லேடீஸ் டெய்லர் வீரப்பன்





(2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
தோட்டக் காரியாலயம். தோட்டதுரை தனது மேசையின் முன் அமர்ந்திருக்கிறார். பெரிய கிளாக்கர் அவரின் பின்னால் நெருங்கியவாறு நிற்கிறார். தங்களது குறைபாடுகளுக்கு நிவாரணம் தேடிச் சுமார் ஒரு டசன் தொழிலாளர்கள் அந்தத் திறந்த ஜன்னலுக்கு வெளியே குழுமியிருந்தார்கள்.
சாத்தப்பன்….. கொஞ்சம் நடுத்தரமான மனிதன்.
துரையை அணுகினான்…….
“சலாங்க….. தொரைகளே!”
“சலாம் என்ன வேணும் சாத்தப்பன்? திரும்பவும் ஒன் பழைய கதையோட வந்திருக்கியா……..?’

“ஆமாங்க தொரைகளே! வேற என்னங்க செய்யிறது?… எனக்கு இன்னும் சாப்பாட்டுக்கு மூணு வாயுள்ள சீவன்க……. இருக்குதுங்களே……. ஒரு வளர எளந்தாரிய சும்மா லயத்துல வச்சிக்கிட்டு இருக்கிறது அவ்வளவு நல்லது இல்லீங்க தொரைகளே…?
அதெல்லாம் எனக்குத் தெரியும் சாத்தப்பன்! ஒனக்குத் தான் நான் முன்னுக்கே சொல்லியிருக்கேனே…… இன்னும் ஆறு மாசத்துக்கு எந்த வேலையும் கெடையாதுன்னு…..? இந்தத் தோட்டமே எழுநூறு ஏக்கர் தான்….. ஆனா… ஆயிரத்துக்குமேல தொழிலாளிங்க இருக்காங்க……… எதுவுமே இப்பக்கி செய்ய முடியாது!’
”சேர்! போன மாசம்…… இருவத்தஞ்சி, யங் பேர்சன்ஸ் (வாலிபர்கள்) பேர் பதிஞ்சியிருக்கோம். ஒரு சங்கத்துல பன்னிரண்டு பேரும்……. இன்னொரு சங்கத்துல பதிமூனு பேரும்!”
பெரிய கிளாக்கர் மிக பவ்வியமாக சுப்பிரண்டனிடம் கூறுகிறார்.
“தட் ஸ்த பொயிண்ட்! அது தான் விசயம்! சாத்தப்பன், என்னால் எதுவுமே செய்ய முடியாது! ஒன் மவனுக்கு வேல குடுத்திட்டா போச்சி! இன்னொரு யூனியன்லயிருந்து ஒரு பிசாசு கூட்டமே வரிசையிலே வந்து நிக்கும்!”
“யாருமே வந்து….. அப்படி கேக்க மாட்டாங்க….. தொர…….!”
சாத்தப்பன் கெஞ்சினான்.
“ஓ! நீ அப்படி சொல்லாத…..! ஒங்கட யூனியன் தொரமார்கள் அப்புறம் எனக்கு ‘ஊத்தக்’கடதாசி எழுதுவாங்க…..! ஒன் மவனுக்கு வேற எங்கேயாவது வேல தேடிக்கோ!…..”
“ஐயோ சாமி! அவனுக்கு பிரஜாவுரிமை கெடையாதுங்க…….. அவனுக்கு வெளியில எங்கேயும் வேல தேடிக்க முடியாதுங்க!”
“அவன் இங்க பொறந்தவன் தானே….?”
“ஆமாங்க தொரைகளே!”
உடனே கிளாக்கர் குறுக்கிடுகிறார். “சேர், இந்த மனுசனின் மவன் வீரப்பன்… லயத்துல ஏதோ ஒரு மாதிரி… டெய்லர். வேல செய்யிறான்…….!”
“ஹோ! பொம்பள டெய்லர்! லேடீஸ் டெய்லர்!” குட்டி சோக்குக் காரன்! இல்லீயா…….?” கொஞ்சம் பேச்சை நிறுத்திய துரை மீண்டும் தொடர்கிறார்……
“எனக்கு ஒரு டெய்லரைப் பத்தி ஏதோ ஞாபகத்துக்கு வருது அது வாயிலேயே இருக்குது….. யாருன்னு ஒங்களுக்கு ஞாபகமிருக்குதா கிளாக்?”
துரை கிளாக்கரைப் பார்க்கிறார்.
‘ஆமா சேர்’ சன்னாசி ஒரு கொம்லயின்ட் கொண்டு வந்தான். அவன் மகள் சமுத்திரம் ரவிக்க (ஜெக்கட்) வாங்க போனப்போ…. வீரப்பன் அவளைப் பார்த்து ஒரு மாதிரியா என்னவோ சொல்லிப்புட்டானாம்!’
இதைக் கேட்ட துரை ஆத்திரமடைந்தார்.
“ஆமா! ஆமா! அந்த சங்கதி எனக்கு இப்பத் தெரியும்! சாத்தப்பன்! ஒன் மகன் என்லயத்துல ஒக்காந்து கிட்டு எனக்கு வேல வச்சிக்கிட்டு இருக்கான்…..இந்த மாதிரி பொறுக்கிப் பசங்களால எனக்கு நிம்மதியே கெடையாது. இது ஒரு பெரிய தொல்ல! இதுக்கு அப்புறம் ஒன் மகன் சன்னாசி மகளோட சேட்ட கீட்ட காட்டினா ஒன்னைய தோட்டத்தவுட்டே தள்ளிப்புடுவேன்! நீ இந்த தோட்டத்துல எவ்வளவு காலம் இருந்தாலும் எனக்கு கவலையில்ல. நீ ஓடிப்போ!… ஹும்! அடுத்தாள்……..வா!” துரையின் கர்ஜனை கர்ண கடூரமாயிருந்தது.
“…..”
சாத்தப்பன் அதிர்ச்சியில் புலம்பினான். “நான் எவனுக்கும் கெட்டது செஞ்சது கெடையாது…… ஏன் ஏ வாயில மண்ணப் போடுறாங்களோ தெரியல்ல….!” சாத்தப்பன் பெரிய கிளாக்கரை திரும்பிப் பார்க்காமலேயே சத்தமாகச் சொல்லிக் கொண்டு போனான்.
“வாயப்பத்தி என்னமோ சொல்லிக்கிட்டுப் போறான் போல இருக்கு……..?” துரை வினாவினார்.
“ஆமா சேர்! அவன் வாயப்பத்தி சொல்லிக் கிட்டுப் போறான்!” “ஏனாம்…….. அவன் வாயி நாறிப்போயி கெடக்குதா………?
துரை இடக்குக் காட்டுகிறார்……..
பத்தாம் நம்பர் லயம்…. தொங்க காம்பிரா…. இஸ்தோப்பு…… வீரப்பன் என்ற இருபது வயது இளைஞன் கோடு போட்ட சாரம் கட்டி…. ஸ்திரீ செய்யப்பட்ட சட்டை அணிந்து, கழுத்து ‘கொலரை’ச் சுற்றிக் கைலேஞ்சு செருகி… தையல் மெஷினில் அமர்ந்திருக்கின்றான்.
அவன் காலிலே மிதிபடும் மெஷின் முணுமுணுக்கிறது.
‘ர்ர் ……. ர்ர்…இர்ரம்….
ஆமாம்! அந்த இயந்திரச் சக்கரம் ஒவ்வெரு முறையும் சுழன்று நிற்கும் போது ‘இர்ர்ரம்’ என்ற சப்தத்தோடு தான் முடிவடைகிறது…..! அது அவளைத்தான். ‘சமுத்திரம்’ என்ற அவளது பெயரைத் தான் அப்படி உச்சரிக்கின்றது…… ‘சமுத்திரம்….!’ அவள புரிஞ்சி கொள்ள முடியல்லயே! அவ எப்படியானவ…..?” வீரப்பன் திரும்பத் திரும்ப அவனுக்குள்ளேயே சொல்லிக் கொள்கிறான்.
‘என்னைய… எப்படி… அவ…. கைவிட்டா…? இப்பவும் இஸ்தோப்புல வந்து அரைவாசி நேரத்தப் போக்கி… கொஞ்சிக்கிட்டு இருக்காளே.. இதுமட்டும் ஏனாம்…?’
அவன் அவளையே பார்க்கிறான்… சமுத்திரம் இஸ்தோப்பு வாசலில் சாய்ந்தபடி அவன் பக்கம் முதுகைக் காட்டிக் கொண்டிருக்கிறாள்….
“உருண்டு திரண்ட உடல்..!” அவன் நெஞ்சுக்குள்ளே நினைக்கிறான்.
“அவள் என்னைக் காணாத மாதிரி…. என் மெஷின் சத்தத்தைக் கேட்காத மாதிரி பாசாங்கு காட்டுகிறாள்…….”
சமுத்திரமும் தான் நினைக்கிறாள்……… அவனது நினைவு அந்த இயந்திரத்தின் முனகலோடு கலக்கிறது……. “வேலையில்லாம…….. டெய்லர்……. பூ”
இந்த நேரம் பார்த்து வீரப்பனின் தாய் வருகிறாள். ஒரு சட்டி நிறையத் தண்ணீர் கொண்டு வந்து வெளியே தெறிக்கும் படி வீசுகிறாள். அங்கே….. சமுத்திரம் நிற்பதைப் பார்த்தவள்,
”தூத்தேறி!” என்று பலமாகக் காறித் துப்புகிறாள்.
ஏதோ ஒரு விதத்தில் அடிவாங்கிய உணர்வாய்ச் ‘சடக்’கென வீட்டுக்குள் நுழைகிறாள் சமுத்திரம்.
சாத்தப்பனும் அவனது சம்சாரம் பழனியாயியும் வீட்டுக்குள்ளே அடித்தொண்டையில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்…
“தொர மோசமில்ல! அந்த கெளாக்கரய்யா தான் எல்லாத்தையும் கெடுத்துப்புட்டாரு….! இதுக்கப்புறமும் சன்னாசி மவளப்பத்தி பிராது இருந்தா தொர நம்மல …… தோட்டத்தவுட்டே தொரத்திப்புடுவேன்னுட்டாரு…. இதப் பத்தி நீ என்னா நெனைக்கிற…?” சாத்தப்பன் பழனியாயிடம் கேட்டான்.
“எம்மவன்… காடக் கடப்புளி இல்லை! இதுக்கெல்லாம் அந்தச் சிறுக்கி தான் காரணம்! இப்ப அவ…. இஸ்தோப்புல லாத்திக்கிட்டு இருந்தத நான் பார்த்தேன்! அவளுக லச்சணம் நமக்குத் தெரியாதா…..?” பழனியாயி பொரிந்தாள்.
“நாங்க நம்ம ஜோலியோட இருந்துக் கணும்!’ சாத்தப்பன்.
“அப்படீன்னா….எம்மவனா அவுங்க வூட்டுக்குள்ள போயி….. நொழைஞ்சான்……?” பழனியாயி
வீரப்பன் மெஷின் சத்தத்தைக் குறைத்து பேச்சைக் கவனித்தான். “நீ ஒம்மவன் குத்தமில்லன்னு சொல்ற….. ஆனா தொரை கிட்ட போன பிராது எல்லாத்தையும் தலைகீழா கொழப்பியிருக்கு”
“இதுக்…. கெல்லாம் அந்த சிறுக்கி தான் காரணம்….. அவதான் எம்மவன் மேல ‘கண்ணு’ வச்சிக்கிட்டு இருக்கா!”
“நான் இந்த உருப்படாதப் பயல்கிட்ட சொல்லியிருக்கேன்…. இந்த மாதிரி போக்கிரி வேல செய்யாதேன்னு ……..”
“அப்ப வேற வேல என்னா தேடி வச்சிருக்கீங்க…….. பெரிசா பேசுறீங்களே?”
“பெரிசா ஒண்ணும் பேசல்ல மனுஷி!….. இப்ப தொரையே கண்டுக்கிட்டாரு…. ஒம்மவன் லயத்துல பண்ணுற குறும்ப …….!”
“ஆமா! இந்த தோட்டத்துல இருக்கிற எளந்தாரிபசங்கள வுட எம்புள்ள அப்படி ஒண்ணும் மோசமில்ல!’
“தயவு செஞ்சி பெலமா கத்தாதடி….! இந்த லயத்தையே எழுப்புற மாதிரி!’
***
வீரப்பன் மெதுவாக மெஷினை மூடிவைத்து விட்டு கோவிலுக்குப் புறப்பட்டான். அந்தி நேரங்களில் கோவிலில் கூடிப் பேசிக் கொண்டிருக்கும் இளைஞர்களோடு கலந்தான்.
வீரப்பன் சிவலிங்கம் என்ற இன்னொரு டெய்லரைச் சந்தித்தான். அவன் அவர்களின் பேச்சுகளுக்கிடையே யூனியன் காரர் ஒருவர் சொன்ன விசயத்தையும் கூறினான்.
“எல்லாத் தோட்டத்திலேயும் ஒவ்வொரு ஆயிரம் தொழிலாளிக்கு நூத்தயம்பது பேரு பேர் பதியப்படாம இருக்காங்க………. அடுத்த சில வருஷங்கள்ள நெலம இன்னமும் மோசமாப் போகும்……..”
“அப்ப நாம என்னா செய்யணும்…….?”
“நாம எல்லாரும் டெய்லர்களா போவோம்!”
“வீடு கட்டுற மேசனுக்கு மணல் இழுப்போம்!’
“அப்புறம் ஞாயித்துக்கெழம நாள்ள பாதிசம்பளத்துக்கு ‘கொந்தரப்பு’ புல்லு வெட்டுவோம்!”
“நாங்க எங்கேயாவது வேல தேடி போக வேணும்!” ஒரு இளைஞன்.
“ஆமா!” என் தோழரே….. வேல குடுக்கிறதுக்கு….. ரெண்டு கையையும் விரிச்சிக்கிட்டு ஒங்கள அழைச்சிக்கிட்டுப் போக காத்துக் கிட்டு இருக்காங்க!” இன்னொருவன்..
கோவிலை விட்டு எல்லா இளைஞர்களும் கலைந்தனர்.
அது நள்ளிரவு நேரம்.
ரயில் நிலையம்.
டிக்கட் வாங்குவதற்காக எல்லோரும் ஜன்னலருகே காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அன்று காலையில் தோட்டக் காரியாலயத்துக்கு வந்திருந்த பழனியாண்டி கங்காணி வீரப்பனை ரயில் நிலையத்தில் பார்த்துவிட்டார்.
அவர் அந்த இளைஞனின் மனோ நிலையைப் புரிந்து கொண்டார்.
“வீரப்பா! நீ எங்கே போகப் போற…….?”
அமைதி
“நீ வூட்டவுட்டுப் போறேன்னு எனக்கு தெரியுது! நீ என்னா காரணத்துனால போறேன்னும் தெரியுது. நீ ஒரு நல்ல பையன்…. நல்ல தாய் தகப்பனுக்குப் பொறந்த புள்ள…. இப்படி நீ செய்றது புத்திசாலித்தனம் இல்ல நம்ம தோட்டத்தவுட்டு வெளியே போனா…. நீ காணாம போயிடுவ! பொலிஸ்காரங்க ஒன்ன கள்ளத் தோணின்னு புடிச்சு ஜெயில்ல போட்டுருவாங்க! இல்லாட்டிப் போனா நாடு கடத்திப்புடுவாங்க! அது சரி நீவூட்டவுட்டு போறது….. ஒங்க அப்பனுக்கு தெரியுமா…..?”
“இ…ல்…..ல” பேச்சற்ற வீரப்பன் நாவெழ முடியாமல் இழுத்தான்.
“நீ வூட்டுக்குப் போறது தான் நல்லது. அது தான் உனக்கு பாதுகாப்பான எடம்…….! அந்தப் புள்ளையப் பத்தி மத்தவங்க பேசுறத மனசுக்கு எடுத்துக்காத…..
‘யாரும் உத்தமர் இல்ல! நெலத்த உத்துப் பார்க்காத…. இந்த பெரிய மனுசன் புத்திமதியக் கேட்டுப் பேசாம வூட்டுக்குப் போ….!” தலை குனிந்து நிற்கும் வீரப்பனிடம் கங்காணி சொன்னார்.
அந்தச் சூழ்நிலை அந்தப் பொழுது….. வீரப்பனுக்கு ஒரு நம்பிக்கையற்றதாகவிருந்தது. அவன் தன் விதியை நொந்து கொண்டான்.
“தோட்டமும் என்னைய ஏத்துக்கொள்ளாது.. வெளியுலகத்திலும்…… எங்கேயும் போக எனக்கு எடமும் இல்ல….. என்னா வாழ்க்க ……..!”
அலைக்கழிக்கப் பட்ட மிருகமாய்… அந்த இருட்டில் தன் தந்தையின் வீட்டை நோக்கி அவன் சென்று கொண்டிருக்கிறான்…….
– ஆங்கில தொகுதி: Veerappen. the Ladies Tailor, Born to labour [by] C.V.Velupillai, Publisher: M.D.Gunasena & Co., 1970.
– தேயிலை தேசம், ஆங்கில மூலம்: சி.வி.வேலுப்பிள்ளை, தமிழில்: மு.சிவலிங்கம், முதற் பதிப்பு: பெப்ரவரி 2003, துரைவி பதிப்பகம், கொழும்பு.