ரோசாப்பூ
அவரவர் இடத்தில் அவரவர் அக்கறையின்றி அமர்ந்து…….. அப்படித்தான் ஆரம்பிக்கும் அந்த நாள்.
பிச்சையெடுப்பதை போல உயிருக்கு நடுக்கம் தரக் கூடியவை வேறொன்றும் இல்லை. ஒரே ஒரு நாள் பிச்சை எடுத்து பார்த்திருக்கிறேன். அது அத்தனை சுவாரஷ்யமானதாக இல்லை. பிச்சையெடுப்பதிலும் கொடுமையான ஒன்று கண்கள் தெரியாமல் பிச்சை எடுப்பது.
பிச்சைக்காரிக்கு மட்டும் வயதை கணிக்கவே முடிவதில்லை. தினம் மாறும் உடல் அமைப்பின் ஓரங்கள் காலத்தின் கரமுற கவனிப்புகள். அவளை, கடந்த ஒரு வாரமாக கவனிக்கிறேன். ஒவ்வொரு நாளும்… பிச்சை பாத்திரம் நிரம்பி வழிந்ததை போல நம்பும் அவள் கையின் துழாவலில் உள்ளங்கை சேரும் அளவுக்கு எப்படியும் சில்லரை சேர்ந்து விடுகிறது. சிலபோது பத்து இருபது ரூபாய் நோட்டுகளை அவள் தடவி தடவிப் பிரித்தெடுப்பாள்.
போன வாரத்தில் ஒரு நாள் அவள் தட்டை கவிழ்க்கும்போது காசோடு ஒரு ரோஜா பூவும் கிடந்ததை அவள் தேடி எடுத்து விரல்களால் ஆச்சரியப்பட்டு……. அமர்ந்து வெற்றிடம் நோக்கி கழுத்து தூக்கி பார்க்கையில்……………அங்கே யாருமே இல்லை. அவள் முகத்தை, அப்படியே இடது வலது என்று திருப்பிக் கொண்டே காற்றினில் தேடியதை நான் என்னவோ போல உணர்ந்தேன்.
அவள் விரல்களில் நடுக்கம் இருந்தது. அந்த பூவை என்ன செய்வதென்று அவள் வெகு நேரம் யோசித்தாள். அது பற்றி பக்கத்தில் அமர்ந்திருக்கும் யாரிடமும் அவள் பேசியதாக தெரியவில்லை. அவள் முகத்தில் அசைவற்று இருந்த தசைகளின் நெடியில் அன்றைய நாள் அப்படியே முடிந்து போனது. அடுத்த நாளும் அதே போல ஒரு ரோஜா.. இம்முறை அவள் இன்னும் வேகமாய் முகம் கொண்டு தேடினாள். மூடி இருக்கும் கண்களை மீண்டும் மூடி தலை கவிழ்ந்து யோசித்தாள்.
காசு போட்டவர்கள் ஒவ்வொருவராக மனக்கண் முன் உருவமில்லாத ரூபத்தில் வந்து வந்து பிச்சையிட்டு போனார்கள். ஆனாலும் பூ போட்டது யாரென்று தெரியவில்லை. மனம் யாரென்று தேடி அலைபாய்ந்தது.
நான் அப்போதுதான் வந்தேன். எனக்கே அந்த பூ போட்டவரைக் காண வேண்டும் என்ற ஆவல் பூத்துக் கொண்டிருந்தது.
“யாராக இருக்கும்…..?” அவளோடு சேர்ந்து நானும் காற்றினில் தேடினேன். கண்களில் துழாவினேன். அவள் கைகளால் மீண்டும் மீண்டும் துழாவி எடுத்த பூவை இன்று தலையில் படக்கென்று வைத்துக் கொண்டாள். அவள் தட்டில் மூன்று நாளைய வாடி உதிர்ந்த ரோஜா பொக்கிஷமாய் கிடந்தன. நான் சுற்றும் முற்றும் தேடியபடியே நின்றேன். அவளை யாரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை.
அடுத்த நாள் அவள் முகம் பிரகாசமாய் ஜொலித்தது. கண்கள் தெரியாத பிச்சைக்காரிக்கும் முகம் ஜொலிக்கும் என்று முதன் முதலாக தெரிந்து கொண்டேன். அவள் முகத்தில் தேஜஸ் கூடியிருந்தது. பிச்சை போட்டவர்களை கை எடுத்து கும்புடுகையில் முகம் திரும்ப……… பின் தலையின் சரிவு பார்க்க நேரிட்டது. அவள் செம்பட்டை கூந்தலில் இன்றைய ரோஜா அம்சமாய் அமர்ந்திருந்தது. எனக்கு பரவசம் கூடிக் கொண்டே போனது.
” பூவை யார் போடுவது. எதற்கு போடுகிறார்கள்……? ஒருவேளை அவள் கூட்டத்தில் எவனாவது காதலிக்கறானா…..!….” அந்த வரிசையில் அமர்ந்திருக்கும் பிச்சைக்காரர்களை கவனத்தோடு கவனித்தேன். அவளுக்கு ஏற்றவன் போல எவனும் அங்கில்லை.
“என்ன நடக்கிறது…. ?”
இரண்டு நாட்களுக்கு பிறகு கொஞ்சம், நேரத்திலேயே வந்து அமர்ந்திருந்தேன்.
ஒரு வாலிபன் அவள் முன்னால் சென்று காசு போட்டு விட்டு தட்டில் ஓரத்தில் ரோஜாவைப் போடுவது போல போட்டு விட்டு பட்டும் படாமல் மெல்ல எடுத்துக்கொண்டு நகர்ந்து கொண்டான். நான் கண்கள் சிமிட்டாமல் அவனையே கண்களால் தொடர்ந்தேன். நொடியில் பூ வாசத்தை உணர்ந்து கொண்ட அவளின் முகம் தானாக புன்னகைத்தது. கையால் துழாவி எடுக்க முயற்சிக்கையில் தட்டின் எந்த ஓரத்திலும் பூ இல்லை. அவள் முகம் கோணல் மாணலாய் தடுமாறியது. பூ விழுந்ததை நம்பிய மனம் பூ இல்லாததை நம்ப மறுத்தது. மீண்டும் மீண்டும் நாசியில் இழுத்து இழுத்து சுய பரிசோதனை செய்து கொண்டே இருந்தாள். அவள் இல்லாத கண்கள் கலங்கின. பட படவென்று வழிந்த கண்ணீரை பதறித் துடித்து துடைத்தாள். அவள் முகம் வெளியை விலக்கிக் கொண்டு கழுத்தை தூக்கி தூக்கி தேடிக் கொண்டேயிருந்தது. வாரம் முழுக்க பழகிய ரோஜா இன்று இல்லாததை அவள் நம்ப மறுத்தாள். இன்னதென தெரியாத இயலாமை அவளை சூழ்ந்து கொண்டு ஒடுக்கியது.
பூவை எடுத்துக் கொண்டு பூனையைப் போல நகர்ந்தவன், எதிரேயிருந்த மரத்துக்கு பின்னால் சென்றான். அங்கே கேமராவோடு நின்றிருந்த மூன்று நான்கு பேர் அவனைக் கட்டிக் கொண்டார்கள்.
“ஷாட் ஓகே டா… செமயா இருக்கு…” பேசிக் கொண்டார்கள்.
எனக்குப் புரியவில்லை. அவர்கள் அருகே சென்று, ” என்ன இது….?!” என்றேன்.
“லைவா ஒரு ஷாட் பிலிம் சார்… சொல்லி நடிக்க வெச்சா இவ்ளோ துல்லியமா வராது.. அதான்…ஒரு வாரமா தெரியாம தெரியாம எடுத்திட்டு இருக்கோம்.. அந்த கண்ணு தெரியாத பொண்ணுக்கு காதல் எப்படி வரும்னு ஒரு ப்ரோசெசசிங்…. யாரோ ஒருத்தர் தொடர்ந்து பூ போட்டுட்டு ஒரு நாள் பூ போடலன்னா…..இல்ல போட்ட பூ காணம்னா…….இல்ல…..போடாமலே போட்டதா நினைச்சிக்கிட்டோமான்னு அந்த பொண்ணு யோசிக்கிற பாவனைதான் கிளைமேக்ஸ்….. அட்டகாசமா வந்த்ருக்கு…” என்றான் இயக்குனன் போல் இருந்தவன்…சிரித்துக் கொண்டே.
அவன் அட்டகாசம் என்றபோதே கீழே கிடந்த செங்கல் என் கைக்கு வந்திருந்தது. பின்னோக்கி இழுத்த வேகத்துக்கு அந்த இயக்குனனின் முகத்தில் அடித்து செங்கலை சிதறினேன். மூன்று பற்கள் தெறிக்க வாயெல்லாம் குருதிக் கொப்பளிக்க சரிந்தான். கேமராவை பிடித்து இழுத்து, நடித்தவன் மண்டையில் அடித்து பிளந்தேன். மூன்றாவது பையனை ஓட ஓட காலைப் பற்றி இழுத்து தரையில் போட்டு உரசினேன்.
அடுத்த நாள் அந்த கண்கள் அற்ற பெண்ணின் தட்டில் பத்து ரூபாயோடு ரோஜா பூ ஒன்றையும் போட்டு நகர்ந்தேன். நான் சென்ற திசையில் முகம் முழுக்க புன்னகையோடு கழுத்தை ஆட்டி ஆட்டி பார்த்தாள்.
அதிலிருந்து தினமும் கோவிலுக்குள் போகிறேனோ இல்லையோ அவளிடம் நின்று அவள் தட்டில் பூ போட்டு விட்டு தான் செல்கிறேன்.
Kannil Neerai Varavazhaththa unmai Kadhai.
சூப்பர்.