ரிஷி






(2004ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் – 3 | அத்தியாயம் – 4 | அத்தியாயம் – 5

காலை பதினோரு மணி ஆகி விட்டது. வேலையில் மூழ்கி விட்ட தால் பிரகாஷுக்கு பசி தெரிய வில்லை. தான் செய்யும் வேலை. யைப்பற்றி.அவனுக்கு இப்பொழுது தான் புரியத் தொடங்கியது.எல்லாமே பொய்க் கணக்கு வழக்குகள்.போகஸ் ரிடர்ன்ஸ்.
*உங்களுக்கு ஃபோன் வந்திருக்கு சார்” ப்யூன் வந்து சொன்னதும் எழுந்து போய் ரிசீவரை எடுத்துக் கொண்டு ‘ஹலோ” என்றான்.
மறுமுனையிலிருந்து உடனே பதில் வரவில்லை. பிரகாஷ் எரிச்சல் கலந்த குரலில், “பிரகாஷ் ஹியர். யாரு பேசறீங்க?” என்றான்.
“நான்தான் சுஜாதா”
மிருதுவான குரல் கேட்டது. ரிசீவரை பற்றியிருந்த அவன் கை இறுகியது. ஒரு வினாடி பேசவில்லை,
“ஹலோ!” சுஜாதா சொன்னாள்.
“ஊம். சொல்லு.”
இந்த முறை அந்தப் பக்கம் மௌனம் பரவியது. பிரகாஷ் அடிமனதில் இனம்புரியாத சந்தோஷம்.
“ஒரு முறை எங்கள் வீட்டுக்கு வரமுடியுமா பிரகாஷ்.” சுஜாதாவின் குரலில் வேண்டுகோள் கலந்திருந்தது.
“சாரி.” தன்னையும் அறியாமல் சொன்னாள். “என்னை வற்புறுத்தாதே.”
“அப்படிச் சொல்லாதே ப்ளீஸ். உள்ளே கூட வர வேண்டாம். என்னிடம் பேசவும் வேண்டாம். எங்கள் வீட்டின் முன்னாலிருந்து நடந்து போனால் கூட போதும். ஒருமுறை உன்னைப் பார்க்கணும். அவ்வளவுதான்.”
அவள் குரலில் தென்பட்ட நேர்மை அவனை நெகிழ்த்தி விட்டது. சுஜாதா இவ்வளவு தீவிரமாக நேசிக்கும் அளவுக்கு தன்னிடம் தனித்தன்மை எதுவும் இல்லை. அந்த விஷயம் தனக்கும் தெரியும். பின்னே இந்த அன்பின் அர்த்தம்தான் என்ன? முதல் காதல்!
தனக்கு அந்த அனுபவம் கிடைக்க வாய்ப்பு இருக்க வில்லை. ஏன் என்றால் பதினெட்டு வருடங்களுக்கு முன்பே தனக்கும் சீதாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப் பட்டுவிட்டது. சுஜாதா இப்பொழுது இருக்கும் நிலைக்கு தன்னைவிட அழகும், அந்தஸ்தும் இருக்கும் பலபேரை சந்தித்திருப்பாள். அப்படியும் தன்னை நேசிக்கிறாள் என்றால் முதல் காதலின் பாதிப்பு அவள் மீது எந்த அளவுக்கு இருக்கிறதோ புரிந்துகொள்ள முடியும்.
“ஹலோ ஹலோ…” மறுமுனையில் கேட்டது.
“ஊம்” தெளிவற்ற குரலில் சொன்னான்.
“மாலையில் பால்கனியில் நின்றுகொண்டு உன் வருகைக்காக காத்திருப்பேன். வருவாய் இல்லையா.” ஃபோனை வைத்து விட்டாள்.
பிரகாஷும் ரிசீவரை வைத்து விட்டான். நெற்றியில் படிந்த வியர்வையை கைக்குட்டையால் ஒற்றிக் கொண்டே தன்னுடைய மேஜை பக்கம் பார்த்தவன் அதிர்ச்சி அடைந்தவன் போல் அப்படியே நின்று விட்டான்.
எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்து, விரல்களுக்கு நடுவில் பேப்பர் வெயிட்டை சுழற்றிக் கொண்டிருந்த பொன்னம்பலம் இவனையே பார்த்துக் கொண்டிருந்தார்.
“அதுதான் விஷயம்.” சொல்லி முடித்தார் பொன்னம்பலம்.
பொங்கி வரும் கோபத்தை அடக்கிக் கொண்டே “முடியாது என்று எத்தனை தடவை சொல்லுவது? எனக்கும் சில கொள்கைகள் இருக்கு சட்டத்திற்கு மாறாக என்னால் எதுவும் செய்ய முடியாது.” என்றான் பிரகாஷ்,
“இது ரொம்ப சின்ன காரியம். நீங்க அந்த பேப்பரை ஃபைலிலிருந்து எடுத்துவிட்டால்…”
மறுபடியும் அதே பாட்டுத்தானா, ஐ யாம் சாரி.” பிரகாஷ் எழுந்து நின்றுகொண்டான். “இனி நீங்க போகலாம்.”
பொன்னம்பலம் முறுவலித்துவிட்டு எழுந்து கொண்டார். “மறுபடியும் சந்திப்போம்.”
ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு பிரகாஷுக்கு மேலதிகாரியிடமிருந்து செய்தி வந்தது, பொன்னம்பலம் சம்பந்தப்பட்ட ஃபைலை அனுப்பச் சொல்லி.
அனுப்பி வைத்தான். அவனுக்குத் தெரியும் என்ன நடக்கும் என்று,
அரை மணி நேரம் கழித்து ஃபைல் அவனிடம் திரும்பி வந்தது. அந்த பேப்பர் அதில் இருக்கலில்லை.
பிரகாஷுக்கு யார் மீதும் கோபம் வரவில்லை. தன் மீதே வெறுப்பு. கல்மிஷம் நிறைந்த இந்த மனிதர்களிடமிருந்து விலகி தொலைதூரம் போய்விட வேண்டும் என்ற தவிப்பு.
மதியம் வஞ்ச நேரத்தில் வீட்டுக்கு வந்தான். காலை யில் செய்துகொண்ட தீர்மானம் அவனுக்கு நினைவு இருக்கவில்லை.
வீட்டுக் கதவுகள் திறந்துதான் இருந்தன. சீதாவும், காமாட்சியும் அடுத்த அறையில் பேசிக் கொண்டிருந் தார்கள். ஹால் நடுவில் மாமா குறட்டை விட்டபடி தூங்கிக் கொண்டிருந்தார். அவன் வந்ததை யாரும் கவனிக்கவில்லை. அதில் புதுசு ஒன்றுமில்லை. தினமும் நடப்பதுதான்.
கிணற்றடிக்குச் சென்று கைகால்களை அலம்பிக் கொண்டு வந்து தட்டை போட்டுக் கொண்டான். பாத்திரங்களைத் திறந்து பார்த்தபோது பாகற்காய் கறியும், கொட்டுரசமும் இருந்தன. அவன் பசி காணாமல் போய் விட்டது. கொஞ்சமாக சாப்பிட்டுவிட்டு எழுந்து கொண்டான். மறுபடியும் சட்டையை மாட்டிக் கொள்ளும் போது உள் அறையில் தன் பெயர் அடிபடுவதை கேட்டு ஆர்வத்துடன் கேட்கத் தொடங்கினான்.
“நாளைக்கு உனக்கு எத்தனை வயது முடிகிறது?” காமாட்சி கேட்டுக் கொண்டிருந்தாள்.
“பதினெட்டு.”
“பிறந்த நாள் பரிசாக அத்தான் உனக்கு என்ன தரப் போகிறார்?”
“நான் இருக்கிற இருப்புக்கு பரிசு ஒன்றுதான் குறைச்சல்,”
“அதென்ன? உங்க அத்தான் பார்க்கும் வேலையில் மேல் வரும்படி நன்றாக கிடைக்குமே.”
“போதுமே. அவ்வளவு சாமர்த்தியம் இருந்தால் பிரச்னையே இல்லையே. எதற்கும் கொடுத்து வைத்திருக்கணும்.”
பிரகாஷின் முகம் வெளிறி விட்டது. நல்ல பண்புக் கும், இயலாமைக்கும் இடையே உள்ள வித்தியாசம் எவ்வளவு சிறியது? பொன்னம்பலத்திடம் தான் சொன்னது நினைவுக்கு வந்தது “கொள்கைக்கு மாறாக எதுவும் செய்ய மாட்டேன்.”
கொள்கை என்றால் அர்த்தம்தான் என்ன? தன்னுடைய கொள்கை வருங்கால மனைவியின் பார்வை யில் இயலாதவனாக தன்னை உருவகப்படுத்தியிருக்கிறது. சுஜாதாவைப் பற்றிய யோசனைகளை தன்னால் கட்டுப் படுத்த முடியவில்லையே. இது எந்த கொள்கையில் சேர்த்தி?
காமாட்சியின் குரல் மீண்டும் ஒலித்தது. “அத்தானே உனக்குக் கணவனாக வரப்போகிறார். அதுவே உனக்கு பரிசுதான். சினிமா ஹீரோ போன்ற அழகும்… பர்சனாலிடியும்.”
“எதிர்வீட்டு போர்ஷனில் குடியிருக்கும் சரவணன் உன் கடைக்கண் பார்வைக்காக சுற்றிச் சுற்றி வருகிறான். கொஞ்சம் தயவு காட்டித்தான் பாரேன், கல்யாணமும் செய்து கொள்பவனாய் இருக்கும். ரஜினிகாந்த் ஸ்டைலில் அடிக்கடி தலையை சிலுப்பிக்கொண்டே இருப்பான்.”
“அம்மாடியோவ்! அம்மாவுக்குத் தெரிந்தால் என்னைக் கொன்று போட்டுவிடுவாள்.” காமாட்சியின் குரலில் பயம் வெளிப்பட்டது.
இந்தப் பெண் காதல் விவகாரத்தில் ஈடுபடாமல் இருப்பதற்குக் காரணம் சமுதாயக் கட்டுப்பாடுகள், கணவனைத் தவிர வேறு ஆணை நினைக்கக் கூடாது என்ற பண்பு.. இவை எதுவும் இல்லையா? பெற்றோர் கோபித்துக் கொள்வார்கள் என்ற பயம் மட்டும்தானா?
பிரகாஷுக்கு சிரிப்பு வரவில்லை. அருவருப்புதான் ஏற்பட்டது. காமாட்சியின் மீது இல்லை. பெண் இனத்தின் மீதே.
லஞ்சுக்கு பிறகு மதியம் ஆபீசுக்கு வந்த பிரகாஷ் வேலை எதுவும் செய்யவில்லை. காமாட்சியின் வார்த்தைகள் திரும்பத் திரும்ப நினைவுக்கு வந்து கொண்டிருந்தன. மாலையில் சுஜாதாவின் வீட்டுப் பக்கம் போவதா வேண்டாமா என்ற தயக்கம்.
கடைசியில் போக வேண்டாம் என்று முடிவு செய்தான். போனால் என்ன நடந்துவிடும்? மனப் போராட்டம் மேலும் அதிகரிக்கும். காதல் தரும் வேதனை -அதனால் ஏற்படும் வருத்தம் வேறு எந்த விஷயத்திலும் இருக்காது.
வரும் வரையில் இன்னும் வரவில்லையே என்ற வேதனை, வந்த பிறகு பிரிய வேண்டுமே என்ற வருத்தம். காதல் என்றால் இதுதானோ.
மாலை ஐந்து மணி ஆகிவிட்டது. ஃபைல்களை உள்ளே வைத்து விட்டு பிரகாஷ் எழுந்து கொண்டான். வெளியே வரும்போது கேட் அருகில் பொன்னம்பலம் நின்று கொண்டிருப்பது தென்பட்டது. கேட்டை நெருங்கும் போது அவனுக்காகவே காத்திருந்தது போல் “வாங்க போகலாம்” என்றார்.
“எங்கே?” பிரகாஷ் வியப்புடன் கேட்டான்.
“வீடுவரையிலும் கொண்டு விடுகிறேன்.”
“தேவையில்லை. நானே போய்க் கொள்கிறேன். உங்க வேலைதான் காலையிலேயே முடிந்து விட்டதே.”
பொன்னம்பலம் சிரித்தார். என்னுடைய வேலைக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சும்மா ஒரு நண்பனாக உங்களை அழைக்கிறேன்” என்றார்.
இனியும் பிகு செய்துகொண்டால் நன்றாக இருக்காது என்று நினைத்து காரில் ஏறிக் கொண்டான். கார் கிளம்பியது. நேற்று இதே நேரத்தில் இதே காரில் இருந் தான். ஒரே நாளில் எத்தனை அனுபவங்கள்!
பிரகாஷின் யோசனைகளை சிதறடிப்பது போல் பொன்னம்பலம் சொன்னார். “உங்களைப் பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கு மிஸ்டர் பிரகாஷ்”
பிரகாஷ் குழப்பத்துடன் பார்த்தான்.
“ஆமாம். ஏன் என்றால் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் நானும் உங்களைப் போலவே அப்பாவியாக. நிம்மதியாக வாழ்ந்து வந்தேன்.”
பிரகாஷ் பொன்னம்பலத்தின் பக்கம் கூர்ந்து பார்த்தான். முகம் முழுவதும் அம்மைத் தழும்புகள். அதிக மாக சிகரெட் பிடிப்பதால் கறுத்துப் போன இதழ்கள். ஆனால் அவருடைய பேச்சில் ஏதோ ஸ்திரத்தன்மை தென்பட்டது.
“அனுபவங்கள் மனிதனை எவ்வளவு சீக்கிரமாக மாற்றிவிடுமோ- நானே ஒரு உதாரணம். இப்போ என் வயது ஆகும் வரையில் தானும் உங்களைப் போலவே சில கொள்கைகளுக்கு கட்டுப்பட்டு இருந்தேன். ஆனால் கனவுலகிலேயே எத்தனை நாள் வாழ முடியும்? என் திறமையை மற்றவர்களை ஏமாற்றுவதில் பயன் படுத்தினேன். பத்து வருடங்களில் நிறைய பணம் சம்பாதித்து விட்டேன். இதில் சந்தோஷம் இருக்கிறதா என்று மட்டும் கேட்காதீங்க. நிச்சயமாக இல்லை. அதான் உங்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்கு என்று சொன்னேன். ஆனால் நீங்க இப்போ இருக்கும் நிலையி லேயே வாழ்நாள் முழுவதும் கழிக்க வேண்டி வந்தால் அதை விட மோசமான நிலைமை வேறு இருக்க முடியாது. வாழ்க்கையில் நீங்க முன்னுக்கு வரணும். அதுதான் என்னுடைய விருப்பம். காலையில் நீங்க சொன்னீங்களே கொள்கை என்று. அது உங்க மனதிற்கு சம்பந்தப்பட்டது. செயல்களுடன் அதை பிணைக்கத் தேவையில்லை. அது தான் இரட்டை மனப்பான்மை.”
பிரகாஷ் வியப்புடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். ரொம்ப சாதாரணமாக தென்படும் இந்த வியாபாரியிடம் இவ்வளவு சைக்கோ அனலிடிகல் அறிவு இருக்கிறதா?
“கொள்கைகளை நம்பி எத்தனை நாள் நீங்க வாழ்ந்து விட முடியும்? அப்படி வாழ்வதால் உங்களுக்கு என்ன கிடைத்து விடப் போகிறது?”
“ஆத்ம திருப்தி,” சட்டென்று சொன்னான்.
பொன்னம்பலம் சிரித்தார். “நானும் என் மனைவியும் காரில் சினிமாவுக்கு போன போது அதே காட்சிக்கு நீங்களும் மனைவியுடன் வந்தீங்க என்று வைத்துக் கொள்வோம். மீட்டருக்கு மேல் சேட்ட ஆட்டோக் காரனுடன் சண்டை போட்டுவிட்டு டிக்கெட்டுக்காக க்யூ வில் வந்து நிற்கிறீங்க. காரில் வந்ததில் களைத்துப் போன என் மனைவி குளிர்பானம் அருந்திக் கொண்டிருப்பாள். சாதாரண நைலக்ஸ் புடவையில் டிக்கெட்டுகள் கிடைக்குமோ கிடைக்காதோ என்று கவலைப்பட்டுக் கொண்டு வெயிலில் நிற்கும் உங்கள் மனைவிக்கு ஷிபான் புடவையில், பணத்தினால் வந்த செழுமையுடன் நளினமாக காட்சி தரும் என் மனைவியைப் பார்க்கும் போது ஒரு நிமிடமாவது பொறாமையாக இருக்காதா? அந்தச் சூழ்நிலையிலும் உங்களுக்கு கொள்கைதான் நினை வுக்கு வருமா? உண்மையைச் சொல்லுங்கள்” ஒரு நிமிடம் நிறுத்தி விட்டு மீண்டும் தொடர்ந்தார் “விரக்தியிலிருந்து பிறக்கும் வேதாந்தம் அவ்வளவு நல்லது இல்லை மிஸ்டர் பிரகாஷ்! இப்போ உங்களுக்கு வயது இருபத்தினாலு. இன்னும் நிறைய வாழ்க்கை பாக்கியிருக்கிறது. அனுபவியுங்கள்.”
காரை ஒரு ஓரமாக நிறுத்தினார். “மிஸ்டர் பிரகாஷ்! உங்களை ஏனோ எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது. நான் எப்படி இருக்கணும்னு நினைத்தேனோ அது போல் நீங்க இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் வாழ்க்கையில் எல்லாம் அனுபவித்த பிறகு இப்படி. இருப்பது வேண்டுமானால் நன்றாக இருக்கும். இளமை யில் அல்ல.” இயல்பான குரலில் சொன்னார்.
பிரகாஷ் காரை விட்டு இறங்கும் போது பொன்னம் பலம் அவன் கையில் ஒரு கவரை வைத்துக் கொண்டே “நாளைக்கு எங்களுடைய திருமண நாள். பார்ட்டீக்குக் கட்டாயம் வரணும்” என்று அழைத்தார்.
பிரகாஷ் ஏதோ சொல்லப் போனான். ஆனால் பொன்னம்பலம் அவனை பேசவிடவில்லை. *மறுக்கா தீங்க. ஒரு நண்பனாக உங்களையும் அழைக்கிறேனே தவிர உங்களிடம் எனக்கு காரியம் ஆகணும் என்பதற்காக இல்லை” காரை ஸ்டார்ட் செய்து கொண்டே, “அந்த கவரில் பணம் வைத்திருக்கிறேன். உங்களை அவமானப் படுத்துவதாக நினைக்க வேண்டாம். ஏதோ என் சந்தோஷத்திற்காக. வரட்டுமா” என்றார்.
பிரகாஷ் வாய் திறந்து ஏதோ சொல்வதற்குள் கார் கிளம்பிப் போய்விட்டது. அவன் சிலையாக அப்படியே நின்று விட்டான்.
“குமார் ஸ்பீக்கிங்”
“எப்படி இருக்கீங்க ஆடிட்டர்?” பொன்னம்பலம் கேட்டார்.
“நீங்களா! ஐயாம் ஃபைன். தாங்க்யூ”
“என்ன விசேஷம்? மாலை நேரத்தில் வீட்டில் இருக்கீங்க?”
“சும்மாதான்.”
“இருபத்தி ஐந்து வயதில் மாலை நேரத்தில் வீட்டில் இருக்கீங்க என்றால் இனி நீங்க திருமணம் செய்து கொண்டு விடலாம்.” உரத்தக் குரலில் சிரித்தார்.
பொன்னம்பலம்.
குமாரும் சிரித்தான்.
“விஷயத்திற்கு வருகிறேன். அந்த இன்கம்டாக்ஸ் ஆபீஸில் பிரகாஷ் என்ற கிளார்க் பற்றிச் சொன்னது நினைவு இருக்கா?”
“நினைவு இருக்கு. போன காரியம் முடிந்ததா?”
“அதுதான் சொல்ல வந்தேன். என்னுடைய வேலை மேலதிகாரி லெவலில் முடிந்து விட்டது. ஆனால் அந்த கிளார்க் பாவம், புதிதாக வேலையில் சேர்ந்திருக்கிறான். போலிருக்கு. ரொம்ப ஸ்மார்ட் ஆக இருக்கிறான். ஆனால் இவ்வளவு அப்பாவியாக இருப்பவனை நான் எங்கேயும் பார்த்தது இல்லை. நீங்களும் அவனைச் சந்தித்தால் நன்றாக இருக்கும். கதை எழுதுவதில் உங்களுக்கு உபயோகமாக இருக்கும். ஃபீரியாக இருந்தால் வாங்களேன். எனக்கும் கம்பெனி கொடுத்தாற்போல் இருக்கும்.”
*கடைத் தெருவரையில் போகணும். ஷாப்பிங் வேலை இருக்கு.”
“என்ன விசேஷம்?”
“நாளைக்கு உங்களுக்கு திருமண நாள் இல்லையா, பரிசு வாங்கத்தான்.” குமார் சொன்னான்.
இரத்தம் முழுவதும் வற்றிவிட்டாற்போல் பிரகாஷின் முகம் வெளிறிப் போய்விட்டது. அவன் கையிலிருந்த கவர் நலிந்து போய்க் கொண்டிருந்தது. ஏதோ மயக்கத்தில் இருந்தவன் போல் நடந்துகொண்டிருந்தான்.
எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும் போது இந்த கவரை எடுத்து பொன்னம்பலத்தின் மீதே வீசினால் என்ன? சுற்றிலும் இருந்த மக்கள் தன்னுடைய நேர்மையை பாராட்டுவது போலவும், தான் பெருமையுடன் தலை திமிர்ந்து நிற்பது போலவும், தொலைவில் நின்றபடி சுஜாதா கண்களை அகலமாக விரித்து தன்னை வியப் புடன் நோக்குவது போலவும் காட்சி கண் முன்னால் ஓடியது.
சட்டென்று அவன் எண்ணங்கள் தடைப்பட்டன. தான் நேர்மையாக இருக்க நினைப்பது மக்களின் பாராட்டுக்களை பெறுவதற்காகத்தானா? முக்கியமாக சுஜாதாவைப் பற்றிய எண்ணம் தன் மனதில் வருவானேன்?
தன்னால் சிகரெட் பிடிக்காமல் இருக்க முடியும். சீட்டாட்டத்தின் ஜோலிக்கு போகாமல் இருக்க முடியும். ஆனால் சீதா அருகில் இல்லாதபோது வேண்டுமென்றே புடவைத் தலைப்பை நழுவவிடும் காமாட்சியின் உடற் கட்டை ரசிக்காமல் இருந்திருக்கிறானா? சசு ஊழியர்கள் தங்களுக்குள் பலான பெண்களை பற்றி பேசிக் கொள்ளும் போது காதுகளை தீட்டிக்கொண்டு கேட்காமல் இருந்திருக் கிறானா? அந்த இடங்களுக்கெல்லாம் தான் போக மாட்டான். அது வேறு விஷயம். ஆனால் விஷயம் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை தன்னால் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லையே. அப்படிப் போகிறவர்கள் எல்லாம் ஒழுக்கம் கெட்டுப் போனவர்கள். தான் மட்டும் இந்த விஷயங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவன், நேர்மையானவன்.
ஒழுக்கமின்மையின் அளவுகோல் உடல் மட்டும் தான் என்றால் தான் தூய்மையானவன். மனதாலும் என்றால் தான் எப்பொழுதோ நெறி தவறிவிட்டான். இந்த விஷயத்தில் மாமாவே பரவாயில்லை. அவருக்கு எது வேண்டுமோ கூச்சப்படாமல் அனுபவிப்பார். அதில் எந்த விதமான மனப் போராட்டமோ, தயக்கமோ அவருக்கு இல்லை, யோசித்துப் பார்த்தால் அப்படிப்பட்டவர் களால்தான் வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்க முடியும் என்று தோன்றியது;
தன்னையும் அறியாமல் மெயின் ரோட்டுக்கு வந்து விட்டதை உணர்ந்தான். உடனே வீட்டுக்குப் போய் செய்ய வேண்டியது எதுவும் இல்லை என்பதால் கடைத்தெரு வழியாக நடக்கத் தொடங்கினான்.
யதேச்சையாக பேண்ட் ஜேபியில் கையை விட்டவ னுக்கு தூக்கிவாரிப் போட்டது. கவர் இருக்கவில்லை. எவனோ பிக்பாக்கெட் அடித்து விட்டான். பதட்டத் துடன் சட்டைப் பையில் பார்த்தபோது கவர் இருந்தது. நிம்மதியாக மூச்சு விட்டுக் கொண்டான். எப்படியும் திருப்பிக் கொடுத்து விடணும் என்று எண்ணியிருந்த போது கவர் காணவில்லை என்று பதட்டப் படுவானேன்? நினைக்க நினைக்க அவனுக்குச் சிரிப்பு தான் வந்தது.
கவரில் எவ்வளவு பணம் இருக்கிறதென்று திறந்து பார்த்தால் என்ன என்று தோன்றியது. அந்த சின்ன தூண்டுதல் போதும், உள் மனிதன் வெளியில் வருவதற்கு.
திறந்து பார்த்த போது புதிய ஐநூறு ரூபாய் நோட்டு ஒன்று இருந்தது. மறுபடியும் உள்ளே வைத்துவிட்டான். வேடிக்கை என்னவென்றால் இந்த முறை அவன் மனம் முன் போல் கொதித்தெழவில்லை. புயலுக்கு பின் வரும் அமைதியை போல் நிதானமாக யோசிக்கக் கூடிய நிலை.
திடீரென்று அவனுக்கு ஒரு எண்ணம் வந்தது. நாளைக்கு பொன்னம்பலத்தின் திருமண விழாவுக்கு தான் போவதாக இருந்தால் பரிசு ஏதாவது வாங்கிக் கொள்ளணும். இந்தப் பணத்தில் பரிசு வாங்கித் தந்து விட்டால் பிரச்னை தீர்ந்தது. தனக்கும் மன உளைச்சல் இருக்காது. இந்த எண்ணம் வந்தது நிம்மதியாக உணர்ந்தான்.
அதற்குள் இன்னொரு விஷயமும் நினைவுக்கு வந்தது. நாளைக்கு சீதாவுக்கு பிறந்த நாள். அவளுக்கு ஏதாவது வாங்கித் தந்தால்? சீதா மதியம் காமாட்சியிடம் பேசியது அவன் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது. தான் கையாலாகாதவன் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டாமா? நாளைக்கு முதல் தேதி. இந்தப் பணத்தில் சீதாவுக்கு வாங்கிவிட்டால், நாளைக்கு சம்பளப் பணம் கிடைத்ததும் அவர்களுக்கு பரிசு ஏதாவது வாங்கிக் கொண்டு போகலாம்.
மறுநாள் பிரகாஷ் அவர்களுக்குச் சரியாக ஐநூறு ரூபாய்க்கு பரிசுப் பொருள் வாங்கினானா இல்லையா என்ற கேள்வி அனாவசியம். மனிதன் எப்படி கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிடுகிறான் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. அவ்வளவுதான்.
நேராக ஜவுளிக் கடைக்குள் நுழைந்தான். புடவை யைத் தேர்வு செய்ய அதிக நேரம் எடுத்துக் கொள்ள வில்லை. வெள்ளை நிறத்தில் ஷிபான் புடவை. புடவையை கையில் எடுத்து பரிசீலித்துக் கொண்டிருந்த போது “என்ன விலை?” என்ற குரல் பக்கத்தில் கேட்டது. திரும்பிப் பார்த்தான்.
வெள்ளை ஷாட்டும், டையுமாக இதழ்களில் தவழும் முறுவலுடன் நின்றுகொண்டிருந்த நபரைப் பார்த்ததும் “குமார்!” என்றான் பிரகாஷ். அவன் குரலில் வியப்பு வெளிப்பட்டது.
நண்பனின் தோளில் கையைப் பதித்துக் கொண்டே “இந்த ஊரில்தான் இருக்கிறாயா?” குமார் கேட்டான்.
“ஆமாம். இன்கம்டாக்ஸ் ஆபீஸில் வேலை பார்க்கிறேன்.”
“நானும் இங்கேதான் பிராக்டீஸ் செய்து வருகிறேன். உன்னை இத்தனை நாள் சந்திக்காமல் இருந்தது வேடிக்கை தான்” பொன்னம்பலம் குறிப்பிட்டது தன்னுடைய நண்பனைப் பற்றிதான் என்று குமாருக்கு புரிந்து விட்டது.
“நான் இந்த வேலையில் சேர்ந்து ரொம்ப நாள் ஆக வில்லை” என்றான் பிரகாஷ்,
“சரி. புடவையை வாங்கிக் கொள். வெளியில் போய் பேசிக் கொள்வோம். கல்யாணம் எப்போ செய்து கொண்டாய்?”
“இன்னும் ஆகவில்லை.”
“முன்னாடியே பரிசுகளை கொடுத்து நல்ல பெயர் வாங்கும் உத்தேசமோ?” குமார் கிண்டலடித்தான்,
பிரகாஷின் முகம் கன்றி சிவந்து விட்டது. இருவரும் ஜவுளிக் கடையை விட்டு வெளியே வந்தார்கள்.
“சற்று நேரம் எங்கேயாவது உட்கார்ந்து கொள்வோமா?”குமார் கேட்டான்,
“நானும் அதைத்தான் சொல்ல நினைத்தேன்.”
இருவரும் கார் அருகில் வந்தார்கள். காரில் ஏறி உட்கார்ந்துகொண்டே “கார் புதிதாக இருக்கே? மாமனார் வாங்கித் தந்ததா?” பிரகாஷ் கேட்டான்.
குமார் சிரித்துவிட்டான். “எனக்கும் திருமணம் ஆக வில்லை. பிராக்டீஸ் தொடங்கிய போது உபயோகமாக இருக்கும் என்று அப்பாதான் பரிசாகக் கொடுத்தார்.”
கார் நிதானமாக போய்க் கொண்டிருந்தது.
“வயதில் என்னை விட பெரியவன். வாழ்க்கையில் ஓரளவுக்கு செட்டிலும் ஆகிவிட்டாய். இன்னும் கல்யாணம் செய்து கொள்ளாமல் இருப்பானேன்?” பிரகாஷ் கேட்டான்.
“என் மனசுக்கும் எனக்குமே இன்னும் ஒத்துப் போக வில்லை. அதற்குள் திருமணம் எதுக்கு?”
பிரகாஷ் தலையைத் திருப்பிப் பார்த்தான். அழகன் என்று சொல்ல முடியாவிட்டாலும் குமாரின் கண்களில் தென்படும் அறிவுச்சுடர், இதழ்களில் தவழும் முறுவல், அவன் அருகாமையில் கிடைக்கும் மகிழ்ச்சி… எல்லாமாக சேர்ந்து அவனுடைய தனித்தன்மையை எடுத்துக் காட்டுவது போல் இருந்தன.
“என்ன யோசிக்கிறாய்?” குமார் கேட்டான். பிரகாஷ் திடுக்கிட்டவனாய் “ஒன்றுமில்லை” என்றான்.
“திடீரென்று மௌனமாகிவிட்டாயே. அதான் கேட்டேன்” என்றான் குமார்.
ஏனோ சில சமயம் மௌனமாக யோசித்துக் கொண்டிருக்கணும் போல் தோன்றும்” பிரகாஷ் சொன்னான்,
குமார் சிரித்துவிட்டு “எதைப்பற்றி?” என்றான். பிரகாஷுக்கு உடனே பதில் சொல்லத் தெரியவில்லை.
“உற்சாகமாக இருப்பவர்கள் எல்லா விஷயங் களையும் கூர்ந்து கவனிப்பார்களாம். கம்பீரமாக இருப்பவர்கள் குறுகிய மனம் படைத்தவர்களாக இருப்பார்களாம். எங்கேயோ படித்த நினைவு.” குமார் சொன்னான்.
உண்மைதானோ என்று தோன்றியது பிரகாஷுக்கு. எந்த சின்ன விஷயத்திற்கும் ரொம்ப யோசித்து மனப் போராட்டத்தில் நலிந்து போகும் சுஜாதா, குமார் போன்றவர்களின் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கிறதா? இல்லையே. வேடிக்கை என்னவென்றால் தன்னைப் போன்றவர்களின் வாழ்க்கையிலும் சந்தோஷம் இல்லை.
அவன் எண்ணங்களை தடுப்பதுபோல் கார் ஒரு பார் முன்னால் நின்றது.
“இங்கேயா?” பிரகாஷ் வியப்புடன் கேட்டான். “இங்கே காபியும் கிடைக்கும். கவலைப்படாதே” கார் கதவைச் சாத்திக் கொண்டே சொன்னான் குமார்.
இருவரும் உள்ளே நுழைந்தார்கள். மங்கலான வெளிச்சத்தில் ஆங்காங்கே கையில் கண்ணாடி டம்ளருடன் மனிதர்கள் தென்பட்டார்கள். வெள்ளைச் சீருடையில் கஸ்டமர்களை உபசரிக்கும் வெயிட்டர்கள்.
“வா இப்படி உட்கார்ந்துகொள். இதுதான் முதல் முறையாக பாருக்கு வருகிறாயா?” குமார் கேட்டான்.
பிரகாஷ் தலையை அசைத்தான். “எப்படி இருக்கு?”
பிரகாஷ் உடனே பதில் சொல்லவில்லை. பிறகு சொன்னான். “ரொம்ப அருவருப்பாக இருக்கு. மக்கள் ஏன் இப்படி எஸ்கேபிஸ்ட்களாக இருக்கிறார்களோ தெரியவில்லை.”
“நன்றாக யோசித்துச் சொல்லு. பழக்கமில்லாத புதிய சூழ்நிலை. அதனால் ஏற்பட்ட பயத்திற்கு அருவருப்பு என்ற பெயர் சூட்டுகிறாயோ என்னவோ.”
“பயம் இல்லை. அருவருப்புதான். மனிதர்கள் ஏன் இப்படி சீர்கெட்டுப் போகிறார்கள்?” பிரகாஷ் சொன்னான்.
அதற்குள் வெயிட்டர் வந்தான்,
“அரிஸ்டோகிராட் ஒரு பெக், சோடா, சிப்ஸ்” என்று ஆர்டர் கொடுத்துவிட்டு “உனக்கு” என்று கேட்டான்.
“கோகோ கோலா”
வெயிட்டர் போய்விட்டான்.
“அவ்வளவு சீக்கிரமாக ஒரு முடிவுக்கு வந்துவிடாதே. எஸ்கேபிஸ்டுகள் என்று சொன்னாயே. அதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். ஏன் என்றால் இங்கே வந்திருக் கிறவர்களில் பாதி பேரை எனக்குத் தெரியும்.”
“குடிப்பழக்கம் பணத்திற்கு, உடல் நலத்திற்கும் கேடு தானே.”
குமார் சிரித்தான். “அதோ. அந்த சோபாவில் கோட் சூட்டில் இருக்கிறாரே, ந்யூக்ளியர் ஃப்யூயல் காம்ப்ளெக் ஸில் புரொபஸராக இருக்கிறார். பகல் முழுவதும் அவ்வளவு சீரியஸாக வேலை பார்ப்பார். மாலையில் இப்படி ரிலாக்ஸ் ஆகவில்லை என்றால் மூளையில் நரம்புகள் வெடித்து இறந்து போனாலும் ஆச்சரியப்பட வேண்டியது இல்லை. பகல் முழுவதும் உடலை வருத்தி ரிக்ஷா ஓட்டும் ரிக்ஷாக்காரனுக்கும் இதே நியதிதான்.”
“ஆனால்…” பிரகாஷ் ஏதோ சொல்லப்போனான். “அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வந்து விடாதே. வாழ்க்கையில் ஒரு முறையாவது குடித்திருக்கிறாயா?”
“இல்லை;”
“பின்னே இதில் சந்தோஷம் இல்லை என்று உன்னால் எப்படி சொல்லமுடியும்?*
பிரகாஷ் பதில் சொல்லவில்லை.
குமார் மேலும் சொன்னான். “நீ சொன்னது முற்றிலும் தவறு என்று நான் சொல்லவில்லை. அதோ அங்கே பாரு. தளர்ந்து போன உடற்கட்டை மேல்பூச்சுகளால் மறைத்து ஆண்களில் பலவீனத்தை காசாக்கிக் கொள்ள முயற்சி செய்யும் நடன மங்கையர்கள்.”
பிரகாஷுக்கு காமாட்சியின் நினைவு வந்தது. பதினாறு வயதில் உடலும், உள்ளமும் தூய்மையாக இருக்க வேண்டிய பிராயத்தில் அவள் மனம் வேறு விதமான அனுபவங்களை விரும்புவானேன்? ஒரு பெண் இளைஞன் ஒருவனிடம் மணிக்கணக்காக பேசிக் கொண்டிருந்தாலும் அதில் எந்த தவறும் இல்லை என்று நினைக்கும் சுபாவம். அவளுடைய கண்ணோட்டத்தில் கற்பு என்பது உடல் அளவில் நிகழும் விஷயம் மட்டும் தான்.
“என்ன யோசிக்கிறாய்?” குமார் கேட்டான்.
“நீ சொன்ன விஷயத்தைப் பற்றித்தான்.”
“இதில் யோசிக்கும் அளவுக்கு ஒன்றுமே இல்லை. என் அனுபவத்தைச் சொன்னேன். அவ்வளவுதான்.”
வெயிட்டர் எல்லாவற்றையும் கொண்டு வந்து வைத்து விட்டுப் போனான். ஸ்டீரியோவில் மெலிதாக பாட்டு ஒலித்துக் கொண்டிருந்தது.
“இந்த உலகிலேயே ரொம்ப துரதிர்ஷ்டசாலி யாரு தெரியுமா? பத்து பேருக்கு நடுவில் இருக்கும் போது தனிமை வேண்டும் என்று நினைப்பவன், தனிமையில் இருக்கும்போது பத்து பேர் வேண்டும் என்று தவிப்பவன்,” சிகரெட்டை எடுத்து பிரகாஷிடம் நீட்டிக்கொண்டே குமார் சொன்னாள்.
“ஊஹும். பழக்கமில்லை.”
“ஒரே ஒரு சிகரெட் பிடித்தால் என்ன ஆகிவிடும்?”
“எனக்கு சுயக்கட்டுப்பாடு இல்லை. பழக்கமாகி விட்டால் கஷ்டம், பிரகாஷ் மறுத்தான்.
குமார் மேலும் வற்புறுத்தாமல் கண்ணாடி டம்ளரை உயர்த்தி ‘சியர்ஸ்” என்றான்.
– தொடரும்…
– எண்டமூரி வீரேந்திரநாத் எழுதிய ரிஷி என்ற நாவல், கௌரி கிருபானந்தன் மொழிபெயர்த்தது.
– ரிஷி (நாவல்), முதற் பதிப்பு: 2004, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.