கதையாசிரியர்:
தின/வார இதழ்: இன்ஸான்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: June 6, 2025
பார்வையிட்டோர்: 1,655 
 
 

(1967ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘ஆப்கான் வீதி’ சோபை இழந்து காட்சியளித்தது. காரணம், அந்த வீதியில் வதியும் நூற்றுக்கணக்கான ஏழைக் குடும்பத்தின் நடுவே இருந்த இரண்டு மூன்று பெருந்தலைகளும் ‘அல் – மனார்’ கல்லூரியில் நடைபெற்றுக் கொண்டிருந்த மீலாத் விழாவுக்குச் சென்றிருந்தமையே.

செதுக்கிவிட்ட சிற்பமெனக் காட்சியளிக்கும் இரண்டொரு அழகு வடிவங்களும், பார்த்தாலே குமட்டிக் கொண்டுவரும் ‘பல அசிங்கங்களும்’ பெண்கள் என்ற ஓரே காரணத்தால் (அதிலும் குமரிப்பெண்கள்) அந்த வீதியில் இருந்த ஓட்டு, ஓலை வீடுகளுக்குள் அடைபட்டுக் கிடந்தன சிலதின் கையில் ‘பேசும் படங்களும்’ சிலதின் கையில் ‘குமுதங்களும்’ வேறு சிலதின் கையில் ‘ராதா’ ‘ராணி’ களும் விளையாடிக் கொண்டிருந்தன. இரவின் குளிர்மையிலே சில கதகதப்பைத் தேடித் தவித்துக் கொண்டும் இருந்தன. 

ஊரே உறங்கிய வேளையில் அந்த வீதி மட்டும் உறங்காதா என்ன? தொலைவில் பிரபல பேச்சாளர் பேதுருக் குட்டி (அவர் என்ன ஜாதி என்று கேட்டுவிடாதீர்கள்) நபிகள் நாயகத்தின் சிறப்பை பல கோணங்களில் படம் பிடித்துக் கொண்டிருந்தார். பேச்சில் அடிக்கடி அரசியல் வாடை வீசியது; தற்பெருமையும் ஆமைபோல் தலை நீட்டிக்கொண்டிருந்தது. 

இவைகளைப்பற்றிக் கொஞ்சங் கூடக் கவலைப்படாமல் எட்டு மணிக்குளிரில் மட்டை வேலி அருகில் என்னவோ பண்ணிக்கொண்டிருந்த இரண்டு உருவங்கள் ஏக்கப் பெரு முச்சை வேறு கக்கிக் கொண்டிருந்தன. 

வட்டி வாங்குவதையே ‘மெயின் பிசுனஸா’கக் கொண்ட சில மரர்க்கப் புலிகளும்’, சின்னச் சின்னக் குட்டிகளைக் கண்டாலும் அசட்டுச் சிரிப்பு சிரிக்கும் சிவ கிழங்களும், போலிப் போர்வைக்குள் புகுந்துகொண்டு பசுவேட போடும் சில ‘தாடிக’ளும், ‘காதலிக்க நேரமில்லை’க்குப் போய் விட்டு அப்போதுதான் வந்திருந்த சில ‘ஐந்து பெற்றது’களும், உண்மையான பக்தி வெள்ளம் கண்களிற் பாய முக்காட்டி குள் இரண்டு கண்களை மட்டும் காட்டிக் கொண்டு இறைவனை எண்ணி ஏங்கும் சில கிழங்களும் வேடிக்கை பார்க்க வந்து சில விலா வெடிச் சிரிப்பை உதிர்க்கும் சில இளவட்டங்களும், கண்களைக் கன்னியர் பக்கம் அனுப்பிக் காதல் கதை பேச வந்திருக்கும், சில ‘ஜெமினி’ களும் நிறைந்து வழிந்து அம்மண்டபத்தை மகிழ்ச்சி வெள்ளத்தில் திணற அடித்துக் கொண்டிருந்தனர்!

பொதுவாக ஊரே திரண்டு ‘அல் – மனா’ரில் கூடி இருந்தது. அதனால் ஊரினுள்ளே மயான அமைதி குடிகொண்டிருந்தது. 

உண்மையிலேயே கூட்டங்களில் கூட்டங்களில் கலந்துகொள்ள விரும்பாத சில ‘குமருகுட்டி களும், நடமாட இயலாத சில ‘நாரகதாசர்’ களும் பல பல தேவைகளுக்காகத் தாயாருடன் செல்ல முடியாமல் வீட்டிலேயே தங்கிவிட்ட சில ‘தறுதலை’களும் இந்தப் பெரிய ஊரில் கலகலப்பை ஏற்படுத்த முடியுமா என்ன? 

ராஸிலா கட்டிலின் மேல் குப்புறப்படுத்தவாறு கையில் இருந்த கடிதத்தைப் பல பல கோணங்களில் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தாள், கடிதமா அது காதல்தேன். நாக்கினால் நக்கினால் கூட இனிக்கும்! 

தமிழ்ச் சினிமாப் படங்கள் நம் நாட்டுக்குச் செய்த மகத்தான சேவை என்ன தெரியுமா? காதலிக்கவும், காதலிக்குக் கவர்ச்சிகரமான நடையில் கடிதம் எழுதவும், கடும் எதிர்ப்பைக் கூடத் துச்சமென மதிக்கவும், கைகூடினால் வாழவும் கைகூடாவிட்டால் ‘வேலிதாண்டி’ ஓடவும் தான். 

‘அன்பே! ஆருயிரே!! இன்பமே!’ என அகர வரிசையில் எழுதப்பட்டிருந்த அந்தக் காதல் கடிதத்தில் பல அழித்தல் திருத்தல்களும் இடம் பெற்றிருந்தன. அனார் – சலீம், லைலா – மஜ்னு, உயிரை இழக்கவும் தயார். உலகிலே நீதான் அழகி போன்ற வார்த்தைகள் தாராளமாக ‘பைலட்’ பேனா வழியாகப் பார்க்கர் மசியினால் துவைந்திருந்தன. 

உன் அன்பன் ஜலீல் என்று கையெழுத்திடப்பட்டிருந்த அந்தக் கடிதத்தையே உறிஞ்சி உறிஞ்சி ரசித்துக் கொண்டிருந்தாள் ராஸிலா. அவள் அண்மையிலுள்ள ‘லேடீஸ் கொன்வென்ட்’ டில் படித்துக் கொண்டிருக்கிறாள். வெள்ளைக் கட்டைக் கவுனில் அவளைக் கண்டு வெறிகொண்ட ஜலீல் அவளுக்கு காதல் கடிதங்கள் கனகச்சிதமாக வரைய ஆரம்பித்துவிட்டான். 

புழக்கடைப்பக்கம் ‘தடார் படார்’ என்ற சத்தங் கேட்டு திடுக்கிட்ட ராஸிலா சாரியைச் சரி செய்து கொண்டு எழுந்தாள். மெதுவாய்ப் பின்வராந்தாவுக்கு வந்தாள். வெளிப்பக்கம் ஒரே ‘கும்’ மிருட்டாகவிருந்தது. கண்களை அகல விரித்து நோட்டமிட்டாள் அவள். இருளைக் கண்டு பழகிய அவள் கண்களுக்குக் கரிய இரு உருவங்கள் மங்கலாகக் காட்சியளித்தன. 

அவளும் அவளது அக்கா ஜுனைதாவுந்தானே வீட்டில் இருந்தார்கள். ‘லைட்’ டைப் போடுவோமா? என யோசித்தாள் ஒரு கணம். மறு கணம் புன்னகையொன்றை உதிர்த்து விட்டு ‘தாத்தா’ என்று உரத்து – ஆனால் கனிவுடன் அக்காளை அழைத்தாள். பாம்பின் காலை பாம்பறியாதா? 

வேலியோரத்தில் இருளோடு இருளாகப் புதைந்து போயிருந்த இரண்டு உருவங்களும் ‘சூள்’ கொட்டின. நான் போகட்டா என்ற ஒரு கட்டைக்குரல் “ஸ் கொஞ்சம் பொறுங்க, வர்றேன்” என்று ஒரு கவர்ச்சிக் குரல் அதைத் தடுத்து, “ஏன் ராஸிலா'” என்று கேட்டவாறு ராஸிலாவின் அருகில் வந்தது கொஞ்சங்கூட அச்சமோ நாணமோ இன்றி. 

ராஸிலாவுக்குத் தாங்கமுடியாத ஆத்திரம் ‘என்ன இவள் காதலனுடன் கொஞ்சிக் கொண்டிருக்கிறாள்’, என்று எண்ணியவாறு ‘வாப்பா வரட்டும் பார்த்துக் கொள்கிறேன்’

‘ம்.. யாரது’ என்று மட்டைவேலியின் அருகில் நின்ற மற்ற உருவத்தை நோக்கிக கையை நீட்டினாள். 

ஜுனைதாவுக்கு ஒரு நம்பிக்கை அவளது தந்தை எவ்வளவுக்கெவ்வளவு கொடியவரோ அவ்வளவுக்கவ்வளவு தங்கை நல்லவள். எப்படியும் அவளைச் சமாளித்து விடலாம். மேலும் தங்கைதான் ‘கொன்வென்ட்’ டில் படிக்கின்றவளாச்சே. அவளுக்கும் காதல் நோய் தொற்றாமலா இருக்கும் என்ற துணிவு வேறு. 

திடீரென்று கொல்லைப் பக்கத்து மின் விளக்குகள் எரிந்தன. திகைத்துப் பேபறைந்தது போலான ஜுனைதாவும் ராஸிலாவும் மட்டை வேலியைத்தான் நோக்கினர், 

கொள்ளைக் கூட்டத் தலைவன் போல் கறுப்பு உடை அணிந்திருந்த ஜுனைதாவின் காதலன் உருவம் கண் இமைக்கும் நேரத்திற்குள் தப்பியோடியது. 

”என்ன செய்றீங்க இங்கே!” 

எச்சிலை விழுங்கியவாறு திடுக்கிட்டுத் திரும்பினர் இரு வரும். எதிரே பென்னம் பெரிய கரிய தொந்தியைத் தடவியபடி கர்ண கடூரமாய்க் காட்சியளித்துக் கொண்டிருந்தார் அவர்களது தந்தை நிஜாமுதீன். “வீட்டைத் தனியே போட்டு விட்டு பின்னுக்கு வந்து என்ன செய்றீங்க. எவனாவது எதையாவது அடிச்சிக்கிட்டுப் போனா?” என்று உறுமிவிட்டு “ஜுனைதா என்னட தொப்பியைத்தா” என்று மறந்து விட்டுப் போன தொப்பியைக் கேட்டு வாங்கிக் கொண்டு ஒரு கிளாஸ் தண்ணீரும் குடித்தார். 

அவர் தேநீர் குடிப்பதேயில்லை. ஒவ்வொரு காசாகச் சேர்த்தல்லவா வட்டிக்குக் கொடுத்துப் பிள்ளைகளையும் படிக்க வைத்து பெரிய கல்வீடாகவும் கட்டித் தள்ளிவிட்டார். ”வீடு… கவனம்” என்று எச்சரித்து விட்டு மீலாத் விழா நடைபெறும் ‘அல் மனாரு’க்கே சென்றார். 

“சனியன் புடிச்ச வாப்பா. இந்த நேரத்தில் வந்து குதிச்சாரே! நல்லவேளை அது தப்பி ஓடிச்சிது” என்று காதலனின் சாகசத்தை வாய்விட்டே பாராட்டிய ஜூனைதாவை முறைத்தபடி, “அது என்றால்… எது” என்று அதட்டினாள் தங்கை ஆனால் பாவம் பதில்தான் கிடைக்கவில்லை… 

கும்மிருட்டில் “ஸ் ஸ்” என்ற சிக்னல் ஒலி கேட்கவே மீண்டும் கொல்லைப்பக்கம் கழுத்தை நீட்டித் துலாவினாள் ஜுனைதா. அவள் மனமோ ‘திக்.. திக்’ என்று அடித்துக் கொள்ளத்தான் செய்தது. 

ஹோலில் ‘ராதாவுடன்’ இருந்தாள் ராஸிலா. இவள் கவனம் முழுக்க அச்சஞ்சிகையிலே இருந்தது. வேலியருகே சென்ற ஜூனைதா ‘ஏன் வந்தீங்க எனக்குப் பயமாயிருக்கு..’ எனக் கூறியவாறு அவனது மார்பில் சாய்ந்தாள். மார்பில் இருந்துவந்த ‘திக்… திக்’ என்ற ஒலியைக் கண்டு உண்மையிலேயே அவளுக்குச் சிரிப்புத்தான் வந்தது! 

‘என்ன ஆண்பிள்ளை இவர்…இப்படிப் பயப்படுகிறாரே’ என்று எண்ணினாள். 

ஆனால் பாவம் பிச்சைக்காரன் அவன். உழைப்புமில்லை ஒழுங்கான உணவுமில்லை. ஒரு மாதிரி அப்படி இப்படி என்று வாழ்க்கையைக் கொண்டு செல்லும் குடும்பம் அவனுடையது. 

‘டே யாரடா அது?’ 

பயங்கர உறுமலுடன் சேர்ந்து கொல்லைப் புறத்து விளக்கும் ‘பளிச்’ சென்று பிரகாசித்தது. திரும்பிய ஜுனைதாவுக்கு முகமெல்லாம் திகில் முட்டி வியர்த்து வடிந்தது, ராஸிலா கைகளைப் பிசைந்து கொண்டு நிற்க, பயங்கரமாக அவர்களை நோக்கி நிஜாமுதீன வந்து கொண்டிருந்தார். ஜலீலுக்கு அடிவயிற்றில் உள்ள குடல் அறுந்து விழுவது போன்ற உணர்ச்சி ஒருகணம் தான் மறுகணம். 

அந்தப் பென்னம் பெரிய கிடுகுவேலியை எப்படித்தான் தாண்டினானோ? முழங்காலில் ஒரு மட்டை கடுமையான சீராப்பை உண்டாக்க வெளியே குதித்தான் ஆனால் என்ன தூரதிஷ்டம்? நிஜாமுதீன் வீட்டுக் கார் டிரைவர் சித்தீக்கின் முரட்டுக் கரத்துக்குள்ளா அவன் அடைபடவேண்டும்? சித்தீக்கின் ஆக்ரோசமான குத்தால் நிலை குலைந்த ஜலீல் சோர்ந்தான் 

“கொண்டா அந்தக் கோழையை” என்று உறுமியபடி கொல்லைப்புற வேலியை அடைந்தார் நிஜாமுதீன். ஜுனைதாவுச்கு இதயமே நின்றுவிடும் போவிருந்தது. மறுகணம் கையைப் பிசைந்து கொண்டிருந்த ராஸிலாவைக் காட்டிக் கொண்டு “ராஸிலா ராஸிலா…இப்ப என்னடி செய்யிறது? – நீ… நீ…” அவளது நாக்கு பின்னிக்கொண்டது. “தாத்தா ஏன் பயந்து சாகிறாய்? – என்றாவது தெரியத் தானே போகுது!” என்ற அவளது ஆறுதலையும் கேளாமல் விம்மத் தொடங்கினாள் 

“ஏய், யாரது சுத்துறது திருட்டுக்கழுதைகள் ரெண்டும் போ உள்ளே – ம்…போ” என்று கர்ஜித்தார் வாப்பா. எல்லாம் கச்சிதமாக முடிந்துவிட்டது, காதல் மகா காவியத்தின் கதாநாயகன் ஜலீல் தென்னைமரத்தில் கட்டப்பட்டான். பிறகென்ன, கேட்கவா வேண்டும்? புளியம் பிரம்பினால் நன்றாக விளாசப்பட்டான். சித்தீக்கும் இரண்டு கன்னத்தில் போட்டு வைத்தான், “உம்மா வாப்பா என்ட வாப்பா மாட்டை அடிக்கிறமாதிரி அடிக்கிறீங்க” என்று கதறிய வாறு ஜலீலின் மேல் சாய்ந்தாள் ஜுனைதா. ராஸிலாவோ? ஜலீலின் முகத்தைக் கண்டதுதான் தாமதம் திகைத்து நின்றாள். 

“யார் யார் இது? ஐலீல் என் காதலன் தானே. இவர் இங்கு என் அக்காவுடன்” மயக்க உணர்ச்சி மீறிடவே நிலை தடுமாறிச் சாய்ந்தாள் பக்கத்திலிருந்த மரத்தின்மேல். “ஜூனைதா விலகு சீ…சனியன் விலகு- விலகடி….” என்று அவளை இழுத்து எழுந்தவாறு சோர்ந்து உயிரற்றுத் தொய்ந்து கிடக்கும் அந்தப் பஞ்சை உருவத்தின் மீது தாக்கினார். இடையில் வேகமாகப் புகுந்த ஜுனைதா ‘உம்மா’ உம்மா என்று அலறினாள். 

அவளது நெற்றியை நன்றாகப் பதம் பார்த்துவிட்டது அப் புளியம்பிரம்பு. 

நிஜாமுதீனுக்கு இதயத்தின் ஒரு மூலையில் வலித்தது. கையில் இருந்த தடியைத் தூக்கி எறிந்தார். வார்த்தையில் சற்று கனிவு. 

“புள்ள இங்கே பார். ஒன் நன்மைக்குத்தான் சொல்றேன். இந்த வஞ்சகப் பயலை நம்பாதே! நீ ரொம்ப லேசா இவன்ட வலையில் மாட்டிக்கிட்ட. இவனைப்பத்தி உனக்கு எவ்வளவு தூரம் தெரியும்?… – இந்தக் காலத்துக் கழிசடைப் பயல்களை நம்பி எத்தனை கன்னிகள் தங்கள் கற்பைக் கூட இழந்திருக்காங்க. இந்த அயோக்கியப் பயல்ட வலையிலே விழுந்தது நீ மட்டுமா?…” 

கோபாவேசமாக இடைமறித்தாள் ஜூனைதா “வாப்பா வீணாக அவர் மேல் இல்லாத பழியையெல்லாம் சுமத்தாதீங்க… அவர் ரொம்ப நேர்மையானவர்” 

“பயித்தியக்காரப்புள்ள, இவன் நல்லா ஏமாத்திட்டான். காமவெறியைத் தணிக்கிறத்துக்குத்தான் உன்னை… சீச்சி சொல்லலே நா கூசுது. நீ பத்தோட பதினொண்டு புள்ளே. எத்தனை பெண்களை ஏய்த்திருக்கான் இவன்…” 

“பொய் பொய். சுத்த அபாண்டம்” என்று அலறினாள் ஜுனைதா. ஜலீல் எச்சில்களை வேண்டிய அளவு விழுங்கிக் கொண்டிருந்தான், ராஸிலா சற்று தெம்படைத்தாள். 

“புள்ளே நல்லா யோசிச்சுப்பார். நான் கொடியவன்தான். யாருக்கும் ஈயாத கஞ்சன் தான். ஆனா இதெல்லாம் எதுக்கு? நீங்க எதிர்காலத்திலே கண்ணீர் சிந்தாமவாலும்னு தான். அப்படிச் சேர்த்த சொத்தைக் கூட அடிச்சிக்கிட்டு போனாக்கூடக் கவலையில்லை உங்க கற்பையல்ல…” 

“நல்லாக் கதை விடுறீங்களே வாப்பா… இவரைக் காதலிக் காதேன்னு சொல்றதுக்குப் பதிலாக இப்படியெல்லாம் அபாண்டம் சுமத்திறீங்களே” 

மீண்டும் சிரித்தார் நிஜாமுதீன் “பயித்தியக்காரப் புள்ளே நான் சொன்னதெல்லாம் பொய்யிண்டா சொல்றே, நிரூபிக்கிறதுக்கு எத்தனையோ ஆதாரங்கள் இருக்கு என்னட்ட. அந்த அடுத்த வீட்டு டீச்சர் காமிலாவுக்கு இவன் எழுதின கடிதம், எதிர்வீட்டு சுபைதாவுடன் இவன் நடத்திய நாடகம், சின்னக்கடைப் பத்மினியுடன் இவன் புரிந்த திருவிளையாடல் களெல்லாம் எனக்குத் தெரியும், ஜுனைதா தெரியும் பார் இவனைப் பார். இப்படியெல்லாப இவன் செய்யா விட்டால் இந்நேரம் காட்டுக்கூச்சல் போட்டுக் கயிற்றையும் அறுத்திருப்பான்'” என்று அவனை ஏளனத்துடன் பார்த்தார் நிஜாமுதீன். 

ஜலீல் காட்டுக் கூச்சலில் கத்தினான். 

“பொய். சுத்த அபாண்டம்”

“பொறப்பா, கூச்சல் போடுறதுக்குக் கூட உனக்குச் சொல்லித்தரனும் போல இருக்கே பொறு. இதோ நிரூபிச்சுக் காட்றேன். ராஸிலா ., இங்கே வா” ராஸிலாவை அழைத்தார். ஜுனைதாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. ராஸிலா தந்தையின் அருகில் வந்து குனிந்த படி நின்றாள். “டேய் தம்பி ஜலீல் இவட முகத்தைப் பார். இவ யார்னு தெரியுதா அல்லது மறந்துட்டியா? சொல்லு தம்பி சொல்லு’” 

ஜலீலின் முகத்தில் பேய் அறைந்து விட்டுச் சென்றது.

விம்மிக் குளறியபடியே வீட்டுக்குள் ஓடினாள் ராஸீலா. ஜுனைதாவுக்கோ தலைவெடித்து விடும் போலிருந்து. 

ஒரு புன்சிரிப்புடன் அவனது கட்டுக்களை அவிழ்த்துவிட்ட நிஜாமுதீன், ‘ஓடித்தப்பு. இனி இந்தப் பக்கம வந்தியோ உன் காலை ஒரே வெட்டா வெட்டிப் போடுவேன்” என்று எச்சரிப்பதற்குள் ஜலீல் பதறியபடி அவ்விடத்தை விட்டு அகன்றான் ஜுனைதாவைப் பரிதாபமாக நோக்கியபடி. ஜுனைதாவின் முகம் ஏன் இவ்வளவு வெறுப்பைக் கக்க வேண்டும்? அசங்கியப் பன்றியைப் போலல்லவா அவனைப் பார்த்தாள்! 

“இவர் எவளையாவது காதலிக்கட்டும், அனுபவிக்கட்டும், வஞ்சிக்கட்டும் கவலையில்லை.ஆனால் என் உயிருக்குயிரான தங்கையையும் என்னையுமல்லவா ஒரே நேரத்தில் ஏமாற்றி விட்டார்! எவ்வளவு கீழ்த்தரமான கெட்டிக்காரன்!” என்று எண்ணியவாறு அவ்விடத்திலேயே சிலையாய் நின்றாள். 

“புள்ள இவன் வண்டு மட்டுமல்ல. ஒரு கோழையுந் தான். கழுதைப்புலி. இந்தச் சின்ன எதிர்ப்பைக் கண்டு இப்படி ஓடுறானே உன்னை எப்படித்தான் காப்பாற்று வானோ? அல்லா தான் அறிவான்” என்று கேலி கலந்த பெருமூச்சொன்றையும் விட்டார் நிஜாமுதீன். 

மூன்று மாதங்களின் பின் அவர்களுக்கு கிடைத்த செய்தி அவர்களை அதிர்ச்சியடையச் செய்யவில்லை. 

“ஜலீல் பியூவில் டீச்சர் சலீமாவுடன் தொடர்பாம்!” 

– 10-11-1967, இன்ஸான் முஸ்லீம் வாரப் பத்திரிகை.

– ஒரு வெள்ளி ரூபாய் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: செப்டம்பர் 1982, மன்னார் வாசகர் வட்டம் வெளியீடு, இலங்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *