வார்த்தைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 7, 2025
பார்வையிட்டோர்: 124 
 
 

(1988ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மூக்கையா, பனியனையும் கழற்றி தோளில் போட்டுக்கொண்டு வராண்டாவில் உட்கார்ந்திருந்தார். சனிக்கிழமை. பள்ளி லீவ். ரொம்பப் புழுக்கம். நெஞ்சுக் குழியெல்லாம் வியர்வை. மனசெல்லாம் நசநசப்பு.

வீட்டுக்குள் பிள்ளைகளின் விளையாட்டுக் கூச்சல். அந்தக் கூப்பாடுகளின் இச்சிலாத்தி தாங்காமல், சள்ளென்று எரிந்து கத்துகிற பார்வதியின் அதட்டல்கள்.

வீட்டு முன்னால்… வேப்பமர நிழலில் நாலைந்து சைக்கிள்கள் வந்து நிற்கின்றன. யார் இவர்கள்? சக ஆசிரியர். மற்றவர்கள் யார்? பேண்ட்களும், ஷர்ட்களுமாய். பளிச்… பளிச்சென்று

சக ஆசிரியர் ‘விஷ்’ செய்தார். மூக்கையா ‘விஷ்’ பண்ணிக்கொண்டே, எல்லோரையும் வரவேற்றார். வீட்டிலிருந்த இரண்டு சேர், ஒரு ஸ்டூல்… ஒரு நீள பெஞ்ச் எல்லாவற்றையும் தடபுடலாகத் தூக்கிப்போட்டு உட்காரச் சொன்னார்.

மூக்கையா, சக ஆசிரியரைக் கேள்விக்குறியோடு பார்க்க… அவர் தர்மசங்கடமாய்ச் சிரித்தார்.

“சார்… இவர் லாயர். இந்த மாவட்டத்திலேயே கிரிமினல்லே லீடிங் லாயர்-பரமசிவம். இவர் கோட்டியப்பன், டாக்டர். இவரு பதினெட்டான், தாலுகா ஆபீஸிலே ஒர்க் பண்றார். இது அடைக்கண். டவுன்லே பெரிய காண்ட்ராக்டர். எல்லாரும் உங்களைச் சந்திச்சுப் பேசணும்னு பிரியப்பட்டு, ஏங்கிட்டே காண்டாக்ட் பண்ணுனாக… நா கூட்டிட்டு வந்தேன் சார்.’

“அப்படியா…! வாங்க… வாங்க… என்னை எதுக்கு சந்திக்கணும்னீங்க?”

”நம்ம அமைப்பு விஷயமா, உங்களைப் பார்க்க வந்தோம்.”

“அமைப்புன்னா… எந்த அமைப்பு?”

“நம்ம சமுதாய அமைப்புதான் சார்… நீங்க டீச்சராயிருக்கீக… ரொம்ப நல்லா ஒர்க் பண்ணி… ஜனங்ககிட்டே நல்ல பேரு, நல்ல செல்வாக்கு சம்பாதிச்சிருக்கீக… அதான் நம்ம தலைமை முடிவு பண்ணி, எங்களை அனுப்பி வைச்சாக. உங்களை நம்ம அமைப்போட மாவட்டச் செயலாளராப் போடணும்னு முடிவிருக்கு…”

“சமுதாய அமைப்புன்னா… சாதி அமைப்பைச் சொல்றீகளா?”

“ஆமா…”

“இதுக்கு நா சம்மதிப்பேன்னு எப்படி நினைச்சீக?… எங்க சார் ஒன்னும் சொல்லலியா?”

“சொன்னாரு… எங்களிடம் டிஸ்கரேஜிங்காத்தான் சொன்னார். நாங்கதான் கன்வின்ஸ் பண்ற முடிவோட… ட்ரை பண்ணிப் பார்ப்போமேன்னு வந்தோம்…”

“ஓ…கோ, அப்படி..யா?”

மூக்கையா, யோசித்தார். அதற்குள் பார்வதி, எல்லோருக்கும் காபி கொண்டுவந்து தந்தாள்.

“எதுக்கு இந்த வெயில்லே…” என்று பிகு பண்ணிக் கொண்டே மரியாதைக்காக காபியை வாங்கினர்… குடித்தனர். ஒரு பையன் ரோஜா வெத்தலை… சிகரெட் கொண்டு வந்து கொடுத்தான்.

வராண்டாவில் புகை வளையங்கள் நெளிந்தன.

மூக்கையா, மனசுக்குள் தெளிவாக இருந்தார். வார்த்தைகளை உள்ளுக்குள் தேடினார். கோர்த்துப் பார்த்தார். அதிலேயே நினைவுகள் கூடுகட்டிக் கொண்டிருந்தன.

லாயர் பரமசிவம், விஷயங்களை அடுக்கிப் பேசிக் கொண்டிருந்தார். உதவியாக, மற்றவர்கள் வார்த்தைகள் எடுத்துக் கொண்டிருந்தனர்.

…நம்ம ஜாதி மக்கள் அடிமைப்பட்டுக் கிடப்பது, அரசியல் வாதிகளின் மோசடிகள்… நம்ம உரிமைகளுக்காக நாம் ஒன்றுபடுவது… நமது ஜாதியிலுள்ள படித்தவர்கள் அதற்காக முன் வந்து உழைக்க வேண்டிய அவசியம்.

மூக்கையா புன்சிரிப்பு மாறாமல் தலையை அசைத்துக் கொண்டிருந்தார். அடிக்கடி தலையைக் கோதிக்கொண்டார். தாடையைத் தடவிக்கொண்டார்.

“என்னோட கருத்தைச் சொல்லட்டுமா…?” என்றார்.

“சொல்லுங்க” என்றார் காண்ட்ராக்டர்.

“நம்ம நாடு இப்ப இருக்கிற நிலைமையிலே… நாம மறக்க வேண்டிய விஷயம் மூணு இருக்குன்னு நெனைக்கிறேன்… நாம் என்ன ஜாதி… நாம என்ன மதம்…நாம எந்த இனம்ங்கிற மூன்றையும் கட்டாயமா மறந்தாகணும். பாடுபடற வெள்ளைச்சட்டைக்காரன்… காக்கிச்சட்டைக்காரன்… கிராமத்து அழுக்கு வேட்டிக்காரன் எல்லாரும், இந்த மூணையும் மறந்து ஒண்ணு சேர்ரதுதான், இப்ப ரொம்ப முக்கியம்னு நெனைக்குறேன்… இப்ப நமக்கு மனிதாபிமானமும், தேசாபிமானமும்தான் முக்கியமா வேணுமே தவிர… ஜாதியபிமானமில்லே…”

“நம்ம சாதிக்காரங்க இப்புடி நாலாந்தர மனுசங்களா நசுக்கப்பட்டு, கேவலப்படுறதுதான்… ஞாயம்னு சொல்றீகளா?”

“இல்லே… நாட்டுலே தொண்ணூறு சதவிகித ஜனங்க அவங்க எந்தச் சாதியாயிருந்தாலும் சரி- எல்லாரும் நாலாந்தர நிலையிலே நலிஞ்சுகிடக்குறாங்கங்கிற உண்மையை மறந்துட்டு… நம்ம ஜாதிக்காரங்க மட்டும் நசுக்கப்படுறதாக நெனைக்குறது பொய்யில்லையா…? அந்தப் பொய்யை நம்பி, ஒரு இயக்கம் வைச்சு… பகைகளை வளர்த்துக்கறது… நாட்டுக்கும், மனிதாபிமானத்துக்கும் செய்ற கெடுதல் இல்லையா?”

வாயடைக்கப்பட்டார் லாயர். அசட்டுத்தனமாய் விழித்தார். பதினெட்டான் தொடர்ந்தார். நாலு பேரும் தனித்தனியாய்- கோரஸாய் பேசினர்.மூக்கையா வாத்தியார், அதே நிலையில் அசையாமல் நின்றார்…

“நீங்களும் யோசிச்சுப் பாருங்க. எதுக்கும் அடுத்த வாரம் வாரோம்.”

“எப்ப வந்தாலும் இதான் பதில்… ஆனா… நீங்க வாங்க…”

“மாவட்டச் செயலாளர் பதவி லேசானதுல்லே சார்… ஏராளமாய் பணம் புரள்ற உத்யோகம்… பெரிய பெரிய தலைவர்களோட தொடர்பு வாங்கித்தர்ற கௌரவம் சார்… யோசிங்க…”

புறப்படுவதற்காக எழுந்தனர். வேப்பமரம் மெல்லத் தலையையாட்ட, காற்று வந்தது. வியர்த்துக் கிடந்த வாத்தியாருக்கு, காற்று பட்டவுடன் ரொம்பச் சுகமாக இருந்தது… மனசுக்குள் இறங்கி, நரம்புகளில் பாய்கிற சுகம்

வேலை பார்க்கிற பள்ளிக்கூடம் மூன்று மைல் தள்ளியிருக்கிறது. காலை எட்டு மணிக்கெல்லாம் சைக்கிளில் கிளம்பிவிட்டார். ஊருக்குள் நுழைந்தார். அன்போடும், மரியாதையோடும் வணக்கம் சொல்கிற சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள்…

பெண்கள்கூட விலகி வழிவிடுவதிலேயே காட்டுகிற மரியாதைகள். வழிநெடுக பூச்சிதறலாக விழுகிற உணர்வுகள்…

வகுப்பு துவங்கிவிட்டது. கரும்பலகையில் முதல்நாள் எழுதிய வார்த்தைகளை டஸ்டரை எடுத்து அழிப்பதற்காகத் திரும்பி நிமிர்ந்தால்…

அதிர்ச்சி! எந்த மாணவனும் செய்யத்தகாத சேட்டை இது. அதிலும் நாலாம் வகுப்பு மாணவனுக்கு, இது ரொம்ப தூரமான சேட்டை. இந்த வயசில் இப்படியோர் வக்கிரப் புத்தியா?

போர்டில் முதல்நாள் எழுதியிருந்த வார்த்தை:

வெண்டை என்ற அந்த வார்த்தை சற்று திருத்தப்பட்டு…ச்சே!

பின்னால் உள்ள மாணவனின் ‘களுக்’கென்ற ரகசியச் சிரிப்பு… அந்தச் சிரிப்பு, சேதுவின் சிரிப்பு. வாத்தியாரின் அதிர்ச்சியில் மகிழ்ச்சி காணுகிற சிரிப்பு.

இந்த எழுத்துகூட… சேதுவின் எழுத்துதான். அவனது ஸ்டைல் தான் இது…

நரம்பெல்லாம் குப்பென்று பற்றிய அக்கினி. மனசெல்லாம் கொதிக்கிற அக்கினி. பாதகம் செய்வதைக் காணச்சகியாத தார்மீகத் தீ… சிறுவனின் மனசில் இத்தனை சில்மிஷமா? என்று சீறுகிற அக்கினி…

“இதை யார் எழுதுனது?”

அதட்டலாய்க் கேட்டார். எல்லா மாணவர்களையும் மாணவிகளையும் பார்வையால் ஆராய்ந்தார். நடுங்கி நிற்கிற மாணவர்கள். முகம் கறுத்துக்கிடக்கிற மாணவிகள்…

சேது மட்டும் வித்தியாசமான முகத்துடன்…

‘எனக்கொண்ணும் தெரியாது’ என்கிற மாதிரியான அலட்சியமாய்… எகத்தாளமாய்…

“சேது… இங்க வாடா…!”

“என்ன சார்?’ சற்றும் கலங்காத குரல். முகத்தில் கோபம். ‘என்னை ஏன் கூப்பிட்டாய்?’ என்று கண்டிக்கிற கோபம்…

“இது உன்னோட எழுத்துதானே?” எரிமலையை அடக்கிக் கொண்ட அனலின் உஷ்ணம்.

”நா எழுதலை சார்.” சிடுசிடுப்பான பதில். பயப்படாத பதில்.

சகித்துக்கொள்ளவே முடியாத சில்லறைத்தனம் இது. செய்வதையும் செய்துவிட்டு எதிர்த்துப் பேசுகிற துடுக்குத்தனம்…

ஸ்கேலை எடுத்து சட்டென்று அடித்தார், தலையில். ஆத்திரத்தில் அடித்ததாலோ என்னவோ… சற்றுப் பலமாகவே விழுந்தது…

“போடா வெளியே…”

கொஞ்ச நேரம்தான் ஆகியிருக்கும். இடிமுழக்கமாய் பத்திரகாளி வந்துவிட்டாள், சேதுவுடன். பள்ளியே அதிர்கிற மாதிரி வசவுச் சத்தம்…நாராசமான வார்த்தைகள்… தெருவே திரண்டு நின்ற காட்சி… சேதுவின் அம்மா போடுகிற கோபக் கூச்சல்.

கையைக் கையை நீட்டி, ஆவேசமாய் அள்ளியெறிகிற அக்கினித் துண்டுகள். ஜாதியைச் சொல்லி… ஜாதிக்குணம் சொல்லி, இழிவாகப் பாய்கிற கத்தி வீச்சுகள்…

“எருமைமாடு மேய்க்கிற ப… பயகளுக்கும், ப… பயகளுக்கும் வாத்தியார் வேலை போட்டுக்குடுத்தா… மாடு மேய்க்கிற புத்தி போகவா செய்யும்?… எருமை மாட்டை அடிச்ச மாதிரி அடிச்சிருக்கானே… சின்னச்சாதிப்பய… அவன் கையிலே புத்து பெறப்பட…”

“அம்மா… உங்க பையன் செஞ்சிருக்கிற தப்பு என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு பேசுங்கம்மா…”

“என்னதான் தப்பு செய்யட்டுமே… அதுக்காக இப்புடியா… அடிச்சு புள்ளையை மண்டை வீங்க வைக்கிறது? சாதி கெட்ட பயகளுக்கெல்லாம் வாத்தியார் வேலை போட்டுக்கொடுத்தா… இப்புடிக் கொடுமைதான் நடக்கும்…”

குன்றிப்போய் நின்றார் மூக்கையா. கூடியிருந்தவர்களின் மௌனம் இவரைக் குத்திக் குதறியது. அவமானம், அடிமனசைக் கிள்ளியது. உடம்பெல்லாம் ஊர்கிற தேள்கள்… கொட்டாமல் கூசவைத்துக் கொடுமை செய்கிற பூரான்கள்…

சக ஆசிரியர்கள் தலையிட்டு, அந்த அம்மாவைச் சமாதானம் செய்து அனுப்பி வைக்க, மூக்கறுபட்ட அவமானத்தில் மூக்கையா கூசிக் குமைந்தார். செத்துப்போன முகமாய் வெளுத்து, கண்கள் கலங்கி, யார் முகத்தையும் நிமிர்ந்து பார்க்கப் பயந்த மனசோடு…

வகுப்புக் குழந்தைகள் முகத்தில் விழிக்கக்கூட அஞ்சுகிற மனசு…

இப்படியே செத்துப்போனால் தேவலையே என்று மனசு தவிக்க… அரண்டுபோய் நின்றார் மூக்கையா.

அந்த அம்மா பேசியது கொடுமை என்றால், அதைவிடக் கொடுமை தெருவில் கூடிநின்றவர்களின் மௌனம். திராணியற்ற மெளனம். அதர்மத்துக்கு அங்கீகாரம் அளிக்கிற நெட்டைமர மௌனம். கைவிடப்பட்டு ஒற்றை மனிதனாய் தனிமைப்படுத்திய கொடிய மெளனம். அதுதான் அவரை ரொம்பக் குத்திக் குடைந்தது.

‘நாலாந்தர மனுசங்களா நாம நசுக்கப்பட்டு, கேவலப் படுறதுதான் ஞாயம்னு சொல்றீகளா?…’

கசந்த மனசுக்குள் லாயர் பரமசிவத்தின் கேள்வி ஊசியாகப் பாய்ந்தது. வகுப்பு நடத்த முடியவில்லை. மனசுக்குள் ஏகப்பட்ட உளைச்சல். வலிக்கிற மனசுக்குள் வாலாட்டுகிற நினைவுகள். நிலைகொள்ளாமல் அலைபாய்கிற நினைவுகள். வெட்டுண்ட செடியாக வாடி, நிறம் மாறுகிற நினைவுகள்.

‘நீங்களும் யோசிச்சி வையுங்க. எதுக்கும் அடுத்த வாரம் வர்றோம்.’

நேற்று அவர்கள் வீசிவிட்டுப்போன வலை வார்த்தைகள். குற்றமே செய்யாமல்… ஒற்றையாய் நிறுத்தப்பட்டு வெட்டுண்ட இந்தக் கொடிக்கு… அதுதான் பற்றுக்கோலா…!

துவண்ட மனசோடு, சோர்ந்த உடம்போடு வீடு வந்து சேர்ந்தபோது, வீடு… ரணகளமாகிக் கிடந்தது. பார்வதி, மூத்தவனைப் போட்டு அடித்துக்கொண்டிருந்தாள். அவன் துடித்துத் துடித்துக் கதற… அவள் திட்டிக்கொண்டே மாறி மாறி விளாசிக் கொண்டிருந்தாள்.

பதைத்துப் போய் ஓடிவந்த மூக்கையா, பாய்ந்து வந்த மகனைப் பிய்த்துப் பிடுங்கினார்.ஏறிட்டுக் கோபமாய் பார்த்த மனைவியை, பலத்த சத்தமிட்டு அதட்டி அடக்கினார்.

“எதுக்கு… இப்படிப் புள்ளையைப் போட்டுக் கொல்லுறே?”

“எதுக்கா…? அவன் பண்ற அக்குருமத்துக்கு அவனைக் கொல்லத்தான் செய்யணும்.”

“அதான் கேக்கேன்… அவன் அப்படி என்ன அக்குருமம் பண்ணிட்டான்? சொல்லு…”

“சின்னவனைப் போட்டு அடிச்சிக்கிட்டேயிருக்கான். நானும் சொல்லிச் சொல்லி அலுத்துப் போனேன். கூட பிறந்த தம்பியை அடிக்காதேடா, அடிக்காதேடான்னு… காதுலேயே கேட்டுக்கலே… அவனை விரட்டி விரட்டி அடிச்சு… அவன் பயந்து பயந்து ஓடி இங்க பாருங்க… சோத்துப் பானையை உடைச்சுப் போட்டான்…”

மூக்கையா தளர்ந்து போனார். விறைத்துப் பேசமுடியவில்லை. தப்பு மூத்தவன் மேல்தான்… வேதனையோடு மூத்தவனைப் பார்த்தார்…

அடிவாங்கிய அழுகையோடு, அப்பாவைப் பார்த்துவிட்ட பயமும் சேர்ந்து… நனைந்த கோழிக் குஞ்சாக நடுங்கிக் கொண்டிருந்தான். பாவமாக இருந்தது.

நொந்துபோன மனசோடு “ஏண்டா… இப்புடிச் செய்றே? சரி… போ” என்றார். மனசு சங்கடப்பட்டது.

போய்விட்டான். அரண்டு போய்க் கிடந்த மற்ற பிள்ளைகளும் மூச்சுவாங்க வெளியே ஓடிவிட்டன.

பார்வதியைப் பார்த்தார்.

“விபரமில்லாம, விளையாட்டுப் புத்தியிலே அவன் செய்ஞ்ச காரியம் தப்புதான். ஆனா… அதுக்காக ஆத்திரப்பட்டு நீ செய்ஞ்ச காரியம்… அதைவிட விபரங்கெட்டதாயில்லே? பார்வதி. அவன் தரத்துக்கு… அது இயற்கை. பெத்த தாயாயிருக்கிற ஒந் தரத்துக்கு… இது எம்புட்டுப் பெரிய தப்பு? நீயே யோசிச்சுப்பாரு…”

கனிவோடு கூறிவிட்டு… ஷர்ட்டைக் கழற்றினார். பனியனைக் கழற்றி தோளில் போட்டுக்கொண்டு… உடம்பைக்கூட கழுவாமல்… குழம்பிய மனசோடு வராண்டாவில் வந்து உட்கார்ந்தார்.

குளிர்ந்த காற்று வந்து மோதியது. ஜில்லென்று சுகமாக இருந்தது. கண்களை மூடிக்கொண்டார்.

மனசுக்குள் இறங்கி, நரம்பெல்லாம் பாய்கிற இன்ப நதிகள்…

பார்வதியிடம் கூறிய வார்த்தைகள், அவரையே கவர்ந்துவிட்டன. அதுவே மனசில் ஓடி ஒலித்தது. அடடே.. எவ்வளவு நுட்பமாய் பேசியிருக்கோம்… இதைவிடத் தெளிவா- சுருக்கமா – பேசவே முடியாது… அடேயப்பா… எவ்வளவு பெரிய விஷயத்தை, எவ்வளவு சாதாரண சொற்கள்லே சொல்லி முடிச்சுட்டோம்…’

அவரே, அவரை நினைத்து வியந்து கொண்டிருந்தபோது… அந்த வார்த்தைகளே முள்ளாக உறுத்தின. நெஞ்சுக்குள் நெருடின. பள்ளிச் சம்பவத்தைக் கிளறிவிட்டன.

ஜாதி சொல்லிப் பேசிய அந்த அம்மா… விபரம் தெரிஞ்சு பேசுனவங்களா? கூடி நின்று மௌனம் அனுஷ்டித்தவர்கள் விபரம் தெரிஞ்சு நின்றவர்களா…? அறியாமையிலே ஊறிக்கிடக்கிற அவங்க, விபரமில்லாம பேசுன விஷயத்துக்காக… நா ஏன் ஆத்திரப்படணும்? அவமானப்படணும்?

விபரமில்லாத அப்புராணிச் சனங்க பேசுனதுக்காக.. விபரந்தெரிஞ்ச நா… ஏன் நிறம் மாறணும்? அப்படி நிறம் மாறினா… நானும் அவங்களும் ஒரே தப்பைச் செய்ததாகத்தானே அர்த்தம்?… பார்வதிக்கு நா சொன்ன பதில், எனக்கும் பொருந்துமே…

உள்ளுக்குள் ஓடிய இந்த மின்னலில், நிறைய விஷயங்கள் வெளிச்சமாகியது போலிருந்தது. தன்னைத்தானே இனம் கண்டு காப்பாற்றிக் கொண்ட மாதிரி, மனசு தெளிவாயிருந்தது…

“நீங்க எப்ப வேணும்னாலும் வாங்க.. என்னோட பதில் இதுதான்.”

அன்று லாயரிடம் கூறிய கூறிய வார்த்தைகள், வார்த்தைகள், இன்றும் செத்துப்போகாத வார்த்தைகள். இவரிடம் என்றென்றும் நிறம் மாறாத வார்த்தைகள்…

– செம்மலர், ஜூன் 1988.

– மேலாண்மை பொன்னுச்சாமி கதைகள் (பாகம்-2), முதற் பதிப்பு:  2002, ராஜராஜன் பதிப்பகம், சென்னை.

மேலாண்மை பொன்னுச்சாமி மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *