கதையாசிரியர்:
தின/வார இதழ்: சாவி
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: June 8, 2025
பார்வையிட்டோர்: 4,682 
 
 

(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இன்று வெள்ளிமலை உச்சிக்கு வானம், விதானம். நட்சத்திரங்கள், தங்களை தோரணங்களாத் தொடுத்துக் கொண்டு ஊஞ்சல் ஆடின. கூட்டம், ஜேஜேவென நெரிந்தது. தேவர்களுடன் அசுரர்கள் தோளோடு தோள் உராய்ந்தனர். அவனுக்கு எல்லோரும் ஒன்றுதான். கருணாமூர்த்தி அவனுடைய புன்னகைக்கு அர்த்தம். கிடையாதா? அல்லது கண்டுபிடிக்க முடியாதா? ஏமாறாதீர்கள். திரிபுரத்தை எரித்த புன்னகை. அவன் புன்னகை மன்னன். அந்தக் குஞ்சிரிப்பு இன்னும் சற்று விரிந்தது, இஷ்டப்பட்ட செயலோடு, அது சட்டென அதன் முழுமை யின் பக்குவத்தில் விழ, அமைதல் எனும் அம்சம் அவனு டைய அருளையும் செயலையும்கூட மீறி வரும்போலும்! இன்று தாளமும், ஸ்ருதியும், லயமும், கானமும் அப்படி ஒரு அமைப்பில் சேர்ந்தன. 

திமி திமி தக்கத்தக்க 
தக்கத் தக்க திமி திமி- 

‘இதோ ஆடப்போகிறேன்’ என்று சாங்கோபாங்கமாகச் சொல்லிக்கொண்டு அவன் ஆட்டம் துவங்குவதில்லை. அதுபோன்ற செயற்கையான முன் அறிவிப்பு ஆனந்தத்தின், எழுச்சியின் விளைவாய் ஆட்டத்துக்கே மாறானது. 

அவன் ஆடிக்கொண்டேயிருப்பான். ஆடிக்கொண்டே யிருந்தான். கூட தாளங்கள் தட்டட்டும். தம்பட்டங்கள் கொட்டட்டும். தாரைகள் முழங்கட்டும். வாத்யங்கள் வாசிக்கட்டும். கானங்கள் சேரட்டும். பாடுபவர் பாடட்டும். ஆடுபவரும் ஆடட்டும். 

ஆனால் அவனோடு யாரால் ஆட முடியும்? ஆட்டத்தில் வேகம் ஏற ஏற, அந்தச் சூடு கக்கிய ஆவி வெள்ளி மலையைச் சூழ்ந்துகொண்டு, அகில் மணம் வீசிற்று. அவன் மேனி கக்கிய வேர்வையினின்று அபூர்வமான சந்தனம் உச்சியிலிருந்து அடிவாரம் வரை கமழ்ந்தது. 

அந்த வேகம் தாங்காமல் வெள்ளியங்கிரியே மத்தாய்க் கடைந்தது. நானா வாசிக்கிறேன்? என் கைகள் என் வசத்தில் எங்கு உள்ளன? விரல்கள் தனித்தனி உயிர்கள் பெற்றுக்கொண்டிருக்கின் றன. வாத்யத்தின்மேல் அவை களின் துடிப்பு அவைகளுடையது. என் சுயத்தன்மையில் என் வாசிப்பு இந்தத் துரிதத்துக்கு ஈடுகொடுக்க முடியுமா? நந்திக்கே தெரிந்தது. 

ஆண்டவனே, இது என் ஆச்சர்யம். எப்படி, எப்படி என் எண்ணத்துக்கு மூச்சுத் திணறுகிறது. உன் செயலில் ஆச்சர்யப்படுவதே அபராதம். மன்னித்தருள்வாய் – எப்படி உன் தூக்கிய திருவடிக்குச் சரியாக தூக்கிய இடதுகை விரல் கள் தனித்தனி நுனி வளைந்து, உன் நர்த்தனத்தின் ஈடு பிசகாமல், தனித்தனி அசைவுகள், முத்திரைகள் காட்டு கின்றன. 

ஆனால் வலதுகை அபய முத்திரையில் அசைவற்று அப்படியே நிலைத்து நிற்கின்றது. சரணாகதர்களுக்கு அதுவே துணை. ஆகையால் இத்துணை கோலாகலத்திலும் அது நிலை பிசகவில்லை. அதில்தான் அவன் கருணை அவ்வளவு துல்லியமாக வெளிப்படுகிறது. உள்ளங்கை ரேகை மலரின் இதழ்களாக விரிந்திருக்கின்றன. 

இன்று அவன் சதுர்ப்புஜம் காட்டுகிறான். இடதுகை நடுவிரல்களிடையே துள்ளும் மானின் உடலில் புள்ளிகள் சுடர் வீசுகின்றன. 

விரித்த சடையில் கங்கை குலுங்குகையில் அவள் சிந்தும் புனித ஜலத்துடன், சடையில் தரித்த மூன்றாம் பிறையி னின்று ஒழுகும் அமுததாரை கலந்து அதுவே ஒரு மதுர தீரமாகி, அதுவே வெள்ளியங்கிரியின் பல பாறைகளின் நடுவே, ஒரு வெடிப்பு வழி. அவனுடைய அகண்ட கருணை யில் மாந்தரின் உய்வுக்குப் பூலோகத்துக்கு அருவி பாய்கின்றது. 

அவன் ஆட்டத்துக்கு, அஷ்ட திசைகளும் அசைகின்றன, பூமியைத் தாங்கும் அஷ்டதிக் கஜங்களும் களிதாங்க மாட்டாது, கால் மாற்றி நடனம் புரிகின்றன. 

இந்தத் திமிலோகத்தின் திகிரி நடுவே அதன் அச்சாணி’ யாய் அவன் திகழ்கிறான். வலது கால் கட்டை விரல்நுனியில் நின்றபடி கூத்துக் காட்டுகிறான். 

அவன் மருங்கில் அவள் நிற்கிறாள். இடதுகை இடை மேல், வலதுகையில் கன்னத்தை ஊன்றி அதிசயத்தில் தன்னை மறந்து. அவன் ஆட்டம் நெஞ்சில் ஏதேதோ துகள் களை எழுப்புகின்றன. மகரந்தப் பொடிகள் விழித்து எழு கின்றன. வெட்கமும், வேட்கையும் இதயம் தாண்டி முகத் துக்கு வந்து கண்களில் தவிக்கின்றன. 

சுடலைப் பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன் நெற்றிக்கண் திறந்துதான் இருக்கிறது. இமயத்தையும் பாகாய் உருவாக்கவல்ல அக்கண்ணில் சுடர் இப்போது தண் ணொளி காட்டுகிறது. ஞானச்சுடர் அந்த ஒளியில் வெள்ளி மலையைச் சூழ்ந்த வானத்தின் அடிவாரத்தில் செந்திட்டுப் படர்கின்றது. 

“இன்று நான் ஆனந்தக்கூத்தன்! இன்று நான் ஆனந்தக் கூத்தன்! காணுங்கள்! காணுங்கள்! கண்டதெல்லாம் எடுத்துச் செல்லுங்கள் என்னிடத்தில் எதுவும் விலைக்கு இல்லை எடுத்துச் செல்பவருக்கு! அவன் அப்படிச் சொல்ல வில்லை. ஆனால் ஆனந்தக்கூத்து யாவர் நெஞ்சிலும் எழுப்பிய சதங்கை ஒலி இதுதான். 

ஆடுகிறான். ஆட்டுவிக்கிறான். 


தியானத்தில் மூழ்கி, சிந்தனையைத் தோற்றங்களாகக் கண்டுகொண்டிருந்த நிலையில் மண்டையோட்டுள் ஒரு மின்னல் பளிச்சிட்டு தியானம் வெடுக்கென கலைந்து விழித்தான். 

இடப்பாகத்தில் அவள் இல்லை. அவனைப் பிரிந்து சென்ற பாதச் சுவடுகளின் குங்குமப் பிழம்பு தந்த தனி வேதனையில் இது பிரிவு என்று உணர்ந்தான். இடதுதோள் அப்படி வலித்தது. 

தியானம் ஒரு வாடும் மலரே. வாடும் மலர்களே மணக்கும் மலர்கள். சுவடுகள் காட்டிய வழி பூலோகத்திற்கு இறங்கும் பாதை. இறங்கினான். 

சுடலை ஆண்டியை, பித்தனைத் தவங்கிடந்து அவளே தான் வரித்தாள். எனினும் திடீர் திடீர் என்று அவளுக்குப் பழைய நினைப்பெடுத்துவிடுகிறது. நான் பர்வதராஜ குமாரி. ஹிமவான் புத்ரி, ஹைமவதி, தடாதகை, மதுரை மீனாக்ஷி, தக்ஷன் புத்ரி.தக்ஷாயணி, அவனுக்குச் சரியாக ஆட முயன்று,காளி வேஷம் காட்டினாலும் அவள் பெண். அதிலும் பேதை. அவள் பேதமையின் ஆழம் இன்னும் எனக்குக் கிட்டிய பாடு இல்லை. 

இந்தப் பேதமைக்குத்தான் ஆண்மை, வைராக்கியம். ஞானம், விவேகம், யதார்த்த உணர்வு யாவும் பலியாகின்றன. சீதையால் ராமன் இப்படித்தான் அழிந்தான். விஸ்வாமித்ரன் தவமிழந்தான். என்னையும் இவள் இப்படித் தான் அழிக்கப் பார்க்கிறாள். ஏனோ? 

அவன் சிரசுக்கு நேர் உச்சியில் வெண்மேகத்தின் நடுவில் கறுப்பு நக்ஷத்திரம் இப்போது ஒரு கட்டியளவு பெரியதாகிச் சினந்துகொண்டு இன்னும் பெரிதாகிக் கொண்டிருந்தது. 

அவளைத் தேடி அவன் நடந்து சென்ற வழியில் இடப் பாகத்தினின்று உதிரம் அவ்வப்போது சொட்டிற்று. பூமியில் புதைந்துபோய் காலகதியில் இத்துளிகள் மதிக்கவொணா பவழங்களாகவும் சாலிக்ராமங்களாகவும் மாறி, அவரவர் விதிப்பயனாய், மாந்தர் செல்வமாகவும், பூஜைக்காகவும் கண்டெடுத்த பொக்கிஷங்களாகத் திகழும். 

அவன் வானின்று கீழிறங்கி வருகையில் தொங்கும் திரைச்சீலையில் தீட்டிய சித்திரம் போலும் பூலோகம் படபடத்தது. 

நாடகமே உலகம். அன்று மலர்ந்தது. அன்றே மணம் கமழ்ந்து, சூடி, வாடி… மறுபடியும் பூத்து, நலுங்கிக் கொண்டேயிருக்கும் பூவுலகின் அழகுக்கு ஈடு ஏது? ஸ்வர்க் கத்தில் அழகு இருக்கலாம். அது அழிவற்றதாக இருக்கலாம். ஆனால் மணம் என்னவோ இங்குதான். அவள் கூந்தலில் செருகவேண்டிய முதல் புஷ்பம் இங்கிருந்து பறித்ததாகத் தான் இருத்தல் வேண்டும். ஆனால் அவள் எங்கே? 


நெஞ்சில் தேரைத் தாவலில் அது பிரஸன்னம் தன்னைத் தெரியப்படுத்திக் கொண்டது. இதோ எதிரில் அடர்ந்த புதரைத் திரும்பினால் தேடல் முடிந்தது. தேடி வந்ததைக் காண்பதற்கு, அதற்கு ஒரு முன்சுவை உண்டு. அதுதான் இதயத்தின் நோக்காடு. 

அவன் வருகைக்கு எதிர்பார்த்திருந்தாள்? அது ஒருவருக் கொருவர் அறியமுடியாதது. நீலமேனியாள். அவள் நின்ற தோரணையில் அவளைச் சுற்றி செம்பருத்தம் பூக்கள் பிரபைகட்டி, அவள் மேனி நீலத்தை எடுத்துக் காட்டின. நீல முகத்தில் செக்கச் செவேல் அதரங்கள். நெற்றியில் பளிச்சென மூன்று பட்டைகளில் துலங்கும் திருநீற்றின் அடிப்பட்டையின் கீழ் புருவ மத்தியில் குங்குமத் திலகம் 

க்ரீடி. அவள் அரசிளங்குமரி அன்றோ! மதுரைக்கு அரசி. 

இன்று என்ன இவளைப் புதிதாகவா பார்க்கிறேன்? ஆனால் ஏன் எனக்கு இந்தப் பரவச நிலை? தொண்டையில் கேவல்? ஆண்டவனே ஸ்தம்பித்துப்போனான் நான் யாரை எனக்கு மேலாக இப்போது அழைக்கிறேன்? 

நீலாம்பரி. நீலாயதாஷி, நீலாம்பிகே, நீலோத்பவே. நீலகமலே, கமலாம்பிகே, சர்வமங்கள மாங்கல்யே. அகில லோக நாயகி. 

அவனுடைய பரவச நிலையில் அவனின்று நாமாவளி புறப்பட்டது. 

அன்னபூர்ணே! ஆனந்தமயீ! 

ஆனால் இப்போது அவள் கோபமயீ. கோபம் அவளுக்குத் தனி அழகு தருகின்றது.அதே சமயத்தில் கண்களில் ஒரு மான் மருட்சி. இவைதான் நெஞ்சை அள்ளு கின்றன. ஐயோ! அவள் கண்கள் பயத்தில் சுழன்றன. அவனுடைய இடப்பாகத்தினின்று சொட்டியரத்தத்தினைச் சுட்டிக் காட்டினாள். 

“இது நீ!” 

அவன் அவளை நெருங்குகையில் காலடியில் சீறல் கேட்டுக் குனிந்தான். அவன் காலடியில் காவலாக ஐந்து தலைக் கருநாகம் படம் எடுத்துப் பூமியில் அடித்து நிமிர்ந்தது. 

அதை வாரியெடுத்துத் தன்மேல் விட்டுக்கொண்டான். குழந்தாய்! உன் கோபம் மெச்சற்குரியது. ஆனால் நான் விடமுண்ட கண்டன் நீ என் செய்வாய்! நானும் என் செய்வேன். 

நெற்றிக் கண்ணைத் தாங்குகிறேன். மானைத் தாங்கு கிறேன், மழுவைத் தாங்குகிறேன். 

உன் கோபம் தாங்க முடியவில்லையே. இதயப் பேழை திறக்கின்றது. சத்யத்தின் மனம் வெளிப்படுகிறது. “இப்போது யாது காரணம்? நீ கேட்டு நான் கொடுக்காமல் இன்னும் என்னிடம் என்ன உள்ளது?” 

“இடப்பாகம் என்னுடையது என்று பெயர். ஆனால் வலப்பாகத்தில் நீங்கள் இல்லாது டப்பாகம் எனக்கெதற்கு?” 

“தேவி! நீ சொல்வது புரியவில்லையே!” அவன் திகைத்தான். “இடப்பாகம் போதவில்லை! முழுப்பாகமும் வேணும் என்கிறாயா? நான் ஒன்று சொல்கிறேன். வலப்பாகம் யாரும் தாங்க இயலாமையால்தான் நான் தாங்குகிறேன். உனக்கு. அது வேண்டாம்! உனக்கு அது தருவதற்குமில்லை”. 

“நானும் ஒன்று கேட்கிறேன். இடப்பாகம், வலப்பாகம் இரண்டுக்கும் இடைப்பாகம் என்று உளதோ?” அவன் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தான். இதுவரை எனக்கு ஏன் தெரிய வில்லை. தியானத்தின் இடம் அதுதான் போலும்! எத்தனை மர்மமான ஈடற்ற இடம்! இடப்பாகத்தின் சக்திக்கும் வலப்பாகத்தின் ருத்ரத்துக்கும் சமன் கோல் இடம்! 

“என்ன வாயடைத்துப் போயிற்று? அங்கு எவள் இருக் கிறாள், அல்ல அந்த இடத்தைப் பிடிக்க முயற்சி செய்கிறாள்?” 

அவனுக்கு அதிர்ச்சி கண்டது. என்ன தேவி! என்ன அபஸ்வரம் பேசுகிறாய்? அற்புதமான ஒரு கட்டத்திற்குப் போய் அங்கேயிருந்து தள்ளிவிட்டு நீயே விழுந்துவிட்டாய்! 

“சிருஷ்டி என்று என்ன தனி? விழிப்புதான் சிருஷ்டி. முதன் முதலில் ‘நான்’ ஆக எனக்கு விழிப்பு நேர்ந்ததும் என் முதல் தரிசனம் ‘நீ அங்கிருந்தாய். விழிகளில் என் கேள்விக் குப் பதிலாக உன் விழிகளில் கேள்வியும் அமைந்தது கண்டேன். 

“ஆம் உன் விழிப்பும் என் விழிப்பும் ஒரே சமயம்.

“நானும் நீயும் அதே சமயம். 

“சொல் பிறக்கு முன்னரே ‘நானும் நீ’யும் என பாஷை பிறந்து விட்டது” 

“புவனத்தின் ஆதிமகன் ஆதிமகள் நாம். அச்சமயத் திலேயே உன் சந்தேகத்துக்கு இடம் தரும்படி வேறு மகள் தோன்றவில்லையே! மற்றவை எல்லாம் நம் சிருஷ்டிதானே. தேவி நம்மிடையே இதுபோன்ற சந்தேகங்களுக்கு வழியே இல்லையே. தேவி, உன் பொழுதுபோக்குக்கு ஏதேனும் எண்ண வேண்டும் என்று எண்ணினாயா?” 

அவள் புருவங்கள் பயத்தில் நெரிந்தன. கைகள் கூப்பிக் கொண்டன 

அவன் பரவச நிலையை எய்திவிட்டான். அவன் குரல் அசரீரி போல் வந்தது அவளுக்குப் பயமாக இருந்தது. வியப்பாக இருந்தது. இன்பமாக இருந்தது. 

தியானத்தில் அமர்கிறேன். மோன நிலையைத் தாண்டி மூலகர்ப்பாசயத்தை அடைகிறேன். அங்கு என்னையும் நான் இழக்கும் இருள். அதற்கு முன்னும் இல்லை. பின்னும் இல்லை. எதற்கும் எதுவும் எங்கும் அதுதான். அது என்றால் எது? 

பித்தனின் சிரிப்பு, கேட்பவர் பாக்யம். 

“அந்தத் தியான நிலையில் இருள் கழன்று வெளிப் படுவதே என் மார்பில் உதைக்கும் உன் பாதம்தான். சக்தியாய் நீதான் தியானப் பொருள். தேவி, நீ சொல் ஒருமையின் இருகூறாக இருந்த ‘நான்’ ‘நீ’ அன்றி வேறு அறியேன். மூன்றாவதாக நீ எது கண்டாய்?” 

“ப்ரபோ! என்னை மன்னித்துவிடுங்கள்”. அவள் அலறினாள். அவள் கண்ணீர் பெருகிப் பூமியில் விழுந்து அங்கங்கே வெந்நீர் ஊற்றுகள் புகைந்தன. 

“தேவி எங்கு செல்கிறாய்?” 

“என் பிராயச்சித்த தவத்துக்கு. நான் இயங்கும் சக்தி. உங்கள் மாறாத புனிதத்தை நான் என்றும் அடைய முடியாது. என் தீக்குளியில் ஞான ஸ்நானத்துக்குத்தான் அவ்வப்போது இப்படி நேருகின்றதோ என்னவோ? அவ்வப் போது அறியாமல் பிரிந்துவிடுகிறேன். ஆனால் உங்களைப் பிரிந்து என்னால் இருக்க முடியாது. ஆனால் என்னைப் புனிதப்படுத்திக் கொள்ளாமல் உங்களுடன் நான் ஒன்ற முடியாது”. 

அவன் வாயடைத்து நின்றான். 

“சந்தேகம் ஒரு துரோகம். பாபச் செயல்களிலேயே கொடுமையானது. வழக்கம்போல் தவங்கிடந்து வழக்கம் போல உங்களை வரித்து. வழக்கம்போல் தாங்கள் வந்து என்னை ஆட்கொண்டு என் இடம் உங்கள் இடப்பாகத்தை முறைப்படி அடைகிறேன்.” 

கண் இமைக்கும் நேரத்தில் அவள் அங்கு இல்லை. 


வானத்தை அண்ணாந்து சிவன் இட்ட கூக்குரல். வானம் பட்டை உரிந்து நக்ஷத்ரங்கள் பூமியில் உதிர்ந்தன. நெளிந்து ஊர்ந்து ஒளிய இடம் தேடின. வெண்மேகத்தின் நடுவே கறு ரத்தக் கட்டி உடைந்தது. செடிகள், கொடிகள் மரங்கள் கருகின. 

வெறி பிடித்தவனாய், வெள்ளிமலை உச்சிக்கு ஓடினான். மலை உச்சியில் நின்றான். “இடப்பாகம் தந்தேன். அவள் அதைப் புரிந்துகொள்ளவில்லை. இப்போது எல்லோரும் என் வலப்பாகம் பாருங்கள்”. 

தரையினின்று அள்ளி அள்ளி மண்ணையும், சாம்பலையும் பூசிக்கொண்டான். அவன் நடனம்கூடச் செய்யவில்லை. இடுப்பில் கைகளை ஊன்றி, கால்களைப் பரப்பிக் கொண்டு நின்றான். 

“இப்போது ஊழிக்கூத்தன் நான்!” நெற்றிக்கண் திறந்தது. 

அஷ்ட குலாசலங்கள் குலைந்தன. 

அஷ்டதிக் கஜங்கள் பிளிறிக்கொண்டு திசைமாறி ஓடின. குவலயம் கவிழ்ந்தது. 

ஆழாழி கரை புரண்டு கடல் பொங்கி பூமியை அதன் உயிர்களுடன் மூடிற்று. ஆங்காங்கே பூகம்பம் அலை அலை யாக உயிர்களை விழுங்கின. 

கடலடியில் பனிமலைகள் வெடித்து எரி கக்கிற்று. 

இரு கைகளாலும் மார்பில் தட்டிக்கொண்டான்.

“ஊழிக்கூத்தன் நான்! ஊழிக்கூத்தன் நான்!” 

– சாவி

– என் பிரியமுள்ள சிநேகிதனுக்கு… (சிறுகதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1992, வானதி பதிப்பகம், சென்னை.

லா.ச.ரா லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (30 அக்டோபர் 1916 – 30 அக்டோபர் 2007) தமிழ் எழுத்தாளர். இவருடைய முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக ல.ச.ரா என்ற பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *