வாத்தியாரம்மா…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 11, 2025
பார்வையிட்டோர்: 578 
 
 

(1966ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1

“மஞ்சுளாம்மா! உங்களை அழைத்து வரும்படி ஹெட்மாஸ்டர் ஐயா சொன்னார்,” என்று பியூன் கூறியதும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த மஞ்சுளா, எல்லோரையும் அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொண்டு தலைமை ஆசிரியரின் அறைக்கு வந்தாள்.

வாத்தியாரம்மா மஞ்சுளா கலியாணம் செய்து கொள்ளாத கன்னிப் பெண்தான். ஆனால் அந்த அம்மாளுக்கு வயது மட்டும் முப்பது ஆகிவிட்டது. இருந்தாலும் இளமையின் வேகம் கொஞ்சமும் குறையாதவளைப் போல் காட்சியளித்தாள்.

அவள் தன்னை ஆடம்பரமாக அலங்காரம் செய்து கொண்டிருக்கவில்லை. இளம் நீல நிறத்தையுடைய நூல் புடைவையும், சாதாரண வெள்ளை ஜாக்கெட்டும் அவளுடைய சதைப் பிடிப்பான உடலைத் தழுவி நின்றன. முகத்தில் சாதாரணமான அமைதி குடி கொண்டிருந்தது.

சாந்தமே உருவாய் நின்று கொண்டிருக்கும் அந்த அமைதியின் உருவத்தை நிமிர்ந்து பார்த்த தலைமை ஆசிரியர் அவளிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்துவிட்டு, “உங்களுக்கு உத்தியோக உயர்வு கிடைத்திருக்கிறது!” என்று சொன்னார்.

“உத்தியோக உயர்வா? எனக்கா?” – மஞ்சுளா அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. பட்ட பாட்டுக்கேற்ற பலன் கைமேல் கிடைக்கும்போதுதானே ஒவ்வொருவரும் மகிழ்ச்சியடைவார்கள்.

“அதுவும் நீங்கள் ஐந்தாம் வகுப்பு வரையில் உள்ள ஒரு பள்ளிக்குத் தலைமை ஆசிரியர்.” மஞ்சுளா மிகுந்த ஆவலுடன் உறையைக் கிழித்து உள்ளே இருந்த கடிதத்தை எடுத்துப் படித்தாள். உடனே அவளுடைய முகத்தில் அதிருப்தியை உண்டு பண்ணும் சலனம் படர்ந்தது.

அதைக் கவனித்த தலைமை ஆசிரியர், “ஏன்… உங்கள் முகம் என்னவோ போலாகிவிட்டது? தலைமை ஆசிரியை உத்தியோகம் பிடிக்கவில்லையா?” என்று கேட்டார்.

“பதவி உயர்வின் மூலம் மாணவர்களுக்கு அதிக சேவை செய்யலாம் என்பது உண்மைதான். ஆனால் என்னைச் சென்னைக்கு மாற்றியிருக்கிறார்களே என்றுதான் யோசிக்கிறேன்.” மஞ்சுளாவின் குரல் கரகரத்தது.

“ஏன்…! செங்கல்பட்டைவிடச் சென்னை எவ்வளவோ மேலான இடமாயிற்றே. கல்வித் தரத்திலும் சென்னை உயர்ந்தே இருக்கிறது.” “நீங்கள் சொல்லுவது உண்மைதான், ஆனால் சென்னையை நான் அறவே விரும்பவில்லை. இங்கேதான் எனக்கு ஓரளவு நிம்மதியும் அமைதியும் இருக்கிறது.”

“சென்னையில் ஏன் இந்த அமைதியும் நிம்மதியும் கிடைக்காது என்று சொல்லுகிறீர்கள்?”

“அது எனக்குப் புதிய இடம். எப்பொழுதும் பழகிய இடம்தானே நல்லது. பழகியவர்களின் மத்தியில் பொழுது போக்குவதில்தான் எனக்கு நிரந்தரமான அமைதி கிடைக்கும் என்று நினைக்கிறேன்.”

“உங்கள் சொந்த விருப்பு வெறுப்பு காரணமாக நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் மேலதிகாரியின் உத்தரவுக்குக் கீழ்ப்படிய வேண்டியது உங்கள் கடமை.”

அதன் பிறகுதான் தலைமை ஆசிரியரிடம் முட்டாள்தனமாகப் பேசிவிட்டோமே என்று நினைத்து வருந்தினாள் மஞ்சுளா.

அவர் தன்னைப் பற்றி என்ன நினைத்திருப்பார்? தன் மீது அவர் வைத்திருக்கும் அபிமானம் வீணாகியிருக்கும்.

“உண்மைதான் ஸார், சென்னை எனக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக நான் இப்படிப் பேசியது தப்பு. அதை நினைத்து உளம் வருந்துகிறேன். கடமையைச் செய்வதற்கு எந்த இடமாக இருந்தால் என்ன?”

மஞ்சுளா கடிதத்தை மடித்து உறையினுள் வைத்து விட்டுத் தன்னுடைய வகுப்பறையை நோக்கி நடந்தாள். சென்னையைப் பற்றிய திகில் பிடித்துக் கொண்டதால் தலைமை ஆசிரியரிடம் இன்னதுதான் பேச வேண்டும் என்று அவளுக்குப் புரியவில்லை.

ஆசிரியை வகுப்பில் இல்லாமல் இருந்த போதிலும் மாணவர்கள் அமைதியாகவே இருந்தார்கள். இதிலிருந்தே மாணவர்கள் அவள் மீது எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறார்கள் என்பது விளங்கும். எல்லா மாணவர்களும் ஆசிரியையைக் கண்டதும் மரியாதை செலுத்துவதற்காக எழுந்து நின்றார்கள்.

அவர்களைக் கையமர்த்தி உட்கார வைத்த மஞ்சுளா தன்னுடைய உணர்ச்சிகளை மிகுந்த சிரமத்துடன் கட்டுப்படுத்திக் கொண்டு, “நான் கொஞ்ச நேரத்திற்கு முன்னால் எதைப்பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன்?” என்று கேட்டாள்.

“ஜீவ காருண்யத்தைப் பற்றி?” என்றாள் ஒரு மாணவி.

“ஆமாம், உயிரினங்கள் எதையுமே மனிதன் துன்புறுத்தக் கூடாது. அவை நம்மைப் போன்றவை என்ற உணர்ச்சி நம் எல்லோருக்கும் இருக்க வேண்டும். ஏனென்றால் ஆண்டவன் படைப்பில் எல்லாமே சமமானவை!” என்று சொன்ன மஞ்சுளாவால் அதிகமாகப் பேச முடியவில்லை. எதையோ நினைக்க ஏதோ ஒன்று வார்த்தையாக வந்து கொண்டிருந்தது. கடைசியில் அவள் சென்னைக்கு மாற்றலாகிப் போகும் விஷயத்தை மிகுந்த வருத்தத்துடன் சொல்லலானாள்.

“குழந்தைகளே!”

சில ஆசிரியர்களும் ஆசிரியைகளும் மாணவர்களைச் ‘சனியன்’ என்றும் ‘சாத்தான்களே’ என்றும் ‘எருமை மாடே’ என்றும் கூப்பிடுவார்கள். ஆனால் எந்த நிலை ஏற்பட்டாலும் “குழந்தைகளே!” என்பதைத் தவிர வேறெந்த வார்த்தையையும் மஞ்சுளா உபயோகிக்க மாட்டாள். மேலும் குற்றம் செய்யும் மாணவர்களிடத்தில் கூடக் கடுஞ்சொற்களை உபயோகிப்பதில்லை. மாணவர்கள் எல்லோரும் திறந்த வாயை மூடாமல் தாய் ஸ்தானத்தில் இருக்கும் ஆசிரியை மஞ்சுளாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“நான் சொல்லப் போகிற செய்தி உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். அதே நேரத்தில் என் கடமையை நிறைவேற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதால் அதைப் பேசுவதைத் தவிர வேறு வழியில்லை.”

மின்சார விசிறி வேகமாகச் சுழலும் போதுண்டான ஒலியைத் தவிர வேறு எதுவுமே கேட்கவில்லை.

“இந்தப் பள்ளியை விட்டும் உங்களை விட்டும் என்றென்றும் பிரிய மாட்டேன் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் எனக்குச் சென்னைக்கு மாற்றல் உத்தரவு வந்திருக்கிறது. ஆகவே இன்றுதான் உங்களோடு பேசும் கடைசி நாள்.

“இந்தப் பீரியடு முடிந்ததும் நான் லீவு போட்டுக் கொண்டு போய்விடலாம் என்று நினைக்கிறேன். அதற்கு முன்னால் சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன். “நீங்கள் இன்றைக்கு மாணவர்களாக இருக்கிறீர்கள். வருங்காலத்தில் உங்கள் வாழ்க்கைத் தரம் மிகவும் சிறந்த முறையில் உயரும் என்பதில் எனக்குப் பரிபூரண நம்பிக்கையுண்டு. படிக்க வேண்டிய ஒவ்வொரு வினாடி நேரத்தையும் நீங்கள் வீணாக்கி விடக் கூடாது. கண்ணும் கருத்துமாகப் பாடங்களைப் படிக்க வேண்டும். தாழ்வு மனப்பான்மை உங்களில் யாருக்குமே வந்து விடக்கூடாது.

“இதுவரையிலும் அன்புக்கேற்ற மாணவர்களாய்க் குழந்தைகளைப்போல் என்னிடம் நடந்து கொண்டீர்கள். அதைப் போல் என்னுடைய ஸ்தானத்தில் வரும் ஆசிரியர்களிடமும் நீங்கள் மிகவும் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும்.

மஞ்சுளாவிடம் படித்த மாணவர்கள் போக்கிரிகள் என்ற சொல்லை என்றென்றுமே என் காதுகள் கேட்கக் கூடாது.

கடைசியாக ஒன்று! நீங்கள் படிக்காமல் வந்திருக்கும் போது நான் கடிந்து கொண்டிருக்கலாம். சில வேளைகளில் என் கட்டுப்பாட்டையும் மீறி அடித்திருக்கலாம். எல்லாவற்றையும் உங்கள் தாய் செய்த தவறாக நினைத்துப் பொறுத்துக் கொள்ளுங்கள்.” கடைசியாக இந்த வார்த்தைகளைச் சொன்னபோது தொண்டை அடைத்துக் கொண்டது. அதுவுமில்லாமல் கண்ணீரையும் கண்கள் வாரி இறைத்தன.

மஞ்சுளா மாணவர்களுக்கு முன்னிலையில் வைத்துக் கண் கலங்கி விட்டோமே என்று மிகவும் கலங்கினாள். அதன் பிறகுதான் எல்லா மாணவர்களின் கண்களிலிருந்தும் கண்ணீர் வழிவது அவளுக்குத் தெரிந்தது. உடனே பதறிப் போனாள்.

“நான் பிரிந்து போகிறேன் என்று நினைத்துக் கொண்டதும் உங்களுடைய கண்கள் கலங்கி விட்டன அல்லவா…? இதிலிருந்தே நாம் எல்லோரும் ஒரே குடும்பமாக வாழ்ந்து விட்டோம் என்று தெரிகிறது. நான் சென்னைக்குப் போனாலும் என் இதயம் உங்களுடன்தான் இருக்கும். அதனால் எல்லோரும் மனத்தைத் தேற்றிக் கொண்டு அமைதியாக இருங்கள்.”

மஞ்சுளா நாத் தழுதழுக்க இப்படிக் கூறி முடித்ததும் வகுப்பு முடிந்து விட்டது என்பதை அறிவிக்கும் பொருட்டு மணியடித்தது.

அந்த மணியோசையை மஞ்சுளா உட்பட எல்லோரும் நல்ல சகுனம் என்றுதான் நினைத்தார்கள்.

2

ம ஞ்சுளா வீட்டுக்கு வந்ததிலிருந்து ஒரே கவலையாக இருந்தாள். பழகிய ஊரை விட்டுப் போகிறோமே என்ற எண்ணம் வேதனையைத் தந்த போதிலும், போகும் இடம் சென்னையாக இருப்பதால் நெஞ்சு வெடித்து விடுவதைப் போல் குமுறியது. அவள் படித்ததுடன், பலருடன் பழகியதும் சென்னையில்தான்! இன்னும் சொல்லப் போனால் சென்னையை விட்டு எங்குமே போகக் கூடாது என்று நினைத்ததுண்டு. ஆனால் இப்பொழுது அதே சென்னை ஒரேயடியாகக் கசந்து விட்டது. சென்னையை நினைவு படுத்திப் பார்ப்பதற்கே அஞ்சினாள். சென்னைக்குப் போனால் வாழ்க்கை மென்மேலும் நரகமாகிக் கொண்டே போகுமே தவிர ஒரு நாள் கூட அமைதியே அனுபவிக்க முடியாது.

கடற்கரைக்குச் சென்றால், மிருகக் காட்சி சாலைக்குப் போனால், லைட் ஹவுசைப் பார்த்தால் ஒவ்வொன்றும் பழைய நினைவுகளைத்தான் சொல்லும். அது மட்டுமல்ல, திரும்பிய பக்கமெல்லாம் வேதனைதான் பெருகுமே தவிர ஒரு நாள் கூட நிம்மதியாக வாழ முடியாது. சிங்காரச் சென்னை அவளுக்கு நரகமாகத்தான் மனக்கண் முன்னால் காட்சியளித்ததே தவிர வேறொன்றும் இல்லை.

இந்தத் துன்பங்களுக்கெல்லாம் நிரந்தரமான பரிகாரம் தேட வேலையை ராஜினாமா செய்து விடலாமா என்று கூட அவள் யோசித்ததுண்டு. ஆனால் அது அவளுடைய மனச்சாட்சிக்குச் சரி என்று படவில்லை.

பள்ளிச் சிறுவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது மகத்தான தொண்டு. அந்த நல்ல தொண்டினை ஏதோ ஒரு காரணத்துக்காக அவள் இழந்து விடத் தயாராக இல்லை. மஞ்சுளா மனத்தைத் திடப்படுத்திக் கொண்டவளாய், ரயில் பிரயாணத்திற்கு வேண்டிய வசதிகளைச் செய்யலானாள். சில புத்தகங்களை எடுத்து லெதர் பெட்டியினுள் வைக்க முயன்றபோது ஒரு புகைப்படம் தரையில் விழுந்தது.

அதை எடுத்துப் பார்த்தாள். சிரித்த முகத்துடன் காட்சியளிக்கும் ஒரு வாலிபனின் போட்டோ அது.

மஞ்சுளா உடனே அந்தப் போட்டோவை நாலைந்து துண்டுகளாகக் கிழித்து ஜன்னலுக்கு வெளியே வீசி எறிந்துவிட்டுத் தன்னுடைய வேலையில் தொடர்ந்து கவனம் செலுத்தலானாள்.

போட்டோவைப் பார்த்ததிலிருந்து அவளுடைய உடம்பு அதிர்ந்துகொண்டே இருந்தது. உணர்ச்சி வசப்பட்டு விட்டதால் இன்னதுதான் செய்ய வேண்டும் என்று அவளுக்குத் தெளிவாகப் புரியவில்லை. எப்படியோ தன்னைச் சமாளித்துக் கொண்டு சென்னைக்குப் புறப்படுவதற்குத் தயாரானாள் மஞ்சுளா.

சென்னைக்கு வந்து தலைமை ஆசிரியை பதவி ஏற்று ஒரு வாரம் கடந்து விட்டது. மஞ்சுளா எதிர்பார்த்ததைப் போல் சென்னை வாழ்க்கை ஒன்றும் வேதனைக்குரியதாக அமைந்து விடவில்லை. இன்னும் சொல்லப் போனால் செங்கல்பட்டில் என்ன உற்சாகம் இருந்ததோ, அதே உற்சாகம்தான் சென்னையிலும் இருந்தது.

ஆசிரியர்கள் – ஆசிரியைகள், மாணவர்கள் – மாணவிகள் எல்லோருமே அவளுக்கு நன்றாகப் பிடித்து விட்டார்கள். மஞ்சுளா தலைமை ஆசிரியை ஆயிற்றே என்ற கர்வம் இல்லாமல் நடந்து கொண்டதால் எல்லோரும் அவளிடம் மிகுந்த மரியாதை காட்டினார்கள். அன்று வழக்கம் போல் அவளுக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறையினுள் உட்கார்ந்து பைல்களைப் புரட்டிக் கொண்டிருந்தாள்.

அப்பொழுது சுமார் எட்டு வயதுள்ள சிறுவனைக் கூட்டிக் கொண்டு சுமார் முப்பத்தைந்து வயது மதிக்கத் தகுந்த ஆணும் பெண்ணும் வந்தார்கள்.

அவர்களை மஞ்சுளா நிமிர்ந்து பார்த்ததும், குறிப்பாக அந்த ஆண் பிள்ளையைப் பார்த்ததும், தூக்கி வாரிப் போட்டதைப் போன்ற அதிர்ச்சிக்குள்ளானாள். வந்தவர்களிடம் எப்படிப்பேசுவது என்றோ, எப்படி வரவேற்பது என்றோ அவளுக்குத் தெரியவில்லை.

அந்த ஆண் பிள்ளை போட்டோவில் காணப்பட்ட வாலிபன்தான் என்பதை அவள் பார்த்தவுடனேயே அடையாளம் தெரிந்து கொண்டாள்.

அவனுடைய தலை முடிகளில் சில வெண்மையாக நரைத்திருந்தது, வயது அதிகமாக ஆகியிருக்கிறது என்பதை விளம்பரப்படுத்தியது. சீராக வெட்டி விடப்பட்டிருந்த அரும்பு மீசையிலும் சில முடிகள் நரைத்திருந்தன. அவன் விலை உயர்ந்த காப்பிக் கலர் முழுக்கால் சட்டையும் கோட்டும் அணிந்திருந்தான். பத்து விரல்களுக்குப் பத்து வைர மோதிரமும், தங்கச் சங்கிலியோடு கூடிய வாட்சும் கழுத்தில் தங்கச் சங்கிலியும் அணிந்திருந்தான். அவனைப் போலவே அவன் மனைவியும் விலை உயர்ந்த பட்டுப் புடவை உடுத்தியிருந்தாள்.

அந்த மனிதன் அவளைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போதிலும், அதைக் கொஞ்சமும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், “எங்கள் பையனை ஸ்கூலில் சேர்க்க வேண்டும்!” என்று சொல்லிவிட்டு, எதிரில் கிடந்த நாற்காலியில் அமர்ந்தான். அவன் மனைவியும் இன்னொரு நாற்காலியில் உட்கார்ந்தாள்.

மஞ்சுளாவின் சந்தேகம் அதிகரித்தது. ஒரு வேளை இது வேறு ஆசாமியாக இருக்குமா…? ஆனால் அடுத்த கணமே அவன் ரகுநாத்தான் என்று உள்ளம் உறுதி செய்தது.

“இதற்கு முன்னால் அவன் எந்தப் பள்ளிக்கூடத்தில் படித்தான்?”

மஞ்சுளாவும் தன்னை இன்னார் என்று காட்டிக் கொள்ளவில்லை. அதனால் புதிதாகச் சில சிக்கல்கள் ஏற்படலாம். அவனுடைய மனைவி சந்தேகப்படவும் செய்வாள்.

ரகுநாத் தன் மகன் ரவியைப் பற்றிய முழு விபரத்தையும் விளக்கிவிட்டு, “அந்தப் பள்ளிக் கூடத்தில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் என் பையனை அர்த்தமில்லாமல் அடிக்கிறார்கள். பணக்கார வீட்டுப்பிள்ளை என்றாலேயே அவர்களுக்குப் பிடிப்பதில்லை. அதனால்தான் இங்கே கூட்டிக் கொண்டு வந்தேன். நீங்கள் தாய் போல எல்லா மாணவர்களையும் கவனித்து வருவதாகக் கேள்விப்பட்டேன். நான் சொல்லுவது சரிதானே!” என்று கண்களைச் சிமிட்டினான்.

அவனுடைய பேச்சில் சில பணக்காரர்களுக்குரிய திமிரும் அகம்பாவமும் நிறைந்திருந்தன. அவன் யாரையும் ஒரு பொருட்டாக எண்ணாதவனைப் போலவே பேசினான்.

“நீங்கள் ஒரு மனு எழுதிக்கொடுத்துவிட்டுப் போங்கள். எங்களால் முடிந்ததைச் செய்கிறோம்.”

மஞ்சுளா சொன்னவுடன் ரகுநாத் ஒரு காகிதத்தை எடுத்து மேஜையின்மீது வைத்து ஆங்கிலத்தில் ஏதேதோ எழுதிக் கையெழுத்திட்டுக் கொடுத்தான்.

அவள் அதை வாங்கிப் படித்துப் பார்த்துவிட்டு, “உங்கள் மகனைப் பள்ளிக் கூடத்தில் சேர்க்கிறோமா இல்லையா என்பதை விரைவில் தபால் மூலம் தெரியப்படுத்தி விடுகிறோம்,” என்று அமைதியாகச் சொன்னாள். ஆனாலும் பயத்தின் விளைவால் நெஞ்சு ‘திக்திக்’ என்று அடித்துக் கொண்டேதான் இருந்தது. “நீங்கள் இப்படிச் சொன்னால் போதாது. கண்டிப்பாக உங்கள் பள்ளியில் சேர்த்துக் கொள்வதாக வாக்களிக்க வேண்டும். ஏனென்றால் நான் பெரும் பணக்காரனாக இருந்தபோதிலும் என் பையனுக்கு மற்றப் பள்ளிகளில் இடம் கிடைப்பது கடினமாக இருக்கிறது.”

“என்னால் முடிந்த மட்டும் பார்க்கிறேன். மற்ற ஆசிரியர்களைக் கலந்து பேசாமல் இப்பொழுது என்னால் எதுவும் சொல்ல முடியாது.”

“உங்களை நம்பி நாங்கள் போகிறோம். தபாலில் வரும் செய்தி நல்லதாகவே இருக்கட்டும்!” என்று அதட்டு வதைப்போல் அதிகாரத் தோரணையுடன் சொன்ன ரகுநாத் நாற்காலியை விட்டு எழுந்து வெளியே போனான்.

ஊமைபோல் பேசாமல் இருந்த அவனுடைய மனைவியும் பின்னால் எழுந்து சென்றாள். கணவனும் மனைவியும் ஆணவத்தின் சின்னங்களைப் போலவே காணப்பட்டார்கள். அவர்கள் போனதும் மஞ்சுளா என்ன செய்வது என்று தோன்றாமல் தடுமாற்றம் அடைந்தாள். வாழ்நாளில் யாரைப் பார்க்கக் கூடாது என்று நினைத்திருந்தாளோ, அவனையே பார்த்துவிட்டாள். சென்னையை நினைத்துப் பயந்ததும் அவனுக்காகத்தான். குழந்தைகளுடன் தாய்மை உணர்ச்சியுடன் பழகக் கூடியவள்தான் மஞ்சுளா. பகையாளி என்று தெரிந்தால்கூட உறவை அறுத்துக்கொள்ள விரும்பமாட்டாள். எல்லோரிடமும் சகஜமாகப் பழக வேண்டும் என்ற எண்ணம்தான் ஏற்படும். ஆனால் ரகுநாத்தைப் பார்த்ததிலிருந்து அவளுடைய உள்ளம் ஒரேயடியாக மரத்து விட்டது.

எவ்வளவு அகம்பாவம் நிறைந்தவன் அவன். பணக்காரனாக இருக்கிறோமே என்ற திமிர் அவனை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறது. தங்க அவனுடைய மகனைப் பள்ளியில் சேர்த்துக் கொண்டால் ஒவ்வொரு வினாடியும் தன்னுடைய மன அமைதி குறையும் என்று அவளுக்குத் தெரியும். அவனைப் பார்க்கும் போதெல்லாம் எத்தனையோ விதமான உணர்வுகள் நெஞ்சைத் தாக்கும் என்பதில் கொஞ்சமும் ஐயமில்லை..

இருந்தாலும் தன்னுடைய சுயநலத்திற்காகப் பள்ளியில் இடமிருந்து அவனைச் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது தப்பாயிற்றே. தன்னுடைய சொந்த விருப்பு வெறுப்பின் காரணமாக ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்ள நினைப்பது குற்றம்.

மஞ்சுளா பலவிதமான சிந்தனைகளின் நடுவே என்ன செய்வது என்று தோன்றாது சோர்ந்து போய் உட்கார்ந்திருந்தபோது ரகுநாத் மட்டும் தனியாக வந்தான். அவனுடைய உதடுகளில் விஷமத்தனமான புன்னகை நெளிந்தோடியது. அவனை மறுபடியும் பார்த்ததும் மஞ்சுளா, தான் ஒரு தலைமை ஆசிரியை என்பதையும் மறந்து திடுக்கிட்டாள். அவன் மனைவியையும் குழந்தையையும் வெளியே நிறுத்திவிட்டுத் தனியாக வந்திருந்தது பெரும் கலவரத்தை ஏற்படுத்தியது.

“மஞ்சுளா, துர்ப்பாக்கிய வசமாக நான் உன்னைக் கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்பதால் என் மகனை வஞ்சம் தீர்த்துக் கொள்ளாதே. அதனால்தான் உன்னைத் தனியாகப் பார்த்துப் பேசிவிட்டுப் போகலாம் என்ற எண்ணத்துடன் வந்தேன்.”

“மன்னிக்கவும், தலைமை ஆசிரியையாகிய என்னிடம் நீங்கள் இப்படியெல்லாம் பேசியது கொஞ்சமும் விரும்பத் தக்கதல்ல. எங்கள் கடமை எதுவோ அதை நாங்கள் நிச்சயமாகச் செய்வோம். அதனால் நீங்கள் எவ்விதக் கலவரமும் அடையாமல் தைரியமாக வீட்டுக்குப் போகலாம்.”

ரகுநாத் அவளைப் பார்த்து அசடு வழியச் சிரித்து விட்டு, “இன்னும் உன்னைப் பிடித்த குறும்புத்தனம் குறையவில்லை. வயதில் கிழவியானாலும் என்றென்றும் பழைய மஞ்சுளாவாகவே இருப்பாய் போலிருக்கின்றது!” என்று சொன்னான்.

அவன் தன்னை ஏமாற்றி மோசம் செய்தவன் என்பதால் அவளுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. இருந்தாலும் அவள் தன்னுடைய நிலையை இழந்து விடவில்லை.

“தயவு செய்து கிண்டல் செய்ய வேண்டாம். இது பள்ளிக்கூடம் என்பது நினைவு இருக்கட்டும்.”

“ஓஹோ! நான் மறந்து விட்டேன்!” என்று சொல்லி விட்டு அவளை அழுத்தமாகப் பார்த்த ரகுநாத், “என் பையனுக்கு நீ இடமில்லை என்று சொல்லி விட்டாய் என்று வைத்துக் கொள்வோம். அப்போது நான் என்ன நினைத்துக் கொள்வேன் தெரியுமா? நான் உன்னைக் கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்பதால் பழிக்குப் பழி வாங்கிக் கொண்டாய் என்று நினைத்து வருத்தப்படுவேன்!” என்றான்.

“வீணாக எதற்குக் கற்பனை செய்து கொண்டு பேசுகிறீர்கள்? எல்லாம் நல்லபடியாக அமையும்.”

மஞ்சுளா இப்படிச் சொன்னதும், “மஞ்சுளா, நாங்கள் உனக்கு வேண்டியவர்கள் என்பதை மறந்து விடாதே!” என்று கூறிவிட்டுப் போனான்.

தலைமை ஆசிரியை பதவியை உடனே ராஜினாமா செய்து விட்டுச் செங்கல்பட்டுக்கே போய்விடலாமா என்றுதான் முதலில் அவளுக்குத் தோன்றியது. ஆயினும் அவ்விதம் செய்வது கோழைத்தனம் என்று எண்ணத்துடன் அமைதி யடைந்தாள்.

ரகுநாத்தைப் பற்றிய நினைவு வரும்தோறும் உள்ளம் கடல் அலைகளைப் போல் சீறிப்பாயும் என்பதில் ஐயமில்லை. வயிறு பற்றிக் கொண்டு எரிவதைப் போன்ற பிரமையும் ஏற்படும். ஆயினும் எது வந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம் என்று தைரியமடைந்தாள்.

தினசரியும் கவலைப்பட்டுக் கொண்டே இருப்பவர்களால் இந்த உலகத்தில் எதையும் சாதித்து விட முடியாது அல்லவா?

ஏதோ ஒரு சக்தியினால் உந்தித் தள்ளப்பட்ட மஞ்சுளா, ரகுநாத்தும் அவனைச் சார்ந்தவர்களும் போய்விட்டார்களா, இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் மாடியிலுள்ள வராந்தாவில் வந்து நின்று கீழே பார்த்தாள்.

புத்தம் புதிய பிளைமத் கார் ஒன்று வாசலுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் பக்கத்தில் ஒரு வாலிபன் உட்கார்ந்து சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தான். அவன் மறைவாக இருந்து புகையை உள்ளே இழுத்து ஊதிக்கொண்டிருந்ததால் அவன் காரோட்டியாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டாள் மஞ்சுளா.

அப்போது ரகுநாத்தும் மற்றவர்களும் வந்தார்கள். காரோட்டி அவர்களைக் கண்டதும் சிகரெட்டை வீசி எறிந்து சட்டென்று எழுந்து நின்றான். அதே நேரத்தில் அவனுடைய கன்னத்தில் ‘பளார்’ என்று ஓர் அறை விழுந்தது. அப்படி முரட்டுத்தனமாக அடித்தவன் ரகுநாத்தான்.

“எவ்வளவு தைரியம் இருந்தால் என் எதிரில் வைத்தே புகை பிடித்துக் கொண்டிருப்பாய்! எஜமான் என்ற மரியாதை கொஞ்சமாவது இருக்கிறதா?”

ரகுநாத் வாயில் வந்ததை வார்த்தைகளாக்கி அவனைத் திட்டினான்.

காரோட்டி கன்னத்தைத் தடவிப் பார்த்துக் கொண்டானே தவிர, எதுவுமே பேசவில்லை. அடிமை என்று சொல்லுவார்களே, அதைப் போன்ற நிலைமைதான் அவனுக்கும். அவன் பவ்யமாக நின்று காரின் கதவுகளைத் திறந்து விரித்து வைத்ததும் தம்பதி சகிதம் பின் ஆசனத்தில் ரகுநாத் ஏறி அமர்ந்தான். சிறிது நேரத்திற்கெல்லாம் காரோட்டி கதவை ஓங்கி அறைந்து மூடிவிட்டுத் தனக்குரிய ஆசனத்தில் அமர்ந்து காரின் விசையை முடுக்கினான். கார் அந்த இதயமில்லாத பணக்கார மிருகங்களைச் சுமந்து கொண்டு விரைந்து சென்றது.

3

ர குநாத் மூர்க்கத்தனமாக நடந்து காரோட்டியின் கன்னத்தில் அறைந்ததை நேருக்கு நேராய்ப் பார்த்த மஞ்சுளா, “தெய்வமே! இப்படிப்பட்ட மனிதர்கள் இன்னும் இந்த உலகத்தில் இருக்கிறார்களே, அவர்களுக்கு நல்ல புத்தியைக் கொடுக்கக் கூடாதா?” என்று நினைத்து வருந்தினாள். பணம் இருந்துவிட்டால் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் என்ற எண்ணமா? இதைப் போன்ற எதேச்சாதிகாரத்திற்கு முடிவே கிடையாதா? மஞ்சுளாவின் இளகிய உள்ளம் வேதனைக் கடலாக மாறிற்று. ஆனாலும் அவளால் என்ன செய்ய முடியும்? ரகுநாத்தைப் பார்த்துப் பேசவோ, புத்திமதி கூறவோ அவள் கொஞ்சமும் விரும்பவில்லை. அவனுடைய முகத்தை என்றைக்குமே பார்க்கக் கூடாது என்பதுதான் அவளுடைய ஒரே வைராக்கியம். ஆனாலும் இனி என்ன செய்வது? பார்த்தே தீர வேண்டிய நிர்ப்பந்தத்தை விதி தானாகவே ஏற்படுத்திக் கொடுத்து விட்டதே!

அன்று மாலையில் மற்ற ஆசிரியர்களுடனும், ஆசிரியைகளுடனும் கலந்து பேசிவிட்டு ரவியைப் பள்ளிக் கூடத்தில் சேர்த்துக் கொள்வது சம்பந்தமாகப் பதில் எழுதி அனுப்பினாள். வகுப்பில் ஒரு பையனுக்குரிய இடம் இருப்பதால் மறுக்க முடியவில்லை. சிறுவன் ரவி பள்ளிக்கூடத்தில் சேர்ந்து ஒரு மாதம் கடந்து விட்டது. மஞ்சுளாதான் அவனுடைய வகுப்பு ஆசிரியை.

ரவி தந்தையின் குணாதிசயத்தை அப்படியே உரித்துக் கொண்டு பிறந்திருந்தான். அகம்பாவமான செருக்கு அவனுடைய ஒவ்வொரு நடவடிக்கையிலும் இருந்தது. வகுப்பில் இருக்கும் எல்லா மாணவர்களுடனும் சண்டைக்குப் போய்விடுவான். ஆசிரியர்களிடம் கூட மரியாதையாக நடந்து கொள்வதில்லை. மஞ்சுளா அவனால் மற்ற மாணவர்களும், மாணவிகளும் கெட்டுப் போய் விடுவார்களோ என்று நினைத்து வருந்தினாள். ஒரு குடம் பாலைக் கெடுப்பதற்குச் சிறியதொரு உப்புக் கல் போதாதா?

மற்ற ஆசிரியர்களும் ஆசிரியைகளும் அவனைப் பள்ளிக் கூடத்திலிருந்தே விலக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியை மஞ்சுளாவிடம் புகார் செய்தார்கள். ஆனால் மஞ்சுளா அந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அன்பினால் எப்படியும் அவனைத் திருத்தி விட முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தாள்.

சிறுவன் ரவியினால் மஞ்சுளா எத்தனையோ தொல்லைகளை அனுபவித்தாள் என்றுதான் சொல்ல வேண்டும். அவனைக் கண்காணித்துக் கொஞ்சம் கொஞ்சமாக அறிவு புகட்டுவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

அவன் மற்ற மாணவர்களையும், மாணவிகளையும் வம்புக்கிழுப்பதிலும், தலையில் குட்டுவதிலுமே முழு நேரத்தையும் செலவழித்து வந்தான். இதனால் வகுப்பில் ஒழுங்காகப் பாடமே நடைபெறுவதில்லை. சதாவும் அவனால் கூச்சல்தான்!

மஞ்சுளா படிப்படியாக அவனுடைய உள்ளத்தைப் பண்படுத்திக் கொண்டே வந்தாள். கடைசியில் ஓரளவு அவளுக்கு வெற்றியும் கிடைத்தது. அவன் குறும்புத்தனங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு விட்டு அவளிடம் மரியாதை செலுத்தவும் ஆரம்பித்தான். அவனுடைய குணத்தை ஓரளவு மாற்றி விட்டோமே என்பதை நினைத்தபோது அவளுக்குப் பெருமையாகவே இருந்தது. மகனைப் பார்க்க வேண்டும் என்ற கித்தாப்புடன் ரகுநாத் அடிக்கடி வருவான். மஞ்சுளாவிடம் ‘தொண தொண்’வென்று பேசுவதுதான் அவன் வாடிக்கையாகச் செய்து வரும் பொழுது போக்கு. மஞ்சுளா அவனைப் பார்க்கும்போதெல்லாம் பழைய நினைவுகள் உந்தித் தள்ளப்பட்டவளாக மனம் குமுறுவாள். ஆயினும் அவள் எந்தக் குமுறலையும் வெளிக்காட்டிக் கொள்வதில்லை. அது மட்டுமல்ல; சக ஆசிரியைகளுக்குக் கூட அவனைப் பற்றி எதுவும் தெரியாமல் மறைத்து விட்டாள்.

அவள் கல்லூரி மாணவியாக இருந்தபோது ரகுநாத்தும் மாணவனாக இருந்தான். கல்லூரிப் பருவத்தில் காதல் தொற்றிக் கொள்வது நியதி என்பதால், முறைப்படி காதல் அவர்களையும் தொற்றிக் கொண்டது. அவன் லட்சாதிபதி. ஆனால் அவள் ஏழை. இரண்டு பேரும் கல்லூரிப் படிப்பு முடியும் வரையிலும் காதலித்தார்கள். படிப்பு முடிந்ததும் அவர்களுடைய காதல் படிப்பும் முடிவடைந்து விட்டது.

ரகுநாத் அவளுடைய புனிதத்தைச் சூறையாடக் காதல் என்ற கவசத்துடன் எவ்வளவோ முயன்று பார்த்தான். ஆனால் மஞ்சுளா கடைசி வரையில் ஏமாறவில்லை. மணமாலை சூட்டுவதற்குத் தன்னுடைய கழுத்தை நீட்டுவதற்குத் தயாராக இருந்தாளே தவிர, உடற்பசியைத் தீர்த்துக் கொள்ள ஒரு போதுமே சம்மதிக்கவில்லை. அவன் எந்த நோக்கத்தோடு அவளை நேசித்த போதிலும் மஞ்சுளா அவனை முழுக்க முழுக்க நம்பினாள். எப்படியும் தன்னைக் கல்யாணம் செய்து கொள்வான் என்ற உறுதியோடு இருந்தாள். ஆனால் அவன் அவளுடைய காதலை உதறித் தள்ளிவிட்டு வசந்தா என்ற பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டான்.

மஞ்சுளா காதல் தோல்வியை நினைத்துக் கலங்கிய போதிலும் ஒரே ஒரு விஷயத்தை நினைத்து மட்டும் திருப்தியடைந்தாள். அதாவது தன்னுடைய கற்பு பறிபோகாமல் பாதுகாக்கப்பட்டதே என்ற திருப்திதான். அதிலிருந்து அவள் முற்றிலும் மாறுபட்ட பெண்மணியாகவே மாறிவிட்டாள். காதல் என்று சொன்னாலே கசப்பாகி விட்டது. அவளுடைய உணர்ச்சிகள் எல்லாமே மரத்து விட்டன.

அதன் பிறகு அவள் சென்னையிலேயே இருக்கக் கூடாது என்ற எண்ணத்துடன் திருச்சிக்குப் போய் ஆசிரியர் படிப்பு படித்துத் தேர்வு பெற்றாள். செங்கல்பட்டில் அவளுக்கு ஆசிரியை வேலை கிடைத்தது. நாலைந்து வருடங்களைச் செங்கல்பட்டிலேயே கழித்தாள். கடைசியாகத்தான் அவள் சென்னைக்குப் பதவி உயர்வுடன் மாற்றப்பட்டாள்.

மஞ்சுளா தன்னுடைய கடந்த கொண்டாள். எவ்வளவுதான் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டபோதிலும் கண்கள் கலங்கத்தான் செய்தன. வாழ்க்கையில் ஒரே ஒரு முறை ஏற்படக்கூடிய காதலுக்கு அதிக சக்தி இருக்கிறது போலும்.

அன்று மாலையில் வழக்கம் போல் வகுப்புகள் முடிவடைந்ததும் எல்லா மாணவர்களும் மாணவிகளும் போனார்கள்.

சில மாணவர்களை அழைத்துச் செல்லுவதற்குப் பெற்றோர்களோ, நண்பர்களோ வருவார்கள். இன்னும் சிலருக்காகக் கார்களும் ரிக்ஷா வண்டிகளும் காத்துக் கொண்டு நிற்கும். ரவிக்காக அவனுடைய பிளைமத் கார் தினசரியும் வரும்.

ஆனால் அன்றைக்கு மட்டும் வெகு நேரம் ஆகிய பிறகும் ரவிக்காக எந்தக் காரும் வரவில்லை.

மற்ற மாணவர்களுக்காகக் காத்துக் கொண்டிருந்த ரிக்ஷா வண்டிகளும், கார்களும் போய்விட்டன. மாணவர்களும், மாணவிகளும் அவரவர் வீடுகளுக்குச் சென்று விட்டார்கள். ஆசிரியர்களும், ஆசிரியைகளும் கூடப் போய் விட்டார்கள். ஆனால் ரவியும் மஞ்சுளாவும்தான் கடைசியாக நின்று கொண்டிருந்தார்கள். எல்லோரும் போய்விட்டதால் அவனுக்கு அழுகை அழுகையாக வந்தது.

அவனுடைய கண்ணீரைப் புடைவை முந்தானையால் துடைத்து விட்ட மஞ்சுளா, “உன்னை அழைத்துச் செல்லுவதற்காகக் கார் ஏன் வரவில்லை?” என்று கனிவுடன் கேட்டாள்.

“அந்த டிரைவருக்கு திமிர் அதிகம். அதனால் எங்கேயாவது ஹோட்டலில் உட்கார்ந்து மூக்கு முட்டச் சாப்பிட்டுக் கொண்டிருப்பான்.” சிறுவன் ரவி இப்படிச் சொன்னதும், “வேலை செய்யும் தொழிலாளிகளை நாம் அலட்சியமாக நினைக்கக்கூடாது. அவன் எதற்காக வரவில்லை என்பதை நாம் தெரிந்து கொள்வதற்கு முன்னால் எதையுமே பேசக்கூடாது. நாம் எப்பொழுது எதைப் பேசினாலும் கண்ணியம் நிறைந்திருக்க வேண்டும்,” என்று மஞ்சுளா அறிவுரை வழங்கினாள்.

ரவி அவள் சொன்னதைக் கேட்டு அமைதியடைந்து, “நான் எப்படி வீட்டுக்குப் போவேன், டீச்சர்?” என்று கண்களைக் கசக்கினான்.

“இன்னும் சிறிது நேரம் வரையில் பார்ப்போம். அதற்குள் டிரைவர் வராவிட்டால் நானே ஒரு டாக்சியில் ஏற்றிச் சென்று உன்னுடைய வீட்டில் ஒப்படைத்து விட்டு வருவேன்,” என்றாள் மஞ்சுளா.

அவன் ஆனந்தமடைந்தவனாக மஞ்சுளாவின் கையைப் பிடித்துக் கொண்டான்.

அதே நேரத்தில் பிளைமத் கார் மின்னல் வேகத்தில் ஊடுருவிப் பாய்ந்து வந்து ஒரு உலுக்குடன் நின்றது..

காரோட்டி காரிலிருந்து கீழே இறங்கி வந்து காரின் பின்புறத்தைப் பார்த்துவிட்டு விம்மினான். அவனுடைய கண்களில் கண்ணீர் கோர்த்து நின்றது.

ரவி காரின் பின் கதவைத் திறந்து கொண்டு ஆசனத்தில் ஏறி உட்கார்ந்தான்.

காரோட்டி தயங்கியபடியே நின்றுகொண்டிருந்தான். அவனுடைய கண்கள் காரின் பின்புறத்தையே கவனித்துக் கொண்டிருந்தன.

“ஏன் இன்றைக்கு இவ்வளவு நேரம்?” என்று கேட்டுக் கொண்டே மஞ்சுளா அவன் பக்கத்தில் போய் நின்றாள்.

காரோட்டி பாபு கண்ணீரை இரண்டு கைகளாலும் துடைத்துவிட்டு, “என்னுடைய காரின் பின் பாகத்தில் இன்னொரு கார்க்காரன் வந்து மோதிவிட்டான். அதனால் பின்புறம் நசுங்கி விட்டது!” என்று சொன்னான்.

அவன் கட்டுமஸ்தான உடற்கட்டும், கம்பீரமான தோற்றமும் கொண்டவனாக இருந்தான். இளமையின் பூரிப்பு அவனுடைய உடலெங்கும் பரவி நின்றது. வயது இருபதுதான் இருக்கும். அப்படிப்பட்ட ஆணழகன் கண் கலங்கியது மஞ்சுளாவுக்கு ஒன்றும் ஆச்சரியமாக இல்லை. ஏனென்றால் அவனுடைய முதலாளி ரகுநாத் முன்கோபி என்றும், முரட்டுத்தனம் நிறைந்தவன் என்றும், அவளுக்குத் தெரியும். ஏற்கெனவே அவன் ஒரு மாதத்திற்கு முன்னால் கன்னத்தில் அறைந்த காட்சியை நேருக்கு நேராகப் பார்த்திருந்தாள்.

“உன் முதலாளி கோபித்துக் கொள்வார் என்று பயப்படுகிறாயா?” கனிவான கேள்வி மஞ்சுளாவிடமிருந்து வந்தது.

“ஆமாம், காரணமில்லாமல் கோபித்துக் கொள்ளும் அவர், காரில் அடிபட்டதற்காக என்னென்ன செய்வாரோ என்று தெரியவில்லை. இன்றைக்கு ஏதோ ஒன்று நடக்கப் போகிறது!” என்று காரோட்டி பாபு பொருமினாள்.

“காரில் அடிபட்டதற்கு யார் காரணம்?”

“பின்னால் வந்த கார்தான். நான் என்னுடைய காரை நிறுத்திக் கொண்டிருந்தபோது இடித்து விட்டது. தவறு அவனைச் சேர்ந்ததுதான் என்று எல்லோருமே சொன்னார்கள். ஆனால் என்னுடைய முதலாளிக்கு நல்லது கெட்டதைப்பற்றிச் சிந்திக்கத் தெரியாதே என்றுதான் அஞ்சுகிறேன்.”

பாபுவின் நிலையைப் பார்ப்பதற்குப் பரிதாபமாக இருந்தது. அவனுக்காக மிகவும் இரங்கினாள் மஞ்சுளா, இப்படிப்பட்ட வாலிபன் ஒருவன் வீணாக உதை வாங்கப்போகிறானே என்ற கவலை அவளையும் ஆட்கொண்டது. “நீ குற்றமற்றவன் என்பதை முன்கூட்டியே சொல்லி விடவேண்டும். உனக்குப் பயமாக இருந்தால் வேறு யாரையாவது அழைத்துச்சென்று சொல்ல வைக்கலாம்.” அந்த வாலிபன் கணப்பொழுது நினைத்துவிட்டு, “என்மீது அன்பு செலுத்தக் கூடியவர்கள் யாருமே சென்னையில் இருப்பதாகத் தெரியவில்லை. நான் ஓர் அனாதை, வாத்தியாரம்மா. நீங்கள் நினைத்தால் எனக்கு உதவி செய்ய முடியும். உங்கள் பேச்சை அவர் உண்மை என்று நம்புவார்!” என்று சொன்னான்.

அவன் தன்னைத் துணைக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறான் என்பதை மஞ்சுளா தெளிவாகத் தெரிந்து கொண்டாள். அவனுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இயல்பாகவே அவளுக்கு எழுந்தது. ஆனால் கரும்புலியாகிய அவனுடைய குகைக்கு எப்படிப் போவது?

“வேண்டுமானால் நான் ஒன்று செய்கிறேன். நீ இங்கேயிருந்து போவதற்குள் டெலிபோன் மூலம் பேசி நிலைமையை விளக்கி விடுகிறேன்.”

தலைமை ஆசிரியை சொன்னால் அவளுடைய பேச்சுக்கு முதலாளி ரகுநாத் கட்டுப்படுவான் என்று பாபு நம்பினான். அவன் நம்பியதிலும் தவறு இருக்க முடியாது. ஏனென்றால் அவனுடைய மகன் துஷ்டன் என்று தெரிந்த பிறகும் பள்ளிக்கூடத்தில் சேர்த்துக் கொண்டாள். இதனால் அவளுக்கு மற்றவர்களைவிட அதிகச் செல்வாக்கு இருக்கலாம்.

“நீங்கள் இந்த உதவியை உடனடியாகச் செய்து விட்டால் அதுவே எனக்குப் போதும். தயவுசெய்து இப்பொழுதே டெலிபோன் செய்து விடுகிறீர்களா?”

மஞ்சுளா அவனுக்கு அபயம் அளிப்பதைப் போல் தலையை அசைத்தாள்.

“நான் வருகிறேன், டீச்சரம்மா!” என்று சொன்ன பாபு, காரின் முன்புறத்தில் அமர்ந்து நேரமாகி விட்டதால் சற்று வேகமாகக் காரை ஓட்டிச் சென்றான்.

கார் திரும்பும்போது பின்புறத்தைக் கவனித்தாள் மஞ்சுளா. காரின் பின்புறம் சிறிதளவு நசுங்கியிருந்தது.

4

மிருகத்தனமான முறையில் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் ரகுநாத்துடன் பேசப்போகிறோமே என்பதை நினைத்தபோது மஞ்சுளாவுக்கு விரசமாகத்தான் இருந்தது. அவனுடைய முகத்திலேயே விழிக்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்த அவள் பேசுவதற்கு எப்படி மனம் ஒப்புவாள்?

ஆயினும் அப்பாவி வாலிபனாகிய பாபுவைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் தன்னுடைய அறையினுள் சென்று ரகுநாத்துக்கு டெலிபோன் செய்தாள். “நான்தான் ரகுநாத் ஸ்பீக்கிங்…” என்று மறுமுனையிலிருந்து பதில் வந்ததும், மஞ்சுளா விபத்தைப்பற்றிய விபரத்தை

விளக்கிவிட்டு, “உங்கள் பாபு குற்றமற்றவன். அதனால் அவனை மன்னித்துவிடுங்கள்!” என்று சொன்னாள். ஆனால் அதற்கு அவன் கூறிய பதிலோ…?

“மஞ்சுளா, இது உனக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத விஷயம். அதனால் நீ இதில் தலையிடாதே. மேலும் பாபு வாலிபன்! அவனுக்காக நீ பரிந்து பேசினால் பார்ப்பவர்கள் வித்தியாசமாக நினைத்துக்கொள்வார்கள். மேலும் உனக்கும் வயது அதிகமாகி விடவில்லையே. பார்ப்பதற்குக் கல்யாணப் பெண்ணைப் போல்தானே ‘ஜம்மென்று’ இருக்கிறாய்? எனக்கே சில வேளைகளில் பழைய நினைவுகள் வந்து விடுவதுண்டு.” அதற்கு மேல் மஞ்சுளாவால் கேட்டுச் சகித்துக் கொள்ள முடியாததால் ரிசீவரை அதற்குரிய இடத்தில் வைத்து விட்டு மிகுந்த வேதனையை அனுபவித்தாள்.

அவன் எப்படிப்பட்ட இரக்கமற்ற வார்த்தைகளைச் சொல்லிவிட்டான். கொஞ்சமாவது மனிதாபிமானம் இருந்தால் இப்படியெல்லாம் பேசுவானா….?

பாபு வாலிபனாம், அவனுக்காகப் பரிந்து பேசினால் பார்ப்பவர்கள் வித்தியாசமாக நினைத்துக் கொள்வார்களாம்.

அப்படி நினைத்துக் கொள்வதற்கு என்ன இருக்கிறது? அவனுக்கு அதிகபட்சம் இருபது வயது இருக்க முடியாது. ஆனால் எனக்கோ முப்பது வயதுக்கு மேலாகிவிட்டது. பார்ப்பவர்களுக்கு வயதிலுள்ள இந்த ஏற்றத் தாழ்வுகளா தெரியாது? மஞ்சுளா மிகுந்த குழப்பம் அடைந்தவளாக வீட்டுக்கு வந்தாள். மனத்தைக் கவலை அழுத்திக்கொண்டே இருந்ததால் அமைதி கொஞ்சங்கூட ஏற்படவில்லை.

அன்றிரவு மணி பதினொன்று இருக்கும். மஞ்சுளாவுக்கு இன்னும் தூக்கம் வரவில்லை. படுக்கையில் படுத்திருந்த போதிலும் கண்களைத் திறந்தபடியேதான் இருந்தாள். வாழ்க்கையில் அமைதியான ஓர் உலகத்தில் சஞ்சாரம் செய்து கொண்டிருக்க வேண்டும் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் அந்த நினைப்பு எண்ணம் ஆகியவை எல்லாம் விழலுக்கு இறைத்த நீரைப்போல் நின்றுவிட்டன.

பாபுவை அவளால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை. எப்படிப்பட்டகெட்ட எண்ணமும், அயோக்கியத்தனமான புத்தியும் இருந்திருந்தால் ரகுநாத் இப்படி ஆணவமாகப் பேசுவான்?

எல்லோரையும் அவன் தன்னைப் போலவே நினைத்துக் கொண்டிருக்கிறானா! இல்லாவிட்டால் இவ்வளவு தைரியமாக ஒருபோதுமே பேசியிருக்க முடியாதே! மஞ்சுளா படுக்கையில் புரண்டு குப்புறப்படுத்தாள். முகம் தலையணைக்குள் அழுந்தியது.

பாபுவை எப்படியும் ரகுநாத் அடித்து நொறுக்கியிருப்பான் சிகரெட் குடித்துக் கொண்டிருந்ததற்கே கொஞ்சமும் சகித்துக் கொள்ளாமல் கன்னத்தில் அறைந்த அவன் விட்டு வைப்பானா!

அவள் ஏதேதோ நினைத்துக் கவலைப்பட்டுக்கொண்டிருந்த போது கதவைப் படபடவென்று இடிக்கும் ஓசையும் “டீச்சரம்மா!” என்று பரபரப்புடன் அழைக்கும் குரலும் கேட்டன.

பாபுதான் தன்னை அழைக்கிறான் என்பதில் கொஞ்சமும் சந்தேகம் இல்லை. அவனுக்கு என்ன ஆபத்து ஏற்பட்டதோ….?

மஞ்சுளா வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து சென்று கதவைத் திறந்தாள். அவள் எதிர்பார்த்ததைப் போல் பாபுதான் நின்று கொண்டிருந்தான்.

“பாபு! நீயா?” என்று சொன்ன மஞ்சுளா, அவன் நிற்க முடியாமல் தத்தளிக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டதும், அவனது வலது கையை எடுத்துத் தன்னுடைய தோளோடு போட்டுக் கொண்டு கைத்தாங்கலாக அழைத்து வந்து படுக்கையில் உட்கார வைத்தாள்.

உடனே அவள் படுக்கையில் படுத்துக் கொண்டான். இளம் இரத்தம் பாய்ந்தோடக் கூடிய பாபுவுக்கா இந்த நிலைமை என்று எண்ணிய மஞ்சுளா அவனுடைய உடம்பின் மீது பார்வையை ஓடவிட்டாள்.

சட்டையின் சில பகுதிகளில் திட்டுத் திட்டாக இரத்தம் கசிந்திருப்பது தெளிவாகத் தெரிந்தது.

அவனை ரகுநாத் அடித்திருக்கிறான் என்பதைத் தெரிந்து கொண்ட மஞ்சுளா,

“உன்னை அவர் அடித்தாரா?” என்று பதட்டத்துடன் கேட்டாள்.

பாபுவால் பேச முடியவில்லை. அவன் மெல்ல எழுந்து கட்டிலின்மீது உட்கார்ந்து கொண்டு திறப்பு வைத்துத் தைக்கப்பட்டிருந்த சட்டையை விலக்கினான்.

என்ன அக்கிரமம்? வரிப்புலியைப் போல் அவனுடைய உடலெங்கும் வளைந்த இரத்தக் கோடுகள் காணப்பட்டன. சவுக்கினால் அடித்ததால் ஏற்பட்ட காயங்கள்தான் அவை. “பாபு, என்ன இதெல்லாம்?” என்று பதறிய மஞ்சுளா, மேலேயிருந்த மின்சார விசிறியைச் சுழல விட்டு விட்டுச் சமையலறையினுள் ஓடி வந்தாள்.

பாபுவலி பொறுக்க முடியாமல் துடித்துக் கொண்டிருந்தான். அவனால் கட்டிலில் படுத்துக் கொண்டிருக்கவும் முடியவில்லை. எங்கே சாய்ந்தாலும் அந்த இடத்தில் எல்லாம் தசை வலித்தது.

சிறிது நேரத்திற்கெல்லாம் மஞ்சுளா கொதித்த வெந்நீர் எடுத்துக் கொண்டு வந்து சுத்தமான துணியை அதில் நனைத்து எடுத்துப் பிழிந்து அவனுடைய உடலெங்கும் இலேசாக ஒத்தடம் கொடுத்தாள்.

பாபுவுக்கு அது இதமாக இருந்தது. தன்னுடைய உடலின் பல பகுதிகளையும் அவளுக்கு வசதியாக்கிக் கொடுத்தான். அவன் பெண்ணின் ஸ்பரிசத்தையே இதுவரையிலும் பெற்றதில்லை. அதனால் மஞ்சுளாவின் கரம் உடம்பில் பட்டபோது எத்தனையோ விதமான உணர்ச்சிகளை அடைந்தான். உடலில் கிளுகிளுப்பு ஏற்பட்டுக் கூச்சம் உண்டாவதைப் போன்ற பிரமையும் எழுந்தது.

மஞ்சுளாவின் மென்மையான பசுமையான கரம் அவனுடைய உடம்பில் பட்டபோது அவன் இந்த உலகத்திலேயே இருக்கவில்லை. தன் உடலெங்கும் பலமான காயம் ஏற்பட்டிருக்கிறது என்பதையும், தாங்க முடியாத வலி ஏற்பட்டிருக்கிறது என்பதையும் மறந்துவிட்டான்.

ஆனால் மஞ்சுளா எதையுமே கவனிக்கவில்லை. அவனுடைய வலியைப் போக்குவதிலும் இரத்தம் கசிந்திருக்கும் டங்களில் டிஞ்சரில் பஞ்சைத் தோய்த்து எடுத்துப் போடுவதிலுமே கண்ணும் கருத்துமாக இருந்தாள்.

“பாபு, எப்படி இருக்கிறது உடம்பு? வலி பரவாயில்லையா?”

பாபு அவளுடைய இரண்டு கைகளையும் பற்றிக் கண்களில் ஒத்திக் கொண்டு வணங்கினான். ஒரு மிருதுவான சுகம் அப்பொழுது அவனுக்கு ஏற்படத்தான் செய்தது.

“டீச்சரம்மா, உங்களை என்னவென்று புகழுவது என்றே எனக்குத் தெரியவில்லை. உங்களுடைய அன்பு கிடைக்கப் பெற்ற நான் பாக்கியசாலி.”

அவன் கட்டிலை விட்டிறங்கி நின்றான்.

“ஏன் அதற்குள்…! கட்டிலில் படுத்துக்கொள். இரண்டொரு தினங்கள் நன்றாக ஓய்வு எடுத்துக் கொண்டால் காயங்கள் ஆறிவிடும்.”

“என் காயங்கள் ஆறுவதைப் பற்றி நான் கொஞ்சமும் கவலைப்படவில்லை. உங்கள் பேச்சையும் அலட்சியப்படுத்தி என்னை அடித்து நொறுக்கிய ரகுநாத் மீது போலீஸில் புகார் செய்யப் போகிறேன். அவனுக்குப் புத்தி புகட்டாமல் நான் விடப்போவதில்லை.”

என்னதான் முதலாளியாக இருந்தபோதிலும், தொழிலாளியைக் கை நீட்டி அடிப்பது தப்பு அல்லவா? அவர்கள் போலீஸாரிடம்தான் நியாயம் தேடமுடியும்.

மஞ்சுளா அவன் எதிர்த்து அடிக்காமல் வந்திருக்கிறான் என்பதை நினைத்து மகிழ்ந்தபோதிலும், ஏழை ஒருவன் கொடுமைப் படுத்தப்பட்டிருக்கின்றானே என்று வருந்தினாள்.

இந்த மாதிரியான மனித மிருகங்களுக்குப் பாடம் புகட்ட வேண்டியது முறைதான். அப்பொழுதுதான் மற்றவர்களிடமாவது மனிதாபிமானத்துடன் நடந்து கொள்வார்கள். ஆனால் போலீஸ் மூலம் நடவடிக்கை எடுப்பதை அவள் கொஞ்சமும் விரும்பவில்லை. எதையுமே கூடிப் பேசிச் சுமுகமாகத் தீர்த்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை உடையவள் அவள்.

“நீ போலீசுக்குப் போவதை நான் கொஞ்சமும் விரும்பவில்லை. அவர்கள் வழக்குத் தொடர்ந்து அவருக்குத் தண்டனை கிடைத்துவிடுவதாகவே வைத்துக்கொள்வோம். உன்மீது விழுந்த தழும்புகள் மறையுமா?”

“மறையாது என்பது உண்மைதான். ஆனால் கொத்தி விட்டது கருநாகம் என்பது தெரிந்த பிறகு அதை அடித்துக் கொல்லாமல் உயிருடன் விடலாமா? அந்த நாகத்தால் என்னைப் போன்ற பலருக்குத் தீங்குதான் ஏற்படும்.”

பாபு எவ்வளவுதான் சொன்னபோதிலும், போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகும் எண்ணத்தை மஞ்சுளா கொஞ்சம்கூட வரவேற்கவில்லை. கடைசியில் அந்த எண்ணத்தையே கைவிடும்படி செய்தாள்.

“அப்படியானால் ரகுநாத்தைப் போன்ற கயவர்கள் இனிமேலும் வாழத்தான் வேண்டுமா?”

“கயவர்கள் சிறிது காலம் எதேச்சாதிகாரத்துடன் வாழ்ந்த போதிலும், காலம் அவர்களுடைய கொட்டத்தைத் தாமாகவே அடக்கிவிடும். அதனால் அவரைத் தண்டிக்கும் பொறுப்பை இயற்கைக்கே ஒப்படைத்து விடுவோம். அவருடைய மகன் இப்பொழுது மற்றவர்களோடு சேர்ந்து பழகும் நல்ல பையனாக மாறிவிடவில்லையா?”

பாபு வெளியே போவதுதான் நல்லது என்ற எண்ணத்துடன், “உங்கள் சொற்படியே நான் நடப்பேன்!” என்று சொல்லி விட்டு, “உங்களுடைய உதவிக்கு எப்படிக் கைம்மாறு செய்வது என்று தோன்றாமல் விழிக்கிறேன். என்றைக்காவது என் கடமையை நிறைவேற்றும் காலம் வரும் என்ற நம்பிக்கையுடன் நான் புறப்படுகிறேன். டீச்சரம்மா, நான் போய் வரட்டுமா?” என்று கலங்கினான்.

“நீ எங்குமே போகக் கூடாது: உனக்கு நல்ல நிலைமை வரும் வரையில் என்னுடன்தான் இருக்க வேண்டும்.”

மஞ்சுளா பளிச்சென்று சொல்லி விட்டாளே தவிர, அதன் பிறகு ஏன் இப்படிச் சொன்னோம் என்று நினைத்து வருந்தினாள். ஆனாலும் மிகுந்த துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் அவனை வெளியே விட்டு விடுவதற்குக் கொஞ்சமும் விரும்பவில்லை. அவன் தன்னுடனேயே எப்பொழுதும் இருக்க வேண்டும் என்ற எண்ணம். அவனைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதைப் போன்ற மயக்கம்.

பாபு அவள் என்ன அர்த்தத்தில் இப்படிச் சொன்னாள் என்பதைப் புரிந்து கொள்ளாமல் விழித்தான். ஒரு வேளை அவள் தன்னை நேசிக்கிறாளா? பல வருடங்களாகக் கல்யாணம் செய்து கொள்ளாமல் இருக்கும் பெண்களுக்கு மோகம் அதிகமாக இருக்கும் என்று எப்பொழுதோ படித்த வாசகங்கள் அவனுடைய நெஞ்சில் மோதி நின்றன. பின்பு மஞ்சுளா கட்டில் ஓரமாக நின்றுகொண்டு, “ஏதாவது சாப்பிட்டாயா, பாபு?” என்று மிகுந்த கனிவோடு கேட்டாள்.. “ஆமாம்!” என்று பாபு சொன்னான்.

“நீ பொய் சொல்லுகிறாய் என்பது தெளிவாகத் தெரிகிறது. காப்பி போட்டு எடுத்து வருகிறேன்,” என்று சொன்ன மஞ்சுளா முதலில் அலமாரியைத் திறந்து சில பிஸ்கட்டுகளை எடுத்து ஒரு பீங்கான் பிளேட்டில் வைத்துக் கொண்டு வந்து கொடுத்தாள்.

பாபுவின் நெஞ்சு நெகிழ்ந்தது. வாத்தியாரம்மாவுக்குத்தான் எவ்வளவு அன்பு!

கருணை!

இந்தக் கருணைக்கும் அன்புக்கும் என்ன அர்த்தம்? அதுதான் அவனுக்குப் புரியவில்லை. ஆனாலும் அவற்றிற்குப் பின்னணியில் ஏதோ ஒன்று இருக்கக்கூடும் என்பதை மட்டும் உணர்ந்தான்.

மஞ்சுளா அவன் பிஸ்கட்டுகளைச் சாப்பிட்டு முடிப்பதற்குள் காப்பி தயாரித்து எடுத்துவந்து கொடுத்தாள்.

எவர்சில்வர் டம்ளரைப் பற்றிய போது தற்செயலாக மஞ்சுளாவின் கையைத் தீண்டிவிட்டான் பாபு.

அப்போது மின்சாரம் பாய்ந்து விட்டதைப் போன்ற உணர்ச்சி ஏன் ஏற்படவேண்டும்? உடலெங்கும் ஒருவிதப் புல்லரிப்பு ஏற்படுவானேன்?

“எனக்காக நீங்கள் மிகுந்த சிரமப்படுகிறீர்கள். தூங்கக்கூடிய உங்கள் பொன்னான நேரத்தை நான் வீணாக்கிவிட்டேன்.”

“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்வது என்றால் எனக்கு மிகுந்த திருப்தியாக இருக்கும்.” மஞ்சுளா இப்படிச்சொன்னபோது அவளுடைய குரல் ஏனோ நடுங்கியது.

அதைப் பாபு கவனிக்கத் தவறவில்லை. அவளுடைய குரல் நடுக்கத்திற்கான காரணத்தை அலசி ஆராய்வதில் மூழ்கினான். ஆனால் அடுத்த கணமே தான் செய்வது தவறு என்று மனச்சாட்சி இடித்துக் கூறியது.

உதவி செய்யும் அந்தப் பெண்மணியைப் பற்றித் தப்பாக நினைக்கலாமா?

அதைப்போன்ற துரோகம் வேறென்ன இருக்க முடியும்!

மஞ்சுளா கல்யாணமாகாதவள்தான். ஆனால் அவளுடைய வயது முப்பதைக் கடந்து விட்டது. காலா காலத்தில் அவளுக்குக் கல்யாணமாகியிருந்தால் கல்யாண வயதில் அவளுக்கும் ஒரு மகள் இருப்பாள்.

அவன் எதையோ நினைத்துக் குழம்புகிறான் என்பதைப் புரிந்து கொண்ட மஞ்சுளா, “எதைப்பற்றியும் சிந்திக்காமல் அமைதியாகப் படுத்துத் தூங்கு. விடிந்த பின்பு அடுத்து நாம் என்ன செய்யலாம் என்பதைப் பற்றி யோசிக்கலாம்,” என்று கூறினாள்.

பாபு தலையை அசைத்ததும் மஞ்சுளா ஒரு போர்வையை எடுத்து அவனுடைய காலிலிருந்து கழுத்து வரையிலும் இழுத்துப் போர்த்தினாள். அப்போது பாபுவின் உடலெங்கும் வியர்த்துக் கொட்டியது.

எத்தனையோ விதமான கற்பனை உணர்வுகள் பொங்கி மறைந்தன.

பின்னர் மஞ்சுளா சன்னல்களை மூடிவிட்டுப் பக்கத்து அறையினுள் சென்று கதவை மூடித் தாழிட்டுக் கொண்டாள்.

படுத்துக் கொள்வதற்குப் பழைய புடவை ஒன்றைத்தான் அவள் உபயோகித்துக் கொள்ள வேண்டியதாக இருந்தது.

மஞ்சுளா படுத்துக்கொண்டே கற்பனை உலகில் சஞ்சரிக்கத் தொடங்கினாள். அவளுடைய உள்ளம் எதையோ நினைத்துக் குழம்பியது.

5

பாபு வந்து இரண்டு மூன்று தினங்கள் கடந்து விட்டன. அவன் பூரண குணமடைந்து விட்டான். தான் ஒரு வாலிபனாக இருந்தும் அந்த வீட்டிலேயே தங்கியிருந்தது என்னவோ போல் இருந்தது. மேலும் மஞ்சுளாவைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அடிக்கடி ஏற்பட்டது.

அதுவுமல்லாமல் அவளுடைய அழகை ரசிக்கவும் கண்கள் துடித்தன. தான் செய்வது தப்பா இல்லையா என்பதைப் புரிந்து கொள்ளும் சக்தியும் அவனுக்கு ஏற்பட வில்லை.

ஏன் இந்த நிலை ஏற்படுகிறது? முப்பது வயதுள்ள ஒரு – பெண்ணை விபரீதமான எண்ணத்துடன் கற்பனை செய்து பார்ப்பது தப்பு அல்லவா?

மஞ்சுளா காலையில் குளித்துவிட்டுத் தூய வெண்ணிறத்தில் பச்சைப் புள்ளிகள் போடப்பட்ட புடவையும் சிவப்புநிற ஜாக்கெட்டும் அணிந்து கொண்டு நிலைக் கண்ணாடியின் முன்னால் நின்று கொண்டு தன்னுடைய தோற்றத்தைப் பார்த்தாள்.

வயது அதிகமாகி விட்டது போன்ற உணர்வு அவளுக்கு ஏற்படவில்லை. கூந்தல் கலைந்துகிடந்து பருவப் பெண்ணைப் போலவே காட்சியளிப்பதைப் போன்ற பிரமை ஏற்பட்டது. இப்பொழுது வேறு யாராவது பார்த்தால் பதினெட்டு வயதுகூட மதிக்க மாட்டார்கள். மஞ்சுளா பற்களை இலேசாகக் காட்டி முறுவலித்தாள். ஆஹா…! முல்லைச் சரத்தைப் போன்ற பல் வரிசையின் அழகுதான் என்ன!

குருத்து வாழையைப்போல் மதமதப்புடன் விளங்கிய. கழுத்தைப் பிடித்துப் பார்த்தாள். பொங்கும் இளமையின் மிடுக்குதான் என்ன! தோள்ப் பட்டைகளை இரண்டு கைகளாலும் அமுக்கிப் பார்த்தாள்.

நன்றாக இறுகி உருளைக் கிழங்கு போலிருந்தது. உடற்கட்டைப் பல கோணங்களில் அசைத்துப் பார்த்தாள்.

மஞ்சுளாவுக்குத் தன்னுடைய தோற்றம் மிகுந்த பெருமையைத் தந்தது.

“டீச்சரம்மா!” என்று கூப்பிட்டுக் கொண்டே வாசலில் வந்து நின்றான் பாபு.

அப்பொழுது கண்ணாடியில் தெரிந்த அவனுடைய தோற்றத்தையும், தன்னையும் பார்த்துவிட்டு நாணத்தினால் தலை குனிந்தவளாய்ப் பின்னால் திரும்பிப் பார்த்தாள்.

அவனைக் கண்டதும் ஏன் இப்படி வெட்கம் ஏற்பட, வேண்டும்? ஒரு விதக் கூச்சம் உண்டாகிறதே, அது ஏன்?

பத்து வருடங்களாக இல்லாத புது உணர்வு இப்பொழுது எப்படி வந்தது? பாபுவைப்பற்றிய விசித்திரமான கற்பனைகள் இடையிடையே தோன்றித் தனிமையைத் துன்புறுத்த வேண்டிய காரணம் என்ன? அவனுக்கும் தனக்கும் என்ன சம்பந்தம்? இரண்டு பேருக்குமிடையே பத்து வருடங்கள் வித்தியாசமாக இருக்கின்றனவே! மஞ்சுளா என்ன பேசுவது என்று தோன்றாமல் தத்தளித்த போதிலும், “பாபு, வென்னீர போட்டு வைத்திருக்கிறேன். சீக்கிரமாகக் குளித்து விட்டு வா. நீ வந்த பிறகுதான் நானும் டிபன் சாப்பிட வேண்டும்,” என்று சொன்னாள். பாபு குளிப்பதற்காகச் சட்டையைக் கழற்றினான். அப்பொழுது வெளியே தெரிந்த விசாலமான உடம்பு… அகன்று விரிந்த நெஞ்சம்… ஆண்மை நிறைந்த தோற்றம்….

அப்பப்பா…! மஞ்சுளா ஏனோ பெருமூச்சு விட்டாள். ஏன் இப்படி எல்லாம் நடந்து கொண்டு பெருமூச்சு விடுகிறோம் என்பதும் அவளுக்கு விளங்கவில்லை.

பாபுவைக் காட்டிலும் உடல் வலிமை மிகுந்த காளையர்களை மஞ்சுளா பார்த்ததுண்டு. அவர்களிடமெல்லாம் உரையாடி மகிழ்ந்ததும் உண்டு. ஆயினும் அவர்களிடமெல்லாம் காண முடியாத கவர்ச்சி, இழுப்பு சக்தி பாபுவிடம் மட்டும் இருக்கிறதே!

அவள் கல்லூரி மாணவியாக இருந்தபோது இப்படிப்பட்ட தவிப்புகளுக்கு ஆளாகியதுண்டு. ஆனால் அத்தவிப்பு இப்பொழுது ஏற்படுவது மனப்பூர்வமாகத் தெரிந்து செய்யும் தப்பு அல்லவா? அப்படியொரு உணர்ச்சி ஏன் உண்டாக வேண்டும்?

மஞ்சுளா இந்தச் சில வருடங்களில் தன் உள்ளத்தை எவ்வளவோ பக்குவப்படுத்தி விட்டாள். கல்யாணம் செய்து கொள்ளவேண்டும் என்ற ஆசையோ, கணவனுடன் இன்பமாக வாழ்ந்து குழந்தைகளுடன் கொஞ்சி மகிழ வேண்டும் என்ற எண்ணமோ என்றைக்கோ மறைந்து விட்டன. குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதிலேயே தன்னுடைய முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்து விட்டாள். அப்படிப்பட்ட அவளுக்கு இந்த உலக வாழ்க்கையில் பிடிப்பு ஏற்படக் காரணம் என்ன? வாழ்க்கையில் உறங்கிப் போன காதல் மீண்டும் விழித்துக் கொண்டதா?

மஞ்சுளா அவன் போனதும், தன்னுடைய கட்டுப்பாடற்ற நிலையை எண்ணிப் பெரிதும் வருந்தினாள். காதல் உணர்ச்சி ஏற்படுவதை மன்னித்துவிட்டால் கூட இருபது வயது நிரம்பிய ஓர் இளைஞனை நினைப்பது எவ்வளவு பெரிய தப்பு? வயதுப் பொருத்தம் கொஞ்சம் கூட இருக்க வேண்டாமா?

பத்தே நிமிடங்களில் அவன், “டீச்சரம்மா, குளித்து விட்டேன். சாப்பிடலாமா?” என்று கேட்டுக் கொண்டே வந்தான். அப்பொழுது அவன் சிரித்த சிரிப்பு… பார்த்த பார்வை… மஞ்சுளா கண நேரத்தில் தன்னையும் மறந்து விட்டாள். கன்னங்கரேலென்று வளர்ந்திருந்த அவனுடைய அரும்பு மீசை அவளைப் படாதபாடு படுத்தியது.

டீச்சரம்மா என்று அவன் அழைக்கும்போது ஏற்படும் குழைவுக்கு இந்த உலகத்தில் எதை ஈடாகக் கொடுக்க முடியும்!

மஞ்சுளா எதுவும் பேசாமல் அவனை அழைத்து வந்து மணையில் உட்கார வைத்து எவர் சில்வர் பிளேட்டில் இட்லிகளைப் பரிமாறி மிளகாய்ப்பொடியும் நெய்யும் போட்டாள். இட்லிகளைப் பிசைந்து தின்ற பாபு,

“டீச்சரம்மா, நான் பாக்கியசாலி அல்லவா?” என்று குனிந்தபடியே நின்றிருந்த அவளுடைய முகத்தைப் பார்த்துக்கொண்டே சொன்னான்.

அவன் சொன்னது நெஞ்சில் சுருக்கென்று குத்திய போதிலும் அதைக் கொஞ்சமும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், “ஏன்?” என்று வினவினாள்.

“உங்கள் கையினால் நான் சாப்பிடுகிறேன். உங்களுடைய முழு ஆதரவும் எனக்குக் கிடைத்திருக்கிறது.”

மஞ்சுளாவின் உதடுகளில் நெளிந்த புன்னகையைப் பாபு நன்றாக ரசித்தான். ரசிப்பது தப்பு என்று உணர்ந்த போதிலும் அதை அவனால் தவிர்க்க முடியவில்லை.

“அப்படி எல்லாம் சொல்லக் கூடாது!” என்றாள் மஞ்சுளா.

“சொன்னால் கோபித்துக் கொள்வீர்களா? என் முகத்தைப் பார்த்தால் கோபித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமே உங்களுக்கு வராதே.”

பாபு சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டுக் கையை அலம்பினான்.

சிறிது நேரத்திற்கெல்லாம் மஞ்சுளாவும் சிற்றுண்டியை முடித்துவிட்டுப் பள்ளிக்கூடத்திற்குப் புறப்படுவதற்குத் தயாரானாள்.

“டீச்சரம்மா, எத்தனை நாட்களுக்கு நான் உங்களுக்குப் பாரமாக இருப்பது? இன்றைக்கு நான் வெளியே போய் விடலாம் என்று நினைக்கிறேன்.”

அவன் தன்னை விட்டுப் பிரிந்து போய்விடுவானே என்பதை நினைத்துக் கொண்டதும், மஞ்சுளாவுக்கு இதயம் பறிபோய்விட்டதைப்போல் இருந்தது. ஏனோ அவனைப் பிரிந்திருக்க மனம் வரவில்லை.

“நீ வெளியே போய் என்ன செய்யப்போகிறாய்? உனக்கென்று யாருமே இல்லை என்று சொல்லி விட்டாயே!”

“எனக்கென்று யாருமே இல்லை என்பது உண்மைதான். ஆனால் திக்கற்ற எனக்குத் தெய்வம் கூடவா துணை இல்லை? தெய்வத்தை நம்பி நான் எங்கே வேண்டுமானாலும் போகலாம்.”

அவனைத் தன்னிடமே இருக்கும்படி செய்ய வேண்டும் என்று என்ன அதிகாரம் இருக்கிறதென்று மஞ்சுளாவுக்குத் தெரியவில்லை. ஆயினும் ஏதோ ஒரு சக்தி அவன் வெளியே போவதைத் தடுத்துத் தன்னிடம் இருக்கும்படி தூண்டியது.

“உனக்கு நல்ல வேலை கிடைக்கும் வரையில் என்னை விட்டு எங்குமே போகக் கூடாது. நீ இங்கேதான் இருக்க வேண்டும்.” வாத்தியாரம்மாவின் அன்புக் கட்டளையை அவனால் மீற முடியவில்லை.

“உனக்கு வேண்டிய மத்தியானச் சாப்பாட்டை ‘டிபன்பாக்ஸில்’ எடுத்து ‘செல்பில்’ வைத்திருக்கிறேன். சாப்பிட்டுவிட்டு இங்கேயே இரு,” என்று சொன்ன மஞ்சுளா, அவனை ஏதோ ஒரு ஏக்கத்துடன் பார்த்துவிட்டு வெளியே போனாள்.

அவள் நடந்து கொண்ட விதமும், பேசிய தோரணையும் பாபுவுக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கக் கூடியதாக இருந்தன. அவளுக்கு வயது அதிகமாயிற்றே என்ற உணர்வு கூடக் கொஞ்சமும் அவனுக்கு ஏற்படவில்லை.

அவளை மணந்து கொண்டால்…..? பாபு கற்பனை உலகில் தன்னுடைய தனிமையான பயணத்தைத் துவக்கலானான்.

6

பள்ளிக்கூடத்திற்கு வந்து சேர்ந்த பின்பு மஞ்சுளாவின் உள்ளத்தில் ஒருவிதக் கொந்தளிப்பு ஏற்பட்டுக் கொண்டிருந்தது. லீவு போட்டுவிட்டு வீட்டிலேயே இருந்திருக்கக்கூடாதா என்ற எண்ணம். ஆனால் அடுத்த கணமே தன்னுடைய விபரீதமான ஆசைகளை நினைத்துத் தலையில் குட்டிக் கொண்டாள்.

மாணவர்கள் எல்லோரும் வகுப்பில் ஆஜராகியிருந்தார்கள். ஆனால் சிறுவன் ரவி மட்டும்தான் அங்கில்லை. அவன் வரவில்லை என்று மற்ற மாணவர்கள் சொன்னார்கள். இரண்டு தினங்களாக அவனைக் காரில் அழைத்து வருவதும் கூட்டிக் கொண்டு போவதும் ரகுநாத்தின் வேலையாக இருந்தது. ஆனால் இன்று ஏன் வரவில்லை? ஒன்பது மணிக்கே மகனைக் கூட்டிக்கொண்டு வரும் அவன் ஒரு மணி நேரம் வரையில் வம்பளத்து விட்டுத்தான் வீட்டுக்குப் போவான்.

ரவி எதனால் இன்னும் வரவில்லை என்பது இதயத்தின் அடித்தளத்தில் சலனத்தை ஏற்படுத்திய போதிலும், அதற்கு முக்கியக் காரணம் ஏதாவது இருக்கக் கூடும் என்ற எண்ணத்துடன் மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கலானாள்.

அப்பொழுது ஆபீஸ் பியூன் விரைந்து வந்து, “உங்களுக்கு டெலிபோன் வந்திருக்கிறது. ரகுநாத் என்பவர் கூப்பிடுகிறார்” என்று சொன்னான்.

மஞ்சுளா விரைந்து சென்று ரிசீவரை எடுத்துப்பேசினாள்.

“ரவி மாடிப் படிகளிலிருந்து உருண்டு கீழே விழுந்து விட்டான். அவனுடைய நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. உன் பெயரைச் சொல்லி அவன் புலம்பிக் கொண்டே இருக்கிறான். அதனால் உடனே நீ வீட்டுக்கு வந்தால் அவன் உயிர் பிழைத்துக் கொள்வான் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்படுகிறது. இப்பொழுதே உன்னை எதிர்பார்க்கலாமா?”

ரகுநாத் பதட்டத்துடன் இப்படிச் சொன்னதும், “ஐந்தே நிமிடங்களில் வந்து விடுகிறேன். ரவியைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்!” என்று சொல்லிவிட்டு மஞ்சுளா ஓடினாள்.

எந்த வீட்டை அவள் அறவே புறக்கணித்திருந்தாளோ அந்த வீட்டினுள் நுழைய வேண்டிய சந்தர்ப்பம் அவளுக்கு ஏற்பட்டு விட்டது. யாரிடம் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று நினைத்திருந்தாளோ, அதே ஆசாமியிடம் தொடர்பைப் புதுப்பித்துக் கொள்ளவேண்டிய சூழ்நிலையும் உருவாகி விட்டது.

மஞ்சுளா கதவைத் தட்டியதும் தானாகவே திறந்து கொண்டது.

பத்து ஆண்டுகளுக்கு முன்னால் அந்த வீட்டுக்கு அவள் பலமுறை வந்திருக்கிறாள். அப்பொழுதெல்லாம் அவள் உள்ளத்தில் உற்சாகம் களிநடம் புரியும். தன்னுடைய சொந்த வீடாக நினைத்து ஆனந்தக் கூத்தாடுவாள். ஆனால் இப்பொழுது அரண்மனை போல் இருக்கும் அந்த வீட்டைப் பார்ப்பதற்கே பயமாக இருந்தது.

“வா, மஞ்சுளா!” என்று அழைத்த ரகுநாத், “பையன் மாடியில் உள்ள அறையில் படுத்திருக்கிறான். டாக்டரும் அவனுடன்தான் இருக்கிறார்,” என்று சொன்னான்.

மஞ்சுளா அவனுடைய முகத்தைக் கூடப் பார்க்காமல் மாடியை நோக்கி விரைந்தோடினாள். ரகுநாத்தும் அதே வேகத்துடன் வந்தான்.

மாடிக்கு வந்து சேர்ந்த மஞ்சுளா, எந்த அறையிலுமே ரவியும், அவனுடைய அன்னையும், டாக்டரும் இல்லாததைக் கண்டு திடுக்கிட்டாள். ரகுநாத் சூழ்ச்சி செய்து தன்னை இங்கே வரவழைத்து விட்டானா?

“ரவி…!” என்று தடுமாற்றமடைந்தாள் மஞ்சுளா.

அவளைப் பார்த்து விஷமத்தனமாகக் கண்களைச் சிமிட்டிய ரகுநாத்,

“அவனும் அவனுடைய அம்மாவும் வில்லிவாக்கத்திற்குப் போயிருக்கிறார்கள். இனி சாயங்காலம்தான் வீட்டுக்கு வருவார்கள்,” என்று சொன்னான். பதறிப்போன மஞ்சுளா, அவன் தீய எண்ணத்துடன் தன்னை வரவழைத்திருக்கிறான் என்று எண்ணி வெளியே வருவதற்கு எத்தனித்தாள். உடனே ரகுநாத் அவளுடைய புஜத்தோடு சேர்த்துப் பிடித்துக் கொண்டான். தன்னால “என்னை நீ பல வருடங்களாக ஏமாற்றி விட்டாய். அந்த ஏமாற்றத்தைப் போக்கிக் கொள்ள இன்றைக்குத்தான் அருமையான சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அதனால் என்னுடன் இதமாக நடந்து ஆசையைப் பூர்த்தி செய்து வை.”

அவன் சொன்னதைக் கேட்டு மஞ்சுளா சிரித்து விட்டு, உதறித் தன்னை விடுவித்துக் கொண்டாள், “தயவு செய்து உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். என்னை விரும்புவது கொஞ்சமும் முறையற்றது. உங்களுடைய விரல் என்மீது தீண்டக்கூடச் சம்மதிக்க மாட்டேன்.”

“நீ எதனால் இப்படிப் பேசுகிறாய் என்பது இப்பொழுதுதான் எனக்கு விளங்குகிறது. உன்னை என்னுடைய ஆசை நாயகியாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன். என் மனைவிக்குத் தராத அந்தஸ்தையும் உனக்குத் தருவேன்.”

“என்னை விட்டு விடுங்கள் உங்களிடம் பேசவோ உங்கள் கண்களில் விழிக்கவோ நான் கொஞ்சமும் விரும்பவில்லை. நீங்கள் என்னிடம் இப்படி நடந்து கொள்ள நினைப்பது முறையற்றது.”

“நான் நினைப்பது முறையற்றது. ஆனால் என்னுடைய டிரைவரும் நீயும் நடந்து கொள்வது நியாயமா…? மஞ்சுளா! உன்னை நினைக்கும்போது எனக்குத்தான் அவமானமாக இருக்கிறது. இருபது வயதுப் பையன் ஒருவனைப் பிடித்து வைத்திருக்கிறாயே, உனக்கே வெட்கமாக இல்லையா? ஊரே சிரிக்கிறது.”

அவன் சொன்ன வார்த்தைகள் நெஞ்சில் பலமாகத் தாக்கிய போதிலும்தான் இதுவரையிலும் எந்தக் குற்றமும் செய்யாததால் நிமிர்ந்து நின்றாள்.

“என்னைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை.”

ரகுநாத்துக்கு உடனே கோபம் வந்து விட்டது. “மஞ்சுளா, என் குலம் எப்படிப்பட்டது என்பது உனக்குத் தெரியும். முரண்டு பிடிப்பது கொஞ்சமும் நல்லதல்ல. நான் வேலையை விட்டு நீக்கிய என் டிரைவரை உன்னுடைய வீட்டிலேயே வைத்துக் கொண்டாய். இதிலிருந்து நீ எனக்கு எதிரான வேலைகளில் இறங்கியிருக்கிறாய் என்று தெரிய வருகிறது. இருந்தாலும் நீ என்னுடைய மாஜி காதலி என்பதால் பொறுத்துக் கொண்டேன்.”

மஞ்சுளா, அவனை வீட்டில் தங்க வைப்பதற்கு நேர்ந்த காரணத்தை விளக்கி விட்டு, “நான் மட்டும் அவனைத் தடுக்காமல் இருந்திருந்தால் போலீஸில் உங்களைப் பற்றிப் புகார் செய்திருப்பான். உங்கள் மானம் அந்த வினாடியிலேயே கப்பலேறியிருக்கும்!” என்று சொன்னாள்.

“நான் இம்மாதிரியான காரியங்களுக்கெல்லாம் பயப்பட மாட்டேன் என்பது உனக்குத் தெரியாது போலிருக்கிறது. அவன் அங்கே போய்ப் புகார் செய்தால் என்ன? தப்பித்துக் கொள்ளும் வழிகள் எனக்கா தெரியாது?” என்று சொன்ன ரகுநாத், “நாம் விஷயத்துக்கு வருவோம்,” என்று சொல்லிவிட்டு, மறுபடியும் அவளுடைய கையைப் பிடித்து இழுத்தான்.

“கையை விடுங்கள். என்னிடம் மிருகத்தனமாக நடக்க எத்தனித்தால் நான் காளியாகவே உருவெடுத்து விடுவேன்.” மஞ்சுளா கத்திவிட்டு அவனுடைய முரட்டுப் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ளப் போராடினாள். ஆனால் அவன் விடவேண்டுமே! இரண்டு கைகளாலும் அவளை வாரி அணைத்துக் கொண்டான். “மரியாதையாக என்னை விடப்போகிறாயா? அல்லது கூச்சல் போட்டு…”

“நீ எதை வேண்டுமானாலும் போடு. அதைப்பற்றி நான் கொஞ்சமும் கவலைப்படவில்லை. எனக்கு வேண்டியது நீதான்!” என்று சொன்னவன், “பாபு என்றால் இனிக்கிறது. நான் என்றால் கசக்கிறதோ?” என்று உறுமினான்.

“ஆமாம், பாபு எனக்கு இனிப்பாகத்தான் இருக்கிறான். அவனுடன் வாழ்வதில் எனக்குத் திருப்தியும் இருக்கிறது!” என்று ஆத்திரத்துடன் சொன்ன மஞ்சுளா! “இனியாவது என்னை விட்டு விடுங்கள்!” என்று கெஞ்சினாள்.

“என்னிடம் வேலை செய்த ஒரு அடிமை உனக்கு இனிப்பாக இருக்கிறது! எவ்வளவு தைரியம் இருந்தால் – என்னிடமே இதைச் சொல்லுவாய்?” என்று கூறி, ரகுநாத் அவளை அலாக்காகத் தூக்கினான்.

மஞ்சுளா புழுவாய்த் துடித்துப் போனாள். மானத்தை இழந்துவிட அவள் எப்படி மனம் ஒப்புவாள்? ஒரே தாவல் தான்! அவள் தரையில் வந்து விழுந்தாள்.

ரகுநாத் அவளிடம் ஏமாந்து விடக் கொஞ்சமும் விரும்பவில்லை. அவள் தரையை விட்டு எழுந்திருப்பதற்குள் அப்படியே சாய்ந்து கைகளைப் பிடித்தான்.

இவ்வளவு பலம் எப்படித்தான் வந்ததோ என்று மஞ்சுளாவுக்குத் தெரியவில்லை. அவனைத் தூக்கி எறிந்துவிட்டுத் துள்ளி எழுந்து நின்றாள்.

அவனும் அந்த வேகத்தில் எழுந்து அவளுடைய இடையைச் சுற்றி வளைத்துப் பிடித்தான். இரண்டு பேருக்குமிடையே மிகமிகக் கடுமையான போராட்டம் நடந்தது. கடைசியில் ரகுநாத் தப்பியோடிய மஞ்சுளாவைத் துரத்திக் கொண்டு ஓடிவந்தபோது மாடிப்படியில் கால் இடறி உருண்டு தரையில் வந்து விழுந்தான். கண் இமைக்கும் நேரத்திற்குள் நடைபெற்ற துயர நிகழ்ச்சியைக் கவனித்த மஞ்சுளா பதறிப்போய் அவன் அருகில் வந்து பார்த்தாள். ரகுநாத்தின் மூக்கிலும் வாயிலும் இரத்தம் பாய்ந்து கொண்டிருந்தது. மூர்ச்சையாகி விட்டான் என்பது அவன் பிணம் போல் கிடந்த தோற்றத்தில் இருந்தே தெரிந்தது.

மஞ்சுளா டாக்டருக்கு டெலிபோன் செய்தாள். சிறிது நேரத்திற்கெல்லாம் டாக்டர் வந்து அவனுக்குச் சிகிச்சை செய்தார். ரகுநாத் பிழைத்துக் கொண்டான். ஆனால் அவனை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த அகம்பாவபூதம் மட்டும் மடிந்துவிட்டது. “என்னை மன்னித்துவிடு, மஞ்சுளா! உனக்குக் கொடுமை செய்த நான் தண்டனை அனுபவித்து விட்டேன். இப்பொழுது நான் திருந்திய மனிதன். என்னுடைய அறிவுக் கண்கள் திறந்து விட்டன!” என்று அதே ரகுநாத் கட்டிலிலிருந்து அப்படியே உருண்டு விழுந்து அவளுடைய கால்களைப் பற்றினான். அந்தக் காட்சியைப் பார்த்து அவனுடைய மனைவி வசந்தா திடுக்கிட்ட போதிலும், தன் கணவனுடைய செய்கையை நினைத்து வருந்தினாள். அவன் நல்லவனாக மாறிவிட்டது அவளுக்குப் புதிய உற்சாகத்தைத் தந்தது.

மஞ்சுளா அவனைப் பிடித்து மறுபடியும் கட்டிலில் படுக்க வைத்துவிட்டு, “அவரைப் பத்திரமாய்ப் பார்த்துக் கொள்ளுங்கள்!” என்று கூறிவிட்டுத் தாவி வந்து அணைத்துக் கொண்ட சிறுவன் ரவியின் கன்னத்தில் செல்லமாகத் தட்டினாள்.

7

மிருக குணம் கொண்ட ஒரு மனிதனைத் திருத்தி விட்டோம் என்ற பெருமிதத்துடன் வீட்டுக்கு வந்த மஞ்சுளா, தன்னுடைய போட்டோவை எடுத்து நெஞ்சோடு அணைத்து மகிழ்ந்து கொண்டிருக்கும் பாபுவைப் பார்த்துத் திடுக்கிட்டாள். “பாபு! நீ செய்வது தப்பு.”

பாபு ஒரு முடிவுக்கே வந்து விட்டான். அவள் இல்லாவிட்டால் உயிர் வாழவே முடியாது என்ற முடிவுதான் அது. அதை மஞ்சுளாவிடம் தெரியப்படுத்தியதும் தூக்கி வாரிப்போட்டதைப் போன்ற நிலையில் அசந்தே விட்டாள்.

“உன் எண்ணத்தை மாற்றிக்கொள், பாபு. உனக்கு வயது என்ன தெரியுமா! இருபது! ஆனால் என்னுடைய வயது முப்பதையும் கடந்துவிட்டது. நாம் இரண்டு பேரும் கணவன் மனைவியாக வாழுவது என்றால் அது கண்டிப்பாக நடக்க முடியாதது.”

“நீங்கள் சொல்லுகிறீர்கள். ஆனால் எனக்கு முப்பது வயதாக இருந்து உங்களுக்கு இருபது வயதாக இருந்தால்…? அறுபது வயதுக்காரர்கள் பதினெட்டு வயதுப் பெண்களைக் கல்யாணம் செய்து கொள்வதில்லையா? காதலுக்கு வயதின் ஏற்றத் தாழ்வுகளே கிடையாது. நான் உங்களைக் காதலிக்கிறேன்.”

மஞ்சுளா அவனுடைய விளக்கத்தைக் கேட்டுச் சிரித்தாள்.

“பெண்ணைவிட ஆணின் வயதுதான் அதிகமாக இருக்க வேண்டும். இதுதான் வாழ்க்கையின் நியதி. அதற்குமேல் நான் எதையுமே சொல்ல விரும்பவில்லை.”

“உங்களைப் பார்த்த பிறகு என்னையே நான் மறந்து விட்டேன். வயது வித்தியாசம் கொஞ்சம் கூட எனக்குத் தெரியவில்லை. டீச்சரம்மா… என்மீது உங்களுக்கு அன்பு இல்லையா?”

அன்பு இல்லை என்று யாரால் சொல்ல முடியும்? அவள் கற்பனை செய்தே பார்க்க முடியாத அளவுக்கு அவனிடம் அன்பு செலுத்தினாள். ஆனால் அதைப் பகிரங்கமாக வெளியே சொல்லிக் கொள்ள முடியுமா?

எதைக் கண்டு பயப்படாமல் இருந்தாலும், அவள் உலகத்தைக் கண்டு பயப்பட வேண்டியிருக்கிறதே! தன்னுடைய அற்ப சந்தோஷத்திற்காக உலகத்தைப் பகைத்துக் கொள்ள முடியுமா?

“பாபு! நீ உன்னை விட வயதில் குறைந்த பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். அதுதான் என்னுடைய ஒரே ஆசை.”

ஆனால் பாபு சம்மதிக்க வேண்டுமே! “நீங்கள் இல்லாவிட்டால் என்னால் உயிர் வாழவே முடியாது. அந்த அளவுக்கு நான் உங்களோடு இரண்டறக் கலந்துவிட்டேன்!” என்று நாத் தழுதழுக்கச் சொன்னான்.

தன்னால் அவனுடைய வாழ்க்கை சீரழிந்து விடக்கூடாது என்று எண்ணிய மஞ்சுளா, செங்கற்பட்டுக்கே தன்னுடைய உத்தியோகத்தை மாற்றிக் கொண்டு ரயில் ஏறினாள்.

ஆனால் அவள் செங்கற்பட்டை அடைந்ததும், பாபு விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்டான் என்ற துயரச் செய்தியைத்தான் முதன் முதலில் கேட்க முடிந்தது.

அவனுக்காகவும், அவனுடைய கவர்ச்சி நிரம்பிய உடலுக்காகவும் அனுதாபப்பட்டு ஒரு துளிக் கண்ணீர் சிந்துவதைத் தவிர வேறு என்னதான் அவளால் செய்ய முடியும்?

– வாத்தியாரம்மா…! (குறுநாவல்), முதற் பதிப்பு: 1966, ஸ்ரீமகள் பிரசுரம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *