வலி
கதையாசிரியர்: வாஷிங்டன் ஶ்ரீதர்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: April 25, 2026
பார்வையிட்டோர்: 83

சென்னை திருவல்லிக்கேணி பகுதி. சில நாட்களுக்கு முன் கூடியிருந்த குளிர் வெகுவாகக் குறைந்து, தை மாத வெயில் சுள் என்று அடித்தது. ஒரு பரபரப்பான சாலையில் அமைந்திருந்த அந்த அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாம் தளத்தில், வீடு ஒன்றில் மூர்த்தியின் படுக்கையறை ஒரு தனித்தீவு போல அமைதியாகவும், டெட்டால் வாசனையுடனும் இருந்தது. புழுதியைத் தவிர்க்கவும், காற்றுவழி கிருமிகள் நுழைவதைத் தடுக்கவும் அறையின் சன்னல்கள் மூடப் பட்டிருந்தன. வீட்டில் எழுபத்தி எட்டு வயதான அவரும், எழுபத்தினான்கு வயதான மனைவி கமலாவும் மட்டும்தான். படுக்கையில் எந்தப் பக்கமும் புரண்டு படுக்க முடியாமல் மூர்த்தி தவித்தார். அவர் மீது படிந்த வியர்வை அவருக்கு உபாதையைக் கூட்டியது. அடிக்கடி அவர் எழுப்பிய முனகல் சத்தம் கேக்கும்.
வாயில் நுழையாத ஆங்கில வார்த்தைகளான Coronary Artery Bypass Grafting (CABG surgery) என்கிற திறந்த இதய அறுவை சிகிச்சை மூர்த்திக்கு முடிந்து பத்து நாட்களுக்கு முன்தான் வீடு திரும்பியிருந்தார். இதயத்தில் மூன்று அடைப்புகளை தவிர்த்து, காலிலிருந்து இரண்டும், இதயத்திலிருந்தே இன்னொரு இரத்த நாளத்தையும் எடுத்து பொருத்தி இதய இரத்த ஓட்டத்தை சீராக்கியதால், மூர்த்தி பிழைத்தார். மார்பின் நடுவே அறுவையை மூடுவதற்கு, தானாக மறையும் தையலும் அதற்கும் மேல் பதினெட்டு ‘பின்’ கள் இன்னும் இருந்தன. இருபது நாட்களுக்குப் பிறகுதான் ‘பின்’ களை நீக்கிவிட்டு, சிறு சிறு ‘பேண்ட் எயிட்’ போன்ற துண்டு ‘டேப்’ களை குறுக்காக ஓட்டுவார்கள். பிறகு, அந்தத் துண்டுகள் எடுக்கப்பட்டு, மார்பில் புண் ஆறிவிட்டாலும், வடு மறையாது, செய்த அறுவை சிகிச்சையை நினைவில் நிறுத்திவிடும்.
சாதரண குடும்பம். உதவிக்கு ஆள் போட்டுக்கற அளவுக்கு வசதியின்மை. அவரைப் பார்த்துக்கொள்ளும் முழுப் பொறுப்பும் மனைவி கமலாவின் தோள்களில் விழுந்திருந்தது.
“கமலா… ஃபேன் வேகத்தை அதிகமாக்கு…புழுக்கம் தாங்கல,” என்று கத்த முயன்றார். ஆனால், அறுவை சிகிச்சையின் போது கொடுக்கப்பட்ட மயக்க மருந்தின் தாக்கத்தால், அவர் குரல் உடைந்து, கரகரவென, காற்றோடு கலந்து வந்தது. தன் சொந்தக் குரல் தனக்கே அந்நியமாக ஒலிப்பதை நினைத்து அவருக்கு ஆத்திரம் வந்தது. கமலா சமையலறையிலிருந்து அவசரமாக ஓடி வந்தாள். அவள் முகத்தில் களைப்பு அப்பட்டமாகத் தெரிந்தது. கண்கள் தூக்கமின்றிச் சிவந்திருந்தன.
“எத்தனை தடவை சொல்றது? ஃபேன் மிதமான வேகத்துலதான் இருக்கணும். தூசி கிளம்பினா இன்பெக்சன் ஆயிடும்னு டாக்டர் சொல்லியிருக்காரே?” என்று சொல்லியவாறு, கொண்டுவந்த குறைந்த உப்பு கலந்த குழைந்த அரிசிக் கஞ்சியை டீப்பாயில் வைத்தாள்.
மூர்த்திக்குக் கோபம் தலைக்கேறியது. “டாக்டர் சொல்றார்… டாக்டர் சொல்றார்… அவர் என்னை ஒரு முட்டாள்னு நினைச்சு சொல்றார். நான் என்ன ரோபோவா? எனக்கு உடம்புல உயிர் இருக்குடி. படுக்கும் போது முதுகு வலிக்குது, திரும்ப முடியல, எழுந்திருக்க முடியலே, அப்படி எழுந்தாலும் நிக்க முடியல, நடக்க முடியல, நாக்குல ருசியில்ல, சாப்பிடப் பிடிக்கல, இப்ப என் இஷ்டத்துக்குக் காத்து வாங்கக் கூட உரிமையில்லையா?” அவர் குரல் மிக பலவீனமாக இருந்தாலும், அதில் இருந்த எரிச்சல் கூர்மையாக இருந்தது.
வேலை ஓய்வுக்குப் பின்னும் பல ஆண்டுகள் மூர்த்தி ‘ஆக்டிவ்’ ஆகத்தான் இருந்தார். அவார் எழுபத்திமூன்றை தாண்டியதும் இரத்த அழுத்தம் கூடியது, மூச்சு திணறலும் ஆரம்பித்தது. வித விதமான டெஸ்ட் எடுத்தபின், டாக்டர் ‘மூர்த்தி, இனிமே நீங்க ஒரு ஸ்டாட்டின் மருந்து தினம் எடுத்தாத்தான் கொலஸ்ட்ரால் கட்டுப்படுத்த முடியும். இல்லேன்னா ஹார்ட் சர்ஜெரி செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படும்…’ என்று தெளிவாக சொல்லிவிட்டார். பொதுவாகவே டாக்டர் சொல்லும் அறிவுரைகளை ஒதுக்கிவிடும் மூர்த்தி, தினம் மருந்து போடுவதை அறவே வெறுத்தார். விளைவு – இதய அறுவை சிகிச்சை.
கமலாவின் தினசரி நச்சரிப்பினாலும், தன உடல்நிலை மோசமாகி வருவதை தானே மறுக்க முடியாத கட்டாயம் ஏற்பட்டதும் மூர்த்தி அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டார். அந்த சமயம், சிகிச்சை முடிந்து உடல் சீராக மாதக் கணக்காகும் என்பதை யாரும் விளக்கி சொல்லவில்லை. முதலில் சிகிச்சை செய்துகொள்ளச் சொன்ன டாக்டர் மீது கோபம். பிறகு, சிகிச்சைக்கு ஒப்புக்கொண்ட தன்மீது கோபம்; சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பியதும் அவர் படும் அவஸ்தைக்கு வேறு ஒருவரை காரணமாக்கினார் – அது வேறு யாருமில்லை, மனைவி கமலாதான்.
வழக்கம்போல் கமலா பெருமூச்சு விட்டாள். “கொஞ்சம் பொறுத்துக்கோங்க. இன்னும் சில வாரங்கள் தானே? அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா சரியாகிடும். இப்ப இந்த கஞ்சியை குடிங்களேன்…”
“வேணாம்…எடுத்துட்டு போ. தினமும் காலையில் ஓட்ஸ் கஞ்சி, மத்தியானம் அரிசி கஞ்சி..…அப்பறம் பால், பிஸ்கட்… இதானா? நடு நடுவுல மாத்திரைகள்…சூடா தக்காளி ரசம், உருளைக்கிழங்கு வறுவல்… வெங்காய போக்கோடா…ஒரு மண்ணும் கிடையாதா? நாக்கில் ருசி செத்துப் போச்சு,” என்று மூர்த்தி கஞ்சியைத் தள்ளிவிட, அது மார்பிள் தரையில் கொட்டியது. கமலாவுக்கு இன்னுமொரு வேலை…
“அதான் நாக்குல ருசி செத்துப்போச்சே… எதை சாப்பிட்டா என்னவாம்?’ என்று கமலா முணுமுணுத்தது அரைகுறையாக மூர்த்தியின் காதில் விழ, அவர், “இப்ப ருசி போச்சு… நானும் சீக்கிரமே போயிடுறேன்…” என்று விரக்தியுடன் சொல்லி முடித்தார்.
அவ்வளவுதான்…கமலாவின் தேக்கப்பட்ட உணர்ச்சி மடை திறந்து கொட்ட ஆரம்பித்தது.
“நீங்க சீக்கிரமா போறதுக்கா நான் இப்படி ராப்பகலா உங்களை பாத்துக்கிறேன்? துளிகூட மனசாட்சி இல்லாம நீங்க பேசறீங்களே?”
கடந்த மூன்று வாரங்களாக மருத்துவமனையிலும், வீட்டிலும் ஒரு செவிலியரைப் போல, துப்புரவுத் தொழிலாளியைப் போல, சமையல்காரியைப்போல ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கிறாள். ஒவ்வொரு முறையும் அறைக்குள் நுழையும் முன் கைகளைச் சுத்தம் செய்து கொள்வது, மூர்த்தியைப் பார்க்க வருபவர்களைத் தடுப்பது, அவருக்கு மருந்துகளை நேரத்திற்குத் தருவது என கமலா ஒரு இயந்திரமாகவே மாறியிருந்தாள். இத்தனை நாள் கேட்கவேண்டாம், கேட்டால் கணவனின் மனம் புண்படுமே என்று கேட்காததை, இப்போது தாங்கமுடியாத ஆதங்கத்தால் கேட்டே விட்டாள்.
“உங்களுக்கு மட்டும்தான் வலியா? எனக்கு வலி இல்லையா?” கமலா தன் குரலை உயர்த்தினாள்.
மூர்த்தி அதிர்ச்சியுடன் நிமிர்ந்து பார்த்தார். “உனக்கா ஆபரேஷன் பண்ணியிருக்காங்க?
நெஞ்சு எலும்பை உடைச்சு, நரம்பை வெட்டித் தச்சிருக்காங்க எனக்கு! நான் படற வேதனை உனக்கு எப்படிப் புரியும்?”
“ஆமாம், உங்களுக்கு உடம்புல தான் காயம். ஆனா எனக்கு மனசுல காயம்!” கமலா உடைந்து அழுதாள்.
“ராத்திரி பூரா நீங்க இருமுறப்ப, மூச்சுத் திணறப்ப நான் உயிரைக் கையில் பிடிச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்கேன். நீங்க ரோபோ இல்லை, நான்தான் ஒரு ரோபோ ஆயிட்டேன்… உங்களுக்கு இன்பெக்சன் வந்துடுமோன்னு பயந்து பயந்து, ஒவ்வொரு பொருளையும் துடைச்சு துடைச்சு என் கைரேகையே அழிஞ்சு போச்சு. ‘எனக்கு அது வேணும், இது வேணும்’னு நீங்க குழந்தை மாதிரி நாள் முழுக்க அடம் பிடிக்கிறீங்க. ஆனா, ‘கமலா, நீ சாப்பிட்டியா? நீ ஓய்வு எடுத்தியா? கொஞ்சமாவது தூங்கினியா?’ அப்படின்னு ஒரு வார்த்தை – ஒரு வேளை என்னை கேட்டிருப்பீங்களா?”
முழு நிசப்தம். மூர்த்தி அமைதியானார். பேசுவது கமலாவா?
“நீங்க நோயாளிதான். மறுக்கல. ஆனா உங்களைக் காப்பாத்தப் போராடுற நானும் மனுஷிதானே? நோயாளியின் தேவை முக்கியம்தான். ஆனா அவரைக் காப்பாத்துறவங்களுக்கு மனசுலயும் உடம்புலையும் தெம்பு இல்லன்னா, நோயாளி என்ன ஆவாரு?” என்று கேட்ட கமலா கண்ணீரைத் துடைத்துக்கொண்டு நாற்காலியில் சோர்ந்து அமர்ந்தாள்.
சட்டென்று அவள் மனம் இலேசானது…பாரம் இறங்கியதுபோல் இருந்தது.
மூர்த்திக்கு நெஞ்சில் இலேசான வலி வந்தது. அது அறுவை சிகிச்சையினால் வந்த வலியல்ல. குற்ற உணர்ச்சியால் வந்த வலி. தன் உடல் உபாதையில், துணைவியின் ஒப்பற்ற தியாகத்தை அவர் கவனிக்கத் தவறிவிட்டார். தன் இயலாமையை, மனைவியின் மீது கோபமாகத் திருப்பியதை உணர்ந்தார்.
அவரது கரகரத்த குரல் இப்போது மென்மையாக ஒலித்தது.
“கமலா…இதுவரை நான் செஞ்ச அட்டகாசத்தை மனசுல வச்சுக்காதே … உடம்புல இருக்கற வலி, புத்தியை மழுங்கடிச்சுடுச்சு. நீ இல்லன்னா நான் ஹாஸ்பிடல்ல இருந்து உயிரோடவே வந்திருக்க மாட்டேன்.”
கமலா நிமிர்ந்து பார்த்தபோது அவள் முகத்தில் கோபம் மறைந்து, பழையபடி கனிவு எஞ்சியிருந்தது. மூர்த்தி மெல்லக் கையை நீட்டி, கமலாவின் சுருக்கம் விழுந்த கையை தன் சுருக்கம் விழுந்த பலவீனமான கையினால் பற்றினார். சுருக்கங்கள் பின்னி, நெருக்கம் நெருங்கியது. இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்ட பார்வையை பரிமாறிக் கொண்டதும் அமைதி பரவியது.
யாருடைய தேவை முக்கியம் – நோயாளின் தேவையா அல்லது நோயாளியைக் கவனித்து பணிவிடை செய்பவரின் தேவையா, எது முக்கியம்? என்ற இந்த கேள்விக்கு ஓரளவாவது விடை கிடைத்தது – முக்கியம் என்பது சரியான சொல்லும் இல்லை, கணிப்பும் இல்லை. இருவரின் தேவையும் ஒன்றுக்கொன்று பிணைந்தது. இந்த பிணைப்பில்தான் யதார்த்தமான மனிதத்தவம் புதைந்து கிடக்கிறது.
![]() |
பிறப்பு: உத்திரன்மேரூர், தமிழ்நாடு வசிப்பு: வாஷிங்டன் டி.சி. அருகில் விழுப்புரத்தில் உயர்நிலைப்பள்ளி முடித்துவிட்டு, சென்னை விவேகானந்தா கல்லூரியில் இளங்கலை, முதுகலை பட்டங்கள் பெற்றபின், அமெரிக்கா சென்று கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் வேதியிலில்முனைவர் பட்டம் பெற்றார். ஐந்து ஆண்டுகள் வேதியியலில் ஆராய்ச்சி முடிந்தபின், பால்டிமோர் வட்டாரத்தில்கல்லூரியிலும் பல்கலைக் கழகத்திலும் வேதியியல் பேராசிரியராக பணிபுரிந்து சில ஆண்டுகளுக்கு முன்வேலை ஓய்வு பெற்றார். வாஷிங்டன் - பால்டிமோர் வட்டாரத் தமிழச்சங்கத்தின் பொறுப்புகள் ஏற்று, பிறகு…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
புதியவன்
பானுமதி வெங்கடேஸ்வரன்
April 25, 2026
அவரும் நானும் ஒரு படகுப் பயணிகள்!
கடல்புத்திரன்
April 25, 2026
கமலா மாமி தேங்காய் பர்பி செய்கிறாள்
முனைவர் வெங்கடேஷ் கணபதி
April 25, 2026
