வரட்டு வேதாந்தம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 14, 2025
பார்வையிட்டோர்: 164 
 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வைரமுத்துவின் இன்னொரு தேசிய கீதத்தில் ஆழ்ந்திருந்த நான், தங்கையின் கணீரென்ற குரல் கேட்டு, நிமிர்ந்து பார்த்தேன். முந்தானைக்குள் எதையோ சுருட்டி வைத்துக்கொண்டு, நடையில் இலேசான துள்ளலுடன்… 

“அம்..மா, அம்மோ…வ்!”

மீண்டும் குரல் கொடுத்தபடி அவள் நகரவும், சேலைத் தலைப்பில் கைகளைத் துடைத்தபடி அடுக்களையிலிருந்து அம்மா அவளருகில் வரவும் சரியாக இருந்தது. “என்னடி ரமா, இந்தக் கத்து கத்துற? அட, அது என்ன மடி நெறைய கட்டிக்கிட்டு…?”

“அம்மா மாலினி ரீச்சர் நெல்லிக்கா தந்தவ. ‘தோசி’ போடலாம்மா. அதான், ஒங்களக் கூப்புட்டேன்.”

“ஓ! அதுக்கா இந்த ஆர்ப்பாட்டம். அப்பாடியோவ்! நான் என்னவோ ஏதோன்னு பதறிட்டேன்” என்று அம்மா ஆசுவாசமாய்ப் பெருமூச்சு விட்டார். 

“இந்த ரமா எப்பவுமே இப்படித்தாம்மா. ஒண்ணு- மில்லாததுக்கெல்லாம் ‘தாம்தூம்’னு குதிப்பா” – இது நான். ரமா என்னை முறைக்க, உல்லாசமாய்ச் சிரித்தேன். “மாலினி ரீச்சருக்கு எப்பவுமே ரொம்ப எளகின மனசு!”- அம்மா சிலாகித்தார். 

“ஏண்டியம்மா, அந்த மாலினி இங்கேயா இருக்கா?” திண்ணையில் கால்களை நீட்டி அமர்ந்தபடி, வெற்றிலை இடித்தவாறு இருந்த பாட்டியின் கேள்வியால் அம்மா சற்றே திகைப்பது தெரிந்தது.

“மா… மாமிக்கு மாலினி ரீச்சரத் தெரியுமா?” 

“நல்லா கேட்டே போ! அவ பொறந்து வளந்ததெல்லாம் எங்க ஊருலதான். எள வயசுல ரெட்ட ஜட போட்டு, பொஸ்தவக் கட்டோட அவ தெருவுல நடந்தா, வெடலப்பசங்க பூரா தொறந்த கண்ணு மூடாமா கெடப்பான்க. ஏன், ஓம் புருஷங் கூட ஒரு காலத்துல அவ பின்னாடியே திரிஞ்சவன்தான்” என்று பாட்டி போட்டு உடைக்க, முன்னறையே ‘கொல்’ லென்ற சிரிப்பலையால் நிறைய, பத்திரிகை படித்துக்கொண்டிருந்த அப்பா கம்பீரமாக இளநகை பூத்தார். அதைக் கண்ட அம்மா, மேலும் சீண்டினார். 

“க்கும்! மாமி ஒங்க மவனுக்கு இன்னும் தான் பெரிய ‘ஹீரோ’ன்னு நெனவுபோல! பாருங்களேன் சிரிப்ப.”

“ஏண்டி, எம் மவனுக்கு என்னடி கொற?” என்று பாட்டி விட்டுக்கொடுக்காமல் கேட்க, பேச்சு களைகட்டியது. என் உள்ளப் பறவையோ மாலினி ரீச்சரையே சுற்றிச் சுற்றிப் பறந்தது. 

மாலினி ரீச்சர். நாற்பத்தேழு வயது என்பதை நம்பமுடியாத தோற்றம். கனிவும் கருணையும் பொங்கும் அகன்ற விழிகள். எப்போதுமே புன்னகை ததும்பிய பொலிவுடனான வட்ட முகம். மெலிந்து… உயரமாய்… நடையில் நளினமும் கம்பீரமும் இழைய, வகுப்பறைக்குள் நுழைந்து, கணீரென்ற குரலில் அவர் எமக்குக் கற்பிக்கத் தொடங்கியபின் , அவ்வளவு காலமும் வேம்பெனக் கசந்த ஆங்கிலம், எனக்கு கற்கண்டென இனிக்கலாயிற்று. இனிக்கலாயிற்று. 

பிறப்பில் சிங்களவரான அவர், ‘ஒசரி’ உடுத்தாலும் பொட்டு வைத்துப் பூச்சூடி ஒரு வித்தியாசமான கலாசாரக் கலவையில்! அவரைக் கண்டு ஆச்சரியமாய் இருந்தாலும், காலப்போக்கில் எமக்கு அது பழகிப்போயிற்று. 

ரீச்சர் எமது பள்ளிக்கூடத்துக்கு வந்த புதிதில், அவரைப் பற்றிப் பலரும் பலவிதமாய்க் கதைத்தனர். அடிக்கடி எங்கள் செவிகளிலும் விழுந்த செய்திகளிலிருந்து நான் அறிந்தது இதுதான். சிங்களவரான மாலினி ரீச்சர், தன்னுடன் ஒரே பள்ளிக்கூடத்தில் பணி புரிந்த தமிழரான குமார் சேரைக் காதலித்தார். இருவர் தரப்பிலும் கடுமையான எதிர்ப்பு நிலவியும் துணிவோடு பதிவுத் திருமணம் செய்துகொண்டு, மாற்றல் வாங்கிக் கொண்டு வேற்றூருக்குச் சென்றவர்கள், கடைசியாக எம்மூருக்கு வந்து சேர்ந்தனர். 

அந்த இருவரையும் போல் மனமொத்த தம்பதியரைக் காண்பதே அரிது என ஊரே வியந்து கூறத் தவறவில்லை. பாரதி கூறியது போல், ‘காதலனொருவனைக் கைப்பிடித்து, அவன் காரியம் யாவினுங் கைகொடுத்து’ களிப்புடன் வாழ்ந்த ரீச்சருக்கு புத்திர பாக்கியம் மட்டும் வாய்க்கவில்லை. அதனால் என்ன! என்பதுபோல் எம்மனைவரையும் தன் பிள்ளைகளாகவே கருதி வாழ்ந்தார். அதிலும், தன் ஆருயிர்க் கணவனை இழந்த இந்த ஒன்றரை வருடத்தில் நான், சுதன், ரமா, சோமபால, சலீம், டேவிட், பண்டார அனைவரும் அவருக்கு செல்லப்  பிள்ளைகளானோம். சிந்தனையில் மூழ்கியிருந்த நான், சலீமும் சுதனும் அழைக்கும் ஒலி கேட்டு முற்றத்துக்கு வந்தேன். இருவர் முகமும் களையிழந்து விழிகள் சிவந்து… ஏன் என்னாயிற்று என்று கேட்கு முன்பே எனக்குள் பதைபதைப்பு. சுதன்தான் பேசினான். “ர… ரவி… நம்ம மாலினி ரீச்சர்… மா… லினி ரீச்சருக்கு…” சொல்லும்போதே குரல் தளுதளுக்க இருவர் விழிகளும் பொலபொலவென்று கண்ணீர் உகுக்க, நடந்ததை ஊகிக்க நெடுநேரமாகவில்லை எனக்கு. “இப்போதுதானே ரமாவுக்கு நெல்லி கொடுத்து…” திக்பிரமை பிடித்த என்னை சலீம் பிடித்து உலுக்கியதும் பிரக்ஞை ஏற்பட, ஓட்டமும் நடையுமாய் நண்பர்களைப் பின்தொடர்ந்தேன். சொல்ல முடியாதளவு வேதனை இதயமெங்கும் வியாபிக்க, தொண்டைக்குள் ஏதோ அடைப்பதுபோல் ஓருணர்வு எனக்குள். 

மாலினி ரீச்சரின் பூதவுடலை முன்கூடத்தில் கிடத்தியிருந்தனர். முகத்தில் அதே சாந்தம்… கனிவு…மனக் கண்ணில் அடிக்கடி புத்தர் பிரானை நினைவூட்டும் அந்தப் பொலிவான முகம், எப்போதும் போல் நிர்மலமாய்…! என்னைக் கண்டு புன்னகைப்பதுபோல் அதரங்கள் அசைவதாய் ஒரு பிரமை தோன்ற, அடிவயிற்றிலிருந்து எழுந்த விம்மலால் என்னுடல் குலுங்கியது. சுவரோடு முகம் புதைத்து விசும்பினேன்.

உற்றார் உறவினரற்ற ரீச்சரின் மரணச் சடங்குகளை யார் நிறைவேற்றுவது? என்ற சர்ச்சை எழுந்தபோது, ரீச்சர் உயிர்நீத்து மூன்று தினங்கள் ஆகியிருந்தன. வகுப்பு சேர்ந்து அவற்றை நிறைவேற்றத் தீர்மானித்தபோதுதான் சர்ச்சை கிளம்பியது. காரணம் தமிழ்ப் பள்ளிக்கூடத்தில்தான் ரீச்சர் கற்பித்து வந்தார். எனவே, தமிழ் முஸ்லிம் மாணவர்களான நாம் மரணச் சடங்குகளை நிறைவேற்றப் போவதாகக் கூறியபோது, வயதில் மிக மூத்தவரான சோமபாலாவின் தாத்தாவிடமிருந்துதான் முதல் ஆட்சேபனை கிளம்பியது. ரீச்சரின் பக்கத்து வீட்டுக்காரரான அவரின் பேச்சை பெரியவர்கள் பலரும் ஆமோதித்தபோது எனக்குத் தாளமுடியவிலை.

மாலினி ரீச்சர் எமக்கு ஒரு தாயைப் போன்றவர். இன, மதங்களைக் கடந்த தாயன்பை நாம் அவரிடம் கண்டோம். அப்படியிருக்க, அவரின் இழப்பு எங்களுக்கேற்பட்ட இழப்பல்லவா? உணர்வுபூர்வமான எமது சோகத்துக்கு இவர்கள் மதத்தின் வர்ணம் பூசலாமா? ‘எல்லோர் உதிரமும் ஒரு நிறம்தான்; எல்லோர் விழிகளும் ஒரு சுவைதான்’ என்று ஆசியஜோதியை ஆழமாய் எம்முள்ளங்களில் பதிய வைத்தவரின் மரணத்தில் மனமுடைந்து நாம் பொழிகின்ற கண்ணீர்த் துளிகளில் இவர்கள் மதத்தைத் தேடலாமா? விடை தெரியாத வினாக்கள் துளைத்தெடுக்க, எப்படி வீடு வந்து சேர்ந்தேனென்று எனக்கே தெரியாது. 

முன்னறையில் எல்லோரும் தொலைக்காட்சி முன் அமர்ந்திருந்தனர். யாரோ ஓர் அரசியல் தலைவர் உரத்த குரலில் முழங்கிக் கொண்டிருந்தார். 

“… ஆகவே, இன்றைய இளைஞர்களை விட எம்போன்ற மூத்தோர்களுக்கே சமாதான வேட்கை அதிகமுள்ளது. ஒற்றுமையின் உயர்வினை… சமாதானத்தின் தேவையை இளைஞர்கள் சரிவர உணரவேண்டும். அதன் பொருட்டு அவர்கள் எம்முடன் ஒத்துழைப்பு வழங்க முன்வர…” வெறிபிடித்தவன் போல் முன்னால் சென்று ‘பட்’டென்று தொலைக்காட்சியை அணைக்க, என் செயல் கண்டு அனைவரும் திகைப்பது புரிந்தும், பொருட்படுத்தாமல் என்னறையை நோக்கிச் செல்லத் தொடங்கினேன். மடைதிறந்த வெள்ளமெனப் பொழிகின்ற விழிநீரைத் துடைக்க மனமின்றிச் செல்லும் என் முதுகைப் பல ஜோடி விழிகள் வெறிப்பதை உணரக்கூடியதாக இருந்தது. 

நான் அறைக்குள் முடங்கிப்போய் எவ்வளவு நேரம் இருந்தேனோ தெரியாது. டேவிட் வந்து அழைக்க, முதலில் மறுத்துவிட்டுப் பின்பு அவனுடன் சென்றேன். மாலினி ரீச்சரின் வீட்டு வாயிலை நெருங்கும்போதே சோமபாலவின் கம்பீரக் குரல் என் செவியில் நுழைந்தது.

“…பெரியவர்களான நீங்கள் இப்படிப் பேசலாமா? மேடையேறி மூச்சுக்கு முந்நூறு தரம் சமாதானம்… சமாதானம் முழங்கினால் சமாதானம் மலர்ந்து விடுமா, செயலில் காட்ட முன்வரவேண்டும். இளைஞர்களான நாங்கள் ஒற்றுமையாக இருக்க முயன்றால், அதை ஆசீர்வதிக்க வேண்டிய நீங்களே இப்படிப் பிரிவினைவாதம் பேசினால் எப்படி?

“மாலினி ரீச்சர் எங்கள் எல்லோருக்குமே அம்மா மாதிரி. அவருடைய இழப்பு உங்களை விட எங்களைத்தான் பாதித்துள்ளது, அவர் ஒரு சிங்களவர் என்றாலும், அவர் தமிழ் – முஸ்லிம் மாணவர்களுக்கு அன்னைபோல், ஆசிரியராய் இருந்தவர். எனவே, நாங்களனைவரும் இணைந்து அவருடைய மரணச்சடங்குகளைச் செய்யத்தான் போகிறோம். நாங்கள் இளைஞர்கள்… படித்தவர்கள்… இனியும் உங்கள் வரட்டுச் சித்தாந்தங்களைக் கட்டிப்பிடித்துக் கொண்டு, எமக்குள் பிளவுபட்டு நாட்டைச் சீரழிக்க மாட்டோம். இனம், மதம் என்ற வரையறைகள் மனிதனை நல்வழிப்படுத்துவதற்காய் உள்ளவையே! அவற்றைக் காரணங் காட்டி எங்களுக்குள் குரோதத்தையும் விரோதத்தையும் ஏற்படுத்த முனையாதீர்கள்” சோமபால மூச்சிரைக்கக் கூறிமுடித்தபோது, அங்கே பயங்கர நிசப்தம் நிலவியது. 

நான் ஓடிப்போய் ஆருயிர் நண்பன் சோமபாலவைக் கட்டியணைத்தேன். டேவிட் அவனின் முதுகில் தட்ட, சலீம் பெருமையோடு அவனைப் பார்த்து முறுவலித்தான். அப்போது, அங்கிருந்த புத்தபிக்கு ஒருவர், முன்னால் வந்தார். 

“இந்தப் பிள்ளைகளைப் பார்த்து நான் பெருமைப் படுகிறேன். இன்றைய இளைஞர்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள். இனி இவர்களைப் போன்ற நல்லிதயங் கொண்ட இளைஞர்களின் முயற்சிகளால் எமது தாய்த்திருநாட்டில் சுபீட்சமும் சமாதானமும் மலரட்டும் என்று நான் ஆசீர்வதிக்கிறேன். புத்தம் சரணம் கச்சாமி!” – அவர் கூறிமுடிக்கவே, சவப்பெட்டியை ஆளுக்கொரு மூலையினைத் தோளில் தாங்கி நாம் நடக்க, பெரியவர்கள் மௌனமாய் வழிவிட்டனர். எங்கள் விழிகளில் இன்பமும் துன்பமும் கலந்து வெளிப்பட்ட கண்ணீர், பேதங்களைத் தகர்த்தெறிந்த பெருமிதத்தோடு வெதுவெதுப்பாய் கன்னங்களை நனைத்தபடி கீழே சிந்தியது. 

– மித்திரன் வாரமலர் 11-4-1999.

– எருமை மாடும் துளசிச் செடியும் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: மார்ச் 2003, தமிழ் மன்றம், கண்டி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *