வாணக்காரன்
(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
1945 ஆம் ஆண்டு எழுதப்பட்ட சிறுகதையா இது? நம்பவே முடியவில்லை!

சிறுகதையின் வடிவம் எப்படிப்பட்டது, அதன் வீச்சு என்ன, இரண்டு வரிகளுக்கு நடுவே தொக்கி நிற்கும் மனோதத்துவம் என்ன என்று சிரமப்பட்டு இலக்கண இலக்கியங்களை நுணுக்கமாக ஆராய்ந்து அலசிக் கொண்டிருந்த காலகட்டத்தில் வெளியான சிறுகதை. அப்பொழுது இலக்கியம் படைப்பவர்களிடையே குழுக்கள் இல்லை.
அன்றைய காலகட்டப் படைப்பாளர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியில் எழுதினார்கள். அவரவர் திறமையைப் புரிந்து கொண்டு எவ்வொருவர் எழுத்தும் மதிக்கப்பட்டது. விமர்சிக்கப்பட்டது.
புதுமைப்பித்தன் ஒரு பாணி, கு.ப.ரா. ஒரு பாணி, மௌனி ஒரு பாணி, தி ஜானகிராமன் ஒரு பாணி – இப்படி அவரவர் தனித்தன்மைகள் அப்படியே அங்கீகாரம் பெற்று ஏற்றுக் கொள்ளப்பட்டன.
இதுவே மதிப்பிற்குரிய விக்கிரமன் அவர்களின் கதை சொல்லும் பாணியும் அவருக்கே உண்டான தனி பாணியில் (ஸ்டைலில்) அமைந்த தாகவே இன்றுவரை இருக்கிறது.
‘வாணக்காரன்’ என்னும் இச்சிறுகதையின் வடிவம் மிக நேர்த்தியானது. வாணக்காரனில் அத்தொழிலின் செய்முறை விளக்கம் இந்தச் சிறுகதைச் சேக்கிழாரால் எவ்வளவு கூர்மையாகக் கவனிக்கப்பட்டிருக்கிறது.
எளிமையான சொல் ஆட்சி, மையக் கருவின் தன்மையையொட்டி இவரால் மிக லாகவமாகக் கையாளப்பட்டிருக்கிறது.
ஒரு கதை விஷயத்தை எளிமையாகச் சொல்லுவது ஒரு முறை. எளிமைப்படுத்திச் சொல்வது மற்றொரு முறை. என்னைப் பொறுத்தவரையில் எளிமையாகச் சொல்வதே சிறந்ததாகப்படுகிறது. இதுவும் இரண்டாவது வகையைச் சேர்ந்தது.
கடவுள் நம்பிக்கை, அதற்குண்டான உள்ளத்தூய்மை ஆகிய இரண்டு ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதவை. உள்ளத்தூய்மையை இழந்ததான் ‘வாணக்காரன்’ விநாயகம் முடிவில் எப்படிப்பட்ட இழப்பைச் சந்திக்க நேர்ந்தது என்பதைக் கட்டம் கட்டமாகச் சிறுகதையில் விவரித்துக் கொண்டே போகும் ஆசிரியர், ‘நான் இனி குடிக்க மாட்டேன்’ என்று செய்து கொடுத்த சபதத்தை வாணக்காரன் மீறினபோது, அவன் அதற்குரிய பெரிய தண்டனையொன்றைப் பெறுகிறான் என்றும் கூறிக் கதையை முடிக்கிறார்.
சிறுகதைக்கு முன்னுரையோ விமர்சனமோ எழுதும்போது கதைச் சுருக்கத்தைச் சொல்லு பது அத்தனை சிலாக்கியமானதன்று. விமர்சனத்தைப் படித்து விட்டு மேலே போய்விடுவார்கள். எனவே, கதையை சொல்லாமல் அது, ஏற்படுத்திய ஆழமான தாக்கத்தை மட்டுமே! விவரிக்கிறேன்.
கடவுள் நம்பிக்கையின் முக்கியத்துவம், குடிப்பழக்கத்தால் ஏற்படும் இழப்பு போன்றவற்றை ஒரு மின்னல் கீற்றுப் போலக் கோடிட்டுக் காட்டிவிட்டு இச்சிறுகதையை மிக எளிமையான உத்தி மூலம் விவரிக்கும் பாங்கிலே ஆசிரியரின் பார்வை சரியாகவே பதிந்திருக்கிறது.
நேரில் பார்த்த ஒரு சம்பவத்திற்குக் கதை வடிவம் கொடுக்கும்போது அதில் அனுபவரீதியிலான சில அழுத்தங்கள் சேர்ந்துவிடும்.
வாணக்காரனினும் இந்த அனுபவ ரீதியிலான அழுத்தம் சரியாகவே வந்திருக்கிறது.
– மகரிஷி
வாணக்காரன்
நண்பரும் நானும் பெரும்பாளையம் குளத்தின் படிக்கட்டில் காலைத் தொங்கப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தோம். கோயிலில் ‘ஓம் ஓம்’ என மணி ஒலித்துக் கொண்டிருந்தது. இடையிடையே ‘டமீல்… ‘மில்’ என அதிர்வேட்டின் ஓசை அதிர்ச்சியை உண்டாக்கிக் கொண்டிருந்தது. வானத்து ஆறாம் பிறையின் இளஞ்சாயல் குளத்து நீரில் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.
”இந்தச் சந்திரனும், குளத்து நீரும் எவ்வளவு இன்பத்தை அளிக்கின்றன நமக்கு – ஆனால், அதோ அந்தக் கோயிலின் மதிலுக்கு உட்புறத்தில் இருக்கும் வாணக்காரன் – அதிர்வெடியிடம் பழகும் அவன் உள்ளம் ஒவ்வொரு விநாடியும் எவ்வளவு துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும்?’ என்றார் நண்பர்.
களுக்கென்று சிரித்துவிட்டேன் நான். “துன்பமென்னப்பா… தொழில் செய்பவனுக்குத் துன்பமேது? இன்ப நினைவுதான் அவனது தொழிலை ஆக்குகிறது” என்றேன் நான்.
”உனக்கு அனுபவம் போதாது. எழுத்தாளர் வேலையோ, பாடகர் வேலையோ அன்று; தொழிலின்பம் அனுபவிக்க. வாணக்காரன் நெருப்புடன் விளையாடுகிறான். அதுவும் அவன் அதிர்வெடி போடுகையில் கெட்டிக்கப்பட்ட ரசாயனத்துடனும் தீயுடனும் பழகுகிறான், பாம்புச் சிநேகிதம்போல்!” என்றார் நண்பர்.
அதிர்வெடியைக் கண்டாலே எனக்குப் பயம். அந்தச் சப்தத்தைக் கேட்கும்போதெல்லாம் பழைய கால பீரங்கியின் ஒலியை உருவகப் படுத்திக் கொள்வேன்.
மரக்கட்டையிலுள்ள குழிகளில் மருந்தைக் கெட்டித்துத் திரியை வைத்துத் திரித்து நெருப்பை இட்டு உடனே வெடிப்பதற்குள் ஓடிவருவது சாதாரண வேலையன்று என்பது எனக்குத் தெரியும். ஆனால், நண்பரின் வாயைக் கிண்டிவிடவே அது போல் கூறினேன். நான் கேட்டது நல்லதாகப் போனது. நல்ல கதை ஒன்று எழுதக் கிடைத்தது.
“தம்பி… உனக்கென்ன தெரியும்? வாணக்காரன் தொழிலுக்கு திறமையும் தூய்மையும் வேண்டும்” – அவர். என்னைவிட மூத்தவ என்றாலும் நண்பராகப் பழகினோம். தம்பி என என்னை அழைப்பார்”
“ஹா… ஹா… திறமை வேண்டும்தான்! ஆனால், தூய்மை எதற்கு நீங்கள் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது!”
“ஆமாம், ஆமாம்… நான் சொல்வது வேடிக்கைதான். இந்த காலத்தில் அனுபவத்தையும், உண்மையையும் யாரும் நம் மாட்டார்களே… வாணக்காரன் விநாயகத்தின் கதையைக் கேள்வி பட்டிருந்தாயானால், இதுமாதிரி என்னைக் கேட்டிருக்க மாட்டாய் என்றார் அவர் கோபத்துடன்.
‘வாணக்கார விநாயகம்’ என்றவுடன் நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன் ‘டுமீல் டுமீல்’ என்னும் ஒலி ஒரு கதையையே உண்டு பண்ணுவதா ருப்பின் அதன் மகிமையை நீங்களும் அறிய வேண்டாமா?
“இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பிருக்கலாம். இதே பெரு பாளையத்தில்தான் நான் படித்துக் கொண்டிருந்தேன். ஓலைச்சுவ எழுத்துப் போல் அந்தச் சம்பவம் என் மனத்தில் மங்கி மூன்றாம் பிறைத மாதிரி தேய்ந்து லேசாக நினைவிருக்கிறது. சம்பவத்தின் சாமை மறைந்தாலும் வாணக்கார விநாயகம் என் மனத்திரையில் நினைக்கும் போது தோன்றுகிறான்.
வாணக்கார விநாயகத்துக்கு ஊரிலே தனி மதிப்பு. ஊரில் வருடா வருடம் வரும் திருவிழாவின்பொழுது அவனது வாண வேடிக்கைத் திறமையைக் காண வெகு தொலைவிலிருந்தும் மக்கள் வருவார்கள் அவன் தைரியத்தையும், திறமையையும் மெச்சாதவர்களே இல்லை.
சக்கர வாணம், சட்டி வாணம், ஊசி வாணம், ஊதல் வாணம் என்று பல வாணங்களை வடக்கேயிருந்து வரவழைத்துத் தைரியமாக கையாள்வான். அவற்றைவிட ஆகாயத்தில் போய்ப் பூச்சொரிந்து வெடிக்கும் செருகு வாணம் விடுவதில் அவனைவிடக்கைதேர்ந்தவர்கள் இல்லை.
அவன் விடுவது ஒன்றாவது குறுக்கு நெடுக்காகப் பாய்ந்து சோடையானதும் இல்லை. அதிர்வேட்டில் அவன் மருந்து கெட்டித்துத் திரிக்கு நெருப்பு வைப்பதே தனி விதந்தான்.
அவனுக்குத் தனி மான்யம், பிரத்யேகச் சம்பளம், சலுகை, இவற்றை விட மரியாதைதான் அதிகம்.
விநாயகம் தொழிலில் எப்படி திறமைசாலியோ அதுபோலக் குடும்பம் நடத்துவதிலும் நல்ல பெயர் வாங்கினான். ‘விநாயகம் – இளம் பூரணம் போல’ என்னும் உவமை பிறருக்குக் காட்டுமளவு ஒற்றுமையுடன் தாழ்க்கை நடத்தி வந்தான்.
காலையில் திருக்குளத்தில் குளித்துவிட்டுப் பட்டை பட்டையாகப் பளிச்சென்று திருநீறு அணிந்து, நடுவில் ஒரு ரூபாயளவுக்குக் குங்குமப் பொட்டிட்டு எடுப்பான மீசையை முறுக்கிவிட்டுக் கோயிலுக்குள் சென்று நடராஜ மூர்த்தியைச் சேவித்தபின்தான் ஆகாரம், மற்றவை எல்லாம்.
திருவிழாச்சமயங்களில் மானம்பட்டி ஜமீன்தார் தினமும் கோயிலுக்கு விஜயம் செய்வார். அவருடைய சௌகரியத்துக்காக, திருவிழாவில் சுவாமி புறப்படுவதற்குள் மூன்று முறை அதிர்வெடிகள் போடப்படும். அலங்காரம் முடிந்தவுடன் ஒன்று. வாகனத்தில் வைக்கும் முன் இருவெடிகள். கோபுர வாசலை நெருங்கும்பொழுது மூன்று வெடி. மூன்றாவது வெடியோசை கேட்டுத்தான் ஜமீன்தார் கோயிலுக்கு வருவார்.
இந்த வழக்கம் விடாது நடந்து வந்தது. ஊரிலுள்ளோர்கூட வேட்டொலி கேட்டபின்னே கோபுர வாயிலுக்கு தரிசனம் இரண்டாவது செய்ய வருவார்கள். அதனால் விநாயகம் உற்சவத்தின் முக்கிய காரணமாகி விட்டான். நாள்கள் கழிந்தன.
“ஒம் போக்கு வரவர எனக்குப் பிடிக்கலை. வூட்டுக்கு வரச்சே தள்ளாடி வர்றியே. காரணமென்ன?” என இளம்பூர்ணம் ஒருநாள் அதிகாரத்துடன் அவனைக் கேட்டாள்.
எப்பொழுதும் மனைவிக்குப் பணிந்துபோகும் விநாயகம், “ஏ புள்ளே… சும்மா உன் வேலையைப் பார்த்துண்டு போ!” என்று கூறி விட்டான்.
ஆம்; விநாயகத்தின் போக்கில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. துரியோதனனுக்குச் சகுனியும், சர்ச்சிலுக்கு அமெரியும் ஏற்பட்டது’ போல் விநாயகத்துக்குத் தர்மலிங்கம் வந்து சேர்ந்தான்.
“விநாயகம் அண்ணே! வாண வேடிக்கை முடிச்சுட்டு வீடு திரும்பச்சே களைப்பாயில்லே? நாள் பூராவும் உழைக்கிறியே. ஒரு பட்டையைப் போட்டுப் பார்த்தியானாராத்திரி நல்லாத்தூக்கம் வரும். களைப்பெல்லாம் போயிடும்” என ஆலோசனைக் கூறியதுடன் நில்லாமல் தர்மலிங்கம் அழைத்தே போய் விட்டான் சாராயக் கடைக்கு.
“ஐயோ! பஞ்சமா பாதங்களில் ஒன்றாச்சே குடிப்பது” என்று முதலிய அச்சப்பட்டான் விநாயகம். தான் வணங்கும் நடராஜமூர்த்திக்கு விரோதமாச்சே என்று அவன் மனச்சாட்சி குத்தியது. தயங்குவது போலிருந்த அவனைத் தட்டிக் கொடுத்தான் தர்மலிங்கம். ஒரு நாளைக்கு ருசி பார்த்த விநாயகம் பிறகு குருவையும் மிஞ்சி விட்டான்.
சாதாரண நாள்களில் கோயிலுக்குத் தவறாமல் போய்விடும் விநாயகம், காலையில் வெகுநேரம் தூங்கிக் கிடக்கலானான். கண்கள் கோவைப் பழம்போல சிவந்திருக்கும்.
“அய்யோ பாவி! உன்னைக் கெடுத்தவன் எவனோ? நல் குடும்பத்தில் நாகதாளியைப் போட்டானே! குடிச்சுப்புட்டு சிவள் கோயிலுக்குப் போறே. என்ன நேரப் போவுதோ?” என்று கதறுவாள் இளம்பூரணம்.
மகிழ்ச்சியூட்ட மகன் மாணிக்கமிருந்தாலும், கணவனின் கெட்ட சேர்க்கை அவள் இதயத்தைச் சுருக்கியது.
வருடங்கள் இரண்டு சென்றன. தன் வரையில் அதிகமாகச் சு நினைவிழக்காமல் குடித்துக் கொண்டிருந்த விநாயகம், இப்பொழுது சுய புத்தியையே இழக்கலானான். கோயிலுக்குப் போவதேயில்லை. வீட்டிற்கு வருவது, அற்ப விஷயத்துக்கெல்லாம் இளம்பூரணத்துடன் போர் தொடுப்பது என்று மாறிவிட்டான். துன்ப வாழ்க்கையையே அறியாத உத்தமி இளம்பூரணத்துக்கு வாழ்க்கை வேம்பாகியது. அதனால் அவள் தளரவில்லை.
ஒருநாள் காலை குடி மயக்கம் தெளிந்து விநாயகம் எழுந்திருக்கும்| சமயம் பஞ்சாயத்தார்களைக் கூப்பிட்டுக் கொண்டு தயாராய் வந்தாள். தள்ளாடி எழுந்த விநாயகம் தன்னெதிரே பலர் நிற்பதைக் கண்டான். இளம்பூரணம் அனல் பறக்கும் கண்ணுடன் நிற்பதைக் கண்டான்.
“இன்னிலேர்ந்து குடிக்கறதை ஒழிக்கிறேன்னு சத்தியம் செய்து கொடு; இல்லைன்னா நானும் புள்ளையும் கண்காணாமல் ஓடிப் போய் விடுவோம். சிவன் கோபம் பொல்லாதது. அவனது கோயில் உப்பைத் தின்று கெட்ட வழியில் போகாதே. என் நொந்த மனத்தில் ஊசியை ஏத்தாதே. இன்னிலேர்ந்து நீ குடிச்சயானா… சொல்லிட்டேன்… இந்த ஒரு புள்ளையும் உனக்கு உதவாமப் போயிடட்டும். சத்தியம் சத்தியம்” என்றாள் இளம்பூரணம் சீற்றமுடன்.
இளம்பூரணம் இவ்வளவு துணிச்சலுடன் இப்படிச் சொல்வாள் என்று வரும் எதிர்பார்க்கவில்லை. பஞ்சாயத்தார் எதிரிலும், பாஞ்சாலி போல் சபதம் செய்திருக்கும் இளம்பூரணம் எதிரிலும் விநாயகத்தால் சிற்க முடியவில்லை.
ஒரு காலத்தில் அவனுக்கு எவ்வளவு மரியாதை! நான்கு மணிக்கு ‘ஜாம்ஜாமென்று’ மணியோசை கேட்கையில் குளத்தில் நீராடிப் பதிகம் பாடிப் பக்திக் கனவில் அமிழ்ந்தவன், இப்பொழுது சாராயச் சாக்கடையில் மூழ்கியதை எண்ணும்பொழுது அவன் உள்ளம் அவமானத்தாலும், வெட்கத்தாலும், குறுகுறுக்கும் குற்றத்தாலும் துடிதுடித்தது.
என்ன நினைத்தானோ என்னவோ, “இளம்பூரணம்! என்னை மன்னித்துவிடு. இனி நான் சத்தியமாக் குடிக்க மாட்டேன். குடிச்சால் காளிம்மா அறிய, நடராஜமூர்த்தி அறிய, என் பிள்ளை உதவாமல் போய் விடுவான். சத்தியமிது!” என்று கூவினான். ஒன்றன்பின் ஒன்றாக நடந்து இந்த நாடகத்தைக் கண்டு பஞ்சாயத்தார்கள் அசந்து நின்றனர்.
விநாயகம் இப்பொழுது குடிப்பதில்லை. தர்மலிங்கத்தையும் தாணவில்லை. விநாயகத்தின் மகன் மாணிக்கம் நன்றாக வளர்ந்து விட்டான். அப்பனைப் போலவே சுறுசுறுப்பு. விநாயகத்திற்கு மாணிக்கத்தின் மீது அவ்வளவு உயிராகிவிட்டது. தினம் கோயிலுக்கு வெடி போடப் போகும்பொழுது அவனையும் அழைத்துச் செல்வான். தான் திரிக்கு நெருப்பு வைப்பதாகத் துடிதுடிப்பான் மாணிக்கம். மருந்து கெட்டிப்பான், திரியிடுவான், எல்லாம் செய்வான். தகப்பனுக்குப் பிறகு பிள்ளை தொழிலை விடாது நடத்துவானென்று பலர் எண்ணினர்.
வருடங்கள் மூன்று உருண்டன. மாணிக்கம் பன்னிரண்டு வயதுப் பாலகனானான். அந்த வருடம் திருவிழாவை வழக்கத்தை விட மிகச் சிறப்பாக நடத்தத் திட்டமிட்டிருந்தனர். விநாயகம் முனைந்து வேலை செய்யலானான். மாணிக்கமும் ஓடி ஓடி உழைக்கலானான்.
தேருக்கு முதல் நாள். “என்ன விநாயகம் அண்ணே! சௌக்கியமா?” என்னும் குரல் கேட்டு விநாயகம் திரும்பினான்.
தர்மலிங்கம் நின்று கொண்டிருந்தான். அவனைப் பார்த்தவுடனேயே விநாயகத்துக்குப் பக்கென்றது. எனினும் பழைய நட்பை விட முடியாதவனாய், “வா அண்ணே! எங்கே இவ்வளவு வருடமாய்க் காணலை?” என்றான்.
“அது சரிதான் அண்ணே… இப்படி இளைச்சுட்டியே! முன்பிருந்த விநாயகமில்லையே” என்று பேச்சை ஆரம்பித்தான் தர்மலிங்கம். பல விஷயங்களைப் பேசிக் கடைசியில் விநாயத்தை மயக்கி மூலைக் கடைக்குக் கிளம்பினான் தர்மலிங்கம்.
“வெடி போடற நேரம்பா… இப்பக் கூப்பிடறியே” என்றாள் விநாயகம்.
“அட அஞ்சு நிமிஷத்துலே வந்துடலாம்பா!” – தர்மலிங்கம்.
விநாயகம் சற்று யோசித்தான். மாணிக்கம் எதிரே வந்து கொண்டிருந் தான். “டேய் பயலே! இன்னிக்கு நீ வெடி போடறயா?” என்றான் குஷியாக விநாயகம்.
“நீங்கதான் விட மாட்டேங்கறீங்களே அப்பா!” என்று முனகினான் மாணிக்கம்.
“சரி, இன்னிக்கு நீ போடு. ஏழரைக்கு ஆரம்பி. பார்த்துப் போடு. நான் இதோ நொடியிலே வந்துடறேன்” என்று கூறி, தர்மலிங்கத்துடன் கிளம்பினான் விநாயகம்.
மூன்று வருடங்களுக்கு மேலாக மறந்திருந்த விஷத்தை மீண்டும் சுவைக்கும் ஆவல் விநாயகத்துக்கு எங்கிருந்தோ பீறிட்டு வந்தது.
”போடு! சாப்பிடண்ணே!” என்று இரண்டு மூன்று திராம் அடித்தார்கள் இருவரும்.
அங்கே மாணிக்கத்துக்குக் கன குஷி – தான் வேட்டுப் போடப் போகிறோமென்று. அன்று தேருக்கு முதல் நாள். கோயிலில் ஏகக் கும்பல். வெடி போடும் இடத்தைச் சுற்றிச் சிறுவர் கும்பல். தன் வயதொத்த சிறுவர்களிடம் தன் சாமர்த்தியத்தை வெளிப்படுத்த எண்ணி நன்றாக மருந்தைக் கெட்டித்தான் மாணிக்கம்.
முதல் தடவை வெடியும் வெடித்தான். சிறுவர்களுக்கெல்லாம் பெரும் சந்தோஷம்.
பாண்டு வாத்திய முழக்கத்துடன் சுவாமி வாகனத்துக்குச் சென்று கொண்டிருந்தது. அதை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மாணிக்கம், ‘கபகபவென்று திரியை இரண்டு துளையிலும் வைத்தான். நெருப்பை வைத்தான்.
படார்… ஒரு வெடி வெடித்தது.
இரண்டல்லா வெடிக்க வேண்டும்? பத்து விநாடி, பதினைந்து விநாடி… இன்னும் ஏன் வெடிக்கவில்லை? திரி சரியாக வைக்க வில்லையா? என்று குழப்பத்துடன் மாணிக்கம் இரண்டாம் துளை ருகில் சென்றான். அவ்வளவுதான்.
படார்… என்று வெடித்தது. புகைப்படலம் எங்கும் சூழ்ந்தது. காதை மூடிக் கொண்டு சிறுவர்கள் பறந்தோடினர். ஆனால், புகை கலைந்தபிறகு…
சுவாமி கோபுர வாசற்படிக்கருவில் வந்தாகிவிட்டது. ஏன் இன்னும் வெடி போடவில்லை என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள். கும்பலில் விநாயகம் நின்று கொண்டிருந்தான். கோபுரத்தையும் வாகனம் தாண்டியது. இன்னும் ஜமீன்தாரைக் காணோம். மூன்றாவது வேட்டுக்கல்லவா அவர் வருவார்!
“வேட்டு போடச் சொல்லு. விநாயகம் தூங்கறானா?” என்று கூவினார் தர்மகர்த்தா. விநாயகத்தின் காதில் அது எதிரொலித்தது. ஆம்; என் மூன்றாவது வேட்டைக் காணோம்? என்று கனவு உலகத்திலிருந்து எண்ணினான் விநாயகம். கனவு அன்று மது மயக்கம்!
”அய்யய்யோ! அங்கு விநாயகத்தைக் காணோமே! ஒரு புள்ளைதான் செத்துக் கிடக்கு!” என்று ஒருவன் ஓடி வந்து கூவினான்.
திடுக்கிட்டான் விநாயகம். ஓடினான். பின்தொடர்ந்து பலர் ஓடி வந்தனர். சாராய மயக்கத்தையும் மீறித் துக்கம் பீறிட்டது.
”அய்யோ, சபதத்தை மீறினேனே! என் பிள்ளை எனக்கு உதவாமல் போய்விட்டானே!” என்று அலறினான் அவன். அவ்வளவுதான். மாணிக்கத்தை அணைத்துக் கொண்டு மயங்கிக் கீழே சாய்ந்தான்.
“ஏம்பா, இப்பவாவது திறமையுடன் தூய்மை இருக்க வேண்டும் என்பதை ஒப்புக் கொள்கிறாயா” என்று முடித்தார் நண்பர்.
எனக்கு உடலெல்லாம் மயிர்க் கூச்செறிந்திருந்தது. வியர்த்து விட்டது. வார்த்தைகள் வரவில்லை.
– 1945, ஜ்வாலா.
– செவ்வந்திப்பூ சிங்காரி, கலைமாமணி விக்கிரமன் எழுதிய சமூகச் சிறுகதைகள், தொகுதி-1, முதல் பதிப்பு: 2010, யாழினி பதிப்பகம், சென்னை.