வயசுக்கு மீறிய புத்தி!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: பாக்யா
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 18, 2017
பார்வையிட்டோர்: 10,201 
 
 

அரசு ஆய்வுக் கூடம் ஒன்றில் உயர் அதிகாரி சத்திய சீலன். அவர் மனைவி சித்ரலேகா ஒரு கல்லூரி பேராசிரியை. அவர்களுடைய ஒரே மகள் ஐஸ்வரியாவுக்கு பத்து வயசுதான் ஆகிறது. சுட்டிப் பெண். நினைத்ததை ‘பட்’ டென்று கேட்டு விடும் சுபாவம் அவளுடையது!

அவளுக்கு நூடில்ஸ் என்றால் உயிர். வாரத்திற்கு நான்கு நாட்களாவது டிபனுக்கு அவளுக்கு நூடில்ஸ் வேண்டும்!

கொஞ்ச நாட்களாக நூடில்ஸ்க்கு அஸ்டமத்தில் சனி! அரசு நடவடிக்கையால் கடைகளில் அடிக்கடி ஸ்டாக் இல்லை என்று சொல்கிறார்கள்! எல்லாப் பத்திரிகைகளும் புதிது புதிதாக ஏதாவது பீதியைக் கிளப்பிக் கொண்டிருந்தன!

சித்ரலேகா ஐஸ்வரியா கேட்ட பொழுதெல்லாம் உடனே நூடில்ஸை பிரியமாக செய்து கொடுத்து விடுவாள். அதற்கு காரணம், அவளுக்கு வேலை சுலபம் என்பது தான்!

பத்திரிகை செய்திகளில் வரும் லேப் ரிசல்ட்டுகள் அவளையும் கொஞ்சம் யோசிக்க வைத்து விட்டது!

கொஞ்ச நாட்களாக வீட்டில் ஐஸ்வரியாவுக்கு நூடில்ஸை கண்ணிலேயே காட்டுவதில்லை! அதனால் அவளுக்கு பெற்றோர் மேல் பயங்கரக் கோபம்!

அன்று காலை டிபனுக்காக டைனிங் டேபிளில் மூவரும் உட்கார்ந்திருந்தார்கள். சமையல்காரி சுடச் சுட இட்லி தோசை கொண்டு வந்து பரிமாறினாள். ஐஸ்வரியா தட்டைத் தள்ளி விட்டு, “ஏம்மா!…இன்னைக்குமா எனக்கு நூடில்ஸ் இல்லை?…” என்று கோபமாக கேட்டாள்.

“ ஆமாண்டா!…கண்ணு!…..இனிமே நமக்கு நூடில்ஸே வேண்டாம்!…அதை சாப்பிட்டால் வேண்டாத வியாதிகள் எல்லாம் வருமாம்!…” என்றாள் சித்ரலேகா.

“ சும்மா கதை சொல்லாதீங்க!…இத்தனை நாளா நான் சாப்பிட்டுக் கொண்டு தானே இருந்தேன்!..எனக்கு எந்த வியாதியும் வரலையே!….”

“ ஐஸ்வரியா!…சொன்னாக் கேளு……அதெல்லாம் உடனே தெரியாது…வயசாக வயசாகத் தான் அதன் பின் விளைவுகள் தெரிய வரும்!….உங்கப்பா ‘லேப்’பில்தானே அதிகாரியா இருக்காரு…நீ அவரையே கேட்டுப் பாரு!…” “என்றாள் அம்மா.

“ அப்பா!…நீயே சொல்லு….அம்மா சொல்லறது சரியாப்பா?….”

“ ஆமாண்டா கண்ணு!…அம்மா சொல்லறது ரொம்ப சரி!…ரொம்ப நாளா நாங்க கவனிக்காம விட்டிட்டோம்!……இப்ப தான் அது பற்றி ஒரு புகார் வந்தது!….அதனாலே நூடில்ஸை பல டெஸ்டு எடுத்தோம்!…..அதில் உடம்புக்கு கேடு விளைவிக்கும் நிறைய ரசாயனங்களை சேர்த்திருக்காங்க!… அதை சாப்பிட்டா குழந்தைகளுடைய எதிர் காலமே வீணாகி விடும்!…அதனால் தான் நாங்க அதை தடை பண்ணிட்டோம்!

நமது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கக் கூடிய நச்சுப் பொருள்கள் அதில் இருக்கு!….மக்கள் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் எந்தப் பொருளையும் மக்களுக்கு வழங்கக் கூடாதென்பது அரசின் கொள்கை!.. எதையாவது சாப்பிட்டா உடம்புக்கு கெடுதல் என்று தெரிய வந்தா……. அந்தப் பொருளை நாங்க எடுத்துப் போய் நல்லாப் பரிசோதனை செய்து…அது உடம்புக்கு கெடுதியில்லை என்று சான்று தந்தால் தான் அதை வியாபாரிகள் விற்பனை செய்ய முடியும்!…..” என்று விபரமாக அப்பா சொன்னார்.

“ அது தான் சில கூல் டிரிங்ஸை எல்லாம் கூட நீங்க தடை செய்திட்டீங்களா அப்பா!….”

“ ஆமாண்டா!…கண்ணு…எதையாவது சாப்பிட்டா மனிதனுக்கு ஆரோக்கிய குறைவு வரும் என்று தெரிந்தா… நாங்க அந்தப் பொருள்களை கைப் பற்றி எங்க ஆய்வு கூடத்தில் பல பரிசோதனைகள் செய்வோம்!…ஆரோக்கியத்திற்கு அதனால் கேடு இல்லை என்று தெரிந்தால் மட்டும் தான்… நாங்க அதை வெளி மார்க்கெட்டில் விற்பதற்கு சான்று வழங்குவோம்!…அதன் பிறகு தான் அந்தப் பொருள்கள் விற்பனைக்கு மார்க்கெட்டிற்கே வரும்!….”

“அப்படியா அப்பா!….நல்ல விஷயம் தான்!…..எனக்கு ஒரு சந்தேகம்…..எங்க ஸ்கூலுக்கு பக்கத்தில் ஒரு டாஸ்மாக் கடையிருக்கு!……அதில் கலர் கலரா நிறைய டிரிங்ஸ் விக்கிறாங்க!…..அதை வாங்கி குடிச்சிட்டு பலர் ரோட்டிலில் மயங்கி விழுந்து கிடங்கிறாங்க!….சிலர் கண்டபடி பைத்தியம் மாதிரி உளறிக் கொண்டே போறாங்க!.. ஏப்பா!…அந்த டிரிங்ஸ் எல்லாம் குடிச்சா உடம்புக்கு கெடுதல் இல்லே!….ஆரோக்கியமானது என்று நீங்கள்ஆய்வு கூடங்களில் டெஸ்ட் செய்து சான்று வழங்கிய பிறகு தான் விற்பனைக்கு வருதா அப்பா!…..”

பாவம் அந்த அதிகாரி! இந்தக் காலத்து குழந்தைகளுக்கே வயசுக்கு மீறிய புத்தி! என்ன பதில் சொல்வதென்று புரியாமல் சத்திய சீலன் தவித்தார்!

– பாக்யா மார்ச்10 2017

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *