லிஃப்ட்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 11, 2025
பார்வையிட்டோர்: 177 
 
 

இன்று இரயில் சரியான நேரத்திற்கு வந்தது. எப்போதும் பாஸஞ்சர் இரயில் கூட்டம் அதிகமாக இருக்கும். அதுவும் திருச்சியில் ஏறினால் கொஞ்சம் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இடையில் உள்ள இரயில் நிலையங்களில் ஏறினால் நிற்பதற்கு மட்டுமே இடம் இருக்கும். ஆனாலும் இந்த கூட்டத்தில் சென்றால் தான் சென்றது போல் இருக்கும். சோளகம்பட்டியில் இரயில் விரைவு வண்டிக்காக காத்துக் கொண்டு இருந்தது.

தேநீர் அருந்த எனக்கு கொஞ்சம் நேரம் கிடைத்தது. மில்லில் கொடுத்த பேட்டா நூறு ரூபாய் இருந்தது. தேநீர் குடிக்க, சூடு இதமாக இருந்தது. குடித்து முடித்தவுடன் எதிரே அடுத்த நடைமேடையில் விரைவு இரயில் யாருக்கும் நிற்காமல் சத்தத்துடன் கடந்து சென்று விட்டது. எல்லோரும் ஏறத் தொடங்கினார்கள்.

நான் செல்லும் இரயில் விசில் அடித்துக் கொண்டு கிளம்ப தொடங்கியது. நான் ஏறிக் கொண்டேன். படியில் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அடைத்துக் கொண்டு அமர்ந்திருந்தனர். ஒரு குழு மும்முரமாக சீட்டு விளையாடிக் கொண்டு இருந்தது. எப்போதும் விளையாடுவார்கள். எல்லா பிரச்சனைகளையும் மறந்து விளையாடுகிறார்கள். நான் கால்களை மாற்றி நின்று கொண்டு இருந்தேன்.

ஒரு பெண் புதிதாக சேலை கட்ட தொடங்கி இருக்கிறாள் போல. ஆனாலும் அழகாக சேலை மடிப்புடன் பச்சை நிறத்தில் உடுத்தி இருந்தாள். அமைதியான முகம் சிவந்து இருந்தது. நின்று கொண்டு இருந்தாள் பேச்சு துணைக்கு யாரும் இல்லை. ஜன்னல் கம்பி இடையில் பல வண்ண பச்சையில் வயல்வெளிகள் அதன் நடுவே பனைகள் அசையாமல் நின்று கொண்டு இருந்தது. காற்று வயலில் ஓடி விளையாடியது. நெல் வயல் தோகை முன்னும் பின்னும் அசைந்து ஆடிக் கொண்டு இருந்தது.

மஞ்சள் நாரைகளில் ஒன்றிரண்டு பார்க்க முடிந்தது. கொக்குகள் கால்களை மடக்கி மடக்கி நகர்ந்து தன் நீண்ட அலகை சேற்றில் நுழைத்து பூச்சி புழுக்களை தின்றது. அவ்வப்போது தன் அலகை எடுத்து விட்டு மீண்டும் நுழைத்தது. மனிதர்கள் உண்ணுவது போல் இடைவெளி விட்டுக் கொண்டே தியானத்தில் இருந்து கொண்டு உணவை உண்டது. ஒன்றாக பறந்து பறந்து இடத்தை மாற்றிக் கொண்டே இருந்தது வெண்ணிற கொக்குகள்.

இரயில் புது ஆற்றுப் பாலத்தை ஒரு வித அசைவுடன் புது ஒலியில் கடந்து சென்றது.

தினமும் பயணிப்பவர்கள் ஏதோ ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து மீண்டவர்கள் போல விழித்துக் கொண்டு இறங்க ஆயத்தமானார்கள். எல்லோருக்கும் அவர்களின் பரபரப்பு தொற்றிக் கொண்டது. மேம்பாலத்திற்கு முன்பே வண்டி சிக்னல் கிடைக்காமல் நின்றது. இது ஒரு புது மேம்பாலம். பழைய மேம்பாலம் பலருக்கு வாழ்வழித்துக் கொண்டிருந்தது ஒரு காலத்தில். ஒரே நாளில் புது இரயில் பாலம் எல்லோரின் வாழ்வையும் மாற்றி விட்டது. ஆனாலும் சிலர் அவற்றில் தத்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள் யாருக்கும் தெரியாமல். இப்போது அதை கடக்கும் போதெல்லாம் அந்த பழைய நினைவுகளும் அடர்த்தியான கடை தெருக்களும் வந்து வந்து செல்லும் இப்போது கடலில் உள்ள ஆழமான அமைதி போல் இருக்கிறது அந்த பழைய தெருக்கள்.

சிலர் இறங்கி என்னவென்று பார்த்தார்கள். கொஞ்ச நேரத்தில் சிக்னல் வந்தது. இரயில் நகர்ந்து ஓட தொடங்கியது. இரயில் நிலையத்தில் சத்தத்துடன் விரைவாக அசைந்தபடி ஓடி நின்றது. நல்லவேளை முதல் நடைமேடையில் நின்றது. அப்பாடா என்று இறங்கி வெளியே ஓட்டமும் நடையுமாக சென்றேன்.

நான் தினமும் செல்வதால் டிடிஆர் சிரித்துக் கொண்டே கையை காட்டினார். சிலரை மறைத்து வைத்து கொண்டு நிறுத்தி டிக்கெட்டை சரிபார்த்துக் கொண்டு இருந்தார். இரயிலடியில் ஏற்கனவே கூட்டம். அதுவும் இரயில் வந்து விட்டது. கூட்டம் அதிகமாக வந்து கொண்டும் நின்று கொண்டும் இருந்தது. ஒரு பேருந்து வந்த அனைவரையும் ஏற்றிக் கொண்டு நகர முடியாமல் மெல்ல சாய்ந்தபடியே நகர்ந்து சென்றது. என்னால் ஏற முடியவில்லை. சரி தினமும் இப்படிதான். யாராவது தெரிந்தவர் வந்தால் லிஃப்ட் கேட்டு சென்று விடுவேன்.

அப்போது தான் முதல் பேருந்தை பிடிக்க முடியும். இல்லையென்றால் அடுத்த பேருந்துக்கு ஒரு மணி நேரம் காத்து இருக்க வேண்டும். சில நாட்கள் எங்கள் ஊரிலிருந்து யாராவது வண்டியில் வந்தால் எந்த பிரச்சனையும் இல்லாமல் நேராக சென்று விடலாம். இந்த கூட்டத்தில் நின்றால் கால் வலிக்கும் நடந்தால் நல்லது என்று நடக்க தொடங்கினேன். மாலை நேர பறவைகளின் கீச்சு ஒலிகள் கேட்டுக் கொண்டே இருந்தது. பழந்திண்ணி வெளவால் கூட்டங்கள் வந்து கூடடைந்தன.

ஒருவர் வெண்மையில் வண்டியில் வந்தார். அவரிடம் லிஃப்ட் கேட்டேன். என்ன நினைத்தாரோ என்னைப் பார்த்து கொஞ்சம் வலதுபுறம் நகர்ந்து நிறுத்தாமல் சென்றார். இது போல் தினமும் நடப்பது தான். கொஞ்சம் எரிச்சல் வரும். காற்று கொஞ்சம் வீசி தலைமுடியை கலைத்து கொண்டே கண்ணில் படாமல் விளையாடியது. நான் கேட்டதை பார்த்த அடுத்து வந்த நபர் அவராக வந்து நிறுத்தினார். எங்க பஸ் ஸ்டாண்ட்டுக்கா என்றார். ஆமாம் திருவையாறு பஸ் ஸ்டாண்ட்டுக்கு போகணும். சரி வாங்க நானும் அங்கு தான் போகனும்.

அன்பு ஸ்வீட்ஸ்க்கு போகிறேன். உங்களை நான் பார்த்து இருக்கிறேன். நான் அன்பு ஸ்வீஸ்ட்ஸில் தான் மாலையில் பாதாம் பால் ஸ்டால் மாஸ்டர். எப்பவாவது தான் குடித்திருக்கிறேன், நன்றாக இருக்கும் என்று பேசிக் கொண்டே ஆற்று பாலத்தை தாண்டும் போது போலீஸ் நாங்கள் வந்த வண்டியையும் சேர்த்து பிடித்து விட்டது.

ஒரு ஐம்பது வண்டியாவது இருக்கும். ஹெல்மட் இல்லை, வண்டி ஆர்சி புக் இன்சூரன்ஸ் எடுத்துட்டு வாங்க என்றார் ஒரு போலீஸ். உங்கள்ட ஏதாவது காசு இருக்கா அண்ணே நாளைக்கு கொடுத்து விடுகிறேன் என்று கேட்டார். என்ட்ட பஸ்க்கு தான் இருக்கு என்றேன். எவ்வளவு இருக்கு என்றார், ஐம்பது ரூபாய். அத கொடுங்க கடைல வாங்கி கொடுக்கிறேன் என்றார். பஸ்க்கு எப்படி போவது என்ற யோசனையுடன் கொடுத்தேன். அவர் அதை வாங்கி கொண்டு சென்றார். ஆறேழு பிசி இருந்தார்கள். அதில் ஒருவர் மட்டும் கொஞ்சம் புதிதாக வேலைக்கு சேர்ந்திருப்பார் போல. அவர் அந்த பிசி யிடம் சென்று சார் வணக்கம், இல்ல நீங்க இன்ஸ்பெக்டர பாருங்க என்றார். இல்ல சார் இது எங்க மாமா வண்டி, பழைய வண்டி, ஒரு அவசர வேலையா கேட்டு வாங்கி கொண்டு வந்தேன், கைல காசு யில்ல. லிஃப்ட் கேட்டு வந்தவரிடம் கடனாக வாங்கிய ஐம்பது ரூபாய் இருக்கு. இத வாங்கிட்டு விட்டுருங்க வேலைக்கு போகணும். நான் டீ மாஸ்டர். நான் போகலன்னா வேற ஆள் போட்டுடு வாங்க . இன்னைக்கு பொழப்பு கெட்டு போகும் சார். எங்க வேலை பார்க்கிறிங்க. அன்பு ஸ்வீட்ஸ். டாக்குமெண்ட்ஸ் இல்லாமல் வண்டி எடுத்துட்டு வர கூடாதுணு தெரியாதா. பைஃன் போடு வாங்க, ஹெல்மட் இல்லாம வர்றீங்க. உங்களுக்கு எத்தனை குழந்தைகள். ஒரு பொண்ணு. சரி ஹெல்மட் வாங்கி போட்டுடுங்க . நான் இன்ஸ்பெக்டர்ட்ட சொல்லிக்கிறேன்.

நீங்க மெதுவா வண்டிய எடுத்துட்டு கொஞ்ச தூரம் தள்ளி கொண்டு போய் ஓட்டுங்க என்றார். அவர் பணம் வாங்க வில்லை.

அவர் நகர்ந்தவுடன் வேறு ஒரு பிசி வந்தார். அவர் வாங்க மாட்டார் என்று சொல்லி ஐம்பது ரூபாயை வாங்கி கொண்டார். சரி நகருங்க என்று அதட்டினார்.

நாங்கள் நேராக மணிக் கூண்டை தாண்டி சென்று கொண்டு இருந்தோம். அவர் மவுனமாக வண்டியை ஓட்டி சென்றார். சார் மன்னிச்சுக்கங்க, எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் உங்களிடம் காசு கேட்டு விட்டேன். அந்த ஐம்பது ரூபாயும் போய்விட்டது. உங்களுக்கு சங்கடத்தை கொடுத்து விட்டேன். அதெல்லாம் ஓன்றும் இல்லை, எனக்கு உதவி தான் செய்தீர்கள். நம்ம நேரம் அதை விட்டு தள்ளுங்கள். அன்பு ஸ்வீட்ஸ் வாசலில் நிறுத்தினார். அண்ணே இருங்க வந்து விடுகிறேன் என்று உள்ளே சென்றார். உள்ளே யாரிடமாவது பணம் வாங்கியிருப்பார் போல. வெளியே வந்து என்னிடம் புது தாளாக ஐம்பது ரூபாய் கொடுத்தார். அதை பார்த்தவுடன் கொஞ்சம் தெம்பு வந்தது. உங்களுக்கு எப்ப பஸ். நேரம் இருக்கிறது. நான் பார்த்து கொள்கிறேன். அண்ணே இருங்க உட்காருங்க. எல்லாம் ரெடி. பத்து நிமிடத்தில் பாதாம் பால் குடிக்கலாம். உங்களுக்கு தான் மொதல்ல கொடுக்கணும. நீங்க தான் குடிக்கணும். அடுப்பை பற்ற வைத்தார். உள்ளே இருந்து பெரிய பால் இரும்பு சட்டியை இருவராக எடுத்து கொண்டு வந்தனர். நான் பஸ் வருகிறதா என்று பார்த்து கொண்டு இருந்தேன். வந்து விட்டால் சொல்லிவிட்டு செல்லலாம் என்று. எங்கேயோ காய்ச்சிய பசும்பால் மணம் வீசியது அதில் மனம் சென்றது. மணம் மனதிற்கு அமைதி தருகிறது. முக்கியமாக பூக்களின் மணம் மகிழ்ச்சி தருகிறது. நினைத்தாலே இனிக்கும். பாலை சட்டியில் ஊற்றினார். முழு மஞ்சளாக இல்லாமல் சந்தன நிறத்தில் நன்றாக காய்ச்சிய பதத்தில் அதன் ஆடைகள் மிதந்து ஓரமாக பாலை பனி மூடிய குளம் போன்று அடைத்து கொண்டு இருந்தது.

ஒரு கண்ணாடி டம்ளரில் பாலை ஆற்றி ஊற்றி பாலாடை எடுத்து போட்டு மிதக்க விட்டு அதில் உடைந்த பருப்புகளை கொஞ்சம் அதிகமாக தூவி கொடுத்தார். நான் குடித்து பல நாட்களாக ஆகிறது. கொஞ்சம் கூட்டமாக இருந்தது. அதன் சுவை நாக்கில் நின்றது. மனத்திற்கு இதமாக இருந்தது. அண்ணே ஏதோ பஸ் வருது. உங்க ஊரு பஸ்சா பாருங்க என்றார். ஆமாம் எங்க ஊர் பஸ் தான். மெலட்டூருனு போட்டு இருந்தது. அவரிடம் சொல்லி விட்டு பஸ்சின் படிகளை நோக்கி நடந்தேன். அவர் சிரித்து கொண்டு நாளைக்கு வந்தா வாங்கண்ணே என்றார். நான் கையை காட்டி விட்டு ஏறினேன். பஸ் சில நொடிகளில் நிறைந்து விட்டது மழை பெய்து நிலங்கள் ஈரத்துடன் நிறம் மாறியது போன்று. இருக்கைகள் இல்லாதது ஏமாற்றம். நடுவில் நிற்கும் கம்பியில் சாய்ந்து கொண்டு நிற்பதற்கு இடம் பிடித்து கொண்டேன்.

அண்ணே என்று ஒரு குரல் என்னை நோக்கி வந்தது. நான் சந்தேகத்துடன் சுற்றி சுற்றி பார்த்தேன். கணபதி தான் கூப்பிட்டான். எங்க ஊரு கார பையன். சீட்டு போட்டு இருந்தான். கொஞ்சம் ஆனந்தமாக இருந்தது. அண்ணே சீட்டு இருக்கு வாங்க என்று கத்தினான். ஜன்னல் ஒரமாக அமர்ந்தேன். பெரும்பாலும் சீட்டு கிடைக்காது. நினைவில் வைத்து கொள்ளும் நாட்கள் சில உண்டு. இதமான காற்று வீசியது.

மாலை நேரமும் என்னுடன் வந்து அமர்ந்து கொண்டது. அனைத்து விளக்குகளும் எறிய தொடங்கியது. கூட்டம் ஏறி கொண்டே இருந்தது. பஸ்சும் கூட்டத்தால் நிமிர்வுடன் நகர தொடங்கியது.

அண்ணே என்ட பணம் இருக்கு நானே டிக்கட் எடுக்கறேன். நீங்க வைங்க என்று அவன் இரண்டு டிக்கட் எடுத்தான். சாம்பல் நிற பாதி கிழிக்க பட்ட டிக்கட் கிடைத்தது.

அந்த புத்தம் புதிய ஐம்பது ரூபாய் நோட்டு ஏதோ ஒரு பாக்கட்டில் அமைதியாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *