வரம்புகளை மீறி…

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 7, 2025
பார்வையிட்டோர்: 12,370 
 
 

(2009ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வானம் மெதுவாகத் தூறிக்கொண்டிருந்தது. எனக்கு நம்பவே முடியவில்லை. சுண்டினால் சிவக்கும் நிறம். கதை சொல்லும் கனிவான கண்கள். சுவைக்கச் சொல்லும் குவிந்த அழகான உதடுகள். அடுக்கி வைத்தது போன்ற முத்துப் பல்வரிசை. கன்னத்தில் குழி விழச் சிரிக்கும், அந்த மனதை வயப்படுத்தும் சிரிப்பு. இத்தனையும் எனக்கு சொந்தமாகக் கூடிய ஒரு சாத்தியக்கூறு. WOW காத்திருந்ததற்கு இது ஒரு பரிசா! மனமெங்கும் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் வட்டமடிப்பது போன்ற சிலிர்ப்பு. எனக்குள் நானே அகமகிழ்ந்து சிரித்துக் கொள்கிறேன். 

அர்ஜுன் என் மனதில் சங்கமமாக வழிவகுத்த ஆரம்பம் மீண்டும் நினைவுக்கு வருகிறது. அன்று ஒரு சனிக்கிழமை snow கொட்டிக் கொண்டேயிருந்தது. கனடாவின் அத்தனை பருவ கால மாற்றங்களும் அழகுதான். ஒவ்வொரு பருவமும் மாறும்போது அந்த மாற்றங்கள் அப்பத்தான் புதிதாகப் பார்ப்பது போல் ஒரு புத்துணர்வை, மிகவும் ரம்மிய உணர்வைத் தரும். அதன் அழகை ரசித்த படி யன்னலருகே அமர்ந்திருந்தேன். அம்மா வந்து பக்கத்தில் இருக்கிறா. 

“பிள்ளை நான் ஒரு கதை சொல்லுவன், இடையிலை மறிக்காமல் கேட்பியோ?” 

“அம்மா முத்தாய்ப்பு வைக்காமல் என்ன என்று சொல்லுங்கோ” 

“அண்டைக்கு கோயிலிலை ரதி மாமி சொன்னா, அவவின்ரை மகள் internet dating மூலம்தான் கலியாணம் கட்டினதாம். இங்கை எங்களுக் கேற்ற மாதிரி மாப்பிளை தேடுறது வலு கஷ்டம் என்று பலரும் இப்படித்தான் செய்கினமாம். நீயும் சும்மா ஒருக்கா போய்ப் பாரன். பிறகு எப்படி வருது என்று பார்ப்பம்” 

“அம்மா எந்த நாளும் சந்தித்துப் பழகிற ஆட்களைப் பற்றியே ஒழுங்கா அறிய முடியாம லிருக்குது. internet dating மூலம் கலியாணம் பண்ணுறது என்பது நல்ல பகிடிதான். சும்மா போங்கோ எனக்கு கலியாணமும் வேண்டாம். கத்தரிக்காயும் வேண்டாம்.” 

“உனக்கும் முப்பது வயதாகுது. சின்ன வயசே? காலம் எல்லே போய்க்கொண்டிருக்குது. வயது போகப் போக கலியாணம் கட்டுறது பெரும் கஷ்டம் பிள்ளை” 

“அம்மா இது இலங்கையில்லை, இது கனடா. கனடாவிலை தனித்து வாழ ஏலும். இப்ப என்னை மேலே படிக்க விடுங்கோ பார்ப்பம். OSAP இருந்தால் கலியாணம் பேசுறது கஷ்டம் என்று தொடர்ந்து படிக்க விடமாட்டன் என்கிறியள். இப்ப நான் உழைத்து சேமித்த காசு இருக்கு. என்னை மேலே படிக்க விடுங்கோ” 

“ஏன் நீ படித்தது காணாதோ? மேலே படிச்சால் பிறகு அதைவிட உசத்தியாய் மாப்பிளை பார்க்கிறது நடக்கக்கூடிய காரியமே?” 

“கலியாணம். உதுதான் உங்களுக்கு நாளும் பொழுதும் நினைப்பு. நீங்கள் கலியாணத்தைக் கட்டி இப்ப என்னத்தைப் பெரிசா சாதித்துப் போட்டியள்? ஒரு degree எடுக்கிறது இங்கை பெரிய வேலையில்லை. சராசரியாக எல்லாரிடமும் அது இருக்கிறதால்தான் ஒரு நல்ல வேலை எடுக்க ஏலாமல் சும்மா ஒரு office வேலையில் போரடித் துக் கொண்டிருக்கிறன். ஏதாவது ஒரு post graduate degree அல்லது ஒரு diploma செய்தால்தான் ஒரு நல்ல வேலை தேடலாம்” 

“பிள்ளை சும்மா என்னோடை விவாதித்துக் கொண்டிருக்கிறதை விட்டிட்டு எனக்காக செய்ய மாட்டியோ? என்ரை ராச்சத்தியல்லோ, உன்னை கெஞ்சிக் கேட்கிறன். எனக்கும் heart attack ஒருக்கா வந்திட்டுது. இனி எவ்வளவு காலம் இருப்பனோ தெரியாது. உன்ரை கலியாணத்தை ஒப்பேற்றிப் போட்டால் எனக்கு கொஞ்சம் ஆறுதலாயிருக்கும்” அம்மாவுக்கு குரல் தழு தழுத்தது. 

அம்மாவும் பாவம். நவக்கிரக வழிபாடு, சனி பகவானுக்கு எலும்பிச்சை பழ விளக்கு, நந்திக்கு 9 குடம் தண்ணி என்று செய்து செய்து களைச்சுப் போனா. போதாததற்கு கனடாவில் இருந்தாலும் நாம் தமிழர்கள், இது எங்கள் பாரம்பரியம், அதை காப்பாற்றுவது நம் கடமை என்று சொல்லாமல் சொல்லும் சிலரின் பொம்பிளை நிறம் காணாதாம்,சீதனம் கொஞ்சம் காணாது என்ற இழுவைகள் அவவை நிறையவே குழப்பி இருந்தது. அதனால் புது தொழில் நுட்பத்தின் அனுகூலத்தை நாடி வந்திருக்கின்றா. 

அடுத்தநாள் வீட்டுக்கு வந்த என் சினேகிதி ஜூலியிடம் அம்மாவின் வேண்டுகோளைச் சொன்ன போது அவளும், “நீயும் உன்னைச் சூழ உள்ள கட்டுப்பாடுகளும் துணை தேடத் தடையாக இருக்குது. maybe this the best way அனு. நீ என்ன சின்னப்பிள்ளையா? யாரேனும் ஏமாற்றி விட்டுச் செல்ல. சும்மா அம்மாவுக்காகப் போய்ப் பாரேன். சிலவேளை surprise கூடக் கிடைக்கலாம் அல்லது just for fun என்று நினை” என உற்சாகம் தருகிறாள். இப்படித்தான் அம்மாவுக்காக அவவின் வற்புறுத்தலுக்காகத்தான் இது மெல்லத் தொடங்கியது. 

ஆரம்பத்தில் புத்தகங்களை விமர்சித்து, பின் சினிமாவை அலசி கொஞ்சம் பழக்கம் வந்ததும், கருத்துக்களை விவாதித்து மெல்ல நெருங்கியதில் ஏதோ ஒரு அந்நியோன்யம் வந்தது. grade 12 படிக்கும் போது அரவிந் சொன்ன “அனு I love you”ஐ விட இது மனதைச் சுண்டி இழுத்தது. அரவிந் நல்லதொரு LDIT 6001621607. top student, good human being, great helper. ஆனால், மனதில் ஏனோ காதல் வரவில்லை. படிப்பை முதலிலை பார் என்று தினந்தோறும் அம்மா சொல்லும் பாரா யணத்தைக் கேட்டுக் கொண்டிருந்ததும் அதற்கு ஒரு காரணமாகவிருக்கலாம். பின் university யில் paulஇன் புத்திக் கூர்மையில், இசைந்து கொடுக்கும் தன்மையில், எடுப்பான உருவத்தில் லயிப்பு வந்த போது யதார்த்தத்தை எண்ணி மனதைக் கட்டுப்படுத்த வேண்டியிருந்தது. இனம் மாறிக் கட்டினால் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும். பழக்க வழக்கங்கள், கலாச்சாரங்கள் மாறி நிற்கும்போது திரு மணத்தில் சாதரணமாக வரும் challengeஐ விட challenge இரட்டிப்பாக வரும். நீ சொல்லுக் கேட்காமல் போனால் போ. ஆனால் எங்கள் உறவு அத்துடன் முடிந்து விடும் என பல மறைமுக அறிவிப்புகள், பயமுறுத்தல்கள் Paulஐ விட்டு விலகியிருக்க வைத்தன. 

ஆனால் அறிவுக்கும் மனதுக்கும் தீனி போட்ட அர்ஜுனின் internet உரையாடல்கள் மிக வித்தியாசமான வகையில் மனதை ஆக்கிரமித்தன. எண்ணங்களை எழுத்து மூலம் கதைத்து ஒத்துப் போகலாம் எனத் தெரிந்த பின் அம்மாவின் ஒத்துழைப்பும் கிடைக்கிறது என்ற தெம்பில் வேகமாக மனதில் ஒரு உறவு வளர்ந்தது. அர்ஜுன் யாழ்ப்பாணமாம் என்றவுடன் அம்மாவுக்கு மட்டுமல்ல அப்பாவுக்கும் பெரிய நிம்மதி. 

“அனு நாம் ஒரு நாளைக்கு நேரில் சந்திப் போமா? ஆறுதலாக இருந்து கதைக்கலாம். ஒருவரைப் பற்றி ஒருவர் மேலும் அறிந்து கொள்ள முடியும்” என அர்ஜுன் கேட்ட போது எனக்கு சரி என்று சொல்ல ஏனோ துணிவு வரவில்லை. சந்திப்பிலே ஏதாவது ஒரு பிசிறு ஏற்பட்டால் நட்பு போய்விடுமோ என பெரிய ஆதங்கமாக இருந்தது. Technology முன்னேறிய உலகில் வாழுகிறோம். முதலில் ஒருக்கால் web camஇல் கதைப்போமா? என நான் கேட்டதன் பிரதிபலிப்புத்தான் இந்தப் பரவசம். நான் அர்ஜுனுடன் கதைத்ததை விட அப்பா வும் அம்மாவும் கதைத்ததுதான் அதிகம். அர்ஜுன் யாழ்ப்பாணத்தில் எவ்விடம், யாற்றை சொந்தம் என அம்மா துளாவித் துளாவி அறிவதில் பெரும் ஆர்வம் காட்டினாலும், அர்ஜுன் தந்த விபரங்களிலிருந்து தனக்குத் தெரிந்த யாரையும் அர்ஜுனுடன் தொடர்பு படுத்த அம்மாவால் முடியவில்லை. இருந்தாலும் அம்மாவுக்கு தலை கால் தெரியாத சந்தோசம். அர்ஜுனை அவவுக்கும் அப்பாவுக்கும் பிடித்துப் போயிற்று. சாதகப் பொருத்தம் பார்க்க விரும்புவதாக அம்மா சொன்னபோது முற்றாக முடிவானது போல ஒரு பிரமை என் மனதில். 

நினைவுகளின் தொடரை phone குழப்புகிறது. அழைத்தது ஜூலிதான். நடந்தவற்றை தான் விரும்பிய பரிசுப் பொருளைக் கண்ட குழந்தையின் குதூகலத்துடன் சொல்கிறேன். அவளும் என் சந்தோசத்தைப் பகிர்ந்து கொள்கிறாள். 

எனது இன்னொரு தோழியுடனும் என் மகிழ்வைப் பகிர்ந்து கொள்ளும் ஆர்வத்தில் computerன் முன்போய் இருந்து emailஐத் திறக்கின்றேன். அர்ஜுனின் கடிதம் எனக்காகக் காத்திருந்தது. 

என் அன்பு மிக்க அனு, 

உங்களுடனும் உங்கள் பெற்றோருடனும் கதைத்த கதைகளும், உங்கள் ஆர்வம் மிக்க முகங்களும்தான் என்னை மீள மீளச் சுற்றி வருகின்றன. ஆனால் உங்கள் அம்மா கேட்ட சில கேள்விகள் என்னைக் கொஞ்சம் யோசிக்க வைத்தன. I think it is best for you all to know now. நாங்கள் வெள்ளாளர் பரம்பரை அல்ல.எம் மூதாதையர் விவசாயம் செய்யவில்லை. மீன் பிடித்துத்தான் சீவியம் நடாத்தினார்கள். இதைச் சொல்வதில் எனக்கு எந்த விதமான regretம் இல்லை. இது உங்கள் பெற்றோருக்கு தெரிவது அவசியம். 

அத்துடன் எனக்கு சாத்திரத்தில் நம்பிக்கை இல்லா விட்டாலும் நீங்கள் கேட்டது போல் எனது குறிப்பை இத்துடன் அனுப்பி உள்ளேன். இந்தக் கல்யாணம் நல்லபடி நடந்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். எனக்காகச் சந்தோசமடைய என் பெற்றோர் இவ்வுலகில் இல்லை. அந்த விதத் தில் நீங்கள் கொடுத்து வைத்தவர். உங்கள் பெற்றோருக்கும் எனது அன்பைத் தெரிவியுங்கள். 

அன்புடன்
அர்ஜுன 

வாசித்து முடித்த போது மனம் ஏனோ பட படத்தது. அர்ஜுனின் குறிப்பை print எடுத்துக் கொண்டு அம்மாவிடம் போனேன். 

“அம்மா அர்ஜுனின் குறிப்பு” 

“உடனை வந்திட்டது. தம்பிக்கு அப்ப உன்னை நல்லாப் பிடிச்சிருக்குது. 4ல் சனி, 7ல் கேது, உதயத் தில் செவ்வாய். பிறகென்ன பொருத்தம் நல்லம் என்றுதான் நினைக்கிறன். எதுக்கும் பிள்ளையார் கோவில் சாத்திரியிட்டை கேட்டிட்டு முடிவெடுப்பம்.” 

சொன்ன வேகத்தில் phone பண்ணிக் கதைத்து விட்டு அம்மா போய்விட்டா. எனக்கு மனம் அலை பாய்ந்து கொண்டிருந்தது. வாழப் போகிறவள் நான் தான் இதற்கு முடிவெடுக்க வேண்டும். நிமிடங்கள் மணித்தியாலங்கள் ஆக கடைசியில் அம்மா Indian sweets சகிதம் வந்து சேர்ந்தா. 

“பிள்ளை நல்ல சேதி. கடவுள் ஒரு வழி காட்டி யிருக்கிறார். நல்ல பொருத்தம் என்று ஐயா சொல்லிட்டார்” 

“சரி உதிலை இப்ப இருங்கோ உங்களுக்கு நான் ஒரு கதை சொல்ல வேணும்” 

“என்ன பிள்ளை பீடிகை போடுகிறாய்?” 

“அர்ஜுன் அவை எங்கடை ஆட்கள் இல்லையாம்” 

“என்ன பிள்ளை நீ சொல்கிறாய்? உண்மை யாகவோ? யார் சொன்னது? கடவுள் காக்க. இது என்ன கதை இது? இஞ்சரப்பா கேட்டியளோ” 

“அம்மா வேறை ஒருத்தரும் சொல்லெல்லை. அர்ஜுன்தான் சொன்னது” 

“அப்ப உனக்கு முதலே தெரியுமோ?” 

“இல்லை. இப்ப குறிப்பு அனுப்பேக்கை தான் அதையும் எழுதினவர்” 

“என்ன சாதியாம்? என்ன எதுவோ? இனி என்ன செய்கிறது? குறிப்புப் பொருந்தவில்லை எண்டு சொல்ல வேண்டியதுதான” 

“அம்மா இவ்வளவு நேரமும் அர்ஜுன் மாப்பிள்ளையாக வருவது எங்கள் பாக்கியம். கடவுள் சித்தம் என்றெல்லாம் கொண்டாடிப் போட்டு, குறைந்த சாதி என்றதும் நீங்களும் மற்றவை மாதிரி அதே பாரம்பரியக் கதை சொல்லி, உங்களைச் சுற்றி வழமையான வட்டம் போடப் போறியளோ?” 

“ஊரோடை ஒத்துப் போகவேணும் பிள்ளை. பிறகு நாங்கள் இனம் சனமோடை கொண்டாட வேணுமெல்லே?” 

“உங்களுக்கு ஊரை பற்றித்தான் கவலை. எங்கண்டை மனங்களை யோசித்துப் பாத்தியளோ” 

“நீ சொல்ற மாதிரி கண்ட கிண்ட எல்லாச் சாதிகளோடும் கலக்கிறது நடைமுறை விடயமில்லை பிள்ளை.” 

“அம்மா அர்ஜுன் மனித சாதி. மனிதர் களிடையே சாதி, இனம், மதம் என்று எத்தனை பாகுபாடுகள். எத்தனை பிரிவுகள். இந்த வரம்புகள், எல்லைகள், வேலிகள் எல்லாம் பாத்துப் பாத்து நான் களைச்சுப் போனன். அவர் பெருந்தன்மையுடன் வெளிப்படையாகக் கூறிய சாதியை நீங்கள் இப்படிச் சின்னத்தனமாக நடக்கும் போது நான் கூறவேண்டிய கட்டாயம் எனக்கில்லை. அவரைத்தான் நான் கலியாணம் கட்டப் போகிறேன். ஆசீர்வாதம் வழங்க உங்களுக்கு விருப்பமில்லை என்றால் தயவு செய்து விலகி வழியை விடுங்கோ.” 

வேகமாகச் சொல்லி விட்டு அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சிந்திக்க அவகாசம் இருக்கட்டும் என்று வெளியில் வருகிறேன். வசந்த காலத்தின் வரவை பறைசாற்றும் வகையில் முற்றத்தில் மலர்ந் திருந்த ரோசாப் பூக்களில் அழகான வண்ணத்துப் பூச்சிகள் வட்டமிட்டுப் பறக்கின்றன. 

– மல்லிகை 44வது ஆண்டு மலர், ஜனவரி 2009.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *