வான்கோழி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 24, 2024
பார்வையிட்டோர்: 173 
 
 

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கூட்டம் மூன்றரைக்கென்று அழைப்பிதழ் குறிப்பிட்டது. ஆனால் ஐந்து மணியைத்தான் அப்படிப் போட்டிருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்! சாதாரண ஒரு மண்டபத்தில் நடக்கும் இலக்கியக் கூட்டத்துக்கு எந்த மடையன் அழைக்கும் நேரத்துக்கு வருவான்? தப்ரபேன், ரண்முத்து, ஒபரோய் போன்ற ஓட்டல்களில் என்றாலாவது, மண்டபத்தை அடுத்த நிகழ்ச்சிக்குக் கொடுக்க வேண்டுமே என்று நேரத்துக்கு வருவார்கள். அங்கேகூடச் சில உயர்தரச் சதிகாரிகளுக்கு மண்டையில் விடியாமல், அரை மணித்தியாலம் கழித்தும் வருவார்கள்! இப்படிப்பட்டவன்களை எல்லாம் கட்டிக் கொண்டு அழ வேண்டும் என்பது இலக்கியக்காரனின் தலைவிதி!.. 

என் அனுபவரீதியிலான எண்ணத்தில் நான் முன்னணி மண்டபத்தை அடைந்தபோது நாலரை மணி. நாற்பது நாற்பத்தைந்து பேர்கள் குழுமியிருக்க, என் அனுபவத்தின் தோல்வியாகக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. 

வரவேற்புரை, தலைமையுரை, நூல் வெளியீடு என்பன முடிந்து போய் விமர்சனம் நடந்து கொண்டிருந்தது. எத்தனை மணிக்குத் தொடங்கியிருப்பார்கள்? அல்லது ஊரில் இல்லாத புதுமையாக விமர்சனத்திலேயே ஆரம்பித்திருப்பார்களோ? 

முன் பக்கத்து நாற்காலிகள் சில, ஓட்டை விழுந்த பல் வரிசையாக்கின சபையை. யாருக்காவது ஒதுக்கியிருப்பார்கள். ஒதுக்காவிட்டாலும்கூட முன் வரிசை பலருக்குப் பிடிக்காது! ‘:போர்’ அடிக்கும் போது கதைக்க, எழும்பிப் போக, சிகரெட் பிடிக்க,தூங்க, எட்லீஸ்ட் கொட்டாவி விடவெல்லாம் பின் பக்கமே வாய்ப்பானது. 

விமர்சகர் கனத்த குரலில் பேசிக் கொண்டிருந்தார். அவருடைய குரல் மைக்கையே செவிடாக்கிவிடும் போல் இருந்தது. சினிமாக் கோடீஸ்வரன் மாதிரிப் புதிய துணிமணிகளில் உயரமாக நின்றிருந்தார். கையில் கனத்த நூல் ஒன்று விரிக்கப்பட்டிருந்தது. 

அடேயப்பா! நாலாயிரம் பக்கமாவது இருக்குமே! விலையும் ஐநூறு அறுநூறு வருமே! எழுத்தாளர் பருத்திச்சாமி செய்தாலும் கனமான காரியமாகத்தான் செய்திருக்கிறார்! 

அக்கம் பக்கமாகப் பார்த்தேன். யாரிடமும் அந்நூல் கைவசம் இருப்பதாகத் தெரியவில்லை. எவன் வாங்குவான்? ஐந்து நட்சத்திர ஹோட்டலில், ஓர் ஐம்பது கோடீஸ்வரர்களாவது கூடியிருந்தால் வாங்கியிருப்பார்கள்! மூன்றாவ தாக இருந்தவர் கையில் ஒரு சினிமாப் பாட்டுப் புத்தகம் சுருண்டு கிடந்தது. 

எனக்குத் தெரிந்தவர்கள் யாருமே சபையில் இருந்ததாகவும் தெரியவில்லை. என்னைப் போல் பிந்தி வரலாம். அல்லது ‘அறிமுகம்’ இல்லாதவர்கள் கூடும் அறிமுக விழாவோ?….. 

பிட்டணியிலோ டீவீயிலோ கிரிக்கட் இருக்கலாம்…… 

மேடை நடுவில் இருந்தவர்தான் நூலாசிரியர் பருத்திச்சாமி போலும். முழிக்கிற முழியிலேயே தெரிகிறது. அதேசியத் துணிகளில் ஒரு ஹொலிவூட்டைப் போலவோ நாஸ்த்திகனைப் போலவோ தோற்றம். பக்கத்தில் யாரோ இன்னொரு மேல் நாடு. இந்தப் பக்கமும் அப்படி ஒன்று. மொத்தம் ஏழெட்டுப் பேர்கள் இருந்தார்கள். யாரையும் எனக்குத் தெரியவில்லை. அரசியல்வாதிகளோ என்னவோ! அரசியல்வாதிகள் வந்தால்தான் அப்படி. வரவேற்பு, கேள்வி கேட்பாடு இல்லாமலேயே தலைவருக்குப் பக்கம் பக்கமாகப் போய் அமுக்கிக் கொள்வார்கள்! நூலாசிரியர்கூடக் கீழேதான் உட்கார வேண்டும். 

பழைய முகங்கள் எங்கே? பழையவர்கள் வந்தால் முதுகுதான் சொறிவார்கள் என்று இவர்கள் புதியவர்களில் இறங்கி விட்டார்களோ? 

தேவையில்லாமல் ஒரு கெமரா அடிக்கடி எழுந்தது; ஒளிர்ந்தது; ஒளிந்தது. வீடியோக்காரரின் வெளிச்சம், திரும்பிய பக்கமெல்லாம் உருவங்களைச் சரிப்படுத்திக்கொண்டு மேய்ந்தது. 

விமர்சகர் அலறிக் கொண்டிருந்தார். உள்ளதோ ஐம்பது பேர். அதற்கு நாலைந்து மைக்கும் இரண்டு மாபெரும் ஸ்பீக்கர்களும்! அதில் வேறு அந்த மனிதர் தேர்தல் கூட்டத்தில் போல் தொண்டைத் தண்ணீரை வற்ற வைத்துக் கொண்டிருந்தார். 

“……எனவே – அறிவார்ந்த – பெரு மக்கட் பிறப்புக்களே! (ஸ்ப்பீக்கர்கள் கிண்… கிண்… என்கின்றன.) இலக்கியம் படைப்பவனுக்கு – இலக்கியம் – தெரிந்திருக்க வேண்டும். (கிண்!) இலக்கியம் தெரிந்தவனுக்கு – இலக்கியம் படைப்பது – மிகவும் எளிது. (கிண்) மாக்ஸிஸம், லெனினிஸம், ஸ்ட்டாலினிஸம், மாவோயிஸம், கடாஃபியிஸம், சோஷலிஸம், கம்யூனிஸம் ஆகியவைகளைக் கரையறக் கண்டு ப்ராய்டிஸத்திலும் டார்வினிஸத்திலும் நுழைந்து -(கிண் கிண்) எந்தச் சமூகத்தை – அல்லது எந்த வர்க்கத்தை -அவர் பிரதிபலிக் கிறாரோ அந்தச் சமூகத்தின் அல்லது வர்க்கத்தின் உள்ளீட்டமைவியலுக் குரிய – வெளிப்பாட்டு முறையியலுக்கமைய (கிண்!) யதார்த்தமாகவும் வெளிப்படையாகவும் – இன்னும் ஆழமாகவும் -அகலமாகவும் – உள்ளார்ந்த ஆள்புலக் கட்டுக்கோப்பாவத்தையிலும் வெளியீடு செய்பவன்தான்-(கிண்!) நவீன – இலக்கியவாதி என்பதை – நாம் மாக்ஸிம் கோக்கியின் – நாவலிலிருந்து அறிகிறோம். (கிண்!) மேலும் பல நாவல்களிலிருந்தும் கணிசமான உதாரண எடுத்துக்காட்டுக்கள் மூலம் – அறிந்து புரிந்து தெரிந்தோம்! (கிண்!) நவீன இலக்கிய விற்பன்னர்களின் (கிண் !) யதார்த்தவாத இலக்கியங்கள் பற்றிய சர்ச்சைக்குரிய -விமர்சனங்கள் பற்றிய – இந்த மகத்தான நூலை (கிண், கிண்!) எவர் வாசிக்கின்றாரோ (கிண், கிண், கிண்!) அவருக்குத்தான் தெரியும் -விமர்சனம் என்பது என்ன – இலக்கியம் என்பது என்ன -வர்க்கம் என்பது என்ன – படைப்பு என்பது என்ன – எழுதக் கூடாதவை என்ன – எழுத அருகதை அற்றவை என்ன (கிண், கிண், கிண்…) என்பதெல்லாம்…”

வியர்வையைத் துடைத்துக் கொண்டேன். அதென்னமோ காதுக்குள் வெள்ளம் பாய்ந்த மாதிரி வியர்வையும் அருவெறுப்பும்! அவர் அந் நூலை மேசை மேல் போட்டார். கூல்டிறிங்ஸில் கொஞ்சம் :டிறிங்கினார். சபையோரைத் தொண்ணாற வைத்துவிட்டு மேடை மட்டும் குடிக்கும் பொதுவுடைமை நடந்த பிறகு, அவர் இன்னொரு புத்தகத்தை எடுத்து விரித்துத் தொண்டையைச் சரி செய்தார். 

சரிதான், பருத்திச் சாமியின் புத்தகம் அல்ல இது! இவரது லைப்ரரி. இன்னும் பத்துப் பதினைந்து மேசையிற் கிடந்தன! ஆஹா! சித்திர வதைகளின் பரிணாமம்! இவர் வக்கீலாக இருப்பாரோ? 

“……..அறிவார்ந்த பெருமக்கட் பெரும் பிறப்புக்களே! (கிண்ண்ண்) (பிரபுக் களே என்று சொன்னாரா?…) இதோ! இதோ பாருங்கள் இந்த நூலை! பருத்திச்சாமி அவர்கள் இன்றைய கதாநாயகனான பருத்திச் சாமி அவர்கள்- இந்த நூலை (கிண்) ஆறு வருடமாக-கஷ்ட்டப்பட்டு-கடினப்பட்டு-சிரமப்பட்டு – பிரயாசைப்பட்டு- எழுதியிருக்கிறார்! (கிண்ணு கிண்ண் கிண்ண்ண்ணு )….” 

எனது மூன்றாவதானவரிடமிருந்த சினிமாப் பாட்டுப் புத்தகம் அது! ஒரு நாற்பது பக்கம் இருக்கலாம்!! ஒரு நாவலாம்!!! இதை அம்பலப் படுத்தத்தான் மிலிட்டிருக்காரப் புத்தகங்களைக் கொண்டு வந்து இவர் மைக்கில் தாண்டிக் கொண்டிருக்கிறாராம்!!!! 

“….ஆசிரியர் கோமான் – பருத்திச்சாமி தன் -அற்புத அமர நாவலை -எப்படி ஆரம்பிக்கிறார் பாருங்கள்! (கிண்!) மாலை கருகிவரும் – மங்கியதோர் மாலை! இரண்டே இரண்டு – குடிசைகள்! மிகத் தூரத்திலே -இரண்டு விடி வெள்ளிகள் போல் – (கிண்!) பிரகாசிக்கின்றன! அவற்றை நோக்கி நடந்து செல்கிறாள் – அந்த நாரீமணி! (கிண் கிண்!) கையில் அழகான:பேக்கு! –  உடலில் அழகான நைலக்சு! – அவள் யார்? எங்கே போகிறாள்? -ஏன் போகிறாள்? எப்படி -அங்கு வந்தாள்? – எதற்காகப் போகிறாள்? யார்தான் அவள்? – உங்களுக்குத் தெரியுமா? – எனக்கும் தெரியாது! (கிண்கிண்கிண்கிண்ண்ண்!) பார்த்தீர்களா பெரு மக்கட் பெரும் பிறப்புக்களே! நூல் ஆசிரியர் பிரான் அவர்கள் -துப்பறியும் மர்மக் கதையின் முதற் பந்தியிலேயே எப்படி நம்மைக் கவர்ந்து விடுகிறார்! துப்பறியும் கதைகளை – எந்த மடையன் இலக்கியம் இல்லை என்று சொன்னது ? அது ஒரு கிராமம்! அதில் இரண்டே இரண்டு குடிசைகள்! – விடி வெள்ளிகளைப் போல! – புதுக்கவிதைகளைப் போல் இல்லாமல் – எவ்வளவு தெளிவாகக் கூறுகின்றார்! (கிண் கிண்!) அதை நோக்கி – நைலக்ஸ் கட்டிய – நாரீமணி! – நாரீ – மணி! – நார் நாராய் – மணிகள் தொங்கும் – தங்க – நகைகள் தொங்கும் – பெண்மை! இங்கே நீங்கள் ஒன்றைக் கவனிக்க வேண்டும்! இந்தக் கதையை – (கிண்!) ஆசிரியர் – (கிண்) ஆரம்பித்த காலம் (கிண்!) நைலக்சுகளுக்கு – (கிண்!) நன்மதிப்பிருந்த காலம்! (கிண்! கிண்!) ஏழைகள் அதற்கு – ஏங்கிய காலம்! அதைக் கட்டிக்கொண்டு ஒரு குடிசையை நோக்கி – அந்த மாலை – கருகும் மாலையில் ஒரு – நாரீமணி செல்கிறாள் என்றால் – (கிண்!) யார்தான் சுவை குன்றிப் போவார்கள்? இங்கு-நான்- பாரதியையும் கம்பனையும் தரிசிக்கிறேன்! (கிண்கிண்கிண்)…

இன்னொரு பக்கத்தைப் புரட்டினார். 

“என்னா சொல்றாரு?” என்றேன் இடப் புறத்தவரிடம் 

“கொழப்பாதீங்கய்யா, அருமயான ஸ்பீச்சு! கத போடாம கேளுங்க!” 

அம்பிகாபதிப் படத்தின் இறுதிக் கட்ட வாள், நினைவில் எழுந்தது! 

வலப் பக்கம் பார்த்தேன். வழுக்கை, கண்மூடிக் கிடந்தார். 

“சார்!” என்றேன். 

“யெஸ்!” என்று தடுமாறி விழித்தார். 

“என்னா சொல்றாரு?’ 

“அதென்னா எழவோ சார்! எனக்குன்னா கண்ணக் கட்டிக் காட்ல உட்ட மாதிரி இருக்கு! வேற ஏதோ யோசனைல இருந்துட்டேன்! ஸொரி!” 

விமர்சகர், ஓர் ஆணைப் போன்ற பெண்ணும் பெண்ணைப் போன்ற ஆணும் சம்பாஷித்துக் கொள்வதில் தயிர் வடை செய்து கொண்டிருந்தார்! 

கூட்டம் முடிந்த பிறகு வந்து தலையைக் காட்டியிருக்கலாம் போல் தோன்றியது. அல்லது வராமலே இருந்திருக்கலாம்! 

இரண்டு மூன்று பெண்கள் தீட்டுக்காரிகளைப் போல ஒரு மூலையிற் கிடந்தார்கள். ஆண் எழுத்தாளர்கள் வந்து தாங்கள் ஆண்கள்தாம் என்று நிரூபிக்க முயல்வார்களோ என்ற அச்சமாகவும் இருக்கலாம். இரண்டொருவர் தூங்கிக் கிடப்பதுபோல் பட்டது. சில ஜோடிகள் வேறு வழியின்றிக் கதைத்தன. சபையில் கதைக்கக் கூடியவர்களைப் பார்த்து மேடையில் தூக்கிப் போட்டால் என்ன?….

ஒரு சிலர் அந்த மர்மக் கதையில் பாதி, முக்கால் வரையில் போயிருப்பதாகவும் பட்டது – வழியிலேயே புத்தகத்தைத் தூக்கி எறிந்துவிட்டுப் போவதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொள்ள முனைவது போல்! 

என் சிகரெட் இரண்டோ மூன்றோ தீர்ந்து, குடும்ப விஷயங்கள் சிலவற்றுக்குத் தீர்வும் கண்டு முடிந்திருந்த போது, கை தட்டல் அந்த மாடியைக் கீழே தள்ளப் பார்த்தது! விமர்சகர் அமர்ந்து, மீசையில் மண் படாமல் துடைத்துக் கொண்டிருந்தார். 

சரி, தலைவர் என்ன சொல்லப் போகிறார் பார்ப்போமே என்று நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன். சபையோர் நிகழ்ச்சி மாதிரி முன் வரிசையிலிருந்து ஒருவர் எழுந்து மேடை மைக்கிடம் போனார்! தலைவர் தமிழ் மாறனுக்கு மேடையில் இடமில்லையோ? 

“தலைவர் ஏன் கீழ இருந்து மேடைக்குப் போறாரு?” என்றேன் வலப் புறத்தே. 

“அந்தா, பானா சாவன்னாவுக்கு எடப்புறமா இருக்கிறாரே, அவருதாந் தலவரு! அவருக்குத் தமிழ் வராது! எல்லாமே இங்கிலீஷ்தான்! அதுதான் அஸிஸ்டண்டு பேசுறாரு.!… நிகழ்ச்சித் தொகுப்பாளர்!” 

கொண்டோடி சுப்பர் பேசினார். அரைப் பைத்தியத்தின் சுறுசுறுப்பு அவரிடம்! 

“விமர்சகர் வீரப்பிரதாபனின் ஆழமானதும் அறிவு பூர்வமானதுமான விமர்சகத்தைக் கேட்டோம். நம் நாட்டில் இன்றிருக்கும் விமர்சகப் பெருமக்களிலேயே மிகவும் திறமை மிகுந்த விமர்சகர் இந்த விமர்சகர்தான்! அதில் சந்தேகமில்லை! ஐயமும் இல்லை! இதுதான் விமர்சகம்! அவர் படித்திருக்கும் விமர்சக நூல்களை எல்லாம் எல்லா விமர்சகர்களும் விமர்சகர்கள் அல்லாதவர்களும் நிச்சயமாகப் படிக்க வேண்டும்! விமர்சகர் வீரப் பிரதாபனுக்கு விமர்சக உலகிலே நல்லதொரு விமர்சக இடம் கிடைப்பதற்கு நாம் ஒரு விமர்சகப் போராட்டம் நடத்த வேண்டும்! நன்றி! அடுத்ததாக, பேராசிரியர் பருத்திச்சாமி :பீ. ஏ. அவர்களின் ‘கிராமாஸ்தமனம்’ என்ற புத்தக நூலுக்கு, மிக மிக மேன்மையான உரை ஒன்றை, நமது மிக மிக மிக மேன்மை பொருந்திய மகா கனம் நகரபிதா ஸ்ரீமான் எம். ஸி. கிராமணியார் அவர்கள் வழங்கியளிக்கவிருக்கிறார்கள்! கரகோஷம் செய்து அல்லது கை தட்டிப் பெரியாரை வரவேற்பு செய்யுங்கள்!” என்று அவரே ஆரம்பக் கை தட்டல் செய்த போது வானொலியும் ரூபவாஹினியும் தோற்றுப் போயின! 

“இந்தக் கொண்டோடி சுப்பன் நல்லாப் பந்தம் புடிப்பான்! சாப்பாட்டு டைமாப் புடிச்சி மினிஸ்ட்டர்மாருக ஊடுகளுக்குப் போய்ப் போய் நல்லா முன்னேறீட்டான்!” என்று யாரோ பின் பக்கமாக எரிந்தார்கள். 

மகா கனத்தோடு எழும்பினார் நகரபிதா. தம்பி, தங்கை, மச்சான், மாமி, தோழன், தோழி, வாசற்கூட்டி, டிறைவர், பியூன் என்றெல்லாம் வந்தனம் கூறிச் சிறிது அரசியல் சகதியும் பூசி அவர் புத்தகத்தைத் தொட அரை யுகமானது. 

“…கிராமம் என்றால் என்ன? கிராமம் கிராமம்தான்! (கிண்ணைக் காணோம்!) நகரமென்றால் என்ன? நகரம் நகரம்தான்! ஆகவே நமக்கு விளங்குகிறது, கிராமம் கிராமம்தான், நகரம் நகரம்தான் என்பது. கிராமம் நகரமாக முடியாது; நகரம் கிராமமாக முடியாது! பலத்த ஆராய்ச்சியின் பிறகு இதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். கிராமத்தில் இருப்பவர்கள் கிராமத்தில் இருப்பார்கள்; நகரத்தில் இருப்பவர்கள் நகரத்தில் இருப்பார்கள்! ஆனால் கிராமத்தார் நகரத்துக்கும் போவார்கள்; நகரத்தார் கிராமத்துக்கும் போவார்கள்! ஆக, கிராமம் கிராமம் என்பதையும் நகரம் நகரம் என்பதையும் நாம் தெரிந்து கோண்டோம். நான் ஒரு கிராமவாசி; ஆனால் நகரத்தில் இருக்கிறேன்! நான் கிராமத்துக்குப் போவதில்லை! ஏனென்றால் நகரத்தில் எனக்கு ஜோலி அதிகம். என்றாலும், இது போன்ற கிராம நூல்களை வாசிப்பதுவும் அவற்றில் ஈடுபட்டு என் கிராமத்தை நினைவு படுத்திக் கொள்வதுவும் என் பொழுது போக்காகும்! இந்த அரிய பெரிய நூல் கிராமாஸ்தமனம்! இந்த நேரத்தில் யாராவது எங்காவது ஒருவர் நகராஸ்தமனம் பற்றி எழுதிக்கொண்டிருக்கத்தான் வேண்டும்! அந்த நூலுக்கும் தலைமை தாங்கவோ விமர்சகம் செய்யவோ நகர பிதா என்ற ஹோதாவில் விரும்புகிறேன்! எனக்கு அதில் உரிமை உண்டு! (கை கொட்டிச் சிரிக்கிறார்கள்!) விமர்சக வித்தகர் வீரப்பிரதாபன், நான் இதற்கு முன் கேட்டிராத விமர்சகம் செய்தார்! இம்முறை தேசபந்து விருதுக்கு நான் அவரையே சிபாரிசு செய்வதாக இருக்கிறேன்! (மீண்டும் கை கொட்டல்!) கிராமம் உதயமாகிறது; பிறகு அஸ்தமனமாகிறது! மறுபடியும் உதயமாகிறது! இதைத்தான் ஆங்கிலத்தில் சைக்கிள் என்றார்கள்!…..” 

எழும்பிப் போய் டீ குடித்துவிட்டு அரை மணித்தியாலம் கழித்து வந்தேன். கை தட்டல் உத்வேகம் அடைந்திருந்தது; கிராமணியார் வெற்றிப் புன்னகையோடு மேடையிலிருந்த சகலர் கைகளையும் வாங்கிக் கொண்டிருந்தார்! 

கொண்டோடி கிளம்பினார். 

“நகர பிதா, அதி உத்தம கிராமணி மகா மேதையின் பேச்சுச் சொல் வார்த்தை மடைப் பிரவாகம், நம்மை மெய்யுடம்பு மறக்கச் செய்துவிட்டது! தூங்கி உறங்கிய அரி சிங்கத்தையும் தட்டிக் கொட்டியெழுப்பும் அந்தச் சிம்ம சிங்க நாத ஓசைக் குரலொலி எனக்கில்லையே என்று நான் பொறாமைப் படுகிறேன்! நீங்களும் பொறாமைப்படுமாறு கேட்டுக் கொள்கிறேன்! கிராம- நகரங்களுக்கு அவர் கொடுத்த ஆழமான அறிவார்ந்த இலக்கண வியாகரணம் நம்மால் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியது. இத்தகைய தீர்க்க பார்வைத் தரிசிகள் நம்மத்தியில் உலவுவதையிட்டு நாம் பெருமைப்பட வேண்டும்! என் அடுத்த நூலாகப் பாரிய ஒரு நூல் அச்சுப் பிரசுரமாகிக் கொண்டிருக்கிறது. மதம் மாறிய ஒரு மகா மேதையைப் பற்றிப் பல பத்திரிகைகளில் வந்த பல குறிப்புச் செய்திகளை அப்படி அப்படியே எழுத்துப் பிசகாமல் திரட்டி எழுதி அதைப் பலப்பல சிரமங்களுக்கு மத்தியில் வடிவமைத்து வருகிறேன். ருஷியத் தலைவர் அதற்கு ஐந்து வருஷங்களுக்கு முன்பே தன்னுரை தந்து விட்டார்! ஒரு நூல் எழுதப்படுவதற்கு முன் தன்னுரை எழுதப்பட்ட பெருமை இந்த மகத்தான நூல் ஒன்றையே சாரும்! முப்பது பக்கமானாலும் அது ஒரு முழு நூல்! நூல் உலகில் இந்நூல் ஒரு திருப்புமுனை நூலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை என என் ஆண் தம்பிகள் சத்தியம் செய்கிறார்கள்! எனது அதற்கடுத்த நூலும் முப்பத்திரண்டு பக்கத்தில் ஒரு நூல்தான்! காலஞ்சென்ற அமரர் டமில்வண்ணனின் கேள்வி பதில்களில் ஒரு பகுதி அது! அது இலக்கிய உலகை ஒரு கலக்குக் கலக்கும் என்பதிலும் சந்தேக ஐயமில்லை! இந்த மேடையிலே நான் ஒன்றைத் திட்டவட்டமாகக் கூறிக்கொள்ள ஆசைப்படுகின்றேன். இன்றிலிருந்து நான், நகராஸ்தமனத்தின் உதயம் என்றொரு நூலை எழுதி, அதை மாண்புயர்மிகு மகா மேன்மையின் கிராமணியார் அவர்களின் விமர்சகத் தலைமையிலேயே வெளியிடுவது உறுதி! (கை கை கை!) அடுத்தபடியாகப் பிரதம அதிதி விருந்தினர், டாக்டர், வைத்திய கலாநிதி, செல்வப் பிரபு ஏ. வை. எம். ஆர். பி. கோ. ஆர். திரு போல் அவர்கள் பேசுவார்கள். தாய்த் திரு அமெரிக்கக் கண்டத்திலே வாழ்பவர்; வசிப்பவர். இந்த நூல் வெளியீட்டுக்காகவே தாம் பிறந்த தாய்த்திரு இலங்கை நாட்டுக்கு விமான மூலம் வந்திருக்கிறார்! இதோ கைக்கரநாதகோஷம் செய்து வரவேற்புக் கொடுத்து மகிழுங்கள்!” 

கைக்கரநாத கோஷத்துக்கிடையில் எழும்பிய ஆர். போலின் உண்மைப் பெயர் ஆரியபாலனாக இருக்கலாமென்று அவரது மீசையை வைத்தே நினைத்துக் கொண்டேன். 

“மிஸ்ட்டர் சேர்மான்! லடீஸ் ஆ.. ண்ட் ஜன்ட்ல்மன்!…” என்று இழுக்கத் தொடங்கியவர் தம் பிறப்பு, பரம்பரை, செல்வம், கல்வி, அமெரிக்க விஜயம், கல்யாணம், பட்டம், பதவி, வங்கிக் கணக்கு, வியாபாரம் என்றெல்லாம் நிறுத்து நிறுத்தினார். 

“…எனது அருமை நண்பர் பருத்திச்சாமியைப் பற்றி நான் அதிகமதிகம் கேள்விப்பட்டிருக்கிறேன். அமெரிக்கப் பத்திரிகையில் இவர் பெயர் அடிக்கடி அடிபடும். இண்டர்போலில் இவரைத் தெரியாதவர் இருக்க முடியாது! இவர் இந்த அரிய பொக்கிஷத்தை வரைகிறார் என்று தெரிந்த காலம் தொட்டே, நான் இந்த நூலுக்குப் பிரதம அதிதியாக வர வேண்டும் என்று பேராசைப் பட்டேன். ஜெயிலில் இவரைக் கண்டு உத்தரவும் பெற்றுக்கொண்டேன்! அதனால் வந்தேன்.மிகவும் நன்றி!” 

கைதட்டலும் ரத்தினச் சுருக்கமாக இருந்தது! மறுபடியும் கொண்டோடி ஆழமாக, அறிவு பூர்வமாக….. 

விழா நாயகன் பருத்திச்சாமி எழுந்தார். கொண்டோடி சுப்பரின் கதறலில், கிராமணியார் பல்லிளித்து இரண்டு மீட்டர் ஜரிகைச் சீலையைப் பருத்திச் சாமியைச் சுற்றிப் போர்த்தக் கைக்கரநாத கோஷம் பீறிட்டது… 

பருத்திச்சாமி பட்டுச்சாமியைப் போல் மைக்கைத் தொட்டார். பயந்து பயந்து சகலரையும் வணங்கினார். 

“…நானும் அமெரிக்கப் பிரஜை. இதுதான் என் தாய் நாட்! இந்த நூலை இங்கேயே அச்சிட்டு வெளியிட வேண்டும் என்று போன மாதம் இங்கே வந்தேன். ஹோட்டேல் ஒபரோயில் இருந்து காபரே பார்த்துப் பார்த்து இதை எழுதினேன்! நான் அமெரிக்கா போகிறேன்! இது என் கன்னிப்படைப்பு! இதுக்கு முன்னுக்கு நான் எழுதியதில்லை! நான் பிறந்த கிராமத்துக்கு காணிக்கையாக எதையாவது செய்ய வேண்டும் என்ற உத்தம நோக்கில் ஆறு வருஷாந்தரத்துக்கு முன்னுக்கு இதை ஆக்கத் தொடங்கினேன். துப்பறியும் மர்மக் கதைதான் இலங்கை மக்களைக் கவரும் என்று அப்படி எழுதினேன். ராமாயணம், பாண்டார் கதை, சிலுப்பாதிகாரம் எல்லாமே மர்மக் கதைகள் என்று அமெரிக்காவில் சொல்கிறார்கள். அதில் உண்மை இல்லாமல் இல்லை! இந்த நூல் நாற்பத்திரண்டு பக்கம்தான். ஆனால் ஏன் எய்ட்டி ருப்பீஸ் போட்டிருக்கிறேன்? எல்லாம் ஆராய்ச்சி! ஹோட்டேல் பில்! ஒரு கிராமம் எப்படி அஸ்தமனமாகியது என்பது ஒரு மகத்தான ஆராய்ச்சி என்பதை என்னைப் போன்றவர்கள்தான் தெரிந்துகொள்ள முடியும்! இந்த தொகுதிக் கெலக்ஷன் கண்டிப்பாக, உலகிலுள்ள ஒவ்வொரு சர்வகலாசாலைக்கும் பாடப்புத்தகமாக ஆக்கப்படும் என்ற உறுதி எனக்குண்டு! (கை மோதல்கள்!)…” 

ஆட்டுக் கழிவு வாய் விழவும் தூங்கிக் கிடந்த முட்டாள் இடையன், அதாவது எதிர் காலக் காளிதாசன் திடுக்கிட்டு விழித்துத் துப்பியது போல நானும் திடுக்கிட்டெழுந்து துப்பினேன். 

என் அருகில் நித்திரையாகிக் கிடந்த எட்டு மாதத்துச் செல்வன், என் புறமாக வரும்படி முகம் பார்த்துச் சிறுநீர் கழித்துவிட்டு அனுங்கினான் புத்தக வெளியீட்டு விழாவுக்குப் போனதற்குப் பரிசு கொடுத்துவிட்டவனைப் போல! 

– முனைப்பு

– வெள்ளை மரம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 2001, துரைவி பதிப்பகம், கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *