வாட்டத்தோடு வரும் வசந்தம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 28, 2024
பார்வையிட்டோர்: 215
(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பம்பாயின் வாழ்க்கைமுறையில் தாராவி ஒரு தவிர்க்க இயலாத அங்கம். பெரும்பாலும் தமிழர்கள், உபி முஸ்லீம்கள், மராத்தியர்கள், ஆனால் இன, சாதி தனித்துவத்தைத் தமிழனைப் போல் யாரும் கட்டிக் காப்பதில்லை.
தமிழ்நாட்டின் எல்லாக் கட்சிகளுக்கும் இங்கு கிளைகள் உண்டு. கொடிக் கம்பங்கள், படிப்பகங்கள், நிதி திரட்டல்கள்… தமிழ்நாட்டில் எந்த அரசியல் தலைவன் கனைத்தாலும் கட்சிக்காரன் இங்கே தண்ணீர் குடிப்பான்…நாஞ்சில்நாடன்
எஸ்.கே.முத்துவுக்கு வீட்டு முகவரிக்கு ஒரு ‘காயிதம் வந்தது. வீட்டு முகவரி என்பது மேற்பார்வை, பேரறிஞர் அண்ணா சலவை நிலையம். கும்பர்வாடா ரோடு, தாராவி, பம்பாய் 400 017. வழக்கமாக வேலை முடிந்து வீட்டுக்கு வரும் போது மூலையில் இருக்கும் சலவைநிலையத்தில் கடிதத்துக்காக ‘தப்பரவி’ விட்டுதான் வருவான். அப்படி அவனுக்கு தினமும் கடிதம் வருவதில்லை. பணகுடியிலிருக்கும் மாமாவிடம் இருந்து மாதத்துக்கு ஒன்று வரும்.
‘தேகத்தைப் பாத்துக்கோ, வெயில்லே அங்கிண இங்கிண அலையாதே வீட்டுக்கு ஒளுங்கா பணம் அனுப்பு. பதில் கடுதாசி போடு’ என்ற கணக்கில்.
ஈசாந்திமங்கலத்தல் இருந்து மாதம் இரண்டு கடிதம் வரும். அம்மா சொல்லி தங்கச்சி எழுதுவது. இங்க மளை இல்ல. வயலுக்கு களை பறிக்கணும். பேய்ச்சிக் கோணத்திலே ஒருவாடு வளரி புடிச்சுக்கிட க்கு. இந்த மாசம் அம்பது ரூவா கூடுதலா அனுப்பு நாலு நாளைக்கு மிந்தி தெக்குத் தெருவிலே சண்முக வேலு பாட்டா செத்துப்போயிட்டாரு. நாங்கோ எல்லாரும் சொகம், நீ ராத்திரி பாலு வாங்கிக் குடி’ எனும் பாங்கில்.
இப்படி மாதம் மூன்று கடிதங்களே வருவதாயினும், வரும் காலநேரம் நிச்சயமற்ற ஒன்றாகையால், தினமும் சலவை நிலையத்தில் போய்ப் பார்ப்பது நடைமுறை கடைமுன் போய் நின்றதும் கடை முதலாளி மாடசாமி ஒரு கட்டுக் கடிதத்தை வெளியே எடுத்துப் போடுவான். அதில் தே ஆரம்பிக்க வேண்டும். மூன்று மாதத்துக்கு முந்தியது முதல் அன்று வந்ததுவரை, கசங்கி, சுருங்கி நைந்துகிடக்கும். அநேகமாக அக்கம் பக்கத்து ‘சால்களில் வாழும் பெரும்பாலோர் கடிதங்களும் இங்குதான் விழும் என்பதால் ஆள் அகப்படாத அனாதை கடிதங்கள் நாயகன் வரவு நோக்கி, பசலை படர்ந்து பரிதவிக்கும்.
பம்பாயின் வாழ்க்கைமுறையில் தாராவி ஒரு தவிர்க்க இயலாத அங்கம். பெரும்பாலும் தமிழர்கள், உ.பி. முஸ்லீம்கள், மராத்தியர்கள், ஆனால் இன, சாதி தனித்துவத்தைத் தமிழனைப் போல் யாரும் கட்டிக் காப்பதில்லை.
தமிழ்நாட்டின் எல்லாக் கட்சிகளுக்கும் இங்கு கிளைகள் உண்டு, கொடிக் கம்பங்கள், மன்றங்கள், படிப்பகங்கள், நிதி திரட்டல்கள்… தமிழ்நாட்டில் எந்த அரசியல் தலைவன் கனைத்தாலும் கட்சிக்காரன் இங்கே தண்ணீர் குடிப்பான். பம்பாயில் எங்கும் கிடைக்காத ‘குத்தீட்டி..’ ‘செங்கோடரி’, ‘கூர்வாள்’, ‘இனச்சங்கு’ எல்லாம் இங்கே கடைகளில் தொங்கும்.
இவை தவிர, தமிழகத்து அனைத்துச் சாதிகளுக்கும் இங்கு சங்கம் உண்டு, திருநெல்வேலிச் சைவர், கானாடு காத்தார், துளுவவேளாளர், தேவேந்திரவேளாளர், வீரசைவர், நாடார் மகாஜனம், தக்ஷிணமாற நாடார், செங்குந்த முதலியார், அகமுடையர், முக்குலத்தோர்…
சால்களும் சாதி அடிப்படையில் பிரிந்து நின்றன. நாட்டுத் தலைவனைக் கொச்சைப்படுத்தி சாதித் தலைவனாகக் காணும் சாமர்த்தியம் காமராஜர் சால், கக்கன்ஜி சால், முத்துராமலிங்கம் சால், முகம்மது இஸ்மாயில் சால், கன்னிமேரி சால், அம்பேத்கார் சால்..
எஸ்.கே.முத்து, விநாயக் சாவில் ஒரு பொங்கல் வீட்டில் தங்கியிருந்தான். சால் என்று சொன்னால் பத்து பன்னிரண்டு முறிகள் கொண்ட வீடு. எல்லா முறிகளுக்கும் பொதுவாக வராந்தாவிலிருந்து வாசல்கள். இது போல் நாலைந்து சால்களுக்குப் பொதுவான கழிப்பறைகள், குளிப்பிடங்கள், இங்கே வசிக்கும் ஆண்கள் எல்லாம் கழிப்பறைக்குப் போகும் போது பீடி, சிகரட் அல்லது சுருட்டு பிடிப்பார்கள்.
திருமணமாகாதோர் அல்லது மனைவியை ஊரில் விட்டு விட்டு வந்திருப்போர் கூடி வாழும் முறிக்கு பொங்கல் வீடு என்று பெயர். பத்துக்கு எட்டடி நீள அகலம் கொண்ட ஒரு பொங்கல் வீட்டில் குறைந்தது இருபது பேர் தாமசம். முறியின் மூலையில் ஒரு அங்கணம்,அங்கணத்தில் நாற்பது கேலன் டிரம் இரண்டு. இரண்டு மூன்று சிறிய டால்டா டின்கள் பிளாஸ்டிக் பக்கட்
தலைக்குமேல் உயரத்தில் அடித்த தட்டுப்பலகையில் அவரவர் பெட்டிகள், பெட்டி மேல் படுக்கை, பலகையின் கீழே நாலும் கொடியில் தொங்கும் பேன்ட், சட்டைகள், எதிர்த்த சுவரில் தொங்கும் கொடியில் காயும் துண்டுகள், வேட்டிகள் . இருபது பேர் கொண்ட பொங்கல் வீடானாலும் மொத்தமாக கூட்டுப் பொங்கல் இல்லை. இரண்டு மூன்று பேர் கொண்ட குழுக்களாக, ஊர்க்காரர்கள், சொந்தக்காரர்கள், இரவில் எங்காவது இரவுக் காட்சி பார்த்துவிட்டோ, இரண்டாவது ஷிஃப்டில் வேலை முடிந்தோ பொங்கல் வீட்டுக்குத் திரும்புகையில்… அடித்துக் கிடத்தியதுபோல் அத்தனை பேரும் நெடுநீளமாகப் படுத்திருப்பர். யாராவது ஓரிருவர் இல்லை யென்றால், அந்த இடம் மட்டும் இரண்டடி அகலம் காலியாகக் கிடக்கும். படுக்கையும் விரித்திருக்கும். விளக்கை அணைத்தபின், குளத்து நீரை மூடும் பாசிபோல், நகர்ந்து, நகர்ந்து வெற்றிடம் சுருங்கி இல்லாமல் ஆகும். நேரங்கழித்து வருபவன் பாடு திண்டாட்டம், விளக்கைப் போட்டால் வெளிப்படும் சீறல்கள், இருட்டுக்குக் கண்கள் பழகி மெல்லடி நடந்து, இடத்தைத் தடவி, கொடியில் முறுமுறுத்துக்கிடக்கும் துண்டின் நாற்றத்தை வைத்துத் தன் துண்டை தேடி எடுத்து முகம் துடைத்து..
‘சம்முகம்… கொஞ்சம் தள்ளிப்படு..’
குரல் கேட்டு அசையும் உடல்களின் இடையே உடம்பை ஒருக்களித்துக் கிடத்தி, மல்லாந்து-
எஸ்.கே.முத்துவுக்கு வி.டி. ஸ்டேஷனில் கேன்டீனில் வேலை அங்குமிங்குமாக நாலைந்து ஓட்டல்களில் வேலை பார்த்துப் பெற்ற அனுபவமும், மேலப்பாறையூர் முத்துசாமி அண்ணாச்சியின் சிபாரிசும் வாங்கித்தந்த வேலை. சம்பளம் அப்படி ஆளை அயர்த்துகிற விதத்தில் இல்லை. ஆனால் ஆண்டுக்கு ஒருமுறை லீவில் ஊருக்குப் போகையில் சுளையாக ஆயிரம் ரூபாய் செலவழிப்பதும், சென்ட்ரல் ரயில்வேயில் வேலை என்று அளப்பதுமாக, எஸ்.கே.முத்துவுக்கு ஊர்ப்பக்கத் திலும் சொந்தக்காரர்களிடத்திலும், ஒரு சவுக்களிச்ச கெவுரவம் உண்டு.
கடிதக்கட்டைப் புரட்டிப் பார்த்தான் எஸ்.கே.முத்து. அவன் பெயருக்கு ஒரு கவர் இருந்தது. முழுப் பெயரையும் எஸ்.காத்தமுத்து என்று எழுதுபவர் மாமா ஒருத்தர்தான்.
வழக்கமாக அஞ்சலட்டையில் எழுதுபவர் இன்று கவரில் எழுதியிருந்தார். சில சமயம், சுடலைமாடன் கோயிலில் கொடை கழித்தாலோ, பொங்கல்விட்டுச் சேவல்அறுத்தாலோ திருநீற்றுப் பிரசாதம் சுவரில் வரும். ஆனால் அதெல்லாம் மாசி, பங்குனி மாதங்களில் ஐப்பசியில் இருக்காது. எனவே கடிதத்தில் ஏதோ சேதி இருக்கிறது என்ற கருத்தில் பைக்குள் மடித்துவைத்தான். உடனே பிரித்துப் படிப்பதென்றால் நடக்காது, எழுத்துக் கூட்டிப் படிப்பது என்பதாலும், மாமாவின் கையெழுத்து நிரம்ப மேடுபள்ளங்கள் கொண்டதாலும், நேர்மையானதொரு அவகாசம் வேண்டும்.
பொங்கல் வீட்டை எஸ்.கே.முத்து சேர்ந்தபோது மணி எட்டரைக்கு மேல் ஆகிவிட்டது. பல்வேறு குழுக்களின் சமையல் வேலை சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருந்தது.ஏழெட்டு ஸ்டவ்வுகளின் இரைச்சல் சப்பாத்தி மாவு பிசைதல், அரிசியில் கல் பார்த்தல், சில ஸ்டவ்வுகளில் குழம்பு கொதித்து மணம் வரத் தொடங்கியது. அம்மியில் ஒருவன் அரைத்துக் கொண்டிருந்தான்.
“செம்பகம், ஒரு உள்ளி எடு.”
“எங்கிட்ட இல்லப்பா… ஒனக்கு நெதம் இதே எளவு”
“அட எடுடே.. நாளைக்கு வாங்கியாறேன்..”
அதுபோல் அடிக்கடி அடுத்தவர் பிரதேசங்களில் ஆக்கிரமிப்புகள். குமாரசாமி ஆர்லிக்ஸ் பாட்டில் ஒன்றை எடுத்துக்கொண்டு வெளியே போனான். காய்கறிகள், வெஞ்சணம் எல்லாம் காலியாகிவிட்டதால், கடையிலிருந்து சாம்பார் வாங்கிவரப் போகிறான் போலிருக்கிறது.
சட்டை, பேன்டைக் கழற்றிப் போட்டு, சாரம் உருவிக் கட்டிக்கொண்டு வாசல்பக்கம் கிடந்த பெஞ்சில் அமர்ந்தான் எஸ்.கே.முத்து. அவனுக்கு இந்த சமையல் சள்ளை எதும் கிடையாது. வேலை கேன்டீனில் ஆனபடியால், இரவு ஏழரைக்கு வேலை முடிந்து புறப்படும்போது சாப்பிட்டுவிட்டேதான் கிளம்புவது. அதுபோல் காலையிலும் அங்கே போய்த்தான் ‘நாஸ்டா’.இதன் வகையில் முத்து மீது மற்றவர்களுக்கு ஒரு பொறாமையும் புகைச்சலும் உண்டு.
“அவனுக்கென்னடே? சம்பளம் பூராவும் மிச்சம்லா?” என்று சொக்களி பேசுவார்கள்.
பெஞ்சின் மீது அமர்ந்து பக்கத்தில் எரிந்த ஸ்டவ்வி லிருந்து தீ எடுத்து பீடி பற்றவைத்தான். இழுத்து புகையை ஊதிவிட்டு கடிதத்தைப் பிரித்தான். மொத்தையாக மூன்று அரைத்தாள்கள்.
“என்னவே? காயிதம் கனமா இருக்கு? லவ்வா?”
“அட சும்மாரும் வே. பணகுடி மாமால்ல எழுதீருக்காரு…” மனதுள் எழுத்துக் கூட்டி கடிதத்தைப் படிக்கத் தொடங்கி னான். வரிகள் செல்லச் செல்ல மனத்துள் பூரிப்பு, கவலை எரிச்சல்.
மாடத்தியை நினைக்கையில் மனம் மையல் கொண்டது. தாய்மாமன் ஆனபடியால், எப்போது ஊருக்கு விடுமுறை யில் போனாலும் இரண்டு மூன்று நாட்கள் பணகுடியில் வாசம்
உண்டு, வெறும் நெல் மட்டும் விளையும் நாஞ்சில் நாட்டுச் சூழ்நிலையை விட்டு, பணகுடியின் பஞ்சைக்காடுகளில் அலைந்து திரிகையில் மனம் கிளர்ச்சி கொள்ளும், வாழை தோப்புகள், சோளக்கொல்லை, கம்புக்காடு, மிளகாய்ப் புஞ்சை, உடையும் கருவேலமும் செறிந்த குளத்தங்கரைகள், செம்மண் கலந்து கலங்கிக்கிடக்கும் குட்டைகள், காளை மாடுகள் இறங்கும், ஏறும் கமலைக் கிணறுகள், கிணற்றங்கரையின் வெண்டை, கத்திரி, அவரை… துவரை.
சென்ற ஆண்டின் விடுமுறையில் பணகுடியில் தங்குகை பில், மாடத்தியை காணும்போது மனம் பித்துக்கொண்டது. அத்தையும் மாமாவும், அருகில் இல்லாத ஒரு மாலையில் வெகு தோரணையுடன் வாராந்தரி படிப்பதாக இவன் பாவனை கொள்கையில் இவனருகே பெஞ்சின் மேல் கொய்யாப்பழம் ஒன்று வைத்துவிட்டு மாடத்தி ஓடி உள்வீட்டில் நின்று சிரிக்கையில்..
தங்குமிடம் பெரியபிரச்னை, பெண்டாட்டியோடு பொங்கல் வீட்டில் தங்க முடியாது. மாமாவோ கல்யாணத்துக்கு தாள் குறித்தாயிற்று. வீடு பார்க்க முன்பணம் போக்குவரத்துச் செலவுகள் துணிமணிகள்..
மற்றதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் புறப்படுமுன் வீடொன்று ஏற்பாடு செய்ய வேண்டுமே! போன ஆண்டு ஊருக்கு போய்வந்த கடன் இப்போதுதான் தீர்ந்திருக்கிறது. பக்கத்து சால் ஒன்றில் பாதிமுறி வாடகைக்குப் பிடிக்க வேண்டு மென்றாலும் இரண்டாயிரம் முன்பணம் வேண்டும்.
இதை எல்லாம் சொல்லி, தான் ஆயத்தமாக ஒரு அவகாசம் கேட்டு மாமாவுக்கு எழுதலாமா? ஆனால் மனக்கண்ணில் ஆடும் மாடத்தி..
வடக்கன்குளத்து சீட்டுக் கரைக்காரரைப் பார்க்க முத்து உள்ளே எழுந்து போனான்.
– வஞ்சிநாடு. திருவோணமலர், 1977
நன்றி: https://nanjilnadan.com