வன்மம்




லில்லி எனும் தாயும் சைரஸ் எனும் மகனும் அந்த சமூகத்தில் பல இன்னல்களைத் தாண்டி வாழ்ந்து வந்த ஒரு அழகான சிறிய குடும்பம். முதலில் அவர்கள் குடும்பம் பெரிய குடும்பம் தான். சைரஸின் அப்பாவின் பெயர் மணி. இரை தேடச் சென்ற போது போதையில் ஒருவன் அதிவேகமாக ஓட்டி வந்த காரில் மாட்டி இறந்து போனார்.
அவனது சகோதரர்கள் சகோதரிகள் ஆறு பேர். பெயர் சூட்டப்படும் முன்னரே அந்த சமூகத்தால் அரைகுறை பாசத்துடனும் சிலர் முழுமையான பாசத்துடனும் மற்றும் சிலர் வியாபார ரீதியிலும் கைப்பற்றப்பட்டு வேறு இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டனர். கவலையில் எஞ்சிய தனது ஒரு மகனை நினைத்துப் பெருமிதம் கொண்டாள் தாய் லில்லி.
தனது கணவன் இறந்த நாள் முதலே அந்த இடத்தில் யாராவது வேகமாக வண்டியை ஓட்டிவந்தால் அவர்களைச் சிறிது தூரம் துரத்திக் கொண்டே செல்வதும், அவளது மொழியில் திட்டுவதும் வழக்கம். அதனாலேயே அந்த சமூகத்தில் வசித்த இருகால் ஜீவிகள் லில்லியைப் பைத்தியக்காரி என்று திட்டுவதும் உண்டு. ஆனால் அந்த இடத்தில் வாயில் பாதி குடலும் மல துவாரத்தில் பாதி குடலும் வெளிவந்தவாறு வயிறு நசுங்கி இறந்து கிடந்த மணியின் நினைவை அந்த சமூகம் அறவே மறந்து போனது.
யாராவது விநோதமான ஆளைக்கண்டு கத்தினாலோ அவர்களைச் சீண்டினாலோ, லில்லி அந்த விநோத இரண்டு கால் விலங்கின சமூகத்தால் கடுமையாகத் தாக்கப்படுவாள்.
தனது தாயின் இன்னல்களை தினந்தோறும் கண்டு பொங்கிக் கொண்டே வளர்ந்து வந்தான் அந்த கம்பீரமான மகன் சைரஸ். அவள் தாயும் வழக்கமாக அவளுக்கு உணவு வழங்கும் சில நல்ல இரண்டு கால் விலங்குகளின் வீட்டிற்கு சென்று தானும் உண்டு தனது மகன் சைரஸுக்கும் பாலூட்டி வளர்த்து வந்தாள்.
சில வீடுகளில் பெரிய இரண்டு கால் விலங்குகள் உணவிட அவற்றின் குழந்தை இரண்டு கால் விலங்குகள் இவர்களைச் சீண்டினாலும், அல்லது கல்லை எடுத்து எறிந்தாலும் எப்படியோ ஒரு வழியாக அவர்களைச் சமாளித்து உணவை உண்டுவிட்டு பொறுமையாக கிளம்பிவிடுவாள் லில்லி.
இப்படியாக காலங்கள் நகர நகர சற்று பெரியவனான் சைரஸ். இப்போது இந்த இளம் வயதிலே மிடுக்குடன் தன் தாயைத் தாக்க முற்பட்டவரை விரட்டியடிக்கவும், கோபம் அதிகமானால் கடிக்கவும் கூட துணிந்தான் சைரஸ். லில்லியைச் சீண்டுபவர்கள் கூட அவளருகில் மகன் சைரஸைக் கண்டால் அமைதியாகச் செல்வதுண்டு.
இப்படியாக ஒருநாள் அந்த கைலாச சமூத்திரம் கிராமத்தின் நடுவே அமைந்த மாரியம்மன் கோவிலில் முளைப்பாரித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த கிராமத்தில் பெரும்பாலும் ஒரு சமூகத்தைச் சேர்ந்த இருகால் ஜீவிகளே வசித்து வந்தனர். இருப்பினும் பெருந்தன்மையாக முடி திருத்துபவரையும், இறந்தவரின் உடலை எரியூட்டுபவரையும் மற்றும் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்பவரின் குடும்பத்தையும் சுயநலனுக்காக தன்னகத்தே ஏற்றுக் கொண்ட பெருந்தன்மையான சமூகம்.
செல்வத்தின் மகன் கோட்டையா தனது தந்தையிடம் சத்தம் எழுப்பும் துப்பாக்கி வாங்கித்தர வேண்டி அழுது அடம்பிடித்துக் கொண்டிருந்தான். அதெல்லாம் வேண்டாம் என்று கூறிய தன் தாய் முத்துமாரி மீது சிறு கல்லை எடுத்து எறிந்தான் கோட்டையா.
கோபத்தில் முத்துமாரி கோட்டையா முதுகில் இரண்டு அடிவைக்க, உடனே செல்வம் “அட விடுடி என்றாவது ஒருநாள் கொண்டாட்டம் வருது, போகுது பயபுள்ள” என்று கூறி நூறு ரூபாய் கொடுத்து அந்த துப்பாக்கியை வாங்கிக் கொடுத்து தனது மகனின் அரைகுறை அழுகைக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.
அடுத்தநாள் முத்துமாரி தனது வீட்டில் மதியம் உணவிற்குப் பின் எஞ்சிய எச்சில் உணவை வீட்டின் வெளியே லில்லிக்கும் சைரஸிர்க்கும் வைக்க, அங்கு விரைந்து வந்தான் சைரஸ். அதைக் கண்ட கோட்டையா விரைந்து சென்று தன் துப்பாக்கியால் அவனை நோக்கி ஒலி எழுப்ப, வெகுண்டெழுந்த சைரஸ் கோட்டையாவை அவன் வீட்டின் வாசலில் வைத்தே உருட்டி எடுத்தான்.
வெளியே அலறிய தன் மகன் கோட்டையாவின் சத்தம் கேட்டு வெளியே வந்தான் செல்வம். அவனைக் கண்டதும் சுதாரித்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு எட்ட ஓடினான் சைரஸ். சைரஸிசிற்கு தன் மொழி புரியாது என்பதை அறிந்தாலும் கூட ஊரில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தைகளையும் அவன்மீது பிரயோகித்தான் செல்வம். அதுமட்டுமன்றி சைரஸை தன் குடும்ப உறவாக வளர்த்து வந்த பாண்டியம்மாள் குடும்பத்தையும் சேர்த்தே வசை பாடினான்.
அந்த சமூகத்தில் பல அடிகளை வாங்கிக் கொண்டும் அவர்களைச் சகித்தும் வாழ்ந்து வந்த லில்லி தனது இயற்கை ஆயுட்காலம் முடியும் முன்னரே உடல் சோர்வில் இறந்து போனாள். பாண்டியம்மாளின் குடும்பம் கொத்தடல் கண்மாயின் கரையில் புளிய மரத்தடியில் அமைந்த ஒரு அழகான ஓட்டு வீட்டில் வசித்து வந்தார்கள். அவரது குடும்பத்தில் சைரஸையும் சேர்த்து ஒரு மகள் ஒரு மகன் உட்பட மொத்தம் நாலு பேர்.
எறும்பிற்கும் தீங்கு விளைவிக்காத, கோபம் என்ற வார்த்தைக்குப் பொருள் விளங்காத பாண்டியம்மாளின் கணவர் முருகன் அந்த பெருந்தன்மையான சமூகத்தில் வாழ அருகதை அற்றவர் என்பதாலோ என்னவோ, தனது உடல்நலக் குறைவால் விரைவில் இறைவனடி சேர்ந்துவிட்டார். அவர் இறந்து கிட்டத்தட்ட ஒருவருடம் ஆனதையே மறக்க வைத்தவன் நம் சைரஸ். அந்த குடும்பத்தின் பாதுகாவலன் அவன் தான்.
அவர்களது வீட்டின் அருகில் வசித்து வந்த அதே பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த மற்றொரு குடும்பம் தென்னரசின் குடும்பம். அவன் இரவில் தன் காவலன் ரேம்போவுடன் முயல் வேட்டைக்குச் செல்வது வழக்கம். அந்த நேரத்தில் இவர்கள் வீட்டின் அருகில் வந்தால் பயங்கரமாக சத்தமிடுவான் சைரஸ். அதனாலேயே பெரும் கோபத்துடன் இருந்து வந்தான் தென்னரசு.
ஒருநாள் தென்னரசின் மகள்வழிப் பேத்தி அவ்வழியே செல்லும் போது சைரஸ் கயற்றில் கட்டிப் போடப்பட்டுள்ளான் என்பதை அறிந்து அவனிடம் ஏப்பு காட்ட, கயறு கட்டியிருந்த கம்போடு சேர்த்து கயறை அவிழ்த்துக் கொண்டு அந்த சிறுமி மீது பாய, எப்போடா நேரம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த தென்னரசின் குடும்பமும் அவன் தம்பி தமிழரசின் குடும்பமும் பாண்டியம்மாள் வீட்டின் முன் படையெடுத்தது.
இன்று அந்த நாயைக் கொன்றே தீர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் இருவரும். மேலும் முன்பே சைரஸ் மீது கோபத்தில் இருந்த செல்வமும் அவர்களுடன் கூடிக் கொண்டான். அம்மூவரின் வார்த்தைகள் பாண்டியம்மாவின் மீதும் அவள் குடும்பத்தின் மீதும் வரம்பை மீறிச் சென்று கொண்டிருந்தது.
“ஐயோ இன்று எதுவும் செய்ய வேண்டாம், தயவு செய்து இன்று ஒருநாள் விட்டு விடுங்கள்” என்று அம்மூவரின் கொடிய வார்த்தகளையும் பொருட்படுத்தாமல் அவர்களிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள் பாண்டியம்மாள். பாண்டியம்மாளின் மகனும் மகளும் தன் தாயின் மீது பாய்ந்த வன்சொற்களாலும், சைரஸின் மீது கொண்ட பேரன்பினாலும் அழுது துடித்துக் கொண்டிந்தனர்.
அதெல்லாம் முடியாது என்று பல்லைக் கடித்துக் கொண்டு முன்னேறி வந்த தமிழரசன் சைரஸ் கட்டப்பட்டிருந்த அந்த கம்பை பிடுங்கி அவன் உச்சந்தலையில் ஓங்கி ஒரு அடியடிக்க, அந்த கணமே சரிந்து விழுந்தான் சைரஸ். பாண்டியம்மாளின் குடும்பம் ஓவென ஒப்பாரியிட்டனர், ஆனால் முருகன் மட்டும் தனது நினைவுநாள் அன்று அணிவிக்கப்பட்ட மாலையுடன் புகைப் படத்தில் சிரித்துக் கொண்டிருந்தார்.
இறந்த சைரஸின் பின்னங்கால் இரண்டையும் ஒருசேரப் பிடித்து தென்னரசு சாலையை நோக்கி அவனை இழுத்துச் செல்ல, பின்னே வந்த செல்வம் இரத்தம் சொட்டச் சொட்ட மேலும் மேலும் அவன் வாயில் கம்பால் தாக்கி தன் வன்மத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தான். ஒருவழியாக அவனது உடலைத் தூக்கி சாலைக்கு அப்பால் கழிவு நீர் பகுதியில் எறிந்தனர்.
அந்த கிராமத்தில் அமைதிக்கு பேர் போன அன்புக் கணவன் மறுபிறவியாய் கம்பீரமான சைரஸின் உருவெடுத்தும் அதே நாளில் மீண்டும் தன் குடும்பத்தைப் பிரிந்து வீழ்ந்து போனதை எண்ணி மனம் உடைந்தார் பாண்டியம்மாள். தனது கணவனின் வழியில் அமைதியை மட்டுமே பின் பற்றிய பாண்டியம்மாள் அதையே தன் குழந்தைகளுக்கும் கற்பித்தார். ஆனால் ஏனோ சைரஸை பிரிந்தாலும் இந்தமுறை தளர்வடையாமல் மீண்டும் ஒரு அழகிய நான்குகால் சிறுவனைத் தத்தெடுத்து சைரஸ் என்று பெயரிட்டு வாழ்க்கையைத் தொடங்கினார்.
மறுநாள் தனக்கு தீங்கு விளைவித்த சமூகத்தை, இறந்த பின்னும் தனது உடலின் துர்நாற்றத்தால் தண்டித்துக் கொண்டிருந்தான் சைரஸ். அதை அகற்ற கழிவுகளை அகற்றும் முனுசாமியை அழைத்து வந்தனர் ஊரார். முனுசாமி அந்த கழிவுநீரில் இறங்கி ஒருவழியாக சைரஸின் உடலை தூக்கி சாலையின் ஒதுக்குப்புறம் எறிய, அவன் தலையின் ரத்தத்தோடு சேர்ந்து தெரித்த கழிவு அவ்வழியே வந்த தமிழரசின் கையில் படிந்தது.
“டேய் நாயே! பார்த்து வேலை பார்க்க மாட்ட, வந்தேன் பிஞ்சு போயிடும் பிஞ்சு” என்று முனுசாமியை கடிந்து கொண்டு அவ்விடத்தைக் கடந்து சென்றான் தமிழரசு.
முனுசாமி முந்தைய நாள் மழையில் அருகில் தேங்கியிருந்த நீர் குட்டையில் சைரஸின் உடலைக் கழுவி, அவனை அந்த சமூகத்தை விட்டு சற்று தூரம் எடுத்துக் கொண்டு போய் நிம்மதியாகவும் நிரந்தரமாகவும் உறங்க வைத்தார்.
பின் குறிப்பு:
விலங்குகளுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு புகாரளிக்க தொலைபேசி எண் : 022 4072 7382
மின்னஞ்சல் : Info@petaindia.org.
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு புகாரளிக்க : 181 மற்றும்
தேசிய மகளிர் உதவி மைய எண்: 7217735372 (வாட்ஸ்அப்பில் கூட புகார் அளிக்கலாம்).