கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 12, 2026
பார்வையிட்டோர்: 298 
 
 

(1965ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இதழ் 35-37 | இதழ் 38-39

இதழ் 38 – நெப்போலியன் அன்பழைப்பு

அடிலியின் காதல் வாழ்வு விரைவில் வாட்ட முற்றது. ஒன்றிரண்டு பிள்ளைகளைப் பெற்றபின் அவள் உடல் நலிவுற்றது. அத்துடன் அவள் கணவனும் மட்டற்ற குடியிலாழ்ந்து, அகாலமாக உயிர் துறந்தான் கைம்பெண்ணான அடிலி எப்படியோ புரட்சியின் புயல் கடந்து வாழ்ந்தும், வாழ்வில் தனிமைப்பட்டு வருந் தினாள். தன் தாய் தன்னுடனிருந்தாலாவது ஆறுதலா யிருக்கும் என்று அவள் எண்ணினாள். லாரைனும் அவளிடம் மிகவும் பாசங்காட்டி அவளை மகிழ்விக்கும் கடிதங்கள் எழுதினாள். அவளைப்பற்றிய ய கடிதத்தில், 

வாழ்வில் என் வான்புகழ்நீ, 
மங்காத இன்பம்நீ! 
தாழ்வின்றி என் மனத்தே 
என்றும்நீ தங்கியுள்ளாய்! 
வீழ்தூன்றி என் உயிரில் 
நீ நிலைத்து வளர்கின்றாய்! 
வன்னமலர் தந்து மகிழ்வு 
ஊட்டும் வனமல்லிகை நீ!
என்னபுயல் வீசிடினும் 
இலைதழைகள் உதிர்த்திடினும்
மன்னி உரம் பெற்றுநின்று 
மலர் தந்து மகிழ் பூப்பாய்! 

என்ற ஒரு அன்புப் பாடல் எழுதியனுப்பினாள். 

நெப்போலியனின் முதல் மனைவி ஜோஸஃவைன் நட்பு அடிலிக்குக் கிடைத்தது. அதன் மூலம் அவள் தன் தாய்மீதும் மூரட்மீதும் இருந்த நாடுகடத்துச் சட்டத்தை அகற்றுவித்தாள். 1799-ல் அடிலி அன் பழைப்புக்கிணங்க இருவரும் பாரிஸ் வந்தனர். மூரட் டுக்குப் புதிய பட்டம் வழங்கப்பட்டது. அவன் மூரட் கோமான் ஆனான். லாரைன் மீண்டும் புது உரிமையால் கோமாட்டியாயினாள். முன் அவர்களை அவள் பட்டம் பிரித்து நின்றது. இன்று அவர்கள் சேர்க்கைக்குப் புதுச் சின்னமும் புதுப் புகழும் பொலிவும் அளித்தது. 

அடிலியும் நெப்போலியன் மனைவி ஜோஸஃவினும் புரட்சித் தொடக்கத்தில் ஒன்றாகவே சிறைப்பட்டுச் சிறையிலே தோழமை பெற்றவர்கள். இப்போது ஜோஸஃவின் கட்டிளமைப் பருவம் கடந்தவளானாலும் அது தோற்றாமல் தன் இயற்கையழகைப் பலவகையிலும் பெருக்கி, நெப்போலியன் குறிப்பறிந்து அவனை மகிழ்விப்பதில் ஈடுபட்டிருந்தாள். நெப்போலியனிடம் அவளுக்குப் பேரளவு செல்வாக்கும் இருந்தது. தன் இளமைத் தோழிக்காக அவள் இச்செல்வாக்கைப் பயன் படுத்தத் தயங்கவில்லை. 

அடிலி ஜோஸஃவினைக் காணச் சென்றபொழுது. நெப்போலியன் துயிலில் ஆழ்ந்திருந்தான். ஜோஸஃவினே அவளை வரவேற்றாள். வெளிக்கூடத்திலிருந்த ஜோஸஃவினின் நாய் ஃவார்ச்சூன் பார்க்கப் பயங்கர மானது. ஆனால் அவள் அதனிடம் மிகவும் நேசம் வைத்திருந்தாள். அவள் மணவிழாவில்கூட’ அதை அவள் விட்டுப் பிரியவில்லை. அதுவும் மணமகனாகிய நெப்போலியனையே கடித்துத் தன் சலுகையின் அளவைக் காட்டிற்று. இப்போதும் அது உறுமிக் கொண்டு அடிலிமீது பாய முயன்றது. ஜோஸஃவின் அதனை விலக்கிவிட்டுத் தோழியுடனிருந்து பேசிய போதும் அது விடாமல் அடிக்கடி வந்து தொந்தரவு செய்துகொண்டேயிருந்தது. 

“ஆ, மாது தே அஸ்டின் என்னை வந்து காண விரும்பியது கண்டு மிக மகிழ்ச்சியடைகிறேன். (நாயை நோக்கி) பேசாதிரு, சிறிது நேரம், ஃவார்ச்சூன். இது என் பழைய தோழி அடிலி. (மீண்டும் அடிலியை நோக்கி) உங்கள் தாய் மாது சிராம்மோன் எப்படி இருக் கிறாள்? வா, வந்து என்னுடன் அமர்ந்து எல்லாம் தெரிவி. நாம் தேநீர் அருந்திக்கொண்டே பேசலாம் – நான் தேநீர் கொண்டுவரச் சொல்லுகிறேன்” என்று அன்பாதரவுடன் கூறி அவள் வேலையாட்களைத் தேநீர் கொண்டுவரும்படி பணித்தாள். 

அடிலி தன் வாழ்வின் தனிமை, தன் தாயின் துணை யில்லாமல் தான் படும்துன்பம் ஆகியவற்றை விளக்கிக் கூறினாள். 

மாது ஜோஸஃவின் இயல்பிலேயே நட்புணர்ச்சி யுடையவள். அரசியல் உயர்வு இதனைப் பெரிதும் வளர்த்திருந்தது. மாது ஆக்டேவ் மூரட் பெயர் உயர் குடியின் புகழுக்குரியது என்பதை அவள் அறிவாள்•- குடிப்பிறப்பு வேற்றுமைகளைச் சட்டத்தால் களைந்தாலும் அவர்கள் பண்பையும் ஆதரவையும் பெறுவதில் நெப்போலியன் முனைந்திருந்தவன். உயர்குடித் தொடர்பால் ஜோஸஃவினும் தன் மதிப்பை நிலை நாட்ட நினைத்தாள். ஆகவே அடிலிக்கு உதவுவதில் சிறிதும் காலம் தாழ்த்தவில்லை. 

உறங்கிக்கொண்டிருந்த நெப்போலியனை அவள் தட்டி எழுப்பினாள். அப்பெருவீரனை அவள் மனைவியின் உரிமைப்படி செல்லப் பெயர்களால் அழைப்பது வழக்கம். அடிலியின் முன்னிலையிலேயே அவள் அப்பெயர்களால் அவனை “நானா, நானா! பெரப்போ, பெரப்போ, எழுந்திருங்கள். பிறகு தூங்கலாம்” என்று முடுக்கினாள். 

“என்ன அப்படி அவசரமான செய்தி? ஏதாவது துணிக் கடை டக்காரன், தையல் கடைக்காரன் வந்திருக் கிறானா?” என்று நெப்போலியன் புரண்டுகொண்டே கூறினான். 

“இல்லை. உங்களுக்கு ஒரு புலவரைச் சேர்த்து வைக்க விரும்புகிறேன். உங்கள் அவையை அவர் அழகுபடுத்துவார்” என்றாள் அவள். 

“புலவர் என்ற சொல் அடிலியின் அன்பழைப்பை விட விரைவில் அவர் உறக்கத்தை அகற்றியது. ‘‘புலவரா, ஆ” என்று அவன் எழுந்து விரைவில் ஆடைமாற்றிக் கொண்டு வந்தமர்ந்தான். 

“பழைய அரசியின் அவைக்களத்தில் பெரும்புகழ் பெற்றிருந்த பெண்மணி கோமாட்டி சிராம்மோனைப் பற்றி நான் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேனல்லவா? 

நெப்போலியன் கண்களில் மகிழ்ச்சி ஒளி வீசிற்று. புலவர், உயர்குடி அவைகளையும் கனியச் செய்யும் பெண்பாற் புலவர். ஆகிய சிராம்மோனின் பெயர் அவன் அவா ஆர்வங்களுக்கேற்றதாயிருந்தது. பண்டைய அரசரினும் கலை, நாகரிகம் வளர்ப்பதில்தான் பிற் பட்டு விடவில்லை என்பதைக் காட்ட இது ஓர் அரிய வாய்ப்பு என அவன் எண்ணினான். 

மூரட் பெயரும், மாது சிராம்மோன் இப்போது அவன் மனைவியாய் மாது மூரட் ஆன செய்தியும் இதன் பின்னரே கூறப்பட்டது. மூரட்டின் பெயரும் நாடுகடத்தப் பட்டோர் பட்டியிலிருந்து அடிபடாமல் மாது மூரட் திரும்பி வந்து வாழ முடியாது என்பதை ஜோஸஃவின் பக்குவமாக எடுத்துரைத்தாள். அத்துடன் மூரட்டும் கவிஞன் என்பதும், விகட வசைக் கவிஞன் என்றும் கூறப்பட்ட போது நெப்போலியன் மனம் தெளிவுபெற்றது. முன் அரசவையில் அவன் இடம் பெறாதது அவன் குடிப் பிறந்தும் அதனை எதிர்க்கும் புரட்சியாளருடன் ஓரளவு ஆதரவு காட்டினான் என்பதை அறிந்த போது நெப் போலியனுக்கு எல்லா வகையிலும் மனநிறைவு ஏற்பட் டது. உயர்குடியாள் பண்புடன் பொதுமக்கள் பால்- ஒத்துணணர்வும் உடைய அவன் தொடர்பு நெப்போலிய னின் நடுநிலை நாகரிக ஆட்சிக்கு உறுதுணையாயிருக்கும் என்பதை அவன் கண்டான். 

மூரட் லாரைன் வருமுன்பே பாரிஸ் வந்து அவள் வரவுக்கான ஏற்பாடுகளைச் செய்தான். சீரழிந்துகெட் டிருந்த அவள் பழைய மாளிகையும் தோட்டமும் திருத் திச் செப்பம் செய்யப் பட்டன. ஆனால் மாளிகையைத் தான் திருத்த முடிந்ததே தவிரச் சுற்றுச் சார்புகளைத் திருத்த முடியவில்லை. பெருமக்கள் வாழ்ந்த பகுதியி லிருந்த அவ்வீடு தன்னந் தனியாயிருந்தது. அருகிலிருந்த மாளிகைகளெல்லாம் பாழடைந்து கிடந்தன. பல வற்றில் அவற்றின் வேலைக்காரர்களும் சிலவற்றில் புதிய ஆட்சியின் படைவீரரும் தலைவர்களும் இருந் தனர். ஆனால் முன்னைய வீட்டுத் தலைவர்களைப்போல் அவர்கள் வீட்டைச் செம்மைப்பட வைத்துக் கொள்வ தில் அக்கரை செலுத்தவில்லை. எந்த நேரத்திலும் அது அடுத்தவர் கைக்குப் போய்விடலாம் என்று அவர்கள் நினைத்ததே இதற்குக் காரணம். 

மனித வாழ்வு இங்கே அழிந்து கிடந்தது. மனி தர் வகுத்தமைத்த தோட்டங்கள் சீர்கெட்டிருந்தன. ஆனால் மனிதர் வகுக்காது வரைந்திருந்த மரங்கள் முன்னிலும் பெருத்துக் காணப்பட்டன. புரட்சி மனித வாழ்வை மாற்றியமைத்தது -இயற்கையைப் பாதிக்க வில்லை என்பதை இது வற்புறுத்திக் காட்டிற்று. 

அடிலி நாடு கடத்தப் பெறவில்லை. ஆகவேஅவள் வீடும் குடியும் செல்வநிலையும் பாதிக்கப் பெறவில்லை. அவள் தன் தாய்க்கெனத் தனி வீடு வாங்கியிருந்தாள். நெப்போலியன் ஆட்சி அவள் செல்வநிலையை இன்னும் உயர்த்தியிருந்தது. 

அடிலியைக் கண்டபின் மூரட் நெப்போலியனையும் ஜோஸஃவினையும் சென்று கண்டான். அவனை அவர் கள் நன்கு வரவேற்றதுடன் அவனுக்கு அவைக்களத் திலிருந்தே வாழ்க்கைக்குப் போதிய ஒரு சிறு உதவிச் சம்பளமும் தர உறுதி கூறினர். இதன் பின்னரே மூரட் தன் புது மனைவியையும் அகஸ்டியையும் தன்னு டன் அழைத்துக் கொண்டான். 

பல தோல்விகளிடையேயும் ஏமாற்றங்களிடையே யும் மூரட் தளராது அவாவி எதிர்பார்த்திருந்த தன்னாண்மையும் மட்டான செல்வ நிலையையும் இப்போது அவனுக்குக் கிடைத்தன. அத்துடன் லாரைனின் செல்வநிழலில் தங்க மறுத்த அவனுக்கு அவள் தங்க நிழலளிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அவன் மனம் நிறைவடைந்தது. என்றுமே இளமனம் நிறைவடைந் தது. என்றுமே இளமனம் படைத்த அவன் மகிழ்ச்சி இப்போது உடலுக்கும் புத்திளமை தந்தது. அவன் தலையின் வெண்மை ஒன்று தவிர அவன் முதுமையைக் காட்டும் சின்னம் எதுவுமில்லை. அவன் இப்போது தன் நிலத்தில் உழைத்தும் தன் தோழர்களான ஏழை எளிய வர்க்கு உதவியும் வாழ்ந்தான். இவ்வாழ்வு அவன் உடற்பண்புக்கு ஒத்ததாயிருந்தது. 

மூரட்டை விட லாரைன் பல ஆண்டு இளையவள்• ஆகவே அவள் முதுமையில் அவனைக் காக்கும் இனிய பொறுப்புத் தனக்கு ஏற்பள் என அவன் கனவு கண்டு வந்திருந்தான். ஆனால் நிலைமை இப்போது அதற்கு நேர்மாறாயிருந்தது. பாரிஸுக்கு வந்தபின் அவள் பக்கவாதத்துக்கு இரையானாள். அவள் கால்கள் வலு விழந்தன. அத்துடன் அவை சூம்பிச் சுருக்கமுற்றன. இளமையில் பல்வலி, வயிற்றுவலி, வாதம் ஆகியவற் றுக்கு ஈடுகொடுத்த மூரட் இப்போது உரம் கெடாது இருந்தது அவளுக்கு இப்போது ஒரு நல்ல பாதுகாப் பாயிற்று. அவன் சிறிதும் அயராது அவள் நலம் பேணி அவள் தன் குறை உணராதவாறு பாதுகாத் தான். மருந்தூற்றுக்களுக்கு அவளை இட்டுச் சென்றான். கெடா அவளுடன் இன்னுரையாடி அவள் மன நிலை வாறு பேணினான். 

இவ்வாறாக நெப்போலியன் அழைப்பு அவர்களை வாழ்வின் இறுதிக் கூற்றில் ஒன்றுபடுத்திற்று. 

இதழ் 39 – நந்தாவிளக்கு

‘இளமை அழகை விலைப்படுத்தும்; முதுமை அதனை நுகரும்’என்ற உண்மைக்கு மூரட்லாரைனின் வாழ்க்கை. முறையும் அவர்கள் இல்லமும் இப்போது இலக்காயிருந் தன. வீட்டின் பலகணிகள் பூந்தோட்டத்தை எட்டிப் பார்க்கும்படி அமைந்திருந்தன. அத்தோட்டத்தின் மலர் கள் ஒரு கவிஞனின் கவிதைக் கனவையும், அக்கவிஞன் கனவுகண்ட நங்கையின் கலைக்கனவையும் ஒருங்கே நினைவூட்டுவனவாய் இருந்தன. வெள்ளைச் சிரிப்பு சிரிக்கும். முல்லைப் பந்தருடன் போட்டியிட்டு வெள்ளை, சிகப்பு, நீல நிறங்களைக் கலந்து காட்டிய அந்திமந்தா ரங்கள், சிவந்தசெம்பருத்திகள், அம்பருத்திகள் நந்தியா வட்டைகள் ஆகியவை கூட்டு நடனமாடின. பன்னி றங்கள் மூரட்டின் நிலையற்ற துடிப்பைக் காட்டின. ஆனால் அதனிடையே அவன் தன் காதல் மனைவி லாரை னுக்குப் பிடித்தமான தூய முல்லைக்கு நடுவிடந்தர மறந்து விடவில்லை. நடமாடமுடியாத அவன் உடனி ருந்து பேணினாற்போல அவன் கை அவளுக்கு விருப்ப மான மலரையும் வளர்த்தது. 

லாரைன் எப்போதுமே நல்ல வீட்டமைப்பை விரும் பியவள். அதனை மதித்துணரும் பண்பும் உடையவள். ஆனால் அதனை ஒருங்கமைக்கும் பயிற்சி அவளிடம் முன்பே இல்லாதிருந்தது. உடல் சோர்வுற்ற இப் போது அதன் பொறுப்பும் மூரட்டிடமே இருந்தது. அவ்வப்போது அடிலி இப்போது அவளுக்கு இதில் உதவியாயிருந்தாள். இவ்விருவர் முயற்சியால் லாரை னுக்கு வீட்டின் அமைதிகாக்க ஒரு தலைவியின் மேற் பார்வையில்லாக் குறை தோற்றாமலே இருந்தது. தன் னுடன் தன் இரு குழந்தைகளையும் தீட்டியிருந்த லாரை னின் ஓவியம் வீட்டு முன்கூட முகப்பை அழகு செய் தது. தோட்ட மலர்களில் பொறுக்கி எடுத்த சில கொத்துக்கள் பலகணியடுத்த சுவரொட்டிப் பலகையில் அழகுற வைக்கப் பட்டிருந்தன. எதிரே இருந்த கண் ணாடிகள் அப்பூந்தட்டுகளையும் தோட்டத்தின் மலர்களை யும் அருகருகாக நிழற்படுத்திக் காட்டின. மற்றொரு புறத்துச் சுவரின் மங்குப் பிடிமீ தமைந்த இரண்டு மெழுகுவத்தி விளக்குகள் இருந்தன. அவற்றின் நடுவே வேள்மதனின் அழகிய சிற்றுருவம் நகைத்து நின்றது.

அரசவையினின்று, புதிய பட்டம் பதவிகளின் சின்னங்கள் பெருமையுடன் அங்கிமீது காட்சி யளிக்க மூரட் இல்லத்தில் நுழைவான். ஆடைமாற்றி அவன் சிற்றுண்டியுடனும் பருகு நீருடனும் பகலெல் லாம் படுக்கையிலிருந்து தன்னைப் பற்றியே கனவு கொண்டிருக்கும் தன் காதல் மனைவியண்டை யமர்ந்து இன்னுரையாடி ஊட்டி உண்பான். அவள் தன் கனவு களை இன்றும் இனிய கட்டுரையாக, வருணனையாக, ஓவியங்காளகத் தீட்டுவதுண்டு. மூரட்டும் அவளும் அவற்றை மீண்டும் மீண்டும் வாசித்துப் பாராட்டியும குற்றம் சாட்டியும் மகிழ்வர். விடுமுறை நாட்களில் இருவரும் இலத்தீன் காவியம் படிப்பர், அல்லது அதன் மொழி பெயர்ப்பில் பங்கு கொள்வர். அடிக்கடி ஒரு சொல்லுக்கு இருவரும் மல்லாடுவர். சொற் போரில் இன்றும் எவரும் உண்மை வெற்றியடை வதில்லை. யாராவது ஒருவரின் முதல் முத்தம் சொற் போருக்கு ஒரு முடிவு கட்டும். முதுமை இக் காதல் நாடகத்தைச் சிறிதும் குறைத்துவிடவேயில்லை. இளமையின் பலவகைத் தடைகளை நோக்க, முது மையே அக் காதலர்களின் உண்மை நண்பன் எனத் தோற்றிற்று. 

1904 இல் நெப்போலியன் பேரரசனாக முடிசூட் டினான். மூரட் செல்வத்தில் செல்வர் நிலையில் இல் லாத போதிலும் அதில் பங்கு கொள்ளும் கலைமதிப் புடையவனாயிருந்தான். 

இருவரும் அடிக்கடி நெப்போலியன் நாட்டுப்புறப் பண்ணை செல்லும்போது உடன் சென்று விருந்தினரா யிருந்தனர். லாரைன் இப்போதும் பேச்சினால் குடிசை யையும் அரண்மனையாக்கும் திறமுடையவளாகவே இருந்தாள். பழைய அரசி பற்றியும், நாகரிக நடையுடை மாறுபாடுகள் பற்றியும் அவள் பேசிக் கேட்பதில் எவருக்கும் சோர்வு ஏற்பட்டதில்லை. பேரரசன் நெப் போலியனுக்கு அதுவே பெருவிருந்தாயிருந்தது. இரண்டாண்டுகளுக்கு முன்பே நாடு கடத்தப்பட்டோர் அனைவரும் திருப்பி அழைக்கப்பட் டிருந்தனர். லாரைன், மூரட் ஆகியவர்களின் பழைய நண்பர்கள் பலர் இப்போது வந்து அவர்களுடன் அடிக்கடி கலந்து கொண்டனர். ஆனால் பழைய நண்பர்கள் எவருமே லாரைனையும் மூரட்டையும் கண்டு பொறாமைப்படாம லிருக்க முடியவில்லை. அவர்கள் வாழ்வும் செல்வமும் ஒருங்கே இழந்திருந்தனர். லாரைனும், மூரட்டும் வாழ்வுடன் செல்வமும் இவ்விரண்டுக்கும் மேம்பட்ட இன்பநிறைவும் பெற்றிருந்தனர். 

புயலில் அணையாத தீ இப்போது அமைதியில் நந்தா விளக்கா யிருந்தது. சூறாவளியில் வளைந்து நெளிந்த நீண்ட மலர்க் காம்பு இப்போது தலைநிமிர்ந்து நின்று தன் மலரை உயர்த்திக் காட்டித் தான் வாடா மலர், ‘வாடாமல்லி’ என்பதை விளம்பரப்படுத்திற்று. 

லாரைன் அடிக்கடி தன் இறந்து போன பழைய நண்பர்களையும் அவர்கள் அடைந்த இன்னல்களையும் நினைத்து வருந்துவாள். பாரிஸின் பல காட்சிகள் இவற்றை நினைவூட்டிஅவள் மனப்புண்களைக் கிளறின. மூரட் அவள் கவனத்தைத் தன் காதலுலகு மீது திருப்பு வான்.”புரட்சியை எண்ணி வருந்துவதுதவறு லாரைன், உண்மையில் அது ஏழை மக்கள் வாழ்வைப் பாதிக் கவே யில்லை. நம் காதல் வாழ்வில் அது செய்ததெல் லாம் முன்னைய வாழ்வில் இருந்த ஓயாத் தடைகளை அகற்றியதே. அது அழித்தது பெரும்பாலும் பகட்டு வாழ்வையும் நம் காதலுக்குத் தடையாயிருந்த நம் தற் பெருமைகளையும் மட்டுந்தான்” என்று அவன் விளக்குவான். அது முற்றிலும் உண்மையன்றாயினும் பெரும் பகுதி உண்மை என்பதை அவள் கண்டாள். தன் தாயின் இறுதிப் படுக்கை பற்றிய அவள் தொலை நினைவுகள் வந்து, அப்புரட்சிக்கு ஆசி கூறுபவை போலத் தோன்றின. அவள் காதல் வாழ்வில் எத்தனை கடுமைகள் இருந்தாலும் அந்தத்தாயின் சோகவாழ்வை. நோக்க அது அவளுக்கு வானுலகமாகத் தென்பட்டது. 

ஆக்டேவ் மூரட் இப்போது தன் வாழ்வில் ஒரே குறை மட்டும்தான் இருப்பதாகப் புலப்பட்டது. லாரைனின் வாழ்வு தன் இன்பக் கனவுகளுக்கு முழு தும் இலக்கானதாயிருந்ததுடன் தன் எதிரிகளாலும் நண்பர்களாலும் எவராலும் குறைகூற முடியாதபடி பண்பை அப்பழுக்கற்றதாயிருந்தது. அந்நிறை வாழ்விறுதியிலாவது முயன்று பெறவேண்டும் என்று அவன் சில சமயம் விரும்பினான்: ஆனால் அதைக் கேட்ட லாரைன் நோயையும் மறந்து விலாப் புடைக்கச் இயைய நடக்க சிரித்தாள், “புரட்சிக்காரருக்கு முயன்று பார்த்தீர்கள். உங்கள் குறிக்கோளும் அவர் கள் குறிக்கோளும் ஒன்றாகத் தோற்றிற்று. ஆயினும் அவர்கள் உங்கள் பண்பில் நிற்கவில்லை. அப்படி யிருக்க நாங்கள் பார்த்துக் கேலி செய்து கவிதையில் தாக்கி வந்த சமயத் துறைவரையும் உயர்குடிப் பசப் பரையும் எப்படி மன நிறைவு படுத்த முடியும்?” என்று அவள் கேட்டாள். 

அவள் கூறிய விடை அவனைப் பின்னும் சிரிக்க வைத்தது. “நீ இவ்வளவு பேரையும் என்னையும் மன நிறைவு படுத்தவில்லையா? மேலும் பெண்களைப் பற்றியும் காதலைப்பற்றியும் நான் கொண்டிருந்த ஏளனக் கருத்துக்களைக் காதல் கண்ட பின் நான் தட மின்றி விட்டுவிட.வில்லையா?” என்று கேட்டான். 

“அன்பரே, என் காதலை நீங்கள் உறுதியாகப் பற்றி நின்றதும் பெண்களைப் பற்றியும் காதலைப்பற்றி யும் உள்ள தங்கள் கருத்தை என் வகையில் காட்டாத தும் உண்மையே. ஆனால் பெண்மையையும் காதலை யும் பற்றிய தங்கள் பண்பு மாறிவிட்டதாக எண்ண வேண்டாம். வழிவிடுதியில் நான் கண்ட பெண்…” 

அவள் பேசமுடியாதபடி அவன் கை அவள் இத ழைப் பொத்திற்று. அவன் முகத்தில் நாணத்தின் நிழலாடியதை அவள் கண்டாள். “அன்பே, உங்களைக் குறைகூற இதைச் சொல்லவில்லை. உண்மையில் இந்தக் குறையே என்னை உங்களிடம் அடிமைப்படுத்தி யுள்ளது. நான் எல்லாவகையிலும் உங்களுடன் சரிக் குச் சரி என்று போராடவில்லை என்பதை நீங்கள் கவ னிக்காமலிருந்திருக்கலாம். தங்கள் காதலுக்காக நான் என் பெண்மையைத், தாய்மையைத் தற்கொலைப் படுத்திக்கொண்டேன். ஆனால் அதற்காக நான் வருந்தவில்லை, தங்களைத் திருத்தவும் எண்ணவில்லை. ஏனெனில் தங்களிடம் உள்ள இக்குறையே தங்கள் மதிப்பை உயர்த்துகிறது. காதலுக்கு நீங்கள் கட்டுப் பட்டீர்கள்; பெண்மைக்குக் கட்டுப்படவில்லை. பெண் மைக்கும் நீங்கள் கட்டுப்பட்டிருந்தால், உங்கள் மனம் தளர்ந்து இன்று என்னைப் பாதுகாக்கும் நிலையைத் தராதிருக்கும்” என்றாள். 

அவள் பெருந்தன்மை, மனிதவாழ்க்கை பற்றிய அவள் ஆழ்ந்த அறிவு அவனைத் திகைக்க வைத்தன. அவள் மீண்டும் தொடர்ந்து பேசினாள். 

“அன்பே, உயர்வகுப்பின் பசப்பு உங்களிடம் என்றும் நாடப்போவதில்லை என்பதை நான் அறிவேன். சமயத் துறையிலோ புறக்கட்டுப்பாடுகளையே இன் றைய உலகம் கவனிக்கிறது. தாங்கள் கட்டுப்பாடற் றவர். நான் உலகக் கட்டுக்களை மீறத் துணியவு மில்லை, விரும்பவுமில்லை. ஆனால் கட்டுப்பாட்டை மீறிய உங்களை நான் போற்றத் துணியாதவள் அல்லள். கட்டுப்பாடுகளை ஆக்கியது புரோகிதம். தன்னாண்மையைப் படைத்தது கடவுள்; கடவுள் முன்னிலையில் சமயக் கட்டுப்பாட்டை மதித்து நடந் தவர் நிறை பண்புகளைவிட உங்கள் பிழைகளும் குறைபாடுகளும் இறைவனுக்கு மகிழ்ச்சியை உண்டு பண்ணும் என்பதில் ஐயமில்லை. எனக்குக் கடவுள் இடது கை தந்தால் கட்டற்ற தறுதலையாகிய தங்க ளுக்கு வலது கை தருவது உறுதி.” 

அவன் வாழ்க்கை கடந்த அவளது வாழ்க்கைத் தத்துவம், அவள் பெண்மை கடந்த மனித இன அறிவு கண்டு அவன் வியப்பும் இறும்பூதும் எய்தினான். கண்மணி, நீ நாகரிகமுடையவள்தான்; கலை நங்கை தான்; அறிவுக் களஞ்சியம்தான். ஆனால் சமயங்கடந்த இச் சமயத்தை எங்கிருந்து கற்றாய்?” என்றான். 

“சமயப் பகைவனாகிய இந்தக் காதலனிடமிருந்து தான்” என்று அவள் அவனைத் தன் அருகே இழுத்து வைத்து உச்சி நீவினாள். 

லாரைனின் நோய் இப்போது அவளுக்கு முழு ஓய்வு கொடுத்தது. அவள் உள்ளம் மூரட்டின் நிறை காதலைப் பருகி வளர்ச்சி பெற்றது. அவள் அறிவு மீண்டும் இளமை நலம் நோக்கிக் கனிவுற்றது. 

ஆனால் அவர்கள் இருவர் வாழ்வின் உழைப்பும் கவலையும் மூரட் மீது அழுத்தின. அவன் விரைந்து தளர்வுற்றாள். 

லாரைனுக்கும் மூரட்டுக்கும் இப்போது ஒரு புதுக் கவலை ஏற்பட்டது. அடிலி தான் கைம்பெண் என்பதை மறந்து நெடுநாளாயிற்று. புரட்சிப் பகைவர் ஒருவ ரிடம் அவள் தன் மனத்தைப் பறிகொடுத்திருந்தாள். அவர் சிறையிலிருந்ததால் அவள் வாடி வதங்கினாள். காதலை அவள் எவரிடமும் சொல்லவில்லை. தாயும் அவளிடம் விவரம் கேளாமலே நிலைமையை உய்த் தறிந்து வருந்தினாள். அவள் இளமையில் தனக்கு ஏற்பட்ட காதல் ஏக்கமே அவளையும் பீடித்ததென எண்ணி அவள் தன்னையே கடிந்துகொண்டாள். ஒரு நாள் அடிலியின் நிலை அம்பலத்துக்கு வந்தது. அவள் சிறையில் காதலனுக்கு அனுப்பிய கடிதம் ஒன்று காவ லர் கைப்பட்டது. அவளும் சிறைப்பட்டாள். லாரைன் உள்ளமும் தசையும் துடிதுடித்தன. அவள் தன் நீர்த் ததும்பும் கண்களால் மூரட்டை நோக்கினாள். 

மூரட் அவள் வாய்திறக்கக் காத்திருக்கவில்லை. தன் அரசியல் நண்பர்களனைவரையும் இதுவகையில் உதவும்படி கோரி நடையாய் நடந்தான். இறுதியில் நெப்போலியனையே நேரில் கண்டு, காதல் பற்றியும் கலை பற்றியும் பேசி அக்கலைவள்ளலின் உள்ளம் கனிவித்து, இறுதியில் அரசியல் கட்சி கடந்து காதலித்த தன் புதல்வியை மன்னிக்குமாறு பேரரசன் காலடி வீழ்ந்து மன்றாடினான். கலைஞர் என்றால் கண்ணையும் ஈயும் பண்புடைய அவ்வீரன் உடனே விடுதலை உத்தரவு பிறப்பித்தான். 

வெற்றி மகிழ்வுடன் மூரட் மீண்டான். லாரைன் தன் நோய் மறந்து எழுந்து அவனைத் தன் மடிமீது சார்த்தி இன்பக் கண்ணீர் சொரிந்தாள். தாயின் கண் ணீருடன் மகளின் கண்ணீரும் அவனை ஆட்டின. 

ஆனால் இவ்வலைச்சல் மூரட்டின் இறுதி ஊக் கத்தை அழித்தது. அவன் வாழ்விலேயே முதல்தடவை யாக அவன் தலையிடி என்று சாய்ந்தான். தலையிடி காய்ச்சலாயிற்று. கைகால் குளிர்ந்தது. நாடி தளர்ந் தது. தன் முடிவு வந்ததென அவன் உணர்ந்தான். லாரைனை நோக்கி அவன் கண்கலங்கினான். காதல் குறிப்புணர்ந்த அம்மாது “அன்பே தன் மார்பில் நான் இறக்கத்தான் விரும்பினேன். ஆனால் தெய்வ சித்தம் இருந்தபடி இருக்கட்டும். எனக்காகத் தாங்கள் கவலைப் படக்கூடாது. சாவுகூட நம் காதலில் எந்த மாறுதலும் செய்யாது. உங்கள் மனைவி வாழ்வில் உங்களுக்காகக் காத்திருந்ததுபோலவே, சாவு வரும்வரையும் காத் திருப்பாள். நீங்கள் மணநாளில் போல இன்றும் மன மகிழ்ச்சியுடன் இருக்கலாம்” என்றாள். 

தான் மணஅணி அணிந்து, மணஅணி அவனுக்கும் அணிவித்து, லாரைன் தன் மடிமீதே அவனைக் கிடத்தினாள். அந்நிலையிலேயே அவன் உயிர் புன்முறுவலுடன் பிரிந்தது. 

அகஸ்டியும் புரட்சிக்கெதிரான குற்றவாளி ஒருத் தியின் காதலில் ஈடுபட்டிருந்தான். ஆனால் தந்தையின் யின் தீரம் அவனுக்கு ஒரு வழிகாட்டியாயிருந்தது. அவன் தந்தையிடத்தில் இருந்து, தாய்க்கு ஆதர வானான். 

மூரட்டின் உள்ளவளம் லாரைனுக்கு இப்போது அவள் மரபுரிமைபோல வந்தமைந்தது. அவள் அறிவு முற்றிலும் தெளிவடைந்தது. அவனிருந்தபோது அவ னிடம் பேசும் இன்பத்தினும், இப்போது அவன் பேச்சை, அவன் முகத்தை நினைக்கும் இன்பம் சிறிதா யில்லை. அவன் காதற் கடிதங்களோ அவள் உள்ளத்தில் பாராமல் படிந்திருந்தன. விவிலிய நூலைத் தவறாமல் படித்துவந்த அவள் அவற்றுக்கு ஒப்பாக அவற்றை உள்ளத்தில் வைத்துப் பேணினாள். கடவுட் பற்றினும் காதல் குறைந்ததன்று என்பதை அவன் துன்ப வாழ்வின் இன்ப நிறைவு பட்டாங்கமாகக் காட்டிற்று. அவள் கடவுட் பற்றையும் மனித இனப்பற்றையும் மூரட் காதலும் அவள் மாறா இளமை உள்ளமும் தூய்மைப்படுத்தி உயர்வு தருபவையாயிருந்தன. 

மூரட் இறந்தது 1815-ல். அவனுக்காக அவள் வரைந்த கல்லறை வாசகம், 

“என் நண்பரே, நான் இப்போது உறங்குகிறேன்” என்பதுதான். இறந்த அவன் நினைவு உண்மையில் அவளுக்குத் தூங்கும் காதலனைக் காணும் நிலையாகவே இருந்தது. அவள் காதல் உடல் கடந்த, புலனுணர்ச்சி கடந்த நிலையை எய்திவிட்டது. 

இளமை வாழ்விலே யாரினும் தூய உள்ளமும் எவ ரினும் உயர்ந்த நாகரிக நயமும் படைத்த அக்கலை நங் கையின் அறிவு முதுமையில் முதிர்ந்த நெல்லிக்கனி போல் பளிங்குத் தன்மை பெற்று ஒளி வீசிற்று. அவள் மூரட்டின் துணையை யில்லாமல் வாழ்ந்த பன்னிரண் டாண்டுகளும் மூரட் ஏழை மக்களிடையே ஆற்றிய நற் றொண்டினை ஏழை, செல்வர், பொதுமக்கள், உயர்ந்தோர் யாவரிடையும் அவள் ஆற்றினாள். அவள் கண் அறுவை செய்து இருட்டறையில் இருந்தபோது அவளை ஒரு கணம் பார்த்துச்செல்லவந்த அமைச்சர் ஒருவர் மூன்று மணி நேரம் இருந்து அவள் மடமடவென்று பேசிய வருணனைக் காட்சிகளில் மயங்கினார். ஆயிரம் கண் கொண்டு உலகை நோக்கிய மனிதனினும் சிறந்த ஒரு உயிரினத்தின் அனுபவ பாடம்போல அவள் உரை நிறைவும் தெளிவும் உடையதாயிருந்தது. 

1815-ல் வாட்டர்லூப் போராட்டத்தில் முனைந்து நெப்போலியன் ஆட்சியிழந்தான். பதினொரு ஆண்டு கழித்து உள்ளூர அரித்த காதல் நோய்க்கு இரையாகி அடிலி ஸ்விட்ஸர்லாந்தில் உயிர் நீத்தாள். வாழ்வின் எக்கடமையிலும் தவறாது நிறையின்பம் கண்ட லாரைன் தன் இன்பச் செல்வியின் வாடிய வாழ்க்கைக்குப் பேரளவில் தானே காரணம் என்று உணர்ந்து புண் பட்ட உள்ளத்துடன் துடித்தாள். அடுத்த ஆண்டி அவளும் விரைவில் உடல்நலமிழந்து மூரட்டின் நினைவு ஒன்றே ஆறுதலாக அமைந்து உயிர்நீத்தாள். அவள் கல்லறை வாசகத்தை அவளே முன்கூட்டி எழுதித்தந்திருந்தாள். 

வாழ்வில் முழுதும் காண அவாவிய 
மாண்புடை இறுதித்துறை சென்றமைந்தென்
வாழ்வின் அலுப்பெலாம் தீர 
மறைவெனும் ஓய்வு பெறுவேன். 

ஸெனகெலிலிருந்து அவள் எழுதிய கடிதம் ஒன்று அவள் இறுதி நினைவுகளைத் தூண்டியது. “இப்போது நள்ளிரவு. நான் படுக்கைக்குச் செல்கிறேன். தூங்க வும் முயல்வேன். ஏனெனில் தூக்கத்தின் அமைதி யிடையே என் கருத்துக்கள் நனவுலகின் தொலைகடந்து உன் தலையண்டை யுலவக்கூடுமல்லவா?” 

ஸெனகலிலிருந்து உறக்கத்தில் பாரிஸ்வரும் உள்ளம் எந்த உலகத்திலிருந்தாலும் இப்போது என் தலையண்டை சுற்றாமலா இருக்கும் என்று நினைத்து அவள் சாவின் துன்பத்திடையேயும் கலகலவென நகைத்தாள். 

அவள் மேலும் எழுதியிருந்தாள்: “இறந்தபின் உயிர் எந்நிலை பெறுமோ நான் அறியேன். ஆனால் என் விருப்பம் இது. நான் ஒரு செடியாய் இருக்கவேண்டும். நீ என்னில் மலரும் மலராக வேண்டும். நான் என் மலரைப் பாதுகாக்க உன்னைச் சூழ முட்களை வளர்த்து வைத்துக்கொண்டிருப்பேன்.” 

“ஆகா, இப்போது தெரிகிறது, ஏன் எனக்குப் பன் னிரண்டு ஆண்டுகட்குள் நீ போனாய் என்று. இப்போது செடியும் வளர்ந்திருக்கும். முட்படுக்கையும் சித்தமா யிருக்கும். நான் இதோ வருகிறேன்” என்று அவள் தன் இறுதி மூச்சுடன் கூறினாள். 

வாடிய அவள் முகத்தின் முறுவல் வாடாமலராகிய அவள் காதலைக் குறித்துக் காட்டுவதுபோல இருந்தது.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *