்கு விரோதமாக ‘ஓகோ’வென்றிருக்கும். கொழுத்த லாபம் கிடைக்கும். அதனால்தான் பரமசிவம் அத்தனை ஆவல் கொண்டு,பரபரப்புடன், பழனியை மிரட்டியும் அனுப்பிருக்கிறார்.
பழனி இதையெல்லாம் நினைக்கும்போது, மனம் கொதித்தது. ‘சே! பேராசைக்காரப் பயல்! பேய் மாதிரி கொழுத்திருக்கான். நல்ல நாள் ஏவாரம்னா, அவன் லாபம் அள்ளிக் கொட்டுவான். எனக்கென்ன இருக்கு? எப்பவும் உள்ள சம்பளம்தானே! ஆத்து நிறைய தண்ணி போனாலும் நாய் நக்கித்தானே குடிக்கும்? இவன் பேயா கொழுக்குறதுக்காக நா… நாயா மிதிக்க வேண்டியிருக்க. ராவுநேரம். ஒத்தையிலே போறோம். பேயடிச்சுச் செத்தாலும் பெரட்டிப் பாக்க நாதியில்லே.’
இன்னும் ஏழு மைல். இருட்டு, கறுப்பு மையாக அப்பிக் கொண்டிருந்தது. இன்னும் ரெண்டு மைலில் ஓர் ஆலமரம் இருக்கிறது. பின்னிப் பின்னிக் கிளைகள் அடர்ந்து இருண்டு கிடக்கும். பகலில் பார்த்தாலே, ஏதோ மர்மத்தை – பயங்கரத்தை – உட்கொண்டிருப்பது போல அவ்வளவு அடர்த்தியாக சடைவிரித்து பூதாகாரமாகத் தோன்றும். அந்த ஆலமரத்தடியில்தான் சுடுகாடு. அதில் பிணங்கள் எரிப்பதையும், புதைப்பதையும், பல தடவை இவனே கண்ணாரப் பார்த்திருக்கிறான்.
‘பறவைகள்கூட தூங்குற நேரத்துலே… நா… பறப்பெடுத்துப் போய் திரியுறேன்… ஆந்தை மாதிரி! அந்த பறவைகள் செஞ்ச புண்ணியம்கூட நாஞ் செய்யலே போலும்! அதான் அவைகளுக்கிருக்கிற சுதந்திரமும், ஓய்வும் நமக்குக் கிடைக்கலே…’
சோகமான எண்ணங்கள் மூளையைச் சுற்றி, நெஞ்சில் ஒருவித துன்பமான வேதனையை ஏற்படுத்தியது.
ஆயிற்று. அந்தப் பெரிய நகரத்தின் ட்யூப் லைட்களின் வரிசையை அடைந்தாயிற்று. எண்ணை டின்னும் வாங்கியாயிற்று. சைக்கிளில் இறுக்கிக் கட்டி, ஸ்டாண்டை எடுக்கும்போது, சைக்கிள் பாரமாக இருந்தது. ஏதோ செக்கிழுப்பதுபோலக் கடினமாக இருந்தது. சைக்கிளின் பாரத்தைத் தனது வலது தோளில் சாய்த்துக் கொண்டு உருட்டினான். மணி என்ன இருக்கும்?
ஒரு கடையில் பார்த்தான். ஒன்பதரை. இந்நேரம் கிராமங்கள் அடங்கியிருக்கும். சாலைகளில் போக்குவாத்தும், மனித நடமாட்டமும் குறைந்துவிட்டது. ஓர் ஓட்டலில் தண்ணீரைக் குடித்தான்.ஒரு சாயா வாங்கிப் பருகினான். லேசாக வாடைக்காற்று வீச ஆரம்பித்து விட்டது. சைக்கிளை எடுத்தான். டைனமோவின் ஒளி, டியூப் லைட்’ வெளிச்சத்தில் அமிழ்ந்தது. வரும்போதிருந்ததைவிட மிதிக்க சிக்கலாக இருந்தது. லோடு வண்டி என்பதால், ரொம்பச் சிரமப்பட்டு மூச்சுப் பிடித்து மிதித்தான்.
இன்னும் பன்னிரண்டு மைல். ஊரடங்கிய நேரம். பயமுறுத்தும் கும்மிருட்டு… ரோட்டில் ஆளரவமும் வடிந்துவிட்டது. நகரத்தைக் கடந்தவுடன், மூளையில் சிந்தனைகள் மொய்த்தன. இருட்டைப் பற்றி… பூதத்தைப்பற்றி… பேயைப்பற்றி..
அவன் மனம் நடுங்கியது. அந்த நினைப்புகளை விரட்டிவிட முயற்சித்தான். ஆனாலும் முடியவில்லை. சுற்றிச் சுற்றி அதே நினைவுகள் வட்டமிட்டன.
சின்ன வயதில்… தெருவில் குழந்தைகளுடன் விளையாடிய சமயத்தில் கேட்ட பேய்க் கதைகள்… பெரியவர்கள் பேச்சில், பேயடித்து மனிதர்கள் இறந்த கதைகள்… அப்படி இறந்த மனிதர்கள் ரத்தம் ரத்தமாகக் கக்கி, முதுகில் ராட்சஸக் கரத்தின் தடம் பதிந்த கதைகள்… எல்லாம் பழனியின் மூளையைச் சுற்றி… நெஞ்சைத் திடுக்கிட வைத்தது.
சைக்கிளை மிதித்தான். பெடலைத் தன் வசமின்றியே உதைத்தான். சக்கரங்கள் உருண்டன. சாலையின் இருமருங்கிலும் உள்ள குட்டி மரங்கள்… குட்டிப் பிசாசுகள்போலப் பின்னோக்கி ஓடிற்று.முன்னால் விரித்த கறுப்புத் துணியாக நீண்டு பெருகும் தார் ரோட்டைக் கூர்மையாகப் பார்த்தபடியிருந்தாலும்… சிந்தனை, கட்டறுந்த கன்றுக்குட்டிபோல எங்கெங்கோ திரிந்தன. பேய்கள்… பேயடிச்சு செத்த மனுஷங்க… ரத்தம் கக்கி, ‘முதுகிலே கையோட அஞ்சு விரலும் அப்படியே பதிஞ்சிருந்ததை எங்கண்ணாலே பார்த்தேன்’ போன்ற உரையாடல்கள்…
பழனியின் உள்நரம்புகள் பூராவும் சிலிர்த்தன. அச்சத்தில், அந்த நினைவுகளின் விசித்திர அதிர்ச்சியில், நிலைகுலைந்தான். உள்ளங்கை வேர்த்து… ஆண்டில் பாரிலிருந்து வழுக்குவது போன்ற பிரமை! சிறுசிறு அரவமும், அவனைப் பெரிதாகப் பயமுறுத்தியது.
ஏனோ அம்மாவையும், தம்பிகளையும் நினைத்துக் கொண்டான் – ஏதோ மரண வாசலில் நிற்பவனைப்போல!
யாரோ தன்னை ரகசியமாகத் தொடர்ந்து வருவதுபோன்ற ஒரு பிரமை! பிரமையை உண்மையென நம்பி, ‘விசுக்’கெனத் திரும்பினான். எங்கும் இருட்டு; சூழ்ந்த வெறுமை; மனித வாடையேயில்லாத மாய லோகத்தில், தான்மட்டும் சிக்கிக்கொண்டது போன்ற மனப்பிராந்தி! அந்த அகாலவேளையில், எங்கோ ஒரு கொடூரமான அலறல்! அந்த ஆந்தையின் அலறல், அவன் இதயத்தை ஊடுருவி, உணர்வில் கலந்து… ஒவ்வொரு ரோமக் கண்ணும் சிலிர்த்து அடங்கின. மனசில் ஐஸ்கட்டி வைத்ததுபோன்ற புல்லரிப்பு! தனது கடை முதலாளி பரமசிவத்தை நினைத்துப்பார்த்தான்.
‘பேராசைப் பேய்!” என்று திட்டினான். தனது திட்டே தன்னைப் பயமுறுத்தும் வார்த்தையாக இருப்பதை உணர்ந்து திடுக்கிட்டான்.
‘ஐயோ…நா எப்படித்தான் போய்ச் சேர்ரது! பேசாமே இந்த ரோட்லேயே படுத்துட்டா என்ன! யாராவது சைக்கிளையும், எண்ணெய் டின்னையும் தூக்கிட்டுப் போய்ட்டா என்ன செய்றது? முதலாளி…நம்பளைக் கொன்னு ரத்தத்தைக் குடிச்சிடுவானே.’
அவனது மனம், முன்னும் பின்னும் ஊசலாடியது. பயத்தில் ரத்தமே உறைந்து, இறுகிப் போய்விடும்போல இருந்தது.
இன்னும் சற்று தூரத்தில்… அதோ… ஆலமரம்… வானுக்கும் பூமிக்குமாய் உயர்ந்து, பேயாய் தலைவிரித்துக் கிடக்கும் இருட்டு மரம்… அருகாமையில்தான் சுடுகாடு… சின்ன வயதில் சொந்த ஊரில் வாளிக் கயிறைக் கூரை முகட்டில் கட்டி, அதில் தொங்கிய ஒரு பிணத்தை – பிதுங்கிய விழிகளும், இளித்த செத்த பற்களும்… விறைத்த உடலுமாகப் பார்த்த கோரமான கிழவனின் சவத்தை, அறிவின் அனுமதியின்றியே மனம் நினைத்தது. உடல் அச்சத்தால் வெடவெடத்தது. தனது முன் ஒவ்வொன்றும் புரண்டு ஓடுவது போலவும்…எதிரில் உள்ள குட்டி மரங்கள் யாவும் வானுக்கும் பூமிக்குமாகக் குதித்தவாறே, தன்னைச் சுற்றி வளைக்க நெருங்குவது போன்ற ஒரு பிரமை. ‘ஐயோ… நா உருப்படியா வூடுபோய்ச் சேர மாட்டேனோ…’ உதடுகள் வறண்டு காய்ந்தன. மனம் நடுங்கியது.
‘எதுக்காக சுடுகாட்டுக்கு மட்டும் விசேஷமாகப் பயப்படணும்? வேறே எத்தனையோ காடுகளைப்போல, சுடுகாடும் மண்ணுதானே! கழுதையோ நாயோ செத்தா பெதைக்கிறோம்… அதுகளுக்கெல்லாம் பயப்படறதுல்லியே! ஏன், இந்த செத்த மனுஷனுக்கு மட்டும் பயப்படணும்? ‘ஆவி…’ ‘பேய்… அது இதுன்னு கதை பேசுகிற மனிதப் பேய்கள்தான் இதுக்குக் காரணமா? செத்த மனுஷங்களைப் பத்தி, உயிருள்ள மனுசங்க பேசுற கதைகள்தான் செத்தவங்களையும் பேயாக்குது.உயிருள்ளவன் மட்டும் மனுசத்தனத்துடனா இருக்கான்? இவனும் பேய்தானே!’
இப்படியெல்லாம் பழனிக்கு சிந்தனை ஓடியது. மனதில் நிழலாடும் பீதிக்கு, இது ஒரு வடிகாலாயிருக்கட்டுமே! ஆனால், அதுவும் நிலைக்கவில்லை…
இதோ ஆலமரம்!… அருகாமையில் சுடுகாடு-அன்று எரிந்து கொண்டிருந்த ஒரு சவம்… ‘நிராசையுடன் சாகிறவர்கள்தான் பிசாசாக மாறுகிறர்கள்.’ எப்போதோ காதில் விழுந்த இந்த ‘உண்மை’ இப்போது நினைவுக்கு வருகின்றது. ‘நான் செத்தாலும் பேயாகத்தான் மாறுவேனோ? சே, இதென்ன நினைப்பு! நா எதுக்கு சாவணும்?’
சைக்கிள் உருண்டது. கைப்பிடி… வியர்வை நசநசப்பில் நழுவப்போவது போன்ற பயம். கால்கள், மிதிக்க மறுக்க முயற்சிப்பது போன்ற ஒரு நினைவு… தனது பிடரிக்குப் பின்புறம் ஏதோ பிசாசின் வெண்ணிறக் கரம்… மரணக் கரம் – தலையைப் பிடிக்க முயற்சிப்பது போன்ற ஒரு கொடிய உணர்வு…
முதுகுத் தண்டில் ஒரு சிலிர்ப்பு மின்னலாக நெளிந்தோடுகிறது. இதயம் குளிர்ந்து விறைத்துப் போகுமோ…!
ஆலமரத்தின் அருகில் நெருங்கும் சமயம்-
தற்செயலாக தலையை உயர்த்தி, ஆலமரத்தின் அடர்ந்த இருளாகக் காட்சியளிக்கும் தலைமுடியைக் கவனித்தான். அங்கே-
இரண்டு கண்கள் – மின்சாரப் பல்புபோல ஒளி மின்னும் கண்கள் – வட்டமான நீலமும் பச்சையுமாக டாலடிக்கும் கண்கள்- ஆலமரத்து இலைகளின் அடர்ந்த இருட்டுக்குள்ளிருந்து, தன்னை நோக்குவது தெரிகிறது.
இதயமே அதிர்கிறது; ஸ்தம்பிப்பில் உறைந்தே போய்விட்டது. “ஹா… ஆ”வென்ற பழனியின் அலறல், இருளின் அமைதியைக் கலைத்துவிட்டு ஓய்ந்தது. அவனுடைய அலறலின் பிரதிபலிப்பாக- ஆலமரத்தின் உச்சியில்- அந்த இரண்டு கண்கள் சுழன்றன; ஏதோ சிறகடிப்பது போன்ற ஒரு சடசடப்பு; ஆல இலைகளின் ‘பரபரவென்ற சப்தம்.
அவ்வளவுதான்! ஸ்தம்பித்துவிட்டது சர்வமும். அவன் கைப்பிடி நழுவியது. கால் எங்கோ வழுக்கி சறுக்குவதுபோல…
சைக்கிளும், டின்னும் பெருத்த ஓசையுடன் கீழே விழ… பழனி… பயபீதியில் கிலிபிடித்து… “ஐயோ நாஞ் செத்தேன்” என்ற அலறலுடன் சாலையில் விழுந்தான்…
அந்த சப்தத்தில் கிலிகொண்டு- ஆலமரத்தின் உச்சியில் ஒளிமிக்க கண்களுடன் மிரட்சியுடன் சடசடத்த ஆந்தை, மிரண்டு போய்ப் பறந்தது. அதை… பழனி பார்க்கவில்லை.
சுடுகாட்டுக்கருகாமையில் செத்துக்கிடந்த பழனியைப்பற்றி சில நாட்கள் கழித்து, சிலபேர் பேசிக்கொள்கின்றனர்…
“அவன் எப்படிச் செத்திருப்பான்? ஒருவேளை… மாரடைப்புன்னு சொல்றாங்களே, அதனாலேயிருக்குமோ! ஒரே மர்மமாயிருக்கே…”
“அதெல்லாமில்லேப்பா. அவன் பேயடிச்சுத்தான் செத்தான்… நா…ங் கண்ணாலே பாத்தேன். அவனை எரிக்கிறப்போ… நா முதுகிலே பாத்தேன். அப்புடியே அஞ்சு விரலும் பதிஞ்சி, ரத்தம் கன்னிப் போயிருந்துச்சு. அதை இந்த ரெண்டு கண்ணாலே பாத்தேனய்யா…”
“பேயடிச்சா…? அடப்போயா… பேயாவது.. ஒண்ணாவது? நீ வேறெ…”
“அட, நீயென்ன சுத்த ‘இது’வாயிருக்கே? நானென்ன பொய்யா சொல்றேன்! பொய் சொன்னா, எனக்கென்ன ஆயிரமா கெடைக்கப்போகுது? நா நெஜத்தைத்தான் சொல்றேன்… கண்ணாலே பாத்தேனப்பா… முதுகிலே, அஞ்சு விரலையும்…’
“என்னமோப்பா… நீ சொல்றே… என்னாலே நம்ப முடியலே…”
– செம்மலர், பிப்ரவரி 1976.
– மேலாண்மை பொன்னுச்சாமி கதைகள் (பாகம்-2), முதற் பதிப்பு: 2002, ராஜராஜன் பதிப்பகம், சென்னை.
![]() |
மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க... |