வறுமையின் வலி!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 17, 2022
பார்வையிட்டோர்: 4,310 
 
 

கொரோனா ‘பாஸிட்டிவ்’என தெரிந்தவுடன் அதிர்ச்சியடைந்தது கிரியாவை விட அவளது பெற்றோர் தான்.

கிரியா நல்ல திறமைசாலி. யாரையும் எதிர்த்து பேசாத வெகுளி. பெற்றோர் ஒரு வீட்டைக்கூட சொந்தமாக வாங்கி வைக்கவில்லை. படிக்காத கூலி வேலை செய்பவர்கள். மற்ற சொந்த பந்தங்கள்,கார்,வீடு,தோட்டமென வாழ்ந்தாலும் இவர்களால் அதிகம் சம்பாதிக்க இயலவில்லை. நகரத்தின் ஒதுக்குப்புறத்தில் ஒரே அறையில் குறைந்த வாடகையில் குடித்தனம்.

அரசு உதவியுடன் படித்து முடித்த கிரியாவுக்கு இன்னொரு டிகிரி படிக்க ஆசை. வறுமை ‘வேலைக்கு போ’ என்றது.

ஒரு தனியார் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்றவள் கடன்வாங்கி,ஒரு ஸ்கூட்டி வாங்கி, மூன்று வருடங்களில் கடன் முடிந்தவுடன் நகைக்கடையில் சேமிப்பு கணக்கு துவங்கி, ஐந்து சரவன் நகை எடுத்திருந்தாள்.

வயது இருபத்தேழு ஆகி விட்டதைச்சொல்லி அம்மா கண்ணீர் வடிக்க,வரனும் அமைந்திருந்தது.

கொரோனா ஒரு வகையில் செலவு குறைந்த திருமணத்துக்கு உதவிட, ஐம்பது பேருடன் முடித்துக்கொள்ள திட்டம். அதற்க்கும் வீட்டு வாடகை,குடும்ப செலவு போக பெற்றோர் சேமித்த தபால் நிலைய சேமிப்பு கைகொடுத்திருந்தது. அதில் ஒரு லட்சம் கிடைத்திருந்தது. குடும்பமே திருமணம் நடக்கப்போவதை எண்ணி பூரித்திருந்தது.

இன்று வந்த கொரோனா உறுதியான செய்தி மகிழ்ச்சி எனும் மரத்தை வேறோடு சாய்த்திருந்தது.

அரசாங்க மருத்துவ மனைக்கு போகலாமென்றால் அண்டை வீட்டார் ‘தனியார் மருத்துவமனையில் ஓர் இடம் மட்டும் உள்ளது. உடனே போனால் கிடைக்கும். இல்லையேல் எங்கும் இல்ல’ என பயத்தைப்போட உடனே திருமணத்துக்காக பெற்றோர் சேர்த்து வைத்திருந்த ஒரு லட்சத்தை முன் பணமாக கட்டி சிகிக்சைக்கு கிரியாவை சேர்த்தனர்.

“வேலைக்கு போகாதே,போகாதேன்னு சொன்னனே கேட்டாளா…? வேலைக்கு போகாம இருந்திருந்தா கொரோனா வந்திருக்காதே…?

உங்க ரெண்டு பேருக்கும் கொரோனாவால வேலையில்ல. நானாவது போனாதானே சாப்பிட்டு வாடகை கொடுக்க முடியும். இருக்கறதை செலவு பண்ணிட்டா கண்ணால செலவுக்கு என்ன பண்ணறதுன்னு சொல்லிட்டு போனாளே…இப்படியாயிருச்சே…?கும்பிட்ட சாமி எதுவும் காப்பாத்தலயே…?” நெஞ்சு நெஞ்சாக அடித்துக்கொண்டு கதறினாள் கிரியாவின் தாய் கமலம்.

மருத்துவமனை வாசலில் ஆறுதல் சொல்ல யாருமில்லை. பலர் பரபரப்பாக ஓடினர். சிலர் சிறுவயதிலேயே இறந்து விட்டதாக கதறினர். உறவுகளோ,நட்போ மருத்துவ மனையில் சேர்ந்துள்ள யாருக்குமே கொரோனா தமக்கும் வந்து விடக்கூடும் என்ற பயத்தால் வரவில்லை. கிரியாவை பார்க்கவும் பெற்றோர் மட்டுமே வெளியில் காத்திருந்தனர்.

செவிலியர் வந்து “உங்க பொண்ணுக்கு நிலமை கொஞ்சம் மோசமாத்தான் இருக்கு. ஆனா காப்பாற்றலாம்னு டாக்டர் சொல்லியிருக்காங்க. ஊசி மருந்து, ஆக்ஸிஜனுக்கு இன்னும் இரண்டு லட்சம் பணம் கட்டணம். உடனே ரெடி பண்ணுங்க “என்ற போது கிரியாவின் பெற்றோருக்கு தூக்கிவாறிப்போட்டது.

‘வீட்டில் பத்து ரூபா கூட இல்லை. கல்யாணத்துக்கு வைத்த பணம் ஒரு லட்சத்தை ஏற்கனவே கட்டியாச்சு’ என கவலையடைந்த போது,ஐந்து பவுன் தங்க செயின் ஞாபகத்துக்கு வர, அதை எடுத்துக்கொண்டு வங்கிக்கு செல்ல, ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கடன் தொகையாகக்கிடைத்தது. பாக்கி ஐம்பதாயிரத்துக்காக உறவுகளிடம்,வேலை செய்த வீட்டில் கேட்க யாரும் கொடுக்கவில்லை. கிரியா ஆசையாக வாங்கிய ஸ்கூட்டியை விற்க ஐம்பதாயிரம் கிடைக்க, ஓடிச்சென்று பணத்தை மருத்துவ மனையில் கட்டி விட்டு பத்து நாட்கள் வீட்டில் இருந்த அரிசியில் கஞ்சியை வைத்து கணவனும்,மனைவியும் குடித்து கவலையுடன் உறக்கமின்றி வாழ்ந்தனர். மகள் நலம் பெற்று வீடு திரும்பினாள்.

நலம்பெற்று வந்தவளுக்கு குடும்ப நிலைமை தலைகீழாக மாறியிருந்தது வருத்தமாக இருந்தது. அரசு கொடுத்த இலவச கொரோனா கால உதவிப்பணத்தில் அம்மா சமைக்கத்தேவையான உணவுப்பொருட்களை வாங்கி வந்திருந்தாள்.

சமைத்து சாப்பிட தட்டிலில் சாப்பாட்டை போட்டபோது வீட்டு முதலாளி வந்து “சோறு திங்கறீங்களா? வேறு ஏதாச்சும் திங்கறீங்களா? மூணு மாசமா வாடகை கொடுக்கலை. அட்வான்ஸ் இன்னைக்கோட முடிஞ்சு போச்சு. காலைல வீட்டைக்காலி பண்ணலைன்னா பாத்திரம் வீதில கிடக்கும்…” என கோபமாக சொல்லிவிட்டுப்போக,கையிலெடுத்த தக்காளி சாதம் உள்ளே செல்ல மறுத்தது. ஓடிச்சென்று தனது படுக்கையில் குப்புற படுத்து குமுறி,குமுறி அழுதாள் குமரிப்பெண் கிரியா.

காலையில் இருந்த சாமான்களை எடுத்து வெளியில் வைத்து விட்டு,வீட்டைப்பூட்டி வீட்டு முதலாளியிடம் சாவியை கொடுத்து விட்டு பெற்றோரை அழைத்துக்கொண்டு வாழ வேறு இடம் தேடி சென்றாள்.

‘சிலர் பல கோடியில்,பலர் தெருக்கோடியில். வாழ்க்கை முறையும்,வாழும் முறையும் சமுதாய கட்டமைப்பில் அமைத்த முறை,அமைந்த முறை சரியில்லை. மாற்றியமைக்கவில்லையேல் அனைத்தும் பூமியில் இருந்தும் பலர் இல்லாதவர்களாகவே வாழ நேரும் அவலம் இருந்து கொண்டேதான் இருக்கும். அதை சரி செய்ய ஒரு நல்ல மனிதன் ஒரு நாள் கண்டிப்பாக வருவான்,அல்லது பிறந்திருப்பான்’ என நினைத்து,நம்பிக்கை மட்டுமே மூலதனமாக எண்ணி பெற்றோரின் கைபிடித்து நடந்தாள் கிரியா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *